உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம் – அதில் ஓட்டை போடும் சில்லறைத்தனங்கள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக டிப்ளமோ அக்ரியாவது முழுநேரப் பாடத்திட்டத்தில் படித்திருக்கவேண்டும். இதுவரை குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற எதுவுமே இல்லாததால் எஸ்எஸ்எல்சி பெயிலானவர்கள்கூட உரிமம் வாங்கிக்கொண்டு புண்ணாக்கு, தவிடு, மூக்கணாங்கயிறு போல ஒரு சாதாரண சரக்காகவே விற்பனை செய்துவருகின்றனர்.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் பல்வேறு வகையில் கோரிக்கையாகவும், நெருக்கடியாகவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்ததன் விளைவாக ஐதரபாத்திலுள்ள MANAGE வாயிலாக Diploma in Agricultural Extension Services for Input Dealers என்ற பட்டயப்படிப்பு வழங்க ஏற்பாடானது. இதன்படி பிரதி ஞாயிறு ஒரு வகுப்பு என்றவீதம் 48 நாட்கள் ஓராண்டில் முடித்து தேர்வெழுதினால் பட்டயம் வழங்கப்படும்; இதன்மூலம் அவர்களது உரிம நீட்டிப்பு செல்லுபடியாகும் என்பது ஏற்பாடு.

நஞ்சில்லா உணவு, மரபுவழி மாண்பு, சிறுதானிய சிற்றுண்டி என்றெல்லாம் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நம்மாழ்வாரியம் பேசும் மூடர்கள் வேளாண்மைப் பல்கலைக்கழத்தை இழுத்து மூடவேண்டும் என்கிற தொணியிலும் பேசிவருகின்றனர். ஜெயமோகன் போன்ற இந்துத்வா ஆதரவு எழுத்தாளர்கள் விவசாய பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவாக்கறைகள் என்று நம்மாழ்வார் புகழ்பாடும் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதிக்கொடுத்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கின்றனர். ஆனால் நஞ்சில்லா உணவு என்பது எப்படி திடீரென்று சாத்தியமாகும், அதற்கான முதற்படி எது, படிப்படியாக எப்படி, எந்த திசையில் அரசாங்க திட்டங்கள், வேளாண்மைத்துறை கொள்கை முடிவுகள், தனியார் இடுபொருள் நிறுவனங்களின் உட்கட்டமைப்புகள் பயணிக்கவேண்டும் என்பது குறித்த புரிதல் இல்லாமல் Cow excreta மூலம் வல்லரசாகிவிடலாம் என்று கனவுகாணும் அவர்களது அறியாமையையும் நாம் அரவணைத்தே செல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு வேளாண் கவுன்சில் சட்டம் 2009 முன்மொழிந்தது இத்தகைய பல சீர்திருத்தங்களைத்தான். ஆனால் அஃது இங்கே கிடப்பில் போடப்பட்டாலும் மத்திய அரசால் வேறு பெயரில் கொஞ்சம் உயிரூட்டப்பட்டது. அதை முடக்கும் முயற்சியில ஈடுபட்ட வியாபாரிகள் சங்கங்கள் பின்வாசல் வழியாக நுழைந்தது இருக்கட்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இத்தகைய வகுப்புகளை நடத்திவருவது அங்கிருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இதற்கு, அரசின் கொள்கை முடிவுகளுக்கு பல்கலைக்கழகம் கட்டுப்பட்டாகவேண்டும் என்று கொடுக்கப்படும் வழவழா கொழகொழா விளக்கங்களைக் கேட்டு பச்சைக்குழந்தைகூட சிரிக்கக்கூடும்.

இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ அல்லது நான்கு ஆண்டுகள் பி. எஸ். சி விவசாயம் முழுநேரக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு போதுமான ஞானம் இருக்காது என்றால் வாரம் ஒரு வகுப்பு வீதம் 48 வாரங்கள் முடித்த ஒரு நபரால் என்ன செய்துவிட முடியும்? 45 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த 48 மணிநேர படிப்புகூட தேவையில்லை என்பது எவ்வளவுதூரம் இந்தியர்களுக்கு Regulatory Compliance குறித்து எத்தகைய புரிதல் இருக்கிறது என்பதற்கு ஒரு கேவலமான உதாரணமாகும். மாற்றங்கள் மேஜிக் மூலம் வராது. அதற்கு ஒரு துறைசார்ந்த ஆழ்ந்த புரிதல்கள், அதற்கான வழிமுறைகள், செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் வேண்டும். அக்ரி படித்தவர்கள் மட்டும் லைசன்ஸ் வாங்குமளவுக்கு வந்தால் அவர்கள் மட்டுமே லாபி அமைத்து சம்பாதிப்பார்கள், விவசாயிகளுக்கு இதனால் என்ன இலாபம் என்று சிலர் கேட்கக்கூடும்.

பங்களாதேஷிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் – இந்தியாவில் அனுமதிக்கப்படாத – பூச்சிக்கொல்லி மருந்துகள் 200 லிட்டர் பேரல்களில் மதுரைக்கு பல்வேறு பெயர்களில் கடத்திக் கொண்டுவரப்பட்டு Bio-pesticide என்றபெயரில் பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுவது அவ்வளவாக விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை. காலவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துச்சென்று உண்மை எது, போலி எது என்றே தெரியாத அளவுக்கு போலி லேபிள்களை ஒட்டித்தரும் கும்பல்கள் கோயமுத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி பகுதிகளில் புழங்குவதும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை.

உரிமம் இரத்து செய்யப்பட்டாலும் மறுபடியும் வேறு யாராவது பெயரில் வாங்கிக்கொள்ளலாம் என்ற இன்றைய நிலை மாறாதவரை விவசாயிகளுக்கு விடிவில்லை. முறையாக கல்லூரி வாயிலாக அக்ரிக்கல்ச்சர், ஹார்ட்டிக்கல்ச்சர் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே உரிமம் பெறமுடியும், முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆயுட்காலத்துக்கும் வேளாண் இடுபொருள் செய்வதிலிருந்து blacklist செய்யப்படுவார்கள் என்பது மாதிரியான சட்டம் நடைமுறையில் இருந்தால் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

சிக்கினால் பிளாக்லிஸ்ட் செய்யப்படுவார்கள் என்பதால் லாபி அமைத்து விலையை செயற்கையாக உயர்த்துவது, போலிகளை விற்பது இருக்காது என்றாலும் படித்தவர்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கைக்கூலிகளாக்கி விடுவார்கள் அல்லவா என்ற கேள்வி வாட்சப், பேஸ்புக் வழியாக விவசாயத்தைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொரு தமிழனுக்கும் தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சந்தா வசூல்செய்து, கால்நடை மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தியதற்கு பிறகு தமிழக அரசு வேளாண் அலுவலர் சங்கம், துறைசார்பாக சொல்லிக்கொள்ளும்படியாக ஏதாவது அதிரடியைச் செய்திருக்கிறதா, நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்ள இயைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் 5-வது இலக்கமிட்ட இடத்தில் பதில் இருக்கிறது. உரிமம் புதிதாக வழங்குவது, புதுப்பிப்பது, மாறுதல்கள் செய்வது என எல்லாவற்றிலும் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையோ, கால வரையறையோ இல்லாமல் பல மாதங்கள் அலைக்கழிக்கப்பட்டு, பின்தேதியிட்டு கையொப்பமிட்டுக் கொடுப்பதுதான் 99% அலுவங்களில் நடைபெறுகிறது. பாலிதீன் பைகள்கூட 50 மைக்ரான் தடிமனில் கிடைக்கையில், வேளாண்துறையின் விண்ணப்பங்கள் 40 மைக்ரான் மாதிரியான தடிமனுள்ள ஒரு தினுசான காகிதத்தில் இருக்கிறது; இந்நிலையில் கணினி மூலம் விண்ணப்பித்து டிஜிட்டல் சிக்நேச்சர் மூலம் ஒப்புகை வாங்கி, உரம் பூச்சிக்கொல்லி இருப்பு நிலவரத்தை அலைபேசி செயலிமூலம் இடுபொருள் விற்பனையாளர்கள் துறைக்கு தினசரி தெரியப்படுத்துவது நடைமுறைக்கு வரும்போது இதைப் படிக்கும் அத்துனைபேரும் ஓய்வு பெற்றிருப்பார்கள். மேலே உள்ள பத்தியில் எழும்பிய ஐயத்துக்கான விளக்கம் இந்த பத்தியில் விலகியிருக்கக்கூடும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான உரிமங்களை பட்டதாரிகளைக்கொண்டு replace செய்ய போதுமான எண்ணிக்கையில் பட்டதாரிகள் இருக்கிறார்கள். இந்த துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை முறைப்படுத்தாமல் இருப்பதாலும், தொழில் ஆரம்பிக்க போதுமான வழிகாட்டுதல் இல்லாததாலும் வேறு வழியில்லாமல் திறமையான பலர் வங்கிகளில் தங்களை சுருக்கிக்கொள்கின்றனர். மாணக்கர்களுக்கு ஏன் போதுமான தொழில்முனைவு குறித்த திறமையில்லை என்ற கேள்விக்கான பதில் இந்த சுட்டியில் இருக்கிறது. https://www.rsprabu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/58/

தனியார் வேளாண்கல்லூரிகள் பலவும் அக்ரி சீட்டுகளை கூவிக்கூவி விற்பதை பொறியியல் கல்லூரியோடு ஒப்பிட்டு வேளாண்மைக்கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற பீதியை சிலர் தொடர்ந்து கிளப்பிவருகின்றனர். அதற்கான பதில் இந்த சுட்டியில்: https://www.rsprabu.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/52/

2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் மோடி அவர்களின் நோக்கத்தைத் தகர்த்து அவப்பெயர் ஏற்படுத்த செயல்பட்டுக்கொண்டிருக்கும் இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் Droneகளை பரீட்சார்த்தமுறையில் வயல்களில் பயன்படுத்தி ஆய்வுகளை செய்ய ஆரம்பித்திருக்கும் சூழலில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமெனில் நமக்கு எதற்கு வம்பு என்றிருக்கும் ஒரு comfort zone-ஐ விட்டு வெளியே வந்து சிந்திப்பதும், செயல்படுவதும் அவசியமாகும். ஏன் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்ற பொதுவான தலைப்பைத்தவிர பொதுவெளியில் சொல்லிக்கொள்ளும்படியான உரையாடல்களை காணமுடிவதில்லை. மானியம் வழங்குவது, கடன் வழங்குவது, பின்னர் தள்ளுபடி செய்வது, ஏரி குளம் தூர்வாருவதைத் தாண்டி அரசாங்க அமைப்புகள் செய்யவேண்டிய பல விசயங்கள் பேசப்படாமலேயே இருக்கிறது. அதை முன்னெடுக்கும் பொறுப்பு – சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழும்வரை – இதைப் படித்துக்கொண்டிருக்கும் சமூக அக்கறையுள்ளவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *