ஜெயமோகனுக்கு ஒரு பதில் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஒத்திசைவு இராமசாமி அவர்களின் வலைப்பூ பதிவை மேற்கோள் காட்டி திரு. கே. அவர்கள் உங்களுக்கு வரைந்த கடிதத்தையும் அதற்கான உங்கள் பதிலையும் வாசித்தேன். இதற்காக நேரமெடுத்து உங்களது கருத்துகளைப் பதிவு செய்தமைக்கு நன்றி. அதுகுறித்து சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

(பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு எழுதிய கடிதம்: https://www.rsprabu.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/75/

ஒத்திசைவு இராமசாமி அவர்களின் வலைப்பூ பதிவு: https://othisaivu.wordpress.com/2017/07/09/post-750/

ஜெயமோகன் அவர்களின் பதிவு: http://www.jeyamohan.in/100321#.WXmWGVThWf0 )

விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நம்மாழ்வாரின் வாகனம் அமைப்புக்கு நன்கொடை திரட்டி அளிக்கப்பட்டதை திரு. கே நினைவுகூர்ந்ததையும், அதற்கு பதிலளிக்க நீங்கள் கவனமாக மறந்துவிட்டதையும் என்னைப்போலவே பலர் கவனித்திருக்கக்கூடும். ஏதாவது ஒன்றின்மீது நமக்கு அதீத பிரியம் ஏற்படும்போதுதானே நிதியுதவி அளிக்கப் புறப்படுவோம். அதைச்சார்ந்த பலவும் பொதுவெளிகளில் விமர்சனத்துக்குள்ளாகும்போது ஒரு தர்மசங்கடமான சூழல் உருவாவதையும் அதற்காக பலவாறாக புரியாத வாசகங்களால் முட்டுக்கொடுப்பதையும் இணையம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. வந்தேறி, ஒறவுகளே, தந்திரோபாய பின்னகர்வு போன்றவையும் இதில் அடங்கும்.

/இந்தியவேளாண்மையைப் புரிந்துகொள்ளாமல், வெறும் கல்விக்கூடநிபுணர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியின் எதிர்விளைவுகளை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். நான் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயம் செய்தவன். அவ்வனுபவத்தில் சொல்கிறேன்./

/இன்று வாழைக்காய்க்குள் நேரடியாக குலைக்காம்பு வழியாக யூரியாவும் பூச்சிமருந்தும் செலுத்தப்படுகின்றன. அதை நாம் உண்கிறோம். கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு வயல்வழியாக காலைநடை செல்லமுடியாது. தும்மலும் மயக்கமும் வரும்.பலநோய்களுக்கு இதுதான் காரணம். அதைக்கொண்டு ஒரு மாபெரும் மருத்துவ வணிகம் கட்டி எழுப்பப் பட்டுள்ளது/

/இடுபொருட் செலவு மிகுந்து விவசாயம் அழிந்துவிட்டது. தமிழகத்தின் தென்பகுதியில் நீங்கள் பயணம்செய்தால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் சும்மா போடப்பட்டிருப்பதைக் காணலாம். பருத்தி காய்கறி விளைந்த நிலங்கள். மாற்றுத்தொழில் வந்தால் விவசாயத்தை மக்கள் விட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்திய யதார்த்தம். விவசாயம் பொய்க்கிறது, மறுபக்கம் விவசாயநிலத்தில் வாழ்வதனால் வரும் நோய்கள். அதன் மட்டுமீறிய செலவு. அதன் விளைவான கடன், தற்கொலை./

இந்த வரிகளையெல்லாம் படித்தவுடனே “பசுமைப் புரட்சியின் கதை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதியிருந்த முன்னுரை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பத்திரப்பதிவுத் துறையில் முழுநேர ஊழியரான உங்கள் அப்பா, விவசாயப் பட்டதாரியாக இருந்தாலும் தபால்துறையில் ஊழியரான உங்கள் மனைவி, நீங்களும் அரசாங்க உத்தியோகஸ்தராக பாதுகாப்பான வருமானத்துடன் வாழும்போது பசுமைப்புரட்சி வெறும் கல்விக்கூட நிபுணர்களால் கொண்டுவரப்பட்டதாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

வாழைக்காய்க்குள் குலைக்காம்பு வழியாக யூரியாவும், பூச்சிமருந்தும் செலுத்தப்படுவதாக சொல்கிறீர்கள். யாராவது எதையாவது எங்காவது நூதனமாக செய்துகொண்டு இருப்பதை ஊரே செய்வதாக சொல்லமுடியாது அல்லவா? பூச்சிமருந்தையோ, பூஞ்சாண மருந்தையோ குலைக்காம்பு வழியாக செலுத்த முற்படும் விவசாயிகளை பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கம்பெனிகளில் வேலை செய்பவர்களே முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். வாழை மொட்டு வெளிவரும்போது தேனி, கம்பம் பகுதிகளில் சிலர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் டானிக்குகளை தெளித்துவிடுவது உண்டு; அதற்காக அந்த பிராந்திய விவசாயிகள் அனைவரும் டானிக்குகள், வளர்ச்சி ஊக்கிகளை வரிசையில் நின்று வாங்கிவந்து தெளித்து வாழையை நச்சாக்குகிறார்கள் என்று சொல்வது பல சராசரி சம்சாரிகளை அவுசாரி ஆக்கும் செயலல்லவா?

மேற்கு மாவட்டங்களில் கேரள நர்சுகள் என்றால் ஐட்டம் கேர்ள்ஸ் என்ற மனவோட்டம் நடுத்தர வயது ஆண்களில் பலருக்கு உண்டு. இதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்றால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இழுத்துக்கொண்டே இருப்பார்கள். பிளாஸ்டிக் அரிசி விற்கிறார்கள், ஜிஎஸ்டி-யால் மளிகைக்கடையில் விலை குறைந்துவிட்டது என்று சொல்பவர்களும் இப்படித்தானே. வாழைக் குலைக்காம்பில் பூச்சி மருந்து செலுத்துவது, காளிபிளவரைப் பூச்சிமருந்துக்குள் முக்கி எடுப்பது எல்லாமே கேரளத்து ஐட்டம் நர்சு கதை மாதிரிதான். எங்காவது விதிவிலக்காக நடைபெறும் சம்பவங்களை சராசரியான நிகழ்வுகளாக்கி நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும் என்று அடித்துவிடுவதைச் சுட்டிக்காட்டுவதை நான் வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

மாற்றுத்தொழில் வந்தால் மக்கள் விவசாயத்தை விட்டுவிடுவது ஒன்றும் நடக்கக்கூடாத ஒரு நிகழ்வன்று. பாதுகாப்பான உபரி வருவாய் இருப்பவர்களே விரைவாக விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்; அவ்வகையில் தென்மாவட்டத்தினர் தேர்ந்தெடுத்தது ஓரளவுக்கு பாதுகாப்பான வேலை வாய்ப்புகளை என்பதால் அந்த மாற்றம் கண்கூடாக தெரிகிறது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையை தென்னைமரங்கள் நிறைந்த ஊராக மட்டுமே இன்று அனைவருக்கும் தெரியும். அங்கு மட்டுமல்லாது மேற்கு மாவட்டங்களின் தென்னை மரங்களின் சராசரி வயது 25-30தான். அதற்கு முன்பாக பொள்ளாச்சி, சங்ககிரி போன்ற ஊர்கள் கடலை விளைச்சலுக்கு புகழ்பெற்றவை. கடலையில் வரும் சிவப்பு கம்பளிப்புழுக்கள் சாலைகளை மொந்தை மொந்தையாக கடக்கும்போது போக்குவரத்து நிறுத்தப்பட்ட கதைகளை பல பேராசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். பலவகையான பூச்சிக்கொல்லிகளை அவற்றின்மீது சோதித்துப் பார்க்க MM 540 ஜீப்புகளில் அந்தகாலத்தில் சுற்றிய சிலருடனும் பணிபுரிந்த அனுபவம் உண்டு.

கோவையும், திருப்பூரும் உலகமயமாக்கலை விவசாயக்குடும்பத்தில் இருந்து படித்து வந்த முதல் தலைமுறை இளைஞர்களின் துணையுடனேயே கையாண்டது. அவர்கள் மாற்றுத்தொழிலை நோக்கி சென்றதும் விவசாய நிலத்தை சும்மா போட வேண்டாமே என தென்னை மரத்தை நட்டுவிட்டுச் செல்ல அவை வளர வளர மிக அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவை தரும் உபரி வருமானம் காரணமாக மக்களும் ஆக்ரோஷமாக இருக்கும் தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். அதனால் அடிமடை விவசாயிகள் பாதிக்கப்பட்டது உண்மை. சாயப்பட்டறைகளாலும், தோல்ஷாப்புகளாலும் இதேதான் நடந்தது. தங்களைப் போன்ற நாலும் தெரிந்தவர்களும் கூட அந்த பழியை பசுமைப்புரட்சியின் மீது மட்டும் இறக்கிவைத்து விடுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கவுண்டர் சாதி ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் உள்ள சிரமங்களையும் அதற்கான காரணங்களையும் கள ஆய்வுகளோடு Economic & Political Weekly ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது (அதை கமெண்ட்டில் காணலாம்). திருமணத்திற்கு பெண் கிடைக்காத சூழலுக்கும், ஒரு பிராந்தியம் கல்வியில் முதலீடு செய்வதால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களையும், தொழிற்புரட்சியால் விவசாயம் செய்பவர்களுக்கு வரும் சமூக அழுத்தங்களையும் மிகத் தெளிவாக விளக்கும் கட்டுரை அது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் விவசாயம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது என்பதை அறிந்தவர்களுக்கு இஃது எளிதாக புரியும்.

ஆங்கிலேயர்கள் இரயில்வே அமைத்து தானியங்களை எடுத்துச் சென்றதால்தான் இந்தியாவில் பஞ்சம் வந்தது, பூச்சிமருந்து, உரம், வீரிய விதைகள், பசுமைப் புரட்சி, பன்னாட்டு கம்பெனி வியாபாரம், ஃபார்மா கம்பெனி வியாபாரம், தற்சார்பு அழிப்பு, இயற்கை விவசாயம் என்ற பொத்தாம்பொதுவான விவசாய காலம்னிஸ்ட் கட்டுரைகளைச் சார்ந்த தொணியையே நீங்களும் வெளிப்படுத்துகிறீர்கள். விவசாயமும் ஒரு தொழில்தான். சமூக மாற்றங்களை விவசாயத்தொழிலும் உள்வாங்கித்தானே ஆகவேண்டும்.

விவசாயத்தில் பசுக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒருபங்குகூட தலித் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. அவர்கள் விவசாயத்தொழிலை விட்டு வெளியேறுவதை பெயரளவுக்குக்கூட யாரும் பதிவு செய்ய விரும்புவதில்லை. விதர்பாவில் பி. டி. பருத்தியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று வரும் கட்டுரைகளில் அங்கிருந்த தலித் மக்கள் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள் என்ற எந்த விவரமும் இருக்காது. பசுமைப்புரட்சி, பன்னாட்டு ஃபார்மா கம்பெனி வியாபாரம் என்ற குண்டுசட்டியே போதுமானதாக இருக்கிறது.

அறிவியல் ஆதரவு என்பதையும் ஒருவகையான அடிப்படைவாதமாக பாவித்து இதுவும் ஒருவகையான மதப்பூசல் என்று நிறுவுகிறீர்கள். கேள்வி கேட்பவர்களை அறிவியற்பூர்வமாக பேசவில்லை என்று பகடி செய்வதாகவும் இதெல்லாம் ஒருவகையான ஐரோப்பிய சார்பு மனநிலை என்றும் கருதுகிறீர்கள். ஆனால் புனைவுக்கும், அறிவியலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதானே. தவறான வாதத்தை, வார்த்தைகளை, கோட்பாடுகளைத் தவறு என்று சொல்வதுதானே அறிவியல். செம்மெல்வெய்ஸ், கலிலியோ என ஆரம்பித்து லமார்க் வரை எத்தனை எத்தனை சான்றுகள் வரலாற்றில் பரவிக் கிடக்கின்றன.

என்னதான் ஆகச்சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் தன்னுடைய ஆதர்ச நாற்காலியில் அமர்ந்து பயன்படுத்தும் இங்க் பேனாவையே ஆகாய விமானத்திலும், அண்டார்டிகாவிலும் பயன்படுத்த முடியாது. இதற்கு ஓர் எளிய அடிப்படை அறிவியல் புரிதல் வேண்டும். அதை சுட்டிக் காட்டுபவர்களைக் கூட அறிவியல் மதவாதிகள் என எளிதாக புறந்தள்ளி விடுவது என்பது கிட்டத்தட்ட வாழ்ந்துகெட்ட நாட்டாமையின் மனநிலையின். புத்தக விமர்சனம் எழுதுகிறேன் என்று யாராவது ‘சாரு நிவேதிதாவின் வெள்ளை யானை’ என்றோ ஜெயமோகன் எழுதிய காமரூபக் கதைகள்’ என்று ஆரம்பித்து அதை ஏதேனும் பிரபல ஏடு பதிப்பித்திருந்தால் யாரை முதலில் கடிந்துகொள்வோம்? முட்டாள்தனமான விசயங்களையும், பொய்களையும் பதிப்பித்தாலும் பசுமை விகடனை கவனமாக தவிர்த்துவிட்டு, இருதரப்பையும் ‘டேய் இனிமே ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் பண்ணிகிட்டு இருக்கப்படாது, என்ன, நாஞ்சொல்றது புரியுதா?’ என முடித்து வைத்துவிட்டீர்கள்!

மாசனபு ஃபுகாக்கோவின் ஒற்றை வைக்கோல் புரட்சி படித்ததும் எனக்கு எந்தவிதமான சிலிர்ப்போ, பரவசமோ ஏற்படவில்லை. பள்ளி முடிக்கும்வரை எங்களின் வாழ்க்கையே கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. ஃபுகாக்கோவின் இயற்கை விவசாயப் பண்ணை இருக்கும் Matsuyamaவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு என் நண்பர்கள் பி. எச்.டி-க்கு போனார்கள். சாய்பாபா மகிமைகள், குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் ரேஞ்சுக்கு இங்குள்ளவர்கள் ஃபுகாகோ புராணங்களை இறக்கிவிட்டதால் நானும் அவர்களை அங்கு போய் பார்த்து வரும்படி நச்சரிக்க ஆரம்பித்திருந்தேன். அதிலும் ஒரு வட இந்திய நண்பன் ”தேரி பேன்ச்***” என்று ஆரம்பிக்குமளவுக்கு போய்விட்டதால் நிறுத்திக்கொண்டேன். விவசாயத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு துறையிலும் ஜப்பானியர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

நீங்கள் காரமடை அருகே காட்டுவிளிம்பில் நிலம் வாங்கி விவசாயியாக முயல்வதை ‘பசுமைப் புரட்சியின் கதை’ நூலின் முன்னுரையில் வாசித்தேன். யானை வழித்தடத்திற்கு அருகில், மலை மடுவுகளின் நீர்வழிப்பாதைகளில் வேலி அமைத்து இயற்கை விவசாயம் செய்வது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது. அதே பகுதியிலுள்ள நமது இயற்கை விவசாயப் பண்ணைமீது பக்கத்து தோட்டத்துக்காரர் பெட்டிஷன் போட்டுவிட, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆர்கானிக் ஃபார்மிங் செய்கிறோம் என்று விளக்கினோம். நேரில் வந்து பார்த்தவர்கள் ”வெரிகுட் வெரிகுட், உங்களமாதிரி இளைஞர்கள் ஆர்கானிக் ஃபார்மிங் பண்ண வர்றது ஒரு நல்ல ஆரம்பம்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். இப்போதெல்லாம் இந்தமாதிரி ஃபேன்சி வார்த்தைகள் பலரை எளிதாக கவர்ந்துவிடுகிறது.

//”நாம் உருவாக்கி அனுப்பும் வேளாண்மைத் பட்டதாரிகள் நடைமுறையில் வேளாண்மை என்றால் என்ன என்றே தெரியாத அசடுகள். ஆனால் அவர்களுக்குத் தாங்கள் படிக்காத விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டிய தேவதூதர்கள், ஞானத்தின் அமுதசுரபியுடன் கிராமங்களுக்குச் செல்பவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. நம் வேளாண்மையை அழித்ததில் நம் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் அவர்களின் பட டதாரிகளுக்கும் உள்ள பங்களிப்பு சாதாரணமானதல்ல”.// நீங்கள் உதிர்த்திருக்கும் இதே வார்த்தைகளைத்தான் ஹீலர்கள் இன்றைய அலோபதி மருத்துவர்களின் மீது சொல்லி வருகின்றனர். வேளாண்மைப் பட்டதாரியோ, மருத்துவப் பட்டதாரியோ, பொறியியல் பட்டதாரியோ யாராக இருந்தாலும் UG முடித்து வெளியே வருபவர்களின் புரிதல், மனநிலை, அனுபவம் ஒன்றுதான். தஞ்சைப் பெரியகோவிலை மனக்கணக்கில் கட்டிய தமிழனுக்கு இன்று ஒரு சாக்கடை கட்டுவதற்கு ஏகப்பட்ட அளவிகள் தேவைப்படுகின்றன; தமிழனின் கட்டடக்கலையை அழித்ததே இந்த பொறியியல் கல்விதான் என்றும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்ப அந்த கத்திப்பாரா மேம்பாலம் எப்படி நிற்கிறது, மெட்ரோ ரயில் எப்படி சரிந்துவிடாமல் ஓடுகிறது என்று கேட்கவரும் அறிவியல் ஆதரவு அடிப்படைவாதிகளை நாம் புறந்தள்ள வேண்டும். ஏனென்றால் இணையமும், முகநூலும் அந்த மாதிரியான வறண்ட உரையாடல்களுக்கான களம்.

Proprietor, Partnership போலவே Private Limited or Limited என்பதும் different formats of owning a business என்ற எளிமையான விசயங்களைக் கூட நம் இளைஞர்களுக்கு சொல்லித்தராமல் கார்ப்பரேட் சதி என்று விதைக்கிறோம். பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்குபவர்களும் கார்ப்பரேட்காரர்களின் சதி என்பது அபத்தமாக இருக்கிறது. கம்பெனி சட்டத்தில் விவசாயிகளே Farmers Producer Company என்றபெயரில் கம்பெனி ஆரம்பித்துக்கொள்ள தனிப்பிரிவு உண்டு. இன்று பல எழுத்தாளர்கள் புத்தகங்களை மின்னூலாக அமேசானில் வெளியிடுகிறார்கள். இதனால் சிறு பதிப்பாளர்கள் என்ன ஆவார்கள், அச்சகங்கள் என்னவாகும், பைண்டிங் தொழில், புத்தகக் கடைகள் என்னவாகும் என்று கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அது தொழில்முறை எழுத்தாளர்களுடைய வாழ்வா சாவா பிரச்சினை; இந்த இடத்தில் மரபு, பாரம்பரியம், இயற்கை வாசிப்பு என்றெல்லாம் பேசக்கூடாது. ஓலைச்சுவடிகளிலில் ஆரம்பித்து, அச்சு கோக்கும் இயந்திரம், மின்சாரம் கண்டுபிடிப்பு என பெரிய பெரிய கட்டுரைகளை புரியாத நடையில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள்.

விவசாயிகளுக்கும் இதே மாதிரி வாழ்வா சாவா பிரச்சினை இருக்கிறது. நவீனங்களை தனக்கு தேவையான அளவுக்கு உட்கிரகிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. அல்லது அவர்களுக்கு வேறு தொழிலோ, வருமானமோ இருக்கும்பட்சத்தில் தனது பால்ய காலங்களை சிலாகித்தபடி திண்ணையில் அமர்ந்து தனக்கொப்ப மனநிலையில் இருப்பவர்களுடன் கதைக்கலாம். Jio வருகைக்குப்பிறகு அவர்களது ஒவ்வொரு அறிவிப்பின் வெம்மையும் ஏர்டெல், வோடபோனில் உள்ளவர்களுக்கு புரியும். ஐடியா, ஏர்செல்லில் இருப்பவர்களுக்கு அது நரகம். BSNL-இல் இருப்பவர்களுக்கு ஜியோ என்ற ஒரு புதிய நிறுவனம் வந்திருக்குதாம் என்ற அளவுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்; யூனியன் இருக்கிறது, அது பார்த்துக்கொள்ளும். தொழிற்புரட்சி, அதனால் இந்திய சாதிகளில் ஏற்படும் பொருளியல் நகர்வுகள், உரசல்கள், அனைத்து சாதிகளுக்கும் திறந்துவிடப்பட்ட கல்வி, அதனால் ஏற்படும் எழுச்சிகள் என எதையுமே கவனிக்காமல் பசுமைப்புரட்சியைச் சுற்றிவந்து மணி ஆட்டுவதிலேயே நமது பெரும்பகுதி ஆற்றல் செலவாகிவிடுகின்றது.

இணையமும் முகநூலும் இதற்கென்றே ஆன களங்கள். உண்மையான ஆய்வும் விவாதமும் வேறெங்கோ நிகழ்கிறது என நம்பி ஆறுதல்கொள்வோம்.

அன்புடன்,
பிரபு
27 ஜூலை 2017.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *