கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து…

கேள்வி: கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி வடக்கிலுள்ள பிற மையங்களுடன் இணைத்து படிப்படியாக மூட இருப்பதாக செய்திகள் வருகின்றனவே? அதற்காக கரும்பு விவசாயிகள் கோவையில் போராட்டம் நடத்தியதாகவும் நாளேடுகளில் செய்தி வந்த சூழ்நிலையில் இஃதை எப்படி அணுகுவது?

பதில்: கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாமல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பல இடங்களில் கரும்பு பூத்தாலும், முளைக்கும் திறனுடைய விதைகள் கோயமுத்தூர் தட்பவெப்ப நிலைக்கு மட்டுமே உருவாகும் என்பதாலேயே ஆங்கிலேயர்கள் கோவையில் ஆராய்ச்சி நிலையத்தை 1912-லேயே அமைத்தனர். சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ள இன்றைய கரும்புகளை சி. ஏ. பார்பர் என்பவரும் T. S. வெங்கட்ராமன் என்பவரும் இணைந்து உருவாக்கினர். இதுவே Nobilization of sugarcane என்று அழைக்கப்படுகிறது. இந்த Nobilization தான் பல்லாயிரம் கோடி புழங்கும் இன்றைய சர்க்கரை ஆலைத் தொழிலுக்கு அடிப்படை.

நடுவணரசின் கீழ் வரும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை, கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், மத்திய வேளாண் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய மூன்றும் கோயமுத்தூரில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே அமைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் இயக்குனர், பல விஞ்ஞானிகள், அலுவலக சிப்பந்திகள், ஓட்டுனர்கள் என ஏகப்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆட்டுக்கு தாடி எதற்கு, ஆராய்ச்சி நிலையத்திற்கு டைரக்டர் எதற்கு என்ற கேள்வி நமக்கெல்லாம் பலமுறை தோன்றினாலும் இவையனைத்தும் நடுவணரசின் நிதியுதவியில் இயங்குபவை என்பதால் இவ்வளவு காலமாக கேட்பாரில்லாமல் இருந்துவிட்டன. இப்போதுதான் வடக்கே இருக்கும் அதிகாரிகளுக்கு ஞானோதயம் ஏற்பட்டு பல பதவிகள் தேவையில்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு இருபது முப்பது கையொப்பங்களை இடுவதற்காக ஓர் இயக்குனர் பதவி, அதற்கு இரண்டு இலட்சம் சம்பளம், படிகள், விமானப் பயணங்கள், நட்சத்திர விடுதி வாசங்கள் என பல இலட்சங்களை விழுங்கி அதனால் அறிவியலுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த பலனுமில்லை என்பதை இப்போதாவது கண்டறிந்தார்களே என்று பாராட்டவேண்டும். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தையும், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தையும், மத்திய வேளாண் பொறியியல் ஆராய்ச்சி மையத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டது ஏனென்று தெரியவில்லை.

மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்திலும், கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திலும் உள்ள உழவியல், நோயியல், பூச்சியியல், மண்ணியல், வேளாண் விரிவாக்கவியல், பொருளியல் விஞ்ஞானிகள் பதவிகளில் உள்ள duplication-களை நீக்கிவிட்டு இரண்டு நிறுவனங்களுக்கும் பொதுவாக தேவையான அளவுக்கு மட்டும் விஞ்ஞானிகளைப் பணியிலமர்த்தி மற்றவர்களை பிற இடங்களுக்கு அனுப்பி உருப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளச் சொல்வதே மக்கள் வரிப்பணத்திற்கு அரசாங்கம் தரும் மதிப்பாகும். இன்டர்காமில் கூப்பிடக்கூடிய தொலைவிலுள்ள இந்த இரண்டு ஆராய்ச்சி மையங்களுக்கு இரண்டு செட் இயக்குனர்கள், இரண்டு செட் விஞ்ஞானிகள், இரண்டு செட் அலுவலக சிப்பந்திகள் என ஆரம்பித்து இரண்டு செட் ஜெனரேட்டர் வரை வந்ததோடு கோவையில் அரசாங்க செலவில் இரண்டு இடங்களில் ஹிந்தி திவஸ் கொண்டாட வேண்டியிருக்கிறது. இவற்றை அப்படியே இணைத்து ஒரு செட்டை மட்டும் தக்க வைப்பதால் ஆராய்ச்சிகளில் சுணக்கம் ஏற்பட்டு நாடு வல்லரசாக முடியாமல் போகும் என்பவர்கள் ஒரு மாதம்கூட தனியார் நிறுவனங்களிலோ, அயல்நாட்டு ஆய்வகங்களிலோ சம்பளம் வாங்கிப் பார்த்திராத inbreeding depression derivatives எனலாம்.

அத்தோடு பணி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது, இயக்குனர் துணைவேந்தர் போன்ற பதவிகளை வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். பழுத்த அனுபவமும், செறிவான ஞானமும் உள்ள விஞ்ஞானிகள் தனியாக கன்சல்டன்டுகளாகவோ அல்லது சொந்த நிறுவனங்களை உண்டாக்கி நடத்துபவர்களாகவோ மாறுகின்றனர். சிலர் தினசரி அலுவலகப் பணிகளுக்கு விடைகொடுத்து முற்றிலும் புதிய வாழ்வியல் முறைகளில் இறங்கி எதிர்த் திசைகளில் பயணிக்கின்றனர். இந்த இரண்டுக்கும் எடுபடாத சிலர் ஏதாவது சிபாரிசு மூலமாக பதவி நீட்டிப்பு வாங்கிக்கொண்டு திரும்பவும் அதே இடத்துக்கு வந்து இளைய தலைமுறையினரின் உத்வேகத்தைக் மட்டுப்படுத்துகின்றனர். அரசாங்கம் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிப்பலன்களை முறையாக வழங்கி கவுரவமாக வெளியேற்றிவிட்டு, புறவாசல் வழியாக பணிநீட்டிப்பு வழங்கும் செயல்களைத் தவிர்ப்பதே இந்தியாவிலுள்ள மனிதவள ஆற்றலுக்கு மதிப்பளிக்கும் செயலாகும்.

நாட்டிலுள்ள பல பெருநிறுவனங்கள் இன்று merger & acquisitionஇல் ஈடுபட்டுள்ளன. பல அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளே ஒன்றுடன் ஒன்று இணைய ஆரம்பித்துள்ளன. கணினித் துறையில் செயற்கை நுண்ணறிவுத்திறன் பல ஊழியர்களை redundant ஆக்குகின்றது. அதற்காக அந்த துறைகளின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனரா என்றால் நிச்சயமாக இல்லை. மக்களின் விழிப்புணர்வு, நீதிமன்றங்களின் அழுத்தம் காரணமாக, அரசாங்கமும் resource optmization என்ற கோணத்தில் அணுகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசாங்க வேலை என்பது சோற்றுக்கு பாதுகாப்பான வழி என்பதாலேயே பல இலட்சங்களை இலஞ்சமாக வழங்கி பதவிக்கு வர பலர் ஆயத்தமாக இருக்கும் சூழலில் இத்தகைய நிர்வாக சீர்திருத்தங்கள் தவிர்க்க இயலாததும், அத்தியாவசியமான ஒன்றும் ஆகும்.

கரும்பு விவசாயிகள் ஒரு பத்துபேர் பெரும் கூட்டமாக வந்து இதற்காக கோயமுத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டது நகைப்புக்குரிய நிகழ்வாகும். கரும்பை விவசாயிகள் 90% சர்க்கரை ஆலைகளுக்கு விற்கிறார்கள். மீதம் வெல்லத்துக்குச் செல்கிறது. இதில் – கரும்பு இரகம் உட்பட – அந்தந்த பகுதிகளில் உள்ள ஆலை நிர்வாகம் பரிந்துரை செய்வதைத் தாண்டி விவசாயிகள் தாமாக எதையும் செய்வதில்லை; அதற்கு அவசியமும் இல்லை. காலையில் எழுந்தவுடன் கோயமுத்தூர் கரும்பு ஆராய்ச்சி மையத்துக்கு போன் போட்டு கரும்பு சாகுபடி சம்பந்தமாக உரையாடிவிட்டுத்தான் காலைக்கடன்களை ஆரம்பிக்கிறோம், அதனால் கரும்பு ஆராய்ச்சி தொடரவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு பேட்டி கொடுப்பதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இன்னமும் விவசாய சங்கத் தலைவர் பதவிகள் ஊருக்குள் வேலைவெட்டி இல்லாத பண்ணையார்களிடமே இருப்பதாக தெரியவருகிறது.

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும், ஆலைகள் நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும், வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் அடிக்கடி போராடுவதைப் பார்க்கலாம். உழவு செய்வதில் இருந்து அறுவடை வரைக்கும் ஆகும் செலவையும், அதற்கான வட்டியையும் கணக்குப் பார்த்தால் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் மிஞ்சாது. கரும்பு ஒன்றும் அத்தியாவசியப் பயிரல்ல. சர்க்கரை உணவில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் பஞ்சமோ, பட்டினிச் சாவுகளோ வந்துவிடாது. மிக அதிகமான தண்ணீரை பயன்படுத்துவதோடு நில்லாமல் அறுவடைக்குப் பிறகு தோகைகளுக்குத் தீ வைக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் மாசு உண்டாக்கும் முக்கிய பயிர் கரும்பாகும்.

இன்றைய தேதிக்கு சீமைக்கருவேல் விறகுக் கட்டைகள் ஒரு டன் 3000-4000 வரை விற்கிறது. கரும்பு சாகுபடி செய்வதற்கு பதிலாக அடர்நடவு முறையில் சொட்டுநீர் மூலமாக சீமைக்கருவேல மரம் பயிரிட்டால் உழவு, ஆட்கூலி, களையெடுப்பு, பார் அணைப்பு செலவு என எதுவுமே இல்லாமல் அறுவடையும் ஜேசிபி மூலமாக எளிதாகச் செய்து வருமானம் ஈட்டலாம். பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாயமாக, ஆலைகளிடம் கெஞ்சி நிற்காமல் ஜே. சி. குமரப்பா அவர்கள் கூறியதுபோல முற்றிலும் தற்சார்பு கிராமப் பொருளாதாரத்தை உருவாக்கலாம். பசுமை விகடனின் ஜூனியர் கோவணாண்டி, மண்புழு மன்னாரு போன்றவர்களின் கட்டுரைகளைப் படித்து பன்னாட்டு கம்பெனிகள், அரசாங்க ஆராய்ச்சி நிலையங்கள், வியாபாரிகள், வங்கிகள் என அனைவரையும் பார்த்து பொருமிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வேலைவெட்டி இல்லாத பண்ணையார்களுக்கு இஃது ஒரு வரப்பிரசாதமாகும்.

பருத்தி விதை ஆராய்ச்சியில் பஞ்சாப்பில் பிப்ரவரியில் நடவு செய்து அறுவடை செய்ததை ஜூன் மாதம் மகாராட்டிராவில் நட்டு அறுவடை செய்து, அக்டோபரில் கோயமுத்தூரில் நடவுசெய்யப்பட்டு உற்பத்தியாகும் விதைகள் அடுத்த பிப்ரவரி நடவுக்கு பஞ்சாப்புக்குச் சென்றுவிடுகின்றன. ஆண்டுக்கு மூன்று சந்ததி advancement துளியும் தவறில்லாமல் நடக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் நூறு ஏக்கர்வரை ஆயிரக்கணக்கான இரகங்களை, பெற்றோர் விதைகளை (அதாவது ஒரு கம்பெனியின் எதிர்காலத்தை) இரண்டு மூன்று ஊழியர்கள் நிர்வகிப்பதை சர்வசாதாரணமாக கோயமுத்தூர் சுற்றுவட்டாரங்களில் காண முடியும். கள நிலவரம் இவ்வாறு இருக்கையில் கரும்பு, பருத்தி, வாழை மற்றும் வேளாண் கருவிகளுக்கு ஆராய்ச்சி செய்ய manpower இல்லாமல் என்ன செய்வது, தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நடக்கும் சதி, இலுமினாட்டி சதி என்றெல்லாம் பரப்பப்படுபவை கணிசமான சோம்பேறிக் கூட்டங்களைக் காப்பதற்காகவே. ஏனெனில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் தமிழகத்துக்குத் தேவையானவற்றை ஆராய்ச்சி செய்ய போதுமான வசதிகளோடு, விஞ்ஞானிகளும் குவிந்து கிடக்கின்றனர். மேலும் இந்த மையங்கள் மூடப்படாமல் வடக்கே உள்ள ஆராய்ச்சி நிலையங்களுக்கு தெற்கத்திய யூனிட் மையங்களாக செயல்பட்டவாறே இருக்கும்.

மித்ரோன் மோடி அரசு கொண்டுவரும் அனைத்து கொள்கைகளையும், திட்டங்களையும் விமர்சித்து வருபவர்கள்கூட இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதே பகுத்தறிவுடைய செயலாகும்.

