சுளுந்தீ – நாவல் – விமர்சனம்

சுளுந்தீ – நாவல்
ஆசிரியர்: இரா. முத்துநாகு
ஆதி பதிப்பகம் வெளியீடு.
விலை ரூ 450, பக்கங்கள்: 472

நாவலாசிரியர் எழுதியிருக்கும் முன்னுரை ஒன்றே போதும். ஓர் அற்புதமான கட்டுரையை அதாவது வரலாற்றின் போக்கை எழுதி நம் முன்னால் வைத்துவிடுகிறார். 472 பக்கங்கள் எல்லாம் படிக்க முடியாது என்று கருதுபவர்கள் அவசியம் அந்த முன்னுரையையாவது படிக்க வேண்டும்.

தொ. பரமசிவன் நூல்கள், வேல இராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’, பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ யுவல் நோவா ஹராரியின் Sapiens, Homo Deus போன்ற நூல்களை வாசித்திருந்து சுளுந்தீ வாசித்தால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்வுக்கும், இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்குக் கிடைத்திருந்த வாழ்வுக்கும் உள்ள இடைவெளியை, உயிர் பாதுகாப்பை, சமத்துவத்தை மிகச் சிறப்பாக புரிந்து கொள்ளலாம்.

பண்டுவம் எனப்படும் வைத்திய முறைகள் நாவிதர்களிடமே அந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது; பண்டுவம் பார்க்கத் தெரிந்த ஆண் நாவிதன் – பண்டுவன் எனவும் பெண், மருத்துவச்சி எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு வைத்தியம் பார்த்து உயிர்காக்கத் தெரிந்தவர்களே பண்டிதன் என்பதாக இருந்து பிற்காலத்தில் மந்திரம் ஓதும் மந்திரவாதிகளைப் பண்டிதன் என்று அழைக்க நேரிட்டது இயல்பாக நடந்த நிகழ்வன்று.

சுளுந்தீ நாவலைப் பொறுத்தவரை கதை மாந்தர்களின் கலக சிந்தனைக்கான கருத்தாழம், படிமம், நுண்கரு, மையப் புள்ளி, விழுமியம், சமூகப் படிமங்களின் ஒத்திசைவு, அகவொளி தரிசன தற்சார்புக் கோட்பாடு, மைட்டோகாண்டிரியா, கோல்கி அப்பேரட்டஸ், ஹேபர்-பாஸ்ச் கோட்பாடு என்றெல்லாம் தேடக்கூடாது. அச்சுப்பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகள் பல உண்டு. இருப்பினும் வாசகத்தை அவை சிதைக்கவில்லை என்பதோடு பொருள்மயக்கம் தரவில்லை என்பதால் அப்படியே கடந்துவிடலாம். அவற்றை அடுத்த பதிப்பில் ஆசிரியர் திருத்தி விடக்கூடும்.

சுளுந்தீ, மக்களின் மரபான வைத்திய முறைகளில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலிலும் உள்ள survival skills எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது அதில் என்னென்ன மாற்றங்கள் புதிய குடியேற்றங்களாலும், அரசியல் காரணங்களும் ஏற்படுகின்றன என்பதைப் பதிவு செய்கிறது. இந்த Skills எல்லாமே பெரிய அளவில் பொருளீட்ட, அது சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரப் பயன்படவில்லை. காரணம், அவை சாதிக் கட்டமைப்புக்குள் இறுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. அதை இந்து ஞான மரபு என்று புனிதப்படுத்தாமல் பளிச்சென உடைத்துக் காட்டுவதே இந்நாவல்.

ஏகப்பட்ட பண்டுவ தகவல்களை நாவலாசிரியர் கதைமாந்தர்களை வைத்து சொல்லிக்கொண்டே வருகிறார். ஒன்று இரண்டு என்றால் குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். ஆனால் முப்பது நாற்பது வகையான தகவல்கள் என்பதால் அவற்றை திரும்பப் பதிவு செய்வது கடினமான ஒன்று. களப் பணியாளர்களிடம் எப்போதுமே ஒரு தெளிவான பார்வையும், இது இப்படி ஆரம்பித்தால் இப்படித்தான் வந்துசேரும் என்ற லாஜிக்கும் இருக்கும். அந்த அற்புதமான லாஜிக்கை ஓரிடத்தில் காட்டும் ஆசிரியர் இன்னோரிடத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்.

சித்த மருத்துவ முறையில் சாதாரண ஒன்றைக்கூட வேண்டுமென்றே வேறு பெயர்களில் சொல்லி அலைய விடுவதில் ஆரம்பித்து இரகசியம் என்ற பெயரில் அதை நாசம் செய்வதும் நமது மரபு. உதாரணமாக, அண்மையில் சிறியாநங்கைச் செடியை நிலவேம்பு என்று சொல்லி கல்லா கட்டியது!

நாவலாசிரியர் அறிவியல் ஆராய்ச்சியாளரோ தொழில் முறை தாவரவியலாளரோ அல்லர் என்பதால் அவரிடம் reference கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் சில தகவல்களை வெளிப்படையாக வைத்தால்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும், ஆராய்ச்சியாளர்கள் அதை மக்களுக்குப் பயன்படும்வண்ணம் விரைந்து தயாரிக்க இயலும். என்றைக்கு கார்ப்பரேட்டுகள் நமது பாரம்பரிய சொத்தைக் களவாண்டு விடுவார்கள் என்ற முட்டாள்தனம் ஒழிகிறதோ அன்றுதான் சர்வதேச அளவில் நாம் வேற லெவல் இடத்தைப் பெற முடியும்.

அந்த காலத்தில் வெள்ளாவி வைக்க துணி எடுத்துச் செல்கையில் ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒரு குறி இட்டு அடையாளம் போட்டுவிடுவர். துணி அழிந்தாலும் அந்த குறியீடு போகாது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே அது இரசாயன மை. அதற்கு முன்னர் சேந்தங்கொட்டையை வேக வைத்து எடுக்கும் சாயமே பயன்பட்டது. மிக ஆபத்தான சாயம், கையில் பட்டால் வெந்துவிடும் என்பதால் ஆய்வகங்களில் அமிலத்தைக் கையாள்வது போன்ற கவனம் தேவை. அதே நேரத்தில் பல மருந்துப்பொருட்களில் சேந்தங்கொட்டை சேர்க்கப்படுகிறது. Semecarpus anacardium என்று NCBI-இல் தேடினால் ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் கிடைக்கும். மருத்துவ ஆராய்ச்சிகளில் பல இருந்தாலும் அந்த சாயத்தை எப்படி ஆடைகளுக்கு வண்ணமேற்றும் இயற்கை சாயமாக மாற்றுவது என்ற ஆய்வு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய முதலீட்டிய காலகட்டத்தில் பொருட்களை உண்டாக்கும் நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சியும், பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சியும் முற்றிலும் வேறான பார்வை கொண்டவை. ஒரு சாதாரண தகவலைப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தைப்படுத்தும் பொருளாக மாற்றக்கூடிய திறன் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவராது. சேந்தங்கொட்டை குறித்த தகவல் இருக்கும் சுளுந்தீ பக்கத்தை வாட்சப் நிலைத்தகவலாக வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர் ஒருவர் அந்த சாயம் குறித்தான அத்தனை தகவல்களையும் அலசிவிட்டு ‘லாக் டவுன் முடிந்தவுடன் இரண்டு கிலோ வாங்கி அனுப்பி வை. அந்த சாயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வோம்’ என்று அனுப்பிய தகவல் ஆச்சரியம் அளிக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒன்றை அவர்கள் சந்தைப்படுத்தும்போது ‘ஐயகோ பார்த்தாயா, நமது பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிக்காரன் கொண்டுபோய்விட்டான். அன்னிக்கே ஐயா இதைத்தான் சொன்னாரு’ என்று ஒப்பாரி வைப்பார்கள். இன்டிகோ சாய வரலாறு தெரியுமா என்பார்கள்.

ஒரு கிடாரிக்குப் பிறக்கும் முதல் காளைக் கன்று ஒன்றை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதற்கு ஒரு கதையை நாவலாசிரியர் வைத்திருக்கிறார். மிகச் சிறப்பான விளக்கம். ஏதாவது ஒரு காரணத்தால் காளை இறந்துவிட்டால் இடையர்கள், குடியானவர்கள் இடையே ஏற்படும் தொழில் போட்டியின் காரணமாக பொலிச்சலுக்கு காளை இல்லாதபட்சத்தில் வரும் பிரச்சினையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒரு காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும் என்று அரண்மனை தீர்ப்பு சொல்லி ஆரம்பித்து வைத்த வழக்கம் அது.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் சொக்காயி என்ற பெயரில் இருக்கும் நாட்டார் தெய்வம் ஒன்றுக்கு எல்லா சாதியினரும் தங்களது எருமைக் கிடாக்கன்றை நேர்ந்துவிட்டு கட்டுத்தறியை விட்டு துரத்திவிடுவார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சுற்றுவட்டாரத்தில் திரியும் நூறு, இருநூறு எருமைக் கிடாக்களைப் பிடித்துவந்து நோம்பி போட்டு, வெட்டி ஒரு குழிக்குள் போட்டு மூடி விடுவார்கள். அந்த குழி அக்ரஹாரத்துக்கு வெகு அருகில் இருந்ததால் பலருக்கு அருள் வந்தும், சொக்காயி கனவில் வந்தும் ‘எனக்கு எருமை இரத்தக் கவுச்சி பிடிக்கலடா, நெய்வேத்தியம் மட்டும் பண்ணுங்கோ’ என்று சொல்லிவிட்டது.

அதனால் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அந்த பழக்கம் நிறுத்தப்பட்டது. அப்படியே யாராவது எருமைக் கிடாவை நேர்ந்துவிட்டாலும் அதை விற்று, பணத்தை அந்த உண்டியலில் போட்டுவிடுவது வழக்கமாக்கப்பட்டது. முதல் பலி கொடுப்பது அந்த ஊர் அருந்ததியரின் எருமைக் கிடா. அதுவும் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இப்போது சொக்காயி சாமியானது ஸ்ரீ சொக்கநாயகி அம்மன் ஆகிவிட்டது. படிப்படியாக பொலிச்சலுக்கு எருமைக் கிடா இல்லாமல் ஆனதால் இன்று திரவ நைட்ரஜன் கேன்களை பைக்குகளில் கட்டிக்கொண்டு சினை ஊசிகளுடன் இளைஞர்கள் போய் வருகின்றனர். இதன் நீட்சியை சமீபத்திய தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க அபிவிருத்தி சட்டம் வரைக்கும் பார்க்க வேண்டும். இந்த கிளைக் கதை எதற்காக என்றால் ஒரு பண்பாட்டு அசைவு என்பது எங்கு ஆரம்பித்து எது வரைக்கும் போகிறது என்பதற்காக.

கடும் பஞ்சத்தில் மக்கள் கோரைக்கிழங்கு, மூங்கில் அரிசி, கரையான் புற்றுக்குள் உள்ள அரிசி வரைக்கும் எடுத்து உண்டு உயிர் பிழைத்திருக்கையில் இடையர்களுக்கு தண்ணீர் இருக்கும் பகுதியை அரண்மனை ஒதுக்கித் தருவதின் பின்னணியில் அக்ரகாரத்துக்கும், புலவர்களுக்கும் பால், தயிர், வெண்ணைக்கு எந்த பஞ்சமும் கிடையாது என்பதையும் நாவல் காட்டுகிறது.

அதற்காக நஞ்சை நலங்களை உழுதவர்களை குலநீக்கம் என்ற பெயரில் ஊரைவிட்டு காட்டுக்குள் துரத்தியடிப்பது, மறுப்பவர்களைக் கொலை செய்து அரண்மனை தனக்கான இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகளைத் தருவித்து குடியேற்றம் செய்ய பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டு துரத்தப்பட்ட கதைகள் புத்தகத்தில் கடப்பதற்கு கனமானவை. அதன் நவீன வடிவமாக இன்றைய குடியுரிமைச் சட்ட திருத்தங்களைப் ஒப்பிடலாம்.

சாதாரண சமையல் உப்பு கூட வெடி மருந்துதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் கதையின் நாயகனான நாவிதன் இராமனிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பண்டுவர்களிடம் இருந்த மருந்துப்பொருட்களை குல நீக்கமானவர்கள் பெற்று வெடி செய்து அரண்மனைப் படையினரைக் கொன்றுவிட்டனர் என்பதற்காக பண்டுவம் பார்க்கும் நாவிதர்களைக் கொலை செய்து முச்சந்தியில் வீசி விடுகின்றனர். பழநி அடிவாரத்தில் இருந்த பண்டாரங்கள் சிலர் பண்டுவம் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களையும் கொன்று விடுகின்றனர். மீதமிருந்தவர்கள் பண்டுவ ஓலைச்சுவடிகளை அதிகாரத்தில இருந்த பிராமணர்களிடம் சரணடைந்து ஒப்படைத்துவிட்டு உயிர் பிழைத்துக் கொண்டனர். சிலர் சேது சீமை எல்லைக்கு ஓடி விட்டனர்.

பழநி கோவில் நிர்வாகம் பண்டாரங்களின் கையில் இருந்தது. அங்கு கொடுமுடி ஐயர் ஒருவரை பூசைக்கு வரவழைக்கப்பட்டதும், பின்னர் அவர்கள் எப்படி கோவிலைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. நவபாஷான மூலவர் சிலை சுரண்டி விற்கப்பட்டது எப்போது ஆரம்பித்தது என்கிற வரலாற்று ஆராய்ச்சி இந்த இடத்தில் தேவையற்றது.

மதுரை மன்னரிடம் அனுமதி பெற்று மதப் பிரச்சாரம் செய்ய வந்த ஏசு சபையினர் சமஸ்கிருதம் பயின்றுவிட்டு, இங்கு வந்து பார்த்தால் யாருமே சமஸ்கிருதம் பேசவில்லை என்பதால் பின்னர் தமிழ் கற்றுக்கொண்டதும் நாவலில் வருகிறது. அவர்கள் குலநீக்கம் செய்யப்பட்டவர்களிடம் மட்டும் மன்னருக்கு எதிராக கலகம் செய்யாதிருக்கும் வண்ணம் ஜெபக்கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றனர். குலநீக்கம் செய்யப்பட்டவர்களது வாழ்வு, வாழ்வியல் முறை எல்லாம் அரண்மனைத் தெருவில் திரியும் நாய்களைவிட பலமடங்கு கீழே இருந்திருக்கிறது.

அப்படி குலநீக்கம் செய்யப்பட்டவர்கள், போரில் தோல்வி ஏற்படும்போது சிக்கினால் கொன்றுவிடுவார்கள் அல்லது அடிமையாக்கி விடுவார்கள் என்ற நிலையில் காட்டுக்குள் ஓடி விடுவதும் பின்னர் அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்காக களவு செய்ய ஆரம்பித்தது, ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வந்த குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றவற்றை வேல இராம மூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலும், 1839-இல் Philip Meadows Taylor எழுதிய Confessions of a Thug-உம் நமக்கு அப்படியே வரலாற்றைக் காட்டிச் செல்கிறது.

மக்கள் பஞ்சத்தினால் அரண்மனைக்கு வரி கட்டி வாழ முடியாது என்று முடிவெடுத்து ஊரைக் காலி செய்து ஓட்டம் பிடிப்பது, அந்த பஞ்சத்தினால் கிணறு வெட்டி விவசாயம் செய்வதைக் கற்றுக்கொள்வதும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பித்தவர்கள் செஞ்சி சென்று சுல்தான் படையுடன் இணைந்து பண்டாரப் படை என்று அழைக்கப்படுவதும் அவர்கள் ஏன் ஒரு முஸ்லிம் மன்னனுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நியாயமும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பஞ்சத்தினால் ‘பலருக்கு மைனா குஞ்சு போல கடவா வெந்து, வாய் துர்நாற்றம் பொணமா வீசுது’ என்று நாவலில் சொல்லப்படுவது ஸ்கர்வி. 90-கள் வரைக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணக்கர் பலரை வாய் ஓரத்தில், ஈறுகளில் புண்ணுடன் காணலாம். இன்று அப்படிப்பட்ட ஸ்கர்வி அறிகுறியுடன் குழந்தைகளைத் தமிழகத்தில் காண்பது மிக அரிது. கேப்டன் ஜேம்ஸ் குக், வைட்டமின் சி குறித்த ஆய்வு அவரது ஆஸ்திரேலிய பயணத்தை எப்படி புரட்டிப் போட்டது என்பதையும், பின்னர் உலக நாடுகள் கண்டுபிடிப்பு+காலனி+கடல் வணிகத்தை அப்படியே புரட்டிப்போட்டு உலக வரைபடத்தை மாற்றிய நிகழ்வு அது. Sapiens நூலில் இது விரிவாகக் கூறப்பட்டிருக்கும்.

நாவிதன் இராமனின் மகன் மாடன் அரண்மனை நாவிதனாகாமல் குடியானவர்களுக்கு சவரம் செய்ய அனுப்பப்படுவது குறித்து அவனது தாய் வல்லத்தாரை புலம்புவது எல்லாம் அந்தக்காலத்தில் இருந்து அரசாங்க உத்தியோகம் என்பது ஏன் மக்களால் விரும்பப்படுகிறது என்பதற்கு நாவலின் பிற்பகுதியில் மாடனுக்கு நேரும் எல்லா சம்பவங்களுமே சாட்சி.

அந்தந்த சாதியினர் வேறு தொழிலுக்குப் போகவே முடியாத கட்டுப்பாடு, மீறினால் கடும் தண்டனை போன்றவையே அரண்மனைகளை சொகுசாக வைத்திருக்கின்றன.

பெற்றோர்களின் உழைப்பின் உபரியானது சொத்தாகவோ, சமூக அந்தஸ்தாகவோ, பதவியாகவோ வாரிசுகளுக்குக் கடத்தப்படும்போதுதான் சாதியும், குலத்தொழில் மீதான பெருமையும் பற்றும் அப்படியே அடுத்த சந்ததியினரிடம் இருக்கும். வெறும் கையும் காலுமாக குலத்தொழில் ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ‘எப்படியோ போய் பிழைத்துக்கொள்’ என்று ஒருவன் வீதியில் விடப்படும்போது குலத்தொழில், சாதி மீதான எந்தப் பற்றும் இருக்காது. ஊரெல்லாம் அலைந்தும், கெஞ்சியும் பார்த்துவிட்டு ‘இனிமேல் ஒருபயலுக்கும் நான் சிரைக்க மாட்டேன்’ என்று மாடன் தனது குலத்தொழிலைத் தூக்கி எறிந்துவிடுவதன் நியாயத்தை இவ்வாறாகப் புரிந்து கொள்ளலாம்.

ஈத்தரக் கழுதை, வெங்கம் பயல், வெங்கமேடு, குரளி வித்தை, பேய் பிடிப்பது, முனி பிடிப்பது என்பதற்கான விளக்கங்கள் ஆச்சரியமளிக்கின்றன. அந்தக் காலத்திலும் இப்போது போலவே பண்டுவர்களிடம் முலை பெருக்க, தண்டு நீள வைத்தியம் கேட்டிருக்கிறார்கள்!

சிறியாநங்கைச் சாறு, வீர, பூரச் செந்தூரம் இருந்தாலும் நாகப் பாம்பு கடிக்கு பண்டுவத்தில் மருந்தில்லை என்பதை நாவலாசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இதுபோன்ற இடைவெளிகளில் எல்லாம் ஏசு சபை மூலமாக வந்த ஆங்கில மருந்து மக்களைக் காப்பாற்றியதையும் உரையாடலின் போக்கில் தெரிவிக்கிறார்.

சித்து வேலை என்பது பெரும்பாலும் மக்கள் அறியாமையை வைத்து ஏமாற்றுவது, சில இடங்களில் சின்னச்சின்ன trick என்பதை ஒப்புக்கொள்ளும் ஆசிரியர் பூசணிக்காயை வைத்து திருடர்களை விரட்டும் வித்தையில் கொஞ்சம் ஏமாந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நாகப்பாம்பு வாயில் பூசணி விதையை வைத்துத் தைத்து தலைகீழாக இரண்டு நாட்கள் தொங்கவிட்டால் விஷம் அதில் இறங்கிவிடும். அதை நட்டுவைத்தால் வரும் பூசணிக்காயில் குறைந்த அளவு விஷம் இருக்கும், அதனால் அதைத் திருடிச்சென்று உண்பவர்களுக்கு குறைந்த அளவில் உடல் நலக்குறைவு ஏற்படும், அதனால் களவு போவது நின்றுவிடும் என்று இராமன் சொல்கிறார். உண்மையில் அப்படி எல்லாம் சாத்தியமே இல்லை.

மாடன் மல்யுத்தப் போட்டியில் இறந்துவிட, பிணத்தை எரிக்கையில் அங்கு கழுதைப்புலிகள் ஏதாவது இருந்தால் அவை சேற்றுத் தண்ணீரில் புரண்டுவிட்டு வந்து சிதையின்மீது கூட்டமாக குதித்து நெருப்பை அணைத்துவிட்டு பிணத்தை இழுத்துச் சென்று (கிரில் சிக்கன் போல நினைத்து) சாப்பிட்டுவிடும் என்று வருகிறது. நெஞ்சுக்கூட்டின் மீது பெரிய மரத்துண்டுகளை வைக்காவிட்டால் உடலிலுள்ள கொழுப்பு எரியும்போது நீர் வற்றி நரம்புகள் இழுக்க பிணம் சுருள ஆரம்பிக்கும். அப்படி நடந்தால் குச்சியால் அடித்து திரும்பவும் தள்ளி மரத்துண்டுகளை மேலே போடுவார்கள். அப்படியும் சில நேரங்களில் கையோ, காலோ எரியாமல் அப்படியே வெளியே விழுந்துவிடும்.

அதை நாயோ, கழுதைப்புலியோ இழுத்துச் சென்றுவிடும். அதை துரத்திச் சென்று மீட்டுவந்து எரிப்பார்கள் (நாமக்கல் மாவட்டத்தில் ஒருகாலத்தில் எய்ட்ஸ் மிக அதிகமாக இருந்தபோது யாராவது இறந்தால் பலர் தனக்கும் வந்துவிடுமோ என்று பிணம் எடுக்கையில் வர மாட்டார்கள். அப்போது சிலரது பிணங்களை கடைசி வரைக்கும் எரித்த அனுபவம் உண்டு). கழுதைப்புலி ஆரம்பத்திலேயே வந்துவிடும் என்பது கொம்பேறி மூக்கன் பாம்பு ஆள் செத்தபிறகு மரத்தில் ஏறி பார்த்து உறுதி செய்துகொண்டுதான் புறப்படும் என்பது மாதிரியாகத் தோன்றுகிறது.

நாவலில் வரும் பலவற்றுக்கு புழக்கத்தில் உள்ள பெயர்கள், தாவரங்களின் அறிவியற் பெயர்கள் போன்றவற்றை தனி இணைப்பாகவாவது கொடுத்திருக்கலாம். விகுளிச்சாறு, விகுளிச் செடி என்று வருகிறது. ஆனால் சரியான விகுளிச்செடி எது என்கிற தகவல் இணையத்தில் சுத்தமாக இல்லை.

பதார்த்த குண சிந்தாமணி வரைக்கும் OK. ஆரோக்ய நிகேதினி என்று ஆரம்பித்து சமஸ்கிருத வார்த்தைகள் வரும் நூல்களில் புகுந்தால் திரும்பி வர முடியாது. இங்குள்ள நூல்களை சமஸ்கிருத்ததில் எழுதி, அவற்றை எடுத்துக்கொண்டு ஆங்கிலேயர் வந்த புதிதில் கல்கத்தாவுக்கு ஓடி இதுதான் இந்தியா என்று அவர்களைப் பிராமணர்கள் நம்ப வைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வைத்தது வரலாறு. சமஸ்கிருதம் கலவாத தனித்த மொழிக்குடும்பம் தென்னிந்தியாவில் உண்டு என்று அதற்கு மிகப்பெரிய ground work செய்த எல்லிஸ் துரை அதை வெளியிடுவதற்கு முன்னரே விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதும் வரலாறு. ஆயுர்வேத நூல்களின் மூலம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிகளின் survival medicine ஞானம் மட்டுமே.

பிராமணீயம் என்பது சக மனிதர்களிக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலியத்துக்கும் கேடு என்பதை வரலாற்று நூல்கள், நாவல்கள் போன்றவற்றை சமூக நிகழ்வுகளோடு இணைத்துப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

வேடசந்தூரில் கிணறு வெட்டி உப்புத் தண்ணீர் வந்ததால் என்ன செய்வது என்று புரியாத நிலையில் சேது சீமையில் ஆங்கிலேய, டச்சுக்கார வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டு புகையிலை என்ற செடி பயிரிடுவதை அறிந்து ஆட்களை அனுப்பி பயிற்சி பெற்றுவரச் செய்து புகையிலையை அறிமுகம் செய்கின்ற தகவல், அரண்மனைகளில் மூக்குபொடி பயன்பாடு, சுருட்டு பிடித்தல் எல்லாம் முறையான கால இடைவெளியில் நாவலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மலைவாழ் பளியர் மக்கள், விவசாயம் செய்யும் குடியானவர்கள், இராவுத்தர்கள் என்கிற முஸ்லிம் படையினர், ஏசு சபை பாதிரிகள், இடையர்கள், விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்ட தெலுங்கு பேசும் குடிகள் என பலதரப்பட்ட மக்களும் நாவலில் வந்துபோனாலும் பஞ்ச காலத்திலும் கூட யாரும் மல்லாட்ட (நிலக்கடலை) சாப்பிட்டார்கள், தக்காளி உருளைக்கிழங்கு சாப்பிட்டார்கள் என்று வரலாற்றுக்கு முரண்பட்ட தகவல்கள் ஏதும் ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதைப் பார்க்கும்போது அவரது வரலாற்று ஞானத்தின் மீதான grip சிறப்பு.

விஷ்ணுபுரம் என்கிற பண்டைய வரலாற்று நாவலில் ஜெயமோகனார் கதைமாந்தர்கள் மிளகாய் பயன்படுத்தியதாக எழுதியதும் பின்னர் அதை அவரது சீடர்கள் மகாபாரத்ததில் வரும் காந்தாரி மிளகாய் என்று முட்டுக் கொடுத்ததும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெக்சிகோவில் தோன்றிய மிளகாய் உலகம் முழுக்க பரவிய வரலாறும், வடகிழக்கு மாநிலங்களில் வளரும் ‘பூத் ஜோலோக்கியா’ மிளகாய்க்கும் காந்தாரி மிளகாய் எனப்படும் சீனி மிளகாய்க்கும் விஷ்ணுபுரம் கதைக்கும் உள்ள தொடர்பை அவரது தற்கொலைப்படையினரால் மட்டுமே நம்ப முடியும்.

சுளுந்தீ விமர்சனம் என்ற பெயரில் தனியாக கிண்டிலில் ஒரு புத்தகமே வெளியிடலாம். அந்த அளவுக்கு எழுத வேண்டியது இருக்கிறது. பன்றிமலைச் சித்தர் குறித்தும் நிறைய சொல்ல வேண்டிவரும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது.

பொன்னி – நாவல் – விமர்சனம்

பொன்னி நாவலைப் படித்துக்கொண்டு இந்தபோது உத்திரபிரதேசத்தில் தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்ட போலி செய்தி நாலாபுறமும் ஓடிக்கொண்டிருந்தது. வெட்டாட்டம் நாவலைவிட விறுவிறுவென்ற நடையில் பல்வேறு காலகட்டங்களை இணைத்து தங்கத்தின் அழுக்கான, குரூர பின்னணியை ஷான் கருப்புசாமி அற்புதமாக எழுதியிருக்கிறார்.

சோழர்கள் காலத்திலேயே தங்கம் கிடைக்கும் கோலார் பகுதியைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட இரணிய சேனை, அந்தத் தேரையர் இன மக்களின் வாழ்க்கைமுறை, ஆங்கிலேயர்கள் வருகை, சுரங்க அமைப்புகள், அதிலுள்ள ஆபத்துகள், தங்க வேட்டைக்காரர்கள், இங்கிருந்து அதிகாரப்பூர்வமாகவும் திருடியும் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கம் என பல காலகட்டங்களில் நாவல் செல்கிறது.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒரே நேரத்தில் கருவூலத்தில் இருந்த தங்கக் கட்டிகள் திருடப்பட்டது, அதைத் திருடியவர்களை சிஐஏ துரத்துவது, அதன் பின்னணியில் தேரையர் வம்சாவழியில் வந்த பலர் சமகாலத்தில் இருப்பது போன்ற பல தனித்தனி நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முடிச்சுப் போட்டு படிப்பவர்களால் ஊகிக்க முடியாத, ஊகிப்பதற்கு நேரமே தராத சுவாரசியத்தில் நாவல் நகர்கிறது.

தேரையர் வழியில் வந்த செல்லம்மா என்ற பெண் புதிய தங்க வயலை கண்டுபிடிக்க வந்த ஜேம்ஸ் மார்ட்டின் மீது ஒரு இனம் புரியாத காதலுடன் இருந்து ஒரு கட்டத்தில் அவருடைய இரண்டாவது மனைவியாகி இங்கிலாந்து சென்று விடுவது, அவரது பேத்தியாக வரும் பொன்னி சுரங்க நிறுவன அதிபராக கோலார் வருவது, அவர்களைச் சுற்றி விளையாடும் அரசியல் சதுரங்கம் என பல இருந்தாலும் செல்லம்மாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.

செல்லம்மாவுக்கு அப்படி ஒரு தர்க்க ரீதியான சிந்தனை வரவும், அச்சமில்லாத போக்குக்கும் அவள் சிறுவயதில் தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேய பெண்மணி ஒருவரிடம் கற்ற கல்வியும், அதைத் தொடர்ந்து அவளது வாசிப்பும் காரணமாக இருந்திருக்கிறது. வீரம், வாழ்வியல் முறை, சமூகக் கட்டுப்பாட்டு என்ற பெயரில் ஓர் இனம் காலங்காலமாக தங்களைத் தாங்களே அடிமையாக வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ளவே முடியவில்லை. அதில் பலர் படித்து சிவில் சர்வீஸ் வரைக்கும் போனாலும் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு இனக்குழுவின் கடமையைச் செய்வதைப் பெருமையாகக் கருதி பக்கவாட்டில் சிந்திக்கவே இல்லை என்பதையும் நாவல் பதிவு செய்கிறது.

செல்லம்மாவின் அழகையும், அவளது பேத்தி பொன்னியின் அழகையும் விவரிக்கையில் நாவலாசிரியர் ஷான் கருப்புசாமி வெறும் சைக்கிளை மட்டும் உருட்டிக்கொண்டே இருக்கும் ஆசாமி மட்டுமல்லர் என்பதும் தெளிவாகிறது!

The Last Ship என்று அமேசான் பிரைமில் ஒரு சீரியல் இருக்கிறது. மொத்தம் ஐந்து சீசன்கள். ஒரு வைரஸ் கிருமியின் ஆரம்ப மூலத்தைத் தேட அண்டார்டிகா செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு அந்தத் திட்டக் காலம் முழுவதும் ரேடியோ சைலன்ட் ஆக இருக்கும்படி உத்தரவு. ஆறு மாதம் கழித்து திரும்ப வரும்போது வைரஸ் தாக்குதலில் உலகத்தில் பாதி அழிந்திருக்கிறது. அந்த வாக்சின் வேண்டி இந்தக் கப்பலை பல நாட்டு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் துரத்த, அவர்களது நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளைத் தாண்டி தப்பித்து வாக்சின் தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பும்போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு நாடாக சண்டை போட்டுக்கொண்டே செல்கிறார்கள்.

போர்க் கப்பல் வாழ்க்கைமுறை, கடற்போர் உத்திகள், மின்னணு கருவிகள் துணையில்லாத பழங்கால கடற்சண்டைகள், நீர்மூழ்கி கப்பல்கள், ரேடார், சோனார், ரேடியோ தொடர்புகள், ஹாம் ரேடியோ, அரசியல் விளையாட்டுகள், அணியினர் பலரது எதிர்பாராத மரணங்கள், கன்னி வெடிகள், தாக்குதல் உத்திகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் பூச்சிகள், போதைப்பொருட்கள், கறுப்புச்சந்தை, நாடுபிடிக்கும் போராட்டங்கள், உள்நாட்டுப் போர்கள், கணிணி வைரஸ்கள், நீண்டகாலம் கடலில் போர்க்கப்பலில் பணிபுரிவதால் அவர்களது குடும்ப உறவில் ஏற்படும் பிரச்சினைகள் என இன்னும் ஏராளமான விசயங்களை அவ்வளவு விவரமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். (அதில் வரும் டெக்ஸ், டெய்லர் வுல்ஃப், அவரது காதலி அஸிமா கேன்டி பாத்திரங்களின் வெறித்தனமான இரசிகனாகியிருந்தேன்).

அத்தகைய நீண்ட சீரியல் எடுப்பதற்குத் தகுதியான நாவல் பொன்னி; அத்தனை தனித்தனி plot-கள் நாவலில் வருகிறது. வெட்டாட்டம் நாவலைப் படமாக எடுத்த மாதிரி இதை ஒரு இரண்டரை மணிநேர படமாக எடுத்தால் அதில் சுவாரசியமே இருக்காது; திரைப்படங்களில் குறிப்பாக சுரங்கம் சார்ந்த காட்சிகளில் கேஜிஎஃப், கேங்ஸ் ஆஃப் வஸிர்பூர் போன்ற படங்களில் காட்டிய அளவுக்கே கொண்டு வர முடியும் என்று தோன்றுகிறது.

கோலாரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுவரைக்கும் சுமார் நாற்பது ஐம்பது முறைக்கும் மேல் சுற்றியிருக்கிறேன். கேஜிஎஃப்-இல் ஏதாவது ஒரு சுரங்கத்துக்குள் கொஞ்சூண்டு எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. பலரிடம் கேட்டுப்பார்த்தும் இன்னும் நடக்கவில்லை. ஊட்டி கூடலூரில் இருக்கும் சில சுரங்கங்களில் ஏதாவது ஒன்றிலாவது இறங்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் இன்னும் நிறைவேறவில்லை.

ஏதாவது ஒரு கைவிடப்பட்ட சுரங்கத்தை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றி அரசாங்கமே மக்களுக்கு சுற்றிக்காட்டி நாம் பயன்படுத்தும் தங்கம், இரும்பு, ஈயம், தாமிரம் என ஒவ்வொரு உலோகமும் எப்படி நம்மை வந்தடைகிறது என்பதைப் புரிய வைக்கலாம்.

அற்புதமான நாவலாக இருந்தாலும் சில இடங்களில் வரும் வரிகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு வருபவர்கள், குறிப்பாக அதிலேயும் முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் அதிபயங்கரமான திறமைசாலிகள் என்று நாவலாசிரியர் இன்னும் நம்புகிறார். பள்ளி, கல்லூரிகளைப் போலவே போட்டித் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் மாணாக்கார்கள் வாழ்க்கை ஓட்டத்தில் அந்தந்த பதவிகளின் சராசரி குமாஸ்தாவாகி காணாமல் போய்விடுகின்றனர் என்பதை அவர் உணரவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஐஏஎஸ் என்ற ஒரே ஒரு தேவையில்லாத பதவிதான் இன்று இந்தியாவைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நிர்வாக ரீதியிலான தரித்திரம் என்று சொன்னால் உன்னால் ஐஏஎஸ் ஆக முடியாத கடுப்பில் பேசுகிறாய் என்று எளிதாக கடந்து போய்விடுவார்கள். அப்துல் கலாம் ஐயா ஒரு அணு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவது மாதிரி ஐஏஎஸ் என்றால் திறமை என்று நம்பிக்கொள்ள வேண்டியதுதான்!!

பொன்னி அமெரிக்க உளவுத்துறையிடம் சரண்டைந்து பெங்களூருவின் யெலஹங்கா விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க கடற்படையின் C 130 ஹெர்குலிஸ் விமானத்தில் நேவி சீல் வீரர்கள் பாதுகாப்புடன் நாடுகடத்தபபடுகிறாள். நடுவானத்தில் பொன்னி, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த விஷப் பாம்புகளை எடுத்து வீசுவது, அதற்கு பயந்த நேவி சீல் வீரர்கள் பாராசூட் ramp-ஐத் திறந்துவிட்டால் பாம்பு போய்விடும் என்று நம்பி திறக்க, அதில் பொன்னி குதித்துத் தப்பித்து விடுவது என்கிற கதையமைப்பை எல்லாம் பார்க்கும்போது, நாவலைப் படித்துப் பார்த்து புத்தகம் அச்சுக்குப் போவதற்கு முன்னால் விமர்சனம் கொடுத்த நாவலாசிரியரின் நண்பர்களை ‘ஏய்யா, நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?’ மண்டையிலேயே கொட்ட வேண்டும் போலிருக்கிறது.

தங்கம் என்கிற உலோகத்தால் மனிதனுக்கு எந்த பலனும் இல்லை. சக மனிதர்கள், சமூகம் மீது இருக்கும் அவநம்பிக்கையால் ஒவ்வொருவரும் தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொள்வது மட்டுமே அதன் பயன். மற்றபடி அதனால் பொருளாதார ரீதியாக இழப்பு மட்டுமே. தங்கம் மட்டுமல்ல, விலை உயர்ந்த பல தனிமங்களும் அதற்காக சேகரிக்கப்படுபவையே. நாகப்பாம்பு மாணிக்கக்கல்லை அமாவசை அன்று கக்கி, வழிபட்டுவிட்டு விழுங்கிவிடும் என்பதை நம்பி இன்னும் நாகமாணிக்கம் தேடி அலையும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி நல்ல நல்ல நாவல்களை இளைஞர்கள் எழுதும்போது “ஆமாமா, லைட்டா சுஜாதா பாணி, லைட்டா இராஜேஷ்குமார் பாணில 300 பக்கத்துக்கு எதையாச்சும் எழுதிடறதுதானே இன்னிக்கு ட்ரெண்டிங். ஆனா இதெல்லாம் இலக்கியத்துல வராது. இப்படித்தான் போஜ்பூரி லாங்வேஜ்ல கூட ஒரு நாவல் வந்துது, அதனோட தழுவல்தான் இது. இன்னும் அவருக்கு வாசிப்பானுபவம் பத்தல, அந்த மொழிநடை இருக்கு பாத்தீங்களா, அதுல தெரியுதே” என்று எதையாவது சொல்லி பொச்செரிச்சல் அடைபவர்களே தமிழ் எழுத்துலகில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

நாவலில் கடினமான தமிழ் வார்த்தைகளோ, முற்றுப்புள்ளியே இல்லாமல் அமைக்கப்பட்ட பத்திகளோ இல்லை. நல்ல எழுத்துநடையில் ஷான் விறுவிறுப்பைக் குறையவிடாமல் சென்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட நூறாண்டு காலம் நாவலில் பயணிக்கும் சிலப்பதிகாரம் புத்தகம் ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த மோர்ஸ் குறியீட்டால் புற ஊதாக் கதிர்களை வைத்துக் de-code புதிய தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். மோர்ஸ் குறியீட்டுக்கு அடிக்குறிப்பு எழுதிய நாவலாசிரியர், ஒவ்வொரு அத்தியாயத்திலும் கல்வெட்டு வரிகள் சிலவற்றைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கான விளக்கங்கள் எங்கேயும் தரப்படவில்லை என்பது மட்டுமே ஒரு வருத்தம்.

5 முதலாளிகளின் கதை – நூல் விமர்சனம்

5 முதலாளிகளின் கதை.
ஆசிரியர்: ஜோதிஜி.
கிண்டில் மின்னூல் பதிப்பு.

முதலாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பைக் கண்ட தொழிலாளி படிப்படியாக வளர்ந்து வந்ததே அத்தனை முதலாளிகளின் கதையும் என்றாலும் நாம் கடைசியில் காட்டப்படும் பிரமாண்ட பங்களா, சொகுசு காரை மட்டும் பார்த்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமலேயே இருந்துவிடுகிறோம்.

டாலர் நகரம் புத்தகத்தில் சொல்லாமல் விட்ட பல விசயங்களை ஜோதிஜி விரிவாகவே சொல்லியிருக்கிறார். முதலாளிகள் எப்படி வளர்கின்றனர், எப்படி தொழிலை விரிவுபடுத்துகின்றனர், எந்த இடத்தில் சறுக்குகின்றனர், அதில் மீட்சியடைவது அல்லது மொத்தமாக நொடித்துப்போவது எப்போது, பணம் தேவைக்கு அதிகமாக வந்தவுடன் அவர்களது நடத்தையில் ஏற்படும் மாறுதல்கள், அதனால் தொழிற்சாலை நிர்வாகத்தில் ஏற்படும் விளைவுகள் என கிட்டத்தட்ட அத்தனை கோணங்களையும் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனங்களின் முதலாளிகள், சக தொழிலாளர்கள் வாயிலாக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார்.

அதேநேரத்தில் ‘5 முதலாளிகளின் கதை’ சுயமுன்னேற்றப் புத்தக வகையும் அல்ல.

கண்ணும் கருத்துமாக ஒரு சின்ன யூனிட்டை ஒரு கம்பெனியாக மாற்றும்வரை நிர்வாகத்திறனின் அத்தனை உத்திகளையும் அனுபவத்தால் பயின்று செயல்படுத்தும் தொழில்முனைவர்கள் சறுக்குவது பெண்கள் விவகாரமும் மதுவும் என்றால் அதற்கு இணையாக புகழ் மயக்கமும் ஒருவரை அழித்தொழிக்கக் காரணமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு பெண்கள் என்றாலே போகப்பொருள்தானே, அதிலும் அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் என்றாலே விலையில்லா மாது என்ற எண்ணம்தானே அவர்களுக்கு என்ற வறட்டுப் பெண்ணியம் இப்போது பேச வேண்டாம். பணிபுரியும் இடங்களில் தங்களுக்குத் தேவையானதை எளிதாக சாதித்துக்கொள்ள, மேலே வளர, இன்னும் சில பல மறைமுக ஆதாயங்களுக்காக மட்டுமல்லாது, ஒரு மாறுதலுக்காக, கொஞ்சம் புதிய variety-களைப் பார்ப்பதற்காக I’m available என்று குறிப்பால் உணர்த்தும் பெண்கள் நிறைய உண்டு.

ஐம்பது வயதுவரை ஒழுக்கசீலனாக இருந்த முதலாளிகள் பேரன் பெயர்த்தி எடுத்த பிறகு ஆசைநாயகிகளை குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொண்டு மகிழுந்துகளில் அழைத்துக்கொண்டு ஊட்டி, மூணார் பயணப்படுவது எந்த ஊரில் நடக்கவில்லை?

ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும் முதல் ஐந்து வருடங்களில் எண்ணற்ற நபர்களைச் சந்திக்க வேண்டி வரும். அந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நாமே செய்தாக வேண்டும். காரணம், அதற்கெல்லாம் சம்பளம் கொடுத்து ஒர் ஆள் வைத்துக்கொள்ள முடியாது, ஆரம்பத்தில் நமது டேஸ்ட்டுக்கு பொருட்களை வாங்கிடாவிட்டால் நாம் எதிர்பார்த்த finishing வராது. அதுவும் manufacturing தொழில் என்றால் சொல்லவே வேண்டாம். கட்டுமானப் பொருட்கள், கச்சாப்பொருட்கள், பேக்கேஜிங் மெட்டீரியல், டிரான்ஸ்போர்ட், இத்யாதி, இத்யாதி என பலரையும் சந்திக்க வேண்டி வரும். சில இடங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியும் வரும்.

அத்தகைய இடங்களில் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். கடை உரிமையாளர்களாக, உரிமையாளரின் மனைவியாக, அங்கு பணிபுரிபவர்களாக, முகவர்களாக, வங்கி அதிகாரியாக, வாடிக்கையாளராக வரும் பெண்கள் எல்லோரும் I’m available என்று குறிப்பால் உணர்த்துவதில்லைதான். அதேநேரத்தில் இதில் நடக்கும் casual encounters சில படுக்கையறை வரை செல்வதுண்டு. நம் நாட்டில் ‘ஓரிரவுத் தங்கல்’ என்பது இன்னமும் பரவலாகவில்லை. எனவே பெரும்பாலானவை ‘ஒருமுறை கூடல்’ என்ற அளவிலேயே முடிந்துவிடும். மீறிப்போனால் இரண்டொரு ஆண்டுகளில் இரண்டொரு கலவிகளுடன் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும்.

அதைத் தொடர்ந்து வளர்க்க நினைப்பவர்கள் தங்களுக்கான ஆப்பைத் தாங்களே எடுத்து சொருகிக்கொள்கின்றனர் என்பதே அக்கம்பக்கத்தில் நடக்கும் சம்பவங்கள் வரலாறாகி நமக்கு போதிக்கின்றது. கோயமுத்தூரில் இப்படித்தான் ஏதோ இசகுபிசகாக ஆரம்பித்ததை அப்படியே வளர்த்தெடுத்து அடுத்தவன் மனைவியை அபகரிக்க நினைக்க, அந்த நபரை அவளது கணவன் ஆள் வைத்து வெட்டிக் கொன்றுவிட, சம்பந்தப்பட்ட நபர் ஏதோ ஒரு துக்கடா கட்சியில் இருந்து தொலைக்க, இப்போது ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கொண்டாடுகின்றனர்.

ஜோதிஜி, பாலுறவு சார்ந்த விசயங்களில் அவரது conservative பார்வையை அப்படியே புத்தகம் முழுவதும் வைத்திருக்கிறார். திருப்பூர் ஒருவகையில் அங்கு வரும் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாலுறவு சுதந்திரத்தை வழங்குகிறது. இதை கலாச்சார சீர்கேடாகவே அவர் பார்க்கிறார். ஆனால் நமது நாட்டுக்கே உண்டான பாலியல் வறட்சியை அவர் கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தால் ‘பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான், வாய்ப்பு இருக்கறவன் வாகாக இழுத்து அணைக்கிறான்’ என்று எளிதாகக் கடந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பொங்கித் தள்ளியவர்கள் வேறு ஒரு extreme. நல்லவேளையாக அந்த அளவுக்கு அறச்சீற்றம் எதுவும் புத்தகத்தில் இல்லை.

பெண்கள் விவகாரத்திலோ, ஓரினச்சேர்க்கையிலோ வியாபாரத்தைக் கோட்டை விட்டவர்களைக் காட்டிய ஜோதிஜி, இரண்டாம் தலைமுறை வாரிசுகளால் கம்பெனி நடுத்தெருவுக்கு வந்ததையும் விலாவரியாகப் பேசுகிறார். காசு இருக்கிறதே என்பதற்காக ஊட்டி கான்வென்ட்டில் விட்டு, அங்கிருந்து நேராக அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பி, இறக்குமதி செய்த மகன்/மகள்களை நேரடியாக வெஸ்-பிரசிடென்ட் பதவியில் அமர்த்திவிட்டு ஆன்மிகச்சேவை, பள்ளி கல்லூரிகளில் சொற்பொழிவு, மரம் நட்டு இயற்கை விவசாயம் செய்தல் என்று போய்விட்டு இரண்டாண்டுகள் கழித்து வந்து பார்த்தால் பாங்கி ஏல நடவடிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். பெரிய முதலாளிக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

வாரிசுகள் புதிய நிர்வாக உத்தியைப் புகுத்துகிறேன் என்று போடும் ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல கம்பெனிகளின் அடிப்படையே வாரிசுகளாலேயே ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த பிரபல மூன்று ஷா நடிகைக்கு பிளாங்க் செக் கொடுத்து வரவழைத்த தொழிலதிபர் மகனைப்பற்றி இந்த புத்தகத்தில் எதுவும் எழுதவில்லை. ஒருவேளை ஜோதிஜி திருப்பூரைவிட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகு எழுதக்கூடும்.

பாதி புத்தகத்துக்குப் பிறகுதான் ஜோதிஜியின் அனுபவங்கள் வார்த்தைகளாக மாறி கொட்டுகின்றன. அவையெல்லாம் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே நடத்திக்கொண்டிருப்பவர்கள், நடத்தித் தோல்வி கண்டவர்கள், சிறு நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டியவை.

தனியார் நிறுவனங்களின் front line-இல் பல்வேறு தரப்பட்ட கிளையண்ட்டுகளைச் சந்திக்கச் செல்லும் ஊழியர்களும் இத்தகைய புத்தகங்களையும், அனுபவங்களையும் படிக்கும்போதுதான் ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு புதிய நடத்தையைக் காட்டுகின்றனர், பின்னணியில் நடக்கும் சமாச்சாரங்கள் என்ன என்பது போன்ற புள்ளிகளை இணைத்து ஒரு கோடு போட்டுப் பார்க்க முடியும்.

சிறுதொழில்களைப் பொறுத்தவரை நம் நாட்டில் பைனான்ஸ்காரர்களை நம்பியே செயல்படுகிறது. ஓரளவுக்கு வெற்றி பெற்ற பின்னரே வங்கிகள் தேடி வர ஆரம்பிக்கும். அதற்கும் அடமானம் வைக்க சொத்து இருக்க வேண்டும். வெறும் திறமை மட்டுமே இருந்தால் மட்டும் வங்கிகளுக்குப் போதாது. ஆனால் முறையாக நடத்தப்படும் சிறுதொழில்களே மிக அதிகமான இலாபத்தைத் தரவல்லது. ரிஸ்க் அதிகம்தான். சரியான நபர்கள் கையாளும் சிறுதொழில்கள் தாறுமாறான வேகத்தில் வளர்ந்து குறுகிய காலத்தில் mainstream நிறுவனங்களாக அடையாளம் பெறுகின்றன.

அத்தகைய அனுபவம் ஒன்றை ஜோதிஜி பகிர்ந்துகொள்கிறார். முப்பது இலட்ச ரூபாயை மஞ்சள் பையில் எடுத்துவந்து தந்த முதலீட்டாளரின் கதை சுவாரசியமானது. சர்வதேச விவகாரங்கள் எப்படி ஒரு ஊரின் வியாபாரத்தை காவு வாங்குகிறது என்பதற்கும் அவரது அனுபவமே சாட்சி.

அரசாங்க ஊழியர்கள், இரண்டாவது மூன்றாவது தலைமுறையாக அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள், கல்லூரியின் வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்து ஐ.டி கார்டைக் காட்டிவிட்டு கியூபிக்கிளில் அமர்ந்து கணிணி முன்னர் மட்டுமே வேலை செய்பவர்கள், முதலாளி என்ற வார்த்தையின்மீது ஒவ்வாமை கொண்ட தொழிற்சங்க வெறியர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும். அவர்களுக்கு இது சுத்தமாகப் புரியாது.

சில தொழிலதிபர்கள் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் பொது நலனுக்காக செலவு செய்ததும் உண்டு. இன்னும் செய்கிறார்கள். அதே நேரத்தில் தொழிலாளர்களைச் சுரண்டுவது, சப்ளையர்கள் பணத்தை ஏமாற்றும் பெரிய தொழிலதிபர்களும் உண்டு. திருப்பூர் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லைதான். அப்படி எந்தத் துரும்பும் உள்ளே வந்துவிடக்கூடாது என்று கவனமாகத் தவிர்த்த தொழிலதிபர்களும் உண்டு.

குஜராத்தில் குறிப்பாக படேல் சமூகத்தினரிடம் ஒரு பழக்கம் உண்டு. யாராவது இறந்துவிட்டால் அவரது நினைவாக ஒரு சிமென்ட் பெஞ்ச் ஒன்றை பொது இடத்தில் வைப்பார்கள். அதனால் அங்கு ஹாலோ பிளாக், செங்கல் விற்கும் அத்தனை இடங்களிலும் சிமென்ட் பெஞ்ச் 1500 ரூபாய் முதல் விற்பனைக்குக் கிடைக்கும். சொகுசு வில்லா முதல், சாதாரண சொசைட்டி வகை குடியிருப்புகள் வரைக்கும் அத்தனை இடங்களிலும் உட்கார பெஞ்ச் இருக்கும்.

மக்கள் நிம்மதியாக உட்கார்ந்து ஆற அமரப் பேசி, தங்களது பாரத்தைக் குறைத்துகொள்வதோடு, எதிர்காலத்தில் ஏதாவது செய்வது குறித்தும், கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதற்கு அவர்களது பெஞ்ச் கலாச்சாரம் மிக முக்கியமானது. குஜராத்தில் ஏகப்பட்ட கிராமங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் கண்டது இது.

நமக்குப் பொது இடங்களில் உட்கார இடமே இல்லை. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிறுத்த இருக்கைகள் மனிதர்கள் உட்காரத் தகுதியே இல்லாதவை. மின் கம்பிகளுக்கு அடியிலேயே பேட்டரி – சோலார் பேனல் வைத்த தெருவிளக்கு அமைக்கும் அரசுக்கு ஒரு பெஞ்ச் போடக்கூட தோன்றவில்லை என்பது யதேச்சையானது என்று நாம் நம்ப வேண்டும் அல்லவா? யாருக்காவது காத்திருக்க வேண்டுமென்றால் கூட பேக்கரிகளிலும், ஓட்டல்களிலும் சென்று உட்கார்ந்திருக்கும்படி அரசாங்கத்தால் துரத்தி அடிக்கப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

திருப்பூர் தொழிலாளர்கள் உட்கார்ந்து பேச சாதாரண சிமென்ட் பெஞ்ச்சுகள், காலார நடக்க பூங்காக்கள் என எதுவும் வந்துவிடக்கூடாது, கம்பெனி வேலை முடிந்தால் குடியிருப்புக்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தொழிலதிபர்களும் நம்முடனேயே வாழ்கிறார்கள் என்பதை 5 முதலாளிகளின் கதை திரும்பவும் நினைவுபடுத்துகிறது.

தமிழில் சுயமுன்னேற்ற புத்தகங்கள், சிறுகதைகள், புதினங்கள் தாண்டி தனிப்பட்ட நபர்களது அனுபவக்குறிப்புகள், குறிப்பாக வியாபாரம் சார்ந்த விசய ஞானம் உடையவர்கள் எழுதிய புத்தகங்கள் மிகக்குறைவு. வியாபாரத்தில் ஓகோவென்று வருவது எப்படி, தொழிலில் சாதிக்க நினைப்பவர்களுக்கான சூட்சுமங்கள் என்பது மாதிரியான வழவழா கொழகொழா புத்தகங்களுக்கு மத்தியில் இத்தகைய புத்தகங்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல ஆரம்பம்.

ஜோதிஜி யாராவது பெரிய தொழிலதிபர்களுக்கு ghost writer-ஆக இருந்து இத்தகைய புத்தகங்களைக் கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு எழுதினால் பல ஆயிரம் பிரதிகள் விற்பதோடு எம்பிஏ மாணாக்கர்களுக்குத் துணைப் பாட நூலாக வைக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

டாலர் நகரம் – நூல் விமர்சனம்

டாலர் நகரம்.
ஆசிரியர்: ஜோதிஜி.
4தமிழ் மீடியா வெளியீடு.

காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்த ஜோதிஜி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு உத்வேகத்தில், மன்மோகன்சிங் இந்திய சந்தையைத் திறந்துவிட்டு லைசன்ஸ் ராஜ்யத்துக்கு முடிவுரை எழுதிய 1991-வாக்கில் திருப்பூருக்கு வந்து வேலைதேடியதில் ஆரம்பித்து இன்றுவரைக்கும் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி சுருக்கமாகவும், திருப்பூர் எப்படியெல்லாம் உருமாறியது என்பதை விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.

திருப்பூர் என்றாலே பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் கார்கள் வைத்திருக்கும் கொழுத்த பணக்காரர்கள் நிறைந்த ஊர், தொழிலாளர்களைச் சுரண்டும் ஊர், வரி ஏமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற ஊர், திருப்பூர் முழுக்க வெள்ளாளக்கவுண்டர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ஊர் என்ற பிம்பம் புத்தகம் முழுவதும் உடைபட்டுக்கொண்டே இருக்கிறது.

திருப்பூரில் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் பேட்டியைப் படிக்கும்போது அதன்பின்னால் பெயர்தெரியாத 20 தோல்வியடைந்த நபர்களை நினைத்துக்கொள்ளலாம். திருப்பூர் உங்களிடம் எதிர்பார்ப்பது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. ஒருநாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்தே ஆக வேண்டும். மீதமிருக்கும் நேரமும் தொழில் குறித்த எண்ணங்களே மண்டையில் ஏறி ஆட்டிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் மட்டுமே அந்த ஊரில் தாக்குப்பிடிக்க முடியும்.

ஏற்றுமதி வியாபாரம் ஒரு உலகம் என்றால் உள்நாட்டு வியாபாரம் முற்றிலும் வேறு உலகம். திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, வாய்மை அது இது என தன்முன்னேற்றப் புத்தகங்களில் படித்த அத்தனை பண்புகளையும் சேர்த்து 51% என்றால் அதிர்ஷ்டம் என்பதும் ஏற்றுமதியில் 49% முக்கியம். ஏற்றுமதிக்குப் போன அனைவரும் பணத்தை அள்ளிக் குவித்துவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது. இதை ஆசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அந்த அதிர்ஷ்டம் ஏன் வருகிறது எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது, பூசை புனஸ்காரங்களாலும் வரவழைக்க இயலாது.

அயராத உழைப்பும், நீதி, நேர்மை, யோக்கியவான் பண்புகள் மட்டுமே ஒருவரை வெற்றியாளராக்கிவிடாது. சிலநேரங்களில் இத்தோடு போதும் என்று அகலக் கால் வைக்காமல் நிறுத்திக்கொள்வது கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். பத்து கோடிக்கு ஏற்றுமதி செய்த நபர் அடுத்த ஆண்டு வாரச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற கதைகள் திருப்பூரில் ஏகப்பட்டது உண்டு. ஜோதிஜியும் அத்தகைய தோல்வியுற்ற தொழில் முனைவோர்களை, தொழிலதிபர்களைக் கடந்து வந்ததை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியர்களின் வாழ்க்கையில் புரஃபஷனல், பர்சனல் ஸ்பேஸ் என்றெல்லாம் கிடையாது. நமது சமூகக் கட்டமைப்பு அப்படி. ஒரு கம்பெனி/தொழிலின் ஆரம்பத்தில் குடும்பத்தினர் அனைவரும் உழைத்து அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டுவருவது இந்தியாவுக்கே உண்டான சிறப்பு என்றால், ஓரளவுக்கு வளர்ந்ததும் அதை விட்டு விலக மாட்டேன் என்று கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பது அம்பானி குடும்பம் வரைக்கும் இயல்பான ஒன்று.

மூடுவிழாக் காண இருந்த கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஜோதிஜி அதை படிப்படியாக மேலே கொண்டுவர நிர்வாகத்தில் ஓனரின் மனைவி, மைத்துனருக்குச் சொந்தம் என்ற பெயரில் அட்டைப்பூச்சிகளாக இருந்தவர்களை நீக்கி, இலாபத்தில் கொண்டுவந்து நிறுத்தியபோது ஓனரின் மனைவி திரும்பவும் உள்ளே நுழைந்து கணக்குவழக்குப் பார்க்கிறேன் என்ற பெயரில் நெருக்கடி கொடுத்த கதையை விளக்கமாக சொல்லியிருக்கிறார். கடைசியில் அந்த ஓனரும் மனைவி சொல்லை மீற முடியாத காரணத்தால் நெருக்கடி முற்றி பேப்பர் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். திருப்பூர் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் குடும்பத்தினர் தலையீடு என்பது தொழிலை விரிவாக்கவோ, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதைத் தடுப்பதாகவே இருக்கிறது என்பது நிதர்சனம்.

நாம் ஏன் அமேசான், அலிபாபா, ஆரக்கிள் மாதிரி கம்பெனிகளை உருவாக்க முடிவதில்லை என்பது தனியாக அலசப்பட வேண்டியது.

இரண்டாவது தலைமுறைக்காவது தேவலாம், மூன்றாவது தலைமுறைக்கு ஒரு தொழிலைக் கடத்துவது என்பது சாதாரண விசயமல்ல. சர்வதேச வணிகம் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரக்கூடிய அத்தனை சட்டதிட்டங்களையும், தரம் குறித்த விவகாரங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தரம் என்பது உலகம் முழுவதும் ஒரே அளவில் இருக்கவேண்டும் என்பதற்காகவே ISO, HACCP என ஒவ்வொரு தொழலுக்கும் ஏகப்பட்ட third party சான்றளிப்புகளை வாங்க வேண்டியது அவசியமாகிவிட்டது.

ஜோதிஜி பல சர்வதேச பிராண்டு நிறுவனங்களுடன் ஒரு கம்பெனியின் பொது மேலாளர் என்ற அளவில் தொடர்பில் இருந்தாலும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்திலும் நேரடியாகப் பணிபுரியவில்லை. அதனாலேயே அவர்கள் எதிர்பார்க்கும் தரக்கட்டுப்பாடு விவகாரங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து நடக்கும் நிர்வாக முறை, ஊழியர்களுக்கான ஊதியம், தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், அவர்களது குழந்தைகளின் கல்வி போன்றவற்றை Buyer எனப்படும் இறக்குமதியாளர் நோண்டும்போது நமது பிரைவசி விவகாரத்தில் தலையிடுவது மாதிரியும், இத்தகைய விவகாரங்கள் ஒரு வகையான சதித்திட்ட மாயவலை என்பது போன்ற அச்சத்தோடே பார்க்கிறார்.

அதேநேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்கள் தொழிலாளர்களின் உடல்நலனை கணிசமான அளவுக்கு பாதுகாக்கும் வகையில் இயங்குகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறார். இதைத்தான் மன்மோகன்சிங் முதல் அபிஜித் பானர்ஜி வரைக்கும் Access to technology will improve the health and livelihood of downtrodden people என்று குறிப்பிடுகின்றனர். குவார்ட்டர் பாட்டிலில் திரி போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி படித்த காலம் நமக்கு உண்டு. இன்று சீனத்து எல்ஈடி விளக்குகள் மண்ணெண்ணெய் விளக்கை அழித்தேவிட்டன. இன்று எந்தக் குழந்தையும் மண்ணெண்ணெய் புகையில் கூரை வீட்டில் சுவாசிக்க சிரமப்படுவதில்லை, ஆடைகளில் தீப்பிடித்த கதைகளும் இல்லை. இந்த எல்ஈடி டார்ச் லைட்டுகளாலேயே இரவு தண்ணீர் பாய்ச்சச் சென்று பாம்பு கடி வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது.

இங்குதான் நமது பழையதனத்து ஆட்கள் புதியவை எதையும் அனுமதிக்ககூடாது, அவையெல்லாம் சதி வேலை, நமது பாரம்பரிய வாழ்வே சிறந்தது என்று பரப்புரை செய்கின்றனர். அடிமை வேலை முறையில் தொழிலாளர்களை வைத்திருந்தால் ஆர்டர் தர மாட்டோம், முறைப்படி எல்லோரும் ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று துணி வாங்க வரும் வெளிநாட்டு கம்பெனி சொன்னால் ‘ஐயோ பார்த்தாயா, நமது தற்சார்பை WTO மூலமாக எப்படியெல்லாம் சிதைக்கிறார்க்ள’ என்று அனத்த வேண்டியது.

குஜராத்தில் பருத்திச் செடி ஆறு முதல் எட்டு அடி உயரம் சாதாரணமாக வளரும். ஒரு பூச்சிக்கொல்லி ஸ்பிரேயர் 14 கிலோ, அதில் ஊற்றப்படும் தண்ணீர் 16 கிலோ. ஓர் ஏக்கருக்கு 20 டேங்க் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டுமெனில் 30 கிலோ எடையைச் சுமந்துகொண்டு ஒரு விவசாயி குறைந்தது மூன்று கிலோமீட்டர் நடந்திருக்க வேண்டும். கூடவே தண்ணீர் ஊற்ற ஒரு ஆளும் குடத்தைச் சுமந்துகொண்டு நடக்க வேண்டும். வாரம் ஒருமுறை பருத்திக்கு பூச்சிக்கொல்லி கட்டாயம். குறைந்தது 25 முறை தெளித்தால் மட்டுமே பஞ்சு கண்ணால் பார்க்கும்படியாக இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு தொழில்நுட்பத்தை மான்சான்டோ இறக்கி காய்ப்புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லித் தெளிப்பை முற்றிலும் நிறுத்திக் காட்டியது (சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மூன்று நான்கு முறை தெளிப்பது வேறு). நமது பஞ்சின் தரம் உயர்ந்ததோடு இறக்குமதி செய்த நாம், பஞ்சு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர முடிந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஜோதிஜி ஓரிடத்தில் மான்சான்டோவைத் திட்டிவிட்டு செல்கிறார். நமது தமிழக பாரம்பரியப்படி ஒருவர் சமூக அக்கறையுள்ளவராகக் காட்டிக்கொள்ள வேண்டுமெனில் மான்சான்டோவைத் திட்டு, கார்ப்பரேட் சதி அது இதுன்னு ரெண்டு வார்த்தை சேர்த்துக்கோ என்ற புரோட்டோக்காலைப் பின்பற்றுகிறார். பஞ்சு ஜின்னிங் ஆலைக்குள் வந்தபிறகு என்னவெல்லாம் ஆகிறது என்பதில் அவருக்கு மிகப்பெரிய பாண்டித்யம் இருக்கலாம், ஆனால் பருத்தி சாகுபடியில் நமக்கு எதுவும் தெரியாது என்றால் குறைந்தபட்சம் அந்த ஏரியாவைத் தவிர்த்திருக்கலாம்.

இது நல்லது, இது கெட்டது என்று இன்றைய வியாபாரச் சூழலில் எதையுமே சொல்லிவிட முடியாது. திருப்பூரில் Buying House என்ற பெயரில் இருக்கும் புரோக்கர் ஆபிஸ்களும் இப்படித்தான். ஒரு தொழில் வளரும்போது அதனுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் வளரும் தொழில்கள்தான் இந்தியாவின் வரமும், சாபமும். ஏனெனில் இலாபம் வரும்போது அதைப் பகிர்ந்துகொள்வது போலவே நடடத்தையும் ஓரளவுக்கு பகிர்ந்துகொள்வதுதான். (பகிர்ந்துகொள்ளுதல் என்றால் இலாபத்தில் கமிஷன் கேட்பது, நட்டம் வந்தால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு ஃபோன் எடுக்காமல் இருப்பது என்று படிக்கவும்).

திடீரென சட்டதிட்டங்கள் மாறினாலோ, இறக்குமதியாளர்கள் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டாலோ ஏற்படும் நட்டத்தை கண்ணுக்குத் தெரியாத, கணக்கில் வராத பல layerகளில் உள்ளவர்கள் பகிர்ந்துகொள்வதாலேயே திடீரென ஒரு பிராந்தியமே சரிந்துவிடாமல் செயல்படுகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாத்திலும் ஜோதிஜி அரசியல்வாதிகளைத் திட்டுகிறார். அவர்களே நமது எல்லாப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்று நம்புகிறார். ஆரம்பம் முதலே சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொடர்ந்து ஒரு ஊழியராகவே இருப்பதால் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை நேரடியாக அனுபவித்துப் பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

நீங்கள் சுமார் 20 பேர் வேலை செய்யும் ஒரு சிறுதொழிலை நடத்திக்கொண்டு Frontline customer facing person ஆக நிற்பவராக இருந்தால் அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் என்ற ஒரு பிரிவினர் மீதான உச்சக்கட்ட அதிருப்தியும், வெறுப்பும், அறிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் சரளமாகப் பயன்படுத்தித் திட்டிக்கொண்டே இருக்கும் நபராகவே இருக்க முடியும். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கான நயத்தக உரைத்தல், நல்லவை கூறல், நட்பொழுகல், நண்பர்கள் நலம் பேணல், முக்காலமும் அறிந்து முகமன் கூறல் போன்றவற்றால் அடக்கி வாசித்துக்கொண்டு இருப்பவராக மட்டுமே இருக்க இயலும்.

எழுபதுகளில் கல்வி, மின்சாரம், மருத்துவம், பாசனம், நவீன வேளாண்மை போன்றவற்றை கிராமங்களுக்கு முதன்முறையாக கொண்டுசென்ற அரசு ஊழியர் வர்க்கம் வேறு. அப்போது இருந்த பயனாளிகள் எனப்படும் பொதுமக்களும் வேறு. உள்நாட்டு வியாபாரம் மட்டுமே இருந்த சமூகப் பொருளாதார சுழலும் வேறு. அப்போது இருந்த ஊழியர்களும் ஓய்வுபெற்றுவிட்டனர், பயனாளிகளும் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டனர், கணிசமானோர் இறந்தும் விட்டனர்.

2000-க்குப் பிறகு வந்த தொழில் வேகம், சர்வதேச சந்தை வரவுக்குத் தகுந்தவாறு அரசு ஊழியர் வர்க்கம் மாறவே இல்லை. தொழிற்சங்க பார்வைகளும் மாறவே இல்லை. அரசாங்கத்தின் அத்தனை சட்டதிட்டங்களையும் ஏற்றுக்கொண்டு, வரி கட்டி, வட்டி கட்டி வாழும் முதலாளிகளை ஏமாற்றுக்காரன் என்றும், அறக்கட்டளை வைத்து பள்ளி கல்லூரி நடத்தி வரியே இல்லாமல் வெளிப்படையாகவே சம்பாரிப்பவர்களைக் கல்வித்தந்தை என்றும், கடமையைச் செய்யமால் உரிமையை எப்படி கேட்க முடியும் என்ற சுரணையே இல்லாத அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த இயந்திரங்களின் வேகமும், துல்லியமும் மிக அதிகம். அதேநேரத்தில் அவை இயங்குவதற்கு மின்சாரத் தேவையும் மிக அதிகம். திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களிலும் புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டதோடு ஆட்டோமொபைல், கணிணிசார் தொழில்கள் வேகமாக வளர்ந்த வேகத்துக்கு அரசாங்கத்தின் மின் உற்பத்திக்கானத் திட்டங்கள் செயல்வடிவம் பெறவில்லை. அதன் விளைவுதான் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை. தமிழகத்தில் இருப்பது ஒரே மின்சார வாரியம். அவர்களுக்குத் தெரியாது என்பதல்லாம் வடிகட்டிய பொய். அந்த அதிகார வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தால் அத்தோடு தமிழக அரசியலில் இருந்து திமுக அரசியல்வாதிகள் அப்புறப்படுத்தப்பட்டது வரலாறு.

பிரமிடின் உச்சியில் இருக்கும் சிறு எண்ணிக்கைதான் அரசியல்வாதிகள். ஆசிரியர் ஜோதிஜி குறிப்பிடுவது போல எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் மேலேயே எழுதிவிட்டுத் தப்பிக்க இயலாது. கிராம நிர்வாக அதிகாரிகளே, கிராமத்திலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் அந்தந்த கிராமத்தின் சாகுபடிப் பரப்பு, கால்நடைகள் எண்ணிக்கை, அங்கு இருக்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள் என எல்லாத் தரவுகளுமே தவறானவையாகத்தான் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் கொள்கை முடிவு எடுத்தால் எப்படி இருக்கும்?

இன்றைய தேதிக்கு மிகவும் over rated valuation என்பது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வரும் அதிகாரிகள்தான். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மட்டும் திறமையின் உச்சகட்ட வடிவமாக காட்டப்படுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்களது எல்லாத் திறமைகளும் 51% என்றால் அவர்களது அதிர்ஷ்டம் 49% என்பது போலவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளின் அதிர்ஷ்டமும் 49% உண்டு. மீதமிருக்கும் சர்வீஸ்களின் அதிகாரிகள் ஐந்து பத்து மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்ட காரணத்தினால் திறமை குறைந்தவர்களாகிவிட மாட்டார்கள். ஆறுமுறை நேர்முகத்தேர்வு சென்று தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்வில் ஐஏஎஸ் வாங்கியவர்களும் உண்டு. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்தும், அதன் அருமை பெருமைகள் குறித்தும் அவர்களே புத்தகம் எழுதிக்கொள்வதால் சமகாலத்தில் திறமை குறித்து உருவாக்கப்பட்ட பெரிய பிம்பங்களுள் சிவில் சர்வீஸ்ஸ் தேர்வும் ஒன்று. குரூப் 1 அதிகாரிகளைப் பார்த்தால் அவர்களுக்குக் கொஞ்சம் இளக்காரம்!

இந்த அதிகாரிகளே கீழ்மட்டத்திலிருந்து வரும் தகவல்களை சரிபார்த்து மேலே அனுப்பி திட்ட வடிவமாக்கி வைக்கின்றனர். இவர்கள் சொல்லுவதை அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வதைத் தாண்டி எதுவும் இருப்பதில்லை. வைகை அணையில் தெர்மாகோல் விட்ட மாதிரி, கோயமுத்தூரில் விண்வெளிப் பயண பாலம் அமைத்தது மாதிரி பல உதாரணங்கள் உண்டு.

ஜோதிஜி குறிப்பிடும் நிர்வாகத் திறமைக்கும், ஒரு தேர்வில் வெற்றிபெற்று வருவதும் தொடர்பே இல்லாதவை (நீட் தேர்வு உட்பட). சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பின்னர் அவர்கள் பயில்வது புரோட்டோக்கால் பின்பற்றும் வழிமுறைகளே. ஓட்டுநர் உட்பட ஐந்து முதல் பத்து உதவியாளர்களை 24×7 வைத்துக்கொண்டு, எந்த கட்டத்திலும் வேலையை விட்டு நின்றுவிடாத, கிட்டத்தட்ட zero attrition rate கொண்ட workforce-ஐ வைத்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளைத் திறமையின் மறுவடிவம், எளிமையின் சிகரம், தன்னுடைய கார் கதவைத் தானே திறந்து இறங்கும் குணக் குன்று என்று அனைவரும் புகழ்ந்து வைப்பது நமக்கு எதுக்கு வம்பு என்றுதானே? மற்றபடி சாதாரண feedback-ஐக் கூட தாங்கிக்கொள்ள முடியாத அகங்காரத்தில் உளல்பவர்களாகவே 90% இருக்கின்றனர்.

அண்மையில் மத்திய அரசில் இணைச் செயலாளர் மட்டத்தில் ஐஏஎஸ் அல்லாத, அனுபவம் மிகுந்த தனியார் நிறுவன உயரதிகாரிகளும் வரலாம் என்று கொண்டுவந்த சட்டத்திருத்தம் நியாயமானதுதான் என்று ஜோதிஜிக்குத் தோன்றியிருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. நீதி, நேர்மை, அறமே தரம் என்று வாழ்ந்த அதிகாரிகள் இருந்திருந்தால் திருப்பூர் இப்படி இருக்குமா? கெளசிகா நதி வந்து சேரும் ஏரிக்குள்தானே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது? தமிழக அரசில் ஒரு ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி அவரது சொந்த மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி எப்படி கட்ட முடிகிறது என்பதெல்லாம் தெரியாததா?

புத்தகம் முழுவதும் அரசியல்வாதிகளைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வருவார்கள் போவார்கள். நத்தம் விஸ்வநாதன் என்று ஒருவர் இருந்தார். மு. க. அழகிரி என்றும் ஒருவர் இருந்தார். இன்று அவர்கள் எங்கே? ஆனால் அவர்களிடம் கோப்புகளை வைத்து வாங்கிய அதிகாரிகள் அப்படியேதானே இருக்கிறார்கள்?

சாயப் பட்டறை பிரச்சினைகள் அனைத்தையும் விலாவரியாக அலசியிருக்கிறார். அது கடந்து வந்த பாதை, இன்னும் இருக்கும் பிரச்சினைகள் என சகலமும். அதுதான் உள்ளே இருந்து எழுதுபவர்களின் சிறப்பம்சமே. எடுத்த உடனே மூடி, சீல் வை என்பது 24 மணிநேர செய்திச் சேனல்களின் தீர்ப்பாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதேபோல பி.டி. பருத்தி விவகாரத்தை பேசினால் கார்ப்பரேட் கைக்கூலி என்கிறார்கள்.

ஏற்றுமதிக்கு உதவும் DGFT, EIC, இன்னபிற ஏகப்பட்ட அமைப்புகள் எதற்காக இருக்கின்றன என்றே தெரியவில்லை என்று ஜோதிஜி குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. அவர்களது உலகம் வேறு, ஏற்றுமதியாளர்களது உலகம் வேறு. அவர்களது திட்டங்கள் தொழிலில் இருப்பர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் திவாலாகித் தூக்கில் தொங்க விட்டுவிட்டு, புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு உதவி செய்வதாகக் காட்டிக்கொள்வதையும் விரிவாக அலசியிருக்கிறார்.

மாவட்டத் தொழில் மையம் (DIC – District Industrial Centre) என்ற ஒன்று உண்டு. அங்கே சென்று ஒரு புராஜக்ட் கொடுத்து வாங்கி இலஞ்சம் ஏதும் கொடுக்காமல் நீங்கள் தொழில் ஆரம்பித்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்கு சிலை வைத்துக் கொண்டாடலாம். DIC என்பதை உண்மையில் dick என்றுதான் சொல்லவேண்டும். அப்பேர்ப்பட்ட நவீன பிச்சைக்காரர்கள் அங்கே அதிகாரிகள் என்ற பெயரில் பணியில் இருப்பார்கள் என்பதை புத்தக ஆசிரியரும் அறிந்தே இருக்கிறார்.

புதிய தலைமுறை ஆலைகள் வந்தபிறகு தொழிற்சங்கங்களின் அடித்தளம் கிட்டத்தட்ட ஆட்டம் கண்டுவிட்டது. சுமங்கலி திட்டம் என்றபெயரில் இளம்பெண்களை நவீன கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் தனியாக ஒரு கட்டுரையில் அலசப்பட வேண்டிய ஒன்று. தென்னக இரயில்வேயில் சாதாரணப் போர்ட்டராக கேரியரை ஆரம்பித்த அந்த தொழிற்சங்கப் பாட்டாளி ஐயா இன்று இரண்டு கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மகிழுந்தில் வருகிறார், சுமார் 1200 கோடிக்குமேல் சொத்து வைத்திருக்கிறார் என்றால் அதன் அருமை பெருமைகளைப் புரிந்துகொள்ளுங்கள். இரயில்வே மட்டுமல்ல, பெரும்பாலான அரசுத் துறைகளும் விற்றுத் தலைமுழுக வேண்டியவை என்று அரசியல்வாதிகள் நினைக்குமளவுக்குக் கொண்டுவந்தது உள்ளே இருப்பவர்கள்தானே?

இன்னும் ஏகப்பட்ட விசயங்களை எழுதலாம். ஆனால் எப்போதுமே வண்டி வண்டியாக எழுதித் தள்ளுவதால் படிக்க முடியவில்லை என்று நண்பர்கள் புகார் சொல்லுவதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

நம் ஊரில் தொழிற்சங்க நண்பர்கள் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ந்தால் அஃது அதிலுள்ள அனைவரின் பங்களிப்பு என்றும், தோற்றால் அது முதலாளியின் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையின்மை, திட்டமிடுதலில் கோளாறு என்றெல்லாம் எழுதிவிடுவது வழக்கம்.

ஆனால் முன்னால் நின்று நடத்துபவர்களுக்கே அதன் அத்தனை பரிமாணங்களும் தெரியும். அத்தகைய frontline workforce நபர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் டாலர் நகரமும் ஒன்று.

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – நூல் விமர்சனம்

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – நூல் விமர்சனம்.

ஆங்கில மூலம்: ஜான் பெர்கின்ஸ். தமிழாக்கம்: போப்பு. விடியல் பதிப்பகம் வெளியீடு.

வலதுசாரி பொருள் வேட்கையையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், நிறுவனவியத்தையும் உரித்துக் காட்டி ஏழைகள் எப்படித் தொடர்ந்து உறிஞ்சப்பட்டார்கள் என்பதை இந்தப் புத்தகம் காட்டுவதாகவும், சமகால கார்ப்பரேட் சுரண்டல்களுக்கு இந்நூல் ஓர் ஆவணம் என்றும் பரவலாகப் பேசுகிறார்கள். இந்த நூலை வைத்திருப்பதும், படித்ததாக சொல்லிக்கொள்வதும் தங்களுக்கு உள்ள சமூக அக்கறையையும், ஏகாதிபத்தியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதையும் மென்மேலும் கூர்மையாக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.

வெளிநாட்டுத் தத்துவங்களை – கம்யூனிசம் உட்பட – கருதுகோள்களை, கோட்பாடுகளை இந்தியாவில் அப்படியே இறக்கி, பொறுத்திப் பார்க்க முடியாது. இங்குள்ள சாதிய அமைப்பு முறையின் நுட்பமும், ஆழமும், கொடூரமான முகமும் அப்படி.

இந்தப் புத்தகத்தை வைத்து, அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறி உலகின் வளங்களைச் சூறையாடியது என்ற ஒரே டெம்ப்ளேட் வசனத்தில் முடித்துக்கொள்வோமேயானால் உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டின் வரலாறு, பிராந்திய வேறுபாடுகள், ஏற்றதாழ்வுகள், பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பு, மாற்றம் வராதா என்று எதிர்பார்த்தவர்களின் கனவுகள் என அனைத்தையும் படு கேவலமாக உதாசீனப்படுத்துவதாகவே அமையும்.

பல இடங்களில் ஆசிரியர் மனந்திறந்து பேசுகிறார். அதையும் அவர் செய்த வேலையையும் ஒவ்வொரு புள்ளியாக இணைத்துக்கொண்டே வந்தால் சில பல இடங்களில் அவர் சென்ற நாடுகளில் உள்ள உள்ளூர் சூழல் குறித்த அறியாமையும், சில இடங்களில் அவரது அப்பட்டமான சுயநலமும், சில இடங்களில் தனிமையின் விரக்தி காரணமாக அவர் உளறுவதையும், சில இடங்களில் படுமுட்டாள்தனமாக விளக்கம் கொடுப்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள காரணம் என்று சொல்பவை யாவும் இயல்பாகவே கொஞ்சம் அட்ரினலின் டிரைவ் அதிகமாக உள்ள இளைஞர்கள் விரும்புவதுதான். (மொழி தெரியாத, தனியாக சுற்றி வரவேண்டிய, முறையான அலுவலக அமைப்புகள் இல்லாத, புதிய கலாச்சார பின்னணி உடைய நாடுகளில் சுற்றுவதை அதாவது ஓர் உதிரி ஊழியனாக இருப்பதை பெரும்பாலான இளைஞர்கள் தவிர்த்து விடுவர்). இத்தகைய அட்ரினலின் junkie வகை இளைஞர்களுக்கு இருக்கும் புதியனவற்றைத் தேடும் வேட்கை, அதனால் கிடைக்கும் நுகர்வு கலாச்சார அனுபவங்கள், எதிர்பாலினர் மீதுள்ள மோகம் போன்றவற்றை இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு மேல் வளைத்து வளைத்துப் பேசுகிறார். கடைசி அத்தியாயங்களிலும் இஃது ஆங்காங்கே வெளிப்படுகிறது. ஆனால் இதைத்தான் அவர் ஒரு பொருளாதார அடியாளைக் கட்டமைக்கும் கார்ப்பரேட் அணுகுமுறையாக என்னென்னவோ சொல்லி சூடம், சாம்பிராணி எல்லாம் காட்டி “அடேய், இது ரொம்ப சக்தியான சாமி, ஏமாத்தனும்னு நினைச்சா கண்ணை குத்திப்புடும்” என்ற ரீதியில் முழக்குகிறார்.

பயிற்சிக் காலத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவர் பிற நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்றதும் ஏற்பட்ட தனிமையின் அழுத்தம் காரணமாக அவருக்குக் கிடைத்த அந்தந்த ஊர் குமுதம், ஆனந்த விகடன் படித்துவிட்டு தண்ணியடித்த மப்பில் எதையாவது உளறுகிறார். அதை ஏதோ வரலாற்று ஆவண வாரத்தைகளாக நம்மூர் மக்கள் படிப்பது கொடுமை. சந்தையில் உதிரி ஊழியர்களாக பணிபுரியும்போது அவரவர் வேலைக்கேற்ப பலரை நாம் சந்திப்போம். சிலர் நம்மை ஆச்சரியப்படுத்துவார்கள். சிலர் வெறுப்பேற்றுவார்கள். சராசரி அலுவலக ஊழியர்களுக்குக் கிடைக்காத இந்த வாய்ப்புகளை எப்படி வேண்டுமானாலும் உருட்டி மிரட்டி மற்றவர்களிடம் கதை சொல்லலாம். ஏனென்றால் கதை கேட்பவர்களால் சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று ‘நீங்க இப்படியெல்லாம் சொன்னீங்களா?’ என்று கேட்க முடியாது. அதுவும் அந்த நபர் இறந்துவிட்டால் நாம் சொல்வதுதான் கதை. அதைத்தான் அடுத்தடுத்து சில அத்தியாயங்களில் ஜான் பெர்கின்ஸ் செய்கிறார்.

அத்தியாயம் 5: “என் ஆன்மா விற்கப்பட்டது” – இதுதான் இந்தப் புத்தகத்தின் ஆகச்சிறந்த ஹைலைட். இந்தோனேசியாவில் ஒரு பெரிய மின்திட்டத்திற்காக விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் அவருக்கும் ஹாவர்ட் என்கிற வயதான அதிகாரிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை வைத்து பெர்கின்ஸ் பயங்கரமாக மனம் திறந்து படக்கு படக்கு என்று பேசுகிறார். அஃது ஒன்றுமில்லை. அவர் செய்த வேலை DPR எனப்படும் Detailed Project Report தயாரிப்பது. சிலபல கோடி கடன் வாங்க வேண்டுமென்றாலே DPR கட்டாயம் எனும்போது பல ஆயிரம் கோடி தொகையைக் கொட்ட இருக்கும் வங்கிகளுக்கு ஒரு glorified DPR கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

எப்போதுமே DPR என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன் என்று அதில் புழங்கும் அத்துனை பேருக்கும் தெரியும். கடன் வழங்கும் வங்கிக்கும் தெரியும். நாளைக்கு புராஜக்ட் ஊத்திக்கொண்டால் சட்டப்படி எல்லாரும் தப்பித்துகொள்ள செய்யப்படும் ஏற்பாடுகள். புராஜக்ட் சிறப்பாக செயல்பட்டால் ஊழியர்களது பதவி உயர்வுக்கு உதவும். இவர் கொஞ்சம் அதிகமான நம்பர்களைப் போட விரும்புகிறார். அதற்கு அந்த ஹாவர்ட் என்கிற பெரியவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான். மற்றபடி அதற்கு இந்தோனேசியாவை விற்கிறோம், அறுத்துக் கூறுபோடுகிறோம் என்பது, அங்கே சும்மா வாய்க்காலில் ஆய் கழுவப்போன பையன்களை இரண்டு பத்திக்கு விவரித்து தனது சமூக அக்கறையைக் காட்டுவது என்று கும்மி அடிக்கிறார். அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இன்டர்-கான்டினென்டல் ஓட்டலில் வளைய வரும் பெண்களைப் பார்த்துப் பார்த்து சலிப்பாக இருக்கிறது என்று சொன்னதையும் சேரத்து வைத்துப் படித்தால் இவர் DPR போட்டது தெளிவாகப் புரியும்.

இவருடைய DPR இந்தோனேசியாவையே அழித்து அடிமைப்படுத்துமளவுக்கு இருந்ததாக பயங்கரமாகப் பூ சுற்றுகிறார். மற்றபடி இந்தோனேசியாவின் அரசியல் சூழல், வரலாறு குறித்து எந்தவித அடிப்படை ஞானமும் அவருக்கு இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

Sapiens நூலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வரிகளின் முக்கியத்துவத்தை விட ஒரு மின் நிலையத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமான முழக்கங்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

//The most famous Dutch joint-stock company, the Vereenigde Oostindische Compagnie, or VOC for short, was chartered in 1602, just as the Dutch were throwing off Spanish rule and the boom of Spanish artillery could still be heard not far from Amsterdam’s ramparts. VOC used the money it raised from selling shares to build ships, send them to Asia, and bring back Chinese, Indian and Indonesian goods. It also financed military actions taken by company ships against competitors and pirates. Eventually VOC money financed the conquest of Indonesia. Indonesia is the world’s biggest archipelago. Its thousands upon thousands of islands were ruled in the early seventeenth century by hundreds of kingdoms, principalities, sultanates and tribes. When VOC merchants first arrived in Indonesia in 1603, their aims were strictly commercial. However, in order to secure their commercial interests and maximise the profits of the shareholders, VOC merchants began to fight against local potentates who charged inflated tariffs, as well as against European competitors. VOC armed its merchant ships with cannons; it recruited European, Japanese, Indian and Indonesian mercenaries; and it built forts and conducted full-scale battles and sieges. This enterprise may sound a little strange to us, but in the early modern age it was common for private companies to hire not only soldiers, but also generals and admirals, cannons and ships, and even entire off-the-shelf armies. The international community took this for granted and didn’t raise an eyebrow when a private company established an empire. Island after island fell to VOC mercenaries and a large part of Indonesia became a VOC colony. VOC ruled Indonesia for close to 200 years. Only in 1800 did the Dutch state assume control of Indonesia, making it a Dutch national colony for the following 150 years. Today some people warn that twenty-first-century corporations are accumulating too much power. Early modern history shows just how far that can go if businesses are allowed to pursue their self-interest unchecked. While VOC operated in the Indian Ocean, the Dutch West Indies Company, or WIC, plied the Atlantic. In order to control trade on the important Hudson River, WIC built a settlement called New Amsterdam on an island at the river’s mouth. The colony was threatened by Indians and repeatedly attacked by the British, who eventually captured it in 1664. The British changed its name to New York. The remains of the wall built by WIC to defend its colony against Indians and British are today paved over by the world’s most famous street –Wall Street.//

கார்ப்பரேட் கம்பெனிகளில் சிறிய வயதில் சடசடவென மேலே ஏறி உயர்பதவிகளைப் பிடிப்பவர்களுக்கு கட்டாயமாக யாராவது ஒரு காட்ஃபாதர் இருப்பார். அதை பெர்கின்சுடைய வாழ்க்கையிலும் காணலாம். மெய்ன் நிறுவனத்தில் அவ்வாறு வளர்ந்ததோடு அல்லாமல் அதன் முக்கிய பங்குதாரராகவும் ஆகிவிட்டார். அது வழக்கமாக ஊழியர்களுக்கு சும்மா தரப்படும் ESOP அல்ல.

கொலம்பியாவில் பணிபுரிந்தபோது பாவ்லா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு ஆங்காங்கே ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு பேசுகிறார். எழுத்தாளர்கள், கவிஞர்கள் மது அருந்தினால் மனசாட்சியைத் திறந்து வைத்துப் பேசுவார்கள் அல்லவா? அதை தவறாமல் பெர்கின்சும் செய்கிறார்.

உயர்பதவிக்குச் சென்றதும் கீழிலிருக்கும் ஊழியர்களைப் பயிற்றுவிப்பது, அடுத்தகட்ட தலைவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் புகுத்தி அனுபவங்களை உண்டாக்கித் தருவது போன்றவை கார்ப்பரேட் நிறுவன உயரதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். அதாவது Succession planning என்று சொல்வார்கள். அந்த வேலையைச் செய்வதை இரண்டு அத்தியாயங்களில் புதிய பொருளாதார அடியாட்களை உருவாக்குவதாகவும் அஃதுவொரு மாபாதகச் செயலைப்போல சொல்கிறார்.

மெய்ன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த மெக்ஹால் என்ற அதிகாரி பெர்கின்ஸின் காட்ஃபாதரான புரூனோவை வேலையை விட்டு நீக்கி விடுகிறார்.

விர்ஜின் தீவுகளில் சொகுசுக் கப்பல் ஒன்றில் மேரி என்ற சக ஊழியை+தோழியுடன் உல்லாசப் பயணம் போகிறார் பெர்கின்ஸ். அங்கு ஓரிடத்தில் நங்கூரமிட்டுவிட்டு மது அருந்திவிட்டு பலவாறாக யோசிக்கிறார். ஐரோப்பிய காலனிகள், கடற்கொள்ளையர்கள், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் என பலவற்றைப் பேசும் பெர்கின்ஸ் ஒருகட்டத்தில் கரையில் தனியாகக் கத்திக் கதறி தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார்.

அத்தியாயம் 25-இல் பல்வேறு மனக்குமுறல்களுக்குப் பிறகு மெய்ன்-இல் இருந்து வேலையை விட்டு விலகுவதை எழுதியிருக்கிறார். சராசரி வாசகர்கள் நிச்சயமாக அவரது மனசாட்சியையும், நேர்மையையும் கண்டு அசந்து போவார்கள். ஆனால் உண்மையில் அவரது காட்ஃபாதர் வேலையை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சியில், தனக்கு இனிமேல் அங்கு பாதுகாப்பும், மரியாதையும் இருக்காது என்ற பயத்தில்தான் விலகுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களில் இஃது இயல்பாக நடப்பதுதான். ஒரு பெருந்தலை வெளியேறினாலோ, வெளியேற்றப்பட்டாலோ பின்னாலேயே ஒரு கூட்டம் பேப்பர் போட்டுவிட்டு கிளம்புவது வழமையான ஒன்று.

அதேநேரத்தில் பெக்டெல் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைக் கட்டடவியல் நிபுணரின் மகளான, மெய்ன்-இன் சுற்றுச்சூழல் பிரிவில் பணிபுரிந்த வின்னிபிரெட் உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை பெர்கின்ஸ் ஒப்புக்கொள்கிறார். புதிய அணுமின்நிலையை வரைவுத் திட்டம் ஒன்றில் 3X சம்பள உயர்வுடன் சேர்ந்துகொள்கிறார். கடந்த அத்தியாயத்தில் மப்பு அதிகமானதால் காணப்பட்ட நேர்மை இப்போது காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வின்னிபிரெட் சீமாட்டியுடன் சொகுசுக் கப்பலில் ஜாலியாகச் சுற்றிவரும் பெர்கின்ஸ் தனி பங்களா எடுத்து அவளுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிறார். இந்நிலையில் அவர் பணிபுரிந்த அணுமின் திட்டத்தில் அணுமின் கழிவை அகற்றுவது குறித்த வரைவில் சட்டப்பூர்வமாக இவரே கையொப்பமிட வேண்டும் என்ற நிலை வந்தவுடன் பேப்பர் போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்.

இந்நிலையில் இவரது மாமனார், அதாவது வின்னிபிரெட்டின் அப்பா பெக்டெல்லில் பங்குதாரர் ஆகிவிடுகிறார். பின்னர் வின்னியும் அதில் பங்குதாரர் ஆகிறாள்.

இந்த சூழலில் பெர்கின்ஸ் தனியாக கம்பெனி ஆரம்பிக்கிறார். அதற்கு அவருடைய பழைய காட்ஃபாதரான புரூனோ அப்போது அவர் பணிபுரியும் வங்கி ஒன்றின் மூலம் கடனை வாரி வழங்குகிறார். பெர்கின்சுடைய மாமனாரது சவுதி அரேபியத் தொடர்புகளும் அவரது கம்பெனி வளர்ச்சிக்கு அனுகூலமாகிறது.

அவரது தொடர்புகள் மூலமாக கம்பெனியை மடமடவென வளர்த்து, நல்ல விலைக்கு விற்றுவிட்டு அதே கம்பெனியில் முரட்டு சம்பளத்திற்கு ஆலோசகராக அமர்ந்துகொள்கிறார் பெர்கின்ஸ்.

ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கியதும் அதன் ஸ்தாபகருக்கு ஆலோசகர் பதவி வழங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் M&A பணிகள் முடிவடையும்வரை வைத்திருப்பார்கள். பின்னர் அவர்களாகவே விலகிவிடுவார்கள். பெர்கின்ஸ் விசயத்திலும் இது அப்படியே நடந்துள்ளது. ஆனால் அவ்வப்போது மப்பு ஏறியதால் மனசாட்சியைத் திறந்து பேசுவதாக எதையெதையோ உளறுகிறார்.

மொத்தத்தில் அவரது வேலை, சுகானுபவங்கள், பொருளாதார நலன்கள், வருவாய் என எதிலும் குறை வைக்காமல் விவரமாகவே இருந்திருக்கிறார். ஓய்வுபெற்றதும் வெளிச்சத்திலேயே இருக்கவும, சில்லறை வருவாய்க்காகவும் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்று புத்தகத்தையும் எழுதிவிட்டார். அதாவது காரியப் பைத்தியகாரன் என்று சொல்லுவோமே, அதேதான்.

இடையில் ஈரான், ஈராக், சவூதி அரேபியா, பனாமா, குவாதமாலா, கொலம்பியா என இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளையெல்லாம் இணைத்து மசாலா ஆம்லெட், ஆபாயில், ஃபுல்பாயில், கரண்டி ஆம்லெட், வெள்ளைக்கரு ஆம்லெட், மிளகு போட்ட ஒன்சைடு ஆம்லெட், காரம் தூக்கலான சின்ன வெங்காயம் போட்ட கலக்கி என பலவற்றைச் சுட்டுப்போட்டு வாசகர்களை மகிழ்விக்கிறார். நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஆங்காங்கே பெண்கள், விபசாரிகள், சிப்பாய்கள், போராளிக் குழுக்கள், விமான விபத்துகள் என சிலவற்றை இணைத்திருக்கிறார்.

எந்தவொரு திட்டத்திலும் நேரடியான பணியில் இல்லாத, சும்மா ரிப்போர்ட் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு வந்த பெர்கின்ஸ் விட்ட கதைகளைக் கதைகளாக மட்டுமே பார்க்கலாம். அதை இந்தியாவிக்கு இறக்குமதி செய்து எங்கேயும் பொறுத்திப் பார்க்க முடியாது. அவ்வாறு செய்யவும் கூடாது.

இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு முறை உலகத்திலேயே மிக ஆழமான ஊழல் மிகுந்த அமைப்பாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், சுரண்டல் என்பதெல்லாம் இந்திய சாதி அமைப்பு முறையிடம் பிச்சை வாங்க வேண்டும். இதை விடுத்து ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் போன்றவற்றை ஏதோ அரிதலும் அரிதானவறை அருளும் பொருளியற்சுரண்டல் சிந்தாமணி என்ற அளவுக்கு சித்தரிப்பதெல்லாம் புத்தகம் விற்பதற்கான அற்பமான மார்க்கெட்டிங் மட்டுமே.

தமிழகத்துக்குள் இத்தகைய மொழிபெயர்ப்பு கன்றாவிகள்தான் வலதுசாரி முதலாளித்துவ பொருளாதாரத்தினைப் புரியவைக்க கிடைக்கும் ஆதாரங்கள் என்றால் சொல்வதற்கு ஏதுமில்லை.

‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ பொருளாதாரத்தைச் சமூக கண்ணோட்டம் இல்லாமல், வெறும் எண்களாக மட்டுமே பார்க்கும் ஆகச்சிறந்த குப்பை. இதையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்குவதை விட டிக்டொக் பார்ப்பது மனதுக்கு இனிமையானது. இன்னும் படிக்கவில்லை என்றால் உடனடியாக அதை எடைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கி உண்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

‘வானம் வசப்படும்’ – புத்தக விமர்சனம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

‘வானம் வசப்படும்’ நாவலை புதுச்சேரி குவர்னர் டுய்ப்லெக்ஸ் வசம் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரது நாட்குறிப்பின் அடியொட்டி பிரபஞ்சன் எழுதியிருப்பதைப் படிக்கப்படிக்க புதுச்சேரியின் வரலாறும், இந்தியா என்பது சாதிகளின் தொகுப்பு என்பதும் கிறித்தவமும், இசுலாமும் உள்ளே நுழைந்தபிறகு இந்து என்ற மதம் என்ற ஒன்று போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சிபொங்க வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும் எப்பேர்ப்பட்ட பொய் என்பதும் தானாகவே விளங்கிக்கொள்ளலாம்.

பிரான்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக வந்திருந்தாலும் இங்குள்ள மக்களை கிறித்துவத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் மீதான அதிகாரத்தைப் பெற்று பிரான்ஸ் அரசருக்கு சமர்ப்பிப்பதும் அடுத்தடுத்த கடமையாக பாவித்திருக்கின்றனர்.

ஊழல் என்பது பிரான்சு குவர்னரில் ஆரம்பித்து கடைநிலை சொல்தாது (சிப்பாய்) வரைக்கும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. இரண்டு கப்பல்களில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சரக்கு பிடித்து அனுப்பும் குவர்னர், ஒரு கப்பலில் தனக்காக வியாபாரமும் நடத்துகிறார்.

பிராமணர், முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர் சாதியினரே பிரான்சு, இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்தில் முதல்மட்ட பதவிகளை அனுபவித்திருக்கின்றனர். அவர்களது உறவினர்களுக்குப் பதவிகளை வாங்கித்தர கடும் முயற்சி எடுத்துக்கொள்வதோடு மேல்மட்டத்துக்கு அன்பளிப்பு என்றபெயரில் இலஞ்சம் கொடுத்து பதவிகளை வாங்கியே இரண்டு மூன்று தலைமுறைகள் வாழ்ந்திருக்கின்றனர். நில உரிமை, குத்தகை உரிமை, மண்டி, தரகு, வர்த்தகம் என அத்தனை தொழில்களுமே பிறப்பால் கிடைத்திருக்கின்றதே தவிர திறமை என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் எந்த இடமும் அந்தக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

குவர்னர் மாளிகையில் கிடைக்கும் பணிகளைப் பெற மேற்கண்ட சாதியினருக்குள் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக பலர் கிறித்துவத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பதவிகளுக்கு சர்ச் மூலம் சிபாரிசு பிடித்து வேலைக்குச் சேரலாம் என்பதால் சர்ச் என்பது கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்திருக்கிறது.

ஆதிஷேஷய்யர் தனது பூணூலை அறுத்துவிட்டு துய்ப்லெக்ஸ் துரையின் மனைவி மேடேம் ழான் அம்மையாரின் ஆசீர்வாத்தில் பாதிரியாரிடம் ஞானஸ்னானம் பெற்று ஜீவப்பிரகாசம் ஐயராக மாறுகிறார். பசு மாமிசம் தின்னும் பரங்கிப்பயல்களின் மதத்துக்கு மாறுவதா என்று அவரைப் புறக்கணிக்கும் குடும்பம் நாளடைவில் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வதும், மற்ற உறவுமுறைகளுக்கு பதவி வாங்கித்தரச்சொல்லி சிபாரிசு கேட்பதும் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு இந்த ஆண்டைகளுக்கு உழைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை. சைக்கிள் கூட இல்லாத காலம் (1750-கள்). மாட்டுவண்டி, குதிரை, பல்லக்கு மட்டுமே போக்குவரத்து சாதனம் – மேல்சாதிகளுக்கு மட்டும். கீழ்சாதிகளுக்கு நடந்து செல்வது மட்டுமே ஒரே வழி. விவசாயம், நெசவு சார்ந்த தொழில்களைத் தவிர வேறெதுவும் கிடையாது, எங்கு சென்றாலும் சோறு கட்டிக்கொண்டு நடந்தே சென்று சத்திரங்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டும். வழியெங்கும் திருட்டு பயம். இப்படி ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களே இந்த நாவல்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கும்போது அங்கிருந்து புதர்கள், வயல்கள், சதுப்பு நிலங்களுக்குள் புகுந்து திருவல்லிக்கேணிவரை ஒரு பெண் மழைக்காலத்தில் மகளின் திருமண ஏற்பாட்டுக்கு சென்று வருவதையும், சண்டை உக்கிரமடைந்தவுடன் பல குடும்பங்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு செங்கழுநீர்ப்பட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதையெல்லாம் படிக்கும்போது அந்தக்காலத்தில் எங்கே பாலாறும் தேனாறும் ஓடியது என்று தெரியவில்லை.

சாணார், பறையர், பள்ளர் என கீழ்தட்டு மக்களாக விதிக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து ஓரளவு மீட்சியும், வயிற்றுப்பாட்டுக்கு ஆண்டைகளிடம் படும் பாட்டைக்காட்டிலும் கொஞ்சம் நியாயமான உழைப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளலாம் என்பதற்காக கிறித்தவத்துக்கு மாறியிருக்கின்றனர். ஆனால் முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர், பார்ப்பனர் என அனைவரும் கிறித்துவத்துக்குச் சென்று சர்ச்சுக்கு நடுவேயும் சாதி பிரிக்கச் சுவர் வைத்துவிட்டிருக்கின்றனர்.

சர்ச்சில் இருக்கும் தீண்டாமைச் சுவரை உடைத்து அனைவரையும் ஏசுவின் குழந்தைகளாகப் பாவிக்க நினைக்கும் பாதிரிகளும் இருந்திருக்கின்றனர். கும்பனி படைகளைப் பயன்படுத்தித் தமிழர் கோவில்களை இடித்துவிடத் துடித்த பாதிரிகளும் இருந்திருக்கின்றனர்.

1750-களில் கிறித்தவர், துலுக்கர், தமிழர் என்றே மக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்து என்ற மதமே இருந்திருக்கவில்லை என்பது ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு மூலம் தெரிகிறது.

மேடேம் ழான் அம்மையாரின் பலத்த ஆதரவுடன் டுய்ப்லெக்ஸ் துரை புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை வெள்ளைக்கார, காபிரிச் சிப்பாய்களை அனுப்பி உடைத்துப் போடுகிறார். அதைத் தடுக்க தமிழர்கள் பலர் (இந்துக்கள் அல்லர்) குவர்னருக்கு அடுத்தபடியாக இருக்கும் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளையிடம் முறையிட்டபோதும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் வைணவர் என்பதாலும் தமது பதவிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அடக்கி வாசிக்கிறார்.

தமிழர்களுக்கு சாதிதான் பிரதானம் என்று நாம் நினைக்கும்படி இருந்தாலும், சாதி அமைப்பில் உயர்மட்டத்தில் இருக்கும் பிராமணர்களின் முடிவுக்குக் கட்டுப்பட்டே வந்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பிராமணர்கள் சிறு ஓசை கூட எழுப்பாமல் இருப்பதைப் பார்க்கும்போது கப்பல்களில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டுக்காரனும் இங்கு கோட்டை கட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படுவதில்லை.

ஈசுவரன் கோவிலை இடித்த கையோடு மசூதி ஒன்றையும் இடிக்க குவர்னர் துய்ப்லெக்ஸ் உத்தாரம் (ஆணை) இடுகிறார். இரண்டு செங்கல் விழுந்தவுடன் துலுக்கர் படையின் தலைவன் அப்துல்ரகுமான் தான் குவர்னரைப் பார்த்துவிட்டு வரும்வரை ஒருவரும் மசூதியைத் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்று துய்ப்லெக்ஸ் துரையைப் பேட்டி கண்டு இடிப்பதற்கு காரணம் கேட்க அது குவர்னர் உத்தாரம் என்று சொல்கிறார். ‘கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும்வரை அந்த மசூதியை இடிக்க முடியாது, நாங்கள் உயிரை விட்டாவது போராடுவோம்’ என்று சொன்னதன் மன உறுதியைக் கண்டு குவர்னர் தனது உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.

ஐதராபாத் நிஜாம், ஆற்காட்டு நவாப் பதவிகளை யார் வைத்துக்கொள்வது என்று நடக்கும் சண்டைகள், உள்குத்துகள் காலங்காலமாக நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. மராத்தியர் ஒருபுறம், ஆலந்துக்காரர்கள் ஒருபுறம் என இந்தியா பிய்த்துத் துண்டாடப்பட்டிருக்கிறது.

பிராமணர்கள் ஆற்காட்டு நவாப், ஐதராபாத் நிஜாம், பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அத்துனை பேரிடமும் முதல்மட்ட ஊழியர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். பணிபுரியும் அரசாங்கத்துக்கே ரெண்டகம் விளைவிக்கும் விதமாக எதிரி அரசாங்கத்துக்கு உளவு சொல்பவர்களாகவும், ஆட்சியாளருக்குத் தக்கபடி நிறம் மாறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சுகபோகத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்களாகவே இருந்திருப்பது வானம் வசப்படும் மூலமாகவும் வெளிப்படுகிறது.

கிழக்கான் என்ற பள்ளர் சாதி நபர் அந்த ஊர் ஆண்டையிடம் பண்ணை வேலை செய்து வருகிறார். அப்போது ஊரில் மாட்டுத் தோலை உரித்து எடுத்துச்செல்லும் கும்பல் பண்ணையார் தொழுவத்தில் மாட்டை உரித்து தோலைத் திருடிச்சென்றுவிட்டது. பண்ணையார் கிழக்கானைக் கட்டிவைத்து சாட்டையால் அடித்து வாயில் சாணியைக் கரைத்து ஊற்றி, மூத்திரத்தையும் ஊற்றுவதைப் பார்த்த அவரது எட்டு வயது மகன் ஓடிச்சென்று அடிப்பவனைப் பிடிக்க, அவன் உதைத்துவிடுகிறான். அந்தக் குழந்தை ஒரு கல்லை எடுத்து எரிய அது அடிப்பவன் நெற்றியில் பட்டு காயமாக, அடுத்த சில நிமிடங்களில் கிழக்கானின் குழந்தை கொல்லப்படுகிறது.

கல்லை எடுத்து குழந்தை அடித்தது தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதிய பண்ணையார் கிழக்கானின் மனைவி மாரியாயியை உயிருடன் தீ வைத்து அனைவரின் முன்னிலையில் கொளுத்திவிடுகிறார். மகனையும், மனைவியையும் அடக்கம் செய்த கையோடு பிரெஞ்சுத் துரை ஒருவனிடம் தன்னைத்தானே அடிமையாக விற்றுக்கொண்டு கப்பலேறிவிடும் கிழக்கானின் கனமே 495 பக்க நாவலின் மொத்த கனமுமாகத் தோன்றுகிறது.

வங்கிகள், கடன் வசதி என எதுவுமே இல்லாததால் காசுகளை மண்ணில் புதைத்து வைப்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்த ஒரே சேமிப்புப் பழக்கமாக இருந்திருக்கிறது.

கோவில்கள்தோறும் தாசிகள் பரம்பரை பரம்பரையாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள பணக்காரர்கள் சதிர் ஆட்டத்தை வீடுகளிலேயே நடத்துவதுடன் தாசிகளுக்கு செலவிடுவதை ஒரு சமூக அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். ஒவ்வொரு முக்கிய அரசாங்க விழாககளின்போதும் தேவடியாள் ஆட்டம் என நடன நிகழ்ச்சிகள் தாசிகள் மூலமாகவே நடந்து வந்திருக்கிறதும் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று நாம் மக்களாட்சி என்ற பெயரில் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம், ஆட்சியாளர்கள் அதிகாரம் எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டு மக்களுக்காகவே அவர்கள் என்ற அமைப்புமுறை இருக்கிறது, உழைப்புக்கான ஊதியம், ஓய்வு, மருத்துவ வசதிகள் என மக்கள் மனிதர்களாக மதிக்கப்படுகின்றனர் என்பதை அறிய வானம் வசப்படும் நாவலை அவசியம் வாசிக்கவேண்டும். இரயில் வந்தபிறகுதான் இராஜாவும், குடிமகனும் – முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பும் பொருளாதார இடைவெளி மட்டுமே – ஒரே வேகத்தில் பயணிக்க முடிந்தது.

அறிவியல் மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும். அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்து பழைய காலத்துக்கு வாழ்வியலுக்கு நம்மை அழைப்பவர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்களாக இருப்பதும், அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாமே கேள்விகளே இல்லாத பண்ணையார், கூலிக்காரன் என்ற அமைப்புக்கு மூளைச்சலவை செய்யும் பிரச்சாரமாகவும், உயர்வு என்பது பிறப்பால் வருவது என்ற கோட்பாட்டைத் திணிப்பதுமேயாகும்.

வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற நூல்களுள் ‘வானம் வசப்படும்’ மிகவும் முக்கியமானது.

முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்

புத்தக விமர்சனம் என்று எளிதாக ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு வரலாற்று ஆவணம் மாதிரியான நூலாக இருப்பதால் முகிலினி நாவலை வெறும் புத்தக விமர்சனமாக சொல்லி கடந்துபோக முடியாது. நாவலாசிரியர் முருகவேள் வழக்குரைஞர் என்பதால் எல்லா தரப்பு நியாயங்களையும் பதிவு செய்திருக்கிறார். மிகைப்படுத்தப்பட்ட பாத்திரம் என்று எதுவுமே இந்த நாவலில் கிடையாது.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் பவானிசாகர் அணை கட்டும் வேலை ஆரம்பித்த காலத்திலிருந்து புரூக்ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலில் காஃபி டே-வில் செல்ஃபி எடுப்பது, நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் செல்வது வரைக்குமான காலம் வரைக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜக்கி வாசுதேவன் வரலாறும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெயர்களை மாற்றி எழுதியிருப்பதால் முதலில் அதன் உண்மையான பின்னணியை தெரிந்துகொண்டு ஆரம்பித்தால் ஒவ்வொரு நிகழ்வுகளின் காரணமும், அழுத்தமும், அதன் நியாயமும் புரியும்.

விஸ்கோஸ் எனப்படும் ரேயான் தயாரிக்கும் ஆலை உருவாகி, வளர்ந்து வீழ்ந்த வரலாறுதான் கதைதான் இந்த முகிலினி நாவல்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பருத்தி விளையும் பெரும் பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட தென்னிந்திய ஆலைகளுக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் தேடிய திரு ஆர். வெங்கடசாமி நாயுடு ரேயான் அதற்கு ஒரு மாற்றாக அமையும் என்பதை உணர்ந்து அதற்கான ஆலை அமைக்கும் பணியில் இறங்குகிறார். இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா (SNiA Viscosa) உதவியுடன் ஆலை அமைக்கப்படுகிறது. சவுத் இண்டியா விஸ்கோஸ் கம்பெனியின் 24.5% பங்குகளை மிலன் நகரில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனி, மஸ்கட்டில் சப்பினா (Sapina) என்ற பெயரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தனது துணை நிறுவனம் மூலமாக கையில் வைத்திருந்தது. இந்தியா, பிரேசில், தென் அமெரிக்க நாடுகளில் ஸ்நியா கம்பெனியின் சொத்துகளை நிர்வாகம் செய்துவந்த இந்த சப்பினா லக்ஸம்பர்க்கில் (Luxumburg) பதிவு செய்யப்பட்ட கம்பெனி.

விஸ்கோஸ் கம்பெனிக்கு மரங்களை கூழாக்கி பெரிய ஏடுகளாக மாற்றி கச்சாப்பொருளாக ஸ்நியா இத்தாலியிலிருந்து ஏற்றுமதி செய்து வருமானம் பார்த்தது. சிறுமுகையில் பவானிசாகர் அணைக்கு மேலே 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் விஸ்கோஸ் ஆலை அணையலிருந்து தண்ணீரையும், பைக்காரா நீர்மின்நிலையத்திலிருந்து மின்சாரத்தையும் பெற்று நேரடியாக 10000 பேருக்கு வேலை கொடுத்து வந்தது. அப்போது தினசரி 60 டன் ரேயான் உற்பத்தி செய்து, கழிவுநீரை அணைக்குள்ளேயே நேரடியாக திறந்துவிட்டாலும் dilution ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் அணையின் மீன்களுக்கோ, விவசாயத்திற்கோ பெரிய பாதிப்பில்லாத அளவில் இருந்து வந்திருக்கிறது.

வட இந்தியாவில் ஆதித்யா பிர்லாவின் கிராசிம் நிறுவனம் மிகப்பெரிய ரேயான் உற்பத்தியாளர் என்பதால் விஸ்கோஸை வாங்கிவிட பல வழிகளில் நெருக்கடி கொடுத்து வந்தது. அந்த போட்டியை எளிதாக சமாளித்த வெங்கடசாமி நாயுடு குடும்பத்தினர் கோவையின் அடையாளமாக விளங்கும் பல நிறுவனங்களை தொடர்ந்து ஆரம்பித்து வளர்ந்து வந்தனர். லஷ்மி மில்ஸ், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ், டெக்ஸ்டூல், CIT கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை என்பதோடு உரம், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஆட்டோமொபைல் டூலர்ஷிப் என அவர்களது பெரிய குடும்பத்தினை நீக்கிவிட்டு பார்த்தால் கோயமுத்தூர் வெறும் விவசாய பூமியாகத்தான் இருந்திருக்கும்.

அந்த இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஃபேமிலியில் ஒருவர் மட்டும் (கரிவரதன் என்று நினைக்கிறேன்) கார் ரேஸ், விமானி என வேறு பாதையில் பயணித்தார். அவரிடம் தானமாக கொஞ்சம் நிலத்தைப் பெற்று ஆசிரமம் அமைத்தவர்தான் ஜாவா ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ். (ஆரம்ப காலத்தில் ஜாவா ஜெகதீஷ் காட்டூர், பாப்பநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு பொட்டலம் சப்ளை செய்து வந்தார் என்பது செவிவழிச் செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை). அவரை ஆஸ்மான் ஸ்வாமிகள் என்று ஏகத்துக்கும் காலாய்த்திருக்கிறார் நாவலாசிரியர்! ஆஸ்மான் ஸ்வாமிகளின் எழுச்சியை நக்கலாக பதிவு செய்திருக்கும் ஒரே நாவல் முகிலினி மட்டும்தான்.

அறுபதுகளில் மோசமாக இருந்த அந்நிய செலாவணி தட்டுபாடு காரணமாக அரசு இத்தாலியில் இருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறது. அதற்கு இணையாக ஊட்டி, கூடலூரில் மரம் வெட்டிக்கொள்ளவும், அரியலூர் சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்பு போன்றவற்றை மலிவு விலையில் அரசாங்கம் தந்தது.

அன்றைய லைசன்ஸ் ராஜ் காலத்தில் 10000 பேருக்கு வேலை தருவது சாதாரண விசயமல்ல. இன்று உலகமயமாக்கம் இல்லாமல் ஐ.டி. தொழில் வேலைகள், வெளிநாட்டு இயந்திரங்கள்+தொழில்நுட்பங்கள் இல்லாமல் வெறும் ஆலை சார்ந்த உற்பத்தித் தொழில்களும், விவசாயமும் மட்டும் இருந்தால் வேலைக்காக தெருத்தெருவாக அலைவதோடு, பெரும் உள்நாட்டுக் கலவரங்கள் பஞ்சம், பட்டினி சாவுகள் என்று ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இந்தியாவும் இருந்திருக்கும்.

விஸ்கோஸ் ஒரு ரூபாய் செலவு செய்து பத்து ரூபாய் இலாபம் பார்க்கும் நிறுவனமாகி வெற்றிகரமாக நடந்துவருகையில் இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனியில் நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

அண்மையில் டாடா நிறுவன சேர்மனாக இருந்து தூக்கியடிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் அப்பாவுக்கு விஸ்கோஸ் ஆலை மீது ஒரு கண். அவரது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் டாடா டிரஸ்ட்டில் 18% பங்கு வைத்திருக்கும் மிக மிகப்பெரிய கோடிசுவர கம்பெனி. சவுத் இந்தியா விஸ்கோசின் இலாபம் பிர்லா குழுமம், ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் என பல நிறுவனங்களில் கண்களை உறுத்தியது. விஸ்கோசின் வெற்றிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட உரத் தொழிற்சாலையும் அப்போதைய பெரிய ஆலைகளுள் ஒன்று. அதன் பின்னரே ஸ்பிக் வளர்ச்சி கண்டது.

நிதி நெருக்கடியில் சிக்கிய ஸ்நியா விஸ்கோசாவின் துணை நிறுவனமான சப்பினாவை பி. எஸ். மிஸ்த்ரியின் Look Health Properties Thirty Ltd என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் கையகப்படுத்தியதில் விஸ்கோசின் 24.5% பங்குகள் ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் வசம் சென்றது. வெளி மார்க்கெட்டில் இருக்கும் 49% பங்குகளில் கணிசமான அளவை வாங்க மிஸ்த்ரி முற்படுகிறார். வெங்கடசாமி நாயுடுவும் அதற்கு போட்டியில் இறங்குகிறார்.

அந்நேரத்தில் வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கம்பெனியை முறைகேடாக வாங்கி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக விஸ்கோஸ் சார்பில் வெங்கடசாமி நாயுடு வழக்கு தொடர்கிறார். நளினி சிதம்பரம் உட்பட பல பெரிய வழக்குரைஞர்கள் விஸ்கோசுக்காக வழக்காடினர். விஸ்கோஸ் கம்பெனி பங்குகள் எதையும் தாங்கள் வாங்கவில்லை எனவும் லக்ஸம்பர்க்கில் பதிவு செய்யப்பட்ட சப்பினா கம்பெனியை மட்டுமே வாங்கியதாகவும் அதனால் சப்பினா வசம் இருந்த விஸ்கோஸ் பங்குகளின்மீது எந்த வியாபாரமும் நடக்கவில்லை எனவே அந்நிய செலாவணி மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் தெரிவித்தது; வழக்கில் விஸ்கோஸ் தோற்றது.

இன்று வோடபோன் இதே மாடலில்தான் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றியது. இந்தியாவில் உள்ள பங்குகளை வாங்கவில்லை, மொரீஷியஸில் உள்ள கம்பெனியை மட்டுமே வாங்கினோம், அதனால் இந்தியாவில் உள்ள கம்பெனி பங்குகள் தானாக கிடைத்துவிட்டது என்றது. இந்த டகால்ட்டி வேலைக்கெல்லாம் அப்பன் என்பது போன்றது ஸ்நியா>சப்பினா>விஸ்கோஸ்>ஷப்பூர்ஜி பலோன்ஜி குழும வழக்கு.

பின்னர் வெங்கடசாமி நாயுடு இறந்துவிட அவரது இளையமகன் விஸ்கோஸ் சேர்மன் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என்று அடம்பிடித்து ஒரு கட்டத்தில் அவரது பங்குகளை மிஸ்த்ரி குழுமத்திடமே விற்றுவிட்டு வெளியேறினார். ஒரு கட்டத்தில் மிஸ்த்ரி நேராக கோவைக்கு வந்து மிகவும் மரியாதையாக அவர்களது வீட்டுக்கே சென்று மிகப்பெரிய தொகைக்கு கம்பெனியைக் கேட்க வெங்கடசாமி நாயுடுவின் குடும்பம் அதை விற்றுவிட்டு மொத்தமாக ரேயான் தொழிலிருந்து வெளியேறியது.

தொழிலை வெறும் முதலீடாக பார்ப்பவர்கள் போட்ட பணத்துக்கு ரிட்டர்ன் மட்டுமே பார்ப்பார்கள். அந்த இடத்தில்தான் முதலாளித்துவத்தின் கோர முகம் வெளிப்படுகிறது. தங்க முட்டையிடும் வாத்தைக் குச்சியை விட்டு குத்தும் வேலைகளைச் செய்து அதை கொல்வார்கள். சொத்தை வச்சு தின்னு பாக்க மாண்டாத திருவாத்தான் என்று கோவைப் பக்கம் சொல்வார்கள். கம்பெனி ஆரம்பித்து, கஷ்டப்பட்டு, அதனுடன் சேர்ந்து வளர்ந்த யாரும் தன் கண் முன் கம்பெனி அழிவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இடையில் வந்து சேர்ந்துகொண்டவர்களுக்கு அப்படி உணர்ச்சிப்பூர்வமான ௮ணுகுமுறைகள் இருப்பதில்லை; கிடைத்தவரைக்கும் இலாபம் என்று சுரண்டித் தின்பார்கள்.

கார்ப்பரேட் சதி, முதலாளித்துவ பம்மாத்து வேலைகள் என கற்பிக்க வேண்டியவற்றை விடுத்து தேவையில்லாதவற்றை இன்றைய இளைஞர்களுக்கு கற்பித்து வருகிறோம். அதனால்தான் ஆன்சைட்டில் சம்பாரிக்கும் வேலைகள் எப்படி இந்தியாவிக்குள் வந்தது என்ற தெளிவே இல்லாத ஒரு மொன்னை தலைமுறை உண்டாகியிருக்கிறது.

Yuval Noah Harari எழுதிய Money என்ற புத்தகம் joint stock company என்பது எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, அவற்றின் பின்னணி, கடந்து வந்த பாதை என பலவற்றையும் அற்புதமாக சொல்கிறது. Wall Street என்ற பெயற்காரணம் அதன் வரலாற்றைத் தெரிவிக்கிறது. தொழில் நடத்துவதற்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர Money-யை வாசிக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 60 டன் ரேயான் உற்பத்தி என்ற அளவில் வெங்கடசாமி நாயுடு விட்டுச்சென்ற கம்பெனியை 250 டன் அளவுக்கு உயர்த்தியது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம். நான்கடி விட்டமுள்ள குழாயில் கழிவுநீர் அப்படியே அணைக்குள் வெளியேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அதிகமாகி மக்கள் போராட்டத்தில் இறங்கி கடைசியில் ஆலை இழுத்து மூடப்பட்டது.

நாவலில் வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு பாத்திரங்களான ராஜு, ஆரான் இருவரும் கோயமுத்தூரின் வரலாற்றுக்கு சாட்சியாக நாவல் முழுவதும் வருகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து படையில் இத்தாலி நாட்டுக்குச் சென்று வந்ததில் சில இத்தாலிய மொழி வார்த்தைகள் தெரியும் என்ற அடிப்படையில் விஸ்கோசில் பேச்சிலராக வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறுகிறார் ராஜு. அவரது மகளுக்கு பவானிசாகர் அணையில் சூப்பிரண்டன்டாக வேலை செய்யும் இளைஞருடன் திருமணமாகிறது. ராஜுவின் பேரன் கெளதம் வழக்குரைஞராகி மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் திருடிய நண்பன் ஒருவன் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் வெற்றிபெறுவது சிறப்பான கதையமைப்பு.

வெள்ளலூரைச் சேர்ந்த ஆரான் தொழிறசங்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு, பிளேக் நோய் என பலவற்றையும் பார்த்து ஊரைவிட்டு வெளியேறாமல் அங்கேயே இருக்கிறார். வசந்தா மில் மூடப்பட்ட பின் வாழ்க்கையை ஓட்ட கஷ்டப்படும் ஆரானின் வழ்க்கையைப் போல பல ஆயிரம் கதைகள் கோவையில் உண்டு. சின்னியம்பாளையம் கொலை வழக்குகள், ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச் சூடு என சமீபத்திய பிரிக்கால் ஊழியர் கொலை வழக்கு வரை கோவைக்கு மிக நீண்ட தொழிற்சங்க வரலாறு இருக்கிறது.
ஊதிய உயர்வு கேட்டதற்காக ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் ஏழு பேர் புரூக்பாண்ட் டீ கம்பெனி சாலையில் சுடப்பட்டு இறந்தனர். Work from home போட்டுவிட்டு இன்று அந்த சாலையில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உட்கார்ந்து தொழிற்சங்கங்கள், திராவிட கட்சிகள் என்ன கிழித்தன என்று வாட்சப்பில் வரலாறு ஃபார்வர்டு செய்யும் இளைய சமுதாயத்திற்கு கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது என்பது காலக்கொடுமை.

வழக்குரைஞர் கெளதம் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு திருநாவுக்கரசு என்ற நண்பருடன் இணைந்து புளியம்பட்டி அருகே இயற்கை விவசாயம் செய்வதும், அவருக்கும் திருநாவுக்கரசுக்கும் நடக்கும் உரையாடல்கள் அருமையான எழுத்து. ஒருகட்டத்தில் காந்தியவதியாக மாறி சட்டை அணிவதைக் கூட துறக்கும் திருநாவுக்கரசு நுகர்வைக் குறைத்துக் கொள்வது பற்றியும், மனிதர்களின் மனப்பாங்கை உணர்ந்து அடையும் முதிர்ச்சியையும் நாவலில் தெளிவாக உணர முடிகிறது.

இயற்கை விவசாயம் செய்து கத்தரிக்காய் விளைவித்த கெளதம் ஆசையாக கேர்ள்ஃபிரண்டுக்கு போன்போட்டு ஆர்கானிக் கத்தரிக்காய் கொண்டுவரவ என கேட்ட, ‘நீ அதை காரமடை அண்ணாச்சி கடையில் போட்டுவிட்டு காசை எடுத்துக்கொண்டு புரூக்ஃபீல்ட்ஸ்ல இருக்கற CCD-க்கு வந்துரு’ என்று சொல்வது epic!

திருநாவுக்கரசு பாத்திரம் சட்டையணியா சாமியப்பன் என்பவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம்மாழ்வாருக்கு விகடன் மூலம் கிடைத்த விளம்பரம் சாமியப்பனுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விகடனின் வியாபார நோக்கம் தெளிவானது. அப்படி எல்லாம் எல்லை நம்மாழ்வரைக் குறை சொல்வதே உனக்கு வேலையாகப் போய்விட்டது என்பவர்கள் ஸ்டெர்லைட் பிரச்சினையை எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி தினமலர் எப்படி வெளியிட்டது என்பதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளலாம். விஸ்கோஸ் பிரச்சினைக்கு நம்மாழ்வார் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டதைச் சொல்லும் அத்தியாயங்கள் நல்லவேளையாக அவரை வராதுவந்த மாமணி என்றெல்லாம் சித்தரிக்கவில்லை.

தொண்டு நிறுவனம் மூலம் சொல்லித்தரப்படும் வாழ்வியல் விவசாய வியாபாரத்தின் பின்னணி, மாடித்தோட்டம், பிராண்டட் சங்கிலித்தொடர் ஆர்கானிக் கடைகள், மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரை நீங்கள் சாப்பிடும் எல்லாம் விஷம் என பயமுறுத்தும் கும்பல் என எதையுமே நாவலாசிரியர் விட்டுவைக்கவில்லை என்பது சிறப்பு. பத்து ரூபாய் நிலவேம்பு பொடியை 120 ரூபாய்க்கு விற்கும் ஆர்கானிக் கடைகள் மீதான திருநாவுக்கரசின் கோபம் நியாயமான ஒன்று. அண்மையில் டெங்கு வந்தபோது நிலவேம்பு விற்ற டுபாக்கூர் மருத்துவ கும்பல் நீலவேம்புக்கு ஆதரவாக போலி ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளிவந்தவற்றக ஆதாரமாகக் காட்டி காசு பார்த்தன. நம்மாழ்வார் அதன் பிரச்சாரக் என்பது முக்கியமான ஒன்று.

சிங்காநல்லூர் குளக்கரை, காரமடை செல்லும் வழியில் ஓரிடத்தில் என ஆறேழு இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவில் உண்டு. ஒரு காலத்தில் கோயமுத்தூர் பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு சபிக்கப்பட்ட நகரம் என்று அழைக்கப்பட்டது. குடும்பம் குடும்பமாக பிளேக் நோயால் இறந்தவர்கள் பலர். அத்தோடு நிலவிய கடும் உணவுப் பஞ்சம், அரிசித் தட்டுப்பாடு என பலவற்றையும் நாவல் பதிவு செய்திருக்கிறது. பயந்து பயந்து அரிசியைப் பையில் எடுத்தச்சென்ற காலங்கள், கோரைக் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்ட பசியை அறிந்தவர்கள் இன்று பசுமை விகடன், நம்மாழ்வார் போன்றவர்களின் முட்டாள்தனமான வெடிமருந்தை உரமாக்கிய கதைகளை, பசுமைப் புரட்சி குறித்த எதிர்மறையான கதைகளுக்கு விலைபோக மாட்டார்கள்.

விஸ்கோஸ், ஸ்டெர்லைட் என சுற்றுச்சூழல் பிரச்சினையால் மூடப்பட்ட ஆலைகள் அனைத்தும் தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான். Productivity என்ற பெயரில் குருட்டுத்தனமான வெறியில் இலாபம், இலாபம் என தம்மைச் சுற்றியுள்ள சூழலை, சமூகத்தை மதிக்காமல் இயங்க இந்தியா அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு அல்ல.

மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் இயந்திரங்களைத் திருடி கோடீசுவரனானவர் பலர். அதில் வரும் கோவிந்து என்று திருடன் கொலைவழக்கில் இருந்து வெளியே வந்தபின் குதிரைமீது அமர்ந்து கத்தியை உயர்த்தியபடி இருக்கும் தீரன் ஒருவரது படத்தை வைத்துக்கொண்டு சாதிச் சங்கம் ஆரம்பிப்பது குறித்த அத்தியாயத்தில் நாவலாசிரியர் முருகவேள் மிளிர்கிறார்!

திண்டுக்கல்லின் தோல் ஷாப்புகளின் தொழிலாளர் போராட்டங்களை டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவல் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவு செய்திருக்கும். சாகித்ய அகாடமி விருது பெற்ற அது NCBH வெளியீடு என்பதால் தொழிற்சங்கம் என்பது அப்பழுக்கற்ற பத்தரைமாற்றுத் தங்கம் என்ற தொணி இருக்கும். முகிலினியில் விஸ்கோஸ் போராட்டத்துக்காக களமிறங்கும் வக்கீல் பழனிசாமி அவரது அலுவலகத்தில் வழக்குரைஞர் பழனிசாமியாக எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பதிவு செய்திருப்பதெல்லாம் நாவலாசிரியர் முருகவேளின் நேர்மையான, தைரியமான எழுத்து நடைக்கு சாட்சி.

நாவலில் வரும் இளம் வழக்குரைஞர் கெளதம் என்ற இளைஞரது பாத்திரம் நீங்கள்தானே என்று அவரிடம் நேரில் சந்தித்தபோது கேட்காமல் விட்டுவிட்டேன்!

பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம். 

தமிழகப் பாடநூல் வெளியீடுகள் வரலாற்றில் முதன்முறையாக பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.

இலக்கிய நூலாக இருந்தால் காத்திரமான விமர்சனம் என்று குறிப்பிடலாம். பாடநூல் என்பதால் ஆத்திரமான விமர்சனம் அல்லது சீராய்வு என்று வைத்துக்கொள்வோம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer): +1 மாணவர்களின் வேளாண்மைப் பாடநூலை சும்மா புரட்டிப்பார்க்க ஆரம்பித்ததில் பல பிழைகள் கண்ணில் பட, அதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டால் மாணாக்கர்களுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதியிருக்கிறேன். கல்லூரிப்படிப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக வேளாண் தொழிற்துறையில் பணிபுரிந்திருந்தாலும் Academia, teaching என்பதெல்லாம் எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று. அதனால் +1 வகுப்புக்குப் பாடத்திட்டத்தின் சுமை குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் Concept, Fact, அறிவியல் விதிமுறைகளில் பிழை இருக்கும்போது அது அனைவராலும் பிழையாகவே பார்க்கப்படும். இதைத் தொகுப்பதற்கு எனக்குப் பின்னணியில் எந்த இயக்கமும், நபர்களும் இல்லை. இந்தக் கட்டுரையில் பிழையென சுட்டிக்காட்டப்படும் எதுவும் சரியென நிறுவும்பட்சத்தில் அவை நீட் உட்பட இதர நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் சரியாக இருக்குமா என்பதைத் துறைசார் நூல்களிலும், இணையத்திலும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேளாண் அறிவியல் – கருத்தியல் (Theory)

பக்கம் 30: /சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உருவாகி ஓசோன் படலத்தை அரித்து அதன் அடர்த்தியைக் குறைக்கிறது/

CFC என்பது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இயற்கையாக உருவாகும் CFC-யால் ஓசோன் படலம் ஓட்டையாகிறது என்பது இன்றைய பிரச்சினை அல்ல.சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உண்டாகி ஓசோன் படலத்தை அரிக்கிறது என்பதெல்லாம் குழப்பமான வாசகம்.

பக்கம் 34: /மண்ணியலின் தந்தை ஃபிரடெரிக் ஆல்பர்ட் ஃபேலோ (1794-1877)/

Friedrich Albert Fallou அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரை நவீன மண்ணியலின் தந்தை என்று விக்கிபீடியா மட்டுமே சொல்கிறது. TNAU-வின் மண்ணியல் பாடங்கள் உட்பட இதர நூல்கள் உருசிய அறிஞர் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்பவரையே மண்ணியலின் தந்தை என்று குறிப்பிடுகின்றன.

பக்கம் 57: /கொழுப்புச்சத்தானது கொழுப்பில் கரையாதது மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது என இரு பிருவுகளைக் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E மற்றும் K வின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. இக்கொழுப்புச்சத்தால் உருவாகும் ஒமேகா 3 உடல் நலத்திற்கு ஏற்றது/

இந்த வாசகங்களில் இருந்து பெறப்படும் தகவல் என்ன? முதல் வரியும் கடைசி வரியும் என்ன பொருளைத் தருகிறது?

பக்கம் 109: /1995 ஆம் வருடத்தில் முளைத்த தாமரையின் விதையே இன்றுவரை நீண்ட உறக்கநிலை கொண்ட விதையாக ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் உறக்க நிலை 1300 வருடங்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்/

Seed Dormancy என்பதற்கும் Seed Viability என்பதற்கும் உள்ள தொடர்பையும் வேற்றுமையையும் கவனமாகப் பார்க்க வேண்டும். 1300 வருடங்கள் விதை உறக்க நிலையில் இருந்தது என்பதைவிட விதைக்கு Viability இருந்தது என்பதே சரியான interpretation. விதை உறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி தொடர்கிறது – 1000 வருடங்கள் தாண்டியும் – என்றால் அது விதை உறக்கத்தினால் மட்டும்தான் நிகழ்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. சைபீரியாவில் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய விதை ஒன்றையும், இஸ்ரேலில் 2000 வருடங்களுக்கு முந்தைய விதை ஒன்றையும் ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கண்டுபிடித்ததோடு முளைக்கவும் வைத்திருக்கிறார்கள். இது இந்த அத்தியாயத்தை எழுதிய ஆசிரியருக்கே வெளிச்சம்!

பக்கம் 116: TNAU தானியங்கி விதை மற்றும் நாற்று வழங்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது என்பது குறித்த தகவலைக் கட்டம் கட்டி +1 மாணாக்கர்களுக்கு போதிப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நூறு கோடி ரூபாய்க்கு நெருக்கமாக காய்கறி விதை விற்பனை நடக்கும் தமிழகத்தில் ஒரு கோடிக்குக் கூட விதைகளை விற்பனை செய்ய முடியாத தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் செய்யும் தேவையில்லாத PR stunt-களில் இதுவும் ஒன்று. இந்த இயந்திரத்தை என்னமோ இவர்களே கண்டுபிடித்திருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கிறது. கோடிக்கணக்காண ரூபாய்க்கு விதைகளை விற்பனை செய்யும் கம்பெனிகள் கூட செய்யாத வேலைகளை எப்படி வெட்கமே இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் செய்கிறார்களோ?!

பக்கம் 142: ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த அட்டவணையில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை மெக்னீசியத்திலும், மெக்னீசியத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை இரும்புச்சத்திலும் கொடுத்துள்ளனர். Interveinal chlorosis என்பது இரும்புச்சத்து பற்றாக்குறையின் முக்கிய அடையாளமாகும். போட்டித் தேர்வுகளிலும் இது தவறாமல் கேட்கப்படும். Indicator plants குறித்து ஓரிரு வரிகள் கூட கொடுக்கப்படவில்லை.

பக்கம் 168: விதைக்கும் முன் தெளித்தல் களைக்கொல்லியின் உதாரணமாக பாராகுவாட் டை குளோரைடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதிய, சரிபார்த்து ஒப்புதல் அளித்த ஆசிரியர் குழுவை எந்த கெட்ட வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். பாராகுவாட் என்பது முளைத்தபின் தெளிக்கும் களைக்கொல்லி. டிரைஃபுளூரலின் தேர்திறன் அற்ற களைக்கொல்லிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதுவும் தவறு. டிரைஃபுளூரலின் என்பது தேர்த்திறன் உடைய களைக்கொல்லி. மேலும் சந்தையில் தேடினாலும் கிடைக்காத களைக்கொல்லியைப் பாடத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

பக்கம் 169: கரும்புக்கு மெட்ரிபூசின் எனும் களைக்கொல்லி முளைப்பதற்கு முன் தெளிக்கும் களைக்கொல்லியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரிபியூசின் என்பது முளைத்தபின் தெளிக்கும் வகை. இந்த மாதிரியான அடைப்படைத் தவறுகளெல்லாம் மன்னிக்கவே முடியாதவை.

பக்கம் 183: குளோர்பைரிபாஸ் எல்லாம் சந்தையில் தடை செய்ய காத்திருக்கும் அதரபழசான இரசாயனம். இதையெல்லாம் உதாரணம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

பக்கம் 190: /1943 ஆம் ஆண்டு இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது நெல் குலை நோய் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது இந்திய வரலாற்றில் வங்காளப் பஞ்சம் என/

இது கட்டம் கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்.

1943-இல் வங்காளப் பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது Rice Brown spot or Fungal Blight எனப்படும் பழுப்புப் புள்ளி நோய் . இது Helminthosporium oryzae எனும் பூஞ்சாணத்தால் வருவது. பஞ்சத்துக்குப் பல்வேறு காரணங்கள் இந்த நோயைத் தவிர இருக்கின்றன; பல நூல்கள் அந்தப் பஞ்சம் குறித்து வந்திருக்கின்றன. நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வங்காளப் பஞ்சம் குறித்த இந்த கேள்வி தவறாமல் இடம்பெறும். இதுகூடத் தெரியாமல் அந்த ஆசிரியர் குழு என்ன செய்தது என்று ஆச்சரியமாகவும், ஆத்திரமாகவும் இருக்கிறது.

நெல் குலை நோய் என்பது Pyricularia grisea எனும் பூஞ்சாணத்தால் வரும் Paddy Blast disease.

பக்கம் 208: /சேமிப்பிற்கு பயன்படும் சாக்குப் பைகள் புதியதாக இருக்க வேண்டும். பழைய சாக்குப் பைகளை மாலத்தியான் 50 சதம் ஈ.சி. அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதம் எஸ்.சி. 0.1 சதம் கரைசலில் நனைத்து நன்கு உலர்த்திய பிறகு உபயோகிக்க வேண்டும்/

மாலத்தியான், டைக்குளோர்வாஸ் எல்லாம் விரைவில் தடை செய்யப்பட இருப்பவை. தானிய சேமிப்புக் கிடங்குகளில் 1980-களுக்குப் பிறகு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும்.

பக்கம் 235: பாஸ்ச்சுரைசேசன் குறித்த தகவலில் குறைந்த வெப்பம் கூடுதல் நேரம், அதிக வெப்பம் குறைந்த நேரம் என்பது எத்தனை டிகிரி வெப்பம், எவ்வளவு நிமிடங்கள் என்பதைக் குறிப்பிடாமல் மொட்டையாக இருக்கிறது.

வேளாண் அறிவியல் – செய்முறை (Practical)

பக்கம் 11: தானியப்பயிர்கள்(Cereals) எல்லாம் கிராமினே என்ற குடும்பத்தில் வருபவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தாவர வகைப்பாட்டியலில் கிராமினே என்பது போயேசியே (Poaceae) என்றே வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்தைகளே இருக்கும் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

பக்கம் 12: எண்ணெய் வித்துக்களில் எள், டில்லியேசியே குடும்பம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனால் இன்று எள், பெடாலியேசியே (Pedaliaceae) என்ற குடும்பத்தில்தான் வருகிறது. (டில்லியேசியே என்பதும் அச்சுப்பிழை. அதை டிலியேசியே என்றே குறிப்பிட வேண்டும்).

பக்கம் 20: சோற்றுக் கற்றாழைச் செடியின் குடும்பம் லில்லியேசியே என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று Aloe vera என்பது ஆஸ்ஃபோடேலேசியே (Asphodelaceae) என்ற குடும்பத்தில் வருகிறது.

பக்கம் 21: புதினா மற்றும் மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்) போன்றவை லேபியேட்டே குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அனால் இன்று லேபியேட்டே குடும்பம் என்பது லேமியேசியே (Lamiaceae) என்றே வழங்கப்படுகிறது.

இதுவும், அதுவும் ஒன்றுதான் என்று நாமே சொல்லிக்கொண்டாலும் தாவர வகைப்பாட்டியலில் இன்றைய பெயரிடுமுறை (Nomenclature) என்ன சொல்கிறதோ அதையே பயன்படுத்த வேண்டும். பழைய பெயர்களைப் பயன்படுத்துவது தவறில்லையென்றாலும் சரியென்றாகிவிடாது.

பக்கம் 44: நுண்ணியிரிகளினால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல் என்ற அத்தியாயத்தில் நோய்க்காரணியின் (Causal Organism) பெயர், வைரஸ் நோயாக இருப்பின் கடத்தியின் (Vector) பெயர், கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை இல்லாமல் மொட்டையான தகவல்களாக வெறும் படங்களாலும், வார்த்தைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

பக்கம் 50, 51: நன்மை செய்யும் உயிரினங்கள் என்ற அத்தியாயத்தில் இரை விழுங்கிகள் (Predators) என்ற அட்டவணையில் வழங்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் அறிவியற்பெயர் எழுதும் முறை முற்றிலும் தவறாக இருக்கிறது.

அறிவியற்பெயர் எனில் ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினத்தின் முதல் எழுத்து Capital letter-உம், ஏனைய எழுத்துகள் Small letters-உம் சாய்வெழுத்தாக (italic) எழுதியிருக்க வேண்டும். கையால் எழுதும்போது பேரினம், சிற்றினம் இரண்டையும் தனித்தனியாக அடிக்கோடிட வேண்டும். இதையெல்லாம் பத்தாம் வகுப்பில் லின்னேயஸ் வகைப்பாட்டியல் பயில ஆரம்பிக்கும்போதே சொல்லித்தரப்படும். புத்தக ஆசிரியர் குழுவின் ஞானம், Scientific name எப்படி எழுத வேண்டும் என்று வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லித்தர வேண்டிய நிலைமையில் இருக்கிறது எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கம் 51: ஐசோட்டிம்மா முட்டை ஒட்டுண்ணி நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருக்க்கிறது. ஐசோடிமியா ஜாவென்சிஸ் (Isotimia javensis) கரும்பு குருத்துப்புழுவுக்கு நல்ல கட்டுபாட்டைக் கொடுத்தாலும் நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பூச்சியியல் நிபுணர்களின் கருத்து. நிலைமை இவ்வாறிருக்க இதையெல்லாம் +1 மாணாக்கர்களுக்கு சொல்லித்தருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

பக்கம் 52: டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி புழு, கூட்டுப்புழு ஒட்டுண்ணியானது கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி கரும்பு உச்சிக் குருத்துப்பூச்சித் (Top Shoot Borer) தாக்குதலைக் கட்டுப்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. தண்டு துளைப்பான் என்பதும் இடைக்கணுப்புழு (internode borer) எனபதும் நடைமுறையில் ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. PhD மாணாக்கர்களுக்கு தரப்படும் அளவுக்கான விஷயங்களை +1 மாணாக்கர்களுக்குத் திணிக்கக்கூடாது.

பக்கம் 60: இயற்கைப் பயிர் பாதுகாப்பு முறைகள் பஞ்சகாவ்யா, அமிர்தக்கரைசல், தசகவ்யா என நிருபிக்கப்படாத முறைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக உயிரியல் கட்டுப்பாடு முறைகளை நிறையவே சேர்த்திருக்கலாம்.

பக்கம் 66: பயிர்ப் பாதுகாப்பு இரஸாயனங்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்து சொல்லும் அத்தியாயத்தில் இரசாயனங்களின் நச்சுத்தன்மை குறித்த முக்கோணங்கள், என்னென்ன வகையினங்கள் இருக்கின்றன என்பது போன்ற அடிப்படை ஆரம்பிக்காமல் நேரடியாக application-க்கு நுழைந்திருக்கிறார்கள்.

கருத்தியல் நூலில் வந்திருக்கும் புகைப்படங்கள் செய்முறைப் புத்தகத்திலும் பெரும்பாலும் இருக்கிறது. கிட்டத்தட்ட 40% புத்தகம் படங்களாலேயே – அதுவும் தேவையில்லாத படங்களால் – நிரப்பப்பட்டிருக்கிறது. வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கம் என்ற அத்தியாயம் சும்மானாச்சுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வி என்ற Concept-இன் நோக்கம் என்ன என்பதே புரிந்துகொள்ளப்படாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்காங்கே வாங்கி ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

பூச்சியியல் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவரைப் பாடநூல் வல்லுனராக நியமித்திருக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே பூச்சியியல் குறித்த அத்தியாயத்தில்தான் அதிக பிழைகளும், முரண்பாடுகளுடைய விஷயங்களும் இருக்கின்றன.

பாடநூல் மேலாய்வாளராக பயோடெக்னாலஜி துறையின் இணைப்பேராசிரியர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இந்த புத்தகங்களில் பயோடெக்னாலஜி என்ற அத்தியாயமே இல்லை. ஆய்வகங்களைவிட்டு வெளியே செல்லுவதற்கு அவசியமே இல்லாத பணியிலிருக்கும் ஒருவரிடம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், உரம், நீர், பூச்சிக்கொல்லி, விதை, உழவியல் முறைகள், அறுவடைத் தொழில்நுட்பங்கள், மண்வளம் என அனைத்தையும் தொகுக்கும் பணியை வழங்கினால் என்ன நடக்கும்?

மாப்பிள்ளை செத்தால் என்ன மணப்பெண் செத்தால் என்ன, நமக்கு வேண்டியது மாலைப்பணம். நானும் பாடநூல் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன் என அனைவரும் அவரவர் C.V-யில் எழுதிக்கொள்வார்கள்.

அதுதான் நடந்திருக்கிறது.