கரையான், திடீர் ஈசல் தொல்லைகள்

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா? அழைக்கவும் 1800 கஜமுஜ கஜமுஜ என்று ஆங்காங்கே நம்பர் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கரையானை வைத்து நம் முன்னோர்கள் நடத்திய அதிசயத்தை இப்போது பேஸ்புக், வாட்சப்பில் படித்து வியந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கரையான் புற்றைப்பற்றி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்காட் டர்னரும், மகாதேவனும் கடந்த 26 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்கிறார்கள். புற்றுகளை புரொப்பேன் கொண்டு நிரப்புவது, லேசர் மூலம் அளப்பது, பிளாஸ்டர் மூலம் மூடிப்பார்ப்பது, microscopic beads, fluorescent green water போன்றவற்றை உணவில் கொடுத்து புற்று பக்கத்திலேயே படுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து பல அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

கரையான் புற்று என்பது நுரையீரல் மாதிரி ஒரு சுவாசிக்கும் அமைப்பு. தரைக்கு மேலே பல அடி உயரம் இருந்தாலும் கரையான்கள் குடியிருப்பது என்னவோ மண்ணுக்குள் வெகு ஆழத்தில். வெயில் பட்டு புற்றின் மேல்பகுதியில் உள்ள காற்று சூடாகி விரிவடையும்போது அடியிலிருந்து குளிர்ந்த காற்று வேறு துளைகள் வாயிலாக உள்ளே நுழைந்து வெப்பநிலையை மட்டுப்படுத்துகிறது. குளிர் அதிகமாக இருக்கும்போதும் இது பின்னோக்கி நடக்கிறது. அதனால் புற்றின் ஆழத்தில் வெப்பநிலையும், ஆக்சிஜன் அளவும் திறம்பட நிர்வகிக்கப்பட்ட மிகவும் அருமையான சூழல் இளம் கரையான்களுக்கும், மொத்த காலனிக்கும் கிடைக்கிறது. காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், வெப்பம், காற்றிலுள்ள நச்சுப்புகைகளின் அளவை கருத்தில்கொண்டு எந்த பகுதியில் திறக்கவேண்டும், மூடவேண்டும் என்பதை வேலைக்கார கரையான்கள் செய்துவிடுகின்றன.

ஒரு இராணி கரையான் 15 ஆண்டுகள் உயிர்வாழும், புற்றை அழிக்கவேண்டுமெனில் வெகு ஆழத்துக்கு தோண்டி இராணியை கண்டுபிடித்து நசுக்குவதுதான் ஒரே வழி. அல்லது அவ்வளவு ஆழத்துக்கு செல்லுமளவுக்கு பல துளைகளையிட்டு விஷத்தை ஊற்றவேண்டும். இராணி குறைந்தது ஒரு இன்ச் நீளத்துக்கு ஒரு பெரிய புழுவாக தெரியும்.

பருவசூழ்நிலை சரியாக இருக்கும்போது புதிய இடத்தில் காலனி அமைக்க வேண்டுமல்லவா? அதற்காக பாதி அளவிற்கான கரையான்கள் புற்றிலிருந்து இறக்கை முளைத்து ஈசலாகி (Alates) பறக்க ஆரம்பிக்கும். அந்த Nuptial flight-இன் போது ஈசல்கள் இலக்கில்லாமல் குத்துமதிப்பாக பறந்து ஆண்பூச்சிகள், பெண்பூச்சிகளின் வாசனைமூலம் உணர்ந்து கலவியில் ஈடுபட்டபின் எங்காவது விழுந்து இராணியாகி புதிய காலனியை ஆரம்பிக்கிறது. Inbreeding ஆகக்கூடாது என்பதற்காகவே எல்லா காலனிகளிலிருந்தும் ஈசல்கள் ஒரே நேரத்தில் கிளம்பி வருகின்றன.

கரையான் புற்றின் ventilation system மாடலை Bio-mimicry அல்லது Bio-inspiration அடிப்படையில் பயன்படுத்தி ஜிம்பாப்வேயில் ஒரு பெரிய கட்டடத்தையே கட்டியிருக்கிறார்கள். கட்டடக்கலை நிபுணர்கள் பலர் அந்த மாதிரியான மாடலில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கீழே இருக்கும் சுட்டிகளைப் படித்து பார்க்கவும்.

richard wolff என்ற பேராசிரியர் மக்களின் வர்க்க வித்தியாசங்களை அழகாக வீடியோ மூலம் விளக்குகிறார். கரையான் புற்றுகளில் இருக்கும் Worker, Soldier, Male, Queen போன்றவற்றில் யார் யாரை ஆள்கிறார்கள் என்பதும், ஆனால் உண்மையில் யார் யாரால் ஆளப்படுகிறார்கள் என்பதும் வித்தியாசமான கோணத்தில் வருபவை. சமூகத்தின் Working lower class, Working middle, Upper middle and Elite class குறித்த ரிச்சர்ட் உல்ப் வீடியோவும் அருமையான ஒன்று. ஈசல்கள் வருவதைப்போல நமது சமூகத்திலும் திடீர் குபீர் போராளிகள் வருகிறார்கள். ஈசல்களுக்காவது காலனியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான், ஆனால் நமது போராளிகளுக்கோ ஏகப்பட்ட மறைமுக குறிக்கோள்கள். அதற்காகவே இருக்கும் standard template-களில் கருணாநிதி ஒழிக, இந்தி தெரியாததால் வீணாப்போனோம், இட ஒதுக்கீடால் குவாலிட்டி போச்சு சார், இப்பலாம் யார் சார் சாதி பாக்குறா, இலவசத்தால நாடு குட்டிச்சுவரா போச்சு, யூனியன் வெச்சுத்தான் ஸார் நாடு கெட்டுது, திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடு கேட்டுது போன்றவற்றில் ஏதாவது ஒரு டெம்ப்ளேட்டை பிடித்துக்கொண்டு சிலகாலம் ஈசல் மாதிரி ரேண்டமாக பறப்பார்கள். ஆண்ட பரம்பரை, பெண்ணியம் போன்ற peculiar template-களும் உண்டு.

அத்தகைய டெம்ப்ளேட் பிடிக்க முடியாதவர்கள் ‘என்னே நம் முன்னோர்களின் மதிநுட்பம்’ என்ற கான்செப்ட்டை எடுத்துக்கொள்வார்கள். கரையான் புற்றை தோண்டி கிணறு வெட்டினால் நிறைய தண்ணீர் வரும், மெட்டி அணிவதின் பிஸியாலஜிகல் சிறப்புகள், ஜட்டி அணியாமல் பட்டாபட்டி அணிவதின் இரகசியங்கள், திருமணத்தின்போது பட்டுசேலை அணியக் காரணம் ஓசோன் கதிர்வீச்சை தடுப்பது, அந்த காலத்தில் இயற்கை விவசாயம் செய்து அத்தனைபேரும் நூறாண்டு வாழ்ந்தார்கள், எல்லாருமே பத்து குழந்தைகள் பெற்றார்கள், நெருப்பு கண்டுபிடிக்கும் முன்னரே A2 பால் குடித்து வளர்ந்தவன் தமிழன் என்று முட்டாள்தனமான விசயங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும் பரப்புவார்கள். ஆயிரம் விஷயங்கள் அந்தகாலத்தில் இருந்திருந்தாலும் அதை அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் விட்டுவிட்டு எல்லாமே வேதத்தில் இருந்தது, புராணத்தில் இருந்தது அவை அழிந்துபோக ஆங்கிலேயனும், திராவிட அரசுகளும்தான் காரணம் என்ற சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தால் இன்னும் பின்னாடிதான் போவோம்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கோஷ்டி அகமதாபாத்தில் புல்லெட் ரயில் ஓடுகிறது என்று ஜப்பானின் ரயிலைக் காட்டுவது, சூரத்தின் எக்ஸ்பிரஸ் ஹைவே என்று சீனாவின் இடதுபுற ஸ்டியரிங் உள்ள பேருந்தை காட்டுவது, நெதர்லாந்தில் வனவிலங்குகள் நெடுஞ்சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட வன மேம்பாலங்களை கிர் காட்டில் இருக்கிறது என்று போட்டது, ஜெர்மனியில் சிறிய கப்பல்கள் செல்லும் ஆற்றைக்காட்டி முதன்முறையாக ஆற்று ஓரத்தில் காற்றாலையுடன் கூடிய நெடுஞ்சாலையில் வலப்புறம் செல்லும் வாகனங்களும் ஆற்றில் கப்பலுமாக ஜாம்நகருக்கு பக்கத்தில் போவதாக வளர்ச்சி வளர்ச்சி என்று காட்டிக்கொண்டிருந்த கோஷ்டி இது Off-season என்பதால் “நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்ற சீரிஸ் ஆரம்பித்து பரப்புகிறார்களோ என்று தோன்றுகிறது!

எது எப்படியோ, கரையான் புற்றுக்கடியில் கிணறு வெட்டினால் நிச்சயம் தண்ணீர் வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது என்பதற்காகவே இந்தப் பதிவு.

http://news.nationalgeographic.com/news/2014/07/140731-termites-mounds-insects-entomology-science/

The termite mound: A not-quite-true popular bioinspiration story

http://www.esf.edu/efb/turner/termitePages/termiteGasex.html

https://www.amentsoc.org/insects/glossary/terms/nuptial-flight

How Class Works:

சினிமா விமர்சனம் எனும் புள்ளப்பூச்சி டார்ச்சர்கள்

இதுக்கு பேர்தான் புள்ளப்பூச்சி. பேர்தான் புள்ளப்பூச்சி (mole cricket) என்றாலும் இதற்கு சுவாரசியமான பின்னனி இருக்கிறது. இது மண்ணுக்குள் பதுங்கியிருந்து இரவில் இரைதேடும் பழக்கமுடையது. மண்ணை தோண்டுவதற்கு ஏதுவாக இதன் முன்னங்கால்கள் மிக வலுவானவை மேலும் அதிவேகமாக தோண்டக்கூடியவை. இராணுவத்திலும், காவல்துறையிலும் அந்த காலத்தில் குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைப்பதற்காக செய்யப்படும் சித்ரவதைகளில் இந்த புள்ளப்பூச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது. இரண்டு மூன்று பூச்சிகளைப் பிடித்து குற்றவாளியின் தொப்புள்மீது விட்டு டம்ளர் அல்லது கொட்டாங்குச்சியை வைத்து மூடி பிடித்துக்கொள்வார்கள். இந்த பூச்சி குழிபறிக்க ஆரம்பித்தால் நேர்கோட்டில் வெறித்தனமான வேகத்தில் தோண்டி மண்ணை ஓரத்தில் வீசிக்கொண்டே உள்ளே நுழையும். அதே பாணியில் தொப்புளை மூன்று, நான்கு பூச்சிகள் இரத்தம் வரவர தோண்டினால் எந்த அசாதாரண மனிதனும் கதறிவிடுவான்.

இரவுநேரத்தில் கிரிக், கிரிக், கிரிக் என்ற ஓசையை எழுப்புவது இந்த பூச்சிதான். பழைய படங்களில் இரவில் வில்லன் வரும்போதும், சிலநேரங்களில் ரொமான்ஸ் பாட்டின்போதும் பின்னணி ஓசையாக இந்த சத்தத்தைக் கேட்டிருக்கக்கூடும். இந்த சத்தங்களின் ஆராய்ச்சியும் சுவாரசியமானது. http://www.brisbaneinsects.com/brisbane_crickets/MoleCricket.htm

இது மட்டுமல்லாது பல பூச்சிகளின் பங்கு Forensic entomology-யில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பிணத்தின் மீது இருக்கும் பூச்சிகள், அதன் வளர்ச்சி, பருவசூழ்நிலை எந்தெந்த வகையான பூச்சிகள் இருக்கின்றன என்பதை வைத்து இறந்து எத்தனை நாள் ஆகியிருக்கலாம் என்பதை spot postmortem செய்கையில் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ஒருவேளை பூச்சிகளே இல்லாமல் பிணம் அழுகியிருக்கிறது என்றால் விஷம் மூலமாக மரணம் நேர்ந்திருக்கிறது என்ற கோணத்தில் வழக்கு நகரும்.
https://en.m.wikipedia.org/wiki/Forensic_entomology
இராஜேஷ்குமார் நாவல்கள் படித்து வளர்ந்த சமூகம் இதை நன்றாக அறியும்.

ஓரிடத்தில் கழுகுகள், பறவைகள் வட்டமிடுவது, குறுக்கே பறக்கும் பூச்சிகளின் வகைகளை வைத்து தூரத்தில் பிணம் கிடக்கிறது என்பதை சொல்லிவிடலாம். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் அமெரிக்கா சென்று ஓரிடத்தில் இருக்கும் புழுக்களைப் பார்த்து அங்கே தோண்டச்சொல்லி பிணத்தை எடுப்பது forensic entomology-யில் தமிழ்ப்படங்களில் வந்த கிளாசிக். பல மெடிக்கோ, சைக்கோ, லீகல், என்டமாலஜிக்கல் குறியீடுகள் நிறைந்த அந்ந படத்தைப் பற்றி இதற்குமேலும் பேசினால் பலரும் இதெல்லாம் அந்தக்கால கருடபுராணத்திலேயே கிருமிபோஜனம், மிருகினஜம்போ என்றெல்லாம் இருக்கிறது, வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே forensic entomology பாரதத்தில் இருந்தது, ஓரிடத்திற்குள் நுழையும்போது அங்கிருக்கும் உயிரினங்களை scouting செய்து செத்த விலங்கு எவ்வளவு தூரத்தில் உள்ளது, செத்து எத்தனை நாளானது என்பதெல்லாம் கிராமப்புறத்தில் ஆடுமேய்த்த அனுபவமுள்ளவர்களுக்கே தெரியும், அதைத்தான் ‘ராகவன் இன்ஸ்ட்டிங்ட்’ என்று குறியீடு வழங்கினர். மேலும் திராவிட அரசுகள்தான் வேண்டுமென்றே நமது பாரம்பரியத்தை அழித்து ‘பேசிக் இன்ஸ்ட்டிங்ட்’ போன்ற படம் மூலம் எரோட்டிக் குறியீடுகளை நிறுவினர் என்று சொல்லக்கூடும்.

இத்தகைய காத்திரமான சமகால விமர்சனங்கள் நமது தொன்ம விகுதிகளைப் பகடி செய்வதால் சமகாலப் படிமங்களை காட்சிப்பொருளாக்காமால் விட்டு, முதிர்ச்சியடைந்த சமூக சிந்தனைக்களத்தை எதிர்பார்ப்பது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது என்பதோடு அது நானாகவே புள்ளப்பூச்சியை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டதாகிவிடும்.

அறுபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக காத்திரமான விமர்சனப்பார்வை என்றபெயரில் சகமனிதனை சாகடிக்கும் இந்த சமகாலக் கொடூரம் இந்த லிங்கில் பத்தாவதாக சேர்கிறது.
http://mentalfloss.com/article/23038/9-insane-torture-techniques

#இறைவி அலப்பறைகள்