தேங்காய் நார்த் தொழிற்சாலைகளினால் ஏற்படும் புதிய சூழலியல் சிக்கல்கள்

வழக்கமான உள்ளூர் செய்தியாக இதைக் கடந்து செல்ல முடியவில்லை. தேங்காய் நாரைப் பிரித்தெடுத்து சுத்திகரித்து ஏற்றுமதி செய்வது கடந்த பத்தாண்டுகளில் அதீத வளர்ச்சி கண்ட ஒரு துறை. தென்னிந்தியாவிலிருந்து பல நூறு கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்ட விவகாரம் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது.

மெத்தைகள், மகிழுந்து இருக்கைகளில் foam-க்கு பதிலீடாக தேங்காய் நார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தேங்காய் மட்டையை அரைத்து – நாரையும், சோற்றையும் பிரிக்காமல் – அப்படியே லேசாக மக்கச்செய்து அதில் பயிர் வளர்க்க (மண்ணிற்கு மாற்றாக) உலகெங்கும் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். ஆனால் தேங்காய் நாரிலுள்ள அதிக உப்புக்களின் செறிவு, அதீத கார்பன்: நைட்ரஜன் விகிதம் காரணமாக பயிர்கள் வளர்வதில்லை. அதைச் சமப்படுத்த பலமுறை தண்ணீர் விட்டு வடித்துவிட வேண்டியிருக்கிறது. அதன்மூலம் EC (Electrical Conductivity) குறைக்கப்படுகிறது. எளிதாகப் புரியும்படி சொல்வதானால் தேங்காய் நார்களின் TDS-ஐ குறைக்க பலமுறை தண்ணீரால் கழுவ வேண்டும்.

தேங்காய் மட்டைகள் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். கடந்த ஆண்டின் கடும் வறட்சியின் காரணமாக இலங்கை, இந்தோனேசியாவிலிந்து தேங்காய் மட்டைகள் கப்பல்களில் வந்திறங்கியதாக தெரியவருகிறது. Coir Board என்ற ஒன்று இருந்தாலும் தென்னை மரங்களையே பார்த்திராத ஷர்மா, குப்தா, தாக்கூர்கள் காயர் வாரியத்திலும், நபார்டிலும் உட்கார்ந்துகொண்டு திட்டங்கள் மட்டுமே தீட்டி வந்த நிலையில் தென்னிந்திய தொழில்முனைவோரின் கடும் உழைப்பினால் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியாக இந்த நார்த்தொழில் வளர்ந்திருக்கிறது.

ஆர்டர் தரும் வெளிநாட்டினர் Low EC coir pithகளையே கேட்பதால் ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களால் இயன்ற அளவில் ஒரு கான்கிரீட் களம் அமைத்து நாரைப் பரப்பி தண்ணீர் விட்டு சுத்திகரிப்பு செய்ய ஆரம்பித்தனர். வடித்து விடப்படும் நீரின் TDS அளவு மிகவும் அதிகம் என்பதால் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களும், நீர் ஆதாரங்களும் மாசடைவது தவிர்க்க முடியாதது. சாயப்பட்டறை அளவுக்கு Heavy metals மற்றும் பல புரியாத இரசாயனங்கள் வருவதில்லை என்றாலும் மண் கெடத்தான் செய்யும்.

இதைத் தவிர்ப்பதற்கான திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ நம்மிடத்தில் இல்லை. இருந்தாலும் தாள்களிலேயே இருக்கிறது. சாயப்பட்டறைகளைப்போல் அல்லாமல் நார் ஆலைகள் ஆங்காங்கே பரவலாக தோட்டம், தோப்புகளுக்குள் பெயர்ப்பலகைகூட இல்லாமல் இயங்கிவருவதால் கண்டுபிடிப்பது/கட்டுப்படுத்துவது கடினம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இப்படி ஒரு இன்டஸ்ட்ரி நடப்பதாகத் தெரிவதே அரிது. சோலார் பேனல்கள் வருகைக்குப் பிறகு சுற்றுச்சூழல் மாசு உண்டாக்கும் தொழில்களுக்கு மின்சார வாரியத்தின் தயவும் குறைந்துள்ளது. வாடகைக்கு ஓர் இடத்தை எடுத்து, வேலி அமைத்து, வட இந்திய தொழிலாளர்களை பணியிலமர்த்தி, வடித்து விடப்படும் நீரை காலியாக இருக்கும் போர்வெல்லுக்குள் செலுத்தி சர்வசாதாரணமாக ஐந்தாறு ஆண்டுகள் இயங்கமுடியும். அந்த பகுதியின் நீர் கெட்டுவிட்டால் எளிதாக வேறு பகுதிக்கு மாறிவிட முடியும்.

வேளாண் உற்பத்திச் சங்கிலியின் இறுதிப்பொருளாக சாலை ஓரங்களில் வீசப்பட்ட ஒரு பொருளுக்கு மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகையில் அதில் உண்டாகும் கழிவுகளைக் கையாள, மறுசுழற்சி செய்ய, உரிய திட்டங்களைத் தீட்டி, கருவிகளை கண்டுபிடித்து சந்தையில் விடவிம், அரசுக்கு ஆலோசனை சொல்லவும் பல்கலைக்கழகங்களுக்கும், பல்வேறு அரசுத் துறைகளுக்கும் மிகப்பெரிய சமூக பொறுப்புண்டு.

ஆனால் பெரும்பாலும் நமக்கு வாய்ந்த விஞ்ஞானிகள் வழக்கம்போல பாரம்பரியம், மரபு என்று சொறிந்துவிட்டுக் கொள்பவர்களாகவும் இந்தி படி, சமஸ்கிருதம் படி என்று ஆலோசனை வழங்குவதும், செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்க எதற்காக சமஸ்கிருதம் பயிலவேண்டும் என்று கேட்டால் பதில் சொல்லாமல் என் சர்வீஸ் அளவுக்கு உனக்கு வயதில்லை என்று கூறி கருத்தியல் அடாவடித்தனமும், காலம் பதில் சொல்லும் என இன்டெலெக்சுவல் குண்டாயிசம் செய்வதுமாக அல்லவா இருக்கின்றனர்.

வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இந்த தேங்காய் நார்த் தொழில் இயல்பாக வளர்ந்த ஒன்று. ஏற்றுமதி வாய்ப்புகள் காரணமாக உண்டாகும் மாசு காரணமாக சாயப்பட்டறைகளைப் போல் ஒரு மோசமான தொழிலாக இன்னும் பத்தாண்டுகளில் விமர்சிக்கப்படலாம். வழக்கம்போல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கிளம்பிவந்து கார்ப்பரேட் எதிர்ப்பு புராணத்தில் ஆரம்பித்து மறைநீர், முன்னோர்கள் கற்றாழையில் கயிறு திரித்த வரலாறு, பனை மட்டையில் அவுனி கிழித்த நினைவலைகள் என பலவற்றை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் கள யதார்த்தம் என்னவென்றால் தேங்காய் நார் ஆலைகள் முற்றிலும் தனி நபர்களால் நடத்தப்படுவதால் ஏதாவது நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டால் தேடி வந்து மிதிப்பார்கள். இப்போதெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே கம்பெனி போட்டு லாபி செய்து வியாபாரம் செய்வதால் விமர்சனங்கள் எல்லாமே win win டீலாகத்தான் இருக்கும். அவர்களை நம்புபவர்களே மோசம் போவார்கள்.

தண்ணீர் சுத்திகரிப்பு, ETP தொழில்களுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், நகரமயமாதலில் தீர்வுகளுக்குத்தான் மதிப்பு இருக்கும். அந்த காலத்திலே என ஆரம்பிக்கும் அங்கலாய்ப்புகளுக்கு அல்ல.

வணிக நிறுவனங்களின் வரலாறு என்பது கார்ப்பரேட் சதி என்றுதான் எதிர்காலத்தில் புரிந்துகொள்ளப்படுமா?

கேள்வி: இயல்பாக நடக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகள், அதன் பயன்பாடுகள், தொழிற்புரட்சியின் தாக்கம், வணிகம், தொழில் போட்டி, தேசபக்தி, அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை பிற்காலத்தில் கற்பனை கலந்து பீதியை உண்டாக்கும் வண்ணம் பரப்ப இயலுமா? மக்கள் அதை நம்புவார்களா?

பதில்: நீங்கள் திருப்பூரில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துவதாகவும் உங்கள் சகோதரர் கோவையில் ஒரு ஃபவுண்ட்ரி ஆலை நடத்துவதாகவும் வைத்துக்கொள்வோம். உறவினர்கள், நண்பர்களின் சின்னச்சின்ன யூனிட்கள் மூலம் ஜாப் ஒர்க் செய்து பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். திடீரென இந்தியாவுக்கும் பக்கத்து நாட்டுக்கும் போர் மூள்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாடே பரபரப்பாக யுத்தத்தை கவனிக்கிறது, குடிமகன்கள் எல்லோரும் தன்னாலான உதவிகளை செய்வதன் மூலம் தாய்நாடு போரில் வெற்றிபெறவேண்டும் என துடிக்கிறார்கள். அந்த நேரத்தில் இராணுவ வீரர்களுக்கு போர்க்கள உடைகளைத் தைக்கும் வசதி உங்கள் ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருப்பதால் இராணுவத்தினர் உங்களுக்கு பெரிய ஆர்டரைத் தருகிறார்கள். போருக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றாலும் நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்தியவாறே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இராணுவம் கேட்டதைவிட அதிக தரத்தில் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைக்கிறீர்கள். உங்கள் ஊழியர்களும் காலை மாலை ஒரு மணிநேரம் கூடுதலாக உழைத்து தேசத்தற்கு தங்களாலான சேவையை நல்குகிறார்கள்.

ஆடை தயாரிப்பில் மிச்சம் விழும் கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட இராணுவம் தளவாடங்களைத் துடைக்கப் பயன்படும் என வாங்கிச் செல்கிறது. உங்களது சகோதரர் நடத்தும் பவுண்ட்ரியும் போர்க்கருவிகளின் உதிரி பாகங்களை தயாரித்து இராணுவத்துக்கு அனுப்பி யுத்தத்துக்கு உதவுகிறது. நாடு போரில் வெல்கிறது. போருக்கு உதவிய நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்க & தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் எல்லோரும் பெருமிதத்துடன் கர்வத்துடன் மிடுக்காக வலம் வருகிறார்கள். இராணுவ ஆர்டர் கிடைத்த நிறுவனங்கள் பெருநிறுவனங்களாகின்றன. நாட்கள் மகிழ்ச்சியாக செல்கின்றன. ஊடகங்கள் மக்கள் மகிழும்வண்ணம் செய்திகளை வெளியிட்டவாறே இருக்கின்றன.

யுத்தம் நடக்கும்போது இராணுவத்துக்கு சப்ளை செய்யமுடியாது என்று நீங்கள் மறுப்பதாக வைத்துக்கொள்வோம். மறுநாளே தேசத்துரோகி, அந்நிய நாட்டு கைக்கூலி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். வழக்கமாக நடக்கும் அத்தனை அரசாங்க நெருக்கடிகளும் தரப்படும். தேசத்துரோகி என்பதால் உங்களது சப்ளையர்கள், வாடிக்கையாளர்களே விலகுவார்கள். அல்லது ஒருகட்டத்தில் நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டுவிடும். உங்களை ஆதரிப்பவர் யாருமின்றி அநாதையாக சொந்த நாட்டிலேயே சாக நேரிடலாம். நடைமுறை என்னவோ இப்படித்தான் இருக்கும்.

ஆனால் பின்னாளில் வரும் அரைகுறை அறிஞர்கள் நீங்களும் உங்கள் சகோதரரும் யுத்தத்துக்குத் தேவையான நாசகார பொருட்களை தயாரித்து இராணுவத்துக்கு வழங்கி பல இலட்சம் அப்பாவி மக்களை அண்டை நாட்டில் படுகொலை செய்ய துணைபோனதாகவும், கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட விற்று காசு பார்த்ததாகவும், ஊழியர்களை மனசாட்சியே இல்லாமல் ஓவர்டைம் பார்க்க வைத்ததாகவும், உங்களது நிறுவனத்துக்குத் தேவையான ஜாப் ஒர்க் ஆர்டர்களைக்கூட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி கொள்ளை இலாபம் பார்த்ததாகவும், இதற்கு பல வங்கி அதிகாரிகள் துணைநின்றதாகவும், பின்னாளில் அவர்களும் பதவி உயர்வு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் எழுதுவார்கள்.

பிற்காலத்தில் இதை மல்லாக்கப் படுத்துக்கொண்டு வாட்சப்பில் படிப்பவர்களுக்கு இரத்தம் கொதிக்கும். இன்னொருவாட்டி படித்துப் பார்த்து இனப் படுகொலைக்கு துணைபோன இலுமினாட்டி என்று ஓலமிடுவார்கள்.

காற்றில் 78% நைட்ரஜன் இருந்தாலும் தாவரங்களால் அதை நேரடியாக கிரகிக்க இயலாது. விலங்குகளின் செல்களில் உள்ள புரதத்துக்கும் நைட்ரஜன் அடிப்படை. மக்கள்தொகை பெருக ஆரம்பித்ததால் வேட்டையாடி உண்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதால் விவசாயம் செய்து தானியங்களை சேமித்துவைத்து உண்ணவும், வியாபாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து விவசாயம் செய்ததால் மண்ணில் நைட்ரஜன் குறைய ஆரம்பித்தது. சாணங்களாலும், தாவரக் கழிவுகளாலும் நைட்ரஜன் எடுக்கப்படும் வேகத்துக்கு திருப்பியளிக்க முடியவில்லை.

அந்த காலகட்டத்தில் சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தின் மணலில் சோடியம் நைட்ரேட் படிவுகள் இருந்ததால் கப்பல் கப்பலாக மணலை அள்ளிச் சென்றார்கள். சில வருடங்களில் மணலே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று பூகோளவியலாளர்கள் கவலைப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என அஞ்சினார்கள்.

அந்நேரத்தில் குறைவான வினைபடுதிறன் கொண்ட நைட்ரஜனை ஹைட்ரஜனுடன் வினைபுரிய வைத்து அம்மோனியாவை செயற்கையாக உண்டாக்குகிறார் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி. இதற்காக 1918-இல் நோபல் பரிசு பெறுகிறார். இதனடிப்படையில் Haber – Bosch process உருவாகிறது. காலங்காலமாக இருந்து வந்த அம்மோனியா, நைட்ரேட் தேவையை Haber Bosch process மூலமாக நிறைவேற்ற பல ஆய்வகங்கள் முற்பட்டன. தொடர்ந்து பல மூலக்கூறுகளை, ஆய்வு முறைமைகளை ஃப்ரிட்ஸ் ஹேபர் தலைமையிலான குழு கண்டறிகிறது.

BASF, Bayer, Hoechst போன்ற நிறுவனங்களின் இணைப்பில் உருவான IG Farben கம்பெனி, சயனைடு அடிப்படையில் ஃப்ரிட்ஸ் ஹேபர் கண்டுபிடித்த Zyklon B எனும் இரசாயனத்துக்கு தானிய கிட்டங்கிகளில் பூச்சிகளைக் கொல்லும் fumigant-ஆக பயன்படுத்த காப்புரிமை வாங்கி வைத்துக்கொள்கிறது. ஹேபர் ஆரம்பித்த Degesch என்ற கம்பெனியே கடைசியில் IG Farben நிறுவனத்திடம் Zyklon Bயைப் பயன்படுத்த லைசன்ஸ் வாங்கி அமெரிக்காவில் கப்பல்களில் வரும் தானியங்களுக்கு fumigation செய்ய சப்ளை செய்கிறது. பின்னாளில் IG Farben கம்பெனி BASF, Bayer நிறுவனங்களுக்குள் கரைந்துபோனது. அதன் தலைமை அலுவலக கட்டிடம் இன்று University of Frankfurtஇன் நிர்வாக கட்டிடமாக மாறி ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பல விஞ்ஞானிகள் நோபல் பரிசுகளைக் கூடையில் அல்லாத குறையாக வாங்கிக் குவிக்கிறார்கள்.

உலகப்போர் நடக்கும்போது ஹிட்லரின் இராணுவத்தினர் இந்த Zyklon Bயை பெருமளவில் வாங்கி யூதர்களின் முகாம்களில் விஷவாயுவாக செலுத்தி படுகொலை செய்கிறார்கள். ஹேபரின் Degesch கம்பெனியும் கரைந்துபோனது. போருக்கு உதவ மறுத்த பல விஞ்ஞானிகள் காணாமல் போனார்கள். சிலர் அமெரிக்கா ஓடிப் போனார்கள்.

அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் விதைகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். வியாபாரம் நன்றாக இருந்ததால் Queeny Monsanto என்ற அந்த பெண்மணியின் பெயரிலேயே மான்சாண்டோ என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து விதை வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். பின்னாளில் அது ஒரு பெரிய நிறுவனமாகிறது. அந்நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த களைக்கொல்லியின் விற்பனையும் அமோகமாக நடந்து வந்தது.

அப்போது வியட்நாம் போர் வருகிறது. கொரில்லா தாக்குதலில் அனுபவம் இல்லாத அமெரிக்கப் படை பலத்த அடி வாங்குகிறது. எப்படி தேடினாலும் வியட்நாம் வீரர்களை நெருங்க முடியவில்லை. ஒரு தளபதிக்கு புதிய யோசனை வருகிறது. மான்சான்டோவின் களைக்கொல்லியை பெரிய பேரல்களில் வரவழைத்து ஹெலிகாப்டர் மூலமாக காடுகளின்மீது தெளிக்கிறார்கள். சில நாட்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் வியட்நாமிய வீரர்களின் முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது ஆரஞ்சு நிற பேரல்களில் வரவழைக்கப்பட்ட களைக்கொல்லியானது ஏஜென்ட் ஆரஞ்சு என்றே அழைக்கப்பட்டது.

எல்லாப் போர்களும், இன அழித்தொழிப்புகளும், காலனிகளும் குரூரமானவையே. போர் என்று வந்துவிட்டால் எல்லாவிதமான போர் முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதில் உயிரோடு மீண்டு இருப்பது மட்டுமே வரலாறாகக் கருதப்படும். யுத்தத்தை ஆதரித்து உயிரோடு இருக்கவேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். தேசபக்தி என்பது அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படும். போரை எதிர்க்கும் தனிநபர்கள் தினசரி நடவடிக்கைகள்கூட யுத்த ஆதரவு செயலாகவே முடியும்.

இயல்பாக நடந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாமே நாடுகளால் தேச பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அணு ஆராய்ச்சி, தொலைத் தொடர்புக்கருவிகள் முதல் தானியங்கள்வரை அத்தனையும் தேச நலனுக்காகவே அர்ப்பணிக்கப்படும். அதில் இராணுவம், போர் என்பதும் ஓர் அங்கம்.

அம்மோனியா, நைட்ரேட் போன்றவை வெடிமருந்துக்கு பயன்பட்டதோடு விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. போர்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளைவிட பாறைகள், மலைகளை உடைத்து சாலைகள், தண்டவாளங்கள், பாலங்கள், அணைகள், குடியிருப்புகள் அமைக்க பயன்படுத்தப்பட்டவையே உலகளவில் அதிகமான ஒன்றாகும். ஆனாலும் வெடிமருந்து என்றாலே ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது வீசவே தயாரிக்கப்படுவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.

உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகள், வர்த்தகம், நாடு பிடிக்கும் போட்டிகள் என வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தபோதும் இந்தியாவில் ஓடுகிற ஆற்றுநீரில் குளித்தாலே, வீதியில் நடந்து சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்ற அளவில் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆங்கிலேயர் காலனி வருகைக்கு முன் பஞ்சமே வந்த்தில்லை என இன்றும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தானியங்களை, எண்ணையை மற்றும் பலவற்றை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

வெடிமருந்தை விவசாயத்துக்கு விற்ற வெள்ளைக்காரத் துரோகியே என திண்ணைகளில், சாவடிகளில் உட்கார்ந்து அறைகூவல் விடுக்கிறோம். இரண்டாயிரம் வருடத்துக்கும் மேலான வேளாண் வரலாறு கொண்ட சமூகம் ஏன் எலிக்கறி தின்று, அம்மணமாக நின்று வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி கையேந்துகிறது என்று சிந்திக்க மறுக்கிறோம். சங்க இலக்கியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த தகவல் இருக்கிறது என்கிறோம்; ஆனால் சொட்டுநீர்க்குழாய்க்கான sand filter தொழில்நுட்பம் இஸ்ரேலிலிருந்து வர வேண்டியிருக்கிறது. இதன் பின்னாடி இலுமினாட்டி இருக்கிறான் என்கிறோம், மெக்காலே கல்வியால் கெட்டது என்கிறோம், அந்நிய சக்தி என்கிறோம்.

எல்லாம் தெரிந்திருந்தும் பகுத்தறிவுக்கு முரணான முடிவுகளை ஏன் எடுக்கிறோம் என்பதைச் சொல்லி இந்த ஆண்டு ஒரு அறிஞர் நோபல் பரிசு வாங்குகிறார். இங்கே நாம் technical fault என்று சொல்லி பசப்புகிறோம். பின்னாளில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கும் சமூகம் இன்றைய சமூகத்தைப் போலவே ஏதேதோ கற்பனைகளில் மிதக்கவே செய்யும்.

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை, விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக்கப்பட்டு வருகின்றன – இந்த வரிகளின் பின்னணி அரசியலை அலசுவோம்

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை, விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற இரண்டு பொத்தாம்பொதுவான வாதங்கள் அனைத்து உரையாடல்களிலும், கட்டுரைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவ்விரண்டு கூற்றுகளுமே சமகாலத்தின் மிகப்பெரிய பொய் என்பதையும் அதிலிருக்கும் நுண்ணரசியலையும் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழக சூழலில் மாவட்ட வாரியாக 90% விவசாய நிலங்களை வைத்திருப்பது அந்தந்த பகுதிகளின் ஆதிக்க சாதியினர் மட்டுமே. இன்று வீட்டுக்கு ஒரு கணினி நிபுணரை தமிழகம் உருவாக்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. வேலையே கிடைக்கவில்லை என்றாலும் மூன்று நான்கு ஆண்டுகள் சென்னை, கோவை போன்ற நகரங்களில் அறை எடுத்து வேலை தேடும் கணிசமான இளைஞர்கள் உண்டு. விவசாய நிலங்களும் பெரும்பாலும் இவர்களது பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.

ஆண்ட பரம்பரையினர் தங்களது வாரிசுகள் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை. தப்பித்தவறி ஊருக்குள் விவசாயம் செய்யும் இளைஞர்கள், 35 வயதானாலும் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று உட்கார்ந்திருப்பதே சாட்சி. சரி, அப்ப என்னதான் பிரச்சினை ஏன் இந்தக்கால இளைஞர்கள் வேளாண் தொழிலில் ஈடுபட முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது?
காலங்காலமாக நிலவுடைமைச் சாதிகளுக்கு பண்ணை வேலைகள் செய்துவந்த தலித் மக்கள் விவசாயக் கூலி வேலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்றதுதான் பிரச்சினை. நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து நாடு எதிர்நோக்கும் மாபெரும் அச்சுறுத்தல் என்று பில்டப் கொடுக்கப்பட்டு வருவது இதைத்தான். உழவு செய்ய, A2 பால் தரும் மாடுகளைப் பராமரிக்க, விதைக்க, அறுக்க, கதிரடிக்க, மரமேற, வண்டிமாடு ஓட்ட மலிவான கூலிக்கு வந்தவர்கள் இப்போது வருவதில்லை என்பதுதான் இன்றைய இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை என்று பாலிஷான மொழிநடையில் சொல்லப்படுகிறது.

கல்வி வாய்ப்புகள், அரசாங்க நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் தமிழகம் போன்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் வட மாநிலங்களிலும் சேர்த்து கிடைத்த ஒரு வாய்ப்பு Mobilityயால் கிடைக்கப்பெற்றதே. பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு இதில் அளப்பறியது. 400 ரூபாய்க்கு விவசாய கூலி வேலை செய்வதைவிட 30 கிலோமீட்டர் சென்று 700 ரூபாய்க்கு கொத்தனார் வேலை செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது இந்த வாகனங்கள்தான்.

அபார்ட்மென்ட்டுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் ஸ்கூட்டி, சூப்பர் எக்செல்களில் வருவதுதான் அங்குள்ள உயர் நடுத்தர வருவாய் பிரிவு இல்லத்தரசிகளின் கவலையாக இருக்கிறது. வேலைக்காரப் பெண்கள் ஸ்கூட்டி வைத்திருப்பதாலேயே வெஸ்பா வாங்கிய வீடுகள் பல உண்டு (பயாஜியோ கம்பெனிக்கே இப்படி ஒரு மார்க்கெட் செக்மெண்ட்டேஷன் இருப்பது வண்டி அறிமுகப்படுத்தும்வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை). சைக்கிளில் மட்டுமே – அதுவும் பண்ணையார் எதிரில் வரும்போது இறங்கி நின்று – செல்ல விதிக்கப்பட்ட தலித் மக்கள் பைக்குகளில் ஓவர்டேக் செய்து செல்கையில் ‘நேத்து நம்மளகண்டு வேட்டிய இறக்குனதெல்லாம் இன்னிக்கு பைக்ல ஹார்ன் அடிச்சிக்கிட்டு போவுது’ என்பதன் நவநாகரீக வடிவம்தான் ‘இந்தக்கால இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை’ என்பதாகும்.

