ஆர்கானிக் விளைபொருட்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்ட வரைவு தொடர்பாக…

ஆர்கேனிக் விவசாய விளைபொருட்கள் விற்பனை அங்காடிகளை வரும் ஜூலை ஒன்றாம் தேதிமுதல் FSSAIயுடன் இணைத்து ஆர்கானிக் சான்றளிப்பு வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்படி ஆர்கேனிக் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஆதாரம் எஃது, எங்கிருந்து விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது போன்ற தகவல்களைக் கட்டாயமாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத கடைகள் சாதாரண காய்கறி+மளிகைச் சாமான்கள் விற்கும் கடைகளாகக் கருதப்பட்டு அதற்குரிய உரிமம் பெற்றாக வேண்டும். மொத்தத்தில் போலி ஆர்கானிக் கடைகள் மூடுவிழா காண இருக்கிறது. அதாவது ஆர்கானிக் வெஜிடபிள்ஸ் என்றால் அதற்கு ஆர்கானிக் சர்டிபிகேட் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் வெறும் காய்கறிக் கடை என்ற போர்டு மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

ஆர்கானிக் சான்று பெற்ற விற்பனையகம் எனும்போது பொருட்களின் விலையை கடை உரிமையாளர் நிர்ணயிக்கிறார். வாடிக்கையாளரும் அந்த பிரீமியம் தொகையைச் செலுத்த தயாராக இருப்பார். சாதாரண கடை எனும்போது சந்தைதான் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும். Demand – supply-இன் அடிநாதம் இதுதான் என்றாலும் அழுகக்கூடிய பொருட்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.

வாடிக்கையாளருக்கு என்ன தேவை இருக்கிறது என்பதைக்கூட கவனியாமல் எதையாவது உற்பத்தி செய்து வைத்துக்கொண்டு விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை என்று இன்று ஆங்காங்கே பல சிந்தாந்த ஆர்கேனிக் விவசாயிகள் பேஸ்புக்கில் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. நம்மாழ்வார் படத்தை மாட்டி வைத்துக்கொண்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதும் எலுமிச்சம்பழத்தை வண்டி முன்னால் தொங்கவிட்டால் நன்றாக ஓடும் என்பதும் ஒன்றுதான். இல்லாத சந்தைக்கு ஏன் இவ்வளவு மெனக்கெட்டு உழைக்கிறார்கள் என்று கேட்டதற்கு கார்ப்பரேட் கைக்கூலி என்று ஒருகாலத்தில் நம்மை வசை பாடினார்கள்.

கார்ப்பரேட்காரன் தேவையில்லாமல் நம் மீது பொருட்களை திணிக்கிறான் என்று சொல்வது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷனாகிவிட்டது. உண்மையில் நிறுவனமோ, தனி முதலாளியோ யாராக இருந்தாலும் பணத்தைப் போட்டு தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பு என்ன தயாரிக்கப் போகிறோம், யாருக்கு விற்கப் போகிறோம், சந்தையில் இதற்கு டிமாண்ட் என்ன, போட்டியாளர்கள் யார், எவ்வளவு இலாபம் கிடைக்கும், எப்போது பிரேக்-ஈவன் வரும், ஏதாவது காரணத்தால் தொழில் படுத்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கட்டாயம் சிந்திப்பார்கள். அதாவது SWOT analysis செய்வார்கள். இந்த ஆர்கானிக் விவசாய கோமாளிகள் மட்டுமே நிலம் சரியாவதற்கு இரண்டு மூன்று வருடம் ஆகும், அப்புறம் ஏனாதானான்னு வரும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் விற்கும், ஏனென்றால் இஃது ஒரு வாழ்வியல் முறை என்று வகுப்பெடுப்பார்களே தவிர வருமானம் எப்படி வரும் என்பதைப் பேசவே மாட்டார்கள். அத்தகைய ஆசாமிகளை நம்பி இலட்சங்களைத் தொலைத்தவர்கள் பலர்.

மிதிவண்டி சந்தையை எடுத்துக்கொள்வோம். அந்தக் காலத்தில் அப்பா அல்லது தாத்தாவின் சைக்கிளில் அரைப் பெடல் அல்லது குரங்கு பெடல் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். காயமில்லாமல் மிதிவண்டி ஓட்டிப் பழகியவர்கள் வெகுசிலர். இன்று இரண்டு வயதுக் குழந்தைக்கு ஆரம்பித்து ஒவ்வொரு இரண்டு வயதுக்கும் மிதிவண்டி கிடைக்கிறது. அதிலும் ஆண், பெண் என தனித்தனி மிதிவண்டிகள். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் வளர்ந்தபிறகு இரண்டு மிதிவண்டிகளாவது பரணில் குப்பையாகக் கிடப்பதைக் காண முடிகிறது. நமக்கும் தேவை இருக்கிறது, வாங்குவதற்கு வசதி இருக்கிறது. இந்த இடத்தில் விற்பனைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டுகொண்ட நிறுவனங்கள் பைக் வருகையால் பழைய மாடல் சைக்கிள்களின் விற்பனை குறைந்தாலும் புதிய வாய்ப்பைக் கண்டறிந்து தங்களைத் தகவமைத்துக் கொண்டன என்றுதான் சொல்லவேண்டும். மற்றபடி இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளைக் கார்ப்பரேட் சதி என்று உளறுபவர்களை வைத்துப் பார்க்கும்போது மனநல ஆலோசகர்களுக்குப் பெரிய சந்தை வாய்ப்பு தமிழகத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆர்கானிக் சான்று பெற்ற பல விவசாயிகளுடன் பழகி வந்தாலும் ஒரு குறிப்பிட்ட விவசாயி ஒருவரின் தந்தையாருடன் அடிக்கடி அளவளாவிக் கொண்டிருப்பதுண்டு. ஞாயிற்றுக்கிழமை என்றாலே யாராவது ஒரு புதிய விசிட்டராவது ஆலோசனை கேட்டு அவரது தோட்டத்தில் இருப்பார்கள். ஒரு நாள் ஐ.டி. நபர்கள் இரண்டுபேர் வந்து இயற்கை முறையில் விவசாயம் செய்தும், நாட்டுமாடு வளர்த்தும் முன்னேறத் துடிப்பதாக அவரிடம் ஆலோசனை பெற்றபோது நான் ஓரமாக அமர்ந்து வாரமலரில் அன்புடன் அந்தரங்கம் படித்துக்கொண்டே அவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

”உங்களுக்கு மீறுன வசதி இருந்து தோப்பு வருமானம், கம்பெனி, மில்லு வருமானம், வாடகை, வட்டிவாசின்னு பலவாக்குல வருமானம் இருக்குதுன்னா இயற்கை விவசாயம் பண்ணுங்க தம்பி” என்றார். ”அந்த அளவுக்கெல்லாம் இல்லீங்கய்யா, நிலத்த குத்தகைக்கு எடுத்து ஆரம்பத்துல பண்ணலாம்னு இருக்கோம்” என்றனர். ”அப்படியா சங்கதி, குத்தகைக்கு பூமிய புடிச்சு இயற்கை விவசாயம் பண்ணுனா கொழந்தைங்களுக்கு ஸ்கூல் பீசுகூட கட்ட முடியாதுப்பா, அப்புறம் சம்சாரம் கோவிச்சுகிட்டு அவிங்க ஆத்தாளூட்டுக்குப் போயிடுவாப்ல, நீ என்ன பண்ணுவ?” என்றார். உரையாடல் படபடவென முடிவுக்கு வந்தது; அடுத்த சில நிமிடங்களில் மோர் பருகிவிட்டு அந்த அன்பர்கள் விடை பெற்றனர்.

ஐ.டி. கம்பெனிகள், வங்கிகள், ஆட்டோமொபைல் என எல்லாத் துறைகளிலும் எதிர்பார்க்கும் productivityயை விவசாயத்திலும் மக்கள் எதர்பார்க்கின்றனர். அதற்கான சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக வளர்ந்து வருகிறது. ஒரு பிரபல நிறுவனத்தினர் தாறுமாறாக காய்க்கக்கூடிய ஒரு தக்காளி இரகத்தை பாலிஹவுஸ் பண்ணையில் வளர்க்க ஒரு கிலோ விதை ஏழு இலட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியிருந்தனர். அதைப் பரீட்சார்த்த முறையில் பயிரிட்டுப் பார்க்க நூறு விதைகள் விலையில்லா மாதிரியாக நமக்குக் கிடைத்து. இதை நட்பு வட்டத்திலுள்ள ஏழை விவசாயி ஒருவருக்கு தெரிவித்ததும் பிஎம்டபிள்யூ காரை எடுத்துக்கொண்டு 250 கிலோமீட்டர் பயணித்து கோயமுத்தூருக்கே வந்துவிட்டார். பாலிஹவுஸ் அமைத்து பண்ணையம் செய்வதிலுள்ள பல நடைமுறை சிக்கல்களை மண்பானை சமையல் உணவகம் ஒன்றில் அமர்ந்து வெகுநேரம் கலந்துரையாடியதில் மக்களின் பணம் எப்படியெல்லாம் விவசாயிகளுக்கு மானியம் என்றபெயரில் ஊதாரித்தனமாக மொக்கையான திட்டங்களில் செலவிடப்படுகிறது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். விவசாயி என்றாலே புனிதப்பசு என்று உருவகப்படுத்திவிட்டதால் பலவற்றைப் பொதுவெளியில் பேசவே தயங்கும் சூழ்நிலையே இருக்கிறது. அதிலும் ஆர்கானிக் விவசாயம் என்றால் கேள்வியே கிடையாது.

ஆர்கானிக் விளைபொருட்களை சான்றுபெற்று FSSAIயுடன் இணைப்பது குறித்து 2017 ஜூனில் எழுதிய கட்டுரை:

இந்தியாவில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தும் FSSAI (Food Safety and Standards Authority of India) மூலமாக அனுமதி வாங்கிய பிறகே விற்கப்படவேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் இருந்துவருகிறது. தற்போது ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்றபெயரில் விற்பட்டுவரும் 99% ஐட்டம்களுக்கு self declaration தாண்டி எந்தவொரு தரக்கட்டுப்பாடும் கிடையாது.

தற்சமயம் ஆர்கானிக் சான்றளிப்புகளை வழங்கிவரும் APEDA (Agriculture and Processed Foods Export Development Authority) அனைத்து வகையான உணவுசார்ந்த ஆர்கானிக் விளைபொருட்கள் fssai-யுடன் இணைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி இயற்கைவழி, இரசாயன இடுபொருட்கள் பயன்படுத்தாத உணவுப்பொருள் எனில் fssai & APEDA-வின் தரக்கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே ஆர்கானிக் உணவுப்பொருட்கள் விற்கப்படவேண்டியிருக்கும். இன்னும் ஓராண்டுக்குள் இந்த சட்டதிருத்தத்தை நடைமுறைக்கு எதிர்பார்க்கலாம்.

இதன்மூலம் தரமான ஆர்கானிக் உணவுப்பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்கும். தரக்குறைவான உணவுப்பொருட்களை ஆர்கானிக் என்றபெயரில் விற்பது உறுதியானால் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதோடு நுகர்வோரை ஏமாற்றியதற்காக சிறைத்தண்டனையும் உண்டு. இந்த தரக்கட்டுப்பாடுகளுக்கு உடன்படாத அனைத்தும் சாதாரண காய்கறி/வேளாண் விளைபொருளாகவே கருதப்படும். மொத்தத்தில் ஆங்காங்கே முளைத்திருக்கும் திடீர்குபீர் இயற்கை விவசாய/ஆர்கானிக் கடைகளில் முக்கால்வாசி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சாதாரண காய்கறிக் கடையாக மாற்றப்பட்டுவிடும். முறையான உரிமம் இல்லாமல் பொட்டலம் போட்டு ஆர்கானிக் என்று சொல்லி பேஸ்புக்கில் விற்பதும் சட்டவிரோதமாகிவிடும்.

ஐயகோ, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், இது லைசன்ஸ் ராஜ் முறை, கார்ப்பரேட் மட்டுமே ஆர்கானிக் உணவுப்பொருட்களை விற்கவேண்டுமா ஏழை விவசாயிகள் நஞ்சில்லா உணவை நுகர்வோருக்கு நேரடியாக விற்ககூடாதா என்ற சத்தம் உடனடியாக எழும். அதாகப்பட்டது இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்கானிக் முறைமையில் உற்பத்தி செய்யும் விவசாயி விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயிக்கிறார்; நுகர்வோரும் பிரீமியம் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த இடத்தில் தரக்கட்டுப்பாடு தவிர்க்கவியலாத ஒன்று. ஆப்பிள் போன் வாங்குபவரும், ஆப்பிளின்மீது கடி அந்தபக்கம் திரும்பியிருக்கும் சீன தயாரிப்பு ‘ஆபிள்’ போன் வாங்குபவரும் நுகர்வோர்தான்; ஆனால் இருவரும் கொடுக்கும் விலைக்குத் தக்க தரம் கொடுக்கப்பட்டாகவேண்டுமல்லவா?

எதற்கெடுத்தலும் ஜப்பானைப் பார், இஸ்ரேலைப் பார் குட்டியூண்டு நாடு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று உதாரணம் காட்டுவதாகச் சொல்லி தாழ்வு மனப்பான்மையை விதைப்பது நம்மில் பெரும்பாலோனோருக்கு வழக்கம். அவர்கள் தங்களுடைய நாட்டின் சட்டதிட்டங்களை எப்படி மதித்து நடக்கிறார்கள் என்று நாம் பார்ப்பதில்லை. சட்டத்தை நாம் காப்பாற்றினால் மட்டுமே சட்டம் நம்மைக் காக்கும் என்ற அடிப்படையை மறந்துவிடுகிறோம். விவசாயத்தை அளவுக்கு அதிகதாக romanticize செய்து அதை evolve ஆகவிடாமலே செய்திருக்கிறோம். வேளாண்மையைச் சுற்றி எது நடந்தாலும் அதை ஏதோ ஒரு சதியாகவே பார்ப்பது, அதன் சாதகபாதகங்களைப் பார்க்காமல் விவசாயி என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாத சட்டாம்பிள்ளையாக கருதிக்கொள்ளும் நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருக்கும் ஒருசாரார் செய்யும் பரப்புரைகளால்தான் விவசாயம் செய்வோர் குறித்த ஒருவித மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மையை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மாற்றியாகவேண்டும் என்ற சூழலே நிலவுகிறது. அந்த ஒழுங்குமுறைக்கு உடன்படாத ஜமீன்தார் மனநிலை ஆட்கள் கதறக்கதற விரட்டியடிக்கப்படுவார்கள். அந்த சத்தத்தைப் பொருட்படுத்தக்கூடாது; ஜமீன்தார்கள் போனால் என்ன, உழுபவர்களுக்கு நிலம் இருக்குமல்லவா? அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.