இந்தியப் பஞ்சாலைத் தொழில்களைச் சூழும் இருண்டகாலம்

கட்டுரையின் தலைப்பு:

கார்ப்பரேட் கம்பெனிகளை அழித்தொழித்து இந்திய விவசாயத்தைக் காப்பாற்றி உழவர்களின் வருமானத்தை 2022-இல் இருமடங்காக்க இருக்கும் மோடி அரசாங்கம்.

அல்லது

இந்தியப் பஞ்சாலைத் தொழில்களைச் சூழும் இருண்டகாலம் (உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக்கொள்ளலாம்).

கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரங்கள்: மோடி சர்க்கார், மான்சாண்டோ, நுஜிவீடு சீட்ஸ், பிளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மென்ட்ஸ், Competition Commission of India (CCI) மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள்.

ஏர்செல் என்ற ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் இரண்டொரு நாட்களாக இயங்கவில்லை என்றதும் மக்கள் துடித்துப் போய்விட்டனர். இத்தனைக்கும் நான்கைந்து போட்டி நிறுவனங்கள் இன்னமும் இருக்கின்றன; அலைபேசித் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் வெறும் பதினைந்து வருட பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது. இதைப்போலவே வெறும் பதினைந்து வருட வரலாற்றை மட்டுமே கொண்ட B.t. தொழில்நுட்பம் கொண்ட பருத்தியானது மூடுவிழா காண்கிறது. ஆனால் இஃது ஒரு வெற்றியாக ஒருசாராரால் கொண்டாடப்பட்டு, பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.

பி. டி. பருத்தியின் பயன்பாடு செல்போன் தொழில்நுட்பம் போல ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒருபோதும் இதைக் குறை சொல்வதில்லை என்பதே இதன் சாட்சி. மற்ற தொழில்களில் உள்ள கருவிகளைப் போல Outdate, Update என்பது இதிலும் உண்டு. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் சாகின்றன என்பதைப் போல ஒருசில சர்ச்சைகள் பி. டி. பருத்தியைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தனியாக அலசலாம்.

பி. டி. பருத்திக்கு இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்றதால் கடுமையாகப் பரவுவதோடு, தாக்குதல் அதிகரித்து மகசூல் வெகுவாக குறைந்துவருகிறது. வட இந்தியாவைக் காட்டிலும் தமிழகத்தில் தாக்கம் இந்த ஆண்டு குறைவு என்றாலும் அரசு வேளாண்மைத்துறை மிகவும் குறைவான எண்களையே காட்டி வருவதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சலை ‘சாமார்த்தியமாக’ அரசு கையாண்டதை இதனுடன் தாராளமாக ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

இந்திய பஞ்சாலைத் தொழில்துறைகளுக்கு முன்னர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள இந்தப் பிரச்சினையின் முழு வடிவத்தைப் பார்ப்போம். இந்தியாவின் மிகப்பெரிய பருத்தி விதை நிறுவனம் ஐதராபாத்தைச் சேர்ந்த Nuziveedu Seeds. மான்சாண்டோவிடம் பி.டி. தொழில்நுட்பத்தை இராயல்ட்டி கட்டுவதாக ஒப்பந்தம் போட்டு வாங்கித் தனது இரகங்களில் புகுத்தி விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது. (பி.டி. தொழில்நுட்பம் என்பது சிம் கார்டு மாதிரி. பருத்தி இரகங்கள் என்பது ஹேண்ட்செட் மாதிரி. பல நிறுவனங்கள் தங்களிடம் இருந்த இரகங்களில் பி.டி ஜீனைப் புகுத்தி பிராந்திய அளவில் மாபெரும் வெற்றிகண்டன). இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலைகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் நுஜிவீடும் ஒன்று. பொள்ளாச்சியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பல காற்றாலைகளை நுஜிவீடு சீட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் காணலாம்.

2011-இல் நுஜிவீடு நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான Blackstone investments நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. 2015-16-வாக்கில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் இலாபத்துடன் வெளியேற விரும்புகிறது. இதனால் வேறொரு முதலீட்டாளரை உள்ளே கொண்டுவரவேண்டும்; சொந்தமாக எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் – இராயல்ட்டி மட்டும் கட்டிக்கொண்டு – கிட்டத்தட்ட வெறும் ஹார்டுவேர் விற்கும் கம்பெனி என்ற நிலையில் இருப்பதால் புதிய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். பங்குச்சந்தையில் பட்டியலிட்டால் தங்களின் பங்குகளைக் கழட்டி விட்டுவிடலாம் என்று கருதிய பிளாக்ஸ்டோன், IPO வெளியிடும்படி நிர்பந்திக்கிறது. அந்நேரத்தில் மான்சான்டோவுக்கு இராயல்ட்டி கட்டும் அற்பத் தொகையைப் பெரிதுபடுத்தி அதைத் தவிர்த்தால் பிளாக்ஸ்டோனுக்கு லாபம் அதிகமாகும் என்று நிரூபிக்க நுஜிவீடு நிறுவனம் ஆயத்தமாகிறது.

மரபணுமாற்றத் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு தொழில்நுட்ப விவகாரங்களை இந்தியாவில் அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே தங்களது சாம்ராஜ்யம் இராமராஜ்யமாகும் என்று நம்பி செயல்பட்டுவரும் RSS அமைப்பின் பல கிளை அமைப்புகளின் உதவி கோரப்படுகிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரதிநிதியான மத்திய அமைச்சராக இருக்கும் இராதாமோகன்சிங்கிடம் நுஜிவீடு நிறுவனத்தின் தலைமை இதை வேண்டுகோளாக வைக்கிறது. கறுப்பணத்தை மீட்டுவிடுவோம் என்று சொல்லி இருக்கும் நோட்டுகளையும் பிடுங்கிக்கொண்டு ஓடவிட்டாலும், எப்படி ஆதரவு தெரிவிக்க ஒரு கூட்டம் இருக்கிறதோ அதேபோல் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்குவோம் என்று சொல்லி இருப்பதையும் பிடுங்கிக்கொண்டு துரத்தினால் மட்டுமே இராமராஜ்யம் சாத்தியம் என்பதைப் படக்கென்று பிடித்துக்கொண்ட அமைச்சர் இந்த இராயல்ட்டி விவகாரத்தில் Competition Commission of India(CCI)-வை களத்தில் இறக்கி விடுகிறார்.

காப்புரிமை பெற்ற ஒரு பூச்சிக்கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை அத்தனை இடங்களிலும் கையெழுத்துப் போட்டு ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் வாங்கி பயன்படுத்துகிறது. இதில் இராயல்ட்டி தொகை அதிகமாக இருக்கிறது, அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லியே CCI களமிறங்கியது. இந்நிலையில் என்னது காந்தி செத்துட்டாரா, விதைகளுக்குக் காப்புரிமையா என்று பல அமைப்புகள் இரகளையில் ஈடுபட்டன. இந்திய விதை நிறுவனங்களின் அசோசியேசன் நுஜிவீடு தலைமையில் இரண்டாக உடைகிறது. பல நிறுவனங்கள் இராயல்ட்டி தரமாட்டோம் என்று சந்தடிசாக்கில் கிடைத்த இலாபத்தை விழுங்கிவிட்டன. இந்நிலையில் பி. டி. தொழில்நுட்பம் பெயிலாகிவிட்டது என்று ஆங்காங்கே உழவர்கள் வழக்குத் தொடர ஆரம்பித்த நிலையில் பி. டி. technology provider ஆகிய மான்சான்டோவே அதற்கு பொறுப்பு என்றும் தாங்கள் வெறும் ஹார்டுவேர் சப்ளையர்கள் என்பதுமாதிரியான பதிலை நுஜிவீடு உட்பட பல நிறுவனங்கள் சொல்ல ஆரம்பித்தன. அதாவது இராயல்ட்டியும் தரமாட்டார்களாம், அந்த தொழில்நுட்பத்தில் ஏதாவது கோளாறு என்றாலும் அதற்கும் பொறுப்பாக மாட்டார்களாம்; மான்சான்டோவைக் கேளுங்கள் என்பார்களாம். அதாகப்பட்டது விண்டோஸ் திருட்டு வெர்ஷன் போட்டுக்கொள்ளலாம், ஆனால் வைரஸ் வந்தால் மைக்ரோசாஃப்ட்காரன்தான் பதில் சொல்லவேண்டும்.

ஜியோ சகட்டுமேனிக்கு விலையைக் குறைத்து மற்ற நிறுவனங்களை அலறவிட்டதையெல்லாம் ‘free tradeனா அப்படித்தாம்பா இருக்கும், வாடிக்கையாளர்களுக்குப் பிரச்சினைன்னாத்தான் நாங்க வரமுடியும், அதுவரைக்கும் அனுசரிச்சு போங்கப்பா’ என்ற CCI, இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான இராயல்ட்டி விவகாரத்தில் சீனிலேயே இல்லாத வாடிக்கையாளர்களைக் காரணம் காட்டி ஒரு தொழில் துறையையே ஆட்டம் காண வைத்து இராமராஜ்யத்தை விரிவாக்க உதவியது என்றால் மிகையாகாது.

இயற்கை விவசாய ஆர்வலர்களை சாதி/மத வெறியர்கள் என்றால் சிலர் வருத்தப்படலாம். ஆர்கானிக் விவசாயிகள் வேறு ஆர்கேனிக் விவசாய ஆர்வலர்கள் வேறு என்பதை இந்த இடத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஆர்கேனிக் விவசாய ஆர்வலர்கள் முட்டாள்கள் போலத் தோன்றினாலும் காரியப் பைத்தியக்காரர்கள் வகையினர். ஒரு ஏக்கர் நடவுசெய்யத் தேவைப்படும் 450 கிராம் பருத்தி விதை 950 ரூபாய். இது மிக அதிகமான விலை, பகல் கொள்ளை, உழவர்களைச் சுரண்டுகிறார்கள் என்பதே இவர்களது வாதம். ஆனால் கள நிலவரம் முற்றிலும் வேறு; சான்றாக, சில பயிர்கள் ஓர் ஏக்கர் நடவு செய்யத் தேவைப்படும் விதை அளவும், அதன் விலையையும் பார்ப்போம்.

மக்காச்சோளம் – 7 கிலோ – 2200 ரூபாய்
சூரியகாந்தி – 2 கிலோ – 1300 ரூபாய்
தக்காளி – 40 கிராம் – 1600 ரூபாய்
தர்பூசணி – 350 கிராம் – 2500 ரூபாய்

அமெரக்க வர்த்தக சபை நமது பிரதமர் அலுவலகம் வரை முறையிட்டுப் பாரத்துவிட்டது. குஜராத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும், தொழில்நுட்பங்களையும், புல்லட் இரயிலையும் வரவேற்கும் நீங்களா இப்படிச் செய்வது என்று அரற்றிய அமெரிக்க பிரதிநிதிகளும், மான்சான்டோவும் நீங்களாகவே ஒருநாள் வந்து நிற்கத்தான் போகிறீர்கள், அப்போது நாங்கள் சொல்வதுதான் விலையாக இருக்கும் என்று சூசகமாகத் தெரவித்துவிட்டு மூன்றாம் தலைமுறை பி. டி. தொழில்நுட்பத்தை வணிகப்படுத்துவதற்காக போட்டிருந்த விண்ணப்பத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு இந்தியாவில் பருத்தி வியாபாரத்தின் துறையை விற்றுவிட்டு வெளியேறிவிட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக காசு பார்க்க ஆரம்பித்த ஜின்னிங் ஆலைகள் தரமான பஞ்சு வரத்து இல்லாததால் அலற ஆரம்பித்துவிட்டன. பஞ்சாலைகளுக்கான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் விற்பனை அதளபாதாளத்தை நோக்கி இறங்கிவருகிறது. அதைச் சார்ந்த தொழில்கள் ஆட்டம் காணும் என பல தொழில்துறை சம்மேளனங்கள் அரசை எச்சரித்துவிட்டன. பதஞ்சலி நிறுவனம் சுதேசி பி. டி. தொழில்துட்பத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அரசாங்க வேளாண் ஆராய்ச்சி அமைப்புகள் வேதங்களில் GMO என்ற கோணத்தில்தான் இன்னும் இயங்கி வருகின்றன.

மிகப்பெரிய ஸ்பின்னிங் ஆலைகளை வைத்திருக்கும் நுஜிவீடு, தரமான பஞ்சு வரத்து இல்லாமல் எப்படி இலாபமடையும் என்ற கேள்வி எழலாம். உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும்போது பஞ்சு இறக்குமதி திறந்துவிடப்பட்டு மும்பை, அகமதாபாத்தின் சந்து பொந்துகளில் பான்மசாலாவைக் குதப்பிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சில பெயர் தெரியாத சேட்ஜீக்கள் ஹாங்காங்கில் குடோன் வைத்திருப்பதாகக் கணக்கு காட்டி கப்பலிலிருந்து இறக்காமலேயே சீனாவிலோ, வேறு நாடுகளிலோ இருந்து தருவித்து இந்தியாவிலுள்ள பெரிய ஜின்னிங் ஆலைகளுக்கு மட்டும் சப்ளை செய்வார்கள். அந்த ஆலைகள் தேர்ந்தெடுத்த பெரிய ஆலைகளுக்கு மட்டுமே சப்ளை செய்யும். சின்னச்சின்ன ஜின்னிங், ஸ்பின்னிங் ஆலைகளுக்கு அந்த விலை கட்டுபடியாகாது என்பதும் அவை மெல்ல மெல்லச் சாகும் என்பதும் அவற்றிற்கு வங்கிகள் வழங்கிய கடன்களும் சாகும் என்பதோடு வழக்கம்போல பொதுமக்களின் வைப்புநிதிகளுக்கு வட்டி குறைக்கப்பட்டு பணப்புழக்கம் சரிக்கட்டப்படும் என்பதும் யாவரும் அறிந்ததே. ஸ்வராஜ்யா போன்ற இணையதளங்கள் இதை survival of the fittest எனக் கொண்டாடும். ‘Free tradeனா அப்படித்தாம்பா இருக்கும், கஸ்டமர் பாதிக்கப்படறாங்கன்னத்தான் நாங்க வருவோம்’ என்று சொல்லிவிட்டு CCI வழக்கம்போல மிக்சர் தின்னும் என்பதும் தெரிந்ததே.

பசி, பஞ்சம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், நிலையின்மை வாட்டும்போது மட்டுமே மனிதன் இறைவனை நினைத்து ஏங்குவதும், கடவுள் அவதரிப்பார் என்று நம்பி நாட்களைக் கடத்துவதும் அதிகமாக இருக்கும். நடுத்தர வர்க்கம் அதிகமாக அதிகமாக மக்களின் நுகர்வு அதிகமாவதோடு, தேவைகளும் விழிப்புணர்வும், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகும். தமிழகத்தில், கேரளாவில் அத்தகைய சமூக நிலை ஏற்பட்டுள்ளதே இதற்கு உதாரணமாகும். சங்கப்பரிவாரங்கள் தங்களது நீண்டகால survivalலுக்காக மிக அதிக மக்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளில் அரசாங்க நெருக்கடிகள் மூலம் நசுக்கி 25 வருடம் பின்னே இழுத்துவிட்டுள்ளனர்.
இதன் தொடர்விளைவுகளால் பல தொழில்துறைகள் ஆட்டம்காணும், நடுத்தர வருவாய் வர்க்கம் மேலும் நசுங்கும் என்ற புரிதலே இல்லாமல் நிச்சயமாக அதிசயம் நடக்கும் 2022-இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று சிலர் சொல்லுவார்களேயானால் அவர்கள் அசாத்தியமான தேசபக்தியுள்ள தேசாபிமானிகள் என்பதில் ஐயம் வேண்டாம். மக்கள் பஞ்சப்பராரிகளாக இருக்கும்வரை கடவுளர்கள் பெயரைச்சொல்லி ஆள்பவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் தோன்றுவதில்லை என்பதே வரலாறு நமக்குப் போதிக்கும் பாடம்.

பி. டி. தொழில்நுட்பம் இல்லாவிட்டால் பருத்தி விவசாயிகள் அழிந்துவிடமாட்டார்கள்; மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இப்படி ஒரு கட்டுரையா, என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று தோன்றலாம். பி.டி தொழில்நுட்பத்தால் பல இலட்சம் லிட்டர் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. ஒரு வெள்ளாமை எடுக்க 30-40 முறை பூச்சிக்கொல்லி தெளிப்பு என்பது 5-8 முறை (அதுவும் வலுகுறைந்த சாதாரண இரசாயனங்கள்) என்ற அளவுக்கு கடந்த வருடம் வரை இருந்தது. இன்று நடவு செய்த நாளிலிருந்து வாரம் ஒரு தெளிப்பு என பட்டியல் தயாரிக்கப்பட்டு 1990-களில் பின்பற்றப்பட்ட முறையே தூசிதட்டி இறக்கிவிடப்பட்டுள்ளது. வாழ்வா சாவா பிரச்சினை என்று வரும்போது IPM என்பதெல்லாம் காகிதத்தில் மட்டுமே இருக்கும். சிறு கூட்டத்தினரது முட்டாள்தனமான சிந்தாந்த அளவிலான கார்ப்பரேட் எதிர்ப்பால் இலட்சக்கணக்கான லிட்டர் பூச்சிக்கொல்லிகள் நமது மண்ணில் இறங்கி நீர்நிலைகளில் கலந்து வர இருக்கின்றன.

சுதேசி என்ற வாதம் நம்மிடம் ஏதாவது இருந்தால்தானே விளங்கும்? மான்சாண்டோ, பேயர், டவ், டூபாண்ட், சின்ஜென்டா, அடாமா என எல்லாவற்றையும் விரட்டி விடுவோம். நம்மிடம் சுதேசியாக என்ன இருக்கிறது, அதை வைத்து இவ்வளவு பெரிய நாட்டின் தேவைகளைச் சமாளிக்க இயலுமா? நமது படைபலத்தை அதிகரிக்கும்வரை எதிரிகளோடு சமரசமாகப் போவதுபோல போக்குக்காட்டிவிட்டு, தாக்குதலை நடத்துவதுதான் சாமர்த்தியம் என்ற சாணக்கியத்தனங்கள் நடைமுறையில் பயன்படுவதேயில்லை. நம் முன்னோர்கள் காலத்தில் கணிப்பொறி என்ற ஒன்றே இல்லை; ஆனால் ஆர்யபட்டர், இராமானுசன்கள் இருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் இன்று வீட்டில் எப்படி அடுப்பு எரியும்? தங்க ஊசி இருக்கிறது என்பதற்காக கண்ணைக் குத்திக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் நடக்கிறது.

கட்டுரையாளர்: ஆர். எஸ். பிரபு
(சமூக அக்கறையாளர், வேளாண் விற்பன்னர், ஏட்டுச் சுரைக்காய், கார்ப்பரேட் கால்நக்கி, மான்சான்டோ கைக்கூலி, காங்கிரஸ் களவாணி, தேசபக்தியில்லாத கருங்காலி – இதில் ஏதாவது ஒன்றை உங்களது பிரியம்போல எடுத்துக்கொள்ளவும்).

#ஜெய்ஹிந்த்

ஆர்கானிக் விளைபொருட்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்ட வரைவு தொடர்பாக…

ஆர்கேனிக் விவசாய விளைபொருட்கள் விற்பனை அங்காடிகளை வரும் ஜூலை ஒன்றாம் தேதிமுதல் FSSAIயுடன் இணைத்து ஆர்கானிக் சான்றளிப்பு வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்படி ஆர்கேனிக் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஆதாரம் எஃது, எங்கிருந்து விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது போன்ற தகவல்களைக் கட்டாயமாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத கடைகள் சாதாரண காய்கறி+மளிகைச் சாமான்கள் விற்கும் கடைகளாகக் கருதப்பட்டு அதற்குரிய உரிமம் பெற்றாக வேண்டும். மொத்தத்தில் போலி ஆர்கானிக் கடைகள் மூடுவிழா காண இருக்கிறது. அதாவது ஆர்கானிக் வெஜிடபிள்ஸ் என்றால் அதற்கு ஆர்கானிக் சர்டிபிகேட் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் வெறும் காய்கறிக் கடை என்ற போர்டு மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

ஆர்கானிக் சான்று பெற்ற விற்பனையகம் எனும்போது பொருட்களின் விலையை கடை உரிமையாளர் நிர்ணயிக்கிறார். வாடிக்கையாளரும் அந்த பிரீமியம் தொகையைச் செலுத்த தயாராக இருப்பார். சாதாரண கடை எனும்போது சந்தைதான் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும். Demand – supply-இன் அடிநாதம் இதுதான் என்றாலும் அழுகக்கூடிய பொருட்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.

வாடிக்கையாளருக்கு என்ன தேவை இருக்கிறது என்பதைக்கூட கவனியாமல் எதையாவது உற்பத்தி செய்து வைத்துக்கொண்டு விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை என்று இன்று ஆங்காங்கே பல சிந்தாந்த ஆர்கேனிக் விவசாயிகள் பேஸ்புக்கில் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. நம்மாழ்வார் படத்தை மாட்டி வைத்துக்கொண்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதும் எலுமிச்சம்பழத்தை வண்டி முன்னால் தொங்கவிட்டால் நன்றாக ஓடும் என்பதும் ஒன்றுதான். இல்லாத சந்தைக்கு ஏன் இவ்வளவு மெனக்கெட்டு உழைக்கிறார்கள் என்று கேட்டதற்கு கார்ப்பரேட் கைக்கூலி என்று ஒருகாலத்தில் நம்மை வசை பாடினார்கள்.

கார்ப்பரேட்காரன் தேவையில்லாமல் நம் மீது பொருட்களை திணிக்கிறான் என்று சொல்வது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷனாகிவிட்டது. உண்மையில் நிறுவனமோ, தனி முதலாளியோ யாராக இருந்தாலும் பணத்தைப் போட்டு தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பு என்ன தயாரிக்கப் போகிறோம், யாருக்கு விற்கப் போகிறோம், சந்தையில் இதற்கு டிமாண்ட் என்ன, போட்டியாளர்கள் யார், எவ்வளவு இலாபம் கிடைக்கும், எப்போது பிரேக்-ஈவன் வரும், ஏதாவது காரணத்தால் தொழில் படுத்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கட்டாயம் சிந்திப்பார்கள். அதாவது SWOT analysis செய்வார்கள். இந்த ஆர்கானிக் விவசாய கோமாளிகள் மட்டுமே நிலம் சரியாவதற்கு இரண்டு மூன்று வருடம் ஆகும், அப்புறம் ஏனாதானான்னு வரும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் விற்கும், ஏனென்றால் இஃது ஒரு வாழ்வியல் முறை என்று வகுப்பெடுப்பார்களே தவிர வருமானம் எப்படி வரும் என்பதைப் பேசவே மாட்டார்கள். அத்தகைய ஆசாமிகளை நம்பி இலட்சங்களைத் தொலைத்தவர்கள் பலர்.

மிதிவண்டி சந்தையை எடுத்துக்கொள்வோம். அந்தக் காலத்தில் அப்பா அல்லது தாத்தாவின் சைக்கிளில் அரைப் பெடல் அல்லது குரங்கு பெடல் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். காயமில்லாமல் மிதிவண்டி ஓட்டிப் பழகியவர்கள் வெகுசிலர். இன்று இரண்டு வயதுக் குழந்தைக்கு ஆரம்பித்து ஒவ்வொரு இரண்டு வயதுக்கும் மிதிவண்டி கிடைக்கிறது. அதிலும் ஆண், பெண் என தனித்தனி மிதிவண்டிகள். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் வளர்ந்தபிறகு இரண்டு மிதிவண்டிகளாவது பரணில் குப்பையாகக் கிடப்பதைக் காண முடிகிறது. நமக்கும் தேவை இருக்கிறது, வாங்குவதற்கு வசதி இருக்கிறது. இந்த இடத்தில் விற்பனைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டுகொண்ட நிறுவனங்கள் பைக் வருகையால் பழைய மாடல் சைக்கிள்களின் விற்பனை குறைந்தாலும் புதிய வாய்ப்பைக் கண்டறிந்து தங்களைத் தகவமைத்துக் கொண்டன என்றுதான் சொல்லவேண்டும். மற்றபடி இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளைக் கார்ப்பரேட் சதி என்று உளறுபவர்களை வைத்துப் பார்க்கும்போது மனநல ஆலோசகர்களுக்குப் பெரிய சந்தை வாய்ப்பு தமிழகத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆர்கானிக் சான்று பெற்ற பல விவசாயிகளுடன் பழகி வந்தாலும் ஒரு குறிப்பிட்ட விவசாயி ஒருவரின் தந்தையாருடன் அடிக்கடி அளவளாவிக் கொண்டிருப்பதுண்டு. ஞாயிற்றுக்கிழமை என்றாலே யாராவது ஒரு புதிய விசிட்டராவது ஆலோசனை கேட்டு அவரது தோட்டத்தில் இருப்பார்கள். ஒரு நாள் ஐ.டி. நபர்கள் இரண்டுபேர் வந்து இயற்கை முறையில் விவசாயம் செய்தும், நாட்டுமாடு வளர்த்தும் முன்னேறத் துடிப்பதாக அவரிடம் ஆலோசனை பெற்றபோது நான் ஓரமாக அமர்ந்து வாரமலரில் அன்புடன் அந்தரங்கம் படித்துக்கொண்டே அவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

”உங்களுக்கு மீறுன வசதி இருந்து தோப்பு வருமானம், கம்பெனி, மில்லு வருமானம், வாடகை, வட்டிவாசின்னு பலவாக்குல வருமானம் இருக்குதுன்னா இயற்கை விவசாயம் பண்ணுங்க தம்பி” என்றார். ”அந்த அளவுக்கெல்லாம் இல்லீங்கய்யா, நிலத்த குத்தகைக்கு எடுத்து ஆரம்பத்துல பண்ணலாம்னு இருக்கோம்” என்றனர். ”அப்படியா சங்கதி, குத்தகைக்கு பூமிய புடிச்சு இயற்கை விவசாயம் பண்ணுனா கொழந்தைங்களுக்கு ஸ்கூல் பீசுகூட கட்ட முடியாதுப்பா, அப்புறம் சம்சாரம் கோவிச்சுகிட்டு அவிங்க ஆத்தாளூட்டுக்குப் போயிடுவாப்ல, நீ என்ன பண்ணுவ?” என்றார். உரையாடல் படபடவென முடிவுக்கு வந்தது; அடுத்த சில நிமிடங்களில் மோர் பருகிவிட்டு அந்த அன்பர்கள் விடை பெற்றனர்.

ஐ.டி. கம்பெனிகள், வங்கிகள், ஆட்டோமொபைல் என எல்லாத் துறைகளிலும் எதிர்பார்க்கும் productivityயை விவசாயத்திலும் மக்கள் எதர்பார்க்கின்றனர். அதற்கான சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக வளர்ந்து வருகிறது. ஒரு பிரபல நிறுவனத்தினர் தாறுமாறாக காய்க்கக்கூடிய ஒரு தக்காளி இரகத்தை பாலிஹவுஸ் பண்ணையில் வளர்க்க ஒரு கிலோ விதை ஏழு இலட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியிருந்தனர். அதைப் பரீட்சார்த்த முறையில் பயிரிட்டுப் பார்க்க நூறு விதைகள் விலையில்லா மாதிரியாக நமக்குக் கிடைத்து. இதை நட்பு வட்டத்திலுள்ள ஏழை விவசாயி ஒருவருக்கு தெரிவித்ததும் பிஎம்டபிள்யூ காரை எடுத்துக்கொண்டு 250 கிலோமீட்டர் பயணித்து கோயமுத்தூருக்கே வந்துவிட்டார். பாலிஹவுஸ் அமைத்து பண்ணையம் செய்வதிலுள்ள பல நடைமுறை சிக்கல்களை மண்பானை சமையல் உணவகம் ஒன்றில் அமர்ந்து வெகுநேரம் கலந்துரையாடியதில் மக்களின் பணம் எப்படியெல்லாம் விவசாயிகளுக்கு மானியம் என்றபெயரில் ஊதாரித்தனமாக மொக்கையான திட்டங்களில் செலவிடப்படுகிறது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். விவசாயி என்றாலே புனிதப்பசு என்று உருவகப்படுத்திவிட்டதால் பலவற்றைப் பொதுவெளியில் பேசவே தயங்கும் சூழ்நிலையே இருக்கிறது. அதிலும் ஆர்கானிக் விவசாயம் என்றால் கேள்வியே கிடையாது.

ஆர்கானிக் விளைபொருட்களை சான்றுபெற்று FSSAIயுடன் இணைப்பது குறித்து 2017 ஜூனில் எழுதிய கட்டுரை:

இந்தியாவில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தும் FSSAI (Food Safety and Standards Authority of India) மூலமாக அனுமதி வாங்கிய பிறகே விற்கப்படவேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் இருந்துவருகிறது. தற்போது ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்றபெயரில் விற்பட்டுவரும் 99% ஐட்டம்களுக்கு self declaration தாண்டி எந்தவொரு தரக்கட்டுப்பாடும் கிடையாது.

தற்சமயம் ஆர்கானிக் சான்றளிப்புகளை வழங்கிவரும் APEDA (Agriculture and Processed Foods Export Development Authority) அனைத்து வகையான உணவுசார்ந்த ஆர்கானிக் விளைபொருட்கள் fssai-யுடன் இணைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி இயற்கைவழி, இரசாயன இடுபொருட்கள் பயன்படுத்தாத உணவுப்பொருள் எனில் fssai & APEDA-வின் தரக்கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே ஆர்கானிக் உணவுப்பொருட்கள் விற்கப்படவேண்டியிருக்கும். இன்னும் ஓராண்டுக்குள் இந்த சட்டதிருத்தத்தை நடைமுறைக்கு எதிர்பார்க்கலாம்.

இதன்மூலம் தரமான ஆர்கானிக் உணவுப்பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்கும். தரக்குறைவான உணவுப்பொருட்களை ஆர்கானிக் என்றபெயரில் விற்பது உறுதியானால் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதோடு நுகர்வோரை ஏமாற்றியதற்காக சிறைத்தண்டனையும் உண்டு. இந்த தரக்கட்டுப்பாடுகளுக்கு உடன்படாத அனைத்தும் சாதாரண காய்கறி/வேளாண் விளைபொருளாகவே கருதப்படும். மொத்தத்தில் ஆங்காங்கே முளைத்திருக்கும் திடீர்குபீர் இயற்கை விவசாய/ஆர்கானிக் கடைகளில் முக்கால்வாசி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சாதாரண காய்கறிக் கடையாக மாற்றப்பட்டுவிடும். முறையான உரிமம் இல்லாமல் பொட்டலம் போட்டு ஆர்கானிக் என்று சொல்லி பேஸ்புக்கில் விற்பதும் சட்டவிரோதமாகிவிடும்.

ஐயகோ, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், இது லைசன்ஸ் ராஜ் முறை, கார்ப்பரேட் மட்டுமே ஆர்கானிக் உணவுப்பொருட்களை விற்கவேண்டுமா ஏழை விவசாயிகள் நஞ்சில்லா உணவை நுகர்வோருக்கு நேரடியாக விற்ககூடாதா என்ற சத்தம் உடனடியாக எழும். அதாகப்பட்டது இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்கானிக் முறைமையில் உற்பத்தி செய்யும் விவசாயி விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயிக்கிறார்; நுகர்வோரும் பிரீமியம் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த இடத்தில் தரக்கட்டுப்பாடு தவிர்க்கவியலாத ஒன்று. ஆப்பிள் போன் வாங்குபவரும், ஆப்பிளின்மீது கடி அந்தபக்கம் திரும்பியிருக்கும் சீன தயாரிப்பு ‘ஆபிள்’ போன் வாங்குபவரும் நுகர்வோர்தான்; ஆனால் இருவரும் கொடுக்கும் விலைக்குத் தக்க தரம் கொடுக்கப்பட்டாகவேண்டுமல்லவா?

எதற்கெடுத்தலும் ஜப்பானைப் பார், இஸ்ரேலைப் பார் குட்டியூண்டு நாடு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று உதாரணம் காட்டுவதாகச் சொல்லி தாழ்வு மனப்பான்மையை விதைப்பது நம்மில் பெரும்பாலோனோருக்கு வழக்கம். அவர்கள் தங்களுடைய நாட்டின் சட்டதிட்டங்களை எப்படி மதித்து நடக்கிறார்கள் என்று நாம் பார்ப்பதில்லை. சட்டத்தை நாம் காப்பாற்றினால் மட்டுமே சட்டம் நம்மைக் காக்கும் என்ற அடிப்படையை மறந்துவிடுகிறோம். விவசாயத்தை அளவுக்கு அதிகதாக romanticize செய்து அதை evolve ஆகவிடாமலே செய்திருக்கிறோம். வேளாண்மையைச் சுற்றி எது நடந்தாலும் அதை ஏதோ ஒரு சதியாகவே பார்ப்பது, அதன் சாதகபாதகங்களைப் பார்க்காமல் விவசாயி என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாத சட்டாம்பிள்ளையாக கருதிக்கொள்ளும் நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருக்கும் ஒருசாரார் செய்யும் பரப்புரைகளால்தான் விவசாயம் செய்வோர் குறித்த ஒருவித மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மையை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மாற்றியாகவேண்டும் என்ற சூழலே நிலவுகிறது. அந்த ஒழுங்குமுறைக்கு உடன்படாத ஜமீன்தார் மனநிலை ஆட்கள் கதறக்கதற விரட்டியடிக்கப்படுவார்கள். அந்த சத்தத்தைப் பொருட்படுத்தக்கூடாது; ஜமீன்தார்கள் போனால் என்ன, உழுபவர்களுக்கு நிலம் இருக்குமல்லவா? அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அவினாசி அத்திக்கடவு திட்டம் – இலவு காத்த கிளியா?

/மன்னர் காலத்திலே யானைகள் வரவில்லை, வெள்ளையர் காலத்திலே யானைகள் வரவில்லை, சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளாக யானைகள் வரவில்லை ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வருவது ஏன்?/ வனத்துறையின் தவறான வன மேலாண்மை முறைகளா அல்லது வனங்களை ஒட்டிய பகுதிகளில் காலங்காலமாக பயிரிட்டு வந்த பயிர்களை விடுத்து வாழை, தென்னை, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிட்ட விவசாயிகளின் தவறான முன்னெடுப்புகளா அல்லது இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஃபார்ம் ஹவுஸ், வில்லா, ரிசார்ட் கட்டி அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சும் விளக்குகளை அமைத்து வனங்களின் அடிவாரங்களை நாசம் செய்யும் நகரவாசிகளா அல்லது அதற்கு அனுமதி வழங்கிவரும் உள்ளூர் நிர்வாகமா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்று இதை வாசிப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

யானை வசிப்பதற்கு மிகப்பெரிய பரப்பளவுள்ள வனம் தேவை என்பது தெரிந்தும் கோவிலுக்கு யானைக்குட்டிகளை நன்கொடை வழங்கி அதைச் சித்ரவதை செய்து வந்ததே காலங்காலமாக நடந்தது. சமகாலத்தில் யானைக்கு புத்துணர்வு முகாம் என்ற பெயரில் காரமடை அருகே தேக்கம்பட்டியில் ஆற்றோரம் முகாம் அமைத்து பல அடுக்கு மின்வேலிகள், உயர் அழுத்த மின்விளக்குகள், துப்பாக்கி ஏந்திய வனப்பாதுகாவலர்கள், கும்கி யானைகள் என ஜோராக நடக்கும் அரசாங்கமே நடத்தும் வரம்புமீறல்களை இந்த விவசாயிகள், போராட்ட அழைப்பிதழில் குறிப்பிட “மறந்தது” ஒரு தன்னிச்சையாக நிகழ்வாகும் (இருப்பினும் தேக்கம்பட்டி 23 கிராம விவசாயிகள் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக் குழு கடந்த 3. 1. 2018 அன்று போராட்டம் நடத்தியது குறித்த படம் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது).

/மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு சென்றால் டீயும், பிஸ்கட்டும் தவறாமல் கிடைக்கும். ஆனால் வனவிலங்குகள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்/. இதற்கெல்லாம் சகாயம் அய்யா இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்று முந்தைய தலைமுறை எப்படி நம்புகிறதோ அதைப்போல சேலம் கலெக்டர் ரோகிணி மேடம் இருந்திருந்தால் யானைகளின் இருப்பிடத்திற்கே சென்று ‘இனிமே இங்கலாம் வரக்கூடாது, புரிஞ்சுதா?’ என்று சொல்லி வன விலங்குகளை துரத்தி அடித்திருப்பார்கள் என்று இன்றைய இளைஞர்கள் நம்புவதாக நாளேடுகள் மூலம் தெரிய வருகிறது.

நாராயணசாமி நாயுடு அய்யா என இன்று திடீரென பலரும் அவரது பெயரை எடுத்து உரையை ஆரம்பிப்பதைப் பார்க்கும்போது “ஒருமுறை நாராயணசாமி ஐயா அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது” என்று வாட்சப் கதைகளின் நாயகனாக்காமால் விடமாட்டார்களோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் பச்சைத்துண்டு அணிந்து போராட்டாத்துக்குப் புறப்படுவதை வெட்சிப்பூ தரித்து களம் இறங்குதலுக்கு ஒப்பாக நிறுவினாலும் ஆண்ட பரம்பரை நாங்கள் என்று தொக்கி நிற்கும் எச்சமே தவிர அஃது ஒருபோதும் சமகால பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. (வெட்சிப்பூ = இட்லிப் பூ).

நாட்டு மருந்தும், இயற்கை விவசாயமும் மனிதகுலத்தின் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்று எவ்வாறு நம்ப வைக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஒப்பானது அவினாசி-அத்திக்கடவுத் திட்டத்தை நிறைவேற்றினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் வேளாண்மைக்கான தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதுமாகும். மக்களின் வரிப்பணத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து, 1500 ஏக்கருக்கும் குறைவில்லாமல் நிலம் கையகப்படுத்தி வனங்களை நாசம் செய்து கால்வாய்கள், சுரங்கங்கள், பாலங்கள், மதகுகள் ஏற்படுத்தி பத்து பன்னிரெண்டு ஏரிகளுக்கு நீர்வரத்தை உண்டாக்கி அதன்மூலம் நிலத்தடி நீரை அதிகரித்து விவசாயத்தைச் செளிப்புறச் செய்வதென்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பதைப்போன்றதே. கோடிக்கணக்கான ரூபாய்க்கான கட்டுமானப்பணி அப்போதைக்கு இருக்கும் ஆளுங்கட்சியின் பினாமிகளுக்கு வழங்கப்படுவதைத் தாண்டி, சகட்டுமேனிக்கு சுற்றுச்சூழல் நாசம் செய்யப்படுவதைத் தாண்டி பெரிய பலன்கள் இராது என்பதை சமூக அக்கறையாளர்கள் பலரும் அறிவர்.

அத்திக்கடவு வாயிலாக தருவிக்கப்படும் தண்ணீர் மண்ணுக்கடியில் பதிக்கப்படும் இராட்சத குழாய்கள் மூலமாக காரமடைக்கு வடக்குப்புறமாக மேட்டுப்பாளையம் தாண்டி நேரடியாக அவினாசிக்கு அருகே கொண்டுசெல்ல திட்ட வரைவு வழங்கப்பட்டதையும், அதற்காக காரமடை சுற்றுவட்டார விவசாயிகள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டதையும் நாளேடுகளை வாசிக்கும் அனைவரும் அறிவர். இந்த செய்திகளையெல்லாம் இணைத்து திருப்பூர்வாழ் தொழிலதிபர்கள் தங்களது ஆலைகளை மேற்குநோக்கி விரிவுபடுத்திக்கொள்ள தண்ணீர் வழங்கும் மறைமுக திட்டம்தானே இது என்று கேட்பவர்களுக்கு தற்சமயம் யாரிடமும் நேரடியான பதிலில்லை.

கெளசிகா நதி என்று கோயமுத்தூரில் ஒரு ஆறு உண்டு. பெரியநாயக்கன்பாளையத்துக்கு மேற்கே குருடிமலையில் உற்பத்தியாகி கோவையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து, கோவில்பாளையம் அருகே சத்தியமங்கலம் சாலையைக் கடந்து தெக்கலூர் வழியாக பல ஊர்களைத் தொட்டு திருப்பூர் நகருக்குள் பல கிலோமீட்டர் பயணம் செய்து நொய்யலில் கலக்கிறது. பில்லூர் அணையிலிருந்து குழாய்கள் மூலம் எடுத்து வரப்படும் தண்ணீரை குருடிமலை அடிவாரத்தில் மிகச்சிறிய தேக்கம் மூலமாக கெளசிகா நதியில் இறக்கிவிட்டால் அஃது இயலபாகவே திருப்பூர், அவினாசியைத் தன் போக்கிலேயே சென்றடையும். ஆனால் ஒருகாலத்தில் நதி என்றழைக்கபட்டது இன்று ஓடையாகக்கூட இல்லை. அதன் கிளை வாய்க்கால்கள், பாசன கால்வய்கள், மதகுகள் என எல்லாமும் அரசாங்க மேப்புகளில் மட்டும் இருக்கிறது. இதுகுறித்து ஒக்கலிகர் மகாஜன சங்கம், கவுண்டர்கள் சங்கம், நாயுடுக்கள் சங்கம் என எந்த சாதிச் சங்கமும், விவசாயிகள் சங்கமும் பேசாது என்பது திண்ணம். பச்சைத்துண்டு ஆசாமிகள் பலரே கெளசிகா நதியைக் கூறு போட்டனர் என்பது ஒருவேளை அந்த காட்டு விலங்குகளுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ! அத்திக்கடவு திட்டம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கெளசிகா நதியைத் தண்ணீர் வந்தடைய வெறும் பத்து கிலோமீட்டர் போதுமானது என்பது பேசப்படவே இல்லை.

அவினாசி-அத்திக்கடவுத் திட்டத்தால் ஏற்படும் அத்தனை பலன்களும் கெளசிகா நதியில் தண்ணீர் வரத்து வந்தாலும் ஏற்படும். பல ஆயிரம் கோடி மக்களின் பணமும், பல வருட உழைப்பும் மிச்சமாகும். கோயமுத்தூரின் குடிநீர்த்தேவையை 2050-வரை கணக்கிட்டு ரூ 1018 கோடியில் பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் எடுத்துவர தற்சமயம் நடந்துவரும் பணிகளைப் பார்க்கும்போது அவினாசி அத்திக்கடவு திட்டம் என்பது மோடி கருப்புப்பணத்தை ஒழித்து ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் வழங்குவது மாதிரி உள்ளூர் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.

அவினாசி அத்திக்கடவு திட்ட ஆதரவாளர்கள் பவானி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை அவினாசி, திருப்பூருக்குத் திருப்பிவிடுங்கள் என்று சொல்லும்போது பவானி காவிரியில் கலக்கிறதா அல்லது நேரடியாக கடலுக்கே சென்றுவிடுகிறதா என்று ஐயமேற்படுகிறது. பவானி ஆற்று நீர் காவிரியில் கலந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது என்று சொன்னால் தஞ்சாவூர்க்காரர்கள் தற்கொலைப்படையை அனுப்பவும் வாய்ப்பிருக்கிறது. சென்னைக்கும், இராமநாரபுத்துக்கும் காவிரியிலிருந்து குடிநீர் செல்கிறது என்பதையும் சென்னையின் தண்ணீர் தேவை எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை எதிர்பார்த்திருக்கும் நிறுவனங்கள் தற்சமயம் கோவை நகரின் அவினாசி சாலையில் புதிதாக வரவிருக்கும் மேம்பாலம் அல்லது தொண்டாமுத்தூர்வரை (ஈஷா யோகா மையம் வரை மெட்ரோ வரும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்) வரவிருக்கும் மெட்ரோ இரயில் டெண்டர் நோக்கி திரும்பியிருப்பார்கள் என்பதை பச்சைத்துண்டு அணிந்தவர்களுக்கு யாராவது விளக்கினால் நல்லது.