லிப்ஸ்டிக் மிளகாய்!

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்திலுள்ள பியாடகி (Byadagi) நகரைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அங்கு நடைபெறும வறமிளகாய் வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 300 கோடி. பியாட்கி லோக்கல் என்றழைக்கப்படும் அந்த உள்ளூர் மிளகாய் இரகத்துக்கு Geographical Indicator மதிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த காரத்தையும், அதீத சிவப்பு வண்ணத்தையும் உடையது. காரத்தை SHU (Scoville Heat Units) என்ற அலகாலும், வண்ணத்தை ASTA value (American Spice Trade Association) என்ற அலகாலும் அளக்கிறார்கள்.

இந்த வறமிளகாய்களில் இருந்து குறைந்த வெப்பநிலையில் பல்வேறு படிநிலைகளின் மூலம் எடுக்கப்படும் ‘ஒலியோரெசின்’தான் லிப்ஸ்டிக், நெய்ல் பாலிஷ் போன்றவற்றின் வண்ணத்துக்கான அடிப்படைப் பொருள். பல கோடி ரூபாய் வர்த்தகம் இதில் உண்டு.
எதற்காக இந்த முன்னுரை என்றால் இவ்வளவு மதிப்புள்ள இந்த மிளகாய் வர்த்தகத்தில் ஹைப்ரிட் இரகங்களைப் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தைக் கூட்ட, பெண்களுக்கு தரமான லிப்ஸ்டிக்கைத் தர ஒருசாரார் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை பேஸ்புக்வாழ் சமூகத்துக்கு தெரிவிப்பதற்காகத்தான்.

ஓர் இந்திய நிறுவனமும் இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் ஹைபிரிட் இரகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் உள்ளூர் இரகத்தின் அடர் சிவப்பு வண்ணமளவுக்கு வர இயலவில்லை. இதனால் லிப்ஸ்டிக், நக பாலிஷ் தயாரிப்புக்கு ஏதாவது பங்கம் வருமா என முப்பதுக்கும் மேற்பட்ட தடிதடியான ஆண்கள் உட்கார்ந்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையை உணரமுடிந்தது.

விரைவில் திருமணமாகவிருக்கும் ஒரு சகா, ”பாத்தவுடனே கிஸ் பண்ணனும்னு தோணற மாதிரி கலர், பிளேவர் எதுனா மார்க்கெட்ல இருக்கா, அதுக்கு சப்போர்ட் பண்ற ஆஸ்பெக்ட்ல நம்மகிட்ட புராஜெக்ட் எதாச்சும் ஆன்கோயிங்ல இருக்கா?” என்று கேட்டார். நாம விதை விற்க போறோமா, உறை விற்க போறோமா என்று தொண்டைவரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு ‘அப்படி ஏதும் இருக்கறதா எனக்கு தெரியல’ என்று முடித்துக்கொண்டேன்.

#நெடுஞ்சாலை #பார் #தடை #பின்விளைவுகள்

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *