கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்

கோயமுத்தூரில் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை பிரான்சு நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது.

அவ்வளவுதான், இனிமேல் அந்தக் கம்பெனி சொன்ன விலைக்குத்தான் தண்ணீர் வாங்கிக் குடிக்கவேண்டும், வீட்டில் போர்வெல் தண்ணியைக்கூட பயன்படுத்த முடியாது, மழைநீரை சேகரித்து வைத்திருந்தாலும் அந்த கம்பெனிக்காரன் காசு கேட்பான், கோவையின் குளங்களெல்லாம் CSR Fund மூலமாக பிரிக்கால் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, சுடுகாடெல்லாம் ஈஷா கட்டுப்பாட்டில் இருக்கிறது, பொலிவியா நாட்டில் சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்கலை எடுத்த பிறகுதான் உள்நாட்டுப் போரே மூண்டது என ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் கட்டுரை எழுத, உடனே பலரும் ஹாலிவுட் படங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகள் துப்பாக்கிகளோடு திறந்த ஜீப்புகளில் செல்லும் காட்சிகளை கோயமுத்தூர் வீதிகளில் கற்பனை செய்துகொண்டு களமாடினார்கள். இப்படியெல்லாம் எழுதினால்தானே சுற்றுச்சூழல் ஆர்வலராக முடியும்! யதார்த்தத்திற்கு அருகில் போகும்போது ஏழை, பணக்காரன், ஆண்ட சாதி, அடிமைச் சாதி என்றெல்லாம் வந்துவிடுகிறது; இது ஜீரணிப்பதற்கு கஷ்டமாக இருப்பதால் சுகமாக இருக்கும்படி ஒரு சைடு வாதத்தை மட்டும் வைத்துக்கொள்கிறார்கள்.

இதன்மூலம் ஏழைகளுக்குத் தண்ணீர் கிடைக்காது, காசு கொடுப்பவனுக்குக் கூடுதல் நீர் கிடைக்கும், பணக்காரன் வீட்டில் புல்தரைக்குக் கிட்டும் தண்ணீர் ஏழைக்குக் குடிக்க இருக்காது, கார்ப்பரேட் கம்பெனிக்கு அள்ளித்தருவார்கள், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதா, Welfare state-னா என்னான்னு தெரியுமா என்று எத்தனை விதமான விவாதங்கள்! 2017-இல் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வறட்சி. குடிதண்ணீர் வழங்க அணையில் தண்ணீர் இல்லை; அணைக்குள் ஆள்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. ரேஸ் கோர்ஸ் குடிமக்களுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் புலியகுளத்து குடிமக்களுக்கு இருபது நளைக்கு ஒருமுறை தண்ணீர்; அங்கிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாப்பாநாயக்கன்பாளையத்து குடிமக்களுக்கு மாதக்கணக்கில் தண்ணீரே வரவில்லை. லாரியில் பெயரளவுக்கு ஊற்றிவிட்டுப் போனார்கள். ஆமாம், ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஏழைபாழைகள் தண்ணீருக்கு என்ன செய்வார்கள், பாவம்! அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் நினைவுக்கு வருகிறது. ஒருசாராருக்கு வாழ்க்கையில் பாதுகாப்பாக எல்லாம் கிட்டிவிடும்போது குழாயில் தண்ணீர் பிடிப்பது மட்டுமே வாழ்க்கையின் பெருந்துயரமாகத் தெரியும்.

ஏழைகள், விளிம்புநிலை மனிதர்கள் குடிநீருக்குத் தடுமாறுவார்களாம். கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் எளிய மனிதர்களைச் சுரண்டுகிறதாம். உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்காக டோபிகானா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை (தற்போது பட்டா வைத்திருக்கிறார்கள்) காலிசெய்ய 15 நாள் அவகாசம் வழங்கியிருக்கிறது மாநகராட்சி; மலுமிச்சம்பட்டியில் குடிசைமாற்று வாரிய வீடுகள் தரப்பட்டிருக்கின்றன. உக்கடம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் ஜஸ்ட் 20 கிலோமீட்டர் தள்ளி கீரநத்தத்தில் வீடு வழங்கியிக்கிறார்கள். ஆங், அப்புறம் விளிம்புநிலை மனிதர்களின் வேலைவாய்ப்பு? அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் பருத்தி, மக்காச்சோளம், கொண்டைக்கடலை விளையும் அற்புதமான கரிசல்மண் பூமியில் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வானுயர வீற்றிருக்கும் Cognizant, Bosch, Ford போன்ற மென்பொருள் நிறுவனங்களில் ஹவுஸ்கீப்பிங், செக்யூரிட்டி, டேக்சி ஓட்டுனர், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற வேலைகளுக்குச் சென்றுவிடலாம். மென்பொருள் பொறியாளர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்டுகளுக்கு வேலைக்காரம்மா, ஆயாம்மா போன்ற வேலைகளுக்குச் செல்வதன் மூலம் அவர்கள் அலுவலக cab-இல் அரை கிலோமீட்டர் பயணித்து வேலைக்குச் செல்கையில் ‘துடைத்தெரியப்படும் எளிய மக்கள்’ என்றெல்லாம் பேஸ்புக் பதிவு போட்டு உலகத்திற்கு புரிய வைப்பார்கள். அந்தப்பக்கம் ஜக்கி வாசுதேவன் என்றால் இந்தப்பக்கம் ஐ.டி. கம்பெனிகள். யார் எடுக்கிறார்கள் என்று தண்ணீருக்குத் தெரியவா போகிறது? எல்லோருமே ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றுபேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், ஏழைகளை ஏழைகளாகவே பாதுகாக்க வேண்டும். மறந்தும் அவர்களுக்கு வாய்ப்புகளோ, ஓய்வுநேரமோ, உபரி வருமானத்திற்கு வழிகளோ வந்துவிடக்கூடாது.

தற்போது கோவை மாநகராட்சி 1000 லிட்டர் தண்ணீரை 4.50 ரூபாய்க்கு வீடுகளுக்கு வழங்குகிறது. லிட்டருக்கு ஒரு பைசா கூட இல்லை. உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து நஞ்சப்பா சாலை, காட்டூர் பகுதியில் மட்டும் 1000 கடைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். ஒரு கடைக்கு நாளொன்றுக்கு ஒரு தண்ணீர் கேன் 40 ரூபாய் விலையில் என்று வைத்துக்கொண்டால்கூட 40000 ரூபாவை 20000 லிட்டர் தண்ணீருக்காக கடைக்காரர்கள் செலவிடுகிறார்கள். முறையாக விநியோகிக்கப்படும்பட்சத்தில் இந்த இருபதாயிரம் லிட்டர் குடிநீருக்கு மாநகராட்சி வாங்குவதோ வெறும் 90 ரூபாயாகத்தானே இருக்கும்?

மனிதனின் அடிப்படை உரிமையான தண்ணீரைத் தனியார்வசம் வழங்குவது தற்சார்பைக் குலைத்துவிடுமாம். இன்று குடிநீரை வழங்குவதற்கு காசு கேட்பவர்கள் நாளை கழிவுநீரை வெளியேற்றவும் காசு கேட்பார்களாம். ஆயிரம் அடிக்கு துளையிட்டு பிவிசி குழாயில் கட்டடத்தின் மேலே சைன்டிஃபிக் வாஸ்து சொன்னபடி தென்மேற்கு மூலையிலிருக்கும் சின்டெக்ஸ் தொட்டிக்கு ஏற்றி வெஸ்டர்ன் வாட்டர் குளோசெட்டில் உட்கார்ந்து அலசிவிடுவதை பாதாள சாக்கடையின் வாயிலாக பாதுகாப்பாக எடுத்துச்சென்று சூலூருக்கு அந்தப்பக்கமாக நொய்யலில் கலந்துவிட்டு அங்குள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்வது தற்சார்பு என்பதில் எந்த அத்தியாயத்தில் வரும்? ஆர். எஸ். புரத்திலும், சிங்காநல்லூரிலும், கவுண்டம்பாளையத்திலும் இருப்பவர்களுக்கு பாதாள சாக்கடை வசதிகளாவது இருக்கிறது. காளப்பட்டிக்கு அருகில், பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகில் புதிதாக முளைத்திருக்கும் நகர்களுக்கு அடிப்படை சாக்கடை வசதியே இல்லை; குளியலறை, சமையலறைக் கழிவுநீரை ஒவ்வொரு வீட்டிலும் choke pit அமைத்து அங்கேயே நிலத்துக்குள் செலுத்தி அதையே திரும்ப எடுத்து பயன்படுத்துபவர்களும் அதே வரியைத்தானே செலுத்துகிறார்கள்?

சொல்லப்போனால் கோயமுத்தூரின் 90% வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி பெயரளவில்கூட இல்லை. கான்கிரீட்டால் மூடப்பட்ட நகரில் மழை பெய்தால் ஒருமணிநேரத்தில் வடிந்து விடும். நிலத்தடி நீர் recharge ஆனால்தானே நீர்மட்டம் உயரும். Glossy லுக் குறையாமல், சிறுசிறு திவலைப் படலங்கள் இல்லாமல் இருக்க பில்லூர்/சிறுவாணி அணையின் நீரில் கோவை நகர எல்லைக்குள் கழுவப்படும் ஒவ்வொரு ஃபார்ச்சூனர், பென்ஸ் கார்களுக்கும் பவானி ஆற்றின் கடைமடையில் இருக்கும் விவசாயி வருடம் கொஞ்சமாக முதலீடு செய்து குறைந்த மகசூலில் நிறைய சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்களுக்கு மாறவேண்டும். (இஃதெல்லாம் Participatory Irrigation Management- இல் வருகிறது. அதைத் தனியாக ஒருநாள் பர்ப்போம்).

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகளுக்கு அரசாங்கம் மானியம் தருகிறது. ஆயிரம் யூனிட் பயன்படுத்துபவர்கள் தங்களது கட்டண விகிதம் மொத்தமாக மாறுகிறது என்பதற்காக மாதாமாதம் கணக்கெடுக்க வேண்டும் என்கிறார்கள், டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பங்களுக்கு வரிக் குறைப்பு அல்லது மானியம் வேண்டும் என்றெல்லாம் என்னென்னவோ சொல்லி லாபி செய்கிறார்கள். இந்த பணக்காரப் பிச்சைக்காரன்கள் இதையெல்லாம் நாளேடுகளில் எழுதி அதை புத்திசாலித்தனம் என்று நிறுவுகிறார்கள். இன்று பல வீடுகளில் தொட்டி நிறைந்து சாலைகளில் ஓடி சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி நீர். அட விடுப்பா,போனா போகட்டும் என்கிறார்கள்; அதை மூடுவதற்கு ஒரு கேட்வால்வு கூட பல வீடுகளில் இருப்பதில்லை. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் வீதம் கணக்கிட்டு மிகக்குறைந்த கட்டணமோ அல்லது இலவசமாகவோ வழங்கிவிட்டு மீதிக்கு மின்சார வாரியம் மாதிரி Slab rate போட்டு இழுத்தால் தண்ணீர் தட்டுப்பாடே வராது. மீதமிருக்கும் நீர் ஆற்றிலாவது ஓடிக்கொண்டிருக்கும். இன்றுதான் ஆதார் கார்டு, Big data, Artificial Intelligence என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கிறதே.

