5 முதலாளிகளின் கதை – நூல் விமர்சனம்

5 முதலாளிகளின் கதை.
ஆசிரியர்: ஜோதிஜி.
கிண்டில் மின்னூல் பதிப்பு.

முதலாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பைக் கண்ட தொழிலாளி படிப்படியாக வளர்ந்து வந்ததே அத்தனை முதலாளிகளின் கதையும் என்றாலும் நாம் கடைசியில் காட்டப்படும் பிரமாண்ட பங்களா, சொகுசு காரை மட்டும் பார்த்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமலேயே இருந்துவிடுகிறோம்.

டாலர் நகரம் புத்தகத்தில் சொல்லாமல் விட்ட பல விசயங்களை ஜோதிஜி விரிவாகவே சொல்லியிருக்கிறார். முதலாளிகள் எப்படி வளர்கின்றனர், எப்படி தொழிலை விரிவுபடுத்துகின்றனர், எந்த இடத்தில் சறுக்குகின்றனர், அதில் மீட்சியடைவது அல்லது மொத்தமாக நொடித்துப்போவது எப்போது, பணம் தேவைக்கு அதிகமாக வந்தவுடன் அவர்களது நடத்தையில் ஏற்படும் மாறுதல்கள், அதனால் தொழிற்சாலை நிர்வாகத்தில் ஏற்படும் விளைவுகள் என கிட்டத்தட்ட அத்தனை கோணங்களையும் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனங்களின் முதலாளிகள், சக தொழிலாளர்கள் வாயிலாக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார்.

அதேநேரத்தில் ‘5 முதலாளிகளின் கதை’ சுயமுன்னேற்றப் புத்தக வகையும் அல்ல.

கண்ணும் கருத்துமாக ஒரு சின்ன யூனிட்டை ஒரு கம்பெனியாக மாற்றும்வரை நிர்வாகத்திறனின் அத்தனை உத்திகளையும் அனுபவத்தால் பயின்று செயல்படுத்தும் தொழில்முனைவர்கள் சறுக்குவது பெண்கள் விவகாரமும் மதுவும் என்றால் அதற்கு இணையாக புகழ் மயக்கமும் ஒருவரை அழித்தொழிக்கக் காரணமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு பெண்கள் என்றாலே போகப்பொருள்தானே, அதிலும் அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் என்றாலே விலையில்லா மாது என்ற எண்ணம்தானே அவர்களுக்கு என்ற வறட்டுப் பெண்ணியம் இப்போது பேச வேண்டாம். பணிபுரியும் இடங்களில் தங்களுக்குத் தேவையானதை எளிதாக சாதித்துக்கொள்ள, மேலே வளர, இன்னும் சில பல மறைமுக ஆதாயங்களுக்காக மட்டுமல்லாது, ஒரு மாறுதலுக்காக, கொஞ்சம் புதிய variety-களைப் பார்ப்பதற்காக I’m available என்று குறிப்பால் உணர்த்தும் பெண்கள் நிறைய உண்டு.

ஐம்பது வயதுவரை ஒழுக்கசீலனாக இருந்த முதலாளிகள் பேரன் பெயர்த்தி எடுத்த பிறகு ஆசைநாயகிகளை குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொண்டு மகிழுந்துகளில் அழைத்துக்கொண்டு ஊட்டி, மூணார் பயணப்படுவது எந்த ஊரில் நடக்கவில்லை?

ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும் முதல் ஐந்து வருடங்களில் எண்ணற்ற நபர்களைச் சந்திக்க வேண்டி வரும். அந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நாமே செய்தாக வேண்டும். காரணம், அதற்கெல்லாம் சம்பளம் கொடுத்து ஒர் ஆள் வைத்துக்கொள்ள முடியாது, ஆரம்பத்தில் நமது டேஸ்ட்டுக்கு பொருட்களை வாங்கிடாவிட்டால் நாம் எதிர்பார்த்த finishing வராது. அதுவும் manufacturing தொழில் என்றால் சொல்லவே வேண்டாம். கட்டுமானப் பொருட்கள், கச்சாப்பொருட்கள், பேக்கேஜிங் மெட்டீரியல், டிரான்ஸ்போர்ட், இத்யாதி, இத்யாதி என பலரையும் சந்திக்க வேண்டி வரும். சில இடங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியும் வரும்.

அத்தகைய இடங்களில் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். கடை உரிமையாளர்களாக, உரிமையாளரின் மனைவியாக, அங்கு பணிபுரிபவர்களாக, முகவர்களாக, வங்கி அதிகாரியாக, வாடிக்கையாளராக வரும் பெண்கள் எல்லோரும் I’m available என்று குறிப்பால் உணர்த்துவதில்லைதான். அதேநேரத்தில் இதில் நடக்கும் casual encounters சில படுக்கையறை வரை செல்வதுண்டு. நம் நாட்டில் ‘ஓரிரவுத் தங்கல்’ என்பது இன்னமும் பரவலாகவில்லை. எனவே பெரும்பாலானவை ‘ஒருமுறை கூடல்’ என்ற அளவிலேயே முடிந்துவிடும். மீறிப்போனால் இரண்டொரு ஆண்டுகளில் இரண்டொரு கலவிகளுடன் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும்.

அதைத் தொடர்ந்து வளர்க்க நினைப்பவர்கள் தங்களுக்கான ஆப்பைத் தாங்களே எடுத்து சொருகிக்கொள்கின்றனர் என்பதே அக்கம்பக்கத்தில் நடக்கும் சம்பவங்கள் வரலாறாகி நமக்கு போதிக்கின்றது. கோயமுத்தூரில் இப்படித்தான் ஏதோ இசகுபிசகாக ஆரம்பித்ததை அப்படியே வளர்த்தெடுத்து அடுத்தவன் மனைவியை அபகரிக்க நினைக்க, அந்த நபரை அவளது கணவன் ஆள் வைத்து வெட்டிக் கொன்றுவிட, சம்பந்தப்பட்ட நபர் ஏதோ ஒரு துக்கடா கட்சியில் இருந்து தொலைக்க, இப்போது ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கொண்டாடுகின்றனர்.

ஜோதிஜி, பாலுறவு சார்ந்த விசயங்களில் அவரது conservative பார்வையை அப்படியே புத்தகம் முழுவதும் வைத்திருக்கிறார். திருப்பூர் ஒருவகையில் அங்கு வரும் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாலுறவு சுதந்திரத்தை வழங்குகிறது. இதை கலாச்சார சீர்கேடாகவே அவர் பார்க்கிறார். ஆனால் நமது நாட்டுக்கே உண்டான பாலியல் வறட்சியை அவர் கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தால் ‘பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான், வாய்ப்பு இருக்கறவன் வாகாக இழுத்து அணைக்கிறான்’ என்று எளிதாகக் கடந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பொங்கித் தள்ளியவர்கள் வேறு ஒரு extreme. நல்லவேளையாக அந்த அளவுக்கு அறச்சீற்றம் எதுவும் புத்தகத்தில் இல்லை.

பெண்கள் விவகாரத்திலோ, ஓரினச்சேர்க்கையிலோ வியாபாரத்தைக் கோட்டை விட்டவர்களைக் காட்டிய ஜோதிஜி, இரண்டாம் தலைமுறை வாரிசுகளால் கம்பெனி நடுத்தெருவுக்கு வந்ததையும் விலாவரியாகப் பேசுகிறார். காசு இருக்கிறதே என்பதற்காக ஊட்டி கான்வென்ட்டில் விட்டு, அங்கிருந்து நேராக அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பி, இறக்குமதி செய்த மகன்/மகள்களை நேரடியாக வெஸ்-பிரசிடென்ட் பதவியில் அமர்த்திவிட்டு ஆன்மிகச்சேவை, பள்ளி கல்லூரிகளில் சொற்பொழிவு, மரம் நட்டு இயற்கை விவசாயம் செய்தல் என்று போய்விட்டு இரண்டாண்டுகள் கழித்து வந்து பார்த்தால் பாங்கி ஏல நடவடிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். பெரிய முதலாளிக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

