யோகக் கலையும், மரம் வளர்ப்பும்

பிப்ரவரி 2017-இல் எழுதியது:

ஈஷா யோகா கம்பெனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அந்த கம்பெனி அதிகாரிகள் (சீடர்கள் என்பது அவர்களாகவே சொல்லிக்கொள்வது) அவ்வப்போது பதிலளித்து வருகிறார்கள். அவர்களது பதில்களானது எப்போதும் How responsible we are என்ற தொணியில் இருக்கிறது. உங்கள் நிறுவனம் மீதோ, அந்த நிறுவனத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையிலோ வைக்கப்படும் விமர்சனங்களை நேரடியாக தாக்காமல் பாசிட்டிவ் ஆன விசயங்களை முன்னிறுத்தி உணர்ச்சிவசப்படாமல் பொறுப்பாக பதில் சொல்லவேண்டும் என்பது மாதிரியான பயிற்சிகள் பொதுமக்கள்/வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது கார்ப்பரேட் கம்பெனிகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. இத்தகைய பொறுப்பான பதில்கள் தருமளவுக்கு அந்த கம்பெனி சீடர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை கார்ப்பரேட் கம்பெனிகளின் மனித வளத்துறை ஆட்கள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.

ஏனெனில் தொழில்முறை யோகா நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் போல் அல்லாமல் தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப அமைப்பிலோ, சமூக, அலுவலக சூழலிலோ ஒரு சராசரி மனிதனாக இணைந்திருக்க முடியாத தற்குறிகளைக் கண்டறிந்து, அவர்களை பயிற்றுவித்து attrition இல்லாமல் கம்பெனி நடத்துவது ஒரு அரிய திறமை.

கோயமுத்தூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாநகராட்சியால் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சிவராத்திரி விழாவுக்கு மோடி வருவதால் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்த்தப்பட்டிருப்பதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு பணிக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். விழா நடக்குமிடத்தில் குறைந்தது ஒருமாத காலமாவது 24 மணிநேரமும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்தாலொழிய இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்ய இயலாது. அவர்களுக்கும் இந்த விழாவுக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள், காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் எத்தனை மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்? அவர்கள் அவர்களது ஊரிலேயே இருந்தால் மட்டும் தண்ணீர் தேவைப்படாதா என்று சாமர்த்தியமாக சிலர் கேள்வி கேட்கக்கூடும். ஈஷாவின் நில ஆக்கிரமிப்பு குறித்து பேசினால் ஏன் காருண்யா செய்யவில்லையா என்று கேட்பதுமாதிரி. இலட்சக்கணக்காணோர் பல மாவட்டங்களில் பரவலாக பயன்படுத்தும் தண்ணீரை, செயற்கையாக ஒரு விழா எடுத்து கூட்டம் கூட்டி வறட்சிகாலத்தில், ஒரு மாநகரத்தின் ஒருவார தண்ணீர் தேவையை ஒரேநாளில் காலி செய்துவிட்டு நீர் மேலாண்மை குறித்து சொற்பொழிவாற்றுவது அறம் என்றாகிவிட்டது. குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை முன்னுதாரணமாக வைத்து வணங்கும் சமூகத்தில் எதுவும் அறமே.

வனத்தை அழிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் ஈஷா யோகா கம்பெனி தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களை அமைத்து மரக்கன்றுகளை வழங்கி பசுமையை பாதுகாக்கிறது என்ற பதில் பிசிறில்லாமல் வருகிறது.

வனங்களிலும், நகர்ப்புறத்திலும் நடப்படும் மரக்கன்றுகளில் 51% மட்டுமே survive ஆகும் என்பது வனத்துறை நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கும், நடப்படும் மரக்கன்றுகள் குறைந்தது இரண்டரை அடி உயரமாவது இருக்கவேண்டும். அதற்கு குறைவான உயரமிருப்பின் பல்வேறு காரணங்களால் தாக்குப்பிடித்து வளர்வது கடினம் என்பது தொழில்முறையில் நாற்றங்கால்களில் புழங்கி வருபவர்கள் அறிவர். வனத்துறையினரது நாற்றங்கால்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் அங்குள்ள கன்றுகளின் தரத்தை அவ்வளவு சீக்கிரம் குறைசொல்ல இயலாது.

ஈஷாவின் பல நர்சரிகளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் பெரும்பாலும் ஒன்றரை அடி உயரத்துக்கும் குறைவானவை. அவை தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படுவது, மரம் நடவேண்டும் என்ற ஆர்வமிருக்கும் மக்களுக்கு எளிதாக கிடைக்கச்செய்தது என பல சிறப்புகள் இருந்தாலும் அதன் impact என்பது மிகவும் குறைவு. ஈஷாவின் நாற்றங்கால்கள் வீட்டுமுன் இரண்டு மலைவேம்பு மரங்களை வாங்கிவந்து நடுவதற்கு ஏற்றவை; ஐந்து ஏக்கருக்கு அங்கே மலைவேம்பு வாங்கி நட விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஏன் அங்கே வாங்கக்கூடாது, நான் நட்டு வளர்த்துக்காட்டவா என்று தம் கட்டவேண்டாம்.

ஹியூகோ வுட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய காட்டிலாகா அதிகாரி ஆனைமலையில் வாழ்ந்தபோது நட்டு வளர்த்த வனத்தின் பரப்பளவு 650 சதுர கிலோமீட்டர். அவரது கல்லறைகூட அங்கேயே எழுப்பப்பட்டது. கடைசிவரை தனியாக வசித்துவந்த அவர் நடந்துசெல்கையில் விதைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கைத்தடியில் குத்திக் குத்தி நட்டுக்கொண்டே செல்வாராம். அவருக்கு முந்தைய அதிகாரிகள் ஏகத்துக்கும் மரங்களை வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்து அரசிடம் நற்பெயர் எடுத்த காலகட்டத்தில் காடுகளின் மறுசீரமைப்பை முன்வைத்து பணியாற்றியவர். அத்தகைய பல அதிகாரிகளின் துணிச்சலான, சுதந்திரமான முடிவெடுக்கும் திறன்களையும் அதன் சாதக பாதகங்களையும் பயிற்சியின்போது பாடமாக படிக்கும் அதிகாரிகள்தான் இன்று செயற்கையான வன மகோத்சவ கொண்டாட்டங்களுக்கு அனுமதி தருகின்றனர்.

அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம். உண்மையைச் சொன்னதற்காக உயரதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த தலைவர் வருகிறார். உண்மையை எழுதியதற்கு ஆசிட் வீசிபவர்கள், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களின் படங்களுக்குக் கீழ் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆக, அவர்களும் அறம் சார்ந்த சமூக கவலைகளால் உந்தப்பட்டு அத்தனைக்கும் ஆசைப்படுவது இயல்புதானே.

நடுத்தர வர்க்கத்தின் நாசகார சிந்தனைகளின் தொகுப்பு

ரேஷன் கார்டு பயனாளியின் தேவையைப் பொருத்து வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டாலும் அதில் ஒரு சமத்துவம் இருக்கிறது. தனக்கு தேவைப்பட்டதை மட்டும் வாங்கிக்கொண்டாலும் எல்லோருக்கும் ஒரே வரிசை, ஒரே கட்டணம்தான். பணக்காரனுக்கு தனி வரிசை, தனி மொழி, பஞ்சத்துக்கு வந்தவனுக்கு தனி வரிசை, தனி ஆபிசர் என்று பாரபட்சம் காட்டுவதில்லை.