கார்ப்பரேட் கம்பெனியான சூயஸ், இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு ஏழைபாழைகளை நசுக்குமாம். ஆனால் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், கோவில்கள் போன்றவற்றிற்கு Bulk connection என்றபெயரில் இருக்கும் இணைப்புகளுக்கு இந்த டெண்டரில் இடமே இல்லை. பல்க் கனெக்‌ஷன் எல்லாமே கோவை மாநகராட்சி தன்வசமே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்ப சரி, மாநகராட்சி வசம் இருக்கிறது என்றால் அதில் ஊழல், குளறுபடி, லாபி என எதுவுமே இருக்காது என்றால் நம்பமாட்டார்கள் அஃதெப்படி, அரசாங்கம் எதையாவது உருப்படியாக நடத்தியிருக்கிறதா என்ற கேள்வி எக்கி நிற்கிறது.

2045-இல் கோவை நகர மக்கள்தொகையை கணக்கிட்டு 24 மணிநேரமும் தண்ணீர் வழங்கும்படியாக ஆயிரத்து சொச்சம் கோடிகளில் ஆங்கிலேயர் காலத்துக் குழாய்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அனைத்து இணைப்புகளிலும் மீட்டர் பொறுத்தி GIS மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் இந்த திட்டம், அவினாசி-அத்திக்கடவுத் திட்டம் என்றபெயரில் ஏற்படவிருந்த சுற்றுச்சூழல் சீ்ரழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவையும் வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும்போது மீட்டரில் காட்டும் அளவையும் ஒப்பிடும்போது 20% நீரைக் காணவில்லை என்று மாநகராட்சியே ஓப்புக்கொள்கிறது. மீட்டர் இல்லாமல், மாநகராட்சிக்கே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் திருட்டு இணைப்புகள் தெருவுக்கு இரண்டு இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.

அறுபது வார்டுகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் மாநகராட்சில் தீர்மானம் போடப்பட்டு கெஜட்டில் வெளியிடப்படும் விலைதான் மக்களிடம் சூயஸ் நிறுவனத்தால் வசூலிக்க முடியும். GIS மூலம் இணையத்தில் பிணைக்கப்படும் பயனர் விவரம் மூலம் தண்ணீர் பயன்பாடு குறித்த அனைத்து விவரங்களையும் ஒளிவுமறைவில்லாமல் பார்க்கமுடியும் எனபதோடு, கட்டணம் செலுத்துதல், புகார்கள் என அனைத்தும் டிஜிட்டலாகும்.

ஒருசாரார் அணைகள் எல்லாம் அந்த கம்பெனி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கதை விடுகிறார்கள். அணைகளில் நீர் எடுக்கும் தொட்டிகள், மின் எக்கிகள் (electric motors), குழாய்கள் போன்றவற்றின் பராமரிப்பு மட்டுமே அந்த நிறுவனத்தின் scope-இல் வருகிறது. அணைகளை அந்த நிறுவனம் எடுத்துப் பராமரிக்கும் எனபது கேட்பதற்கே முட்டாள்தனமாக இருக்கிறது.

ஏதோ இத்திட்டம் இரகசியமாக நடந்து முடிந்துவிட்டதாகவும் கதை உலவுகிறது. 2008-இல் திட்டமிடப்பட்டு, பலகட்ட ஆய்வுகள், விசாரணைகள், detailed project report என படிப்படியாக வளர்ந்து ஓப்பன் டெண்டருக்கு வந்துள்ளது. 500 கோடிக்கு மேல் டெண்டர் என்றால் சர்வதேச அளவிலான குளோபல் டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது விதிமுறை. நீர் மேலாண்மையில் முறையான அனுபவமுடைய பிரான்சு நிறுவனம் குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரி எடுத்திருக்கிறது. ஏப்ரல் மாதம் கம்பெனி பதிவுசெய்து ஜூன் மாதம் 15000 கோடிக்கு இராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு எந்த முன் அனுபவமும் இல்லாத, மோடியின் நண்பரான அம்பானியின் கம்பெனிக்கு அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸை பின்னுக்குத் தள்ளி டெண்டர் கிடைத்தபோது கமுக்கமாக இருந்த தேசபக்தர்கள் இப்போது குதிப்பதில் ஆச்சரியமில்லை.

மேற்கு மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்சினை திமுகவுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன்பின்னர் அதீத விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கி மின்சார வாரியத்தை திவாலுகும் நிலைமைக்கு அதிமுக அரசு கொண்டுசென்றாலும் மக்களுக்கு அதைப்பற்றி கவலை இருந்ததில்லை. சமூக நீதி, உட்கட்டமைப்புகள், சட்டப் பாதிகாப்புகள், வேலைவாய்ப்புகள் என பல கோணங்களிலும் நல்ல எழுச்சி ஏறபட்டு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமையும்போது நான் நன்றாக இருந்தால் போதும் என்கிற சராசரி நடுத்தர வர்க்க மனநிலைக்கு மக்கள் திரும்பி விடுகின்றனர். போராட்ட குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. கம்யூனிசம் கோயமுத்தூரில் காணாமல் போனதே சாட்சி. குடிநீர் வரிக் கட்டணம் ஏறாதபோது தினமும் தண்ணீர் வருகிறது என்றால் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அஃது அரசாங்கத்தால் செய்யப்படுகிறதா, தனியாரால் செய்யப்படுகிறதா என்று பொதுசனம் கவலைப்படாது. இந்த திட்டத்தைத் திமுக எதிர்ப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியாக இருக்கிறது.

வீடுகளில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதையும் அந்த நிறுவனம் கட்டுப்படுத்திம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் போர்வெல் அமைப்பது மாநகராட்சி சட்டதிட்டத்தின் கீழ் வருகிறது. அந்நிறுவனத்துக்கும், போர்வெல்லுக்கும் எதுவுமில்லை. இன்று எல்லோரும் மாநகராட்சி சட்டத்தைக் கடுகளவும் மீறாத மாதிரியும், மக்களது நேர்மையை களங்கப்படுத்துவது மாதிரியும் ரொம்பத்தான் கூவுகிறார்கள்!

லைசன்ஸ் இராஜ்ஜியத்தில் வளர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சமூக மதிப்பீடுகள், மாறிவரும் வியாபார சூழல்களினால் ஏற்படும் அதிர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகவே இத்தகைய எதிர்ப்புகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம். 

தமிழகப் பாடநூல் வெளியீடுகள் வரலாற்றில் முதன்முறையாக பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.

இலக்கிய நூலாக இருந்தால் காத்திரமான விமர்சனம் என்று குறிப்பிடலாம். பாடநூல் என்பதால் ஆத்திரமான விமர்சனம் அல்லது சீராய்வு என்று வைத்துக்கொள்வோம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer): +1 மாணவர்களின் வேளாண்மைப் பாடநூலை சும்மா புரட்டிப்பார்க்க ஆரம்பித்ததில் பல பிழைகள் கண்ணில் பட, அதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டால் மாணாக்கர்களுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதியிருக்கிறேன். கல்லூரிப்படிப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக வேளாண் தொழிற்துறையில் பணிபுரிந்திருந்தாலும் Academia, teaching என்பதெல்லாம் எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று. அதனால் +1 வகுப்புக்குப் பாடத்திட்டத்தின் சுமை குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் Concept, Fact, அறிவியல் விதிமுறைகளில் பிழை இருக்கும்போது அது அனைவராலும் பிழையாகவே பார்க்கப்படும். இதைத் தொகுப்பதற்கு எனக்குப் பின்னணியில் எந்த இயக்கமும், நபர்களும் இல்லை. இந்தக் கட்டுரையில் பிழையென சுட்டிக்காட்டப்படும் எதுவும் சரியென நிறுவும்பட்சத்தில் அவை நீட் உட்பட இதர நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் சரியாக இருக்குமா என்பதைத் துறைசார் நூல்களிலும், இணையத்திலும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேளாண் அறிவியல் – கருத்தியல் (Theory)

பக்கம் 30: /சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உருவாகி ஓசோன் படலத்தை அரித்து அதன் அடர்த்தியைக் குறைக்கிறது/

CFC என்பது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இயற்கையாக உருவாகும் CFC-யால் ஓசோன் படலம் ஓட்டையாகிறது என்பது இன்றைய பிரச்சினை அல்ல.சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உண்டாகி ஓசோன் படலத்தை அரிக்கிறது என்பதெல்லாம் குழப்பமான வாசகம்.

பக்கம் 34: /மண்ணியலின் தந்தை ஃபிரடெரிக் ஆல்பர்ட் ஃபேலோ (1794-1877)/

Friedrich Albert Fallou அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரை நவீன மண்ணியலின் தந்தை என்று விக்கிபீடியா மட்டுமே சொல்கிறது. TNAU-வின் மண்ணியல் பாடங்கள் உட்பட இதர நூல்கள் உருசிய அறிஞர் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்பவரையே மண்ணியலின் தந்தை என்று குறிப்பிடுகின்றன.

பக்கம் 57: /கொழுப்புச்சத்தானது கொழுப்பில் கரையாதது மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது என இரு பிருவுகளைக் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E மற்றும் K வின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. இக்கொழுப்புச்சத்தால் உருவாகும் ஒமேகா 3 உடல் நலத்திற்கு ஏற்றது/

இந்த வாசகங்களில் இருந்து பெறப்படும் தகவல் என்ன? முதல் வரியும் கடைசி வரியும் என்ன பொருளைத் தருகிறது?

பக்கம் 109: /1995 ஆம் வருடத்தில் முளைத்த தாமரையின் விதையே இன்றுவரை நீண்ட உறக்கநிலை கொண்ட விதையாக ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் உறக்க நிலை 1300 வருடங்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்/

Seed Dormancy என்பதற்கும் Seed Viability என்பதற்கும் உள்ள தொடர்பையும் வேற்றுமையையும் கவனமாகப் பார்க்க வேண்டும். 1300 வருடங்கள் விதை உறக்க நிலையில் இருந்தது என்பதைவிட விதைக்கு Viability இருந்தது என்பதே சரியான interpretation. விதை உறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி தொடர்கிறது – 1000 வருடங்கள் தாண்டியும் – என்றால் அது விதை உறக்கத்தினால் மட்டும்தான் நிகழ்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. சைபீரியாவில் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய விதை ஒன்றையும், இஸ்ரேலில் 2000 வருடங்களுக்கு முந்தைய விதை ஒன்றையும் ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கண்டுபிடித்ததோடு முளைக்கவும் வைத்திருக்கிறார்கள். இது இந்த அத்தியாயத்தை எழுதிய ஆசிரியருக்கே வெளிச்சம்!

பக்கம் 116: TNAU தானியங்கி விதை மற்றும் நாற்று வழங்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது என்பது குறித்த தகவலைக் கட்டம் கட்டி +1 மாணாக்கர்களுக்கு போதிப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நூறு கோடி ரூபாய்க்கு நெருக்கமாக காய்கறி விதை விற்பனை நடக்கும் தமிழகத்தில் ஒரு கோடிக்குக் கூட விதைகளை விற்பனை செய்ய முடியாத தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் செய்யும் தேவையில்லாத PR stunt-களில் இதுவும் ஒன்று. இந்த இயந்திரத்தை என்னமோ இவர்களே கண்டுபிடித்திருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கிறது. கோடிக்கணக்காண ரூபாய்க்கு விதைகளை விற்பனை செய்யும் கம்பெனிகள் கூட செய்யாத வேலைகளை எப்படி வெட்கமே இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் செய்கிறார்களோ?!

பக்கம் 142: ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த அட்டவணையில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை மெக்னீசியத்திலும், மெக்னீசியத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை இரும்புச்சத்திலும் கொடுத்துள்ளனர். Interveinal chlorosis என்பது இரும்புச்சத்து பற்றாக்குறையின் முக்கிய அடையாளமாகும். போட்டித் தேர்வுகளிலும் இது தவறாமல் கேட்கப்படும். Indicator plants குறித்து ஓரிரு வரிகள் கூட கொடுக்கப்படவில்லை.

பக்கம் 168: விதைக்கும் முன் தெளித்தல் களைக்கொல்லியின் உதாரணமாக பாராகுவாட் டை குளோரைடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதிய, சரிபார்த்து ஒப்புதல் அளித்த ஆசிரியர் குழுவை எந்த கெட்ட வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். பாராகுவாட் என்பது முளைத்தபின் தெளிக்கும் களைக்கொல்லி. டிரைஃபுளூரலின் தேர்திறன் அற்ற களைக்கொல்லிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதுவும் தவறு. டிரைஃபுளூரலின் என்பது தேர்த்திறன் உடைய களைக்கொல்லி. மேலும் சந்தையில் தேடினாலும் கிடைக்காத களைக்கொல்லியைப் பாடத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

பக்கம் 169: கரும்புக்கு மெட்ரிபூசின் எனும் களைக்கொல்லி முளைப்பதற்கு முன் தெளிக்கும் களைக்கொல்லியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரிபியூசின் என்பது முளைத்தபின் தெளிக்கும் வகை. இந்த மாதிரியான அடைப்படைத் தவறுகளெல்லாம் மன்னிக்கவே முடியாதவை.

பக்கம் 183: குளோர்பைரிபாஸ் எல்லாம் சந்தையில் தடை செய்ய காத்திருக்கும் அதரபழசான இரசாயனம். இதையெல்லாம் உதாரணம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

பக்கம் 190: /1943 ஆம் ஆண்டு இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது நெல் குலை நோய் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது இந்திய வரலாற்றில் வங்காளப் பஞ்சம் என/

இது கட்டம் கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்.

1943-இல் வங்காளப் பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது Rice Brown spot or Fungal Blight எனப்படும் பழுப்புப் புள்ளி நோய் . இது Helminthosporium oryzae எனும் பூஞ்சாணத்தால் வருவது. பஞ்சத்துக்குப் பல்வேறு காரணங்கள் இந்த நோயைத் தவிர இருக்கின்றன; பல நூல்கள் அந்தப் பஞ்சம் குறித்து வந்திருக்கின்றன. நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வங்காளப் பஞ்சம் குறித்த இந்த கேள்வி தவறாமல் இடம்பெறும். இதுகூடத் தெரியாமல் அந்த ஆசிரியர் குழு என்ன செய்தது என்று ஆச்சரியமாகவும், ஆத்திரமாகவும் இருக்கிறது.

நெல் குலை நோய் என்பது Pyricularia grisea எனும் பூஞ்சாணத்தால் வரும் Paddy Blast disease.

பக்கம் 208: /சேமிப்பிற்கு பயன்படும் சாக்குப் பைகள் புதியதாக இருக்க வேண்டும். பழைய சாக்குப் பைகளை மாலத்தியான் 50 சதம் ஈ.சி. அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதம் எஸ்.சி. 0.1 சதம் கரைசலில் நனைத்து நன்கு உலர்த்திய பிறகு உபயோகிக்க வேண்டும்/

மாலத்தியான், டைக்குளோர்வாஸ் எல்லாம் விரைவில் தடை செய்யப்பட இருப்பவை. தானிய சேமிப்புக் கிடங்குகளில் 1980-களுக்குப் பிறகு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும்.

பக்கம் 235: பாஸ்ச்சுரைசேசன் குறித்த தகவலில் குறைந்த வெப்பம் கூடுதல் நேரம், அதிக வெப்பம் குறைந்த நேரம் என்பது எத்தனை டிகிரி வெப்பம், எவ்வளவு நிமிடங்கள் என்பதைக் குறிப்பிடாமல் மொட்டையாக இருக்கிறது.

வேளாண் அறிவியல் – செய்முறை (Practical)

பக்கம் 11: தானியப்பயிர்கள்(Cereals) எல்லாம் கிராமினே என்ற குடும்பத்தில் வருபவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தாவர வகைப்பாட்டியலில் கிராமினே என்பது போயேசியே (Poaceae) என்றே வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்தைகளே இருக்கும் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

பக்கம் 12: எண்ணெய் வித்துக்களில் எள், டில்லியேசியே குடும்பம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனால் இன்று எள், பெடாலியேசியே (Pedaliaceae) என்ற குடும்பத்தில்தான் வருகிறது. (டில்லியேசியே என்பதும் அச்சுப்பிழை. அதை டிலியேசியே என்றே குறிப்பிட வேண்டும்).

பக்கம் 20: சோற்றுக் கற்றாழைச் செடியின் குடும்பம் லில்லியேசியே என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று Aloe vera என்பது ஆஸ்ஃபோடேலேசியே (Asphodelaceae) என்ற குடும்பத்தில் வருகிறது.

பக்கம் 21: புதினா மற்றும் மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்) போன்றவை லேபியேட்டே குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அனால் இன்று லேபியேட்டே குடும்பம் என்பது லேமியேசியே (Lamiaceae) என்றே வழங்கப்படுகிறது.

இதுவும், அதுவும் ஒன்றுதான் என்று நாமே சொல்லிக்கொண்டாலும் தாவர வகைப்பாட்டியலில் இன்றைய பெயரிடுமுறை (Nomenclature) என்ன சொல்கிறதோ அதையே பயன்படுத்த வேண்டும். பழைய பெயர்களைப் பயன்படுத்துவது தவறில்லையென்றாலும் சரியென்றாகிவிடாது.

பக்கம் 44: நுண்ணியிரிகளினால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல் என்ற அத்தியாயத்தில் நோய்க்காரணியின் (Causal Organism) பெயர், வைரஸ் நோயாக இருப்பின் கடத்தியின் (Vector) பெயர், கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை இல்லாமல் மொட்டையான தகவல்களாக வெறும் படங்களாலும், வார்த்தைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

பக்கம் 50, 51: நன்மை செய்யும் உயிரினங்கள் என்ற அத்தியாயத்தில் இரை விழுங்கிகள் (Predators) என்ற அட்டவணையில் வழங்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் அறிவியற்பெயர் எழுதும் முறை முற்றிலும் தவறாக இருக்கிறது.

அறிவியற்பெயர் எனில் ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினத்தின் முதல் எழுத்து Capital letter-உம், ஏனைய எழுத்துகள் Small letters-உம் சாய்வெழுத்தாக (italic) எழுதியிருக்க வேண்டும். கையால் எழுதும்போது பேரினம், சிற்றினம் இரண்டையும் தனித்தனியாக அடிக்கோடிட வேண்டும். இதையெல்லாம் பத்தாம் வகுப்பில் லின்னேயஸ் வகைப்பாட்டியல் பயில ஆரம்பிக்கும்போதே சொல்லித்தரப்படும். புத்தக ஆசிரியர் குழுவின் ஞானம், Scientific name எப்படி எழுத வேண்டும் என்று வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லித்தர வேண்டிய நிலைமையில் இருக்கிறது எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கம் 51: ஐசோட்டிம்மா முட்டை ஒட்டுண்ணி நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருக்க்கிறது. ஐசோடிமியா ஜாவென்சிஸ் (Isotimia javensis) கரும்பு குருத்துப்புழுவுக்கு நல்ல கட்டுபாட்டைக் கொடுத்தாலும் நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பூச்சியியல் நிபுணர்களின் கருத்து. நிலைமை இவ்வாறிருக்க இதையெல்லாம் +1 மாணாக்கர்களுக்கு சொல்லித்தருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

பக்கம் 52: டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி புழு, கூட்டுப்புழு ஒட்டுண்ணியானது கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி கரும்பு உச்சிக் குருத்துப்பூச்சித் (Top Shoot Borer) தாக்குதலைக் கட்டுப்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. தண்டு துளைப்பான் என்பதும் இடைக்கணுப்புழு (internode borer) எனபதும் நடைமுறையில் ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. PhD மாணாக்கர்களுக்கு தரப்படும் அளவுக்கான விஷயங்களை +1 மாணாக்கர்களுக்குத் திணிக்கக்கூடாது.

பக்கம் 60: இயற்கைப் பயிர் பாதுகாப்பு முறைகள் பஞ்சகாவ்யா, அமிர்தக்கரைசல், தசகவ்யா என நிருபிக்கப்படாத முறைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக உயிரியல் கட்டுப்பாடு முறைகளை நிறையவே சேர்த்திருக்கலாம்.

பக்கம் 66: பயிர்ப் பாதுகாப்பு இரஸாயனங்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்து சொல்லும் அத்தியாயத்தில் இரசாயனங்களின் நச்சுத்தன்மை குறித்த முக்கோணங்கள், என்னென்ன வகையினங்கள் இருக்கின்றன என்பது போன்ற அடிப்படை ஆரம்பிக்காமல் நேரடியாக application-க்கு நுழைந்திருக்கிறார்கள்.