வாரிசுகள் புதிய நிர்வாக உத்தியைப் புகுத்துகிறேன் என்று போடும் ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல கம்பெனிகளின் அடிப்படையே வாரிசுகளாலேயே ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த பிரபல மூன்று ஷா நடிகைக்கு பிளாங்க் செக் கொடுத்து வரவழைத்த தொழிலதிபர் மகனைப்பற்றி இந்த புத்தகத்தில் எதுவும் எழுதவில்லை. ஒருவேளை ஜோதிஜி திருப்பூரைவிட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகு எழுதக்கூடும்.

பாதி புத்தகத்துக்குப் பிறகுதான் ஜோதிஜியின் அனுபவங்கள் வார்த்தைகளாக மாறி கொட்டுகின்றன. அவையெல்லாம் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே நடத்திக்கொண்டிருப்பவர்கள், நடத்தித் தோல்வி கண்டவர்கள், சிறு நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டியவை.

தனியார் நிறுவனங்களின் front line-இல் பல்வேறு தரப்பட்ட கிளையண்ட்டுகளைச் சந்திக்கச் செல்லும் ஊழியர்களும் இத்தகைய புத்தகங்களையும், அனுபவங்களையும் படிக்கும்போதுதான் ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு புதிய நடத்தையைக் காட்டுகின்றனர், பின்னணியில் நடக்கும் சமாச்சாரங்கள் என்ன என்பது போன்ற புள்ளிகளை இணைத்து ஒரு கோடு போட்டுப் பார்க்க முடியும்.

சிறுதொழில்களைப் பொறுத்தவரை நம் நாட்டில் பைனான்ஸ்காரர்களை நம்பியே செயல்படுகிறது. ஓரளவுக்கு வெற்றி பெற்ற பின்னரே வங்கிகள் தேடி வர ஆரம்பிக்கும். அதற்கும் அடமானம் வைக்க சொத்து இருக்க வேண்டும். வெறும் திறமை மட்டுமே இருந்தால் மட்டும் வங்கிகளுக்குப் போதாது. ஆனால் முறையாக நடத்தப்படும் சிறுதொழில்களே மிக அதிகமான இலாபத்தைத் தரவல்லது. ரிஸ்க் அதிகம்தான். சரியான நபர்கள் கையாளும் சிறுதொழில்கள் தாறுமாறான வேகத்தில் வளர்ந்து குறுகிய காலத்தில் mainstream நிறுவனங்களாக அடையாளம் பெறுகின்றன.

அத்தகைய அனுபவம் ஒன்றை ஜோதிஜி பகிர்ந்துகொள்கிறார். முப்பது இலட்ச ரூபாயை மஞ்சள் பையில் எடுத்துவந்து தந்த முதலீட்டாளரின் கதை சுவாரசியமானது. சர்வதேச விவகாரங்கள் எப்படி ஒரு ஊரின் வியாபாரத்தை காவு வாங்குகிறது என்பதற்கும் அவரது அனுபவமே சாட்சி.

அரசாங்க ஊழியர்கள், இரண்டாவது மூன்றாவது தலைமுறையாக அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள், கல்லூரியின் வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்து ஐ.டி கார்டைக் காட்டிவிட்டு கியூபிக்கிளில் அமர்ந்து கணிணி முன்னர் மட்டுமே வேலை செய்பவர்கள், முதலாளி என்ற வார்த்தையின்மீது ஒவ்வாமை கொண்ட தொழிற்சங்க வெறியர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும். அவர்களுக்கு இது சுத்தமாகப் புரியாது.

சில தொழிலதிபர்கள் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் பொது நலனுக்காக செலவு செய்ததும் உண்டு. இன்னும் செய்கிறார்கள். அதே நேரத்தில் தொழிலாளர்களைச் சுரண்டுவது, சப்ளையர்கள் பணத்தை ஏமாற்றும் பெரிய தொழிலதிபர்களும் உண்டு. திருப்பூர் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லைதான். அப்படி எந்தத் துரும்பும் உள்ளே வந்துவிடக்கூடாது என்று கவனமாகத் தவிர்த்த தொழிலதிபர்களும் உண்டு.