நிலம் வைத்திருக்கும் சாதியினரே அந்தந்த பிராந்திய விளைபொருட்களின் புரோக்கர், கமிசன் மண்டி, பார்வர்டிங் ஏஜென்ட், உரக்கடை, டிராக்டர் வாடகைக்கு விடுதல்வரை செய்கின்றனர். இவர்களது வாரிசுகளை ஐடி, அயல்நாட்டு, அரசாங்க வேலைகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு மிச்சமிருக்கும் ஓரிரண்டு இளசுகளை பைனான்ஸ் செய்ய அனுப்பிவிட்டு, அதற்கும் தேறாத கேஸ்கள் ஊருக்குள் ஆண்ட பரம்பரை அரசியல் கட்சிகளை வளர்க்கையில் இவர்களது தோட்டத்துக்கு தலித் மக்கள் வேலைக்கு வரவில்லை என்பதே இளைஞர்கள் விவசாயம் செய்யத் தயாராக இல்லை என்பதாகும்.

தொழிற்புரட்சியால் ஏற்படப்போகும் இந்த சமூகவியல் நகர்வுகளைக் கணித்து அரசு திட்டங்களை வகுக்காமல் போனது சமூகப் புரிதல் இல்லாத, தொலைநோக்குப் பார்வை இல்லாத அதிகாரிகளால் ஏற்பட்டதேயாகும். மானியங்களாலும், கடன் தள்ளுபடிகளாலும், குறைந்த பட்ச ஆதார விலைகளாலும் விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என்பது நாளேடுகளில் நடுப்பக்கக் கட்டுரைக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இந்திய விவசாயமும், கிராமங்களும் சாதியும் பிரிக்கவே முடியாதது. இதைக் கவனிக்காமல் நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம் என்பதெல்லாம் கட்டுரைகளோடு முடிந்துவிடும்.

தீவிர இயற்கை விவசாய ஆர்வலர்கள் அப்பட்டமான சாதி வெறியர்கள் என்று சொன்னால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கலாம். ஆனால் இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அந்தக்கால கிராமியச் சூழலில் விவசாயம் நடக்கவேண்டும். அந்த கிராமியச் சூழலில் சாதி இல்லாமல் ஆர்கானிக் இடுபொருட்களை கம்பெனி மூலம் வினியோகித்தால் அய்யகோ விவசாயிகளின் தற்சார்பு எங்கே, கார்ப்பரேட் ஆதிக்கம் வருகிறதே என பாட ஆரம்பிப்பார்கள். ஆர்கேனிக் (கொஞ்சம் ஸ்டைலாக ஆர்கானிக் என்பதை ஆர்கேனிக் என்று சொல்வதே சமகால மேல்தட்டு ஃபேஷன் ஆகும்) உணவு என்பதே நான் உன்னைவிட உயர்வானவன், எனது உணவு நீங்கள் உண்ணும் உணவைவிட உயர்வானது என்பதை நிறுவுவதற்கே இன்று பயன்படுகிறது. வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றும் கொடுமையைவிட கிலோவுக்கு 50 ppm அளவில் பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கண்டறியப்படுவதே பெருவாரியானோருக்குக் கவலைகொள்ளத்தக்க விசயமாகத் தெரிகிறது.

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற கூற்றை அலசினால் அதுவும் ஒரு மாய பிம்பம் என்பது புலப்படும். சினிமாவில் வருவதுபோல யாரும் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கையெழுத்து வாங்குவதில்லை. நிலம் இருப்பவர்கள் தாமாக முன்வந்து விற்கிறார்கள். இதில் விற்பனை செய்பவர்கள் வாங்குபவர் என்ன சாதி என்று தெரியாமல் விற்பதில்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக பல சாதியினரும் இருப்பது, கமிசனைப் பிரித்துக்கொள்வது அந்தத் துறைக்குள் இருக்கும் ஒரு மிகப்பெரிய நுண்ணரசியலில் ஒன்றாகும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் உங்கள் ஊர்ப்பக்கம் புதிதாக முளைத்த பெட்ரோல் பங்குகள் எத்தனை, அவை விளைநிலங்களின் மீது அமைக்கப்பட்டனவா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு பெட்ரோல் பங்குக்கு அரை ஏக்கர் என்று வைத்துக்கொண்டால் தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை இந்த பங்க்குகள் விழுங்கியது என கணக்கிட்டால் புரியும். பெட்ரோல் பங்க் அமைப்பது அந்தந்தப் பகுதி ஆதிக்க சாதியினரால் மட்டுமே முடியும். தலித் கோட்டா என்றாலும் மேனேஜ்மெண்ட் கண்ட்ராக்ட் யாரிடம் இருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

விவசாயக் கூலி அல்லாத வேளைகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், பணிசார்ந்த பலன்களும் மிக முக்கியமான ஒன்று. ஒரு ஷாப்பிங் மால், பெரிய அலுவலகக் கட்டிடங்களில் பராமரிப்பு ஊழியர்களுக்கான பார்க்கிங்கில் எத்தனை சைக்கிள்கள், டிவிஎஸ் 50கள் நிற்கின்றன என்று கவனித்தால் போதுமானது. தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் அடித்தட்டுப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய mobilityயைக் கொடுத்திருக்கின்றன என்பதற்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஊரகப்பகுதிகளில் பயணித்தறிய வேண்டும்.

பி. எஃப், இஎஸ்ஐ போன்ற பலன்கள் மால்கள், பெரிய அலுவலகங்களில் மாதம் எட்டாயிரம் சம்பளம் வாங்கும் ஹவுஸ்கீப்பிங் பெண்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. பெங்களூருவில் ஜவுளி நிறுவன ஊழியர்கள் பி. எஃப் பிரச்சினையின்போது பேருந்து எரிப்பு அளவுக்குச் சென்றதை நினைவுகூர்க. ஊர்க்கட்டுப்பாட்டை மீறியதாக ஒதுக்கி வைக்கப்படும் அவலங்கள் இதில் ஏதும் இல்லை.

நபார்டு வங்கியால் ஊக்குவிக்கப்படும் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது சாதிவலைக்குள் எப்படி சிக்கி நசுங்குகிறது என்பதையும் அஃது ஏன் தோல்வியைத் தழுவுகிறது என்பதையும் தனியாக பி.எச்.டி-யே செய்யலாம்.

தமிழகத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு VAT exemption இருந்தது. இப்போது மித்ரோன் மோடி பராக்கிரமத்தால் உரத்துக்கு 5%, பூச்சிக்கொல்லிகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. பூஜ்யத்திலிருந்து நேரடியாக 18% வரி விதிக்கப்பட்டதற்கு வேறு துறைகளாக இருந்தால் கடும் எதிர்ப்பைக் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழக விவசாயிகள் சங்கங்களின் எந்த பிரிவும் பெயரளவுக்குக்கூட கண்டனம் தெரிவித்ததாகக் காணோம். டெல்லிக்குச் சென்று கடனைத் தள்ளுபடி செய்யவும், நதிநீர் இணைக்கவும் மண்சோறு சாப்பிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. பூச்சிக்கொல்லிகளுக்கு 18% வரி என்பது விவசாயத்தின் மீதான நேரடியான தாக்குதல் என்பது ஆர்கேனிக் விவசாயக் கனவு கோஷ்டிகளுக்குப் புரியப்போவதில்லை என்பதைவிட விவசாய சங்கங்களுக்கே புரியவில்லை என்பதுதான் அபாயகரமானது.

வர்ணாசிரம முறைகளைத் தாங்கிப்பிடிக்கும் கிராமப்புற வாழ்வியல் முறைகளிலிருந்து வெளிவரும் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பளிப்பது MSME நிறுவனங்களே. இவற்றில் பெருவாரியான மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக, சில நேரங்களில் கொத்தடிமைகளாக பணிபுரிவதைத் தடுப்பதிலும், அவர்களை முறையான பதிவுசெய்த தொழிலாளலர்களாக ஆக்குவதிலும் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிந்தே மனிதவள ஆற்றல்சார் நிறுவனங்கள் தோன்றின. டீம்லீஸ், அடிக்கோ என பல நிறுவனங்களை உதாரணமாகக் காட்டலாம். பிரபல அரசியல்வாதி ஒரிவரின் நிறுவனம் குறித்து சொல்லத் தேவையில்லை. Vendor employee, contractor employee, third party employee என பலதரப்பட்ட பெயர்களில் பணிபுரியும் நிறுவனத்தின் நேரடி payroll-இல் இல்லாமல் வேறு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தாலும் PF, ESI, காப்பீட்டு பலன்கள் நேரடியாக கிடைத்துவிடும்.

ஒப்பந்த பணியாளர்களின் payroll வைத்திருக்கும் நிறுவனங்களை ஒருசாரார் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் கால்நக்கிகள் என பலவாறாக விளிக்கிறார்கள். தற்போது மித்ரோன் மோடி அரசு minimum wages act மூலமாக மாதத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 18000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து நகர்த்தி வருகிறது. ஓர் ஊழியருக்கு எடுத்த எடுப்பிலேயே மாதம் 18000 என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஐம்பது பேருக்கும் குறைவான ஊழியர்களை வைத்து நடத்தப்பட்டு வரும் சின்னச்சின்ன ஆலைகள் 18000 சம்பளம் வழங்கினால் ஆறுமாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாது. இந்த சட்டத்தை மதிக்காத சிறு நிறுவனங்கள் PF, ESI, காப்பீடு இல்லாமல் கூலி வழங்குவது என்பது கிராமிய விவசாய சூழலில் பண்ணையாரிடம் கூலி வாங்குவதற்கு ஒப்பான சூழலை உண்டாக்கும். இதன்மூலம் சட்டத்தை மதித்து நடந்து கம்பெனியை திவாலாக்கிக் கொள்ளலாம்; தொழிலாளர்களின் payroll-இல் இல்லாமல் கம்பெனி நடத்துவதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித பலன்களும் சென்றடையாமல் பார்த்துக்கொள்ளலாம். பிரச்சினைகள், நிச்சயமற்ற சூழல், பாதுகாப்பின்மை, எதிர்காலம் குறித்த அச்சம், குழப்பங்கள் இருக்கும் இடங்களில்தான் சாதிகளும், மதங்களும், பக்தியும் வேர்விட்டு வளரமுடியும்.

நோட்டை செல்லாக்காசாக்கி கருப்புப் பணத்தை ஒழித்ததுமாதிரி, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18% வரி விதித்து ஆர்கேனிக் விவசாயத்தை ஊக்குவிப்பது மாதிரி, ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18000 சம்பளம் வழங்க சட்டமியற்றி தொழிலாளர்களையும், MSMEகளையும் nake in india செய்து 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கி, கணிசமான இளைஞர்களை விவசாயத்துக்குத் திருப்பும் ARYA (Attracting and Retaining Youth in Agriculture) திட்டங்களை புரிந்துகொள்ள மண் கீ பாத் கேட்க வேண்டும்.

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்னும் மாய மான்!

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது வழக்கம்போல ஒரு கண்துடைப்பு, நிச்சயமாக take off ஆகாத மாடல் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவற்றின் பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது நான் குறிப்பிட்டபோதெல்லாம் பலர் – குறிப்பாக academia மக்கள் – என்னை வறுத்தெடுத்தார்கள். வயல் வரப்புகளுக்கே சென்றிராத ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் ஓய்வூதியதாரர்கள் ஆனபிறகு அவர்களது NGOக்கள் மூலம் “சேவை” செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி இவற்றால் பலன் ஒன்றும் விளையப்போவதில்லை.

சாதிச்சிக்கல், உள்குத்து, வெளிக்குத்து போன்ற எதுவும் இல்லாத உழவர்சந்தை மாடல்களே நடைமுறையில் எளிமையான தீர்வுகள். கர்னாடகாவும் ரயத்பஜார் என்றபெயரில் இதே மாடலை வைத்திருக்கிறது. உழவர்சந்தை மாடலை இன்னும் மேம்படுத்தலாமே தவிர அதைவிட எளிமையான மார்க்கெட்டிங் மாடலை விவசாயிகளிடம் செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. Value addition, supply chain management, cold storage போன்றவை நேரடியாக விவசாயிகளால் செயல்படுத்த முடியாதவை; அதிக முதலீடும், சந்தை தேடுதல்களும் திரும்பவும் இடைத்தரகர்களை ஊக்குவிக்கும் செயலாகவே அமையும்.

End to end integration என்பதெல்லாம் விவசாயத் தொழிலில் கனவாகவே இருக்கிறது. ஈஷா போன்ற கம்பெனிகள் கூட உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியை ஊக்குவிக்கின்றனவே என்ற கேள்வி எழக்கூடும். அலுவலக சூழலிலும், தனிப்பட்ட குடும்ப வாழ்விலும், சமூக அமைப்பிலும் ஒரு சராசரி மனிதனாகத் தன்னைப் பொறுத்திக்கொள்ள முடியாத தற்குறி ஸம்ஸப்தகர்கள் ஊரான்வீட்டு காசில் நடத்துவதை உதாரணம் காட்டுவதே தவறான ஒன்றாகும்.

தற்போதைய டிரென்டிங் “உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்” (Farmer Producer Company Ltd.). முதல் இரண்டு ஆண்டுகள் அவை நபார்டு வங்கியின் தாங்கலில் இயங்கும். பின்னர் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். 2020-இல் எத்தனை உஉக லிமிடெட் வெற்றிகரமாக இயங்குகிறது, எத்தனை மூடப்பட்டது என்று பார்ப்போம்.

Will Farmer Producer Organizations address Agrarian distress?

கூடு திரும்புதல் என்ற பெயரிலான சமகால சூழலியல் பயங்கரவாதம்

தாராபுரத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றபோது நாட்டுக் கடுகு விதைக்க தன்னார்வலர்கள் தாராபுரம் வருவதாக அங்கிருந்த துண்டேடுகள் சொன்னது.

கடுகு தமிழகத்தில் வர்த்தக ரீதியாகவோ, வீட்டுப் பயன்பாட்டுக்காகவோ விளைவிக்கப்படுவதில்லை. அப்படியே யாராவது முயற்சித்தாலும் வணிகரீதியாக வட இந்தியாவில் வளரும் இரகங்களை வாங்கி பயிரிடுவார்கள். அத்தகைய பயிர் அறுவடைக்குப் பின்னர் பிசிறில்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் (அழிந்தும்விடும்). நாட்டுக் கடுகு இரகங்கள் என்பது பரவலாக வர்த்தகரீதியிலான சாகுபடியில் இல்லாதவை. ஆனால் wide adaptability உடையவை என்பதால் பலதரப்பட்ட பருவ சூழலிலும் தாக்குப்பிடிக்கவல்லவையாகவே இருக்கும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகு இரகத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நாட்டுக் கடுகு இரகத்தை தமிழ்நாடு முழுவதும் திரு. ம. செந்தமிழன் அவர்களின் சீடர்கள் விதைத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு டன் அளவிலான விதை பரப்பப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓர் உயிர்ச்சூழலில் இல்லாத ஒரு தாவரம் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கு பரந்த தகவமைப்புத்திறன் இருக்கும்பட்சத்தில் அங்குள்ள இயல்பான உள்ளூர் தாவரங்களைக் காட்டிலும் மிக வேகமாகப் பல்கிப் பெருகி ஆக்கிரமித்துக்கொள்ளும். அழகுச் செடியாக அறிமுகப்படுத்தப்பட்ட Lantana camara செடி இன்று காடுகளுக்குள்ளும் ஆக்கிரமித்திருக்கிறது (கமென்ட்டில் படம் இருக்கிறது). தெரியாமல் வந்திறங்கிய பார்த்தீனியம், விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது குறித்து பெரிய விளக்கம் தேவையில்லை.

மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து நாட்டுக் கடுகு இரகங்களை விதைப்பதாக இருந்தால் பஞ்சாப், இராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சென்று ஊர் ஊராக விதைத்திருக்க வேண்டும். தமிழகத்துக்கும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கும் சம்பந்தமே இல்லாதபோது அதை எதிர்ப்பதாகச் சொல்லி, புழக்கதில் இல்லாத, எந்த விதத்திலும் தேவையும் இல்லாத நாட்டுக் கடுகு இரகங்களை பரப்புவது என்பது தெரிந்தே ஒரு புதிய களைச்செடியை அறிமுகம் செய்யும் செயலாகும்.

ஒரு நாட்டுக்குள் நாசகார கிருமிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை அனுப்பி மக்களை நூதனமாகக் கொல்வது Bio terrorism எனப்படுகிறது. மக்களை நேரடியாகக் கொல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் உத்திகள் ஒருவகையான மறைமுக bio terrorism ஆகும். அதில் களைச்செடிகளைப் பரப்புதல், ஆபத்தான பாசி, பூஞ்சாணம், மீன் இரகங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

தற்சமயம் சந்தையில் இருக்கும் ஒரே systemic, non-selective, post emergent herbicide என்பது மான்சாண்டோவின் Roundup (கிளைஃபோசேட்) மட்டுமேயாகும். தமிழகத்தில் இன்று வலிந்து திணிக்கப்பட்டுவரும் நாட்டுக் கடுகுச்செடிகள் களையாக மாறி விவசாய நிலங்கள், ஏரிகள், கண்மாய்களை ஆக்கிரமிக்கும்போது ரவுண்டப் தெளிக்காமல் கட்டுப்படுத்தவே இயலாது எனும்போது களைக்கொல்லி வர்த்தகம் யாருக்காக நடக்கும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையிருக்காது. கடுகுச்செடியினை களையாகக் கருதி அதை அழிப்பதற்கு திட்டமிடுதல், செயல்படுத்துதல் என வேளாண்மைத்துறையினரின் நேரம் மட்டுமல்லாது அதை சீராய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை எவ்வளவு பேரின் நேரத்துக்கும், மக்களின் வரிப்பணத்துக்கும் வீண் விரயம் வர இருக்கிறது என்பதை சமூகப் பொறுப்புள்ளவர்கள் அறிவார்கள்.

கடுகு குறித்த உரையுடன் விதைச் சட்டம் குறித்தும் திரு. ம. செந்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றை பேஸ்புக்கில் கேட்க நேரிட்டது. அதன்படி விதைச் சட்டம் என்பது விவசாயிகளை நசுக்கும் ஒரு கொடுங்கோல் சட்டம் என்று பேசுகிறார். அதை 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்த வேண்டியிருந்தது. விவசாயிகள் ஒருவருக்கொருவர் இலவசமாக விதைகளைப் பரிமாறிக்கொள்ளலாம்; அதில் எந்த சட்டரீதியான தடையும் இல்லை. ஆனால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு விற்றால் விதைச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது, இது பெரிய மோசடி என்ற ரீதியில் பேசுகிறார். விவசாயம், வியாபாரம், நுகர்வோர் பாதுகாப்பு, உற்பத்தியாளர் பாதுகாப்பு, அரசாங்க கட்டுப்பாடுகள், வரி போன்ற எதுவுமே தெரியாத ஒருவரால்தான் அவ்வாறு பேச முடியும். தினந்தோறும் நாம் சந்திக்கும் நபர்களில் யாராவது இவ்வாறு பேசினால் மொக்கை ஆசாமி என்றோ, அறுவைக் கேசு என்றோ சொல்லி, பார்த்தாலே ஓட்டம்பிடிக்க ஆரம்பிப்போம்.

விதைகளை உற்பத்தி செய்தவர் விற்பனை செய்யும்போது வியாபாரி ஆகிவிடுகிறார். வியாபாரம் செய்யும்போது எடை, தரம், எண்ணிக்கை என பலதரப்பட்ட விசயங்கள் கணக்கில் வருவதோடு அரசாங்கத்துக்கு அதில் வரி வருவாயும் கணக்கில் வந்துவிடுகிறது. ஊருக்குள் விதை விற்பனை செய்பவர் பெரிய நாட்டாமையாக இருந்து வாங்கிபவர் சாதாரண ஆளாக இருந்து, விதையானது எடை குறைவாகவோ, முளைப்புத்திறன் குறைவாகவோ இருந்தால் வாங்குபவருக்கு பாதுகாப்பு சட்டம் இல்லாமல் போனால் எப்படி கிடைக்கும்? விற்பவர் சாதாரண நபராக வாங்குபவர் பெரும்புள்ளியாக இருந்து, அந்த நபர் பொய்யாக எடை குறைவாக இருக்கிறது, முளைக்கவில்லை என்று தகராறு செய்தால் விற்பவருக்கு சட்டம் இல்லாமல் போனால் எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? நாளையே திரு. செந்தமிழன் போன்ற செல்வாக்குமிக்க நபர்கள் விற்கும் விதை முளைக்கவில்லை அல்லது எடை குறைவு என்று யாராவது புகார் செய்தால் சட்டம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் வாடிக்கையாளருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? சட்டப்படி கணக்குவழக்கு இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு வரி வருவாய் எப்படி கிடைக்கும்?

தந்தை மகனுக்கோ, மகளுக்கோ அவரது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை எழுதி வைக்கும்போது கூட அரசுக்கு செலுத்தவேண்டிய குறைந்தபட்ச முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒரு விவசாயி (தன் மகனாக இருந்தாலும்) இன்னொரு விவசாயிக்கு நிலத்தை எழுதிவைக்க எதற்காக கட்டணம் செலுத்தவேண்டும் என்று நாம் கேட்பதில்லை. ஆனால் திரு. செந்தமிழன் அவர்கள் கேட்கக்கூடும். ஏனென்றால் சுற்றுச்சூழல் போராளிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள்; எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

ஆயிரம்தான் நாம் விமர்சனம் செய்தாலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை இந்தியாவிலேயே சிறப்பான ஒன்று. தமிழகத்தில் ஏன் வட இந்தியாவைப்போல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றால் அதில் பல ஆயிரக்கணக்கான வேளாண் அதிகாரிகளின் உழைப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய Compliance சுமை தமிழகத்தில்தான். ஒவ்வொரு நிகழ்வையும் நெருக்கமாக கவனிப்பதும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன், தொழில் முனைவோருடன் அரசு அதிகாரிகள் நல்லமுறையான தகவல் தொடர்புகளைப் பேணுவதிலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்னோடிகளாகவே திகழ்கின்றனர். மற்ற மாநிலங்களில் வேளாண்மைத்துறை, விவசாயப் பல்கலைக்ககழக அதிகாரிகளுடன் நெருங்கி பணிபுரிந்த பலருக்கும் இது தெரியும். பூச்சிக்கொல்லி, உரம், விதைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை தீவிரமாக மதித்து அமுல்படுத்தும் மாநிலங்களுள் தமிழகம் முதலிடத்தில்தான் இருக்கிறது.

சூழலியல் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் நாட்டு இரகம், வனம் வளர்ப்பு என்று கிளம்பிவரும் மறைமுக உயிரியல் தீவிரவாதம் நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கவல்லது.

மாதொருபாகன் சாகித்ய அகாடமி விருது சர்ச்சை – போலி சாதிப் பெருமை பேசும் அன்றாடங்காய்ச்சிகள்

மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான One Part Woman-க்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. பெண்களின் கண்ணியத்துக்கு களங்கம் வரும்படி நாவலில் சில பகுதிகள் உள்ளதாக நம்புகிறார்கள். இதில் 99.9% ஆட்கள் அந்த சர்ச்சைக்குரிய இரண்டு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு கூவுகிறார்கள். அப்படியெல்லாம் பார்த்தால் இராமாயணம், மகாபாரத்தைவிட பெண்களை இழிவாக பாவிக்கின்ற நூல்கள் இருக்கவே முடியாது.

திருச்செங்கோடு மலையடிவாரத்தில் ஒரு தெருவைத் திருவிழா நாளின்போது தேவடியாள் தெரு என்றே மக்கள் சொல்வதாகவும், அன்றைய தினம் அங்கு வரும் அனைவருமே தேவடியாள்தான் என்று மக்கள் எளிதாக எடுத்துக்கொள்வதாகவும் கதையின் போக்கில் வருவதுதான் பிரச்சினை. அதை செவிவழி வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் எழுதியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அதற்கு ஆதாரம் இல்லாதபோது அஃது ஒரு கற்பனைக் கதையாகிவிடுகிறது. கதை மாந்தர்களான காளியும் பொன்னாளும் கவுண்டர் என்பதற்கு பதிலாக வன்னியர் என்றோ, நாயக்கர் என்றோ இருந்திருந்தால் கேள்வியே வந்திருக்காது.

திருச்செங்கோட்டு மலைமீது ‘வறடிக் கல்’ இருப்பதையும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அதை சுற்றிவந்து வணங்கினால் குழந்தை உண்டாகும் என்பதும் ஒரு நம்பிக்கை என்பதைச் சுற்றிலும் கதை நகர்கிறது. திருச்செங்கோட்டுத் தேர்த் திருவிழா மட்டுமல்ல பல ஊர்களிலும் திருவிழாக்கள் என்பது வெறும் சாமி கும்பிடும் நிகழ்வன்று. வேளாண் குடிகளின் ஓய்வுக்காக, களிப்பிற்காக, வணிக வாய்ப்புகளுக்காக, திருமண ஏற்பாடுகள் செய்ய, கால்நடைகள், நிலங்கள் வாங்க விற்க என ஒரு பெரிய பண்பாட்டு அசைவாகவே இருந்திருக்கின்றன. சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, தேர்களின் மீது ஒருசாரார் உட்கார்ந்துகொள்ளவும் மற்றவர்கள் இழுக்கவுமான காலகட்டம்வரை திருவிழாக்கள் என்பது மக்களுக்கானதாக இருந்து, கடவுளுக்கானதாக மாறிவிட்டிருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்கள், crushகள், காதல்கள், காமங்கள் எல்லாம் part of the game. இதையெல்லாம் பார்த்தேயிறாதவர்கள் நிச்சயமாக ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. அப்படியெல்லாம் எங்க ஊர் திருவிழாவுல இல்ல தெரியுமா என்று சொல்வதாக இருந்தால் தயவுசெய்து என்னை அன்ஃபிரன்ட் செய்துவிடவும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களை விதைத்த குற்ற உணர்ச்சிக்கு நான் ஆளாக நேரிடும்.

கவுண்டர் சமூகம் என்பது ஒரு மிக உயர்வான கற்பு நெறிகளைக் கொண்டதாகவும் அதை நாவல்களில், கற்பனைக் கதைகளில்கூட சீண்டக்கூடாது என்பதும் கொங்கு கவுண்டர் சமுதாய அடிப்படைவாதிகளின் வாதம். கடுமையாக உழைத்து ஒரு குடும்பம் முன்னேறி கொஞ்சம் வசதி வாய்ப்போடு வாழப்பெற்றால் அக்குடும்பத்திலுள்ள பெண்களின் கற்பொழுக்கத்தை உறவினர்களே கேலி செய்து நகைப்பது கவுண்டர் சாதியினரின் ஒரு peculiar trait. ‘எல்லாம் காலைத் தூக்கி சம்பாரிச்சதுதான’ என்று ஒரு குடும்பத்தின் உழைப்பை, தன்னூக்கத்தைக் கேவலமாக பேசும் வழக்கம் வேறு எந்த சாதியினரிடத்தும் காண முடியாத ஒன்று. இதை நான் சந்தித்த கவுண்டர் சாதியினரில் யாருமே மறுத்ததில்லை.

நோ, நோ, எங்க சாதிசனத்துல அப்படியெல்லாம் கிடையாது என்று மறுப்பவர்கள் வீரமாத்திகளின் வரலாறு, அண்ணமார் கதை என எதுவுமே தெரியாமல் மீசைய முறுக்கு போன்ற பாட்டு கேட்டு வளர்ந்த சுள்ளான்களாக இருப்பார்கள்.

நம்மைச் சுற்றிலும் எல்லாமே பரந்து விரிந்து கிடக்கிறது. நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அப்படி எதுவுமில்லை என்று ஆகிவிடுவதில்லை. ‘மரப்பல்லி’ நாவலில் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு போகும் இரண்டு பெண்கள் லெஸ்பியன் உறவில் விழுவதையும், அதில் ஆதிக்கம் செலுத்தும் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதையும் வா. மு. கோமு இயல்பாக எழுதியிருப்பார். ஊத்துக்குளி பகுதியில் வரும் இந்த கதையில் பெண்ணியவாதிகளின் மனம் ஏற்றுக்கொள்ளவே முடியாத சில விசயங்கள் இயல்பாக வந்துபோகும். பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவை இல்லை என்றாகிவிடா. ஊத்துக்குளியின் பெயரில் லெஸ்பியன் கதையா என்று ஒரு கும்பல் கிளம்பி அவரிடம் சண்டைக்குப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வா. மு. கோமுவின் ‘சயனம்’ நாவலும் கவுண்டர் பந்தாவின் பலவற்றை இயல்பாக உடைத்துச்செல்லும். மற்றபடி அன்பும், பண்பும், ஈகையும், தர்மமுமாக வாழ்ந்து வருவது கவுண்டர் சாதி என்று பேஸ்புக்கில் மீம்ஸ் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.

மாதொருபாகன், குழந்தை இல்லாத தம்பதிகளை உறவினர்கள் அவமதிக்கும் பல நிகழ்வுகளை பதிவு செய்திருப்பதோடு, சொத்துப்பிரச்சினையின் பல பரிமாணங்களையும் பேசுகிறது. காளியின் சித்தப்பா பாத்திரம் பல ஜீரணிக்க முடியாத உண்மைகளை பேசுகிறது. அது மட்டுமல்லாது அர்த்தநாரி, ஆளவாயன் நாவல்களும் முக்கியமானவை.

வழக்கம்போல பல தேசபக்தர்கள் இதில் புகுந்து விளையாடியதால் ஹிந்து மதப் பிரச்சினை என்று சில பத்திரிகைகள் எழுதியது. ஆனால் திருச்செங்கொட்டை அடுத்த நாமக்கல், பரமத்தியிலெல்லாம் ‘இந்து மதப் பிரச்சினையா, அப்படின்னா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் எழுதி இரண்டு வருடமாகியும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென்று பெண்கள் மீது பாசம் பொங்கி வழிந்தது எப்படி? அரசியல் கேரியர் வளர்ச்சிக்காக ஈமு கோழித் திருடர் (ர் – ரெஸ்பெக்ட்) ஒருவரால் பிடுங்கப்பட்ட தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் வன்னியர்களுக்கும், கவுண்டர்களுக்கும் அடிதடியாகி நீதிமன்றம் வரை சென்றது தனியரசு முதன்முறை எம்எல்ஏ ஆன தேர்தல் முடிவுகளின்போதுதான். ஒவ்வொரு ஊராக தனியரசு படம் போட்ட போர்டு வைக்கும் முன்புவரை அங்கு கவுண்டர்களுக்கும், பட்டியலினத்தவருக்குமான மோதல் என்பது மிக அரிதான ஒன்று. தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையால் அந்த பகுதியில் சாதிய ரீதியிலான தேவையே இல்லாத உரசல்களைத் தாண்டி கவுண்டர் சாதிக்கான மூன்று நான்கு பலன்களை யாராவது பட்டியலிட்டால் இந்த பதிவை நீக்கிவிடவும் தயார்.

கொங்கு டா, கவண்டன் டா என்று சொல்லித் திரியும் சில பல சில்லறைப்பயல்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்து பல ஊர்களுக்குள் தேவையே இல்லாத பிரச்சினைகளை உண்டாக்குவதில் அமெரிக்காவாழ் கொங்கு கவுண்டர் சாதிச்சங்க கழிசடைகளில் சிலருக்கு முக்கிய பங்குண்டு.

மாதொருபாகன் ஒரு பிரச்சினையே இல்லை. அது பெண்களின் கற்புக்கு களங்கம் விளைவிக்கும்வண்ணம் உள்ளது என்று சொல்லும் நபர்களின் உண்மையான ஆதங்கமெல்லாம் பெண் என்றால் ‘ஏனுங் மாமா கூப்டீங்ளா, காப்பித்தண்ணி போட்டாரனுங்ளா?’ என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த கூட்டமாகத்தான் இருக்கும். மற்றபடி கற்புக்கு விளக்கு பிடிக்கும் டகால்ட்டி எல்லாம் சும்மா.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அந்தக் காலத்தில் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கோவில்களுக்கு இருந்தன. அவை எப்படி பிராமணர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தன, அவர்கள் எப்படி கவுண்டர், நாயக்கர் சமூகத்திற்கு விற்றார்கள் என்பதை பொதுவெளியில் பேசினால் வரலாற்று ஆதாரம் இருக்கிறதா என ஒரு கும்பல் கிளம்பி வருவார்கள். (பேக்கரி டீலிங் அக்ரிமென்ட்தானே என்பவர்கள் பிளாக் செய்யப்படுவார்கள்).

பின்குறிப்பு: பரமத்திவேலூர் எனது சொந்த ஊர் என்பதோடு மேற்கு மாவட்டங்களில் மிக விரிவாக பயணம் செய்து வருபவன் என்ற முறையில் இங்குள்ள சாதியக் கட்டமைப்பு எனக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி நான் எந்த சாதி என்ற ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

எங்கள் கிராமத்தின் பரிணாம வளர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வாத்து-கா-கெபாப் உண்ட கையோடு ஒரு புள்ளிவிவரத்தை தயார்செய்து குறுக்கும்நெடுக்குமாக ஓட்டியதில் சில தகவல்களை குறிப்பிட்டாக வேண்டும் என்று தோன்றியது.

எங்கள் ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் சில வீடுகள் தோட்டங்களில் உள்ளன. அந்த காலத்தில் பிராமணர்களிடம் இருந்த நிலம் என்பதால் அரசாங்க ரெக்கார்டுகளில் இன்னமும் அக்ரஹார மணப்பள்ளி என்றுதான் இருக்கிறது. அதன்பின் யாரும் நிலங்களை விற்கவோ வாங்கவோ இல்லையென்றாலும் பாகப்பிரிவினை பத்திரங்களில் எல்லாம் கைநாட்டுகளை மட்டுமே பார்க்கமுடியும். முதன்முறையாகவும் கடைசியாகவும் கி.பி. 2001-இல் தார்சாலை போடப்பட்டது.

சராசரி நில உடைமை என்பது சுமார் ஐந்து ஏக்கர்கள், விவசாயம் மட்டுமே பிரதானத் தொழில், வங்கிகளில் கடன் வாங்கி வட்டி கட்டியே வாழ்க்கையை ஓட்டி வந்தனர். ஜெர்சி/சிந்து மாடுகள், எருமைகள், ஆடுகள் இல்லாத வீடு கிடையாது. அதிகபட்ச கல்வித்தகுதி SSLC பாஸ் அல்லது பெயில். பெரும்பாலான பெண்கள் ஐந்தாவது முதல் எட்டாவது வரை படித்தவர்கள், கணிசமான எண்ணிக்கையில் கைநாட்டும் இருக்கிறார்கள். அவர்களது வாரிசு தலைமுறையானது குடும்பக்கட்டுப்பாட்டு பிரச்சாரங்கள் வெற்றிகரமாக செயல்படும்போது ஏற்பட்ட Baby boom மூலமாக 80-களின் இறுதியில், 90-களில் பள்ளி செல்ல ஆரம்பித்தவர்கள். அவர்களது திருமண காரணங்களுக்காகவே பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் பல வீடுகள் விறகு அடுப்பிலிருந்து இலவச கேஸ் இணைப்புத் திட்டம் வாயிலாக LPG சிலிண்டருக்கு மாறியது.

ஊருக்குள் எங்கள் தலைமுறையின் தற்போதைய கல்வித்தகுதியையும் அதன் எண்ணிக்கையையும் கீழே பார்க்கலாம்.
Ph.D – 1
M.V.Sc – 1
M.Sc Agri – 1
M.E. – 1
M.Phil – 1
M.Sc – 7
B.E – 9
B.A – 4
B.Sc – 2
B.B.A – 1
Diploma – 2
+2 – 4
SSLC – 1

அரசாங்க உத்தியோகம், ஆன்சைட், கார்ப்பரேட் வேலை, சொந்தத்தொழில் என வாரிசுகள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் பழைய ஆட்களே விவசாயம் செய்துவருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கிறதாம்; அதனால் ஒவ்வொரு வீடாக ஏசி பொருத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று கோடைகளுக்குள் அனைத்து வீடுகளும் ஏசி வந்துவிடும்போல தெரிகிறது. ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், i20, xuv500, பென்ஸ் கார்கள் புழுதியைக் கிளப்பியவண்ணம் வந்து செல்கின்றன.

கூரை கூட இல்லாமல் பிள்ளையார் என நடப்பட்டிருந்த இரண்டு மூன்று கற்சிலைகளுக்கு நடுவில் அவ்வப்போது நாய்கள் படுத்துக் கிடக்கும். கடந்தவருடம் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டு ஶ்ரீ செல்வ விநாயகர் என பெயரிடப்பட்டதுடன் கர்ப்பகிரஹத்துக்குள் ஐயரைத் தவிர ஊர்க்காரர்கள் செல்வது தடை செய்யப்பட்டுவிட்டது. பண்டாரம் மணியடிப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பதால் எப்போதாவது ஒருமுறை வந்து சென்றவரும் நிறுத்தப்பட்டுவிட்டார். அமாவாஸ்யை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி என மாதத்தில் மூன்று நான்கு நாட்களுக்கு ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என ரேடியோசெட்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்குமளவுக்கு பாடுகிறது.

எல்லைக்கருப்பன் இப்போது ஶ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகி கோழி, கிடா வெட்டவேண்டாம் சரக்கரைப்பொங்கல் போதும் என்று சொல்லிவிட்டது. ஜெர்சி, எருமைப் பாலைவிட நாட்டுமாட்டுப்பால் உடலுக்கு நல்லது என்பதால் நாட்டுமாடுகள் வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சைக்கிள், TVS50-களைவிட ஆக்டிவா, ஸ்கூட்டிகளில் சென்றால் உடம்புவலி ஏற்படுவதில்லையாம். மோடி நிர்வாகம் செம்மையாக இருப்பதாகவும் தமிழகத்தில் பாஜக இல்லாமல் போனது பெரிய இழப்பு என விஷேசங்களின்போது வெற்றிலைபாக்கு குதப்பியவாறே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தவாறு அளவளாவுகின்றனர்.

இதையெல்லாம் பார்த்தபிறகு பாஜக ஆளும் மாநிலங்கள் போல தமிழகமும் ஆக வேண்டும் என்று எனக்கும் தோன்றுவது ஆச்சரியமில்லைதானே?

ஆந்திராவின் கடியம் பகுதியிலுள்ள நர்சரிகள் – குறிப்புகள்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடியம் பகுதியில் 1950-களில் அண்ணன் தம்பிகளுக்கு சொத்து பிரிக்கும்போது ஊனமுற்ற தம்பி ஒருவருக்கு வெறும் அரை ஏக்கரைக் கொடுத்துவிட்டு மீதமுள்ள நிலத்தை அண்ணன்கள் வைத்துக் கொள்கின்றனர். அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அரை ஏக்கர் கிடைத்ததே என்று ஏற்றுக்கொள்கிறார் திரு. பல்ல வெங்கண்ணா. விதவிதமாக பல செடிகளை பதியனிட்டு, தொட்டிகளில் அடைத்து வளர்த்து விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார். நல்ல தரம், தொழில் சுத்தம் காரணமாக அவரது செடிகளை பலரும் வாங்கிச்செல்ல ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக நாற்றங்காலை விரிவுபடுத்துகிறார். சொந்தமாக நிலம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் வருவதுபோல கடின உழைப்பால் சில ஆண்டுகளில் அண்ணன்களை அசால்ட்டாக மிஞ்சிச் செல்கிறார் பல்ல வெங்கண்ணாகாரு.

இன்று கடியம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட நர்சரிகள் 20000-க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் தொழிற்சாலை கணக்காக இயங்கி வருகின்றன. கடியம் நர்சரி என்று கூகுளிட்டால் வரும் முதலில் வரும் ஸ்ரீ சத்யநாராயணா நர்சரி பல்ல வெங்கண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அந்த நர்சரி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, ஊனமுற்ற ஒருவரால் ஒரு பிராந்தியத்தின் அடையாளமே மாறி விட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க பலவகையான அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள், மரங்களை கடியம் பகுதிதான் அனுப்பி வைக்கிறது. உங்கள் பகுதியில் இருக்கும் ஏதாவது நர்சரியில் விசாரித்துப் பார்த்தால் ஆந்திராவில் இருந்து வருகிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த அலங்காரச் செடி தொழிலில் 70-80% ஆந்திர சப்ளைதான்.

நகரங்களில் சாக்கடை தோண்டுவதற்கு மரங்களுக்குப் பின்னாலும், அலைபேசி சேவைகளுக்காக மரங்களுக்கு முன்னாலும் தோண்டி போதுமான அளவுக்கு பக்கவாட்டு வேர்களை அறுத்துவிடுகிறார்கள். விளம்பரத் தட்டிகள் தொங்க விடுவதற்கு ஆணி அடித்து, அது துரு ஏறி, ஒரு நல்ல நாளில் மரத்தின் மையப்பகுதியில் துளை உண்டாகி ஒரு மிக நல்ல நாள் பார்த்து வாகனங்கள் மீது விழுகிறது. சில உயிர்களை அவ்வப்போது பலி வாங்குகிறது.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டி அகற்றப்படும் மரங்களை வேரோடு தோண்டி எடுத்துச்சென்று பிறிதொரு இடத்தில் நடுவதை ஏதோ வேள்வி போலவும், சாதனையாகவும் ஒருசாரார் கொண்டாடி வருவதைப் பார்க்க முடிகிறது. இருபது முப்பது ஆண்டுகள் வளர்ந்த ஆணிவேரை சில அடி ஆழத்தில் வெட்டிவிட்டு எடுத்துவிட்டு வேறொரு இடத்தில் வைத்தால் மறுபடியும் அதே வலுவில், பருமனில் ஆணி வேர் வளருமா, பாதுகாப்பானதா என்பது ரூபாய் நோட்டை மாற்றிவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடு்மா என்பதைப் போன்ற பதில் இல்லாத கேள்வியாகும்.

கிட்டத்தட்ட இருபது அடி உயரமுடைய மரங்களை 3×3 அடி அளவுள்ள பைகளில் வளர்த்து 500-1000 ரூபாய் விலையில் கடியம் நர்சரிகளில் விற்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய்களை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக செலவிடும்போது ஓரிரண்டு இலட்சங்களை தரமான பெரிய மரக்கன்றுகளுக்காக செலவிடுவதில் தவறில்லை. மேலும் சிறிய மரங்களுக்கான வேலி செலவு, ஆடு மாடுகள் தொந்தரவு என எதுவும் கிடையாது என்பதோடு நடப்பட்ட அனைத்து மரங்களும் அடுத்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட முழு மரங்களாகிவிடும். 100% survival இருக்கவும் சாத்தியம் அதிகம். நிச்சயமாக ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துச்சென்று நடுவதற்கு ஆகும் செலவை விட குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பின்குறிப்பு:
1) TQM என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் என்றாலும் அந்த அளவுக்கான உற்பத்தித்திறனை அங்குள்ள தொழிலாளர்கள் வெளிப்படுத்துவதால் ஆர்கானிக் நர்சரி கசமுசாவெல்லாம் அங்கு கிடையாது.

2) ஆணிவேரை கணிசமாக வெட்டிவிட்டு மரத்தை வேரோடு பிடுங்கிவந்து வேறிடத்தில் நடும் eco green orgasmic கோஷ்டிகளோடு எனக்கு எந்த பஞ்சாயத்தும் கிடையாது; அதனால் எங்கேயும் கோத்துவிட வேண்டாம்.

ஜெயமோகனுக்கு ஒரு பதில் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஒத்திசைவு இராமசாமி அவர்களின் வலைப்பூ பதிவை மேற்கோள் காட்டி திரு. கே. அவர்கள் உங்களுக்கு வரைந்த கடிதத்தையும் அதற்கான உங்கள் பதிலையும் வாசித்தேன். இதற்காக நேரமெடுத்து உங்களது கருத்துகளைப் பதிவு செய்தமைக்கு நன்றி. அதுகுறித்து சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

(பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு எழுதிய கடிதம்: http://www.rsprabu.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/75/

ஒத்திசைவு இராமசாமி அவர்களின் வலைப்பூ பதிவு: https://othisaivu.wordpress.com/2017/07/09/post-750/

ஜெயமோகன் அவர்களின் பதிவு: http://www.jeyamohan.in/100321#.WXmWGVThWf0 )

விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நம்மாழ்வாரின் வாகனம் அமைப்புக்கு நன்கொடை திரட்டி அளிக்கப்பட்டதை திரு. கே நினைவுகூர்ந்ததையும், அதற்கு பதிலளிக்க நீங்கள் கவனமாக மறந்துவிட்டதையும் என்னைப்போலவே பலர் கவனித்திருக்கக்கூடும். ஏதாவது ஒன்றின்மீது நமக்கு அதீத பிரியம் ஏற்படும்போதுதானே நிதியுதவி அளிக்கப் புறப்படுவோம். அதைச்சார்ந்த பலவும் பொதுவெளிகளில் விமர்சனத்துக்குள்ளாகும்போது ஒரு தர்மசங்கடமான சூழல் உருவாவதையும் அதற்காக பலவாறாக புரியாத வாசகங்களால் முட்டுக்கொடுப்பதையும் இணையம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. வந்தேறி, ஒறவுகளே, தந்திரோபாய பின்னகர்வு போன்றவையும் இதில் அடங்கும்.

/இந்தியவேளாண்மையைப் புரிந்துகொள்ளாமல், வெறும் கல்விக்கூடநிபுணர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியின் எதிர்விளைவுகளை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். நான் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயம் செய்தவன். அவ்வனுபவத்தில் சொல்கிறேன்./

/இன்று வாழைக்காய்க்குள் நேரடியாக குலைக்காம்பு வழியாக யூரியாவும் பூச்சிமருந்தும் செலுத்தப்படுகின்றன. அதை நாம் உண்கிறோம். கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு வயல்வழியாக காலைநடை செல்லமுடியாது. தும்மலும் மயக்கமும் வரும்.பலநோய்களுக்கு இதுதான் காரணம். அதைக்கொண்டு ஒரு மாபெரும் மருத்துவ வணிகம் கட்டி எழுப்பப் பட்டுள்ளது/

/இடுபொருட் செலவு மிகுந்து விவசாயம் அழிந்துவிட்டது. தமிழகத்தின் தென்பகுதியில் நீங்கள் பயணம்செய்தால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் சும்மா போடப்பட்டிருப்பதைக் காணலாம். பருத்தி காய்கறி விளைந்த நிலங்கள். மாற்றுத்தொழில் வந்தால் விவசாயத்தை மக்கள் விட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்திய யதார்த்தம். விவசாயம் பொய்க்கிறது, மறுபக்கம் விவசாயநிலத்தில் வாழ்வதனால் வரும் நோய்கள். அதன் மட்டுமீறிய செலவு. அதன் விளைவான கடன், தற்கொலை./

இந்த வரிகளையெல்லாம் படித்தவுடனே “பசுமைப் புரட்சியின் கதை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதியிருந்த முன்னுரை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பத்திரப்பதிவுத் துறையில் முழுநேர ஊழியரான உங்கள் அப்பா, விவசாயப் பட்டதாரியாக இருந்தாலும் தபால்துறையில் ஊழியரான உங்கள் மனைவி, நீங்களும் அரசாங்க உத்தியோகஸ்தராக பாதுகாப்பான வருமானத்துடன் வாழும்போது பசுமைப்புரட்சி வெறும் கல்விக்கூட நிபுணர்களால் கொண்டுவரப்பட்டதாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

வாழைக்காய்க்குள் குலைக்காம்பு வழியாக யூரியாவும், பூச்சிமருந்தும் செலுத்தப்படுவதாக சொல்கிறீர்கள். யாராவது எதையாவது எங்காவது நூதனமாக செய்துகொண்டு இருப்பதை ஊரே செய்வதாக சொல்லமுடியாது அல்லவா? பூச்சிமருந்தையோ, பூஞ்சாண மருந்தையோ குலைக்காம்பு வழியாக செலுத்த முற்படும் விவசாயிகளை பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கம்பெனிகளில் வேலை செய்பவர்களே முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். வாழை மொட்டு வெளிவரும்போது தேனி, கம்பம் பகுதிகளில் சிலர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் டானிக்குகளை தெளித்துவிடுவது உண்டு; அதற்காக அந்த பிராந்திய விவசாயிகள் அனைவரும் டானிக்குகள், வளர்ச்சி ஊக்கிகளை வரிசையில் நின்று வாங்கிவந்து தெளித்து வாழையை நச்சாக்குகிறார்கள் என்று சொல்வது பல சராசரி சம்சாரிகளை அவுசாரி ஆக்கும் செயலல்லவா?

மேற்கு மாவட்டங்களில் கேரள நர்சுகள் என்றால் ஐட்டம் கேர்ள்ஸ் என்ற மனவோட்டம் நடுத்தர வயது ஆண்களில் பலருக்கு உண்டு. இதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்றால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இழுத்துக்கொண்டே இருப்பார்கள். பிளாஸ்டிக் அரிசி விற்கிறார்கள், ஜிஎஸ்டி-யால் மளிகைக்கடையில் விலை குறைந்துவிட்டது என்று சொல்பவர்களும் இப்படித்தானே. வாழைக் குலைக்காம்பில் பூச்சி மருந்து செலுத்துவது, காளிபிளவரைப் பூச்சிமருந்துக்குள் முக்கி எடுப்பது எல்லாமே கேரளத்து ஐட்டம் நர்சு கதை மாதிரிதான். எங்காவது விதிவிலக்காக நடைபெறும் சம்பவங்களை சராசரியான நிகழ்வுகளாக்கி நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும் என்று அடித்துவிடுவதைச் சுட்டிக்காட்டுவதை நான் வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

மாற்றுத்தொழில் வந்தால் மக்கள் விவசாயத்தை விட்டுவிடுவது ஒன்றும் நடக்கக்கூடாத ஒரு நிகழ்வன்று. பாதுகாப்பான உபரி வருவாய் இருப்பவர்களே விரைவாக விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்; அவ்வகையில் தென்மாவட்டத்தினர் தேர்ந்தெடுத்தது ஓரளவுக்கு பாதுகாப்பான வேலை வாய்ப்புகளை என்பதால் அந்த மாற்றம் கண்கூடாக தெரிகிறது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையை தென்னைமரங்கள் நிறைந்த ஊராக மட்டுமே இன்று அனைவருக்கும் தெரியும். அங்கு மட்டுமல்லாது மேற்கு மாவட்டங்களின் தென்னை மரங்களின் சராசரி வயது 25-30தான். அதற்கு முன்பாக பொள்ளாச்சி, சங்ககிரி போன்ற ஊர்கள் கடலை விளைச்சலுக்கு புகழ்பெற்றவை. கடலையில் வரும் சிவப்பு கம்பளிப்புழுக்கள் சாலைகளை மொந்தை மொந்தையாக கடக்கும்போது போக்குவரத்து நிறுத்தப்பட்ட கதைகளை பல பேராசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். பலவகையான பூச்சிக்கொல்லிகளை அவற்றின்மீது சோதித்துப் பார்க்க MM 540 ஜீப்புகளில் அந்தகாலத்தில் சுற்றிய சிலருடனும் பணிபுரிந்த அனுபவம் உண்டு.

கோவையும், திருப்பூரும் உலகமயமாக்கலை விவசாயக்குடும்பத்தில் இருந்து படித்து வந்த முதல் தலைமுறை இளைஞர்களின் துணையுடனேயே கையாண்டது. அவர்கள் மாற்றுத்தொழிலை நோக்கி சென்றதும் விவசாய நிலத்தை சும்மா போட வேண்டாமே என தென்னை மரத்தை நட்டுவிட்டுச் செல்ல அவை வளர வளர மிக அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவை தரும் உபரி வருமானம் காரணமாக மக்களும் ஆக்ரோஷமாக இருக்கும் தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். அதனால் அடிமடை விவசாயிகள் பாதிக்கப்பட்டது உண்மை. சாயப்பட்டறைகளாலும், தோல்ஷாப்புகளாலும் இதேதான் நடந்தது. தங்களைப் போன்ற நாலும் தெரிந்தவர்களும் கூட அந்த பழியை பசுமைப்புரட்சியின் மீது மட்டும் இறக்கிவைத்து விடுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கவுண்டர் சாதி ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் உள்ள சிரமங்களையும் அதற்கான காரணங்களையும் கள ஆய்வுகளோடு Economic & Political Weekly ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது (அதை கமெண்ட்டில் காணலாம்). திருமணத்திற்கு பெண் கிடைக்காத சூழலுக்கும், ஒரு பிராந்தியம் கல்வியில் முதலீடு செய்வதால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களையும், தொழிற்புரட்சியால் விவசாயம் செய்பவர்களுக்கு வரும் சமூக அழுத்தங்களையும் மிகத் தெளிவாக விளக்கும் கட்டுரை அது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் விவசாயம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது என்பதை அறிந்தவர்களுக்கு இஃது எளிதாக புரியும்.

ஆங்கிலேயர்கள் இரயில்வே அமைத்து தானியங்களை எடுத்துச் சென்றதால்தான் இந்தியாவில் பஞ்சம் வந்தது, பூச்சிமருந்து, உரம், வீரிய விதைகள், பசுமைப் புரட்சி, பன்னாட்டு கம்பெனி வியாபாரம், ஃபார்மா கம்பெனி வியாபாரம், தற்சார்பு அழிப்பு, இயற்கை விவசாயம் என்ற பொத்தாம்பொதுவான விவசாய காலம்னிஸ்ட் கட்டுரைகளைச் சார்ந்த தொணியையே நீங்களும் வெளிப்படுத்துகிறீர்கள். விவசாயமும் ஒரு தொழில்தான். சமூக மாற்றங்களை விவசாயத்தொழிலும் உள்வாங்கித்தானே ஆகவேண்டும்.

விவசாயத்தில் பசுக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒருபங்குகூட தலித் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. அவர்கள் விவசாயத்தொழிலை விட்டு வெளியேறுவதை பெயரளவுக்குக்கூட யாரும் பதிவு செய்ய விரும்புவதில்லை. விதர்பாவில் பி. டி. பருத்தியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று வரும் கட்டுரைகளில் அங்கிருந்த தலித் மக்கள் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள் என்ற எந்த விவரமும் இருக்காது. பசுமைப்புரட்சி, பன்னாட்டு ஃபார்மா கம்பெனி வியாபாரம் என்ற குண்டுசட்டியே போதுமானதாக இருக்கிறது.

அறிவியல் ஆதரவு என்பதையும் ஒருவகையான அடிப்படைவாதமாக பாவித்து இதுவும் ஒருவகையான மதப்பூசல் என்று நிறுவுகிறீர்கள். கேள்வி கேட்பவர்களை அறிவியற்பூர்வமாக பேசவில்லை என்று பகடி செய்வதாகவும் இதெல்லாம் ஒருவகையான ஐரோப்பிய சார்பு மனநிலை என்றும் கருதுகிறீர்கள். ஆனால் புனைவுக்கும், அறிவியலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதானே. தவறான வாதத்தை, வார்த்தைகளை, கோட்பாடுகளைத் தவறு என்று சொல்வதுதானே அறிவியல். செம்மெல்வெய்ஸ், கலிலியோ என ஆரம்பித்து லமார்க் வரை எத்தனை எத்தனை சான்றுகள் வரலாற்றில் பரவிக் கிடக்கின்றன.

என்னதான் ஆகச்சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் தன்னுடைய ஆதர்ச நாற்காலியில் அமர்ந்து பயன்படுத்தும் இங்க் பேனாவையே ஆகாய விமானத்திலும், அண்டார்டிகாவிலும் பயன்படுத்த முடியாது. இதற்கு ஓர் எளிய அடிப்படை அறிவியல் புரிதல் வேண்டும். அதை சுட்டிக் காட்டுபவர்களைக் கூட அறிவியல் மதவாதிகள் என எளிதாக புறந்தள்ளி விடுவது என்பது கிட்டத்தட்ட வாழ்ந்துகெட்ட நாட்டாமையின் மனநிலையின். புத்தக விமர்சனம் எழுதுகிறேன் என்று யாராவது ‘சாரு நிவேதிதாவின் வெள்ளை யானை’ என்றோ ஜெயமோகன் எழுதிய காமரூபக் கதைகள்’ என்று ஆரம்பித்து அதை ஏதேனும் பிரபல ஏடு பதிப்பித்திருந்தால் யாரை முதலில் கடிந்துகொள்வோம்? முட்டாள்தனமான விசயங்களையும், பொய்களையும் பதிப்பித்தாலும் பசுமை விகடனை கவனமாக தவிர்த்துவிட்டு, இருதரப்பையும் ‘டேய் இனிமே ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் பண்ணிகிட்டு இருக்கப்படாது, என்ன, நாஞ்சொல்றது புரியுதா?’ என முடித்து வைத்துவிட்டீர்கள்!

மாசனபு ஃபுகாக்கோவின் ஒற்றை வைக்கோல் புரட்சி படித்ததும் எனக்கு எந்தவிதமான சிலிர்ப்போ, பரவசமோ ஏற்படவில்லை. பள்ளி முடிக்கும்வரை எங்களின் வாழ்க்கையே கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. ஃபுகாக்கோவின் இயற்கை விவசாயப் பண்ணை இருக்கும் Matsuyamaவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு என் நண்பர்கள் பி. எச்.டி-க்கு போனார்கள். சாய்பாபா மகிமைகள், குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் ரேஞ்சுக்கு இங்குள்ளவர்கள் ஃபுகாகோ புராணங்களை இறக்கிவிட்டதால் நானும் அவர்களை அங்கு போய் பார்த்து வரும்படி நச்சரிக்க ஆரம்பித்திருந்தேன். அதிலும் ஒரு வட இந்திய நண்பன் ”தேரி பேன்ச்***” என்று ஆரம்பிக்குமளவுக்கு போய்விட்டதால் நிறுத்திக்கொண்டேன். விவசாயத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு துறையிலும் ஜப்பானியர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

நீங்கள் காரமடை அருகே காட்டுவிளிம்பில் நிலம் வாங்கி விவசாயியாக முயல்வதை ‘பசுமைப் புரட்சியின் கதை’ நூலின் முன்னுரையில் வாசித்தேன். யானை வழித்தடத்திற்கு அருகில், மலை மடுவுகளின் நீர்வழிப்பாதைகளில் வேலி அமைத்து இயற்கை விவசாயம் செய்வது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது. அதே பகுதியிலுள்ள நமது இயற்கை விவசாயப் பண்ணைமீது பக்கத்து தோட்டத்துக்காரர் பெட்டிஷன் போட்டுவிட, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆர்கானிக் ஃபார்மிங் செய்கிறோம் என்று விளக்கினோம். நேரில் வந்து பார்த்தவர்கள் ”வெரிகுட் வெரிகுட், உங்களமாதிரி இளைஞர்கள் ஆர்கானிக் ஃபார்மிங் பண்ண வர்றது ஒரு நல்ல ஆரம்பம்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். இப்போதெல்லாம் இந்தமாதிரி ஃபேன்சி வார்த்தைகள் பலரை எளிதாக கவர்ந்துவிடுகிறது.

//”நாம் உருவாக்கி அனுப்பும் வேளாண்மைத் பட்டதாரிகள் நடைமுறையில் வேளாண்மை என்றால் என்ன என்றே தெரியாத அசடுகள். ஆனால் அவர்களுக்குத் தாங்கள் படிக்காத விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டிய தேவதூதர்கள், ஞானத்தின் அமுதசுரபியுடன் கிராமங்களுக்குச் செல்பவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. நம் வேளாண்மையை அழித்ததில் நம் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் அவர்களின் பட டதாரிகளுக்கும் உள்ள பங்களிப்பு சாதாரணமானதல்ல”.// நீங்கள் உதிர்த்திருக்கும் இதே வார்த்தைகளைத்தான் ஹீலர்கள் இன்றைய அலோபதி மருத்துவர்களின் மீது சொல்லி வருகின்றனர். வேளாண்மைப் பட்டதாரியோ, மருத்துவப் பட்டதாரியோ, பொறியியல் பட்டதாரியோ யாராக இருந்தாலும் UG முடித்து வெளியே வருபவர்களின் புரிதல், மனநிலை, அனுபவம் ஒன்றுதான். தஞ்சைப் பெரியகோவிலை மனக்கணக்கில் கட்டிய தமிழனுக்கு இன்று ஒரு சாக்கடை கட்டுவதற்கு ஏகப்பட்ட அளவிகள் தேவைப்படுகின்றன; தமிழனின் கட்டடக்கலையை அழித்ததே இந்த பொறியியல் கல்விதான் என்றும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்ப அந்த கத்திப்பாரா மேம்பாலம் எப்படி நிற்கிறது, மெட்ரோ ரயில் எப்படி சரிந்துவிடாமல் ஓடுகிறது என்று கேட்கவரும் அறிவியல் ஆதரவு அடிப்படைவாதிகளை நாம் புறந்தள்ள வேண்டும். ஏனென்றால் இணையமும், முகநூலும் அந்த மாதிரியான வறண்ட உரையாடல்களுக்கான களம்.

Proprietor, Partnership போலவே Private Limited or Limited என்பதும் different formats of owning a business என்ற எளிமையான விசயங்களைக் கூட நம் இளைஞர்களுக்கு சொல்லித்தராமல் கார்ப்பரேட் சதி என்று விதைக்கிறோம். பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்குபவர்களும் கார்ப்பரேட்காரர்களின் சதி என்பது அபத்தமாக இருக்கிறது. கம்பெனி சட்டத்தில் விவசாயிகளே Farmers Producer Company என்றபெயரில் கம்பெனி ஆரம்பித்துக்கொள்ள தனிப்பிரிவு உண்டு. இன்று பல எழுத்தாளர்கள் புத்தகங்களை மின்னூலாக அமேசானில் வெளியிடுகிறார்கள். இதனால் சிறு பதிப்பாளர்கள் என்ன ஆவார்கள், அச்சகங்கள் என்னவாகும், பைண்டிங் தொழில், புத்தகக் கடைகள் என்னவாகும் என்று கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அது தொழில்முறை எழுத்தாளர்களுடைய வாழ்வா சாவா பிரச்சினை; இந்த இடத்தில் மரபு, பாரம்பரியம், இயற்கை வாசிப்பு என்றெல்லாம் பேசக்கூடாது. ஓலைச்சுவடிகளிலில் ஆரம்பித்து, அச்சு கோக்கும் இயந்திரம், மின்சாரம் கண்டுபிடிப்பு என பெரிய பெரிய கட்டுரைகளை புரியாத நடையில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள்.

விவசாயிகளுக்கும் இதே மாதிரி வாழ்வா சாவா பிரச்சினை இருக்கிறது. நவீனங்களை தனக்கு தேவையான அளவுக்கு உட்கிரகிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. அல்லது அவர்களுக்கு வேறு தொழிலோ, வருமானமோ இருக்கும்பட்சத்தில் தனது பால்ய காலங்களை சிலாகித்தபடி திண்ணையில் அமர்ந்து தனக்கொப்ப மனநிலையில் இருப்பவர்களுடன் கதைக்கலாம். Jio வருகைக்குப்பிறகு அவர்களது ஒவ்வொரு அறிவிப்பின் வெம்மையும் ஏர்டெல், வோடபோனில் உள்ளவர்களுக்கு புரியும். ஐடியா, ஏர்செல்லில் இருப்பவர்களுக்கு அது நரகம். BSNL-இல் இருப்பவர்களுக்கு ஜியோ என்ற ஒரு புதிய நிறுவனம் வந்திருக்குதாம் என்ற அளவுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்; யூனியன் இருக்கிறது, அது பார்த்துக்கொள்ளும். தொழிற்புரட்சி, அதனால் இந்திய சாதிகளில் ஏற்படும் பொருளியல் நகர்வுகள், உரசல்கள், அனைத்து சாதிகளுக்கும் திறந்துவிடப்பட்ட கல்வி, அதனால் ஏற்படும் எழுச்சிகள் என எதையுமே கவனிக்காமல் பசுமைப்புரட்சியைச் சுற்றிவந்து மணி ஆட்டுவதிலேயே நமது பெரும்பகுதி ஆற்றல் செலவாகிவிடுகின்றது.

இணையமும் முகநூலும் இதற்கென்றே ஆன களங்கள். உண்மையான ஆய்வும் விவாதமும் வேறெங்கோ நிகழ்கிறது என நம்பி ஆறுதல்கொள்வோம்.

அன்புடன்,
பிரபு
27 ஜூலை 2017.