மாதொருபாகன், கிளாசிக் கற்பு நெறிகள், சமகால சைக்கோக்கள்

பக்தியை ஒரு ஓரமாக தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் மகாபாரதம் கற்றுக்கொடுக்கும் பலவும் நாகரிக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட/தவிர்க்கவேண்டிய கூறுகள்தான்.

பெரும்பாலான பக்திசார் கதைகளும் கீழ்த்தரமானவையாகவே இருக்கின்றன. பெண்கள் குளிப்பதை எட்டி பார்ப்பதையும், ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்து விளையாடுவதையும் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியுமா?

ஏ ஆணாதிக்க சமூகமே என்று என்டர் கவிதைகள் எழுதினாலும் சிறுவயது முதலே பெண் என்பவள் ஆணின் சொத்து, ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் படுக்கைக்குக் கூப்பிடலாம் அதுவும் படிநிலையில் கீழ்சாதியாக இருந்தால் அதில் கேள்வியே கிடையாது, ஒழுக்கம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான், ஒருவனைத் திட்ட வேண்டுமென்றால்கூட அவனது தாயின் ஒழுக்கத்தைக் சந்தேகப்படவேண்டும் என்பதுபோன்ற சிந்தனைகள் பக்தியின் பெயராலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றன.

தனிமனித ஒழுக்கம் தவிர ஒரு தரமான ஆக்க சிந்தனைகளுடன் கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கத் தேவையான கருத்துக்களை கொண்டிருக்கிறதா என்றால் அதுவுமில்லை. கிட்டத்தட்ட எல்லா பக்தி புராணங்களும் தனிமனித சுரண்டலை, அடிமைத்தனத்தை, பெண்களை சொத்தாக பார்க்கும் மனநிலையை, கேள்வியே இல்லாத கீழ்படிதலை ஆதரிப்பதும், போரை fancy-ஆக, fantasyஆக romanticize செய்கின்றன.

பெரிய நிறுவனங்களின் தரக்கட்டுப்பாட்டுத் துறையில் ஒரு பிரபல கதை உண்டு. ஒருமுறை IBM நிறுவனம் முதன்முறையாக கணிணி சில்லுகளை தயாரிக்க அமெரிக்காவுக்கு வெளியே ஜப்பான் நிறுவனம் ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்ததாம். பரீட்சார்த்த முறையில் தரும் முதல் ஆர்டர் என்பதால் ஒரு லட்சம் சில்லுகளுக்கு பத்து சில்லுகள் மட்டுமே defect piece ஆக இருக்கலாம் என்ற நக்கலான குறிப்புடன் ஆர்டர் கொடுத்ததாம். ஜப்பான் நிறுவனம் ஒரு இலட்சம் சில்லுகளை தயாரித்து அனுப்புகையில் ‘எங்களுக்கு அமெரிக்காவின் வர்த்தக விதிமுறைகள் புரியவில்லையா அல்லது உங்களது ஆங்கிலம் புரியவில்லையா என்று தெரியவில்லை. ஒரு மில்லியன் தயாரிப்புகளுக்கு ஒரு defect piece என்பதுதான் எங்களது அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு. எனவே நீங்கள் கேட்ட ஒரு இலட்சம் சில்லுகளோடு பத்து defect சில்லுகளைத் தனியாக தயாரித்து பேக் செய்து அனுப்பியிருக்கிறோம்; பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அனுப்பிவைக்கவும்’ என்று இருந்ததாம். அத்தகைய உயர்ந்த தரத்தை ஒரு நிறுவனம் கொண்டிருக்கவேண்டுமனால் அது பண்பாட்டுக் கூறாக மக்களிடம் இருக்கவேண்டும். இல்லையெனில் நிறுவனத்தின் மதில் சுவருக்குள் மட்டும் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுக் கொள்கைகள் ஒருபோதும் வெற்றிபெறாது. நம்மூரில் சிக்ஸ் சிக்மா, 5S, TQM என பலவற்றை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் ஏன் பெரும் பொருட்செலவு செய்கின்றன என்பதற்கு நமது பண்பாட்டுக் கூறுகளும் ஒரு காரணம்.

ஏன் என்ற கேள்வி பகுத்தறிவில் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்விலும், விளைவுகளுக்குப் பின்னரும் கேட்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அது உண்டாக்கும் implications எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஏன் சீதை இராமனுடன் வனவாசம் போனாள்? கணவனின் எந்த முடிவையும் கேள்வியில்லாமல் ஏற்றுக்கொண்டதால். ஏன் இராமன் காட்டுக்குச் செல்ல ஒப்புக்கொண்டான்? தசரதனின் எந்த ஒரு வேண்டுகோளையும் அவன் சீர்தூக்கிப் பார்த்தோ, மறுத்தோ பேசாமல் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தால். ஏன் தசரதன் இராமனை காட்டுக்கு அனுப்பினான்? கைகேயி பெற்றிருந்த இரு வரங்களில் ஒன்றை நினைவூட்டி கேட்டு, இராமனது முடிசூட்டுவிழாவை நிறுத்துவதற்குத்தான். ஏன் தசரதன் அத்தகைய வரங்களை கைகேயிக்கு வழங்கினான்? வெகு காலத்துக்கு முன்பு நடந்த போரில் காயமடைந்த தசரதனுக்கு கைகேயி உதவியதன் கைமாறாக இரண்டு வரங்களை அளித்திருந்தான். சிறந்த போர் வீரனான தசரதன் ஏன் போரில் காயமடைந்து கைகேயி உதவும் நிலைக்கு ஆளாகிறான்? போரின்போது எதிர்பாராதவிதமாக தசரதனது தேர்ச்சக்கரம் உடைந்துவிடுவதால் எதிரியின் தாக்குதலுக்கு ஆளாகிறான். அந்த தேர்ச்சக்கரம் உடையாமல் இருந்திருந்தால் இத்தனை லோலாயி நடந்திருக்காதல்லவா? ஆக, சக்கரம் தயாரித்தவர்கள் தரத்தில் கோட்டை விட்டதுதான் இத்தனை இரகளைகளுக்கும் காரணம். இதைத்தான் மேலாண்மையில் Root cause analysis என்பார்கள். தரமில்லாத ஒரு பொருளைத் தயாரித்தால் எதிர்காலத்தில் இந்த மாதிரி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்காமல் லீலை என்று தேவையில்லாத கண்ட கருமாந்திரங்களை சொல்லியல்லவா வளர்க்கிறோம்.

இதையெல்லாம் சொன்னால் திருக்குறளில் காமம் இல்லையா, அகநானூறில் காமம் இல்லையா என்று பக்தாஸ்கள் ‘புதிய பரிமாணத்தில்’ கேள்வி கேட்டு சிலிர்க்க வைக்கிறார்கள். மாட்டுக்கறி தின்பது இந்துமத உணர்வுகளுக்கு விரோதமானது என்று உண்பவர்களைக் கொல்லச்சொல்லி தூண்டி விடுபவர்கள் ஏன் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்துகிறார்கள் என்ற Root cause analysis செய்வதெல்லாம் அவர்களால் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.

மாதொருபாகன் மேட்டரில் இவ்வளவு சத்தம் வரக் காரணம் ஒரு தெருவில் இருக்கும் கவுண்டர் சாதி பெண்களை மொத்தமாக தேவடியாள் என்று சொல்கிறது; அது தனிமனித உரிமை மீறல் என்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியதாக சொன்ன ஆசிரியர் அதற்கான ஆதாரங்களைத் தரவில்லை என்றார்கள். ஆதாரமில்லாமல் இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது என்கிறாரகள். ஆதாரமில்லையெனில் அது ஒரு புனைவு; கற்பனைக் கதை. இதே கவுண்டர் சாதி அந்த பகுதியில் பறையர், சக்கிலியர் சாதியினரை எப்படி நடத்தினார்கள், நடத்தி வருகிறார்கள் என்பதைப்பற்றி பல நூல்கள் வந்திருக்கின்றன. தங்களது பண்பாடுகள் மிக உயர்வானது என்று சொல்லும் இனமான சிங்கங்கள் பேருக்காவது நாங்கள் அப்படியெல்லாம் தரக்குறைவாக யாரையும் நடத்துவதில்லை என்று சொல்லியிருக்கிறார்களா?

ஈமு கோழி திட்டங்கள் சுத்தமான ஃப்ராடு வகை என்றாலும் சுசி ஈமு குருவின் சாதிதானே பல நீதிக்கும், நேர்மைக்கும் பேர்போன கவுண்டர்களை போட்டிக்கு பண்ணை ஆரம்பிக்க வைத்தது? ஊர்ப்பணத்தை ஏமாற்றிவிட்டு ஓட்டம் பிடித்து பின்னர் கொலை வழக்கில் சிக்கி வாட்சப்பில் ஆடியோ ரிலீஸ் செய்த 420 வகை ஆளை மாவீரன் என கொண்டாடுவது இந்த கவரிமான் சமூகம்தானே?

பெண்களை உயர்வாக மதிப்பதில் எங்களைப்போன்ற சாதி வேறு எதுவுமேயில்லை; எழுதிங்கள், இணைச்சீர் எல்லாம் எதற்கு வைக்கிறார்கள் தெரியுமா என்று வெட்டிப்பந்தா பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது. தமிழக சாதிகளிலேயே வீண் பந்தாவிலும், வெட்டி ஜம்பத்திலும், சொந்தக்காரன் ஒருவன் முன்னேறிவிட்டால் பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும் வெந்து சாவது இந்த கவுண்டர் சமூகமாகத்தான் இருக்கமுடியும். ஒரு குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறினால் பொறாமையினால் பேசுவதில் ஒரு தராதரமே இல்லாமல் அந்த குடும்ப பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கி கதைப்பது வேறு சாதிகளில் இவ்வளவு இருக்க வாய்ப்பேயில்லை. இதை நான் சொல்லவில்லை. “ஒத்தையடிப் பாதை” என்ற நூலில் சக்தி மசாலா நிறுவனரின் மனைவி சொல்லியிருக்கிறார்.

மாதொருபாகன் அந்த பகுதி பெண்களை சந்தேகப்பட்டதால் வந்த பிரச்சினையல்ல; ஆண்களின் ஆண்மையை சந்தேகப்பட்டதால் வந்த எழுச்சி.

பசுமை விகடன் ஜுனியர் கோவணாண்டிக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு,

அடியேனின் அநேக நமஸ்காரங்கள். 10.7.2017 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் தங்களின் சாடல் கட்டுரையை கண்டேன். நம்மாழ்வார் ஐயாவை இணையத்தில் கேள்விகேட்டு கண்டபடி சிலர் விமர்சிப்பதாகவும் அதற்கு பதில் தரும்படியாக கட்டுரை வரைந்திருந்ததையும் மேலும் அந்த இதழில் வந்திருந்த பல கட்டுரைகளையும் வாசித்து இன்புற்றேன். நம்மாழ்வார் ஐயாவின் நாமம்தொட்டு இயற்கை விவசாயத்தையும், கார்ப்பரேட் சதிகளையும் தமிழக மக்களுக்கு புரியவைத்துவரும் பசுமை விகடனை நான் பெரும்பாலும் தொடுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த சுவாரசியமான சாடல் கட்டுரையை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டதால் வாங்கவேண்டியதாகிவிட்டது.

பசுமை விகடன் என்பது ஆனந்த விகடன் பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்கீழ் வெளியிடப்படும் இதழ்தானே? பசுமை விகடன் என்ற வார்த்தைக்கு நிச்சயம் சட்டபூர்வமான உரிமையை வாங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை வேறு யாராவது பயன்படுத்தினால் விட்டுவிடுவீர்களா என்ன? காப்பிரைட், பேடன்ட் எல்லாமே ஒரு நிறுவனத்தின் சொத்தல்லவா? ஆனால் விதை வியாபாரத்தில் சொந்த ஆராய்ச்சியாளர்களை வைத்து புதிய இரகங்களை உண்டாக்கி விற்பனை செய்கையில் ஒரு நிறுவனம் காப்புரிமை கோரினால் கார்ப்பரேட் சதி என்கிறோம். இயற்கை விவசாயிகள் என்று அறியப்படுபவர்கள்கூட தங்கள் நிலத்துக்கு பாகப்பிரிவினை/கிரயம் செய்தபிறகு பட்டா மாறுதல் செய்து, வரி கந்தாயம் எல்லாம் கட்டி அதை தங்களின் சொத்து என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம் என தத்துவம் பேசுவதில்லை. இவ்வாறாக விகடன் என்கிற கார்ப்பரேட் குழுமம் பல சிற்றிதழ்களை, கையெழுத்து பத்திரிகைகளை தங்களது பணபலத்தால், விரிவான மார்க்கெட்டிங் பலத்தால் முடக்கியது என்றால் சிரிக்கமாட்டார்களா? மோட்டார் விகடன், நாணயம் விகடன் என வாய்ப்புகள் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து இதழ்களை வெளியிட்டு காலத்துக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்கிற பத்திரிகை குழுமம் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்.

விதை பன்மயத் திருவிழா என்ற ஒரு நிகழ்வை நடத்திய ASHA (Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பை பதிவு செய்யாத போலி லெட்டர்பேட் அமைப்பு என்று நான் குறிப்பிட்டதற்கு பலர் அறச்சீற்றம் கொண்டு கடுமையாக விமர்சித்தனர். வேளாண்மையில் தொழில்முறையில் ஈடுபடும் மக்களுக்கு அதை இரண்டு பத்திகளில் விளக்கியிருக்க முடியும். ஆனாலும் அவ்வளவு பெரிய கட்டுரை எழுதியபின்னரும் பலர் புரியாதமாதிரி நடித்ததே நடந்தது. விதைகளின்/செடிகளின் திருட்டு என்பது விதை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமே செய்யும் என்ற தட்டையான புரிதலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

10.7.2017 இதழில் நக்ஸ் வாமிக்கா என்ற எட்டி மரம் குறித்த கட்டுரையில் இங்கிருந்து ஏற்றுமதியாகும் விதைகளில் மருந்துப்பொருட்கள் உருவாக்கப்பட்டு அவை நம்மிடமே அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுதியிருந்தது. ஆனால் விதைப் பன்மய திருவிழாக்களில் உண்மையான விதை சேகரிப்பாள விவசாயிகளின் விதைகளை போலி அமைப்புகள் எதற்காக பல அரிய இரகங்களைக் காட்சிப்படுத்த முயல்கின்றன என்பது மட்டும் பலருக்கு புரியவே புரியாது. அதே கட்டுரையில் இந்தியாவிலிருந்து பல இலட்சம் டன் எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கன்டெயினருக்கு பத்து டன் என்றாலும் ஒரு லட்சம் டன்னுக்கு பத்தாயிரம் கன்டெயினர் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கும். அப்படியென்றால் அரசாங்கம் சிறப்பு திட்டங்களை அறிவித்து என்னென்னவோ செய்திருக்க வேண்டுமே. பல்லாயிரம் ஏக்கர்களில் எட்டிமர சாகுபடி நடக்க வேண்டுமே. ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனது ஆசையைத் தூண்டிவிட வேண்டுமென்ற லாஜிக் இந்த கட்டுரையில் அருமையாக செட் ஆகிறது!

விதைத் திருவிழா குறித்த கட்டுரையில் சித்த மருத்துவர் சிவராமன் கிளைக்கோசைடு என்ற களைக்கொல்லி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று 2006-லேயே நம்மாழ்வார் எச்சரித்ததாகவும், ஆய்வரிக்கைகள் மூலம் இதை கண்டறிந்த ஐரோப்பிய நாடுகள் இதை தடை செய்துவிட்டதாகவும், இந்தியாவில் இன்னமும் உரக்கடைகளில் கிளைக்கோசைடு கிடைப்பதாகவும் மேடையில் பேசியதாக தெரிகிறது.

ஜெய்ப்பூர், இந்தூர், ரட்லாம், பரோடா, ஜுனாகத், இராஜ்கோட் என ஆரம்பித்து கோவில்பட்டி, இராஜபாளையம் வரைக்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஐம்பது அறுபது உரக்கடைக்காரர்களை நன்றாகத் தெரியும். கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது முன்னூறு உரக்கடைகளுக்கு மேல் சென்று உரையாடியிருக்கிறேன். சந்தையிலுள்ள பிரபல நிறுவனங்களின் பல்வேறு களைக்கொல்லிகளின் பிராண்டு பெயர், டெக்னிக்கல் பெயர், சிபாரிசு அளவு, சிபாரிசு செய்யப்படும் பயிர், விவசாயிகள் அதன்மீது செய்யும் பலாத்காரம் என பலதரப்பட்ட தகவல்களை விரிவாக அறிந்தவன் என்ற முறையில் கிளைக்கோசைடு என்ற களைக்கொல்லியே கிடையாது என நிச்சயமாக சொல்லமுடியும். ஒருவேளை Tebuconazole என்கிற மருந்தை மிகவும் டெக்னிகலாக ஹைட்ராக்சி டெபுகொனஸோல் கிளைக்கோசைடு என்று குறிப்பிட்டிருக்கலாமோ என்று யோசித்தாலும் டெபுகொனஸோல் என்பது ஒரு சாதாரண பூஞ்சாணக்கொல்லி. பேயர் நிறுவனம் Folicur என்றபெயரில் சந்தைப்படுத்துகிறது. இதைக் களைக்கொல்லி என்பது பாராசிட்டமால் கேன்சரை குணப்படுத்தும் என்பதற்கு ஒப்பானதாகும்.

இல்லாத ஒன்றை மேடையேறிச் சொல்லி மக்களுக்கு பீதியுண்டாக்கி மாற்று மருத்துவம் என மார்க்கெட்டிங் செய்யும் ஏமாற்றுப்பேர்வழி இந்த சித்த மருத்துவர் சிவராமன் என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதைச்சொல்லிய நம்மாழ்வார் ஒரு பிராடு பேர்வழி என்றும் சொல்லலாம். ஒருவேளை அவர் வேறு எதையாவது சொல்லியிருந்து பசுமை விகடனின் கட்டுரையாளர் கிளைக்கோசைடு என்று எழுதி வந்திருந்தால் அவரை முட்டாள் என்று சொல்வதா அல்லது அதை அப்படியே அச்சுக்கு அனுப்பி ஊரெல்லாம் ஒரு பிரபல சித்த மருத்துவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திய அதன் பொறுப்பாசிரியரை முட்டாள் என சொல்வதா என நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி. Glycoside is any molecule in which a sugar group is bonded through its anomeric carbon to another group via a glycosidic bond.

பசுமை விகடன் ஒரு முறையான அமைப்புக்குள் வரும் பத்திரிகை என்பதால் தவறு நடந்தால் திருத்திக் கொள்ளலாம், மறுப்போ மன்னிப்போ வெளியிடலாம்; Stakeholders கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தனிநபர்கள் இந்தமாதிரி பல பொய்த் தகவல்களை பேஸ்புக்கில் அறிவுஜீவி போர்வையில் இருந்து எழுதி வெளியிட்டு, சிக்கினாலும் ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல் அகங்காரத்துடன் வலம் வருவதைப் பார்க்கிறோம். ASHA போன்ற போலி லெட்டர்பேட் அமைப்புகளுக்கும் அது பொருந்தும்.