குஜராத்தில் குறிப்பாக படேல் சமூகத்தினரிடம் ஒரு பழக்கம் உண்டு. யாராவது இறந்துவிட்டால் அவரது நினைவாக ஒரு சிமென்ட் பெஞ்ச் ஒன்றை பொது இடத்தில் வைப்பார்கள். அதனால் அங்கு ஹாலோ பிளாக், செங்கல் விற்கும் அத்தனை இடங்களிலும் சிமென்ட் பெஞ்ச் 1500 ரூபாய் முதல் விற்பனைக்குக் கிடைக்கும். சொகுசு வில்லா முதல், சாதாரண சொசைட்டி வகை குடியிருப்புகள் வரைக்கும் அத்தனை இடங்களிலும் உட்கார பெஞ்ச் இருக்கும்.

மக்கள் நிம்மதியாக உட்கார்ந்து ஆற அமரப் பேசி, தங்களது பாரத்தைக் குறைத்துகொள்வதோடு, எதிர்காலத்தில் ஏதாவது செய்வது குறித்தும், கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதற்கு அவர்களது பெஞ்ச் கலாச்சாரம் மிக முக்கியமானது. குஜராத்தில் ஏகப்பட்ட கிராமங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் கண்டது இது.

நமக்குப் பொது இடங்களில் உட்கார இடமே இல்லை. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிறுத்த இருக்கைகள் மனிதர்கள் உட்காரத் தகுதியே இல்லாதவை. மின் கம்பிகளுக்கு அடியிலேயே பேட்டரி – சோலார் பேனல் வைத்த தெருவிளக்கு அமைக்கும் அரசுக்கு ஒரு பெஞ்ச் போடக்கூட தோன்றவில்லை என்பது யதேச்சையானது என்று நாம் நம்ப வேண்டும் அல்லவா? யாருக்காவது காத்திருக்க வேண்டுமென்றால் கூட பேக்கரிகளிலும், ஓட்டல்களிலும் சென்று உட்கார்ந்திருக்கும்படி அரசாங்கத்தால் துரத்தி அடிக்கப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

திருப்பூர் தொழிலாளர்கள் உட்கார்ந்து பேச சாதாரண சிமென்ட் பெஞ்ச்சுகள், காலார நடக்க பூங்காக்கள் என எதுவும் வந்துவிடக்கூடாது, கம்பெனி வேலை முடிந்தால் குடியிருப்புக்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தொழிலதிபர்களும் நம்முடனேயே வாழ்கிறார்கள் என்பதை 5 முதலாளிகளின் கதை திரும்பவும் நினைவுபடுத்துகிறது.

தமிழில் சுயமுன்னேற்ற புத்தகங்கள், சிறுகதைகள், புதினங்கள் தாண்டி தனிப்பட்ட நபர்களது அனுபவக்குறிப்புகள், குறிப்பாக வியாபாரம் சார்ந்த விசய ஞானம் உடையவர்கள் எழுதிய புத்தகங்கள் மிகக்குறைவு. வியாபாரத்தில் ஓகோவென்று வருவது எப்படி, தொழிலில் சாதிக்க நினைப்பவர்களுக்கான சூட்சுமங்கள் என்பது மாதிரியான வழவழா கொழகொழா புத்தகங்களுக்கு மத்தியில் இத்தகைய புத்தகங்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல ஆரம்பம்.

ஜோதிஜி யாராவது பெரிய தொழிலதிபர்களுக்கு ghost writer-ஆக இருந்து இத்தகைய புத்தகங்களைக் கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு எழுதினால் பல ஆயிரம் பிரதிகள் விற்பதோடு எம்பிஏ மாணாக்கர்களுக்குத் துணைப் பாட நூலாக வைக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *