குளங்களில் தாமரை, அல்லி போன்ற தாவரங்களை வளர்த்து நீர் ஆவியாவதைத் தடுத்த நம் முன்னோர்களின் பெருமையை தெர்மாகோல் சோதனை சிறுமைப்படுத்திவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் ஆதங்கப்படுகின்றனர். அதைப் பார்க்கும்போது தாமரைக்கு தமிழகத்தில் எத்தனை சோதனைகள் என்று கவலை வந்துவிட்டது.
தாமரை குளங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்கிறது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஏதாவது இருப்பின் தெரியப்படுத்துங்கள்; நானும் கற்றுக்கொள்கிறேன்.
Hydrological cycle மிகவும் பெரிய சப்ஜக்ட் என்றாலும் நமக்குத் தேவையான அடிப்படைகளைப் பார்ப்போம். மழையாக வரும் நீரானது ஆவியாகி (evaporation) வளிமண்டலத்தில் திரும்பவும் நுழைகிறது. தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரானது இலைகளின் மேல் உள்ள நுண்துளைகளான ஸ்டொமேட்டா (stomata) வழியாக பகல்நேரத்தில் ஆவியாகிக்கொண்டே இருக்கும் நிகழ்வு transpiration எனப்படுகிறது. இஃது இலைப்பரப்பின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து நீரை இழுப்பதால் மண்ணிலுள்ள சத்துக்கள் தாவரத்தை வந்தடைய உதவுகிறது. இந்த Evaporation, Transpiration, வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான நீர் மூன்றையும் சேர்த்து Consumptive Use (CU) என்கிறோம். இருந்தாலும் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான தண்ணீர் என்பது evaporation & transpiration-ஐ ஒப்பிடும்போது மிக மிகக் குறைவான ஒன்று என்பதால் மண்ணிலிருந்து ஏற்படும் நீர் இழப்பானது Evapotranspiration (ET) என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ET-யை அளவிடும் Lysimeter சோதனைகள், மண்ணுக்கு அடியில் நீர் கசிந்து செல்லும் Sub Surface Runoff போன்றவை இங்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடலாம்.
தாவரத்துக்குத் தேவையான நீரைத் தொடர்ந்து தருமளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருப்பது Field Capacity (FC) எனப்படும். ET மூலமாக நீரிழப்பு ஏற்படுகையில் மழையாலோ, பாசனத்தாலோ நீரானது replace செய்யப்படாதபோது மண்ணுக்குள் வறட்சி ஏற்படுகிறது. இருந்தாலும் ஸ்டொமேட்டாக்கள் தொடர்ந்து நீரை வெளியேற்றி இலைப்பரப்பின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன (மனித உடலின் வியர்வைச் சுரப்பிகளை ஓரளவுக்கு ஒப்பிடலாம்). இலைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவுக்கு வேர் வழியாக உறிஞ்சப்படும் நீர் இல்லாதபோது turgidity குறைந்து செடி வாடத்தொடங்குகிறது.
பயிர்களால் உறிஞ்சப்படும் நீரில் கிட்டத்தட்ட 99% transpiration மூலம் வெளியேறிவிடுகிறது என்பதால் இரசாயனங்கள் மூலம் ஸ்டொமேட்டா துளைகளை அடைப்பது அல்லது சூரிய ஒளியின் intensity-யைக் குறைப்பது போன்ற வகையிலான ஆய்வுகள் நிறைய உண்டு. ஒரு புதிய வகை anti-transpirant இரசாயனத்தைத் தெளிப்பதன் மூலம் இலைத்துளைகளை அடைத்து நீர்த்தேவை குறைகிறதா என அண்மையில் பல்வேறு dosage மூலம் நிறுவிக்கொண்டிருந்தோம். T. Stanes நிறுவனம்கூட சந்தையில் Green Miracle என்றபெயரில் ஒரு anti-transpirant திரவத்தை விற்கிறது; எங்கள் ஊர்ப்பக்கம் வெற்றிலை விவசாயிகளிடம் அது பிரபலம் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
பயிரில் செயற்கையாக உண்டாக்கப்படும் வறட்சி, கட்டுப்படுத்தப்பட்ட இலைத்துளை நீராவிப்போக்கு, வறட்சியைத் தாங்கும் இரகங்கள், மண்ணுக்கடியில் ஏற்படும் வறட்சியை Electrical Conductivity மூலம் அளவிட்டு வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், சூரிய ஒளி அளவு மற்றும் பல காரணிகளுடன் இணைத்து உண்டாக்கப்படும் சமன்பாடுகளின் மூலம் நிறுவி புதிய இரகங்களை இனங்காணும் ஓர் ஆய்வுத்திட்டத்தில் சிலபல ஆண்டுகள் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றேன். ஒற்றை இலக்க Coefficient of Variation உள்ள தரவுகளை தருமளவுக்கு துல்லியமாக திட்டத்தை நடத்திய அனுபவமுண்டு என்பதோடு ஒரு சிப்பம் மிக்சர் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அளவுக்கு இது தொடர்பான பயிற்சி பட்டறைகளில் உட்கார்ந்திருந்ததால் இந்த தாமரை மேட்டர் ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது.
தாவரங்கள் வளரும் சூழலைக்கொண்டு மூன்று பெரும் வகையாக பிரிக்கலாம். 1) Hydrophytes – நீர் அதிகமாக உள்ள சூழலில் வளர்வன. 2) Mesophytes – போதுமான நீர் உள்ள பகுதிகளில் வளர்வன. அதாவது அதிக நீரும், அதிக வறட்சியும் இல்லாத சூழல். 3) Xerophyte – வறண்டநில/பாலைவனச் சூழலில் வளர்வன.
ஒவ்வொரு தாவரமும் வாழும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. தாமரையானது நீரில் மிதப்பதற்காக அகலமான இலையையும், நீர் ஒட்டாமல் இருக்க மெழுகுபோன்ற படலத்தையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கிறது. ஆனால் வேர், தண்டுப்பகுதிகளுக்கு தண்ணீருக்குள் போதுமான ஆக்சிஐன் கிடைக்காது என்பதால் ஸ்டொமேட்டா வாயிலாக காற்று உள்ளே சென்று வருவதையும், உள்ளே உண்டாகும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஏரன்கைமா செல்களில் சேமித்து வைக்கப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதால் Transpiration மற்ற தாவரங்களைக் காட்டிலும் தாமரை, அல்லிச் செடிகளில் அதிகமாகவே நடக்கிறது. மேலும் இந்த transpirationஆனது குளங்களில் இயல்பாகவே நடக்கும் evaporation-க்கு சமமானது என்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால் தாமரை இலைகளால் water conservation என்பது வெறும் நம்பிக்கை அளவிலான hypothesis என்ற அளவில்தான் தெரிகிறது.
அதிக நீர் உள்ள சூழலில் வளரும் தாமரையானது தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகத்தான் தண்ணீரில் வாழ்கிறதே தவிர தண்ணீரைச் சேமித்து மற்ற உயிரினங்களுக்கு அளிக்க அல்ல. பாலைவனத்தில் இருக்கும் கள்ளிச்செடி, தான் வளர்வதற்காகத்தான் போராடுகிறது என்பதோடு ஏதாவது விலங்குகள் கடித்து காயத்தை உண்டாக்கினால் நீர் இழப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் பரிணாமத்தில் முட்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உயிரி மற்ற உயிரியைச் சார்ந்து வாழும் symbiotic relationship வேறு கோணத்தில் வருகிறது. அதுவும் அந்த இரண்டு உயிரிகளின் நலனுக்குத்தானே தவிர மனிதனின் சுயநலத்துக்கு அல்ல.
தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் அதிக transpiration potential கொண்ட தாவர இனங்களை வளர்ப்பதன் மூலம் நீரை அப்புறப்படுத்துவது Bio-drainage எனப்படுகிறது. இவற்றின் ஆணிவேர்கள் வெகு ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சி ஆவியாக்குவதால் phreatophytes எனப்படுகின்றன. யூகலிப்டஸ் மரம் ஆரம்பத்தில் biodrainage-க்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சமீபத்திய ஆய்வுகள், அவை அதிக நீரை உறிஞ்சுபவை அல்ல என்று ‘நிறுவுகின்றன’. ஆனால் ICAR-இன் Handbook of Agriculture யூகலிப்டஸை இன்னமும் phreatophyteஆகவே வைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். அப்படின்னா சீமைக் கருவேலமரம் பற்றியும் சொல்லுங்கள் என தயவுசெய்து யாரும் கேட்டை ஆட்டவேண்டாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வேளாண்மையை உணர்ச்சிபூர்வமாக பார்ப்பதைத்தான் பாரம்பரியம் என்று பெரும்பாலோனோர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை உடைக்கப்படுவதை பலரும் விரும்பாததால் ஏற்படும் வெற்றிடத்தை சுற்றுச்சூழல் அறிவியல் குறித்த எந்த அறிவும் இல்லாத நம்மாழ்வாரிய மூடர்கள் முன்னோர்களின் மரபுவழி ஞானம் என பல்வேறு பொய், புரட்டுகளை கலந்துகட்டி அடித்துவிட்டு நிரப்பி வருகின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறோம். ஆனால் எந்த கிராமமாவது காலியாகியிருக்கிறதா, உணவுப்பொருட்களின் விலை ஏறியிருக்கிறதா, அப்படியெனில் இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்னாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹிரியூர் மற்றும் மைசூர், மாண்டியா, ஷிமோகா பகுதிகளுக்கு 1960, 70-களில் தமிழர்கள் ஏன் குடியேறினார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்.
நம் முன்னோர்களின் ஞானம் மிக அற்புதமானது. ஏரிக்கரையில் குளிக்க வந்த பெண்ணிடம் “என்ன அருக்காணி, மச்சான் வெளியூர் போயிட்ட மாதிரி தெரியுது” என்று மைனர்கள் கேட்டுவைத்ததுகூட வருங்காலத்தில் மரபுவழி சிலேடை இலக்கியத்துக்கு உதாரணமாக வாட்சப்பில் வந்து தொலைக்கலாம்.