கருத்தியல் நூலில் வந்திருக்கும் புகைப்படங்கள் செய்முறைப் புத்தகத்திலும் பெரும்பாலும் இருக்கிறது. கிட்டத்தட்ட 40% புத்தகம் படங்களாலேயே – அதுவும் தேவையில்லாத படங்களால் – நிரப்பப்பட்டிருக்கிறது. வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கம் என்ற அத்தியாயம் சும்மானாச்சுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வி என்ற Concept-இன் நோக்கம் என்ன என்பதே புரிந்துகொள்ளப்படாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்காங்கே வாங்கி ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

பூச்சியியல் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவரைப் பாடநூல் வல்லுனராக நியமித்திருக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே பூச்சியியல் குறித்த அத்தியாயத்தில்தான் அதிக பிழைகளும், முரண்பாடுகளுடைய விஷயங்களும் இருக்கின்றன.

பாடநூல் மேலாய்வாளராக பயோடெக்னாலஜி துறையின் இணைப்பேராசிரியர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இந்த புத்தகங்களில் பயோடெக்னாலஜி என்ற அத்தியாயமே இல்லை. ஆய்வகங்களைவிட்டு வெளியே செல்லுவதற்கு அவசியமே இல்லாத பணியிலிருக்கும் ஒருவரிடம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், உரம், நீர், பூச்சிக்கொல்லி, விதை, உழவியல் முறைகள், அறுவடைத் தொழில்நுட்பங்கள், மண்வளம் என அனைத்தையும் தொகுக்கும் பணியை வழங்கினால் என்ன நடக்கும்?

மாப்பிள்ளை செத்தால் என்ன மணப்பெண் செத்தால் என்ன, நமக்கு வேண்டியது மாலைப்பணம். நானும் பாடநூல் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன் என அனைவரும் அவரவர் C.V-யில் எழுதிக்கொள்வார்கள்.

அதுதான் நடந்திருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

கேள்வி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்: மாணாக்கர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேசத் தரத்திலான சஞ்சிகைகளில் வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு முன்னர் நிர்வாக சீர்திருத்தத்தை மேலிருந்து தொடங்கவேண்டும்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரது ஓய்வுபெறும் வயது 70 என நிர்ணயித்து திருத்தம் வெளியிடப்பட்டிருப்பது மிக விரிவான ஊழல்களுக்கு கால்கோள்விழா நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஓய்வுபெற்று வீட்டில் பேரக்குழந்தைகளுடன் விளையாட வேண்டியவர்களை அழைத்துவந்து நிர்வாகத்தை நடத்துவதற்கு விடுவது தற்போது பணியிலிருப்பவர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகும். என்னவோ இவர்களை விட்டால் பணியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தை நடத்தவே தெரியாத மாதிரியும், ஆராய்ச்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆளே இல்லாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடும் என்பது மாதிரியும் பில்டப் கொடுத்து வாழும் வாஸ்கோடகாமாவே, நடமாடும் ஐன்ஸ்டைனே என்று புகழ்மாலை பாடுவதுற்கு ஒரு கூட்டம் இருப்பதும் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு சொம்புகலைக்கழகமாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது.

பணி ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சிகளைத் தொடரும் பேராசிரியர்களுக்குப் பல்கலையில் இடமும் ஆய்வகமும் வழங்குவது உலகெங்கிலும் நடைமுறையில் உண்டு. பல பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பின் பல்கலையைவிட்டு வெளியேறி தத்தம் துறைகளில் ஆலோசகர்களாகவோ, நிறுவனங்களில் அதிகாரிகளாகவோ, தனியார் கல்லூரிகளில் கெளரவ பேராசிரியர்களாகவோ, தனியாக நிறுவனம் தொடங்கி வியாபாரம் செய்யவதோ உண்டு. அவர்களெல்லாம் உண்மையில் வணங்கத் தக்கவர்கள்.

சில பேராசிரியர்கள் ஏதாவது மந்திரிமார்கள், ஆட்சியாளர்கள் காலில் விழுந்து பணி நீட்டிப்பு வாங்குவதோடு துணைவேந்தர் பதவி வாங்கி வந்து உட்கார்ந்துகொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. போதாக்குறைக்கு அண்டை மாதிலங்களில் ஆள்பிடித்து வந்து துணைவேந்தனாக்கும் அவல நிலைக்கு அண்ணா பல்கலை வந்தமாதிரி தநாவேப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓய்வுபெற்று பல்கலையை விட்டு வெளியேறிய பேராசிரியர்கள் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கிவிடும்போது அவர்களுக்கான accountability என்ற ஒன்று முற்றிலும் இல்லாமல் போகிறது. அவர்கள் போட்ட காசை எடுப்பதிலும், பதவிக்காலம் முடிவதற்குள் பை நிறைய சில்லறைகளைத் தேற்றிவிடலாம் என கண்ணில் பட்டவைகளையெல்லாம் விலைபேசி விற்கும் அவலமும் நடப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திலோ, அரசாங்கப் பதவிகளிலோ இல்லாத ஊழல் குற்றவாளிகளைக் கண்டு கைகட்டி நின்று ‘பதவில இருக்கனும்னா இப்படிலாம் நக்கித்தான் ஆகனும்’ என்று மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். அண்மையில் இலஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தன் ஒரு துணைவேந்தன்கள் பட்டாளத்தையே அழைத்துக்கொண்டுபோய் ஊழல் குற்றவாளி சசிகலாவைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தநாவேப சர்வதேச தரத்துக்குச் சொல்ல வேண்டுமானால் சர்வதேசத் தரத்திலான நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண், பெண் பாலின பேதமில்லாத வளாகம் உருவாகவேண்டும் என கொள்கை முடிவுகளை எடுத்து 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆய்வகங்களோடு முதுநிலை, ஆராய்ச்சி மாணவிகள் 24 மணிநேரமும் சென்றுவரும்வண்ணம் விடுதிகள் நிர்வகிக்கப்பட்டதும் இதே வேளாண் பல்கலையில்தான். தமிழகத்திலேயே 24 மணிநேரமும் ஆராய்ச்சிகளுக்காகத் திறந்திருந்த ஒரே பல்கலைக்கழகமாக ஒருகாலத்தில் இருந்தது.

இன்று தாவரவியல் பூங்காவுக்கு ஜோடியாக வருபவர்கள் திருமணச் சான்றிதழைக் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நவீன இந்துத்வா கும்பலின் கூடாரமாக மாறியிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் இயற்கை விவசாயம் என படம் காட்டிவிட்டு மறுபக்கம் எட்டாம்கிளாஸ் படித்தவர்களெல்லாம் பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு கொண்டுவந்த தடைச்சட்டத்துக்கு ஓட்டை ஏற்படுத்தும்விதமாக ஒரு டுபாக்கூர் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி நுகர்வோருக்கோ, விவசாயிகளுக்கோ, விவசாயப் பட்டதாரிகளுக்கோ எந்த பலனையும் தராத, காசு கொடுத்தால் எதை வேண்டுமானலும் செய்து தருகின்ற போலி ஆராய்ச்சி நிலையமாக மாறியதும் ஓய்வுபெற்ற துணைவேந்தன்களாலேயே நடந்து வருகிறது.

பல பாராட்டுகளையும், முன்னெடுப்புகளையும் பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ற பல்வேறு சான்றுகளையும் உடைய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ICAR இரத்து செய்தது மிகவும் கேவலமான ஒரு நிகழ்வாகும். அங்கீகாரம் இரத்தாகும் அளவுக்கு போர்டு நட்டு அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்குக் காரணம் எந்த accountability-யும் இல்லாத ஓய்வுபெற்ற நபர்களைத் துணைவேந்தன் என நியமிக்கும் அரசியல் போக்கும் அதற்கு துணைபோகும் ஆசிரியர் சங்கங்களுமே இதற்கு காரணமாகும். தற்போது 70 வயதுவரை துணைவேந்தன் பதவி என சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருப்பது மிகவும் அபாயகரமான சீரழிவின் ஆரம்பமுமாகும்.

தநாவேப உருப்பட வேண்டும் எனில் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு பதவிக்காலத்திலேயே துணைவேந்தர், முதல்வர், பதிவளர் போன்ற பதவிகள் கொடுக்கப்படவேண்டும். ஓய்வுபெற்ற பின் துணைவேந்தன் பதவி “வாங்கி” வந்து சில்லறைகளைத் தேற்றி சொத்து சேர்க்க முயற்சிக்கும் அல்ப கேஸ்களை தவிர்த்தால் மட்டுமே மாற்றம் உண்டாகும். அப்போதுதான் திறமைக்கு மதிப்பு கிடைப்பதோடு உண்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு, நிர்வாகத் திறமையுடைய பேராசிரியர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதுடன் மாணாக்கர்களின் தரமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என விவசாயிகளுக்கும் பலன் ஏற்படுவதோடு ஆண்டுக்கு நூறு கோடி அளவுக்கு செலவிடப்படும் மக்களின் வரிப்பணத்துக்கு ஒரு மதிப்பு ஏற்படும். அப்போதுதான் உதவிப் பேராசிரியர் பதவியில் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மேல்நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு சமூகத்தில் ஒரு மரியாதை ஏற்படும்; எங்குமே வெளியில் சென்று பிழைக்க வழிதெரியாதவர்களெல்லாம் உதவிப் பேராசிரியராகி விடுகின்றனர் என்ற அவச்சொல்லும் நீங்கும்.

ஏனெனில் ஆராய்ச்சியிலோ, நிர்வாகத்திறமையோ இல்லாமல் ஓய்வுபெற்றபின் துணைவேந்தன் ஆனவர்களும் அவர்களது சொம்புகளும் ”இன்னிக்கு வர்ற பசங்களுக்கு ஒரு மண்ணும் தெரியறதில்லப்பா. எப்படித்தான் படிச்சு பாஸ் பண்ணித் தொலைச்சிட்டு வர்றானுங்களோ. இந்த கூமுட்டைங்கள வச்சிகிட்டு எப்படி நாங்க ரிசர்ச் புரோகிராம் நடத்தறதுன்னே தெரியல. அந்த காலத்துல நாங்கள்லாம் படிச்சப்போ பாத்தீங்கன்னா…” என்று இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், நடுவயதில் இருக்கும் பேராசிரியர்கள் கூட்டத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி பிரச்சாரம் செய்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பிரச்சார யுக்திகளை நம்பும் மாணாக்கர் கூட்டம் தவறான முன்னுதாரணங்களால் கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, வர்த்தகம் என எதிலுமே ஒரு நிறைவான ஆளுமையாக மாறாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு, பன்னாட்டு சதி என வாட்சப் பார்வர்டுகளில் அரசியல் பயிலுகின்றனர்.

ஆகவே, தநாவேப முன்னோக்கிச் செல்லவேண்டும் எனில் ஓய்வுபெற்ற பின் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கும் நபர்களையெல்லாம் பெரிய ஆளுமை என்று நம்பும் மாயையில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கு ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் அமைப்பே இதற்கான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்; அல்லது அதை கலைத்துவிட வேண்டும்.

கட்டுரையாளர்கள்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்.