எல்லோரும் வங்கிச்சேவைக்குள் வரவேண்டும் அதுவே கறுப்புப்பணத்தை ஒழிக்கும் எளிய வழி என்று ‘படித்த வர்க்கத்தினர்’ கருத்துத் தெரிவிக்கின்றனர். வங்கியில் கணக்கு வைக்கும்போதே சாதா கஸ்டமர், பிளாட்டினம் கஸ்டமர் என்ற ஏற்றத்தாழ்வு ஆரம்பித்துவிடுகிறது. சாதா கஸ்டமர் என்றால் வரிசையில் நின்று சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும், பிளாட்டினம் கஸ்டமரை மேனேஜரே வாயெல்லாம் பல்லாக வாசற்படிவரை வந்து அழைத்துச்சென்று தனது கேபினில் உட்காரவைத்து காபி கொடுத்து, சேவையும் வழங்கி அனுப்புவார். சில இடங்களில் லுங்கி அணிந்து உள்ளே வரக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையும் உண்டு.

பாங்கி அதிகாரி நண்பர்கள் பலர் We are not here for charity, everything is business; this is hard reality of life bro என்று மூஞ்சியில் பஞ்ச் விடக்கூடும். இதே தர்க்கம் அரிசிக்கடைகளுக்கும் உண்டு. நிறைய வாங்கும் பிளாட்டினம் டைப் வாடிக்கையாளர்களுக்கு, சமையல்காரர்களுக்கு பிரத்தியேக கவனிப்பு, தனி ரேட், கடன் சலுகை என பல உண்டு. வாரம் இரண்டு கிலோ, நான்கு கிலோ வாங்கும் லுங்கி அணிந்த கஸ்டமருக்கு இத்தகைய பிரிவிலேஜ் கிடைக்காது.

அதனாலேயே அந்த லுங்கிக்கார கஸ்டமர் வேலை செய்யுமிடத்தில் கூலியாக வரும் பணத்தில் கொஞ்சம் நெல்லை வாங்கி வந்து ரைஸ் மில்லில் கொடுத்து தானே அரைத்துவந்து வைத்துக்கொள்கிறார். நெல் வாங்கி அரைத்து தவிட்டையும் மாட்டுக்காக எடுத்துவரும் ஒருவரை அரிசி தனியாக, தவிடு தனியாக கடைகளில்தான் வாங்கவேண்டும் என்பதுதான் இந்த Banking for all சிஸ்டம்.

oOOOOo

ரொக்கம் கொடுத்து வாங்கிவந்த மீனைத் தட்டில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியை போட்டதும் கறுப்புப்பண விவாதம் குறித்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.

கணவனும் மனைவியுமாக சேர்ந்து தினமும் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு சிறிய உணவகம் வைத்திருக்கும் ஒருவரை டை கட்டிய ஆசாமி ஒருவர் கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். தினம் ஆறாயிரம் ரூபாய் என்றால் கிட்டத்தட்ட வருடத்துக்கு இருபது இலட்சத்துக்கு வியாபாரம், நீங்கள் ஏன் வங்கிச்சேவையை பயன்படுத்துவதில்லை என்று புத்தசாலித்தனமாக மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்வி கேட்டவண்ணம் இருந்தார்.

வணிகர்கள் மீதான ஒரு பொதுப்புத்தியில் ஒன்று அவர்களது கல்லாவில் விழும் பணம் அனைத்தையும் அவர்களே வைத்துக்கொள்வார்கள் அல்லது குறைந்தது 40% இலாபம் இருக்கும் என்பதுமாதிரியான சிந்தனை.

வங்கியின் இலாபம் என்பது ஊழியர்களின் சம்பளம், காப்பீடு மற்றும் இதர பணிசார் அனுகூலங்கள், செலவினங்கள், புதிய பொருட்கள் வாங்கும் செலவுகள், ஏற்கனவே இருக்கும் சொத்துக்களின் மீதான தேய்மானம், கடன் மற்றும் அதற்கான வட்டி கழித்துதான் கணக்கிடப்படுகிறது. ஒருவர் தானே இயக்குனராக இருந்து நடத்தும் கம்பெனியாக இருந்தாலும் தனது சம்பளம் போகத்தான் கம்பெனி இலாபத்தைக் கணக்கிடுவார்.

காலை ஆறுமணியிலிருந்து இரவு பத்து மணிவரை ஓய்வில்லாமல் வருடம் முழுவதும் வேலை செய்யும் ஒரு நபருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும், போனஸ் தரவேண்டும்? ஏதாவது ஒரு காரணத்தால் பணிபுரிய முடியாமல் போனால் இழப்பீடு உண்டா, மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் உண்டா, வேறு ஏதாவது படிகள் உண்டா, விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றால் வேறு யாராவது அவரது வேலையை பதிலீடு செய்வார்களா, ஓய்வூதியம் உண்டா? அது எப்படி சொந்தத் தொழில் செய்பவர்களின் வருமானத்தை பிரித்துப் பார்க்காமல் ஒரு மொன்னையான ஊகம் செய்ய முடிகிறது?

அவர்களின் வாழ்க்கையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் தனது உழைப்பின் மீதான நம்பிக்கையில் ரிஸ்க் எடுப்பவரை லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்கும் ஒருவரோடு ஒப்பிட, தடித்த தோல் வேண்டும். கம்பெனியின் புரமோட்டருக்குக்கூட கடைசியில் sweat equity என்ற ஒன்று உண்டு; சிறிய, அமைப்புசாரா தொழிலில் இருப்பவர்களுக்கு அது வெறும் வியர்வை மட்டுமே. அந்த வியர்வையைத்தான் ஏசி அறையில் உட்கார்ந்திருக்கும் டை கட்டிய ஆசாமிகள் கிடுக்குப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு பரிகசிக்கிறார்கள்.

மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி – பசுமைப் பத்திரிகைகளின் எழுச்சி

கேள்வி: மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி என்ற ரீதியில் கட்டுரை வெளியிடும் பிரபல பசுமைப் பத்திரிகை, வேளாண்மைத்துறையில் உள்ள அதிகாரிகளில் பலர் பாரம்பரிய விவசாய முறைகளில் ஆர்வம் கொண்டு இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க அயராது உழைத்து வருவதாகவும் அதனால் தமிழகத்தில் பெரிய அலை அடிப்பதாகவும் கூறிவருகிறது. அவ்வாறு அலை ஏதாவது அடித்து கிளர்ச்சி ஏற்பட்டு, புரட்சி உண்டாகி, மலர்ச்சி வந்துகொண்டிருக்கிறதா?

பதில்: ‘இயற்கை விவசாய முறை’ என்று செயற்கையாக இன்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கருதுகோளை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்வதை வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்வது – ஒருசில திட்டங்கள் தவிர்த்து – அவர்களது அன்றாட கடமைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். அவ்வாறு சமூக ஊடகங்களில் செய்துவரும் சிலர் நேரத்தைக் கொல்வதற்காக வேண்டுமானால் செய்துவரலாம். ஏனெனில் ஆலோசனை கொடுப்பதோடு அவர்கள் நின்றுவிடுவதும், அதைப் பின்பற்றி செயல்படுத்துபவரின் நேரமும், பணமும் இவர்களது ரிஸ்க் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று.

அதேநேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி விற்பனை உரிமங்களை வழங்குவது, விற்பனையை ஒழுங்குபடுத்துவது, மாதிரிகள் எடுத்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் செய்வது , தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுப்பதெல்லாம் துறை அதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். இந்த அடிப்படை வேலைகளிலேயே சுணக்கம் இருக்கவே செய்கிறது.

வேளாண்துறையில் பணியாற்றும் நண்பர்கள் பலரும் அப்படியெல்லாம் இல்லை என்று இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். ஆனால் நடைமுறையில் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முனைவோர் இந்த உரிமங்களுக்காக குறைந்தது இரண்டு மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஓரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து முன்பணம் செலுத்தி, வாடகை மாதந்தோறும் கட்டி, உரிமங்கள் வரும்வரை காத்திருந்து (சராசரியாக மூன்று மாதம் ஆகும்) பின்னர்தான் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும்.

முறையாக விண்ணப்பித்து, அதிகாரி நேரில் வந்து பார்த்துவிட்டுச்சென்று, உரிமம் வழங்கிட இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிடும் என்றாலும் பின் தேதியிட்டே உரிமம் வழங்கப்படுவதால் எல்லாம் முறையாக நடப்பதாகவே தோன்றும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்த்தகர்கள் என்றாலே பதுக்கல்காரர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், கொள்ளை இலாபத்துக்கு விற்பவர்கள் என்ற பொதுப்புத்தி சமூகத்தில் பரவலாக உண்டு. நியாயமாக வணிகம் செய்யவேண்டும் என்ற நோக்கில் வர்த்தகர்கள் முன்வந்தாலும் Principal certificate-களை என்டார்ஸ் செய்ய, பழைய உரிமத்தைப் புதுப்பிக்க என எதற்குமே இத்தனைநாள் காலக்கெடு என்ற ஒன்று இல்லாததால் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மன உளைச்சல்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு சட்டம்தான் என்றாலும் விதைப் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதிக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே சரக்குகளை விற்பதை நிறுத்தி திருப்பியனுப்ப வேண்டும் என்பது, உர மூட்டைகளை பிரித்து விற்கக்கூடாது என்பது விதிமுறை என்றாலும் விவசாயிகளுக்கு சேவை செய்ய பிரித்து சில்லரையில் விற்கவேண்டும் என வலியுறுத்துவது என பல அதிகாரிகள் சட்டாம்பிள்ளையாகி விடுவதோடு, ‘இவரு உண்மையிலேயே அக்ரி படிச்சிருப்பாரா?’ என்ற நகைப்புக்கும் வழிகோலுகின்றனர்.

கள யதார்த்தம் இப்படியிருக்க, மரபுவழிக்கு திரும்புங்கள் என்று சட்டைபோடாமல் பேஸ்புக்கில் படம் போட்டு ‘அழைப்பு’ விடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியிருக்கிறது.

ஆகவே அலை அடிக்கிறது, எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரேனும் சொன்னால் தீர விசாரித்து பின்னர் முதலீடு செய்யவும். கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதித்த பணம், செலவிடும் நேரம் எல்லாம் போனால் வராது.

வெல்ஸ்பன் – மூத்த ஊழியர்களின் தவறுகளைச் சுமக்கப்போகும் பச்சாக்கள்

தரக்கட்டுப்பாடு என்பது ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சந்தையில் உறுதிப்படுத்தக்கூடிய ஒன்று. அதில் ஓட்டைகள் ஏற்படுவது என்பது நிர்வாகத்தின் உயரதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பேயில்லை. குஜராத்தின் Welspun நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவின் Target Corp-க்கு அனுப்பிய 7,50,000 மெத்தை விரிப்புகள், தலையணை உறைகளை, உயர்தர எகிப்து பருத்தி என்று இந்திய பருத்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதை அனுப்பி ஏமாற்றி வந்திருக்கிறது. தணிக்கை மூலமாகவோ அல்லது யாரோ சிலர் போட்டுக்கொடுத்த வகையிலோ விஷயம் தெரிந்ததும் மொத்தமாக வணிக உறவைத் துண்டித்திருக்கிறது அமெரிக்க நிறுவனம். Target Corp-இடம் இருந்து துணி வாங்கிய வால்மார்ட் மற்றும் பல நிறுவனங்கள் டார்கெட்டை டார்கெட் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. பங்குசந்தையில் 42% மதிப்பை இழந்ததோடு முப்பது ஆண்டுகால மரியாதையையும் இழந்திருக்கிறது Welspun. நம்பிக்கை, நாணயம், தரம், என்பதெல்லாம் தனி நபர்கள் மட்டுமல்லாது பிராண்டை உண்டாக்கும் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதற்கு மேலாண்மை மாணவர்களுக்கு மறுபடியும் ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. யாரோ ஒரு டஜன் நபர்கள் செய்த தவறுக்காக சில ஆயிரம் பேர் வேலையிழக்க போகிறார்கள்.

தனியார் நிறுவங்களில் Performance என்பது நாம் என்னதான் முக்கி மூழ்கி முத்தெடுத்தாலும் ஒருசிலர் செய்யும் தவறால் பலரது மொத்த திறமையும், வாழ்வும் வீணடிக்கப்படுவதும், தொழிற்சங்கங்கள் மூலம் குறைந்தபட்ச பணிப்பாதுகாப்பும் இல்லாத மொன்னையான சூழலில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல் பணியிட பாதுகாப்பு குறித்த குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் இருப்பதும் நம் சாபக்கேடு. அண்மையில் Ola நிறுவனம், ஒருங்கிணைப்பு என்ற பெயரில் Taxi for Sure நிறுவனத்தை 1300 கோடிக்கு வாங்கி பின்னர் மூடியபோது 750 பேர் வேலையிழந்ததையும், SnapDeal நிறுவனம் Exclusively.in-ஐ மூடியபோது ஏற்பட்ட அதிர்வுகளையும் செய்தியாக மட்டுமே பார்க்கிறோம். சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை.

எகிப்திய பருத்தி என்பது Gossypium barbadense, எனப்படும் extra-long staple cotton என்ற நீண்ட இழை பருத்தியாகும். இந்திய பருத்தி என்பது Gossypium hirsutum எனப்படும் மத்திய தர அல்லது long-staple பருத்தி என்பதாகும். சுவின் போன்ற நீண்ட இழை பருத்தி ரகங்கள் தொடர்ந்து இந்திய பருத்தியுடன் இணைத்து கலப்பினங்களை உண்டாக்கி பஞ்சின் நீளம் கூட்டப்பட்டது. மான்சான்டோவின் பி.டி. தொழில்நுட்பம் காய்ப்புழு தாக்குதலைத் தடுத்ததால் பஞ்சு நாரின் நீளம் அடிபடாமல் கிடைத்ததோடு விதைகளையும், பஞ்சையும் பிரித்தேடுக்கும் ஜின்னிங்-இன் தரமும் உயர்ந்தது. எகிப்திய பருத்தி ரகங்களை அடிப்படையாக வைத்து உண்டாக்கப்பட்ட இந்திய பருத்தி ரகங்கள், மான்சான்டோவின் காய்ப்புழு தடுப்பு தொழில்நுட்பமும் இணைந்து டெக்ஸ்டைலில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது. அந்த தரத்தின் அடிப்படையில் கிடைத்த குருட்டு தைரியத்தில் இறங்கி Welspun நிறுவனம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. எந்த ஒரு ஜின்னிங், ஸ்பின்னிங் ஆலைக்குள்ளும் சென்று அறியாமல், காலங்காலமாக பருத்தி விவசாயம் செய்து வருபவர்களையும் கேட்டறியாமல் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று பல போலி ஆர்வலர்கள், நிபுணர்கள் கூறி வருகின்றனர். அனால் களநிலவரம் சரியாகத்தான் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் வணிகம் செய்வதில் அரசு ஒருபோதும் தலையிடாது, லைசென்ஸ் ராஜ் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்குவந்த மோடி அரசு பருத்தி விதை விலையை நிர்ணயம் செய்கிறேன் பேர்வழி என்று மான்சாண்டோவும், பல தனியார் நிறுவங்களும் செய்துகொண்ட ராயல்டி ஒப்பந்தத்தில் உள்ளேபுகுந்து கட்டைப்பஞ்சாயத்து செய்தது வேறு கதை.

மேலும் படிக்க:
https://www.wsj.com/articles/more-u-s-retailers-probe-indian-supplier-of-egyptian-cotton-1472070815
http://www.cicr.org.in/pdf/ELS/general1.pdf
http://farmhub.textileexchange.org/learning-zone/glossary/measurements

நம்ம கம்பெனிக்குத் தேவை இன்னோவேஷன் ப்ரோ!

பெரும்பாலான நிறுவனங்களில் பெரிய தலைகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் நிச்சயமாக Innovation, Quality, Pipeline, Deliverables, Out of box thinking போன்ற பதங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். அதிலும் மீட்டிங் முடித்தபிறகு பாரில் பாட்டிலைத் திறந்தவுடன் சொற்பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். தான் ஆக்டிவா வண்டியில் பக்கத்திலுள்ள மளிகைக்கடைக்கு சென்று உப்பு வாங்கியபோது கற்றுக்கொண்ட மேனேஜ்மென்ட் லெஸன், புத்தாண்டன்று ஜிம்மில் சேர உறுதிபூண்டு அதை பொங்கல்வரை பின்பற்றியதால் கிடைத்த அசாத்திய வில்-பவர் என பல அரிதான விசயங்களைக் என்னைப்போன்ற பச்சாக்களுக்கு கற்றுத்தருவார்கள். அந்த அதிகாரி சைவப்பிராணி என்றால் கடைசிவரை பனீர் டிக்காவை மட்டுமே பல்லுக்குச்சியில் குத்தி விழுங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

எல்லா நிறுவனங்களும் பத்து கிராம் விதையை 15×12 சென்டிமீட்டர் கவரில் போட்டு காலங்காலமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒரு புதிய விற்பனைத்துறை உயரதிகாரி ஆட்டோமொபைல் துறையிலிருந்து வந்தார். வருவாயைக் கூட்ட புதிதாக வரும் ஒவ்வொரு அதிகாரியும் செய்யும் முதல் வேலை காஸ்ட் கன்ட்ரோல் என்றபெயரில் செலவினங்களைக் குறைப்பது; அதில் அடிப்படையே சிலநேரங்களில் ஆட்டம் கண்டுவிடும். அவரது ஆலோசனைப்படி திடீரென விதை பாக்கெட்டின் அளவைக் குறைத்து சந்தைக்கு அனுப்பினார்கள். பேக்கிங்களில் மாற்றம் செய்தாலும் அதைப்பற்றி வர்த்தகச் சங்கிலியில் உள்ளவர்களுக்கு முறையாக போஸ்டர் ஒட்டி தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையும் பின்பற்றப்படவில்லை. வணிகர்கள் ‘என்னய்யா இது ஹான்ஸ் பாக்கெட் மாதிரி, பத்து கிராமுக்கு முன்னூறு ரூவா வாங்கறீங்க கொஞ்சம் பெரிய பாக்கெட் போட்டாத்தான் என்ன கேடு?’ என்று இரைந்தார்கள். விவசாயிகள் இது போலி விதை பாக்கெட் என்று நிராகரித்துவிட்டு பழைய பாக்கெட் விதைதான் வேண்டும் என்று கேட்க ஆரம்பிக்க விசயம் மேலிடத்துக்குச் சென்றது. If you innovate something there will be initial resistance; but you should not give up என்றெல்லாம் கதை சொல்லி பழைய பாக்கெட் திரும்ப வந்தது. பாக்கெட் அளவைக் குறைப்பதில் வாடிக்கையாளரின் எந்த ஒரு பிரச்சினை அல்லது எதிர்பார்ப்புக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதால் இதில் என்ன இன்னோவேஷன் என்று நாங்களெல்லாம் குழம்பித்தான் போனோம்.

ஃபார்ச்சூனர் போன்ற மகிழுந்துகளில் ஒரு சக்கரத்திற்கு ஆறு போல்ட் இருக்கும். ஏனைய பன்முக, விளையாட்டு பயன்பாட்டு ஊர்திகள், செடான்களில் ஐந்து போல்ட் இருக்கும். அடுத்தகட்ட ஸ்விஃப்ட், ஆல்ட்டோ போன்ற ஹேட்ச்பேக் வகையறாக்களில் நான்கு போல்ட் என்பது industry standard. அண்மையில் பிஸினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் Renault நிறுவன உயரதிகாரி ஒருவரின் பேட்டி வந்திருந்தது. அவர்களது ஆராய்ச்சிப்பிரிவு அதிகாரிகள் கடுமையாக உழைத்து புத்திசாலித்தனமாக வாகனத்தின் டிசைனை வடிவமைத்தார்களாம். ஒரு காருக்கு 16-18 கிலோ நட், போல்ட், ஸ்க்ரூக்கள் வழக்கமாக தேவைப்படுவதாகவும், ரெனோ தங்களது சாமர்த்தியமான டிசைன் காரணமாக 5-6 கிலோ அளவுக்கு குறைத்ததால்தான் Kwid மாடல் வெற்றிகரமாக குறைந்தவிலை காராக அறிமுகப்படுத்த முடிந்தது என்று பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். அடடா இது தெரியாமல் பல டன் இரும்பு பொருட்களை பல நிறுவனங்கள் வீண்டிக்கின்றனரே என்ற ஆச்சரியத்துடன் ஒரு க்விட் காரை சுற்றிவந்து பார்த்தபோது சக்கரத்தில் மூன்று போல்ட் மட்டுமே இருந்தது. ஒரு டன் எடையுடைய மகிழுந்து நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது அதன் எடை ஐந்து போல்ட்டுகள் வழியாக தரைக்கு கடத்தப்படும்போதும், மூன்று போல்ட் வழியாக கடத்தப்படும்போதும் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஒரேமாதிரியாக இருக்குமா என்பதை அந்த துறை சார்ந்த பொறியாளர்கள்தான் சொல்லவேண்டும். நம் முன்னோர்கள் கடையாணி மட்டுமே உள்ள கட்டை வண்டிகளை பயன்படுத்தியதைக் காட்டி வருங்காலத்தில் ஒரு போல்ட் மட்டுமே இருக்கும் டிசைனும் வரலாம்.

