ஹாம் ரேடியோ – அறிமுகம் (HAM Radio)

ஹாம் ரேடியோ குறித்து அறிந்துகொள்வோம்.

ஹாம் வானொலியை (HAM radio) அமெச்சூர் ரேடியோ (Amateur radio) என்றும் சொல்லுவார்கள். நாம் பாடல்கள் கேட்கும் FM வானொலி ஒருவழி ஒலிபரப்பு. அதாவது வானொலி நிலையம் ஒலிபரப்புவதை நாம் கேட்க மட்டுமே முடியும். அதனால் ஒலிபரப்பு செய்யுமிடம் நிலையம் என்றும் அதைக் கேட்கும் பயனாளர்களை நேயர்கள் என்றும் அழைப்பர்.

ஹாம் வானொலி என்பது இருவழி ஒலிபரப்பு. அதாவது நாம் பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேச முடியும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். செல்போன் போல அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன் என்றே அழைக்கப்படுவர்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளருக்கும் அதாவது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அழைப்புக்குறி (Call Sign) உண்டு. ஒவ்வொரு முறை பேசும்போதும், பேசி முடிக்கும்போதும் தங்களது அழைப்புக்குறியையும், அடுத்த முனையில் இருக்கும் நிலையத்தாரது அழைப்புக்குறியையும் சொல்லியே பேசுவர்.

உதாரணமாக VU3WWD என்ற நிலையத்தார் VU3ZRF என்ற நிலையத்தை அழைக்கையில் This is Victor Uniform number three Whisky Whisky Delta calling Victor Uniform number three Zulu Romeo Foxtrot, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர். மூன்று முறைக்கு மேல் பதில் இல்லையெனில் அழைப்பதை நிறுத்திக்கொள்வர். அந்த நிலையத்தார் Victor Uniform number three Whisky Whisky Delta, this is Victor Uniform number three Zulu Romeo Foxtrot. Go ahead என்று பதில் தருவார். உரையாடல் முடிந்தபின் இரு ஸ்டேஷன்களும் அதேபோல் அழைப்புகுறியைச் சொல்லி Signing Clear என்று முடித்துக்கொள்வர்.

அழைப்புக்குறியைப் பெற மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அழைப்புக்குறி இல்லாத நபர்கள் வயர்லெஸ் ரேடியோவில் பேசுவது சட்டப்படி தவறு என்பதோடு எந்த நிலையமும் அத்தகைய அந்நிய நபர்களுடன் உரையாட முன்வர மாட்டார்கள். Radio language தெரியவில்லையெனில் பெரும்பாலும் ஹாம் ஸ்டேஷன்கள் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குப் புரியாது.

ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில் மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென பிரத்தியேக குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்த ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது.

General grade தேர்வில் restricted grade தேர்வில் வரும் பாடத்திட்டததுடன் கொஞ்சம் கூடுதலான பகுதிகள் இருப்பதோடு மோர்ஸ் குறியீடு (Morse Code) தேர்வும் உண்டு. நிமிடத்துக்கு ஆறு வார்த்தைகள் அனுப்பவும் எட்டு வார்த்தைகளைக் கேட்டு, தாளில் எழுதவும் தெரியுமளவுக்கு புலமை வேண்டும்.

மோர்ஸ் குறியீடு என்பது ஆங்கில எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் பிப், பீப் என்ற ஒலியாக மாற்றி ஒலிபரப்புவதாகும். மிகக்குறைந்த சக்தியில் நீண்டதூரம் தகவல்களை அனுப்ப தந்தி சேவையில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீடு இன்னமும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பழைய நோக்கியா அலைபேசிகளில் குறுந்தகவல் வந்தால் பிப்பிப்பிப் பீப்பீப் பிப்பிப்பிப் என்ற சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அது SMS என்ற வார்த்தையின் மோர்ஸ் குறியீட்டு ஒலியே.

Restricted grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU3 என்று ஆரம்பிக்கும். General grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU2 என்று ஆரம்பிக்கும். VU என்பது இந்தியாவுக்கான சர்வதேச வானொலி அடையாளக் குறி. Victoria’s Union என்று அந்தக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது இன்றும் அப்படியே உள்ளது.

கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களுக்கு தேர்வின் முதல் பகுதியில் விலக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் general grade தேர்வை நேரடியாக எழுதலாம். Restricted grade எழுதியே general grade எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் மோர்ஸ் கோடு சரளமாக அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம். நீச்சல், மிதிவண்டி, இருசக்கர, நான்குசக்கர வாகனம் ஓட்டுதல் போல குழந்தைகளுக்குக் அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று. வானொலி அலைகள், ஆன்டெனா, ரிப்பீட்டர், அயன மண்டல வானிலை, சேட்டிலைட் தகவல் தொடர்பு என கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதோடு பல புதிய நபர்களை உட்கார்ந்த இடத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தீவிரமாகப் பயணிக்க, கவனச்சிதறலைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட விசயத்தில் Mastery-க்கு முயற்சிக்க பதின்ம வயது மாணாக்கர்களுக்கு ஹாம் ரேடியோ ஓர் அற்புதமான கருவி.

உங்களது மகன்/மகளுடன் சேர்ந்து மோர்ஸ் கோடு பழகுவது அதைக் கற்றுக்கொள்ளுவதின் வேகத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அதற்கென ஏகப்பட்ட app-கள் உள்ளன. அதில் ஈடுபாடு இல்லையென்றாலோ, பொறுமை இல்லையென்றாலோ restricted grade தேர்வு எழுதலாம். Choose the best அடிப்படையில் ஒரு மணி நேரத் தேர்வு. இதில் தேர்ச்சிக்கு நாற்பது மதிப்பெண் எடுத்தால் போதுமானது.

Restricted grade-க்கும் General grade-க்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒலிபரப்பும் கருவியில் உள்ள Watt அளவு அனுமதியில் உள்ள உச்சவரம்பு மட்டுமே. அஃது ஒரு அதரப்பழசான சட்ட நடைமுறை என்பதால் யதார்த்தத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களில் WPC, தேர்வுகளை அவ்வப்போது நடத்துகிறது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. தேர்ச்சி பெற்ற பின் அழைப்புக்குறி பெற one time கட்டணமாக 20 ஆண்டுகளுக்கு 1000 ரூபாய், 40 ஆண்டுகள் அல்லது உங்களது 75 வயது வரைக்கும் 2000 ரூபாய் மட்டுமே. இடையில் வேறு எந்த கட்டணமும் கிடையாது.

விண்ணப்பித்த பின் தேர்வு எழுதி, முடிவு வெளியிடப்பட்டு, பின்னர் டெல்லிக்கு விண்ணப்பித்து அழைப்புக்குறி பெற குறைந்தது 9 – 12 மாதங்களாகும். அதனால் ஹாம் வானொலி உங்களது படிப்பையோ, அலுவலகப் பணிகளிலோ இடையூறு செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அழைப்புக்குறி பெற்ற பின் வயர்லெஸ் சாதனங்கள் வாங்கினால் போதுமானது. காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி போன்ற கருவியை Handy என்றும் அவர்களது வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற தனியாக மைக் உடன் கூடிய கருவி Base என்றும் சொல்லுவார்கள். Handy 3000 ரூபாயிலிருந்தும், ஆன்டெனாவுடன் கூடிய Base 6000 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது. சீனத் தயாரிப்புகள் வழக்கம்போல் ஹாம் சந்தையிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியிருக்கிறது. மகிழ்வுந்திலும் ஆன்டெனா வைத்து Base கருவியை வைத்துக்கொள்ளலாம்.

ரெட்மி, சாம்சங், ஐபோன் என்று செல்போனில் பல்வேறு range இருப்பதைப்போல விலையுயர்ந்த பிராண்டு கருவிகளும் ஹாம் வானொலிப் பயன்பாட்டில் உண்டு. உங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றைப் பொறுத்து கருவிகளை வாங்கலாம். மற்றபடி, இது வரவேற்பறையில் வைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் விலையுயர்ந்த சமாச்சாரமாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

VHF (Very High Frequency, 30 – 300 MHz) அலைவரிசைக்கு Repeaters உண்டு. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலி அலைகளைப் பெற்று amplify செய்து வேறு ஒரு அலைவரிசையில் அதிக சக்தியுடன் ஒலிபரப்பு செய்யக்கூடிய தானியங்கி கருவியை ரிப்பீட்டர் என்பார்கள். கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், இராஜபாளையம், ஏற்காடு, சென்னை என பல இடங்களில் தன்னார்வலர் குழுக்களால் ரிப்பீட்டர்-கள் நிறுவப்பட்டு தினசரி காலையும் மாலையும் வருகைப்பதிவுகள் நடத்தப்படுகின்றன.

புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ, கேபிள்கள் அறுந்தோ, மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக ரிப்பீட்டரை அடைந்து காற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை. அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு, உதவி புரிவது ஹாம் நெட்வொர்க் மட்டுமே.

காவல்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் கழகம், மாநகராட்சிகள், தீயணைப்புத் துறை போன்றவற்றின் வயர்லெஸ் நெட்வொர்க் அலைவரிசை அந்தந்தத் துறை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதோடு பேரிடர் காலங்களில் அவர்களது துறை சார்ந்த தேவைகளுக்கே அந்த அலைவரிசை போதாது என்பதால் பொதுமக்களின் அவசரகால தகவல் தொடர்புக்கு ஹாம் ரேடியோ ஆர்வலர்களின் சேவை மிகவும் முக்கியமானது.

ஹாம் ரேடியோ பயனாளர்களுடன் காடுகளில் ட்ரெக்கிங் செல்லும் குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஒரு குறிப்பிட்ட Simplex mode அலைவரிசையிலும் (3 – 10 கிமீ தொலைவுக்குள்), நகரப் பகுதிகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு ரிப்பீட்டருடனும் இணைந்திருப்பர். அதனால் காட்டுக்குள் காணாமல் போவதோ, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்குவதையோ தவிர்க்கப்படும். மேலை நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக புழக்கத்தில் உண்டு. சுனாமி, கஜா, ஒக்கி புயல் காலத்தில் ஹாம் வானொலியாளர்கள் மிக முக்கிய களப்பணியாளர்களாக இருந்தனர். தேனி குரங்காணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய குழுவில் வயர்லெஸ் கருவிகள் யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும்போது May day, May day, May day என்று சொல்லி தங்களது பெயர், இடம், ஆபத்தின் தன்மை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை சொல்லுவது ரேடியோ ஒலிபரப்பில் அனைத்து அலைவரிசைகளிலும் உள்ள நடைமுறை. வயர்லெஸ் ரேடியோவை அருகிலுள்ள ரிப்பீட்டர் அலைவரிசையில் stand by-இல் வைத்துவிட்டு தங்களது அலுவல்களைப் பார்ப்பது ஹாம் பயனாளர்களின் பழக்கம். அதனால் ரிப்பீட்டர்களில் May day அழைப்பு வந்தால் யாரோ ஒருவர் உடனடியாக பதில் சொல்லுவதோடு உடனடியாக அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வர். அதாவது யாரோ ஒருவர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமக்காக உதவக் காத்திருப்பார்.

One world, one language என்ற வாசகத்துடன் Hobby என்றே அறியப்படும் ஹாம் வானொலி மிகவும் இயல்பாக அன்றாடம் பயன்படுத்தப்பட்டாலும் அவசர காலங்களில் மிக முக்கியமானது. வரும் ஆண்டில் எதையாவது புதிதாகக் கற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் ஹாம் ரேடியோ பயன்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் அஃது உங்களைப் பெருமைப்படச் செய்யும்.

73,
பிரபு
VU3WWD

The Giant Beast That is the Global Economy

அமேசான் பிரைம் வீடியோவில் The Giant Beast That is the Global Economy என்ற ஒரு சீரியல் பார்க்கக் கிடைக்கிறது. தொகுப்பாளர் Kal Penn உலகம் முழுவதும் சுற்றி கறுப்புப் பணம், வர்த்தக மோசடி, போலி பொருட்களின் சந்தை, செயற்கை நுண்ணறிவு, ரப்பர் பொருளாதாரம், ஊக வணிகம், தற்சார்பு பொருளாதார வாழ்வியல் முறை, அகால மரணச் சந்தை சார்ந்த பொருளாதாரம், சர்வதேச நோக்குகூலிச் சந்தை என பலவற்றை அலசுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் நிறைய உரையாடல்களைத் தெளிவான ஆங்கிலத்தில் பலருடைய பேட்டியுடன் இணைத்து முன்வைப்பதோடு நமக்கு சிந்திப்பதறகும், எந்த மாதிரியான சார்பு எடுப்பது என்பதற்கும் வாய்ப்பு தந்துகொண்டே செல்கிறது.

போலி பொருட்களின் வியாபாரம் என்பது பல்லாயிரம் கோடி வர்த்தகம். இதில் காப்புரிமை, வணிக இலச்சினை தாண்டி “போலச் செய்தல்” (me too products) சந்தையும் அலசப்படுகிறது. அறிவுக்கு எதற்காக காப்புரிமை என்று நாம் கேட்டாலும் அஃது எல்லோரிடமும் இருந்தாலும் பயனபடுத்தும் சிலரே அதை மனிதகுலப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருகின்றனர், அதற்கு ஒரு விலை இருக்கிறது என்பதாகச் செல்கிறது.

அதில் கள்ள நோட்டுகளை ஒழிக்கிறேன் என்று பண மதிப்பிழப்பு செய்து நாட்டை நாசமாக்கி இதுவரை ஒழித்த கள்ளப்பணம் எவ்வளவு என்றே கண்டுபிடிக்க முடியாத அவலத்தையும் கால்-பென் அலசுகிறார். பணமதிப்பிழப்புக்கு யோசனை கொடுத்த அர்த்தகிரந்தி தலைவருடைய பேட்டியில் நாங்கள் சொன்ன யோசனை வேறு, பிரதமர் செயல்படுத்தியது வேறு அதனால் நாங்கள் அதற்கு பொறுப்பேற்க முடியாது என்று கை கழுவிவிட்ட கேவலமான சம்பவத்தைப் பார்த்தால் தேசபக்தர்கள் ‘அமேசான் அன்இன்ஸ்டால் அந்தோலன்’ என்று புறப்படக்கூடும். Zomato வீடியோ மாதிரி அமேசான் வீடியோ வந்தாலும் வரலாம் 😉

மொத்த உலகமும் ஒரேயொரு வேளாண் விளைபொருளான அதுவும் ஒரேயொரு மரத்தில் இருந்துவரும் பொருளைப் பயன்படுத்துகிறது என்றால் அது இரப்பர் மட்டுமே. இரப்பர் இலைக் கருகல் நோய் இன்று சாகுபடி செய்யப்படும் மரங்களை எளிதாகத் தாக்கும் என்பதால் இரப்பர் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருப்பதோடு உலக வர்த்தகத்தை எப்போது வேண்டுமானாலும் உலுக்ககூடும் என்று தெரிகிறது. விமானங்கள்,கார்கள் என அத்தனை சக்கரங்களும் இயற்கை இரப்பர் பால் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.

அப்படிப்பட்ட இரப்பர் தொழிலில் தொடர்ந்து விலை இறங்குமுகமாக இருப்பதையும், தோட்ட உரிமையாளர்கள் மரங்களை அழிப்பதையும் கால்-பென் அலசி ஆராய்கிறார். உற்பத்தி பெரிதாக அதிகரிக்கவில்லை, தேவை என்பது தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது, உற்பத்தி செய்யும் நாடுகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இரப்பரைப் பதுக்கவில்லை எனும்போது எப்படி சர்வதேச விலை குறைகிறது?

இரப்பர் பால் உற்பத்தியாளர் அதைப் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு விற்கிறார். அந்தத் தொழிற்சாலையோ டயர் கம்பெனிக்கு அதைக் கச்சாப் பொருளாக விற்கிறது. டயர் கம்பெனியானது சப்ளையர் உடன் ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட அளவு கச்சா இரப்பரை குறிப்பிட்ட விலையில் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. டயர் நிறுவனங்கள் அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குத் தேவையான இரப்பரைக் கையிருப்பில் தன்னுடைய குடோனில் வைத்துக்கொள்வதும் வியாபாரத்தில் இயல்பானது.

கச்சாப்பொருள் சப்ளையருக்கும், டயர் நிறுவனத்துக்கும் இடையிலான ஆண்டு ஒப்பந்தம், சப்ளை ஆர்டர், பர்ச்சேஸ் ஆர்டர் போன்றவற்றையும், டயர் கம்பெனி கையிருப்பில் உள்ள இரப்பரையும் சேர்த்து commodity futures market-இல் விற்பனை செய்வது விலையை பாதிப்பதோடு இரப்பர் விவசாயிகளையும் பாதிக்கிறது என்பதை கால்பென் சிறப்பாக நிறுவுகிறார். Futures market-இல் உள்ள நபரின் பேட்டியில் உற்பத்தி, பதப்படுத்தல், டயர் தயாரிப்பு, சப்ளை செயின், டிஸ்ட்ரிபியூசன் என எதிலும் இல்லாமல் பல்வேறு வார்த்தை ஜாலங்கள் மூலமாக அரசாங்க அனுமதியுடன் இரப்பர் வியாபாரத்தில் காசு பார்ப்பதோடு விலை ஏன் குறைகிறது என்றால் மார்க்கெட் கரெக்‌ஷன், அது இது என்று கதை விடுகிறார்.

Rubber blight வந்தால் மொத்த இரப்பர் தொழிலும் அழிந்துவிடுமே அதற்கு எதிர்கால ஊக வணிகர்கள் ஏதாவது தீர்வு வைத்திருக்கிறீர்களா என்றால் அதை Plant doctors பார்த்துக்கொள்வார்கள் என்று நழுவுகிறார்.

தற்சமயம் ஜெர்மனியின் கான்டினென்ட்டல் டயர்ஸ் மட்டுமே நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக Dandelion செடி வேர்களை வைத்து மாற்று இரப்பர் தயாரித்து சோதனை முயற்சியில் ஓட்டிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை இரப்பர் கருகல் நோய் தாக்கி உலகளாவிய சப்ளை பாதிக்கப்பட்டால் கான்டினென்ட்டல் டயர் நிறுவனம் மட்டுமே சந்தையில் இருக்கும். அந்த தொழில்நுட்பத்தை காப்புரிமை பெறாமல் விட்டாலோ, டூபளிகேட் சந்தை அதைப் பயன்படுத்தி காசு பார்த்தாலோ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்தவர்களுக்கு என்ன பலன் என்ற கேள்விக்கான பதிலை கால்-பென் நம்மிடமே விட்டு விடுகிறார்.

அகால மரணத்தின் பின்னால் உள்ள பொருளாதாரம் குறித்தும் கால்-பென் அலசுகிறார். சாலை வடிவமைப்புகள், போக்குவரத்து குறியீடு அமைப்பதில் உள்ள சின்னச்சின்ன மாற்றங்கள் கணிசமான இறப்புகளைக் குறைக்கும் என்றாலும் அதை ஏன் குறிப்பிடத்தக்க அழுத்தம் வருமவரை அரசாங்கமோ, வாகனத் தயாரிப்பு நிறுவனமோ செய்ய முன் வருவதில்லை என்ற உரையாடல்கள் நிறைய யோசிக்க வைக்கிறது.

உதாரணமாக, தவறு யார் மீது இருந்தாலும் சாலை விபத்தில் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தமிழக அரசு ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குகிறது (காப்பீட்டு நிறுவனம் வழங்கும் தொகை தனிக் கணக்கு). ஆண்டுக்கு 15000 பேர் சாலை விபத்தில் இறப்பதால் அரசுக்கு 150 கோடி ரூபாய் நேரடி இழப்பு. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் நேரடி உழைப்பில் ஈடுபட்டுள்ள திறன்மிகு ஊழியர்கள் என்பதால் மறைமுக உற்பத்தி இழப்பு, வரி வருவாய் இழப்பு என சில ஆயிரம் கோடியை தமிழகம் ஆண்டுதோறும் இழக்கிறது.

கோவை மாநகராட்சியில் காவல்துறையினரின் சிறப்பான முயற்சியால் கணிசமான விபத்துகள் குறைக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் நாளேடுகளில் வெளிவந்தன. அதன்படி பார்த்தால் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருப்பதாகத் தெரியும். நகர எல்லைக்குள் விபத்து என்பது பெரும்பாலும் வாகனத்தின் acceleration போதும் deceleration போதும் ஏற்படும். நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சகட்டுமேனிக்கும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவும் இல்லை, புதிய சாலைகள் அமைக்கப்படவுமில்லை. இருக்கும் குறுகிய சாலைகளைத் தெருநாய்களுடன் சேர்ந்து பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்துவதால் acceleration, deceleration என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதால் விபத்தால் ஏற்படும் மரணங்களும் குறைந்துவிட்டது.

ஆக, சாலை விபத்துகள் நகர எல்லைக்குள் குறைந்ததற்கு சாலையே அமைக்காத மாநகராட்சியே காரணம் என்றாலும் காவல்துறையிடமே அதற்கான புள்ளிவிவரங்கள் இருப்பதால் அதை எளிதாக விரும்பியபடி அதிகாரப்பூர்வமாக “வழங்க” முடிகிறது. Darrel Huff எழுதிய How to Lie with Statistics என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு கால்-பென் வழங்கும் The Death Episode பாரத்தால் அகால மரணங்களுக்குப் பின்னர் உள்ள எண்கள் எளிதாக விளங்கும்.

துபாய், மொரீஷியஸ், கேமன் தீவுகள் போன்ற நாடுகளில் வரி குறைவு என்பதற்காக பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் உள்ளூர் நபர்களை இயக்குநர்களாகப் போட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க வேண்டும். மற்றபடி அவர்கள் நிறுவனத்தின் அன்றாட அலுவல்களில் தலையிட மாட்டார்கள் என்பதோடு நிறுவனத்தின் எந்த தவறுக்கும் பொறுப்பாக மாட்டார்கள். வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி பல்வேறு பெயர்களில் திரும்பக் கொண்டு வருவதற்கும் உள்ள வழிமுறைகளும், அதனால் அந்த நாடுகளில் உள்ள உள்நாட்டு உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் வெறும் நுகர்வு மட்டுமே வளர்கிறது என்ற உரையாடல்களில் நமது நோக்குக்கூலி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

Are Rich People Dicks or Do Dicks Get Rich என்ற எபிசோடில் There are a lots of people who don’t seem to be a dicks but still make capitalism work for personal gain and the greater good என்று முடிக்கிறார். வாய்ப்பிருப்பவர்கள் இந்த சீரியலைப் பார்த்துவிட்டு சொல்லவும்.

தமிழக விவசாயி என்கிற அரிய உயிரினம்

இந்தியாவிலேயே அபூர்வமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது தமிழக விவசாயிகள்தான். உயர் மின் அழுத்த கம்பிகள் வயல் மீது செல்வதால் விவசாயம் பாதிக்கிறது, கேஸ் குழாய்கள் செல்வதால் விவசாயம் பாதிக்கிறது என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

தமிழகத்தில் மின் கம்பிகளோ, கேஸ் குழாய்களோ முதன்முறையாக செல்லவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பல இடங்களில் எரிவாயு, பெட்ரோலியம் செல்லும் குழாய்களும், உயர் மின் அழுத்த கம்பிகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் எங்குமே மகசூல் குறைந்துவிட்டதாகப் புகார் இல்லை.

உயர் மின் அழுத்தக் கம்பிகளுக்கு அடியிலோ, கேஸ் குழாய் மீதோ தென்னை, பாக்கு போன்ற மர வகைப் பயிர்களை சாகுபடி செய்யக்கூடாது என்பது உண்மை. ஆனால் மற்ற எந்த பயிர்களும் சாகுபடி செய்ய முடியாது என்று எந்த தடையும் இல்லை. மின்சார வாரியமோ, கேஸ் நிறுவனங்களோ அப்படி அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

தென்னை, பாக்கு சாகுபடி செய்பவர்கள் விவசாயிகளா என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி. சும்மா கிடந்த தோட்டத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தென்னையை நட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, நகர்ப்புறத்தில் வேறு தொழில்களில் இருக்கும் பகுதிநேர விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டத்துக்கு பெரும் கேடு. அந்தந்த ஊரில் யாரிடமாவது குத்தகைக்கு விட்டால் கோடை காலங்களில் சில மாதங்கள் தோட்டம் சும்மா கிடக்கும். நிலத்தடி நீர்மட்டம் மீதான அழுத்தமும் குறையும்.

முன்பெல்லாம் தங்களால் சாகுபடி செய்ய முடியாவிட்டால் பங்காளிகளிடமோ, பிறத்தியாரிடமோ குத்தகைக்கு விட்டுச் செல்வார்கள். இன்று கம்பிவேலி அமைத்து தென்னை மரம் வைப்பது அல்லது சும்மா எறிந்துவிட்டுச் செல்வது என்பதே அதிகம் என்பதால் இரண்டுமே உள்ளூர் பொருளாதாரத்துக்குக் கேடாக இருக்கிறது.

மின்கம்பிகளின் கோபுரங்கள் அமையவுள்ள இடங்களுக்கு அரசாங்கம் ஓரளவுக்கு நியாயமான இழப்பீடு தருகிறது. நூறு மீட்டருக்கு ஒரு கோபுரம் அமைவதால் நடுவில் வெள்ளாமை வைக்க முடியாது என்று சொல்பவர்கள் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் வந்து பார்க்க வேண்டும். எத்தனை காற்றாலைகள், எத்தனை சிறிய பெரிய மின்கம்பிகள். தண்ணீர் இல்லாமல் சும்மா கிடக்குமே தவிர மின் கம்பி செல்வதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று ஒரு விவசாயிகூட சொன்னதில்லை.

கம்பி அறுந்து விழுந்தா, கேஸ் குழாய் வெடிச்சுதுன்னா என்ன பண்றது என்ற அபாயங்களைப் பேசி பயமுறுத்துவதும் நடக்கிறது. சாலை விபத்துகளைவிட பெரிய அபாயம் தினசரி நமக்கு என்ன இருக்கிறது? அதை எளிதாக எடுத்துக்கொண்டு உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து செத்துட்டா என்ன பண்றது கேட்பவர்கள் இதுவரை அப்படி எத்தனை பேர் இறந்தனர், அதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு சதவீதம் என்பதைப் பேசுவதில்லை. நிலையாமை குறித்து இரண்டு நாட்களுக்குப் பேசலாம். சோம்பேறிகளின் முதலீடு அது என்பதால் இங்கு தேவையில்லை.

கேஸ் குழாய்கள் செல்லும் வயல்களில் அதன் பாதுகாப்புக்கு அந்தந்த விவசாயிகளே பொறுப்பு என்ற ஷரத்து ஒன்றும் மிகவும் அச்சமூட்டும் ஒன்றாக முன்வைத்துப் பேசப்படுகிறது. நம் வீட்டு முன்னால் இருக்கும் சாலையின் பாதுகாப்புக்குக் கூட நாம்தான் பொறுப்பு. ஆம், விபத்தை உண்டாக்ககூடிய வகையில் பொருட்களை போட்டு வைப்பதோ, வாகனங்களை நிறுத்துவதோ சட்டப்படி தவறு. சாலையை சேதப்படுத்த முற்படுவதும், அதற்கு துணைபோவதும் தவறு. அதேதான் கேஸ் குழாய், உயர் மின் அழுத்த கம்பி என அனைத்துக்கும். நம் வயலில் இருக்கிறது என்பதற்காக அதன்மீது போர்வெல் லாரியை நிறுத்தி ஓட்டை போடுவது, குறைந்த மின் அழுத்த கம்பிகளில் கொக்கி போடுவது என்பதெல்லாம் சட்டப்படி தவறு. மற்றபடி அவற்றின் பராமரிப்பு செலவை விவசாயி கொடுக்கும்படி எந்த சட்டமும் கட்டாயப்படுத்தவில்லை.

அரசாங்க மதிப்புப்படி இழப்பீடு வழங்கினால், மார்க்கெட் ரேட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போதும் ஒலிக்கிறது. மார்க்கெட் ரேட் என்றால் என்ன? அஃது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? டீக்கடை பெஞ்சுகளிலும், சலூன் கடை நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சொல்வதுதான் மார்க்கெட் ரேட். இருப்பு-கேட்பு-வழங்கல் (Stock – demand – supply) என்ற கோட்பாடு ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் வாங்க வருபவர் எவ்வளவு தர முடியும் என்பதையும், விற்பவருக்கு எவ்வளவு அவசரம் என்பதையும் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது.

நம்ம ஏரியாவுல ஏக்கர் இருபத்தஞ்சு இலட்சத்துக்கு கீழ இல்லீங்க என்று எதை வைத்து சொல்கிறார்கள்? ஏக்கர் 25 இலட்சத்துக்கு வாங்கி அதில் என்ன பயிர் செய்து வட்டியுடன் அந்த முதலீட்டை ஈட்ட இயலும்? கம்பி, கேஸ் குழாய் செல்வதால் மார்க்கெட் மதிப்பு குறைந்துவிடும் என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மை எவ்வளவு விவசாயிகளிடம் இருக்கிறது? மார்க்கெட் மதிப்பு குறித்து பேச ஆரம்பித்துவிட்டாலே விவசாயம் செய்து வருமானம் ஈட்டுவது என்பது பேசத் தேவையில்லாத பொருளாகிவிடுகிறது.

கம்பிக்கு அடியிலோ, கேஸ் குழாய் மீதோ வீடு கட்ட முடியுமா என்ற கேள்வியும் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. விவசாய பூமியில் எதற்காக வீடு கட்ட வேண்டும்? எவனாவது அவனவன் நிலத்தை வீட்டுமனைக்கு விற்றால் தவறு. ஆனால் விவசாய நிலத்தில் நடுவில் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்வதில் தவறில்லை. என்ன சார் நியாயம் இது? அதாவது நிலம் வைத்திருப்பவன் என்ன செய்தாலும் நியாயம் என்று நேரடியாகச் சொல்லாமல் விவசாயம் என்ற போர்வைக்குள் எதற்காக ஒளிந்துகொள்ள வேண்டும்?

சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் எடுப்பு செய்யப்படும்போதும் ‘ஐயகோ, விவசாயி பாதிக்கப்படுகிறான்’ என்ற பிரச்சாரமே ஆரம்பிக்கப்படுகிறது. புதிதாக அமைக்கபடும் சாலைகள் என்பது வேறு. ஏற்கனவே இருக்கும் சாலைகளுக்கு நிலம் எடுத்தாலும் இதே பிரச்சினைதான்.

சாதி அமைப்பில் மேலிருந்து கீழே செல்லச்செல்ல, மேலே இருப்பவர்களுக்கு சாதி எப்படி மறைமுகமாக அனுகூலமாக இருக்கிறது என்பதையும், அதை எப்படி அவர்கள் காசாக்குகிறார்கள் என்பதையும் அறிவோம். அதே லாஜிக் இங்கும் உண்டு. மெயின் ரோட்டில் ஒரு ஏக்கர் வைத்திருப்பவர் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஐந்து ஏக்கர் வைத்திருப்பவரைவிட அதிக பலன்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அடைகிறார்.

அந்த நிலத்தைக் காட்டி கடன் வாங்கி ஒரு தொழில் ஆரம்பிப்பதோ, சொத்து மதிப்பாகக் காட்டி வாரிசுகளுக்கு வரன் தேடுவதோ, வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டு – விவசாயி என்ற வழக்கமான போர்வையில் – உபரி வருமானம் பார்ப்பது, பெட்ரோல் பங்க் அமைப்பது என எல்லாமே மெயின் ரோட்டில் உள்ள நிலக்கிழாருக்கு சாதகமாகவே இருக்கும்போது, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் – சாதி அமைப்பில் கீழே உள்ளவர்களைப் போலவே – தம்மைத் தடுப்பது எது என்று புரியாமல், கடுமையாக உழைத்தும் முன்னுக்கு வர ஏன் முடியவில்லை என்ற அயற்சியில்தான் வாழ்கிறார்.

அத்தகைய locational advantage உள்ள நிலக்கிழார்கள் அதற்கான risk-களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்? சாலை அகலப்படுத்த அரசாங்கம் நிலம் கேட்டால் இவ்வளவு நாளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அதன் பலனை அனுபவித்தோமே என்ற உணர்வே இல்லாமல் ‘ஐயகோ, ஏ பாசிச அரசாங்கமே’ என்று ஆரம்பிப்பதால்தான் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நிலக்கிழார்கள்கூட உதவிக்கு வராமல் ‘இவ்வளவு நாள் அனுபவிச்சப்ப நல்லா இருந்துச்சா?’ என்று கறுவுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தேவைக்கு அதிகமான விவசாயிகள் இருக்கிறார்கள். அதனால்தான் விவசாயத்தின் எந்த பிரச்சினைகளையும் அதன் பக்கத்தில்கூட செல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டிருக்கிறோம். எதற்கெடுத்தாலும் கார்ப்பரேட் கம்பெனி என்பது, மின்கம்பி அமைத்தால், கேஸ் குழாய் பதித்தால் விவசாயம் அழிந்துவிடும் என்று சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புவது போன்ற செயல்கள் எல்லாம் நம் நாட்டில் விவசாயி என்ற பெயரில் ஏகப்பட்ட பேர் சும்மாவே திரிகிறார்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – நூல் விமர்சனம்

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – நூல் விமர்சனம்.

ஆங்கில மூலம்: ஜான் பெர்கின்ஸ். தமிழாக்கம்: போப்பு. விடியல் பதிப்பகம் வெளியீடு.

வலதுசாரி பொருள் வேட்கையையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், நிறுவனவியத்தையும் உரித்துக் காட்டி ஏழைகள் எப்படித் தொடர்ந்து உறிஞ்சப்பட்டார்கள் என்பதை இந்தப் புத்தகம் காட்டுவதாகவும், சமகால கார்ப்பரேட் சுரண்டல்களுக்கு இந்நூல் ஓர் ஆவணம் என்றும் பரவலாகப் பேசுகிறார்கள். இந்த நூலை வைத்திருப்பதும், படித்ததாக சொல்லிக்கொள்வதும் தங்களுக்கு உள்ள சமூக அக்கறையையும், ஏகாதிபத்தியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதையும் மென்மேலும் கூர்மையாக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.

வெளிநாட்டுத் தத்துவங்களை – கம்யூனிசம் உட்பட – கருதுகோள்களை, கோட்பாடுகளை இந்தியாவில் அப்படியே இறக்கி, பொறுத்திப் பார்க்க முடியாது. இங்குள்ள சாதிய அமைப்பு முறையின் நுட்பமும், ஆழமும், கொடூரமான முகமும் அப்படி.

இந்தப் புத்தகத்தை வைத்து, அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறி உலகின் வளங்களைச் சூறையாடியது என்ற ஒரே டெம்ப்ளேட் வசனத்தில் முடித்துக்கொள்வோமேயானால் உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டின் வரலாறு, பிராந்திய வேறுபாடுகள், ஏற்றதாழ்வுகள், பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பு, மாற்றம் வராதா என்று எதிர்பார்த்தவர்களின் கனவுகள் என அனைத்தையும் படு கேவலமாக உதாசீனப்படுத்துவதாகவே அமையும்.

பல இடங்களில் ஆசிரியர் மனந்திறந்து பேசுகிறார். அதையும் அவர் செய்த வேலையையும் ஒவ்வொரு புள்ளியாக இணைத்துக்கொண்டே வந்தால் சில பல இடங்களில் அவர் சென்ற நாடுகளில் உள்ள உள்ளூர் சூழல் குறித்த அறியாமையும், சில இடங்களில் அவரது அப்பட்டமான சுயநலமும், சில இடங்களில் தனிமையின் விரக்தி காரணமாக அவர் உளறுவதையும், சில இடங்களில் படுமுட்டாள்தனமாக விளக்கம் கொடுப்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள காரணம் என்று சொல்பவை யாவும் இயல்பாகவே கொஞ்சம் அட்ரினலின் டிரைவ் அதிகமாக உள்ள இளைஞர்கள் விரும்புவதுதான். (மொழி தெரியாத, தனியாக சுற்றி வரவேண்டிய, முறையான அலுவலக அமைப்புகள் இல்லாத, புதிய கலாச்சார பின்னணி உடைய நாடுகளில் சுற்றுவதை அதாவது ஓர் உதிரி ஊழியனாக இருப்பதை பெரும்பாலான இளைஞர்கள் தவிர்த்து விடுவர்). இத்தகைய அட்ரினலின் junkie வகை இளைஞர்களுக்கு இருக்கும் புதியனவற்றைத் தேடும் வேட்கை, அதனால் கிடைக்கும் நுகர்வு கலாச்சார அனுபவங்கள், எதிர்பாலினர் மீதுள்ள மோகம் போன்றவற்றை இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு மேல் வளைத்து வளைத்துப் பேசுகிறார். கடைசி அத்தியாயங்களிலும் இஃது ஆங்காங்கே வெளிப்படுகிறது. ஆனால் இதைத்தான் அவர் ஒரு பொருளாதார அடியாளைக் கட்டமைக்கும் கார்ப்பரேட் அணுகுமுறையாக என்னென்னவோ சொல்லி சூடம், சாம்பிராணி எல்லாம் காட்டி “அடேய், இது ரொம்ப சக்தியான சாமி, ஏமாத்தனும்னு நினைச்சா கண்ணை குத்திப்புடும்” என்ற ரீதியில் முழக்குகிறார்.

பயிற்சிக் காலத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவர் பிற நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்றதும் ஏற்பட்ட தனிமையின் அழுத்தம் காரணமாக அவருக்குக் கிடைத்த அந்தந்த ஊர் குமுதம், ஆனந்த விகடன் படித்துவிட்டு தண்ணியடித்த மப்பில் எதையாவது உளறுகிறார். அதை ஏதோ வரலாற்று ஆவண வாரத்தைகளாக நம்மூர் மக்கள் படிப்பது கொடுமை. சந்தையில் உதிரி ஊழியர்களாக பணிபுரியும்போது அவரவர் வேலைக்கேற்ப பலரை நாம் சந்திப்போம். சிலர் நம்மை ஆச்சரியப்படுத்துவார்கள். சிலர் வெறுப்பேற்றுவார்கள். சராசரி அலுவலக ஊழியர்களுக்குக் கிடைக்காத இந்த வாய்ப்புகளை எப்படி வேண்டுமானாலும் உருட்டி மிரட்டி மற்றவர்களிடம் கதை சொல்லலாம். ஏனென்றால் கதை கேட்பவர்களால் சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று ‘நீங்க இப்படியெல்லாம் சொன்னீங்களா?’ என்று கேட்க முடியாது. அதுவும் அந்த நபர் இறந்துவிட்டால் நாம் சொல்வதுதான் கதை. அதைத்தான் அடுத்தடுத்து சில அத்தியாயங்களில் ஜான் பெர்கின்ஸ் செய்கிறார்.

அத்தியாயம் 5: “என் ஆன்மா விற்கப்பட்டது” – இதுதான் இந்தப் புத்தகத்தின் ஆகச்சிறந்த ஹைலைட். இந்தோனேசியாவில் ஒரு பெரிய மின்திட்டத்திற்காக விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் அவருக்கும் ஹாவர்ட் என்கிற வயதான அதிகாரிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை வைத்து பெர்கின்ஸ் பயங்கரமாக மனம் திறந்து படக்கு படக்கு என்று பேசுகிறார். அஃது ஒன்றுமில்லை. அவர் செய்த வேலை DPR எனப்படும் Detailed Project Report தயாரிப்பது. சிலபல கோடி கடன் வாங்க வேண்டுமென்றாலே DPR கட்டாயம் எனும்போது பல ஆயிரம் கோடி தொகையைக் கொட்ட இருக்கும் வங்கிகளுக்கு ஒரு glorified DPR கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

எப்போதுமே DPR என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன் என்று அதில் புழங்கும் அத்துனை பேருக்கும் தெரியும். கடன் வழங்கும் வங்கிக்கும் தெரியும். நாளைக்கு புராஜக்ட் ஊத்திக்கொண்டால் சட்டப்படி எல்லாரும் தப்பித்துகொள்ள செய்யப்படும் ஏற்பாடுகள். புராஜக்ட் சிறப்பாக செயல்பட்டால் ஊழியர்களது பதவி உயர்வுக்கு உதவும். இவர் கொஞ்சம் அதிகமான நம்பர்களைப் போட விரும்புகிறார். அதற்கு அந்த ஹாவர்ட் என்கிற பெரியவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான். மற்றபடி அதற்கு இந்தோனேசியாவை விற்கிறோம், அறுத்துக் கூறுபோடுகிறோம் என்பது, அங்கே சும்மா வாய்க்காலில் ஆய் கழுவப்போன பையன்களை இரண்டு பத்திக்கு விவரித்து தனது சமூக அக்கறையைக் காட்டுவது என்று கும்மி அடிக்கிறார். அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இன்டர்-கான்டினென்டல் ஓட்டலில் வளைய வரும் பெண்களைப் பார்த்துப் பார்த்து சலிப்பாக இருக்கிறது என்று சொன்னதையும் சேரத்து வைத்துப் படித்தால் இவர் DPR போட்டது தெளிவாகப் புரியும்.

இவருடைய DPR இந்தோனேசியாவையே அழித்து அடிமைப்படுத்துமளவுக்கு இருந்ததாக பயங்கரமாகப் பூ சுற்றுகிறார். மற்றபடி இந்தோனேசியாவின் அரசியல் சூழல், வரலாறு குறித்து எந்தவித அடிப்படை ஞானமும் அவருக்கு இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

Sapiens நூலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வரிகளின் முக்கியத்துவத்தை விட ஒரு மின் நிலையத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமான முழக்கங்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

//The most famous Dutch joint-stock company, the Vereenigde Oostindische Compagnie, or VOC for short, was chartered in 1602, just as the Dutch were throwing off Spanish rule and the boom of Spanish artillery could still be heard not far from Amsterdam’s ramparts. VOC used the money it raised from selling shares to build ships, send them to Asia, and bring back Chinese, Indian and Indonesian goods. It also financed military actions taken by company ships against competitors and pirates. Eventually VOC money financed the conquest of Indonesia. Indonesia is the world’s biggest archipelago. Its thousands upon thousands of islands were ruled in the early seventeenth century by hundreds of kingdoms, principalities, sultanates and tribes. When VOC merchants first arrived in Indonesia in 1603, their aims were strictly commercial. However, in order to secure their commercial interests and maximise the profits of the shareholders, VOC merchants began to fight against local potentates who charged inflated tariffs, as well as against European competitors. VOC armed its merchant ships with cannons; it recruited European, Japanese, Indian and Indonesian mercenaries; and it built forts and conducted full-scale battles and sieges. This enterprise may sound a little strange to us, but in the early modern age it was common for private companies to hire not only soldiers, but also generals and admirals, cannons and ships, and even entire off-the-shelf armies. The international community took this for granted and didn’t raise an eyebrow when a private company established an empire. Island after island fell to VOC mercenaries and a large part of Indonesia became a VOC colony. VOC ruled Indonesia for close to 200 years. Only in 1800 did the Dutch state assume control of Indonesia, making it a Dutch national colony for the following 150 years. Today some people warn that twenty-first-century corporations are accumulating too much power. Early modern history shows just how far that can go if businesses are allowed to pursue their self-interest unchecked. While VOC operated in the Indian Ocean, the Dutch West Indies Company, or WIC, plied the Atlantic. In order to control trade on the important Hudson River, WIC built a settlement called New Amsterdam on an island at the river’s mouth. The colony was threatened by Indians and repeatedly attacked by the British, who eventually captured it in 1664. The British changed its name to New York. The remains of the wall built by WIC to defend its colony against Indians and British are today paved over by the world’s most famous street –Wall Street.//

கார்ப்பரேட் கம்பெனிகளில் சிறிய வயதில் சடசடவென மேலே ஏறி உயர்பதவிகளைப் பிடிப்பவர்களுக்கு கட்டாயமாக யாராவது ஒரு காட்ஃபாதர் இருப்பார். அதை பெர்கின்சுடைய வாழ்க்கையிலும் காணலாம். மெய்ன் நிறுவனத்தில் அவ்வாறு வளர்ந்ததோடு அல்லாமல் அதன் முக்கிய பங்குதாரராகவும் ஆகிவிட்டார். அது வழக்கமாக ஊழியர்களுக்கு சும்மா தரப்படும் ESOP அல்ல.

கொலம்பியாவில் பணிபுரிந்தபோது பாவ்லா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு ஆங்காங்கே ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு பேசுகிறார். எழுத்தாளர்கள், கவிஞர்கள் மது அருந்தினால் மனசாட்சியைத் திறந்து வைத்துப் பேசுவார்கள் அல்லவா? அதை தவறாமல் பெர்கின்சும் செய்கிறார்.

உயர்பதவிக்குச் சென்றதும் கீழிலிருக்கும் ஊழியர்களைப் பயிற்றுவிப்பது, அடுத்தகட்ட தலைவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் புகுத்தி அனுபவங்களை உண்டாக்கித் தருவது போன்றவை கார்ப்பரேட் நிறுவன உயரதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். அதாவது Succession planning என்று சொல்வார்கள். அந்த வேலையைச் செய்வதை இரண்டு அத்தியாயங்களில் புதிய பொருளாதார அடியாட்களை உருவாக்குவதாகவும் அஃதுவொரு மாபாதகச் செயலைப்போல சொல்கிறார்.

மெய்ன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த மெக்ஹால் என்ற அதிகாரி பெர்கின்ஸின் காட்ஃபாதரான புரூனோவை வேலையை விட்டு நீக்கி விடுகிறார்.

விர்ஜின் தீவுகளில் சொகுசுக் கப்பல் ஒன்றில் மேரி என்ற சக ஊழியை+தோழியுடன் உல்லாசப் பயணம் போகிறார் பெர்கின்ஸ். அங்கு ஓரிடத்தில் நங்கூரமிட்டுவிட்டு மது அருந்திவிட்டு பலவாறாக யோசிக்கிறார். ஐரோப்பிய காலனிகள், கடற்கொள்ளையர்கள், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் என பலவற்றைப் பேசும் பெர்கின்ஸ் ஒருகட்டத்தில் கரையில் தனியாகக் கத்திக் கதறி தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார்.

அத்தியாயம் 25-இல் பல்வேறு மனக்குமுறல்களுக்குப் பிறகு மெய்ன்-இல் இருந்து வேலையை விட்டு விலகுவதை எழுதியிருக்கிறார். சராசரி வாசகர்கள் நிச்சயமாக அவரது மனசாட்சியையும், நேர்மையையும் கண்டு அசந்து போவார்கள். ஆனால் உண்மையில் அவரது காட்ஃபாதர் வேலையை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சியில், தனக்கு இனிமேல் அங்கு பாதுகாப்பும், மரியாதையும் இருக்காது என்ற பயத்தில்தான் விலகுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களில் இஃது இயல்பாக நடப்பதுதான். ஒரு பெருந்தலை வெளியேறினாலோ, வெளியேற்றப்பட்டாலோ பின்னாலேயே ஒரு கூட்டம் பேப்பர் போட்டுவிட்டு கிளம்புவது வழமையான ஒன்று.

அதேநேரத்தில் பெக்டெல் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைக் கட்டடவியல் நிபுணரின் மகளான, மெய்ன்-இன் சுற்றுச்சூழல் பிரிவில் பணிபுரிந்த வின்னிபிரெட் உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை பெர்கின்ஸ் ஒப்புக்கொள்கிறார். புதிய அணுமின்நிலையை வரைவுத் திட்டம் ஒன்றில் 3X சம்பள உயர்வுடன் சேர்ந்துகொள்கிறார். கடந்த அத்தியாயத்தில் மப்பு அதிகமானதால் காணப்பட்ட நேர்மை இப்போது காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வின்னிபிரெட் சீமாட்டியுடன் சொகுசுக் கப்பலில் ஜாலியாகச் சுற்றிவரும் பெர்கின்ஸ் தனி பங்களா எடுத்து அவளுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிறார். இந்நிலையில் அவர் பணிபுரிந்த அணுமின் திட்டத்தில் அணுமின் கழிவை அகற்றுவது குறித்த வரைவில் சட்டப்பூர்வமாக இவரே கையொப்பமிட வேண்டும் என்ற நிலை வந்தவுடன் பேப்பர் போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்.

இந்நிலையில் இவரது மாமனார், அதாவது வின்னிபிரெட்டின் அப்பா பெக்டெல்லில் பங்குதாரர் ஆகிவிடுகிறார். பின்னர் வின்னியும் அதில் பங்குதாரர் ஆகிறாள்.

இந்த சூழலில் பெர்கின்ஸ் தனியாக கம்பெனி ஆரம்பிக்கிறார். அதற்கு அவருடைய பழைய காட்ஃபாதரான புரூனோ அப்போது அவர் பணிபுரியும் வங்கி ஒன்றின் மூலம் கடனை வாரி வழங்குகிறார். பெர்கின்சுடைய மாமனாரது சவுதி அரேபியத் தொடர்புகளும் அவரது கம்பெனி வளர்ச்சிக்கு அனுகூலமாகிறது.

அவரது தொடர்புகள் மூலமாக கம்பெனியை மடமடவென வளர்த்து, நல்ல விலைக்கு விற்றுவிட்டு அதே கம்பெனியில் முரட்டு சம்பளத்திற்கு ஆலோசகராக அமர்ந்துகொள்கிறார் பெர்கின்ஸ்.

ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கியதும் அதன் ஸ்தாபகருக்கு ஆலோசகர் பதவி வழங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் M&A பணிகள் முடிவடையும்வரை வைத்திருப்பார்கள். பின்னர் அவர்களாகவே விலகிவிடுவார்கள். பெர்கின்ஸ் விசயத்திலும் இது அப்படியே நடந்துள்ளது. ஆனால் அவ்வப்போது மப்பு ஏறியதால் மனசாட்சியைத் திறந்து பேசுவதாக எதையெதையோ உளறுகிறார்.

மொத்தத்தில் அவரது வேலை, சுகானுபவங்கள், பொருளாதார நலன்கள், வருவாய் என எதிலும் குறை வைக்காமல் விவரமாகவே இருந்திருக்கிறார். ஓய்வுபெற்றதும் வெளிச்சத்திலேயே இருக்கவும, சில்லறை வருவாய்க்காகவும் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்று புத்தகத்தையும் எழுதிவிட்டார். அதாவது காரியப் பைத்தியகாரன் என்று சொல்லுவோமே, அதேதான்.

இடையில் ஈரான், ஈராக், சவூதி அரேபியா, பனாமா, குவாதமாலா, கொலம்பியா என இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளையெல்லாம் இணைத்து மசாலா ஆம்லெட், ஆபாயில், ஃபுல்பாயில், கரண்டி ஆம்லெட், வெள்ளைக்கரு ஆம்லெட், மிளகு போட்ட ஒன்சைடு ஆம்லெட், காரம் தூக்கலான சின்ன வெங்காயம் போட்ட கலக்கி என பலவற்றைச் சுட்டுப்போட்டு வாசகர்களை மகிழ்விக்கிறார். நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஆங்காங்கே பெண்கள், விபசாரிகள், சிப்பாய்கள், போராளிக் குழுக்கள், விமான விபத்துகள் என சிலவற்றை இணைத்திருக்கிறார்.

எந்தவொரு திட்டத்திலும் நேரடியான பணியில் இல்லாத, சும்மா ரிப்போர்ட் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு வந்த பெர்கின்ஸ் விட்ட கதைகளைக் கதைகளாக மட்டுமே பார்க்கலாம். அதை இந்தியாவிக்கு இறக்குமதி செய்து எங்கேயும் பொறுத்திப் பார்க்க முடியாது. அவ்வாறு செய்யவும் கூடாது.

இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு முறை உலகத்திலேயே மிக ஆழமான ஊழல் மிகுந்த அமைப்பாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், சுரண்டல் என்பதெல்லாம் இந்திய சாதி அமைப்பு முறையிடம் பிச்சை வாங்க வேண்டும். இதை விடுத்து ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் போன்றவற்றை ஏதோ அரிதலும் அரிதானவறை அருளும் பொருளியற்சுரண்டல் சிந்தாமணி என்ற அளவுக்கு சித்தரிப்பதெல்லாம் புத்தகம் விற்பதற்கான அற்பமான மார்க்கெட்டிங் மட்டுமே.

தமிழகத்துக்குள் இத்தகைய மொழிபெயர்ப்பு கன்றாவிகள்தான் வலதுசாரி முதலாளித்துவ பொருளாதாரத்தினைப் புரியவைக்க கிடைக்கும் ஆதாரங்கள் என்றால் சொல்வதற்கு ஏதுமில்லை.

‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ பொருளாதாரத்தைச் சமூக கண்ணோட்டம் இல்லாமல், வெறும் எண்களாக மட்டுமே பார்க்கும் ஆகச்சிறந்த குப்பை. இதையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்குவதை விட டிக்டொக் பார்ப்பது மனதுக்கு இனிமையானது. இன்னும் படிக்கவில்லை என்றால் உடனடியாக அதை எடைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கி உண்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

பெப்சி – உருளைக்கிழங்கு – காப்புரிமை வழக்கு விவகாரம்

பெப்சி – உருளைக்கிழங்கு – வழக்கு விவகாரம்.

நீங்க கஷ்டப்பட்டு வாயப்பொத்தி, வயித்தபொத்தி சம்பாரிச்சு ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டுட்டு வெளியூர் போயிடறீங்க. எனக்கு வாடகைக்கு விட்ட அதை நான் உள்வாடகைக்கு விட்டு நாலு காசு பாத்தா சரியா தப்பா?

மணல் ஆற்றிலிருந்து வந்தது. செங்கல், சிமெண்ட்டுக்கான கச்சாப்பொருள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த காடுகளை, மலைகளைத் தோண்டி எடுத்துவரப்படுகிறது. பணம் என்பது வங்கி கடன் வழங்கியது. வங்கிக்கு அரசாங்க முதலீடும் பொதுமக்களின் முதலீடுமே மூலதனம். அதாவது வங்கி கடனாக அளிப்பது மக்களின் பணம். மின்சாரத்தை ஆற்று நீரிலிருந்தும் ஏன் காற்றிலிருந்தும் கூட இலவசமாகத்தான் இயற்கை அருள்கிறது.

அதாவது ஒரு வீடு என்பது நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த இயற்கை வளங்களாலேயே உண்டக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு அச்சடித்த ஸ்டாம்பு பேப்பரை வைத்திருக்கும் நபர் எப்படி இந்த நாட்டின் குடிமகனாகிய என் தார்மீக உரிமையை மறுக்கலாம்? அதாவது அந்த ஹவுஸ் ஓனர் எப்படி நான் உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்கலாம்?

இந்த நாட்டின் குடிமகனுக்கு ஒரு வீட்டை உள்வாடகைக்கு விட உரிமையில்லையா? ஓனருக்கு வாடகை கொடுத்த பிறகு நான் என்ன செய்தால் அவருக்கு என்ன?

ooooooo———————————–ooooooo

விதைகளுக்கு, பயிர் இரகங்களுக்கு இந்தியாவில் காப்புரிமை (patent) கிடையாது. அவை நாட்டின் சொத்து. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் உழைத்து ஒரு குறிப்பிட்ட பயிர் இரகத்தை மேம்படுத்தியிருந்தால் அதன் மீது breeder rights உண்டு. மற்றவர்கள் வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்தால் இராயல்ட்டி கேட்கலாம்.

அதேநேரத்தில் நீங்கள் உருவாக்கிய இரகத்தை மேற்கொண்டு மேம்படுத்தியோ, பிற இரகங்களுடன் கலக்கியோ ஒரு புதிய இரகத்தை உண்டாக்கி, உங்களுடைய இரகத்திலிருந்து அது வேறானது என்று நிரூபித்துவிட்டால் அந்த இரகம் மீது நீங்கள் உரிமை கோர முடியாது.

புழக்கத்தில் இருக்கும் ஒரு இரகத்தின் பண்புக்கூறுகளை (traits) உறுதிப்படுத்த DUS characters மற்றும் Grow Out Test (GoT) உடன் இன்று DNA fingerprinting-உம் சேர்ந்துவிட்டது. வீரிய இரக விதை வியாபாரத்தில் வழக்கமாக என்ன நடக்குமென்றால் ஒரு பெரிய கம்பெனி பெருத்த R&D பொருட்செலவுடன் ஒரு இரகத்தை சந்தைக்கு கொண்டுவரும். சில லெட்டர்பேடு கம்பெனிகள் அந்த இரகத்தை அதே கம்பெனியின் பழைய இரகம் ஒன்றுடன் கிராஸ் செய்து கிடைக்கும் இரகத்தைத் திரும்ப அந்த புதிய இரகத்துடன் கிராஸ் செய்து சந்தையில் வேறு பெயரில் இறக்கி விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி நிறைய தந்திரோபாயங்கள் இருந்தாலும் புரிதலுக்காக இங்கே மிக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் DUS, GoT, DNA fingerprinting சோதனைகள் எல்லாவற்றையும் ஏமாற்றிவிடலாம். பெரிய கம்பெனியால் இதை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த லெட்டர்பேட் கம்பெனிக்குத் தெரியும். அதனால் பெரிய கம்பெனி சித்ரா என்று பெயரிட்டு விற்பனை செய்தால் இவர்கள் சுசித்ரா என்று பெயரிட்டு பொட்டலம் அடிப்பார்கள்.

சிம்லாவில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்ட சில இரகங்கள் சிப்ஸ் வியாபாரத்துக்கு பேருதவி புரிந்தாலும் பின் கருகல் நோய் பாதிப்பு காரணமாகவும், சந்தையிலிருந்து தங்களது கம்பெனி தயாரிப்புகளின் தரம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்பதாலும் பெப்சி, ஐடிசி போன்ற பல நிறுவனங்கள் in-house reaserch -இல் இறங்கி புதிய இரகங்களை உருவாக்கும் பணியில் வெற்றியும் கண்டன.

அதாவது public domain-இல் உள்ள கருமூலப்பொருளில் (germplasm) இல்லாத சில பண்புக்கூறுகளை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த parent line-களைப் பயன்படுத்தி பல்வேறு உத்திகளின் மூலமாக மேம்படுத்தி ஒரு இரகத்தை வெளியிடும்போது அதை அரசாங்கத்திடம் எல்லா நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளும். அதை மற்றவர்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது குற்றமாகும். (Genetically Modified என்பது வேறு. மரபீனி மாற்றம் எனப்படும் அதை பருத்தி தவிர வேறு எந்த பயிரிலும் குழப்பிக்கொள்ள வேண்டாம்).

Protection of Plant Varieties and Farmers Rights Act இல் Breeders right என்ற ஒன்றும் உள்ளது. அதாவது பயிர் இரகங்களைப் பாதுகாத்து வைத்து அதைத் தொடர்ந்து நல்ல விதைகளை பிரித்தெடுத்து மேம்படுத்தி வருவதால் farmer-உம் ஒரு breeder ஆவார்.

உதாரணமாக கோயமுத்தூர் வரிக் கத்தரி என்ற ஒன்று உண்டு. CVK எனப்படும் ஊதா நிறத்தில் வெள்ளைக் கோடுகள் போட்ட கத்தரி கோயமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயல்பாகக் கிடைப்பது. இதில் வேறு சில இரங்களைக் கலக்கி அதே மாதிரி கத்திரியை உருவாக்கி வந்து இனிமேல் யாரும் CVK எனப்படும் கோயமுத்தூர் வரிக் கத்தரியைப் பயன்படுத்தினால் எங்கள் கம்பெனிக்கு இராயல்ட்டி தர வேண்டும் என்று கேட்க முடியாது. புதிய இரகமானது பொதுப் புழக்கத்தில் (Public domain) உள்ள இரகங்களைவிட முற்றிலும் வேறானது என்று நிரூபிக்க வேண்டும். ஒருவேளை காய்ப்புழுவுக்கு இயற்கையாகவே எதிரான ஒரு இரகத்தைக் கொண்டுவந்தால் (அதை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பொதுப் பொருளாகிவிடும்) அதற்கு மற்றவர்கள் விதைக்காகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.

கரும்பில் இன்று 10% சர்க்கரை ரெக்கவரி மட்டுமே ஆலைகளுக்குக் கிடைக்கிறது. அதாவது ஒரு டன் கரும்பைப் பிழிந்து காய்ச்சினால் நூறு கிலோ சர்க்கரை கிடைக்கும். நீங்கள் அரிதான ஏதாவது ஒரு wild இரகம் ஒன்றைப் பிடித்துவந்து ஏற்கனவே இருக்கும் இரகங்களுடன் கலப்பினங்களை உண்டாக்கி 25% சர்க்கரை ரெக்கவரி வருமளவுக்குச் செய்து அதை முறையாகப் பதிவு செய்துகொண்டால் அதை யாரேனும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.

அதே நேரத்தில் சாதாரண கரும்பில் 10% ரெக்கவரி எடுக்கும் ஆலை ஒன்று புதிதாக சில வடிப்பான்களையோ, வேறு கருவிகளையோ நிறுவி 25% ரெக்கவரி எடுத்தால் அந்த process -ஐ பேடன்ட் செய்ய முடியும். அதாவது சர்க்கரை எடுக்கும் process-க்கு patent. சர்க்கரை என்னும் product-க்கு patent அல்ல. ஆனால் இந்தியாவில் process patent-க்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒன்றுக்கு இரண்டு கருவிகளை நிறுவி அந்த process patent-ஐ பைபாஸ் செய்துவிடுவார்கள். நீதிமன்றங்களுக்கு இந்த டெக்னிக்கல் விவகாரங்கள் சுத்தமாக புரியாது. புரிந்தாலும் அரசியல் அழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் எந்தப் பக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கமே தீர்ப்பு வரும்.

குஜராத்தைப் பொறுத்தமட்டில் நொறுக்குத்தீனி தயாரிப்பில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கம்பெனிகள் உண்டு. மூன்று மாவட்டத்துக்கு ஒரு பிராண்ட் இராஜாவாக இருக்கும். அங்கே Lays, Kurkure, etc. போன்ற பன்னாட்டு நிறுவன பிராண்டு எல்லாம் சேர்ந்து 20% சந்தையை வைத்திருந்தாலே ஆச்சரியம்.

இந்த பிரச்சினையைப் பொறுத்தமட்டில் பெப்சியின் உருளைக்கிழங்கு இரகத்தை சாகுபடி செய்த்தற்காக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் குஜராத்திகள் சிப்ஸ் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டதால்தான் “இதுவரை ஆன சேதத்துக்கும் சேர்த்து” என்று பெரிய தொகைக்கு வழக்கு போட்டிருக்கிறது பெப்சி.

வியாபாரத்தில் எந்த மனசாட்சியும் இல்லாதவர்கள் குஜராத்திகள். E-way bill உட்பட GST-யில் இத்தனை கிடுக்குப்பிடிகள் இருந்தும் வீடுகளுக்கு டைல்ஸ் வாங்கும்போது “பில் போட்டா ஜிஎஷ்டி 28% வரும் பையா” என்று சொல்லி தமிழகத்தில் எப்படி டைல்ஸ் வியாபாரம் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.

பி.டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் முன்னரே சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட், செக்-இன் லக்கேஜ், ஹேண்ட் லக்கேஜ், குழந்தைகளின் ஹேண்ட்பேக் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு விதையை மட்டும் மட்டும் போட்டு அமெரிக்காவிலிருந்து எடுத்து வந்து இங்கே back cross செய்து அந்த பண்புக்கூறுகளை interogress செய்து விற்பனை செய்தது, ரவுண்டப் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் வாய்ந்த பருத்தி இரகம், பி.டி. கத்தரி இரகம் போன்ற அதிகாரப்பூர்வமாக விற்க அரசு அனுமதியே இல்லாதவற்றையும் விற்பனை செய்வது என நவீன fraud எல்லாமே குஜராத்தில் இருந்துதான் ஆரம்பிக்கும்.

இந்தியாவிலேயே தமிழகத்திலும், குஜராத்திலும்தான் மனைவி பெயரில் Firm-ஐப் பதிவு செய்து கணவர்கள் தொழில் நடத்துவது அதிகம். பெப்சி வழக்குத் தொடர்ந்திருக்கும் அந்த அப்பாவி விவசாயிகள் “மே பேகுன்னாரா சாப்” என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவர்களது மனைவி, மகன், மகள் பெயரில் நடக்கும் வியாபாரத்தின் வீரியத்தை அறியாமல் ஒரு பன்னாட்டு கம்பெனி கோடை காலத்தில் நடக்கவிருக்கும் குளிர்பான விற்பனை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் இறங்குகிறது என்றால் அதன் முக்கியத்துவம் என்ன, வீரியம் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

பெப்சி தனது பொருட்செலவில் உண்டாக்கிய இரகத்தை ஒப்பந்தம் போட்டு வாங்கி – ஏமாற்றிவிட்டு – இன்று உள்ளூர் சிப்ஸ் கம்பெனிகளுக்கு விற்பவர்கள் நாளை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கும் விற்பார்கள். அந்த கம்பெனிக்காரன் கேள்வியே கேட்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் அப்பாவி விவசாயிகள். பச்சையாக அடுத்தவன் உழைப்பைத் திருடித் தின்றுவிட்டு விவசாயி என்ற போர்வையில் ஒளிந்துகொள்ளும் அயோக்கியர்களை ஆதரிப்பது ஒரு குரூர மனநிலை.

நிலம் வைத்திருப்பவன் அடுத்தவன் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக்கொள்ளலாம். அது மேலிருந்து பணத்தாலும், ஆராய்ச்சியாலும் வரும் இன்டெலெக்சுவல் உழைப்பாக இருந்தாலும் சரி, கீழிருந்து வரும் கூலிக்கார மக்களின் ஃபிஸிகல் உழைப்பாக இருந்தாலும் சரி.

சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கைப் போராளி, விவசாய செயற்பாட்டாளர் என்றாலே பாரம்பரியமான மரபுசார் முறைகள் கேள்வி கேட்கப்படவே கூடாது என்று கிராமப் பொருளாதாரத்தின் சாதிப் படிநிலைகளைப் பாதுகாப்பவர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்தான். எனவே ஆர்வலர்கள் பெப்சியின் நிலையை நியாயப்படுத்தினால்தான் ஆச்சரியம்.

இது நில உரிமையாளர்கள் விவசாயி என்ற போர்வையில் செய்துகொண்டிருந்த அறிவுசார் சுரண்டலின் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் அடி. இஃது எமோஷனலாகப் பார்க்கப்பட்டு பெப்சிக்கு பின்னடைவே ஏற்படும் என்றாலும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் அதன்மேல் இந்தியாவில் செய்யப்பபடும் முதலீட்டுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்பதை இந்த விவகாரம் தெளிவுபடுத்தும். மற்றபடி சும்மா கார்ப்பரேட் கம்பெனி, அப்பாவி விவசாயி லபோதிபோ என்று சில்லறைகளைச் சிந்தவிடாமல் வேடிக்கை பார்ப்பது இந்தத் தொழிலில் ஈடுபடாத பொதுமக்களின் உடம்புக்கு நல்லது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். உங்கள் வீட்டை ஒருவர் உள்வாடகைக்கு விடுவது போன்ற விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்களோ அதேதான் பெப்சி-உருளைக்கிழங்கு விவகாரத்திலும் நியாயமாக இருக்கும்.

Professionally Managed Companies – நமது நிலைமை என்ன?

நிறுவனம் ஒன்றை உண்டாக்கி ஆரம்பகட்டத்தில் சிறப்பாக நடத்திச்செல்லும் புரமோட்டர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை Professionalism என்ற ஒன்றை கடைசி வரைக்கும் பின்பற்றாமல் வீட்டுக்குப் பின்னால் ஆடு மாடு கட்டும் தொண்டுப்பட்டி மாதிரியே கம்பெனி நடத்தி கடைசியில் அதைக் கொண்டுபோய் குப்புற கவிழ்த்து, தான் பாடையில் போகும்போது “சேர்மன், அ.ஆ.இ.ஈ. குரூப் ஆஃப் கம்பெனீஸ்” என்று மாலையாகப் போட்டுக்கொண்டு போய்விடுகின்றனர். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் படிப்படியாக கம்பெனி மூடப்பட்டு விடுவதோ அல்லது விற்கப்பட்டுவிடுவதோதான் பெரும்பாலும் நடக்கிறது.

ஆரம்பத்தில் பங்குதாரர்கள் சிலர் இணைந்து பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆரம்பிப்பது, மேற்கொண்டு முதலீடு போட்டு விரிவுபடுத்துவது இலாபத்தைக் கூட்டி புதிய அலகுகளை நிர்மானம் பண்ணுவது வரைக்கும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நடத்தை, சுய ஒழுக்கம், வெளியுலக பழக்கவழக்கங்களே நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறது.

வங்கிகளில் கடன் வாங்கி விரிவுபடுத்தும்போதும், யாரேனும் ஒரு பங்குதாரர் ஒத்துழைப்பு தராமல் சொதப்பும்போதும் அவருடைய பங்குகளை மற்றவர்கள் வாங்கிக்கொண்டு வெளியேற்றும் கட்டம் வரைக்கும் கம்பெனி மீது பங்குதாரர்களுக்கு ஒரு intimate பற்று இருப்பதில் தவறேதுமில்லை.