மரத்தடி மாநாடு என்ற தலைப்பில் ‘சுயரூபம் காட்டிய பி. டி. பருத்தி…சோகத்தில் விவசாயிகள்’ கட்டுரையில் வாத்தியார் என்பவர் மேட்டூர் அருகே கொளத்தூர் சுற்றுவட்டாரத்தில் RCH-659 என்ற பருத்தியை விதைத்ததாகவும், அதில் செம்பேன் தாக்குதல் ஏற்பட்டு சாறு உறிஞ்சப்பட்டதால் மகசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் பேசுகிறார். நாட்டுரக பருத்தி போட்டால் இந்த பிரச்சினை வராது என்று ஆலோசனையும் வழங்குகிறார். 2002-இல் வெளியிடப்பட்ட பி. டி. பருத்தி இரகங்கள் மூன்று நான்கு வகையான காய்ப்புழுக்களை மட்டுமே தடுக்கும், சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு இதில் சம்பந்தமே கிடையாது என்ற அடிப்படை விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். குறைந்தபட்சம் இந்த வாத்தியாராவது அப்டேட் ஆகிக்கொள்ள வேண்டாமா? RCH-659 இரகத்தை வெளியிடும் இராசி விதைகள் நிறுவனம் ஆத்தூரில்தானே இருக்கிறது; ஒருவாட்டி கேட்டிருக்கலாமே. ஏன் பல்வேறு பெயர்களில் பொய்களை பரப்பவேண்டும்.

சரோஜாதேவி, மருதம் போன்ற அந்தக்கால இரவு இலக்கிய பத்திரிகைகளில் வரும் கதைகளில் வாசகனை பரவசப்படுத்தும்படியாகவே வரிக்கு வரி கதையமைப்பு இருக்கும். பால்காரிக்கே பால் ஊற்றிய கதை என தலைப்பிலேயே தானியாகு பெயர் பீய்ச்சியடிக்கும். அணியிலக்கணம், உவமானம், உவமேயம், எதுகை, மோனை எல்லாம் கனகச்சிதமாக இருக்கும். வாசகனின் மனவோட்டம் அந்த புத்தகத்தை எடுத்தபிறகு மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டே கதைகளும் படங்களும் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு இது ஒரு உண்மைக்கதை என்றே முடிக்கப்பட்டிருக்கும். உள்ளாடையை உருவியதும் அரவம் உருவமெடுத்து ஆடியது என்பதற்கும் முப்பது சென்ட்டில் நான்கு மாதத்தில் மூன்று இலட்சம் வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் பண்ணையம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இரண்டின் நோக்கமும் படிக்கும் வாசகனின் மனக்கிளர்ச்சியை தூண்டிவிடுவது மட்டும்தான்.

இயற்கை விவசாயம் என்ற ஒன்றையே நம்மாழ்வார்தான் கண்டுபிடித்தார் எனுமளவுக்கு பூஜை, புனஸ்காரம் போடுவதெல்லாம் விவசாயத்தை பேஸ்புக்கில் செய்பவர்களுக்கு நம்பும்படியாக இருக்கலாம். பஞ்சகவ்மியத்தை குடிப்பது குறித்து மட்டும் விளக்கமாக எழுதி கட்டுரையை முடித்திருக்கிறீர்கள் ஜூனியர் கோவணாண்டி. நம்மாழ்வார், பசுவை வெட்டி திண்ணக்கூடாது, அது இறந்தவுடன் புதைத்துவிடவேண்டும் என்று சொன்னதையெல்லாம் விளக்கமாக பேசியிருக்கலாமே. தரையில் சம்மணமிட்டுதான் அமரவேண்டும், வெள்ளைக்காரன் நாற்காலி கண்டுபிடித்துக் கொண்டுவந்து நமக்கு கொடுத்து நோயை உண்டாக்கினான் என்றும் சொல்கிறார். கி. பி. 1835-இல் வெள்ளைக்காரன்தான் சூத்திரர்கள் நாற்காலியில் அமருவதற்கு இருந்த தடையை சட்டம் மூலமாக நீக்கினார்கள். ‘கண்ட நாயெல்லாம் இன்னிக்கு நம்ம முன்னாடி சேர் போட்டு உக்காருது’ என்ற ஆற்றாமையைத்தான் ஐயா தேன்தடவிய வார்த்தையாக வெளிப்படுத்தினார். காரில் போனாலும் சம்மணம் போட்டு உக்காந்துக்குங்க என்றும் சொல்கிறார். தினமும் குறைந்த்து நூற்றைம்பது கிலோமீட்டர் காரோட்டும் என்னைப்போன்றவர்கள் எப்படி சம்மணம்மிட்டு அமருவது என்று குழப்பமாக இருக்கிறது.

டாக்டருங்க காசுக்கு ஆசைப்பட்டு சிசேரியன் பண்ணிடறாங்க என்று நம்மாழ்வார் சொன்னதையும் நீங்கள் விளக்கியிருக்கலாம். குடும்பத்தில் ஒருவரின் அகால மரணம் அந்த குடும்பத்தை சிதைப்பதோடு, குழந்தைகளின் கனவுகளை நிற்கவைத்து கொல்லும். ஒரு கர்ப்பிணி பிரசவத்தின்போது இறந்தால் அவரது கணவர் படும் வேதனை, சகோதர சகோதரிகளுக்கு திருமணம், சொத்து தகராறு, மறுமணம் செய்வதிலுள்ள சமூக சிக்கல்கள், பாலியல் சார்ந்த தனிமையின் வேதனைகள் என சித்திரவதையை அனுபவிக்கவேண்டியிருக்கும். பொருளாதார ரீதியாக, மன ரீதியாக அந்த நபர் மீண்டுவருவது எவ்வளவு சிரமமானது என்பது தெரியாததா? சாவு எல்லாருக்கும் வரும்தான்; ஆனால் தெரிந்தே சாகவிடுவதுதான் மரபு, பாரம்பரியம் என்றால் அப்படி சொல்பவரை மனநோயாளி என்றல்லவா சொல்வோம். நேரடியாகவே கேட்கிறேன், நம்மாழ்வாரின் குடும்பத்தினர் யாருக்காவது பிரசவத்தின்போது பிரச்சினை என்றால் சிசேரியன் செய்வார்களா அல்லது மரபுதான் முக்கியம் என சித்தாந்தம் பேசுவார்களா? போராலும், மருத்துவத்தை தடை செய்வதாலும் குடும்பங்களை சிதைத்து மரணங்களை, ஊனங்களை சமூகத்தில் பரவலாக வைத்திருப்பதன் மூலம் மத, சாதி அடிப்படைவாதத்தை எளிதாக கட்டிக்காக்க முடியும். சிசேரியன் தடுப்பு, தடுப்பூசி எதிர்ப்பு வகையாறா எல்லாமே அதற்குத்தானே?

ஒருவேளை மான்சாண்டோ அல்லது அதன் துணை நிறுவனங்களிடம் நான் அன்பளிப்பு பெற்றிருப்பேனோ என்று சிலர் ஐயம்கொள்கிறார்கள். பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்ததால் இயற்கை விவசாயத்தை எதிர்ப்பதாக சிலர் கருதுகிறார்கள். சரவதேச தரத்திலான ஆர்கானிக் சான்றுபெற்ற பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலையை நடத்திவருவதோடு ஆர்கானிக் உணவுப்பொருட்களை ஏற்றுமதியும் செய்துவருகிறேன் என்றதும் இந்த சர்டிஃபைடு ஆர்கானிக் ஃபார்மிங் எல்லாம் பிராடு வேலை என்கிறார்கள். இதுதான் நமது பிரச்சினையே. அன்பே சிவம் மாதிரியான படங்களை பார்த்து ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கிக்கொள்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கையில் தீவிர பாடிபில்டிங் வேலைகளில் ஈடுபாடு கொண்டு ஒரு ஜிம்மிற்கு சென்றுவருவோம். உள்ளே சென்றதும் ஆஞ்சநேயர் நெஞ்சைப் பிளந்தவண்ணம் இருக்கும் ஒரு படத்தை வணங்கிவிட்டுத்தான் இரும்பைத் தொடவேண்டும். வீர ஆஞ்சநேயர் இருக்குமிடத்தில் ஷூ அணியக்கூடாது என்று அறிவுரை வேறு. அதன்பின்னர் நகரில் உண்டான ஜிம்களில் ஆஞ்சநேயர் இடத்தை அர்னால்டும், ரோனி கோல்மனும் பிடித்துக்கொண்டார்கள். ஆர்கானிக் ஃபார்மிங் என்றதும் நம்மாழ்வார் படத்தை வைத்து கும்பிட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்றதும் பலர் பதட்டமடைகின்றனர். ஆட்டத்தின் விதிமுறைகளை அறிந்து ஜெயிப்பதற்கு விளையாடவேண்டும்; ஏதாவது சித்தாந்தத்திற்காகவும், யாரையாவது திருப்திப்படுத்துவும் ஆடுபவர்களுக்கு நல்ல ஸ்பான்சர் இருக்கும்வரை கவலையில்லை.

நம்மாழ்வார் பக்தாக்கள் பலருக்கு நான் பென்ஸ் கார் வைத்திருப்பது வேதனையாக இருக்கிறது. பொதுவாகவே ஏழைகள், வயதானவர்கள், தாடி வைத்திருப்பவர்கள், தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள், கதர் ஜிப்பா அணிந்து ஜோல்னாபை வைத்திருப்பவர்கள், கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற பொதுப்புத்தி வந்துவிடுகிறது. அதன் நீட்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. விஞ்ஞானி, இயற்கை வேளாண் விஞ்ஞானி என பில்டப் கொடுத்தாலும் அடிப்படையில் அண்டர்கிராஜுவேட் ஆன அவர் சிலகாலம் மட்டுமே கோவில்பட்டி அரசு வேளாண் பண்ணையில் பண்ணை மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். பண்ணை மேலாளர் என்பது ஒரு கடைநிலை ஊழியர் பணிதான். அதையும் விட்டு விலகி கிட்டத்தட்ட ஒரு துறவிபோல் எளிமையின் சிகரமாக வாழ்ந்து வந்தவருக்கு கரூர் அருகே 55 ஏக்கர் பண்ணைநிலத்தை வாங்கி வானகம் என்ற இயற்கை விவசாய பண்ணையை உருவாக்க நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பதை யாராவது கேட்டுவிட முடியுமா? Because some animals are more equal than others.

காந்தி கதராலும், பசுக்களாலும், குலத்தொழிலாலும் இந்தியாவை முன்னெடுக்க விரும்பினார். தொழிற்சாலைகள், சாலைகள், ஆலைகள், அணைகள், அதிக உற்பத்தித்திறன் என்ற கோட்பாட்டில் நேரு இயங்கினார். இதில் யார் சரி, யார் தவறு என்று மதிப்பிட விரிவான தரவுகளும், ஆய்வுகளும் தேவையல்லவா? பத்தாண்டுகளுக்கும் மேலாக மாட்டுக்கறி உண்ணும் வெள்ளைக்காரனின் தலைமையில் கிடைத்த நிதி உதவியில் விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவர நம்மாழ்வார் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் நல்ல இடுபொருட்கள், சாலைகள், கிட்டங்கிகள், சந்தை வசதிகள் கொடுத்தால் விவசாயிகள் தானாகவே முன்னுக்கு வந்துவிடுவார்ரகள் என்ற நோக்கத்தில் செயல்படும் சர்வதேச நிறுவனங்களில் வெள்ளைக்காரர்களுடன் இணைந்து பணிபுரிபவர்களை வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு கூட்டி கொடுப்பவர்கள் என வசை பாடுகிறார்கள். இப்படி சொல்பவர்களில் பலர் ஆன்சைட்டில் வெளிநாட்டு வேலைக்கு சென்று அங்கிருக்கும் பூர்வகுடி ஒருவரின் வேலையைப் பிடுங்கி அவர்கள் சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டவர்கள்தான்!

எங்கிருந்தோ நிதி உதவி எனக்கு கிடைப்பதாக சிலர் எழுதுகிறார்கள். கடனாக, கட்டணமாக, விற்பனையாக, அல்லது தொழில் பங்குதாரராக இருக்கும்பட்சத்தில் மட்டுமே பணம் வாங்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இத்தனைக்கும், செயல்படாத கன்சல்டிங் சர்வீசஸ் கம்பெனி ஒன்றையும் வைத்திருக்கிறேன். பிரச்சாரம்தான் நோக்கம் என்றால் சொந்த ஐடியில் சூனியம் வைத்துக்கொள்ள நான் என்ன Coprophagy மனநிலையிலா இருக்கிறேன்? இந்திய விவசாயமும், கிராம அமைப்பும் ஜாதி அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாதது. இந்த அடிப்படைகூட தெரியாமல் campaign strategy வடிவமைப்பது நம்மாழ்வார் பக்தாக்களுக்கு வேண்டுமானால் பரவசத்தை உண்டாக்கக்கூடும். எங்கிருந்தாவது காசு வந்தவுடன் பிரச்சாரம் செய்வதும், பாங்காக் போவதும் அப்புறம் பஞ்சாயத்து கூட்டுவதும் தமிழ் ஜோசிய கும்பலுக்கு வேண்டுமானால் இயல்பான ஒன்றாக இருக்கலாம். உங்கள் பெயரில் நாட்டுமாடு வாங்கி நானே வளர்த்து நானே வைத்துக்கொள்கிறேன் என்பது மாதிரியான நவீன ஈமு கோழி வளர்ப்பு திட்டங்களையெல்லாம் பார்க்காமலா இருக்கிறோம். நன்கொடைகள் நம் காலைச் சுற்றிய பாம்பு. பாரம் குறைந்தால்தான் தூரம் வசமாகும் என்பதுதானே மரத்தான் ஓடுபவர்களின் பாலபாடம்.

பாரம்பரிய மலேரியா மருந்துக்கு புத்துருவாக்கம் கொடுத்ததற்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். அப்படி பஞ்சகவ்யத்துக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காமல் கொடுமுடி டாக்டரின் தோல்வியடைந்த ஆராய்ச்சியை சிலாகித்து, புனுகுப்பூனை கதைகளையெல்லாம் சொல்லி யாரை நாம் ஏமாற்றுகிறோம் மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி? ஜப்பானின் நம்பர் ஒன் டிராக்டர் நிறுவனம் குபோட்டா என முழுப்பக்க விளம்பரம் போட்டுவிட்டு நாட்டுமாடுகளின் மூலம் உழவு செய்வதின் முக்கியத்துவத்தை கட்டுரை வெளியிடுகிறோம். சர்வதேச தரத்துக்கு நம் இளைஞர்கள் செல்ல வேண்டும், பன்னாட்டு கம்பெனிகளை தமிழகத்து இளைஞர்கள் உருவாக்கி நடத்தவேண்டும் என்றல்லவா நாம் நம் இளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிமையில்லை. திறமான புலமையெனில் மேநாட்டார் அதை வணக்கஞ் செய்திடல் வேண்டும் என்றல்லவா நம் சமுதாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டத்தை சபையிலே நிறுத்தி கேள்வி கேட்பதை விடுத்து மூடி மறைப்பதால் பயனென்ன மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி.

பதினைந்து ரூபாய்க்கு பசுமை விகடன் வாங்கியதற்கு பதிலாக நாற்பது ரூபாய்க்கு மியா கலிஃபா-வின் பிலாட்டீஸ் பயற்சி வகுப்பு குறுவட்டை வாங்கிப் பார்த்திருந்தால் மனக்கிளர்ச்சியாவது மிஞ்சியிருக்குமே என்ற வேதனையில் விடைபெறுவது உங்கள் அன்பு பிரபு.

பாரம்பரிய விதைத் திருவிழா என்றபெயரில் நடக்கும் விதை கடத்தல்கள்

சிலை கடத்தல் என்ற ஒன்று நமக்கு அலுப்புத் தரக்கூடியது, சுவாரஸ்யமில்லாதது. கடத்தப்பட்டால்தான் என்ன என்ற ஒரு அலட்சியமும் இருக்கும். ஆனால் அதன் பின்னணியில் ஒரு பெரிய நெட்ஒர்க் பெரும் பணபலத்துடன், நம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் போன்ற இயல்பான தோற்றத்துடன் கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாதது பாரம்பரிய விதைத் திருவிழா என்ற பெயரில் நடக்கும் மரபார்ந்த விதைகளின் திருட்டுகள்.

சில அடிப்படைகளை தெரிந்துகொண்டு உள்ளே நுழைவோம். காலங்காலமாக விவசாயிகளால் பயிரிடப்படும் உள்ளூர் இரகங்களை land races என்பார்கள். ஒருகாலத்தில் வர்த்தக ரீதியில் பயிரிடப்பட்டு இன்று புழக்கத்தில் இல்லாத இரகங்கள் heirloom எனப்படும். விவசாயம் செய்யாமல் ஆங்காங்கே தாந்தோன்றியாக வளர்ந்துகொண்டிருக்கும் இரகங்கள் wild varieties எனப்படும். ஒரே தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரபியல் ரீதியாக நெருங்கிய தொடர்புடையவைகளை wild relatives என்பார்கள். இவையனைத்தும் சேர்ந்ததே Germplasm எனப்படும்.

ஜெர்ம்பிளாசம் என்பதும் நாட்டின் ஒரு சொத்து. Biodiversity என்பது பல்லாயிரம் தாவர, விலங்கினங்கள் மட்டுமல்ல ஒரே தாவரத்தின்/விலங்கின் பலநூறு வகைகளும் சேர்ந்தது. இதை சேகரித்து, வகைப்படுத்தி பாதுகாக்க அந்தந்த மாநில விவசாய பல்கலைக்கழங்கள், National Bureau of Plant Genetic Resources, Botanical Survey of India மற்றும் ICAR-இன் கீழ் வரும் ஒவ்வொரு பயிருக்கான ஆராய்ச்சி மையங்கள் போன்றவை செயல்படுகின்றன. ஜெர்ம்பிளாசம் பாதுகாப்பதை அந்தந்த அமைப்புகள் தங்களின் மிக முக்கிய சொத்தாக கருதி பாதுகாப்பது வழக்கம். தனியார் விதை நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் ஜெர்ம்பிளாசத்தை பாதுகாத்து வைத்திருக்கின்றன. விதைத் துறையில் ஒரு நிறுவனம் இன்னொன்றைக் கையகப்படுத்துவதே இந்த ஜெர்ம்பிளாசத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான்.

புதிய இரகங்களை உருவாக்க இந்த ஜெர்ம்பிளாசத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் parent lines மிக முக்கியமானது. பூச்சி, நோய் தாக்காத , புதிய பண்புக்கூறுகளை உருவாக்க உலகளவில் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக பருத்திப்பஞ்சு சிவப்பு, பச்சை என வண்ண வண்ணமாக வந்தால் சாயப்பட்டறைகளே இல்லாமல் நேரடியாக நூல் நூற்க இயலுமல்லவா? அதற்கு parent material-இல் உள்ள diversity மிக முக்கியம். பலவகையான combination மூலம் புதிய கலப்பினங்களை உண்டாக்கக்கூடிய, நன்றாக தொழில் தெரிந்த Breederகளுக்கு சந்தையில் இன்று ஆண்டு சம்பளம் 20 இலட்சத்தில் ஆரம்பிக்கிறது எனும்போது அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பித்து ஜெர்ம்பிளாசத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த கடமை பெரிய அளவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடையாது என்பதால் புகுந்து விளையாடலாம்.

விவசாயிகள் தங்களுடைய விதைகளை சேமித்து வைப்பதை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இலவசமாக பரிமாறிக்கொள்வதை அவர்களது அடிப்படை உரிமையாகக் கருதி சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் வணிகரீதியில் விற்கும்போது விதைச்சட்டம் மற்றும் இதர சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். உலகளவில் விவசாயிகளின் உரிமைகளை மதிக்கும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. தாவர, விலங்கினங்களின் IP rights குறித்த நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்கள் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். ஒரு புதிய இரகத்தை அறிமுகப்படுத்தும்போது அதை உண்டாக்கிய பயிர்ப்பெருக்கவியல் விஞ்ஞானி (breeder), நிறுவனத்தின் தலைமை legal counsel மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மூவரும் கையொப்பமிட்டு அரசுக்கு விண்ணப்பிப்பார்கள். அப்போது புதிய இரகத்தின் pedigree, DUS characters என பல ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும். ஏதாவது ஒரு parent-ஆனது public domainலிருந்து திருடப்பட்டிருந்தாலும் அப்போதைக்கு இல்லாவிட்டாலும் சில மாதங்களிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். ஏனென்றால் அரசாங்கத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முறையாக பயன்படுத்திக்கொள்ளத்தக்க தலைமை பெரும்பாலும் வாய்ப்பதில்லை என்பது வேறுகதை.

பொதுவாக வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை நல்ல ஆய்வகங்களில் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நிறுத்தியே காட்டி அனுப்பிவிடுவார்கள். ஓர் இலையைக் கிள்ளி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓட்டலுக்கு வந்து ஐஸ் நிரப்பி ஃபிளாஸ்க்கில் வைத்து எடுத்துவந்து திசுவளர்ப்பு மூலம் regenerate செய்து அதே இரகத்தை உண்டாக்கிய ஆட்களின் கதைகளைக் கேட்டுதான் நாங்கள் படித்தோம். பி. டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக பயிரிட அனுமதிக்கும் முன்னரே அமெரிக்காவிலிந்து பத்து இருபது விதைகளை கேஷுவலாக லக்கேஜ்களுடன் எடுத்துவந்து உள்ளூர் இரகங்களுடன் கலப்பினம் உண்டாக்கி குஜராத்திகள் பயிரிட்டிருந்தார்கள்.

விவசாயி என்ற போர்வையில் பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள் என சொல்லிக்கொண்டு தொழில்முறையில் அதில் ஈடுபடும் சிலர் ஒரு சில அரிய உள்ளூர் இரகங்களை farmer to farmer free exchange of seeds என்றபெயரில் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி “கைமாற்றி” விடுவது பரவலாக நடக்கும் ஒன்று. புரூஃப் இருக்கா என்று கேட்டு யாரும் கேட்டை ஆட்டவேண்டாம். இதெல்லாம் அந்தந்த டிபார்ட்மெண்ட் வாட்ச்மேன் வரை தெரிந்த விசயம். (உண்மையான ஒரு சொந்த ஆர்வத்தில் புதிய புதிய இரகங்களை சேகரித்து வைக்கும் விவசாயிகள் நிறைய இருக்கிறார்கள்; அதனால் பொத்தாம்பொதுவாக சொல்வதாக கருதக்கூடாது).

கடந்த சில நாட்களாக சென்னையில் மரபு விதைத் திருவிழா ஒன்று நடந்ததாகவும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 3000-க்கும் அதிகமான பாரம்பரிய இரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் நாளேடுகள் தெரிவிக்கின்றன. இது சண்டிகர், புதுதில்லி, ஐதராபாத் நகர்களில் நடந்த விதைத் திருவிழாவின் நீட்சி என தெரியவருகிறது. அதை நடத்திய ASHA (Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பு எதிலுமே பதிவு செய்யப்படாத ஒன்று. தொண்டு நிறுவனம், டிரஸ்ட், சொசைட்டி என சட்டத்தின்முன் நிற்க எந்த வடிவமும் இல்லாமல் ஆனால் பொதுமக்களின் நன்கொடையில் இயங்குவதாக சொல்லிக்கொள்கிறது.

எந்தவொரு சட்டபூர்வ அனுமதியும் பெறாத ஒரு நிழல் அமைப்பு பல மாநிலங்களிலுள்ள உண்மையான விதை சேகரிப்பு செய்யும் விவசாயிகளை இந்த போலி இயற்கை ஆர்வலர் ஆட்கள் மூலமாக மூளைச்சலவை செய்து அவர்களிடமுள்ள விதைகளை காட்சிப்பொருளாக்க செய்திருக்கிறது. ஒரே வரியில் சொன்னால் its a vulnerable exposure of country’s genetic resources under one roof by shadow organizations. அங்கு வைக்கப்பட்டிருக்கும் சில முக்கியமான இரகங்களில் பத்து இருபது விதைகளை எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டு வருவது பெரிய காரியமன்று. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ஒழிக, விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக என்ற கோஷத்துடன் இந்த பாரம்பரிய விதை திருவிழாக்கள் யாருக்காக நடக்கின்றன என்பதை இனியும் விளக்க வேண்டியிருக்காது.

இத்தகைய பதிவு செய்யப்படாத போலி இயற்கை விவசாய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் விருந்தினராகச் சென்று மேடைகளில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Code of Conduct குறித்தும் Conflict of Interest குறித்தும் வேலையில் சேரும்போது எடுக்கப்பட்ட வகுப்புகளை புரபேஷனரி பீரியட் முடியும்போதே மறந்துவிட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. பதிவு செய்யப்படாத நிழல் உலக அமைப்புகளை நாட்டின் சொத்தான genetic diversityயைக் காட்சிப்படுத்த அனுமதி எப்படி கிடைத்தது?

குடியரசு தினவிழாவில் படைக்கலன்களை மக்கள் காட்சிக்கு வைப்பார்கள். அதற்காக எல்லா போர்க்கருவிகளும் அங்கு இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது. எதுவரை பொதுமக்களுக்கு காட்டலாம் என்ற வரையரையை அந்தந்த துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அதிலும் குறிப்பிட்ட ஆயுதங்களை சில அதிகாரிகள் மட்டுமே அணுகும்படிதான் இருக்கும். அதேமாதிரிதான் விவசாய கண்காட்சிகளில் பொதுமக்களுக்கு எந்தெந்த இரகங்களை காட்சிக்கு வைக்கவேண்டும், எதை தவிர்க்கவேண்டும், எதை மிக இரகசியமாக குறியீடுகள் மூலம் பாதுகாக்க வேண்டுமென்பதை அந்தந்த துறை அதிகாரிகள் முடிவு செய்து வைத்திருப்பார்கள்.

முறையாக விவசாயம் செய்பவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்ற அனுபவ புரிதல் இருக்கும். உதாரணமாக எல்லா சுண்டைக்காய்களும் உண்ணத் தகுந்தவை அல்ல. சில இரகங்கள் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும். எல்லா காளான்களும் உண்ணத்தக்கவை அல்ல. சில காளான்களை சாப்பிட்டால் உடனடி மரணம் நிச்சயம். இன்று உணவுக்காக விவசாயம் செய்யப்படும் அத்தனை வகை பயிர்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை என்று பலமுறை அனுபவத்தால், ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டவை.

தாத்தா விவசாயம் செய்தார், அப்பா பார்ட் டைமாக விவசாயம் செய்தார் என்பதைத் தாண்டி விவசாயத்துக்கு எந்த தொடர்புமில்லாதவர்கள் வாரயிறுதி நாட்களில் பேக்பேக்கை மாட்டிக்கொண்டு எங்காவது மலையடிவாரத்தில் வளரும் செடிகளை, பாரம்பரிய மரபு இரகங்கள் என எடுத்துவந்து ஊருக்குள் நட்டுவைத்து ஆர்கானிக் இயற்கை காய்கறி அங்காடிகளில் விற்று அதன்மூலம் பல ஒவ்வாமை/நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை உண்டாக்கப்போவது உறுதி. அதற்கும் இயற்கை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து நோய் முற்றியபின் அலோபதிக்கு சென்று ஆர்கானிக் ஃபுட் சாப்பிடும் எனக்கு வேண்டுமென்றே மருத்துவமனைகள் அதிக பில் போட்டு ஏமாற்றுகின்றன, மருந்து வேலை செய்யவில்லை என மருத்துவர்களை அடிக்கப்போவதும் நடக்கத்தான் போகிறது. அனுபவமிக்க வனவியலாளர்களுடன் காட்டுக்குள் செல்லும்போது அவர்கள் தரும் முதல் அறிவுரை எந்த பூக்களையும் முகர்ந்து பார்க்கக்கூடாது; இரண்டாவது அறிவுரை என்னவென்று தெரியாத பழங்களை உண்ணக்கூடாது என்பதுதான். மருத்துவர்கள் தெரிந்த நோய்களுக்குத்தான் மருத்துவம் செய்வார்கள். ஏதாவது காட்டுக்குள் இருக்கும் விஷச்செடியை பாரம்பரிய இரகம் என்று கொண்டுவந்து அரைத்துக் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வார்கள்.

இயற்கை விவசாயம் என்ற பெயரில் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் அடிக்கடி பரிந்துரைப்பது மீன் கரைசல் அல்லது மீன் அமில கரைசல். அதாவது மீன் மார்க்கெட்டில் கழிவாக போடுவதை அள்ளிவந்து கொஞ்சம் வெள்ளத்தைக் கலந்து காற்று புகாமல் ஓரிரு மாதம் மூடிவைத்து பின்னர் எடுத்து தண்ணீரில் கலக்கி பயிரின்மீது தெளிப்பது. மீனின் தசைகளிலுள்ள நைட்ரஜன் பயிர்களுக்கு கிடைக்கும் என்பது இதன் சாராம்சம். காற்றுபுகாத இந்த anaerobic condition-இலும் சில உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள் வளரும். இதை பயிர்களின் மீது தெளித்து அது பச்சையாக உண்ணும் காய்கறியாக இருக்கும்பட்சத்தில் கடுமையான உடல் உபாதைகள் வரும். போதுமான அளவுக்கு பாக்டீரியத்தின் லோடு உள்ளே சென்றால் சாவு நிச்சயம். இத்தகைய ஆர்கானிக் உணவுகளை உண்டு அமெரிக்காவில் பல சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மீன் கரைசலுக்கும், செப்டிக் டேங்க் கழிவின் கரைசலுக்கும் டெக்னிக்கலி பெரிய வேறுபாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைகளே பேராயுதம் என அருமையான caption போட்டுக்கொண்டு, எதிலுமே பதிவு செய்யப்படாத நிழல் அமைப்புகள் நாட்டின் genetic diversityயை யாருக்காக காட்சிப்பொருளாக்குகின்றன என சிந்திக்க வேண்டும். இந்த தேசிய, சர்வதேச மாஃபியா கும்பலுக்கு நம்மாழ்வார் கோஷ்டிதான் உள்ளூர் ஏஜென்டு. அதன் துணை ஏஜெண்டுகள் பல்வேறு பெயர்களின் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் கடைவிரித்து ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்கிறார்கள். வடக்கே ஆரம்பித்து தமிழகம் வரை அலசிப்பார்த்துவிட்டார்கள். இனி இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ் என விதைத் திருவிழாக்கள் நீளும்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பால் வியாபாரம் – மேலும் சில

பால் கறப்பது, குறிப்பாக அடைமழை காலங்களில் மிகவும் சிரமமான வேலை. காலையிலும், மாலையிலும் வேறு எந்த வேலைக்கும் போகாமல் கருமமே கண்ணாக செய்யவேண்டிய ஒன்று. நசநசவென்ற சூழல், கொசுக்கடி, ஈக்களின் தொந்தரவு, சாணியும் மூத்திரமும் உலராமல் ஏற்படும் துர்நாற்றம் எல்லாவற்றையும் தாங்கித்தான் மாடு வளர்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் பால்காரராக இருப்பதற்கு மிகவும் வலுவான உடல்நிலையும், மனநிலையும் கட்டாயம்.

புதிதாக சந்தைக்கு வரும் பால் கறக்கும் இயந்திரங்களைப் பார்த்துப்பார்த்து ஏமாற்றமடைவது பால்காரர்களாகத்தான் இருக்கும். விலைகுறைந்த portable models இயங்குவது வேக்குவம் சக்‌ஷன் அடிப்படையில் என்பதால் தொடர்ந்து பாலைக் காம்பிலிருந்து உறிஞ்சும்; ஆங்காங்கே, பாலில் இரத்தம் கலந்து வருகிறது என்பது மாதிரியான விவசாயிகளின் புகார்கள் இந்த வகையிலான ஆரம்பகட்ட கருவிகளால்தான். சில மாடுகள் பாலை அடக்கி வைத்துக்கொண்டு போக்கு காட்டி, கன்றுக்குட்டிக்குத் தரும், சில காம்புகளில் இயல்பாகவே பால் இல்லாமல் இருக்கும்; அதற்காக அதிகநேரம் கருவியை இயக்குவது, அழுத்தத்தைக் கூட்டுவது என செய்யப்படும் உத்திகள் நீண்டகால அடிப்படையில் மாட்டின் பால் உற்பத்தியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

விட்டுவிட்டு உறிஞ்சி இயங்கக்கூடிய pulsing type கறவை இயந்திரங்கள் 25000 ரூபாயில் ஆரம்பிக்கிறது. இந்த காசுக்கு இன்னொரு மாடு வாங்கலாமே என்று நினைப்பது விவசாயிகளின் இயல்பு. இதிலும் காம்பில் மாட்டக்கூடிய கறப்பான், பாலின் தரத்தை உள்ளீடு செய்து கறத்தலை நிறுத்தும் சென்சார், மதர் போர்டு என சில sensitive components அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வருகிறது.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாட்டில் 99.9 % பால் கைகளாலேயே கறக்கப்படுகிறது எனும்போது பால் கெட்டுப்போவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. பாலுடன் என்னென்ன இரசாயனங்கள் கலக்கும் என்பதற்கு கறப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்துவிட்டு வந்தனர் என்பதை ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். உற்பத்தியாகுமிடத்தில் அத்தகைய சூழலை வைத்துக்கொண்டு, பால்வளத்துறை அமைச்சர் ஒருவர் பாலில் இரசாயனம் இருக்கிறது என்று பேட்டி கொடுப்பதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

கிராமம் கிராமமாக சிதறிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு கறப்பதற்கு கையடக்க கருவிகள் ஏதும் இல்லாமல், நோயுற்றால் உடனே வந்து பார்ப்பதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லாமல், கிடைக்கும் விலையும் போதுமான அளவில் இல்லையென்றாலும் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்க காரணம் மாடுகள் குறித்த விவசாயிகளின் புரிதல்தான். எப்போது என்ன செய்யவேண்டும் என்பதை உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுசெய்யும் அவர்களுக்கு தரப்படும் சட்ட ரீதியிலான அழுத்தம் முட்டாள்தனமான ஒன்று.

ஜல்லிக்கட்டு மூலமாக சிறந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கடும் வறட்சி காலங்களில் கிடாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதும் உண்மை. நான்கு கறவைகள் இருக்கும்போது கடும் வறட்சி வந்தால் அதில் உள்ள ஒரு நல்ல மாட்டை வைத்துக்கொண்டு மற்றவைகளை கறிக்கு அனுப்புவது இயல்பு. மரபியிலில் இதை Pureline Selection என்பார்கள். வறட்சி, பஞ்சம் மிகுந்த காலங்கள் கால்நடைகளின் இனத்தூய்மை, விருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன. எதற்கெடுத்தாலும் நதிகளை இணைக்கவேண்டும், பார்க்கும் இடங்களிலெல்லாம் தடுப்பணை அமைக்கவேண்டும், குஜராத் மாதிரி ஆகவேண்டும் என்று கருத்துரைப்பவர்கள் சுற்றுச்சூழல் குறித்த கல்வியறிவோ பட்டறிவோ துளியும் இல்லாத மூடர்கள்.

சினை ஊசிகளில் காளைகளே இல்லாமல் கிடாரிகள் மட்டுமே உருவாக்கக்கூடிய (XX குரோமோசோம்) Sex selective semen மேலைநாடுகளில் உண்டு. அதன்மூலம் காளைக்கன்று பிறந்து அதை ஒரு வருடம் கழித்து கறிக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லாமல் கிடைக்கும் அனைத்து கன்றுகளும் பெண் என்பதால் விரைவில் இனவிருத்திக்கு தயாராகி பண்ணையும், பால் உற்பத்தியும் பெருகும் என்பது அவர்களது நோக்கம்.

ஆண் கன்றுகளை உருவாக்கக்கூடிய Y குரோமோசோம்களை விந்தணுக்களுக்குள்ளேயே சென்று காயடிக்கும் chromosome washing செய்யும் Flow Cytometry போன்ற தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை இருப்பதால் உள்நாட்டு ஃபுளோ சைட்டோமெட்ரி தொழில்நுட்பத்தை உருவாக்க 2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் பெரும் நிதி ஒதுக்கியது; அநேகமாக அஃது இந்நேரம் வர்த்தகரீதியில் தயாராகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

உள்நாட்டு மாட்டு, தாவர இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் ஜெர்சி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸியன் இன மாடுகளிலும் காளைகளே இல்லாத ஒரு சூழல் ethically சரியா என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. சங்கப்பரிவாரங்கள், விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் இன்னபிற வானரப்படைகள் இதுகுறித்து வாயே திறக்கவில்லை என்பதை மிக அழுத்தமாக இரண்டுமுறை அடிக்கோடிட்டு காட்டவேண்டியிருக்கிறது.

(தோல் பதனிடும் தொழில்களில் நடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சுரண்டல்கள், கம்யுனிச எழுச்சியின் ஆரம்பகட்டங்களை புரிந்துகொள்ள திண்டுக்கல்லை மையமாக வைத்து எழுதப்பட்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவலை நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்.)

ஆய்வுக்கூடங்களோடு முடிந்துவிட்ட டெர்மினேட்டர் டெக்னாலஜி குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சவுண்டு விடும் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் காளைக்கன்றுகள் இல்லாத ஒரு சூழல் உண்டாக இருப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை. RCEP கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் மூலம் விவசாயிகள் விதைகளை வைத்திருக்கவே முடியாது என்ற ஒரே பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றனர். ஆறாயிரம் பேர் கலந்துகொள்ளும் அந்த convention, வட இந்தியாவில் நடத்த இடமே இல்லாமல் ஐதராபாத்தில் நடத்த இருக்கிறார்கள். அதில் விவாதிக்கப்பட இருக்கும் கூறுகள் பொதுமக்களுக்கு சொல்லப்படவே இல்லை எனும்போது இவர்கள் கம்பு சுற்றுவது எதற்காக என்றும் தெரியவில்லை.

அப்படியே ஏதாவது முடிவு எடுக்கப்பட்டாலும் அது பல்வேறுகட்ட ஒப்புதல்களை வாங்கி, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு வந்தால்தான் தெரியும். பொது இடங்களில் புகை பிடித்தால், எச்சில் துப்பினால் அபராதம் மாதிரியான சட்டம் போல அதுவும் ஒன்றாகிப் போகலாம். அண்மையில் பலர் ஒரே நேரத்தில் படையெடுத்ததால் இ-சேவை மையங்கள் முடங்கியதற்கு சொல்லப்பட்ட காரணம் ‘வருடத்தில் ஐந்து நாள்தான் இவ்வளவு டிராஃபிக் வரும், மீதி 360 நாட்கள் சும்மாதான் இருக்கும்; அதனால்தான் புதிய சர்வர்கள் நிறுவவில்லை’ என்று. இருபது முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் வெள்ளம் வருகிறது, அதற்காக பல ஆயிரம் டன் கான்கிரீட்டைக் கொட்டி மிகப்பெரிய வாய்க்கால்களை, மதகுகளைக் கட்டவேண்டிய அவசியம் இல்லை; தண்ணீர் வந்தால் அதாகவே போய்விடும் என்பது மாதிரியான தொலைநோக்குப் பார்வைதான் நமது சொத்து.

ஆட்டோமொபைல் துறைக்கான தொலைநோக்குப் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது. நான்கு மீட்டர் நீளத்துக்கு குறைவான கார்களுக்கு 12.5% எக்ஸைஸ் டியூட்டி, அதைவிட நீளமான கார்களுக்கு 1500 cc-க்குள் இருந்தால் 24% வரி, 1500 cc-க்கு அதிகமாக இருந்தால் 27% வரி. 2000 CC க்கு மேலே இருந்தால் டில்லி போன்ற நகரங்களில் அதற்கு ஒரு வரி. தாடியின் நீளத்தைப் பொறுத்து வரி விதித்த மன்னர்கள் குறித்த கதைகளெல்லாம் இந்த இடத்தில் நினைவுக்கு வரக்கூடும்.

ரேடியோ ஸ்பெக்ட்ரம் கட்டுப்பாடுகள் காரணமாக பல உயர்தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வரவே முடியாத நிலை இருக்கிறது. இங்கிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் முடியாத சூழ்நிலையே. 433 – 434 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்தான் சாவி தேவைப்படாத Keyless Entry சாத்தியமானது. ஆனால் இன்னமும் 434.79 MHz வரை உற்பத்தி, பயன்பாடு இரண்டுக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதால் radar based automatic breaking, lane direction control போன்ற தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர சாத்தியமில்லை. உதாரணமாக மெர்சிடஸ் S class கார்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும்போது இத்தகைய terrestrial transmission தொழில்நுட்பங்கள் தொடர்பான நுண்கருவிகள், ஒயரிங், மென்பொருள் என அனைத்தையும் கழட்டிப் போட்டுவிட்டுத்தான் இறக்குமதி செய்யமுடியும். அதனால் இங்கே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் உயர்தர சொகுசு கார்களுக்கு சாத்தியமே இல்லை.

ஒன்னேகால் கோடிக்கு S class கார் வாங்கும் கோடீசுவரர்களுக்குத்தானே அந்த தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு வசதிகள் என்ற அங்கலாய்க்கத் தேவையில்லை. ஒருகாலத்தில் ஏபிஎஸ், ஏர்பேக் என்பது சொகுசு கார்களில் மட்டுமே இருந்தது. வரும் அக்டோபர் முதல் அது எல்லா கார்களிலும் கட்டடாயமாகிறது. காலப்போக்கில் எல்லாமே எல்லாருக்கும் சாத்தியமே. போர்க்களத்தில் துப்பாக்கிகளின் கட்டைகள் அதிக சூடாவதால் சுடமுடியாமல் போவதை தவிர்க்கவே ஆரம்பத்தில் பேக்லைட் (Bakelite) கைப்பிடிகள் பயன்பட்டது; இன்று ஒவ்வொரு வீட்டின் பிரஷர் குக்கரிலும் அதுதான் இருக்கிறது.

Visionary என்ற வார்த்தையே பொருளற்ற ஒன்றாகிவிட்டது. அரசாங்கத்தின் லைசன்ஸ் முறைகளின் நீட்சி இன்னமும் இருப்பதோடு நிலையற்ற கொள்கை முடிவுகள் இந்தியாவை இன்னமும் banana republic தோற்றத்தில்தான் வைத்திருக்கிறது. இந்திய சூழலில் வியாபாரம் செய்ய முடியாது என்று 8000 கோடி நட்டத்துடன் செவர்லே பிராண்டை வைத்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. பல ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழக்கிறார்கள். இந்தியாவில் இனிமேல் ஒருபைசாகூட முதலீடு செய்யமுடியது என்று டொயோட்டா அறிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வசதிகள், சொகுசு தேவை என்பதை உற்பத்தி செய்யும் நிறுவனமும், வாடிக்கையாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்; ஆனால் இந்தியாவில் அரசாங்கம் முடிவு செய்கிறது என்பதால் இங்கு முதலீடு செய்வது தேவையில்லாத ஒன்று என்று ஹோண்டா அறிவித்திருக்கிறது.

பால்வளம், ஆட்டோமொபைல் மட்டுமல்லாது டெக்ஸ்டைல் துறைக்கும் இருண்டகாலம் ஆரம்பிக்கவிருக்கிறது. பி. டி. தொழில்நுட்பம் வந்தபிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பருத்தி வியாபாரத்துக்குள் புகுந்து தேன்கூட்டை கலைத்துவிட்டார்கள். மான்சான்டோ இந்தியாவுக்கான பருத்தி ஆராய்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தெரிகிறது. ஆங்காங்கே இந்த ஆண்டு பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆண்டு இது இன்னும் தீவிரமடையும். 2019-வாக்கில் புதிய தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத நிலையில் பருத்திக்கு பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டவேண்டிவரும். உலகின் தடை செய்யப்பட்ட அத்தனை வகையான பூச்சிக்கொல்லிகளும் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக மாறும். மான்சான்டோவை அடித்து விரட்டிவிட்டோம் பார்த்தாயா என்று நம்மாழ்வாரிய மூடர்கள் கொண்டாடக்கூடும். பேயர், மான்சான்டோவைக் கையகப்படுத்திவிட்டதால் இன்னும் சில மாதங்களில் மான்சான்டோ என்ற நிறுவனம் தானாகவே கரைந்துவிடும். பருத்தியில் பூச்சி எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாதபோது சந்தையில் பூச்சிக்கொல்லிகளின் ஜாம்பாவானான பேயர்-இன் வியாபாரம் எகிடுதகிடாக வளரும். அதனால் என்ன, சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டதாக நம்மாழ்வாரிய மூடர்கள் மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சியே நமக்கு நிறைவானதாக இருக்கும்!

அச்சே தின் ஒவ்வொரு துறையிலும் வந்துகொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆகும் எண்ணமிருந்தால் உடனடியாக மறுபரிசீலனை செய்யவும்.

உர மானியம் தொடர்பான சர்ச்சைகள், சில நல்ல முன்னேற்றங்கள்

உர மானியமானது இவ்வளவு ஆண்டுகளாக இரயில்களில் ஏற்றியவுடனோ அல்லது மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிட்டங்கியை வந்தடைந்தவுடனோ தரப்படும் பில்களை வைத்து உரத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஜூன் மாதம் முதல் விவசாயிகளுக்கு உரம் வழங்கியதற்கான இரசீது ஆதார் எண்ணுடன் விவசாயினுடைய கைரேகையை வைத்து உறுதிப்படுத்திய பிறகே கம்பெனிகளுக்கு வழங்கப்படும். உர விற்பனையாளர்களுக்கு PoS கருவியை உரத் தயாரிப்பு கம்பெனிகளே வழங்குகிறது. அந்த கடைக்காரர்களுக்கான பயிற்சியை அரசு வேளாண்மைத்துறை வழங்குகிறது.

கேஸ் மானியம் மாதிரி பயனாளிகளுக்கு நேரடியாக வழங்காமல் பயனாளிகளை சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு கம்பெனிகளுக்கு வழங்குவது ஒரு நல்ல ஆரம்பம்; பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டுக்களை தடுக்கமுடியும் என்பதோடு உண்மையாகவே எத்தனைபேர் நேரடி விவசாயிகள், எத்தனைபேர் விவசாயி என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்ற மேப்பிங் செய்யவும் அரசுக்கு ஒரு வாய்ப்பு. கிடைக்கப்போகும் அந்த தரவுகளின் அடிப்படையில் 2019-வாக்கில் விவசாயிகளுக்கே நேரடி உர மானியம் வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மானியங்களை ஒழித்து விவசாயத்தை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட இஃது ஒரு ஆரம்பம் என்ற வழக்கமான பல்லவியை ஒருபக்கமாக வைத்துவிட்டு கடந்தகாலத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

உலகப்போர்களின்போது மிச்சமான வெடிமருந்துகளை விவசாயத்துக்கு திருப்பிவிட்டு பசுமைப்புரட்சி உண்டாக்கி விவசாயத்தைக் கெடுத்தார்கள் என்ற வசனம் ரொம்பவும் அறுவையாக இருக்கிறது. அதனால் அதுவும் இப்போது வேண்டாம்.

உர நிறுவனங்களுக்கு யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களில் 21 கிரேடுகள், ஆலைகளில் பலதரப்பட்ட எரிபொருட்கள் பயன்பாடு இருப்பதால் மானியமும் பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது. உதாரணமாக யூரியா தயாரிக்க 80% செலவு கேஸ் வாங்குவதற்கு மட்டுமே. அந்த கணக்குகளின் அடிப்படையிலேயே மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல பங்களாதேசத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்குகள் பிரசித்தி பெற்றவை. சிட்டகாங் துறைமுகத்தில் நின்ற ஒரு கப்பலிலிருந்து 13500 டன் யூரியாவைக் காணவில்லை என்ற வழக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்று. தமிழகத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்கு ஒன்றை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.

1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் மகன் பிரபாகர் ராவ் National Fertilizers Ltd நிறுவனத்தின் இரண்டு இலட்சம் டன் யூரியா இறக்குமதியில் ஊழலில் சிக்கி கைதானது ஒரு புகழ்பெற்ற வழக்கு. 2008-ஆம் ஆண்டு 3153 டன் பொட்டாஷ் சென்னை துறைமுகத்திலிருந்து ‘காணாமல் போன’ வழக்கை CB-CID விசாரித்தது மற்றொரு புகழ்பெற்ற வழக்கு. பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பொட்டாசியம் குளோரைடு மடைமாற்றம் செய்யப்படுவது சாதாரணமாக நடந்துவந்த ஒன்று. மானியவிலையில் ஒரு டன் பொட்டாஷ் 4500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கிடைத்தபோது அதன் இண்டஸ்ட்ரியல் கிரேடு விலை 30000 ரூபாய்.

தனிநபர்கள்தான் என்றில்லை. அரசு நிறுவனங்களும் இத்தகைய மானிய உரங்களை ஆட்டையைப்போடுவது புதிதல்ல. TANFED மூலம் விவசாயிகளுக்கு வழங்கவிருந்த DAP உரத்தை TNPL நிறுவனமானது Sludge treatment-க்காக வாங்கியதும் மற்றொரு அரசுத்துறை நிறுவனமான பால்மர் லாரீ (Balmer Lawrie) உரங்களை ஒரு இரசாயன இடுபொருளாக ஆலைகளில் பயன்படுத்தியதுமாக ஒரு வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்தது துறைசார் மக்களுக்கு நினைவிருக்கும்.

பல்லாயிரம் கோடிகள் புரளும் இந்திய உரச்சந்தை உலகளவில் பல கோடீசுவரர்களால் உற்றுநோக்கப்படும் ஒன்று. நார்வே நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற, மிகப்பெரிய உர நிறுவனமான யாரா (Yara) இந்தியாவில் அரசுத்துறை நிறுவனமான கிரிப்கோ (Krishak Bharathi Cooperative Ltd) உடன் ஒரு கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட ஒரு மில்லியன் டாலர் இலஞ்சம் கொடுத்து, பின்னர் அதை ஒப்புக்கொண்டு 48 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது வரலாறு.

உள்நாடு, வெளிநாடு என்றில்லை உள்ளூர் பிரமுகர்களும் உர மானியத்தை சாப்பிட ஊழலில் ஈடுபடுவது புதிதல்ல. கலப்பு உரம் தயாரிக்க மானியத்தில் வரும் நேரடி உரங்களை திருடும் பாணி அலாதியானது. பெரிய கிட்டங்கி உரிமம் வைத்திருக்கும் பலரும் கலப்பு உரத் தொழிற்சாலை வைத்திருப்பர். Use No Hooks என்று அத்தனை உரமூட்டைகளின் மீதும் எழுதியிருக்கும். ஆனால் லோடிங், அன்லோடிங் செய்யும்போது குத்தூசியைப் பயன்படுத்தி மூட்டைகளை கையாளுவதை ஊக்குவித்து கொஞ்சூண்டு உரம் சிந்திக்கொண்டே செல்லும்படி செய்யவேண்டியது; மூட்டைக்கு அரைகிலோவரை கொட்டிவிடும். அதைக் கூட்டி அள்ளி கலப்பு உரத்துடன் கலந்துவிட்டால் காசு!

வேப்பெண்ணெய் பூசப்பட்ட யூரியா வருவதற்குமுன் கோழித்தீவனம், டெக்ஸ்டைல், மீன்பண்ணை என பல இடங்களில் மானியவிலை யூரியா மடைமாற்றம் செய்யப்பட்டது வரலாறு.

விவசாயி என்ற போர்வையில் பல்லாயிரம்பேர் சுரண்டித்தின்று வயிறு வளர்க்கின்றனர். வெகுசிலர் அதன் உச்சகட்ட சுரண்டலின் அடையாளமாக திகழ்கின்றனர். ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டிய ஒரு புகழ்பெற்ற விவசாயி ஜெயலலிதா; வேட்புமனுவில்கூட தொழில் என்ற இடத்தில் விவசாயி என்று குறிப்பிட்டிருந்தார். சரத் பவார் மகள் கடலைமிட்டாய் புகழ் சுப்ரியா சூலே ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் மற்றொரு விவசாயி. வடக்கில் அமிதாப் பச்சன் என்ற இன்னொரு விவசாயிகூட இருக்கிறார்.

ஊழலை ஒழிப்பது, இயற்கை விவசாயம் செய்வது போன்ற வார்த்தைகள் பொத்தாம்பொதுவான ஒன்று. அதற்கு வழிமுறைகளோ, இலக்குகளோ கிடையாது. சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை பட்ஜெட் போடும்போதெல்லாம் ஒரு ரூபாயில் பத்துகாசு மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது என்று சொல்வது சம்பிரதாயமாகிவிட்டது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு வழங்கி, மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தி, பயனாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே உறவு இருக்கவேண்டும் ஏனையவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று மன்மோகன்சிங் என்ற ஒருவர் சொன்னபோது உலகவங்கியின் கைக்கூலி என்று வசைபாடப்பட்டார். இந்தியாவில் இதெல்லாம் வாய்ப்பேயில்லை என்று கெக்கலித்த அமாவாசைகள், நாகராஜசோழன்களாகி கடைசியில் அதே வழிமுறைகளை ஒரு சமஸ்கிருதப் பெயர்மட்டும் வைத்துவிட்டுப் பின்பற்றுவதையும் “வரலாறு என்னை மதிப்பிடட்டும்” என்று அவர் சொன்னதையும் நினைத்துப்பார்க்க வேண்டயிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்துக்கும் வரிவிதிக்கவேண்டும் என்று பிபேக் தேப்ராய் அண்மையில் சொன்னபோது அஃது அவருடைய சொந்தக்கருத்து என நிதி ஆயோக் கூட பின்வாங்கிக்கொண்டதும், அதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட கருத்தலைகளையும் கண்டோம். விவசாயம் என்ற புனித பசுவைத் தொட யாரும் விரும்புவதில்லை. நிலம் வைத்திருந்தாலே விவசாயி என்ற அடைப்பு கிடைத்துவிடுகிறது. குத்தகை வருமானத்துக்கு ஏன் வரிவிதிக்கக்கூடாது என்ற கேள்வியைக்கூட கேட்க பயப்படவேண்டிய சூழலே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி விமான நிலைய வாசலை மிதித்தவுடன் விவசாயி ஆகிவிடுகின்றனர்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலில் வரும் பவர் புரோக்கரான நாயகன் ஒருமுறை விருது ஒன்றை ‘வாங்கித்தர’ டெல்லி போனவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பார். அங்கிருக்கும் கொள்கைப்பிடிப்புமிக்க அதீத தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணாக்கர்களுடன் உரையாடும்போது பல கருத்துக்களை நடகமுறைக்கு ஒவ்வாதவொன்று மனதளவில் புறக்கணிப்பார். ஆனாலும் ஆரம்பகாலத்தில் அவருடைய அம்மா நூறுநாள் திட்டத்துக்கு வேலைக்கு போனபோது கமிசன் இல்லாமல் சம்பளம் கிடைக்காததையும் அதற்கு அத்தகைய மாணக்கர்களே போராடி கமிசன் இல்லாமல் கூலி கிடைத்ததையும், அவர்களே சமூகத்தின் அடித்தளத்தில் ஒருவகையான சமநிலையைக் கொண்டுவருவதையும் நாவலாசிரியர் சரவணன் சந்திரன் அழகாக விளக்கியிருப்பார். மன்மோகன்சிங், பிபேக் தேப்ராய் போன்றவர்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

உர விற்பனையை குறைந்தபட்ச தொழிற்கல்வியறிவு உடையவர்கள் மட்டுமே நடத்தவேண்டும் என்று மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை பின்வாசல் மூலமாக உடைத்துவிட்டிருக்கும் உள்ளூர் பிரமுகர்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. உபரிகளைச் சுரண்டித் தின்னத்தான் எவ்வளவு கூட்டம்.