ஆனால் இதை இன்னோவேஷன் என்று எப்படி சொல்கிறார்கள், வாடிக்கையாளர்களின் தேவையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பூர்த்திசெய்ய புதிதாக எதை சேர்த்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கணக்கதிகாரம்

கணக்கதிகாரம் கண்டுபிடித்து வைத்த நம் முன்னோர்களின் அறிவை வியந்துகொண்டே அந்த வாய்ப்பாட்டின் மூலமாக பூசணிக்காய் விதைகளை எண்ண முனைந்தபோது…

நெதர்லேந்து மற்றும் தைவான் கம்பெனிகளின் இரகத்தில் விதைகள் குறைவாகவும், சதைப்பற்று அதிகமாகவும் இருந்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது. வாட்சப்பில் வந்தது லாஜிக்படி சரிதான் என்றாலும் நம் சவுகரியத்துக்கு இன்று ரகங்களை breed செய்வதால் பழைய சூத்திரங்கள் பொருந்துவதில்லை.

கணக்கதிகாரம் நூல் இங்கே:
https://archive.org/stream/balagzone_gmail/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D#page/n0/mode/1up

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?

ஒரு பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது இந்த தமிழ் செய்யுள்.

“கணக்கதிகாரம்” கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

“கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்”

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை “அ” என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது “90அ” ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது “45அ” ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது “135அ” ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”

– கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

கோடைகாலத்தில் தக்காளி விலையேறுவதும், நுகர்வோர் புலம்பல்களும்

னி சதியைப் பார்த்தித்தீர்களா என்று ஆரம்பித்துவிடுவார்கள். மற்றபடி அதன் அறிவியல் பின்னணி என்ன, எதிர்கால விளைவுகள் எப்படியிருக்கும் என்பதெல்லாம் யாருக்கும் கவலையில்லை. அப்போதைக்கு வல்லுனராக, நிபுணராகக் காட்டிக்கொள்ளவேண்டும்; யாரையாவது திட்ட வேண்டும்.

தக்காளியில் இரவு வெப்பநிலை 22 டிகிரியை தாண்டினால் பூவிலுள்ள மகரந்தம் அதன் முளைக்கும் செயல்திறனை இழந்துவிடும். Heat set எனப்படும் வெயிலை தாங்கி வளரும் பண்பு இருந்தாலும் இதுதான் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் இரகங்களின் அதிகபட்ச அளவு. அவ்வாறு மகரந்தம் கிடைக்காதபட்சத்தில் சூலகம் தானாகவே ஓரளவுக்கு வளர்ந்து விதையில்லாத சிறிய காயைத் தரும். படத்தில் இருப்பது அதுதான். கடந்த மாதம் தாறுமாறாக விலையேறக் காரணம் இந்த இரவுநேர வெப்பநிலை விளைவுதான்.

இந்த களேபரத்துக்கிடையில் ஓர் ஆர்வலர் பன்னாட்டுக்கம்பெனிகளின் விதைகள் heat set என்ற பண்பு இல்லாதவை அதனால் கோடையில் காய்கள் வராது. அரசிடம் இருக்கும் ‘மருதம்’ என்ற இரகம் வெயிலைத்தாங்கி வரும் ஆனால் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சதி செய்து அதை சந்தைப்படுத்தாமல் செய்துவிட்டனர் என்று சொன்னதாக விகடன் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதைப் படித்தபின் ‘யாருய்யா நீ, எனக்கே உன்னை பாக்கனும்போல இருக்குதே’ என்று ஆச்சரியப்பட்டுப் போனோம்.

மாடுகளுக்கு சினை ஊசி போட்டு கலப்பினம் உண்டாக்கி A2 பால் கிடைக்காமல் செய்து, சர்க்கரை நோயை பரப்பியதால் இது பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சதி என்று சமூக அக்கறையுடனும், மாடுகளுக்கு உடலுறவுகொள்ள காளை கிடைப்பதில்லை என்று தார்மீக அக்கறையுடனும் பேஸ்புக்கில் கண்துஞ்சாது களப்பணியாற்றும் ஆர்வலர்களின் வாய்க்கு இன்னொரு அவல் கிடைத்திருக்கிறது.

கால்நடைகளில் காளைக்கன்று பிறந்தால் சில மாதங்களுக்குப் பிறகு கறிக்கு விற்றுவிடுவது நடைமுறை. பெரும்பாலான நேரங்களில் போதுமான பால், தீனி கிடைக்காமல் காளைக்கன்றுகள் சாகக் கிடக்கும்; சில நேரங்களில் செத்துவிடும். அதேநேரம் கிடாரியாக இருந்தால் ஆறேழு மாதங்கள் கழித்து கருவுற்றபின் விற்றால் கூடுதல் வருவாய்; சிலநேரங்களில் அதை வைத்துக்கொண்டு ஆறேழு ஈற்றுகளைத் தாண்டிய வற்றிய தாய்க்கறவைகளை கறிக்கு விற்றுவிடுவர்.

விந்தணுவில் இருந்து XX நிறப்புறி (குரோமோசோம்) உடைய, அதாவது பெண் கன்றுகள் மட்டுமே ஈனக்கூடிய சினை ஊசிகளை மட்டும் சந்தைக்கு அனுப்ப தற்போது அரசின் National Dairy Research Institute மூலமாக ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் Flow Cytometry மூலமாக 90% பெண் குரோமோசோம்களைப் பிரித்தெடுக்க முடியும் என்றாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராத விலையில் இருக்கிறது. நமது விஞ்ஞானிகள் இத்தகைய தொழிநுட்பத்தை உண்டாக்கினால் ஊரக கால்நடை வளர்ப்பின் மூலம் வரும் வருவாய் கிட்டத்தட்ட 30% வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தில் காளைக்கன்றுகள் முழுவதுமாகக் கிடைக்காமல் போனால் மாட்டுக்கறி வணிகம் முழுவதும் கழித்துக்கட்டப்படும் வத்தக்கறவைகளை நம்பியே இருக்கவேண்டிவரும். ஒரு மாடு அதன் முழு உற்பத்தித்திறனை இழந்தபிறகே கறிக்கு அனுப்பப்படும் என்பதால் மாட்டுக்கறி, தோல், எலும்பு போன்றவை விலையேற வாய்ப்பிருக்கிறது. சுத்த சைவ மக்கள் சாப்பிடும் மாத்திரைகளின் base material-கூட மாட்டு எலும்புதான் என்பதால் மாத்திரைகளும் ஓரளவுக்கு விலையேறலாம். ஆனாலும் தொழில்நுட்பத்தின் விளைவு நல்லதா கெட்டதா என்ற நமது ஊகங்களின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.

கோமாதாவின் காவலன் மோடி அரசுதான் இதற்கு முழு ஆதரவு அளித்து முன்னெடுத்திருக்கிறது. //The research has been on for several years. It got a push after the change of government in 2014 at the Centre. A team of 25-30 scientists are working on the project, assisted by research scholars //

இருப்பினும் பளிச்சென்று சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒரு விளக்கத்தைக் கொடுத்து இந்த புராஜெக்ட்டை முன்னெடுத்திருக்கும் பெயர் தெரியாத அந்த விஞ்ஞானியின் ராசதந்திரத்தைக் கண்டு வியக்கிறேன். //”If you don’t have ox and bulls, there won’t be any issues around cow slaughter, as killing of female milch cows is strictly prohibited,” the scientist explained.//

மேலும் படிக்க:
http://www.business-standard.com/article/current-affairs/bullish-about-female-calves-116061900776_1.html

கரையான், திடீர் ஈசல் தொல்லைகள்

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா? அழைக்கவும் 1800 கஜமுஜ கஜமுஜ என்று ஆங்காங்கே நம்பர் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கரையானை வைத்து நம் முன்னோர்கள் நடத்திய அதிசயத்தை இப்போது பேஸ்புக், வாட்சப்பில் படித்து வியந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கரையான் புற்றைப்பற்றி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்காட் டர்னரும், மகாதேவனும் கடந்த 26 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்கிறார்கள். புற்றுகளை புரொப்பேன் கொண்டு நிரப்புவது, லேசர் மூலம் அளப்பது, பிளாஸ்டர் மூலம் மூடிப்பார்ப்பது, microscopic beads, fluorescent green water போன்றவற்றை உணவில் கொடுத்து புற்று பக்கத்திலேயே படுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து பல அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

கரையான் புற்று என்பது நுரையீரல் மாதிரி ஒரு சுவாசிக்கும் அமைப்பு. தரைக்கு மேலே பல அடி உயரம் இருந்தாலும் கரையான்கள் குடியிருப்பது என்னவோ மண்ணுக்குள் வெகு ஆழத்தில். வெயில் பட்டு புற்றின் மேல்பகுதியில் உள்ள காற்று சூடாகி விரிவடையும்போது அடியிலிருந்து குளிர்ந்த காற்று வேறு துளைகள் வாயிலாக உள்ளே நுழைந்து வெப்பநிலையை மட்டுப்படுத்துகிறது. குளிர் அதிகமாக இருக்கும்போதும் இது பின்னோக்கி நடக்கிறது. அதனால் புற்றின் ஆழத்தில் வெப்பநிலையும், ஆக்சிஜன் அளவும் திறம்பட நிர்வகிக்கப்பட்ட மிகவும் அருமையான சூழல் இளம் கரையான்களுக்கும், மொத்த காலனிக்கும் கிடைக்கிறது. காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், வெப்பம், காற்றிலுள்ள நச்சுப்புகைகளின் அளவை கருத்தில்கொண்டு எந்த பகுதியில் திறக்கவேண்டும், மூடவேண்டும் என்பதை வேலைக்கார கரையான்கள் செய்துவிடுகின்றன.

ஒரு இராணி கரையான் 15 ஆண்டுகள் உயிர்வாழும், புற்றை அழிக்கவேண்டுமெனில் வெகு ஆழத்துக்கு தோண்டி இராணியை கண்டுபிடித்து நசுக்குவதுதான் ஒரே வழி. அல்லது அவ்வளவு ஆழத்துக்கு செல்லுமளவுக்கு பல துளைகளையிட்டு விஷத்தை ஊற்றவேண்டும். இராணி குறைந்தது ஒரு இன்ச் நீளத்துக்கு ஒரு பெரிய புழுவாக தெரியும்.

பருவசூழ்நிலை சரியாக இருக்கும்போது புதிய இடத்தில் காலனி அமைக்க வேண்டுமல்லவா? அதற்காக பாதி அளவிற்கான கரையான்கள் புற்றிலிருந்து இறக்கை முளைத்து ஈசலாகி (Alates) பறக்க ஆரம்பிக்கும். அந்த Nuptial flight-இன் போது ஈசல்கள் இலக்கில்லாமல் குத்துமதிப்பாக பறந்து ஆண்பூச்சிகள், பெண்பூச்சிகளின் வாசனைமூலம் உணர்ந்து கலவியில் ஈடுபட்டபின் எங்காவது விழுந்து இராணியாகி புதிய காலனியை ஆரம்பிக்கிறது. Inbreeding ஆகக்கூடாது என்பதற்காகவே எல்லா காலனிகளிலிருந்தும் ஈசல்கள் ஒரே நேரத்தில் கிளம்பி வருகின்றன.

கரையான் புற்றின் ventilation system மாடலை Bio-mimicry அல்லது Bio-inspiration அடிப்படையில் பயன்படுத்தி ஜிம்பாப்வேயில் ஒரு பெரிய கட்டடத்தையே கட்டியிருக்கிறார்கள். கட்டடக்கலை நிபுணர்கள் பலர் அந்த மாதிரியான மாடலில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கீழே இருக்கும் சுட்டிகளைப் படித்து பார்க்கவும்.

richard wolff என்ற பேராசிரியர் மக்களின் வர்க்க வித்தியாசங்களை அழகாக வீடியோ மூலம் விளக்குகிறார். கரையான் புற்றுகளில் இருக்கும் Worker, Soldier, Male, Queen போன்றவற்றில் யார் யாரை ஆள்கிறார்கள் என்பதும், ஆனால் உண்மையில் யார் யாரால் ஆளப்படுகிறார்கள் என்பதும் வித்தியாசமான கோணத்தில் வருபவை. சமூகத்தின் Working lower class, Working middle, Upper middle and Elite class குறித்த ரிச்சர்ட் உல்ப் வீடியோவும் அருமையான ஒன்று. ஈசல்கள் வருவதைப்போல நமது சமூகத்திலும் திடீர் குபீர் போராளிகள் வருகிறார்கள். ஈசல்களுக்காவது காலனியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான், ஆனால் நமது போராளிகளுக்கோ ஏகப்பட்ட மறைமுக குறிக்கோள்கள். அதற்காகவே இருக்கும் standard template-களில் கருணாநிதி ஒழிக, இந்தி தெரியாததால் வீணாப்போனோம், இட ஒதுக்கீடால் குவாலிட்டி போச்சு சார், இப்பலாம் யார் சார் சாதி பாக்குறா, இலவசத்தால நாடு குட்டிச்சுவரா போச்சு, யூனியன் வெச்சுத்தான் ஸார் நாடு கெட்டுது, திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடு கேட்டுது போன்றவற்றில் ஏதாவது ஒரு டெம்ப்ளேட்டை பிடித்துக்கொண்டு சிலகாலம் ஈசல் மாதிரி ரேண்டமாக பறப்பார்கள். ஆண்ட பரம்பரை, பெண்ணியம் போன்ற peculiar template-களும் உண்டு.

அத்தகைய டெம்ப்ளேட் பிடிக்க முடியாதவர்கள் ‘என்னே நம் முன்னோர்களின் மதிநுட்பம்’ என்ற கான்செப்ட்டை எடுத்துக்கொள்வார்கள். கரையான் புற்றை தோண்டி கிணறு வெட்டினால் நிறைய தண்ணீர் வரும், மெட்டி அணிவதின் பிஸியாலஜிகல் சிறப்புகள், ஜட்டி அணியாமல் பட்டாபட்டி அணிவதின் இரகசியங்கள், திருமணத்தின்போது பட்டுசேலை அணியக் காரணம் ஓசோன் கதிர்வீச்சை தடுப்பது, அந்த காலத்தில் இயற்கை விவசாயம் செய்து அத்தனைபேரும் நூறாண்டு வாழ்ந்தார்கள், எல்லாருமே பத்து குழந்தைகள் பெற்றார்கள், நெருப்பு கண்டுபிடிக்கும் முன்னரே A2 பால் குடித்து வளர்ந்தவன் தமிழன் என்று முட்டாள்தனமான விசயங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும் பரப்புவார்கள். ஆயிரம் விஷயங்கள் அந்தகாலத்தில் இருந்திருந்தாலும் அதை அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் விட்டுவிட்டு எல்லாமே வேதத்தில் இருந்தது, புராணத்தில் இருந்தது அவை அழிந்துபோக ஆங்கிலேயனும், திராவிட அரசுகளும்தான் காரணம் என்ற சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தால் இன்னும் பின்னாடிதான் போவோம்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கோஷ்டி அகமதாபாத்தில் புல்லெட் ரயில் ஓடுகிறது என்று ஜப்பானின் ரயிலைக் காட்டுவது, சூரத்தின் எக்ஸ்பிரஸ் ஹைவே என்று சீனாவின் இடதுபுற ஸ்டியரிங் உள்ள பேருந்தை காட்டுவது, நெதர்லாந்தில் வனவிலங்குகள் நெடுஞ்சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட வன மேம்பாலங்களை கிர் காட்டில் இருக்கிறது என்று போட்டது, ஜெர்மனியில் சிறிய கப்பல்கள் செல்லும் ஆற்றைக்காட்டி முதன்முறையாக ஆற்று ஓரத்தில் காற்றாலையுடன் கூடிய நெடுஞ்சாலையில் வலப்புறம் செல்லும் வாகனங்களும் ஆற்றில் கப்பலுமாக ஜாம்நகருக்கு பக்கத்தில் போவதாக வளர்ச்சி வளர்ச்சி என்று காட்டிக்கொண்டிருந்த கோஷ்டி இது Off-season என்பதால் “நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்ற சீரிஸ் ஆரம்பித்து பரப்புகிறார்களோ என்று தோன்றுகிறது!

எது எப்படியோ, கரையான் புற்றுக்கடியில் கிணறு வெட்டினால் நிச்சயம் தண்ணீர் வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது என்பதற்காகவே இந்தப் பதிவு.

http://news.nationalgeographic.com/news/2014/07/140731-termites-mounds-insects-entomology-science/

The termite mound: A not-quite-true popular bioinspiration story

http://www.esf.edu/efb/turner/termitePages/termiteGasex.html

https://www.amentsoc.org/insects/glossary/terms/nuptial-flight

How Class Works:

சினிமா விமர்சனம் எனும் புள்ளப்பூச்சி டார்ச்சர்கள்

இதுக்கு பேர்தான் புள்ளப்பூச்சி. பேர்தான் புள்ளப்பூச்சி (mole cricket) என்றாலும் இதற்கு சுவாரசியமான பின்னனி இருக்கிறது. இது மண்ணுக்குள் பதுங்கியிருந்து இரவில் இரைதேடும் பழக்கமுடையது. மண்ணை தோண்டுவதற்கு ஏதுவாக இதன் முன்னங்கால்கள் மிக வலுவானவை மேலும் அதிவேகமாக தோண்டக்கூடியவை. இராணுவத்திலும், காவல்துறையிலும் அந்த காலத்தில் குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைப்பதற்காக செய்யப்படும் சித்ரவதைகளில் இந்த புள்ளப்பூச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது. இரண்டு மூன்று பூச்சிகளைப் பிடித்து குற்றவாளியின் தொப்புள்மீது விட்டு டம்ளர் அல்லது கொட்டாங்குச்சியை வைத்து மூடி பிடித்துக்கொள்வார்கள். இந்த பூச்சி குழிபறிக்க ஆரம்பித்தால் நேர்கோட்டில் வெறித்தனமான வேகத்தில் தோண்டி மண்ணை ஓரத்தில் வீசிக்கொண்டே உள்ளே நுழையும். அதே பாணியில் தொப்புளை மூன்று, நான்கு பூச்சிகள் இரத்தம் வரவர தோண்டினால் எந்த அசாதாரண மனிதனும் கதறிவிடுவான்.

இரவுநேரத்தில் கிரிக், கிரிக், கிரிக் என்ற ஓசையை எழுப்புவது இந்த பூச்சிதான். பழைய படங்களில் இரவில் வில்லன் வரும்போதும், சிலநேரங்களில் ரொமான்ஸ் பாட்டின்போதும் பின்னணி ஓசையாக இந்த சத்தத்தைக் கேட்டிருக்கக்கூடும். இந்த சத்தங்களின் ஆராய்ச்சியும் சுவாரசியமானது. http://www.brisbaneinsects.com/brisbane_crickets/MoleCricket.htm

இது மட்டுமல்லாது பல பூச்சிகளின் பங்கு Forensic entomology-யில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பிணத்தின் மீது இருக்கும் பூச்சிகள், அதன் வளர்ச்சி, பருவசூழ்நிலை எந்தெந்த வகையான பூச்சிகள் இருக்கின்றன என்பதை வைத்து இறந்து எத்தனை நாள் ஆகியிருக்கலாம் என்பதை spot postmortem செய்கையில் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ஒருவேளை பூச்சிகளே இல்லாமல் பிணம் அழுகியிருக்கிறது என்றால் விஷம் மூலமாக மரணம் நேர்ந்திருக்கிறது என்ற கோணத்தில் வழக்கு நகரும்.
https://en.m.wikipedia.org/wiki/Forensic_entomology
இராஜேஷ்குமார் நாவல்கள் படித்து வளர்ந்த சமூகம் இதை நன்றாக அறியும்.

ஓரிடத்தில் கழுகுகள், பறவைகள் வட்டமிடுவது, குறுக்கே பறக்கும் பூச்சிகளின் வகைகளை வைத்து தூரத்தில் பிணம் கிடக்கிறது என்பதை சொல்லிவிடலாம். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் அமெரிக்கா சென்று ஓரிடத்தில் இருக்கும் புழுக்களைப் பார்த்து அங்கே தோண்டச்சொல்லி பிணத்தை எடுப்பது forensic entomology-யில் தமிழ்ப்படங்களில் வந்த கிளாசிக். பல மெடிக்கோ, சைக்கோ, லீகல், என்டமாலஜிக்கல் குறியீடுகள் நிறைந்த அந்ந படத்தைப் பற்றி இதற்குமேலும் பேசினால் பலரும் இதெல்லாம் அந்தக்கால கருடபுராணத்திலேயே கிருமிபோஜனம், மிருகினஜம்போ என்றெல்லாம் இருக்கிறது, வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே forensic entomology பாரதத்தில் இருந்தது, ஓரிடத்திற்குள் நுழையும்போது அங்கிருக்கும் உயிரினங்களை scouting செய்து செத்த விலங்கு எவ்வளவு தூரத்தில் உள்ளது, செத்து எத்தனை நாளானது என்பதெல்லாம் கிராமப்புறத்தில் ஆடுமேய்த்த அனுபவமுள்ளவர்களுக்கே தெரியும், அதைத்தான் ‘ராகவன் இன்ஸ்ட்டிங்ட்’ என்று குறியீடு வழங்கினர். மேலும் திராவிட அரசுகள்தான் வேண்டுமென்றே நமது பாரம்பரியத்தை அழித்து ‘பேசிக் இன்ஸ்ட்டிங்ட்’ போன்ற படம் மூலம் எரோட்டிக் குறியீடுகளை நிறுவினர் என்று சொல்லக்கூடும்.

இத்தகைய காத்திரமான சமகால விமர்சனங்கள் நமது தொன்ம விகுதிகளைப் பகடி செய்வதால் சமகாலப் படிமங்களை காட்சிப்பொருளாக்காமால் விட்டு, முதிர்ச்சியடைந்த சமூக சிந்தனைக்களத்தை எதிர்பார்ப்பது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது என்பதோடு அது நானாகவே புள்ளப்பூச்சியை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டதாகிவிடும்.

அறுபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக காத்திரமான விமர்சனப்பார்வை என்றபெயரில் சகமனிதனை சாகடிக்கும் இந்த சமகாலக் கொடூரம் இந்த லிங்கில் பத்தாவதாக சேர்கிறது.
http://mentalfloss.com/article/23038/9-insane-torture-techniques

#இறைவி அலப்பறைகள்

மண்வளம் குறித்த மூடநம்பிக்கைகள் – வெகுசன ஊடகங்களில்.

மண்ணியல் என்பது ஒரு தனித் துறை, அங்கே பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களது கண்டுபிடிப்புகள் விவசாயம் மட்டுமின்றி சிவில் கட்டுமானம் மற்றும் இராணுவத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி பசுமை விகடனில் வந்த ஓர் அதிசயத்தகவலை நண்பர்  Raghavan Sampathkumar சுட்டிக்காட்டினார். அதாவது ஒரு பாட்டிலில் மண்ணைப்போட்டு தண்ணீரை ஊற்றி மண்ணின் பிரச்சினைகளைக் கண்டுபிடிக்கும் அரிய Do It Yourself வகையறா தகவல்.

B.Sc agri படிக்கையில் மண்ணைப்பற்றி கதறக்கதற சொல்லிக்கொடுத்தார்கள். போதாக்குறைக்கு பலதரப்பட்ட மினரல்களை, GCT-யில் உள்ள Geology துறைக்கு அழைத்துச்சென்று காட்டி எங்களுக்கு புரியவைக்க பேராசிரியர்கள் முயன்றபோதும் “இதுவும் கவர்மெண்டு காலேஜ்தான், ஆனால் எப்படி இங்க மட்டும் இவ்ளோ பிகர்கள் உலவுகிறார்கள்?” என்ற யோசனையிலேயே என்னைப்போன்ற பலரும் இருந்ததால் சுமாராகத்தான் பாடம் புரிந்தது. மண்ணியலின் தந்தை இரஷ்யாவின் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்ற அளவில் படித்து பாஸ் செய்தோம். படித்து முடித்தபிறகு நாட்டரசன்கோட்டையில் சிலகாலம் நில அளவைத்துறையில் மண் படிமங்களை GIS mapping செய்ய வகைப்படுத்தும் களப்பணியில் இருந்துபோது கற்றுக்கொண்டது கொஞ்சம் ப்ராக்டிகல் வகை. ஆறடி ஆழத்துக்கு குழி வெட்டி உள்ளேயிறங்கி மண்ணின் profile மாதிரி எடுத்து அதன் குணாதிசயங்களை எழுதும் வேலை.

மண் துகள்களின் பலதரப்பட்ட தன்மைகளில் நீருடன் இணையும்போது அதன் பெருந்துகள்கள் சிறிய துகள்களாக உடைந்து பரவும் Slaking என்பதும், சிறிய துகள்கள் கரைந்து மண்ணின் முதன்மை படிமங்களான மணல், வண்டல் மற்றும் களிமண்ணாக (sand, silt, clay) மாறும் dispersion என்பதும் முக்கிய கூறுகள். படத்திலுள்ள Shepard’s sediment classification diagram என்பது Geology-யில் அடிப்படையான ஒன்று. அதன் மதிப்பீடுகள் 4,3,2,1,0 எனவும் 4 என்பது கரையவேயில்லை எனவும், 0 என்பது முழுவதும் கரைந்துவிட்டது என்றும் சொல்கிறது. இந்த களச் சோதனையும் இரண்டு மணிநேரத்தில் முடிந்துவிடவேண்டும். பீர்ல்காம்ப் ஸ்கேல் (Peerlkamp Scale) என்பது கொஞ்சம் வேறுமாதிரியானது என்பதால் அது இங்கு தேவையில்லை (சும்மா பார்க்க மட்டும் படம் இணைக்கப்பட்டுள்ளது). மண்ணில் தண்ணீரை கலக்கி லட்டு செய்வது, திரி செய்வது, முக்கோணம் செய்வது என சிறுபிள்ளைகளின் விளையாட்டு மூலமும் மண் படிமங்களை கண்டுபிடிக்க முடியும் என்றாலும் அது இந்த இடத்தில் out of scope என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

தமிழில் அறிவியல் கருத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது எந்த அடிப்படையில், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை தராமல் இது ஆபத்தானது, இது நல்லது என்று அடித்துவிடுவது தவறான முன்னுதாரணம். பாலைவன மண்கூட அதற்கென சில சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றால் அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் அவசியமில்லை.

ஆர்வக்கோளறுகள் சிலர் பரப்பும் தவறான தகவல்களை உண்மை என நம்பித்தொலைப்பது தமிழனின் தலையெழுத்து. இங்கே மட்டுமல்லாது ஹாலிவுட்வரை உண்டு. Journey to the Center of the Earth என்ற படத்தில் ஒரு குகைக்குள் நடந்து செல்லும்போது Muscovite என்ற ஒரு பாறையின்மீது நடப்பதாகவும், அது ஒரு thin type of rock formation என்று சொல்லும் ஹீரோ, அது உடைந்து கீழே செல்லும் மொக்கை சீன் இதோ.

அதில் வரும் geology குறித்த தகவல்களை ஒருவர் எப்படியெல்லாம் கழுவி ஊற்றியிருக்கிறார் என்பதைக் காண http://paleopix.com/blog/2012/12/08/bad-geology-movies-journey-to-the-center-of-the-earth-2008/

இதை நினைவில்கொண்டு அண்மையில் கோவையில் உள்ள Gass Forest Museum-திற்கு சென்றபோது மஸ்கோவைட்டை கொஞ்சநேரம் வெறித்துப்பார்க்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அத்தனை மினரல் வகைகளையும் ஒரே இடத்தில் பார்க்கவேண்டுமானால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்துவிடுங்கள்.

நேரமிருப்பின் படித்துப்பார்க்க மண் குறித்த Self study தகவல்கள் இந்த சுட்டியில் இருக்கிறது

http://www.fao.org/docrep/010/i0007e/i0007e00.htm

பசுமை விகடன் பலருக்கு தெய்வநூலாக இருந்தாலும் எனக்கு பார்த்தாலே வீண் மன உளைச்சல் வரும் என்பதால் அதை ஒருபோதும் படிப்பதில்லை. அப்படியிருந்தும் இந்தமாதிரி ஹார்லிக்ஸ் பாட்டில் சோதனைகள் மூலம் மண்ணைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவது என்பது கழுதை**** தூக்கிப்பார்த்து மணி சொன்ன கதைதான்!