என்னிடம் நல்ல வியாபார யோசனையும், சந்தை வாய்ப்பும் இருக்கிறது ஆனால் போதுமான மூலதனம் இல்லை என்று சொல்லி, பங்குகளை விற்று மற்றவர்களுடைய மூலதனத்தை உள்ளே கொண்டுவரும்போது கம்பெனி மீதான புரோமோட்டருடைய பற்று குறைந்து Professional Management-க்கு மாறும் பழக்கம் இந்தியாவைப் பொறுத்தவரை கிடையவே கிடையாது.

பணம் போட்டு பங்குகளை வாங்கியவன் தனது முதலீட்டுக்கு ஈவுத்தொகை எவ்வளவு வரும், பங்கு மதிப்பு எப்படி இருக்கும் என்று கணக்குப்போடுவது இயல்பு. அதிலும் 25%-க்கு கீழான பங்குகளை வைத்திருக்கும் புரமோட்டர் அன்றாட நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டு ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது. என்றைக்கு முகம் தெரியாத நபர்களுக்கோ, முதலீட்டு நிறுவனங்களுக்கோ பங்குகளை விற்கிறோமோ அன்றே நம்முடைய தார்மீக உரிமை போய்விடுகிறது. பணம் போட்டவன் கேள்வி கேட்கத்தானே செய்வான்?

ஊரான் வீட்டுப் பணத்தை வாங்கி முதலீடு செய்துவிட்டு பின்புறமாக இலாபத்தை உருவி வாரிசுகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் காரியங்களில் இறங்கிய பெரிய மனிதர்கள் பலர் மேற்கு மாவட்டங்களில் உளர். ஆலை அங்கத்தினர்களுக்குப் போகவேண்டிய பணத்தில் பத்து பத்து ரூபாயாக பிடித்தம் செய்து கோவிலுக்கு ஜீரனோத்ர மஹா கும்பாபிஷேகம் செய்துவிட்டு பரிவட்டத்தையும் வாங்கிக்கொண்டதோடு ஒரு “சிறப்பு பட்டம்” ஒன்றையும் பெற்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட தொழிலதிபரின் கதை கோயமுத்தூர்ப் பக்கம் பிரபலம்.

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) என்ற பெயரில் எட்டணாவுக்கு சமூக சேவையும் அதற்கு இரண்டு ரூபாய்க்கு விளம்பரமும் பண்ணிக்கொண்டு இருப்பதோடு, கம்பெனி ஆரம்பித்த காலத்தில் இருந்த தனது எடுப்பு தொடுப்புகளின் வாரிசுகள் வைத்திருக்கும் Foundation-களுக்கு நிதி உதவி அளித்து கம்பெனி பேலன்ஸ் ஷீட்டிலேயே சின்ன வீட்டைப் பராமரித்துவந்த பெரிய முதலாளி வைகுண்ட பிராப்தி அடைந்த பிறகு நிர்வாகத்துக்கு வரும் வாரிசுகளுக்கு இந்த நுணுக்கங்களெல்லாம் புரியாது. மிக அதிக விலைக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து கச்சாப்பொருட்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவது ஒரு வெண்டர் என்ற பெயரில் மாதாமாதம் பில் பட்டுவாடா செய்யப்பட்டு வந்திருக்கும்.

பெரிய முதலாளியின் இரதசாரதிக்குத் தெரிந்த இந்த இரகசியங்களெல்லாம் சின்ன முதலாளிக்குத் தெரியாது அல்லது புரியாது. Restructuring என்ற பெயரில் பல செலவினங்களில் கிடுக்குப்படி போடும்போது கம்பெனியின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரச்சினைகள் கிளம்பும். எதற்கு பிரச்சினை வருகிறது என்றே தெரியாமல் குடும்பத்திலும் குழப்பம் உண்டாகும். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் கம்பெனி மூடப்படும் அல்லது விற்கப்படும். இந்தியா முழுவதும் நடந்துவரும் வழமையான வழக்கம் இது.

SME வகையறா நிறுவனங்களில் பங்குதாரர்களுடைய குடும்பத்தினரின் தலையீடே பெரும்பாலும் கம்பெனியை முட்டுசந்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது. முப்பது வயதில் ஆரம்பித்து நாற்பது வயதுவரை சிறப்பாகநடத்திவந்த கம்பெனியில் பங்குதாரர்களுடையை அப்பா, அம்மா அல்லது மனைவி வந்து நிர்வாகத்தில் தலையிடும்போது அதன் சரிவு தொடங்கிவிடுகிறது. வளர்ச்சிக்காக ஆலோசனை சொல்வதற்கும் அன்றாட நிர்வாக முடிவுகளில் தலையிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியர்கள் பிரித்துப் பார்ப்பதே இல்லை. நாற்பது வயது மகனுக்கு ‘உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இர்றா’ என்று உட்கார வைத்து ஆலோசனை வழங்குவது இந்திய அப்பாக்களுடம் உள்ள சிறப்பு.

இந்த நூற்றாண்டில் இருக்கும் அரசியல், தகவல் தொழில்நுட்ப சூழ்நிலைகளில் ஒரு நிறுவன நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சிறப்பான ஆலோசனைகளை வழங்கும் நூல்களுள் ஆகச்சிறந்த ஒன்று, Tom Peters எழுதிய Re imagine. ஒரு பெரிய நிறுவனத்தை உண்டாக்க வேண்டும், மிகப்பெரிய அளவுக்கு அதை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற வேட்கையுடையவர்கள் அவசியம் அலுவலக நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒன்று. புத்தகம் என்றால் முதல் அலகிலிருந்துதான் படிக்க வேண்டும் என்ற கட்டமைப்பையே உடைத்து எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று எழுதப்பட்டது.

இன்றைய millenials நிறுவனங்களை உண்டாக்கி வளரும் வேகத்துக்கும் அவர்களுடைய அணுகுமுறையைப் புரிந்துகொள்ளவும் Re-imagine வாசிக்க வேண்டிய ஒன்று.

படத்திலிருக்கும் கட்டுரை Business Standard நாளேட்டில் அண்மையில் வந்தது.

வேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா?

கேள்வி: வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை முடித்த பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Companies எனப்படும் விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயோகன்ட்ரோல், சொட்டுநீர்ப் பாசனம், டிராக்டர், பண்ணை இயந்திரக்கருவிகள் வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இஃது உண்மையா? கொஞ்சம் விளக்கமாக இதுகுறித்து எழுதவும்.

பதில்: ஆமாம், பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Input Companies பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன. இதற்குக் காரணம் 70% மாணவிகளும், 30% கம்பெனி நிர்வாகத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுமே காரணமாவர்.

கம்பெனிகள் இலாப நோக்கில் செயல்படுபவை. அதற்கான மனநிலை, செயல்திறன், தன்னூக்கம், அசாதாரண சூழ்நிலைகளைக் கையாளும் திறன் போன்றவை அவசியம். ‘எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டேன், மற்றபடி எது நடந்தாலும் நான் பொறுப்பாக முடியாது’ என்ற attitude தனியார் நிறுவன வேலைகளுக்கு மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இருக்கவே கூடாத ஒன்று. Ownership என்பது மிக முக்கியம்.

மாணவிகள் சந்தை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு வராததற்கான காரணத்தில் அவர்களது மனத்தடையே பெரும்பங்கு வகிக்கிறது. அத்தகைய மனத்தடையை உருவாக்குவதில் உதவிப் பேராசிரியர்களும், சீனியர் மாணவிகளும், ‘எக்ஸாம் பிரிப்பேர் பண்றேன்’ என்று வீட்டில் பணம் வாங்கி செலவு செய்துகொண்டு சும்மா சுற்றும் பட்டதாரி மக்களும் முக்கியமானவர்கள். மூத்த பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சித்திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை முழுவதும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளராக அடிமையாகவே வாழும் ஒரு கும்பலை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த முத்தரப்பு கும்பல், குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக input industry குறித்த பல மாயக் கதைகளைப் பரப்பிவிட்டவண்ணம் உள்ளனர்.

Open Market Jobs எனப்படும் சந்தை சார்ந்த வேலைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிய 80% தனிநபரின் குணாதிசியங்களே முக்கியமானது. Technical Knowledge 20% இருந்தாலும் போதுமானது. தெரியாதவற்றை யாரிடமாவது ஃபோன் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம், கூகுள் செய்திடலாம். ஆனால் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் நாம் செய்யப்போகும் வேலையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏர்கன்டிஷன்டு க்யூபிக்கிளில் உட்கார்ந்து For your information and necessary action என்று மின்னஞ்சலைத் தட்டிவிடும் வேலை மட்டுமே வேண்டும் என்று பல மாணவிகள் இருக்கின்றனர். இதற்கு அவர்களுடைய அப்பா ஏதாவது கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தால்தான் உண்டு.

இன்புட் இன்டஸ்ட்ரி வேலை என்றதும் விவசாயிகளின் தோட்டத்துக்குச் சென்று தங்கள் கம்பெனி மருந்து, விதைகளை சீட்டு எழுதித் தருவதுதான் என்று இண்டஸ்ட்ரி வேலைக்கே சென்று பார்த்திராத ஒரு கும்பல் எழுதி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நம்மாழ்வார் பக்தர்களாவர். கடைசி வரைக்கும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டே அரசாங்க வேலை கிடைக்கும்வரை கார்ப்பரேட் சதி, இலுமினாட்டி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பர். இவர்களிடம் எந்த வேலையையும் சொந்தமாகச் செய்யக்கூடிய தன்னூக்கமோ, உற்சாகமோ இருக்காது; நல்ல பொழுதையெல்லாம் வீணாகப் பேசிக் கழித்திடுவர்.

மார்க்கெட்டிங் வேலை, மார்க்கெட்டில் வேலை என்றதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி வரும். தமிழ்நாடு, கார்நாடகா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஓப்பீட்டளவில் பாதுகாப்பானவை. பெண்களைப் பணியிலமர்த்தும்போது ஓரளவுக்கு பாதுகாப்பான பகுதியில் மட்டுமே பணிபுரிய உயரதிகாரிகள் அனுப்புவார்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் ஒரு சாக்கு மட்டுமே. தினசரி பல புதிய மனிதர்களை, இடங்களைப் பார்க்கத் துணிந்த மாணவிகளுக்குப் பெற்றோரை சம்மதிக்க வைப்பது அவ்வளவு கடினமான காரியமன்று.

தனியார் நிறுவன சந்தை சார்ந்த வேலை என்றால் எக்கச்சக்கமாக வேலை வாங்குவார்கள் என்ற கருத்தாக்கம் உண்டு. அது பல்கலைக்கழகத்துக்குள் சும்மா இருந்து பழகியவர்களால் சொல்லப்படுவது. உங்களுக்குத் தெரிந்த இன்புட் இண்டஸ்ட்ரி ஆட்கள் எத்தனை பேர் அப்படி சொல்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும். இதே ஆட்கள் வெளிநாடு சென்றதும் எப்படி வேலை செய்கின்றனர் என்று பார்க்க வேண்டுமே.

சந்தையில் வேலை செய்யும்போது பெண் என்ற முறையில் சீண்டல்கள் வருமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வரும். வங்கி அதிகாரியாக, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணிபுரிவது என்பதில் பெண்களுக்கு அந்த பணியால் கிடைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பெண், வங்கி அதிகாரியாகக் ஒரு கிளையன்ட்டைப் பார்க்க செல்வதும், உரக்கம்பெனி அதிகாரியாக கிளையன்ட்டைப் பார்க்கச்செல்வதும் நிச்சயமாக ஒன்றல்ல.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். சிலர் வாட்சப்பில் குட்மார்னிங் அனுப்புவார்கள், இரவு சரக்கடித்துவிட்டு மிஸ்டுகால் கொடுப்பார்கள், தேவையில்லாமல் போன் போட்டு வழிவார்கள், செட்டாகுமா என்று நூல் விட்டுப் பார்ப்பார்கள். இதையெல்லாம் மிகச் சாதாரணமாக சிரித்துக்கொண்டே (மனதிற்குள் “போடா மயிறு, உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்” என்ற நினைப்புடன்) இடதுகையால் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லத் தெரிந்த மாணவிகளுக்கு Core sector company-களில் வானமே எல்லை.

அண்மையில் பிரபல பன்னாட்டு நிறுவன கருத்தரங்கில் பார்த்தபோது, கலந்துகொண்ட 170 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே அக்ரி படித்த பெண்கள்; அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். இன்று அத்தனை நிறுவனங்களிலும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பெண்கள் பணியில் உள்ளனர். Gender equality குறித்து அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மாணவிகள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

இன்புட் கம்பெனிகளில் எல்லா வேலைகளையும் நாமேதான் செய்யவேண்டும் என்றதுமே பல பெண் விண்ணப்பதாரர்கள் பயந்து விடுகின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை முறையே அதுதான் என்றாலும் நமக்கு இங்கு கீழே குற்றேவல் புரிய ஆட்கள் இல்லாவிட்டால் கை நடுங்குகிறது.

ஆமாம், நீங்களேதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அந்த வாரத்திற்கான பயணத் திட்டம், அன்றைக்கு எங்கெங்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறோம், அதன் நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட நபர்கள் நாம் செல்லும்போது இருப்பார்களா என எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமே கார் அல்லது பைக்கை தினசரி 100 – 200 கிமீ ஓட்ட வேண்டும், பஞ்சரானால் கூட நாமேதான் கழட்டி ஸ்டெப்னி மாட்ட வேண்டும். ஊர் ஊராகச் சென்று சாப்பிடுவது, தேநீர் பருகுவது, தபால் அனுப்புவது, மின்னஞ்சலுக்குப் பதில் சொல்வது, வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுவது, இடையில் ஆடியோ கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் என அனைத்தையும் on the move-இல் நீங்களேதான் செய்ய வேண்டும். கார் சேற்றில் சிக்கலாம், விபத்துக்குள்ளாகலாம், டிராபிக்கில் சிக்கி நமது மொத்தத் திட்டமும் பாழாகலாம் – எல்லாவற்றையும் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைநேரத்தில் 80% தனியாகவே வேலை செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Travelling எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கதை விடுவது வேறு. அழகாக வால்வோ பேருந்து, இரயில், விமான டிக்கெட் அல்லது டேக்சி எடுத்துக்கொண்டு சென்று நல்ல ரிசார்ட்டில் வெல்கம் டிரின்ங் குடித்துவிட்டு செல்பி எடுத்து ஹேஷ்டேக் போட்டு travelling is my hobby என்று சொல்வதும், தினசரி ஊர் ஊராகப் பணி நிமித்தமாக பயணிப்பதும் முற்றிலும் வேறு.

வரச்சொல்லிவிட்டு போன் எடுக்க மாட்டார்கள், நாமும் முகவரி, வழி, வண்டித்தடம் என எதையும் கேட்காமல் 150 கிலோமீட்டர் போன பிறகு கூப்பிட்டால் switched off என்று வரும். அவர்களது இடத்தைத் தேடுகையில் டீசல் நிரப்பாமல் நீண்டதூரம் போயிருப்போம, பங்க்கைக் கண்டுபிடித்து நுழைந்ததும் டீசல் தீர்ந்துவிட்டது என்ற அதிர்ச்சி கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்திருக்கும். ஏடிஎம்-இல் பணம் எடுக்க காலையில் கிளம்பும்போது மறந்திருப்பிருப்பீர்கள். உங்கள் கணவரோ, பாய்ஃபிரண்டோ அந்த நேரத்தில் கூப்பிட்டுக் கொஞ்சவோ அல்லது கத்தவோ செய்யலாம். இவை எல்லாவற்றையும் நீங்களே சமாளிக்க வேண்டும்.

இருக்கறது ஒரு வாழ்க்கை. அதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றலாம். உண்மையில் இது எதுவுமே கடினமானதல்ல. உள்ளே நுழைந்து பழகிவிட்டால் தினசரி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். வேலையில், வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்புத் தட்டாது. சும்மா போரடிக்கிறது என்ற எண்ணமே வராது. நேற்றுப் பார்த்த அதே அலுவலகம், அதே ஆட்கள், அதே வேலை என்ற சூழ்நிலை நீங்களே எதிர்பார்த்தாலும் வராது. ஐந்து, பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த சமுதாயம் குறித்த உங்களது புரிதல் முற்றிலும் மாறியிருக்கும்.

கல்யாணம், ஹனிமூன், குழந்தைகள், கணவன், மாமியார், அலுவலகப் பணிச்சுமை, பணச்சிக்கல்கள், உடல் உபாதைகள் என்பதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் கூட வந்துகொண்டேதான் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஒருவேளை அந்த வேலைக்குப் போயிருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாமோ என்பது மிகப்பெரிய மாயை. அடுத்தவர்களது கணவன் அழகாகத் தெரிவது போலத்தான் இதுவும்.

வங்கிப் பணிகள், அரசு வேளாண்மைத்துறை பணி, குரூப் 1, சிவில் சர்வீசஸ், உதவிப் பேராசிரியர் பணி என வழக்கமான வட்டத்தைத் தாண்டி வெளியேறி புதிய சூழலுக்குள் நுழைய வேண்டும், ஒப்பந்த ஆராய்ச்சியாளராகப் பல்கலைக்கழகத்துக்குள் இளமைக்காலத்தை வீணடிக்கக்கூடாது, விரைவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சீனியாரிட்டிக்காக நாட்களை ஓட்டக்கூடாது, எந்த சூழ்நிலை வந்தாலும ஒரு கை பார்க்கவேண்டும், I’m not someone என்ற மனநிலை கொண்ட மாணவிகளுக்கு Input industries எப்போதும் திறந்தே இருக்கிறது.

அரசாங்க வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் மட்டுமே அக்ரி இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்வதாக நீங்கள் நம்பினால் அஃது உங்களது அறியாமை மட்டுமே. ஆண்டுக்கு ஐம்பது இலட்சம், ஒரு கோடி சம்பளம் வாங்குபவர்கள் அங்கே ஏராளம். நாற்பது வயதில் ஆண்டுக்கு 75 இலட்சம் சம்பளம் வாங்கும் பல பெண்கள் அக்ரி இண்டஸ்ட்ரியில் இருக்கின்றனர். சொந்த தொழிலில் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வெளியேறியிருப்பார்கள். மார்க்கெட் அனுபவமே அவர்களது முதலீட்டுக்கான பாதுகாப்பு.

வெறும் Designation-இல் ஒன்றுமே இல்லை நிறைய சம்பாதிக்க வேண்டும், பல இடங்களை மக்களைப் பார்க்க வேண்டும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், 35 வயதிற்குள் பிஎம்டபிள்யூ வாங்கி பார்த்திடனும், ஓய்வுபெறும்போது நூறு சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை மகன்/மகளுக்கு விட்டுச்செல்வதை விட நூறு கோடி மதிப்புள்ள சொத்தையோ/கம்பெனியையோ விட்டுச்செல்ல வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவிகள் வேளாண் தொழில்துறையில் நுழைவது மிகவும் நல்லது. கேரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. த்ரில் இல்லாத ஒரு சோகையான, சோம்பேறி வாழ்க்கை வாழவா பிறந்திருக்கிறோம்?

அக்ரோ இண்டஸ்ட்ரி சார்ந்த வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்யும் மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்:

1) படிப்பு முடிந்தததும் முற்றிலுமாக கல்லூரி/பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அடிக்கடி அங்கு செல்வதை, விடுதி அறைகளில் தங்குவதை, குறிப்பாக பிஎச்டி படிக்கும் தோழிகளின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். கல்யாணம் ஆகும்வரை கற்போம், கல்யாணம் ஆனபிறகு கற்பிப்போம் என்ற கொள்கையுடைய தோழிகளுடன் கண்டிப்பாக சேரவே கூடாது.

2) பேராசிரியர்கள் பாடம் சொல்லித்தர மட்டுமே தகுதியானவர்கள். வாழ்க்கைப் பாடத்தை வெளியில்தான் கற்க முடியும். எனவே படிப்பு முடிந்தபிறகு – டெக்னிகல் விசயங்களைத் தவிர – அடிக்கடி பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும். (ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்று அக்ரி பிசினஸ் பேராசிரியரிடம் சென்று கேட்பதற்குப் பதிலாக சும்மாவே இருந்துவிடலாம். தெரிந்தால் அவர் பண்ணியிருக்க மாட்டாரா?)

3) ஓர் அலைபேசி எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஏழு நம்பர் வைத்திருந்தாலும் நீங்கள்தான் எடுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சரி.

4) தகுதியான நபர்களை – ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் – முடிந்தவரை நேரில் சென்று சந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் சொல்லும் சில தகவல்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கலாம். நமக்குத் தேவையானதை நாம்தானே தேட வேண்டும். வீட்டில் வந்து யார் சொல்லிவிட்டுப் போவார்கள்?

5) ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும். படிப்பு மட்டுமே அல்ல – புகைப்படக்கலை, போன்சாய், மலையேற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) வாசிப்பு மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் தவிர பொதுவான புத்தகங்களை மாதம் ஒன்றாவது படித்திட வேண்டும்.

7) பைக், கார் ஓட்டுவது இன்று அத்தியாவசியம். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

8) புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள், வெற்றிகரமாக நடத்துபவர்கள் மட்டுமல்லாது ஏதோ காரணத்தால் தொழிலை மூடியவர்களையும் தேடித்தேடி சந்தித்து உரையாட வேண்டும். அந்த உரையாடல்களால் கிடைக்கும் ஞானத்தை எந்த பவர்பாய்ன்ட்டாலும் உங்களுக்கு வழங்கிட முடியாது.

9) தேவையில்லாத வாட்சப் குழுக்கள்,கெட்-டுகெதர், மீட்-அப், ஹேங்ஓவர்-களில் இருந்து வெளியேறிட வேண்டும். சில வருடங்கள் ஏற்கனவே உங்களுடன் பழகிய நண்பர்களுடன் குறைவான தொடர்பில் இருப்பதில் தவறில்லை. அவர்களுடன் touch-இல் இல்லை என்பதால் நீங்கள் யாருடனும் பழகாமல் aloof ஆகச் சுற்றுகிறீர்கள் என்றாகிவிடாது.

10) தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அந்த லைனில் உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்று உடனே ஆரம்பித்திட வேண்டும். ஒருவேளை அது தோல்வியடைந்தாலும் கவலைப்படக்கூடாது. Project பெயில் ஆகிவிட்டது என்று தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டும். தேங்கக்கூடாது, We have to move on.

11) வேலை தேடுவதாக அல்லது மாறுவதாக இருந்தால் அந்தந்த துறைகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு அதற்கான முறையான வழிமுறைகளில் செய்ய வேண்டும். வாட்சப்பில் சி.வி. அனுப்புவது போன்றவற்றைத் தவிரக்க வேண்டும்.

12) இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலைக்கு எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று உங்கள் தோழிகளிடமும், சீனியர்களிடமும், உதவிப் பேராசிரியர்களிடமும் புலம்பும் நேரத்தில் நாலு கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அதில் இருப்பவர்களின் சிபாரிசைக் கோரலாம். உங்கள் ஹாஸ்டலுக்கு, கேன்டீனுக்கு வந்து உங்களைப் பெயர்சொல்லி அழைத்து யாராவது வேலை கொடுப்பார்களா?

13) மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உயர்ந்த பதவிக்கோ, மிகப்பெரிய கம்பெனிக்கோ போக முடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் தேவையே இல்லை. நாளை என்ன நமக்காக இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களைத் தீட்டி அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

14) Relationship இல்லாமல் யாரும் இல்லை. காதல் தோல்வி, கல்யாண ஏக்கம் போன்றவற்றை மாலை ஆறு மணிக்குப் பிறகு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக உருப்படும் வழியைப் பார்க்க வேண்டும்.

15) ஒவ்வொரு சூழ்நிலையையும் handle செய்ய அசாத்தியமான துணிச்சல் வேண்டும். “இந்த ஜாப் உனக்கு செட் ஆகாதும்மா” என்று சொல்லப்பட்டபோது “வேலை என்னன்னு மட்டும் சொல்லுங்க, என்னால செய்ய முடியலன்னா நானே போயிடறேன்” என்று கேட்டு, அதை சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்த பல பெண்கள் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக பணிபுரிகின்றனர். பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் சொல்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். துணிந்தவர்களுக்கு அதை செய்துகாட்ட வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே.

ஒரு வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள், கொஞ்சூண்டு சேமிப்பு, ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு என்று வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுவோமா? ரிட்டயர் ஆனபிறகு மெல்ல கதவைப் பிடித்து, தலையணையை சாய்த்து வைத்து உட்கார்ந்து, டிரைவரை ஓட்டச்சொல்லிவிட்டு பின்சீட்டில் சாமி பாட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பதற்கு பென்ஸ் இருந்தால் என்ன ஃபியட் பத்மினி இருந்தால் என்ன?

படித்து முடித்து இருபத்தைந்து வயதில் கேரியரை ஆரம்பித்து, நாற்பத்தைந்து வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று சும்மா காபி குடித்துவிட்டு திரும்பி வருமளவுக்குப் பொருளாதார சுதந்திரமும், அன்றாட வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்றிடுமளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டும். எதற்காகவும் தேங்கிடவே கூடாது. Now, get up and move. Keep going…

இடைத்தரகர்களால் வாழும் விவசாயம்

அந்திமழை – மார்ச் 2019 – இதழுக்காக எழுதிய கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்:

விவசாயக் குடும்பங்களிலிருந்து கல்வியால் வெளியேறி வேறு தொழில்களுக்குச் சென்ற இளைய தலைமுறையினரால் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்று தங்களது பெற்றோர்களுக்கும் முதுமை வந்து சேரும், தமக்கும் வயதாகும் அதனால் உடல்வலு குறையும் என்பதைத்தான். வயதாகின்ற காரணத்தால் முழுநேர வெள்ளாமையைக் குறைத்துக்கொண்டு தென்னை, மா, மரவகைகளை நட்டுவிட்டு கால்நடைகளையும் குறைத்துக்கொள்வதை இன்டர்நேஷனல் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டு அவ்வப்போது கிராமத்துக்கு காரில் வரும் அடுத்த தலைமுறை, விவசாயம் அழிந்துவிட்டதைப்போல உணர ஆரம்பித்து சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் புலம்ப ஆரம்பிப்பதே விவசாயம் அழிந்து வருவதாக நாம் நினைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

தொன்னூறுகளில் வந்த ஐ.டி. வளரச்சியை ஒட்டி வேலைவாய்ப்பைப் பெற்று நாற்பதுகளில் நகரங்களில், வெளிநாடுகளில் வாழும் புதிய தலைமுறையினர் பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு அடிக்கடி அழைத்துச்செல்லும் நிலை வரும்போது தமது பெற்றோர்களுக்கும் வயதாகும் என்கிற யதார்த்தத்தை மறந்து உணவு சரியில்லை, பால் சரியில்லை, நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தவில்லை, ஆர்கானிக் உணவு சாப்பிட்ட என் பாட்டி நூறாண்டுகள் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார் என்று பலவாறாக குழப்பங்களில் ஆழ்ந்துவிடுவதும் இன்றைய விவசாயம் குறித்து பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயி என்பதற்கான வரையறையே இன்னும் ஐயத்துக்கு உரியதாக நம் நாட்டில் இருக்கிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் விவசாயி என்று சொல்லிக்கொள்கின்றனர். இன்று கணிசமான நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகரத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நில உரிமையாளர்கள் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக விவசாய தங்க நகைக்கடன், சிட்டா அடங்கலைக் காட்டி பயிர்க்கடன் பெற்றுக்கொள்கின்றனர். வங்கிகளுக்கு இஃது எல்லாம் நன்றாகத் தெரியும் என்றாலும் தங்களது கடன் வழங்கல் இலக்கு எட்டப்படுவதோடு, கடனுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதால் கண்டுகொள்வதில்லை.

பருவமழை சரியாக பொழியாததற்கு தீர்வு யாரிடமும் இல்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரவேண்டிய ஆற்றுநீர் வரவில்லை என்பது மேல்மட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகிவிட்டது.

விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உற்பத்தியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு எந்த உரிமையையும் வழங்காத விவசாயிகள், விலையையும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சரக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று நாம் பேசுவதற்கு தயாரில்லை. உதாரணமாக அதிக தண்ணீர் தேவைப்படக்கூடிய தென்னை, வாழை போன்ற பயிர்களைப் பயிரிடுவதைக் கட்டுப்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களில் மற்ற விவசாயிகள் மேட்டாங்காட்டுப் பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு இத்தனை ஏக்கர் தென்னை, வாழை மட்டுமே பயிரிட அனுமதி என்று அரசு சொன்னால் கேட்டுக்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாக இருந்தால்தானே வரக்கூடிய விளைபொருளுக்கான சந்தையையும், தேவையையும் கணித்து விலை நிர்ணயம் செய்ய ஒரு மாடலை ஏற்படுத்த முடியும்.

தொழில்நுட்பங்களும், சாலை வசதிகளும் பெருகுவதால் நுகர்வோருக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கினால் எப்படி இரண்டு நாட்களில் மும்பையில் இருந்து திருச்சிக்கு டெலிவரி செய்யப்படுகிறது என்பதை மக்கள் அறிவர். அதேபோல் தக்காளி இங்கே கிலோ நாற்பது ரூபாயைத் தொடும்போது, சட்டீஸ்கரில் பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தால் இங்குள்ள வியாபாரிகள் பெரும்பணத்தை – எந்த காப்பீடும் இல்லாமல் தனிநபர்களுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையில் – இறக்கி பத்து, பத்து டன்னாக அதிகரிக்கின்றனர். கிலோ பதினைந்து ரூபாய்க்கு சட்டீஸ்கரில் வண்டியேறும் தக்காளிக்கு போக்குவரத்து செலவையும் சேர்த்து இருபத்தைந்து ரூபாய்க்கு இங்கு வந்து சேர்கிறது. பத்து ரூபாய் இலாபத்துடன் முப்பத்தைந்து ரூபாய்க்கு சந்தையை வந்தடையும்போது நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த நுகர்வோருக்கு ஐந்து ரூபாய் குறைவாகக் கிடைத்துவிடுகிறது.

உள்ளூர் விவசாயிக்கு இதில் இலாபம் குறைவதையோ, நட்டப்படுவதையோ நுகர்வோர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. விவசாயிகளைக் பாகாப்போம் என்று சொல்பவர்கள் ஆண்டு முழுவதும் தக்காளி ஐம்பது ரூபாய்க்குத்தான் கிடைக்கும் என்றால் அறச்சீற்றம் கொண்டு அரசாங்கத்தைத் திட்டித் தீர்ப்பார்கள். Free market trade-இல் உள்ள பலன்களை அனுபவிக்கையில் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்.

பலராலும் மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனை சொல்லப்பட்டு வருகிறது. இதில் நகரத்தில் வாழ்ந்துகொண்டு அல்லது கிராமத்தில் இருந்தவாறே கூடுதலாக சில தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள், முழுநேர விவசாயம் செய்பவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள் என இரண்டுவகை உண்டு.

தென்னை, மா, மாதுளை, கொய்யா, வாழை, முருங்கை, சவுக்கு, யூகலிப்டஸ், மலைவேம்பு போன்றவற்றை பெரும்பாலும் absentee landlords எனப்படும் நகரவாழ் விவசாயிகள் விரும்புகின்றனர். அரசாங்கத்தின் கணிசமான மானியங்களை உறிஞ்சிக்கொள்ளும் செல்வாக்குப் பெற்றவர்களும் இப்பிரிவினரே.

மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்), செங்காந்தள் மலர் (கண்ணுவலிக் கிழங்கு), பூனைமீசைச் செடி, கீரைகள் போன்றவற்றை ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முழுநேர விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சந்தை ஏறி இறங்கும் என்பதைத் தெரிந்தே இதில் ஈடுபடுவதால் பெரும் இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமானாலும் சரி, அடக்கி வாசிக்கின்றனர்.

உலக வர்த்தக மையத்துடன் இந்தியாவும் இணைந்திருப்பதால் பல விளைபொருட்கள் சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை விலையைவிட சாலமன் தீவுகளில் இருந்து வரும் கொப்பரை நம்மைவிட நான்கில் ஒருபங்கு விலைக்கே கிடைக்கிறது. எங்கு மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விளைபொருட்களை இறக்குமதி வரி விதித்து தடுக்க முடியாது என்பதால் உள்ளூர் கொப்பரையின் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உள்நாட்டு விவசாயிகளைக் காப்பதாக நினைத்து நாம் இறக்குமதியைத் தடுத்து நிறுத்தினால் ஏலக்காய், மஞ்சள் போன்ற வாசனைத் திரவியப் பயிர்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தக மையத்தின் வாயிலாக விதிக்கப்படும்.

இது புலி வாலைப் பிடித்த கதை மாதிரி தெரிந்தாலும் macro level-இல் புரிந்தகொள்ள வேண்டியது என்னவென்றால் மிக்குறைந்த செலவில் உற்பத்தி செய்ய வேண்டும், விவசாயி என்ற போர்வையில் உட்கார்ந்திருக்கும் நில உரிமையாளர்களைக் கட்டடங்களை வாடகைக்கு விட்டுள்ள ஓனர் போலவே கருதி அவர்களது வருமானத்துக்கு வரி விதிப்பதும், மானியங்களை நேரடியாக விவசாயம் செய்பவர்களுக்கு வழங்குவதுமே நம் முன்னர் இருக்கும் பெரிய சவால் என்பதே. இப்படியெல்லாம் சொன்னாலே ‘அப்ப, நிலம் வச்சிருக்கற நான் விவசாயி கிடையாது, எனக்கு எந்த சலுகையும் அரசாங்கத்துல இருந்து கிடைக்காது, அப்படித்தானே?’ என்று பலர் சீறுவதைப் பார்க்க முடியும்.

வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் உலக வர்த்தக மையத் தலையீடுகள் (இடுபொருட்களுக்கான மானியம் வழங்குவதில் உள்ள சிக்கலான கணக்கீடுகள் காரணமாக) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு குறைவு. உதாரணமாகத் தேங்காய் ஏற்றுமதி, இறக்குமதியைக் காட்டிலும் தேங்காய் எண்ணெயில் கட்டுப்பாடுகள் குறைவு. இந்தியாவிலிருந்த பல ஆயிரம் கோடிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் சீனாவைக் காட்டிலும் நாம் வெகுதூரம் பின்னே இருக்கிறோம்.

மூலிகைப் பயிர்களுக்கான சர்வதேச டிமாண்ட் வருடந்தோறும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாவது இசப்கோல் என்ற மூலிகை குஜராத், இராஜஸ்தானிலிருந்து என்றால் அதற்கடுத்த இடத்தில் இருந்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது தமிழகத்தில் இருந்து செல்லும் சென்னா இலைகள்தான்.

மருந்துக்கூர்க்கன், முருங்கை இலைப் பொடி, பூனைமீசைச் செடி, ஃபேசிஃபுளோரா செடி, வல்லாரை, அமுக்கராங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு என பலவும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு ஏற்றுமதியாகிறது. நம்மிடம் ஒவ்வொரு பயிர்களிலும் உள்ள முக்கிய செயல்படு மூலப்பொருளை (active principle) பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பம் இல்லாததால் பல அரிய வேளாண் விளைபொருட்கள் அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சிறு விவசாயிகள் இடைத் தரகர்களைத் தவிர்த்து நுகர்வோருக்கு நேரடியாக சந்தைப்படுத்துதலில் இந்தியாவில் உள்ள the best மாடல் நமது உழவர் சந்தைதான். இதன் எண்ணிக்கையை அதிகரித்து அதிலுள்ள சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்து விற்பனை நேரத்தை மதியத்துக்கு மேல் ஆரம்பித்து இரவு எட்டு மணி வரைக்குமாக செய்தால் நுகர்வோருக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் மிகச்சிறந்த பயன் தரும். சிறு விவசாயிகளும் பல புதிய வெள்ளாமையை ஆரம்பித்து அந்தந்த ஊரில் உள்ள வரவேற்புக்குத் தக்கபடி சாகுபடியைத் தகவமைத்துக்கொள்வார்கள்.

அரசாங்க விழாக்கள், பள்ளி கல்லூரி விடுதிகள் உழவர் சந்தைகளிலிருந்தே காய்கறிகளை வாங்க வேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டால் சிறு குறு விவசாயிகள் – அதாவது நேரடியாக உழவில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்கள் – வேறு தொழில்களுக்குச் செல்லும் எண்ணிக்கை குறையும். இத்தகைய முன்னெடுப்புகள் win win சூழலையே உண்டாக்கும். இராணுவத்தின் தேவைகளில் குறிப்பிடத்தக்க அளவு உழவர் சந்தைகளில் இருந்து செல்கிறது என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தையில் கடை போட விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தைப் பின்பற்றும்போது அனைத்து சமூகத்தினரும் ஏற்றமடைய முடியும்.

உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற மாடலை நபார்டு வங்கி மூலம் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு உ.உ.க-வுக்கும் நபார்டு வங்கி பின்வாசல் மானியமாக பத்து இலட்ச ரூபாயை வழங்கும். அது தவிர சில இலட்சம் செலவினங்களை நபார்டு ஏற்கிறது. ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து தங்களது விளைபொருட்களை நேரடியாகவோ மதிப்பு கூட்டியோ, தங்களது கம்பெனி பெயரில் சந்தைப்படுத்தும் மாடல் என்பதால் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது தோல்வியுறும் மாடல் ஆகும். சாதி இல்லாமல் இந்திய கிராமமும், விவசாயமும் இல்லை என்பதால் இந்த உஉக மாடலில் சாதி நுண்ணிய அளவில் நுழைந்து பெரும் பிளவு சக்தியாக நிற்கிறது. பல உஉக-கள் மூடுவிழா காணும் நிலையில் உள்ளன.

உஉக-களை ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து நடத்துவதற்கும் மூலதனமும், overhead செலவினங்களும் அதிகம். அடுத்தடுத்த விரிவாக்கத்தின்போது அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து நிற்கும் சவலைப்பிள்ளையாகவே ஒவ்வொரு ஊரிலும் வளர்ந்து வருகிறது. உஉக என்பது கம்பெனி அமைப்புக்குள் செல்வதால் அதிகாரம் மேல்மட்டத்தில் குவிவதுடன், தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

இதை ஒப்பிடுகையில் உழவர் சந்தை என்பது decentralized, lean management மாடல். உற்பத்தி, விற்பனை குறித்த முடிவு எடுத்தல் அத்தனையும் அந்தந்த விவசாயி கையிலேயே இருப்பதால் நேரமும், அலைச்சலும், தேவையில்லாத சர்ச்சைகளும் தவிர்க்கப்படுகிறது.

நூறு விவசாயிகளிடம் தேங்காய் வாங்கி எண்ணெய் ஆட்டி விற்று இலாபத்தைப் பிரித்து அளிக்கும்போது அதில் இயக்குநர் மட்டத்தில் உள்ளவர்கள் இதை நாமே தனியாகச் செய்தால் என்ன என்று நினைப்பது இயல்புதானே. அப்படி யாராவது ஒரு இயக்குநர் எண்ணெய் ஆலை அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அங்குள்ள உஉக மூடுவிழா கண்டுவிடும். பல ஊர்களில் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.

இன்று venture capital உதவியுடன் B2B, B2C மாடலில் அலைபேசி செயலி வழியாக வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த பல நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனி மாடலில் சந்தையில் நுழைந்துள்ளன. ஜெனரல் மேனேஜர், வேலை செய்யும் வைஸ் பிரசிடென்ட், ஜெனரல் மேனேஜருக்கு கொளுந்தியா புருசன் என்பதால் வைஸ் பிரசிடென்ட், வைஸ் பிரசிடென்ட்டின் தோழி என்பதால் சும்மா சம்பளம் வாங்கும் HR கன்சல்டன்ட் என பலருக்குமான சம்பளமும், இதர செலவினங்களும் அவர்கள் வாங்கி விற்கும் மாங்காய், தேங்காயிலிருந்தே வரவேண்டும் என்பதோடு பணம் போட்ட முதலீட்டாளருக்கும் இலாபத்தையும் காட்ட வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இலாபம் எங்கிருந்து வரும் என்பதை யோசித்தால் இந்த கம்பெனிகள் கையிருப்பு கரையும்வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சூப்பர் மார்க்கெட்டுகளின் F&V (Fruits & Vegetables) பிரிவுகளும் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் உள்ளன. இவை அதிலுள்ள மற்ற பிரிவுகளுடன் செலவினங்களைப் பகிர்ந்துகொள்வதால் பார்ப்பதற்கு கொஞ்சம் வெற்றிகரமாகத் தோன்றலாம்.

பொதுவாக வறட்டு கம்யூனிசம் பேசிப்பேசியே நாம் யதார்த்தத்தை மறந்து வீணாகப் போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தரகு முதலாளிகள், புரோக்கர்கள், கமிஷன் மாமாக்கள் என்று விற்பனைச் சங்கிலியில் உள்ள தவிர்க்க முடியாத ஒரு பிரிவினரைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் செயலையே மக்கள் செய்கின்றனர். இடைத்தரகர்கள் என்பவர்கள் தங்களது முதலை இறக்கி விற்பனைச் சங்கிலியில் ஒரு சிறிய அளவிலான ரிஸ்க்கை ஏற்றுக்கொள்கின்றனர். தினசரி ஐம்பது கிலோ பப்பாளி உற்பத்தி செய்யும் விவசாயி உழவர் சந்தை வாயிலாக விற்கலாம். ஆனால் தினசரி ஒரு டன் உற்பத்தி செய்பவர் அதை எப்படி அழிப்பார்?

அரசாங்கம் perishable commodity விற்பனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட என்றைக்குமே முடியாது. இலாபம், நட்டத்தை யார் ஏற்றுக்கொள்வது என்பதைப் பதினைந்து நிமிடங்களில் முடிவுசெய்து அதை அமுல்படுத்தியாக வேண்டும். நான்கு மட்டங்களில் ஒப்புதல் பெற்று நடத்தப்படும் காரியமல்ல என்பதால் இடைத்தரகர்கள் தவிர்க்க முடியாத சக்திகள் ஆகிவிடுகின்றனர். கேரளாவிற்கு பத்து டன் பப்பாளி வாங்கி அனுப்பும் தரகர், பப்பாளியை அனுப்பும் லாரி விபத்தில் சிக்கினாலும் சரி, அங்குள்ள வியாபாரி பணம் தராமல் ஏமாற்றினாலும் சரி, இழுத்தடித்தாலும் சரி, பேசியபடி இங்குள்ள விவசாயிக்கு செட்டில் செய்தாக வேண்டும். இந்த ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் புரோக்கர் ஆகலாம். பல விவசாயிகள் புரோக்கர்களாக பகுதிநேர வேலை செய்துவருவது எல்லா கிராமங்களிலும் உண்டு.

ஒரு ஊரில் ஒரு ஹார்டுவேர் கடை மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கூடுதலாக இரண்டு கடைகள் திறக்கப்படும்போது போட்டி காரணமாக நுகர்வோருக்கு விலையைக் குறைத்து விற்றாக வேண்டும். சப்ளையர்களுக்கு உடனடியாக செட்டில் செய்தால் விலை குறையும் என்பதால் அவர்களும் அதிக மூலதனத்தைப் போட்டு தொழிலில் தீவிரமாக ஈடுபடுவர். கம்பெனிக்கு விரைவாகப் பணம் கிடைக்கிறது, நுகர்வோருக்கும் கடைகள் அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் பொருள் கிடைக்கிறது. உடனே, இந்த வியாபாரிகள் இரகசியமாக சங்கம் அமைத்து cartel செய்து அதிக விலைக்கு விற்பார்கள் என்ற ஸ்டேண்டர்டு வசனம் வரும்.

அங்குதான் நமது சாதி அமைப்பு நுண்ணியமாக செயல்படுகிறது. கடைக்காரர்கள் வெவ்வேறு சாதியாக இருந்தால் நிச்சயம் இரகசியக்குழு அமைக்க மாட்டார்கள். என்னதான் சொந்த சாதிக்காரனாகவே இருந்தாலும் மூட்டைக்குப் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து சிமென்ட் வாங்கி வீடு கட்ட யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

இதையே வேளாண் விளைபொருட்கள் விற்பனையில் பொறுத்திப் பாருங்கள். சொந்த சாதிக்காரன் வியாபாரி என்பதற்காக உங்களிடம் ஓர் ஏக்கர் பரப்பளவில் இருபது டன் தர்பூசணி விளைந்து நிற்கையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுப்பீர்களா அல்லது ஸ்பாட் பேமன்ட் கொடுத்து எடுக்கத் தயாராக இருக்கும் வேறு சாதிக்கார வியாபாரிக்குக் கொடுப்பீர்களா?

இடைத்தரகர்களுக்கு கொழுத்த பணம் இலாபமாகச் செல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியெனில் நாம் அதிகமான இடைத்தரகர்களை உண்டாக்கும்போது மட்டுமே அவர்களுக்கிடையிலான survival போட்டியில் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் கணிசமான இலாபம் கிட்டும். அதை விடுத்து இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். புதுப்புது format-இல் இடைத்தரகர்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.

இன்று venture capital பணத்துடன் களமிறங்கியிருக்கும் அத்தனை கம்பெனிகளும் இடைத்தரகர்களே. Perishable commodity தரகு தொழிலில் கம்பெனியைக் காட்டிலும் தனிநபர்களின் செயல்திறனே அதிகமாக இருக்கும். கம்பெனிகள் விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் அதிகளவில் வாங்கி, கிட்டங்கிகளில் வைத்து விலை ஏறும்போது விற்று காசு பார்த்தால் மட்டுமே உண்டு. அதுவும் ஒருவகையில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் ஒரு buffer-தான். விலை சரிந்த காலங்களில் அந்த கம்பெனிகள் அடிமாட்டு விலைக்காவது வாங்காவிடில், விளைபொருட்களை வயலிலேயே வீசி எறிய வேண்டிய நிலைமைதான் விவசாயிகளுக்கு. விலை ஏறும்போது சந்தை விலையைக் காட்டிலும் ஐந்து, பத்து குறைவாக விலை வைத்து கிட்டங்கிகளில் உள்ள சரக்கைக் கம்பெனிகள் தள்ளிவிடுவதால் நுகர்வோருக்கும் சிறிது இலாபமே.

சந்தைப்படுத்துதலில் நிறைய இளைஞர்கள் இடைத்தரகர்களாக நுழைய வேண்டும். இந்தக் கருத்து அதிர்ச்சிகரமாகவும், அசிங்கமாகவும் தோன்றினால் யதார்த்தத்தைப் பக்கத்திலிருந்து பார்க்கவும், பிரச்சினைக்குத் தீர்வு எதுவுமே கைவசம் இல்லாமல் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்பி வந்திருக்கிறீர்கள் என்றுதான் பொருள். வெறும் செல்போனை வைத்துக்கொண்டு தினசரி ஐம்பதாயிரம் இலாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் எனில் எத்தனை இளைஞர்கள் இதில் நுழைந்து இலாபத்தைப் பிரித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

சந்தைப்படுத்துதல் என்றதும் வீடுகளுக்கு காய்கறி, மளிகைச் சாமான்களை டெலிவரி செய்வதையே பெரிதாக ஊடகங்களில் பேசுகின்றனர். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. வீட்டில் அடைந்து கிடக்கும் இந்திய குடும்பத்தலைவிகளுக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கோ, சந்தைக்கோ, அருகிலுள்ள கடைக்கோ சென்று வருவது ஒரு stress relief factor. அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கினாலே போதும் என்று சொல்லி, செய்துகாட்டிய பிக் பஜார் கிஷோர் பியானி போன்றவர்களும் இதே சந்தையில்தான் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

‘வானம் வசப்படும்’ – புத்தக விமர்சனம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

‘வானம் வசப்படும்’ நாவலை புதுச்சேரி குவர்னர் டுய்ப்லெக்ஸ் வசம் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரது நாட்குறிப்பின் அடியொட்டி பிரபஞ்சன் எழுதியிருப்பதைப் படிக்கப்படிக்க புதுச்சேரியின் வரலாறும், இந்தியா என்பது சாதிகளின் தொகுப்பு என்பதும் கிறித்தவமும், இசுலாமும் உள்ளே நுழைந்தபிறகு இந்து என்ற மதம் என்ற ஒன்று போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சிபொங்க வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும் எப்பேர்ப்பட்ட பொய் என்பதும் தானாகவே விளங்கிக்கொள்ளலாம்.

பிரான்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக வந்திருந்தாலும் இங்குள்ள மக்களை கிறித்துவத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் மீதான அதிகாரத்தைப் பெற்று பிரான்ஸ் அரசருக்கு சமர்ப்பிப்பதும் அடுத்தடுத்த கடமையாக பாவித்திருக்கின்றனர்.

ஊழல் என்பது பிரான்சு குவர்னரில் ஆரம்பித்து கடைநிலை சொல்தாது (சிப்பாய்) வரைக்கும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. இரண்டு கப்பல்களில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சரக்கு பிடித்து அனுப்பும் குவர்னர், ஒரு கப்பலில் தனக்காக வியாபாரமும் நடத்துகிறார்.

பிராமணர், முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர் சாதியினரே பிரான்சு, இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்தில் முதல்மட்ட பதவிகளை அனுபவித்திருக்கின்றனர். அவர்களது உறவினர்களுக்குப் பதவிகளை வாங்கித்தர கடும் முயற்சி எடுத்துக்கொள்வதோடு மேல்மட்டத்துக்கு அன்பளிப்பு என்றபெயரில் இலஞ்சம் கொடுத்து பதவிகளை வாங்கியே இரண்டு மூன்று தலைமுறைகள் வாழ்ந்திருக்கின்றனர். நில உரிமை, குத்தகை உரிமை, மண்டி, தரகு, வர்த்தகம் என அத்தனை தொழில்களுமே பிறப்பால் கிடைத்திருக்கின்றதே தவிர திறமை என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் எந்த இடமும் அந்தக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

குவர்னர் மாளிகையில் கிடைக்கும் பணிகளைப் பெற மேற்கண்ட சாதியினருக்குள் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக பலர் கிறித்துவத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பதவிகளுக்கு சர்ச் மூலம் சிபாரிசு பிடித்து வேலைக்குச் சேரலாம் என்பதால் சர்ச் என்பது கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்திருக்கிறது.

ஆதிஷேஷய்யர் தனது பூணூலை அறுத்துவிட்டு துய்ப்லெக்ஸ் துரையின் மனைவி மேடேம் ழான் அம்மையாரின் ஆசீர்வாத்தில் பாதிரியாரிடம் ஞானஸ்னானம் பெற்று ஜீவப்பிரகாசம் ஐயராக மாறுகிறார். பசு மாமிசம் தின்னும் பரங்கிப்பயல்களின் மதத்துக்கு மாறுவதா என்று அவரைப் புறக்கணிக்கும் குடும்பம் நாளடைவில் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வதும், மற்ற உறவுமுறைகளுக்கு பதவி வாங்கித்தரச்சொல்லி சிபாரிசு கேட்பதும் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு இந்த ஆண்டைகளுக்கு உழைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை. சைக்கிள் கூட இல்லாத காலம் (1750-கள்). மாட்டுவண்டி, குதிரை, பல்லக்கு மட்டுமே போக்குவரத்து சாதனம் – மேல்சாதிகளுக்கு மட்டும். கீழ்சாதிகளுக்கு நடந்து செல்வது மட்டுமே ஒரே வழி. விவசாயம், நெசவு சார்ந்த தொழில்களைத் தவிர வேறெதுவும் கிடையாது, எங்கு சென்றாலும் சோறு கட்டிக்கொண்டு நடந்தே சென்று சத்திரங்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டும். வழியெங்கும் திருட்டு பயம். இப்படி ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களே இந்த நாவல்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கும்போது அங்கிருந்து புதர்கள், வயல்கள், சதுப்பு நிலங்களுக்குள் புகுந்து திருவல்லிக்கேணிவரை ஒரு பெண் மழைக்காலத்தில் மகளின் திருமண ஏற்பாட்டுக்கு சென்று வருவதையும், சண்டை உக்கிரமடைந்தவுடன் பல குடும்பங்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு செங்கழுநீர்ப்பட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதையெல்லாம் படிக்கும்போது அந்தக்காலத்தில் எங்கே பாலாறும் தேனாறும் ஓடியது என்று தெரியவில்லை.

சாணார், பறையர், பள்ளர் என கீழ்தட்டு மக்களாக விதிக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து ஓரளவு மீட்சியும், வயிற்றுப்பாட்டுக்கு ஆண்டைகளிடம் படும் பாட்டைக்காட்டிலும் கொஞ்சம் நியாயமான உழைப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளலாம் என்பதற்காக கிறித்தவத்துக்கு மாறியிருக்கின்றனர். ஆனால் முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர், பார்ப்பனர் என அனைவரும் கிறித்துவத்துக்குச் சென்று சர்ச்சுக்கு நடுவேயும் சாதி பிரிக்கச் சுவர் வைத்துவிட்டிருக்கின்றனர்.

சர்ச்சில் இருக்கும் தீண்டாமைச் சுவரை உடைத்து அனைவரையும் ஏசுவின் குழந்தைகளாகப் பாவிக்க நினைக்கும் பாதிரிகளும் இருந்திருக்கின்றனர். கும்பனி படைகளைப் பயன்படுத்தித் தமிழர் கோவில்களை இடித்துவிடத் துடித்த பாதிரிகளும் இருந்திருக்கின்றனர்.

1750-களில் கிறித்தவர், துலுக்கர், தமிழர் என்றே மக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்து என்ற மதமே இருந்திருக்கவில்லை என்பது ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு மூலம் தெரிகிறது.

மேடேம் ழான் அம்மையாரின் பலத்த ஆதரவுடன் டுய்ப்லெக்ஸ் துரை புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை வெள்ளைக்கார, காபிரிச் சிப்பாய்களை அனுப்பி உடைத்துப் போடுகிறார். அதைத் தடுக்க தமிழர்கள் பலர் (இந்துக்கள் அல்லர்) குவர்னருக்கு அடுத்தபடியாக இருக்கும் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளையிடம் முறையிட்டபோதும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் வைணவர் என்பதாலும் தமது பதவிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அடக்கி வாசிக்கிறார்.

தமிழர்களுக்கு சாதிதான் பிரதானம் என்று நாம் நினைக்கும்படி இருந்தாலும், சாதி அமைப்பில் உயர்மட்டத்தில் இருக்கும் பிராமணர்களின் முடிவுக்குக் கட்டுப்பட்டே வந்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பிராமணர்கள் சிறு ஓசை கூட எழுப்பாமல் இருப்பதைப் பார்க்கும்போது கப்பல்களில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டுக்காரனும் இங்கு கோட்டை கட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படுவதில்லை.

ஈசுவரன் கோவிலை இடித்த கையோடு மசூதி ஒன்றையும் இடிக்க குவர்னர் துய்ப்லெக்ஸ் உத்தாரம் (ஆணை) இடுகிறார். இரண்டு செங்கல் விழுந்தவுடன் துலுக்கர் படையின் தலைவன் அப்துல்ரகுமான் தான் குவர்னரைப் பார்த்துவிட்டு வரும்வரை ஒருவரும் மசூதியைத் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்று துய்ப்லெக்ஸ் துரையைப் பேட்டி கண்டு இடிப்பதற்கு காரணம் கேட்க அது குவர்னர் உத்தாரம் என்று சொல்கிறார். ‘கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும்வரை அந்த மசூதியை இடிக்க முடியாது, நாங்கள் உயிரை விட்டாவது போராடுவோம்’ என்று சொன்னதன் மன உறுதியைக் கண்டு குவர்னர் தனது உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.

ஐதராபாத் நிஜாம், ஆற்காட்டு நவாப் பதவிகளை யார் வைத்துக்கொள்வது என்று நடக்கும் சண்டைகள், உள்குத்துகள் காலங்காலமாக நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. மராத்தியர் ஒருபுறம், ஆலந்துக்காரர்கள் ஒருபுறம் என இந்தியா பிய்த்துத் துண்டாடப்பட்டிருக்கிறது.

பிராமணர்கள் ஆற்காட்டு நவாப், ஐதராபாத் நிஜாம், பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அத்துனை பேரிடமும் முதல்மட்ட ஊழியர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். பணிபுரியும் அரசாங்கத்துக்கே ரெண்டகம் விளைவிக்கும் விதமாக எதிரி அரசாங்கத்துக்கு உளவு சொல்பவர்களாகவும், ஆட்சியாளருக்குத் தக்கபடி நிறம் மாறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சுகபோகத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்களாகவே இருந்திருப்பது வானம் வசப்படும் மூலமாகவும் வெளிப்படுகிறது.

கிழக்கான் என்ற பள்ளர் சாதி நபர் அந்த ஊர் ஆண்டையிடம் பண்ணை வேலை செய்து வருகிறார். அப்போது ஊரில் மாட்டுத் தோலை உரித்து எடுத்துச்செல்லும் கும்பல் பண்ணையார் தொழுவத்தில் மாட்டை உரித்து தோலைத் திருடிச்சென்றுவிட்டது. பண்ணையார் கிழக்கானைக் கட்டிவைத்து சாட்டையால் அடித்து வாயில் சாணியைக் கரைத்து ஊற்றி, மூத்திரத்தையும் ஊற்றுவதைப் பார்த்த அவரது எட்டு வயது மகன் ஓடிச்சென்று அடிப்பவனைப் பிடிக்க, அவன் உதைத்துவிடுகிறான். அந்தக் குழந்தை ஒரு கல்லை எடுத்து எரிய அது அடிப்பவன் நெற்றியில் பட்டு காயமாக, அடுத்த சில நிமிடங்களில் கிழக்கானின் குழந்தை கொல்லப்படுகிறது.

கல்லை எடுத்து குழந்தை அடித்தது தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதிய பண்ணையார் கிழக்கானின் மனைவி மாரியாயியை உயிருடன் தீ வைத்து அனைவரின் முன்னிலையில் கொளுத்திவிடுகிறார். மகனையும், மனைவியையும் அடக்கம் செய்த கையோடு பிரெஞ்சுத் துரை ஒருவனிடம் தன்னைத்தானே அடிமையாக விற்றுக்கொண்டு கப்பலேறிவிடும் கிழக்கானின் கனமே 495 பக்க நாவலின் மொத்த கனமுமாகத் தோன்றுகிறது.

வங்கிகள், கடன் வசதி என எதுவுமே இல்லாததால் காசுகளை மண்ணில் புதைத்து வைப்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்த ஒரே சேமிப்புப் பழக்கமாக இருந்திருக்கிறது.

கோவில்கள்தோறும் தாசிகள் பரம்பரை பரம்பரையாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள பணக்காரர்கள் சதிர் ஆட்டத்தை வீடுகளிலேயே நடத்துவதுடன் தாசிகளுக்கு செலவிடுவதை ஒரு சமூக அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். ஒவ்வொரு முக்கிய அரசாங்க விழாககளின்போதும் தேவடியாள் ஆட்டம் என நடன நிகழ்ச்சிகள் தாசிகள் மூலமாகவே நடந்து வந்திருக்கிறதும் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று நாம் மக்களாட்சி என்ற பெயரில் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம், ஆட்சியாளர்கள் அதிகாரம் எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டு மக்களுக்காகவே அவர்கள் என்ற அமைப்புமுறை இருக்கிறது, உழைப்புக்கான ஊதியம், ஓய்வு, மருத்துவ வசதிகள் என மக்கள் மனிதர்களாக மதிக்கப்படுகின்றனர் என்பதை அறிய வானம் வசப்படும் நாவலை அவசியம் வாசிக்கவேண்டும். இரயில் வந்தபிறகுதான் இராஜாவும், குடிமகனும் – முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பும் பொருளாதார இடைவெளி மட்டுமே – ஒரே வேகத்தில் பயணிக்க முடிந்தது.

அறிவியல் மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும். அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்து பழைய காலத்துக்கு வாழ்வியலுக்கு நம்மை அழைப்பவர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்களாக இருப்பதும், அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாமே கேள்விகளே இல்லாத பண்ணையார், கூலிக்காரன் என்ற அமைப்புக்கு மூளைச்சலவை செய்யும் பிரச்சாரமாகவும், உயர்வு என்பது பிறப்பால் வருவது என்ற கோட்பாட்டைத் திணிப்பதுமேயாகும்.

வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற நூல்களுள் ‘வானம் வசப்படும்’ மிகவும் முக்கியமானது.

வடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்?

வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது. உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச்சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு நான்கு ரோடு சந்திப்பிலும் மலையாளிகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே பேக்கரி போட்டுவிட்டனர். தின்பண்டங்களில் இன்று சொந்த பிராண்டுகளில் வந்துவிட்டனர்.

தமிழகத்தில் எந்த கட்டிட உரிமையாளரும் சேட்டுபசங்களுக்குத்தான் கடை வாடகைக்குத் தருவேன் என்று சொல்வதில்லை. கம்பெனிகள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் ‘இந்திக்கார கடை ஓனர்களுக்கு மட்டும் சப்ளை செய்யப்படும்’ என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் இல்லை. ஆமை போன பாதையை வைத்து கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வாணிபம் செய்த்தாகச் சொல்லப்படும் இந்த தமிழ்குடிக்கு என்னதான் ஆயிற்று?

கணிசமாக படித்து வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்களது வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை. எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால் வியாபாரம் பண்ணித்தான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகவே ஆகிவிட்டது. ஓர் ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதில் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் காட்டும் ஆர்வத்தில் 10% கூட தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை. கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை பெற்றவர்களை, அதன்பின்னரும் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்றே பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணமாகும்வரை உயர்கல்வி கற்பது என பொழுதை ஓட்ட படிக்கப்போவது தமிழகத்தில் இப்போது ஃபேஷனாகி வருகிறது. இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதில்லை.

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கக்கூடாது, எனக்கு நான்தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமைல நான் இருக்ககூடாது என்றெல்லாம் சுயதொழில் செய்வது குறித்து இருக்கும் மாயை. இந்த நினைப்பில் தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகுசீக்கிரம் மண்ணைக் கவ்வுவதுடன் மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் கல்லுக்கட்டு சித்தர்களாகிவிடுகின்றனர். ஊரில் எவனாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் இத்தகைய நபர்களுடைய கதைகளைச் சொல்லி பலரும் பயமுறுத்துவது வழக்கம்.

வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு காசு போட்டு நாலு காசு சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்டசாதி பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும் வைத்துக்கொள்வதும் ஒரு காரணம்.

உள்ளூரில் உள்ள நபரால் தொடங்கி நடத்த முடியாத கடைகளை எப்படி சின்னச்சின்ன சேட்டு பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை விரிவாக அலசாமல் ‘அவனுங்கள்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர்’ என்று எளிதாக முடித்துக்கொள்கிறோம். எந்த தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று. Frugal management என்று எம்பிஏ-க்களில் படிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கடை திறக்கும் அவர்கள் ஒரு மணிநேரம் பின்னதாக சாத்துவதில் ஆரம்பித்து, மதிய உணவைக்கூட கல்லாவுக்கு கீழே அமர்ந்து பதினைந்து நிமிடத்தில் முடித்துக்வொள்வது முதல் குறைவான இலாபத்தில் நிறைய விற்கும் கலை வரை பலவற்றை அந்தந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களை, தேவைகளைப் பார்த்து கற்றுக்கொள்கின்றனர்.

நல்ல அனுபவமிக்க வியாபாரிகளுடன் பழகும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் தொழில் நுணுக்கங்கள், அணுகுமுறைகள் விலை மதிப்பற்றவை. கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போது வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் உட்காருங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்வீர்கள். அப்படி சொல்லி, சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டுச் சென்று வியாபாரத்தை முடிக்கும்போது அந்த வாடிக்கையாளரையும் கை கழுவுகிறீர்கள். சாப்பாட்டைப் பாதியில் மூடி வைத்துவிட்டு வாடிக்கையாளரைக் கவனிக்கையில் உளவியல் ரீதியாக மிகச்சிறந்த பிணைப்பையும், நம்பிக்கையையும் உண்டாக்க முடியும் எனபது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும். போட்டிக்கு ஆள் இல்லாதவரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார். நாலு காசு சம்பாதிக்கத்தானே கடை போட்டு/கம்பெனி ஆரம்பித்து உட்கார்ந்திருக்கிறோம் என்று எளிமையாக எடுத்துக்கொண்டு மார்வாடி, சேட்டு பையன்கள் நடத்தும் கடைகளைக் கவனமாகப் பார்த்தால் இவையெல்லாம் ஒவ்வொன்றாக பிடிபடும்.

ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடித்து நாலு காசு புரள ஆரம்பித்தவுடன் ஏலச்சீட்டு பிடிக்கிறேன், ரியல் எஸ்டேட், நாட்டுமாடு வளர்க்கிறேன் என்று லினன் சட்டை மடிப்பு கலையாமல் சப்ளையர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து ரொட்டேஷனில் விடுவது. வார இறுதியில் சீமைச் சாராயத்துடன் தோப்புகளில் கேளிக்கை, கோச்சைக் கறி விருந்து, மாதக்கடைசி பில்லிங் முடித்தவுடன் ‘ஹேப்பி எண்டிங்’ கொண்டாட்டம், சிறப்பு ஸ்கீம் விற்பனைகள் மூலம் வருடத்துக்கு இரண்டுமுறை வெளிநாட்டுப் பயணம் என திரிந்து 5-10 வருடங்களில் பெரும் நட்டத்தைச் சந்தித்து அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கு, இளைஞர்களுக்கு சொந்தத்தொழில் என்றாலே பெரும் பீதியை உண்டாக்கிவிடுவது. ஆனால் மார்வாடிகள் சிறப்பு ஸ்கீம்களில் விற்ற புள்ளிகளை கிரெடிட் நோட் போட்டு சரக்காக எடுத்து காசாக்குவார்களே தவிர தாய்லாந்து பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நம்மவர்கள் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை, சமூகத்தில் இயங்கும் விதம், பணத்தையும் நேரத்தையும் உறவுகளையும் கையாளும் விதம் என எதையுமே பார்க்காமல் அவர்களது கல்லாவில் காசு விழுவதை மட்டுமே பார்ப்பதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இந்தியாவில் தமிழகமும், குஜராத்தும்தான் பெண்களின் பெயரில் அதிக தொழில்முனைவோர்களைக் கொண்டவை. ஏகப்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்தவாறே மனைவி பெயரில் தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று. அவ்வாறு இல்லையே என்று தோன்றினால் நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

கார்ப்பரேட் எதிர்ப்பு என்றபெயரில் சில லெட்டர் பேடு டம்ளர் கட்சிகள் இளைஞர்களை படுமுட்டாளுக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன. உரிமையாளர் நிறுவனம், பங்காளி நிறுவனம், பிரைவேட் லிமிடெட் போன்றவை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர். கஷ்டப்பட்டு தொழில் நடத்தி வெற்றிகரமாக நடத்துகையில் சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாக தொழில் நொடித்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் பன்னாட்டு மாஃபியா, பனியா மாஃபியா, கார்ப்பரேட் மாஃபியா என கற்பனை பயங்களை மற்றவர்களுக்கும் பரப்புவது இவர்களது வேலை.

உதாரணமாக பிளாஸ்டிக் கவர் செய்யும் இயந்திரங்களை இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்தை வங்கியில் அடகு வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். Break even இன்னும் ஒரு வருடத்தில் வந்துவிடும் என்ற சூழலில் அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறது. பக்கத்து மாநிலத்துக்கு செல்வது அல்லது இங்கிருந்து விற்பது என எந்த முடிவு எடுத்தாலும் தொழிலை தொடர்வதற்கு மாதம் மூன்று நான்கு இலட்சம் ரூபாயை உள்ளே இறக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் தொழில் நடத்த முடியாது எனும்போது Proprietor எனப்படும் முதலாளியாக பதிவு செய்து தொழில் நடத்தியவர் படிப்படியாக வளர்ந்திருந்தாலும் சொத்து முழுவதும் வங்கிக் கடனுடன் இணைக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார். அதேநேரத்தில் படிப்படியாக வளர்ந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்து நடத்தியவரது வீடு வாசலாவது மிஞ்சும். இந்த மாதிரியான விரும்பத்தகாத சூழல்களில் சட்டப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் கார்ப்பரேட் எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு மத்தியில் சேட்டான்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வீரமிகு ஒறவுகள் விரைவில் அவர்களது கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் நாள் வரத்தான் போகிறது.

நமது இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினை சோம்பேறித்தனம். எதாச்சும் பண்ணனும் பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன? அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்திகொள்முதலுக்கு விலையே கிடையாது.

காமசூத்ரா படித்துக்கொண்டும் அதைப்பற்றி நாலு பேர் சொல்லும் கதைகளைப் கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன பயன் உண்டாகும்? அதே போல்தான் அளவுக்கதிகமான சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பதும், வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருப்பதும்.

பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை. If you don’t do it, you won’t learn it.

நம் ஊரில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் கண்ட வடக்கத்தியர்கள் இங்கே கடை விரிக்கும்போது நம்மைத் தடுப்பது எது?

விழித்துக்கொள் தமிழா!!