கூடு திரும்புதல் என்ற பெயரிலான சமகால சூழலியல் பயங்கரவாதம்

தாராபுரத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றபோது நாட்டுக் கடுகு விதைக்க தன்னார்வலர்கள் தாராபுரம் வருவதாக அங்கிருந்த துண்டேடுகள் சொன்னது.

கடுகு தமிழகத்தில் வர்த்தக ரீதியாகவோ, வீட்டுப் பயன்பாட்டுக்காகவோ விளைவிக்கப்படுவதில்லை. அப்படியே யாராவது முயற்சித்தாலும் வணிகரீதியாக வட இந்தியாவில் வளரும் இரகங்களை வாங்கி பயிரிடுவார்கள். அத்தகைய பயிர் அறுவடைக்குப் பின்னர் பிசிறில்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் (அழிந்தும்விடும்). நாட்டுக் கடுகு இரகங்கள் என்பது பரவலாக வர்த்தகரீதியிலான சாகுபடியில் இல்லாதவை. ஆனால் wide adaptability உடையவை என்பதால் பலதரப்பட்ட பருவ சூழலிலும் தாக்குப்பிடிக்கவல்லவையாகவே இருக்கும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகு இரகத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நாட்டுக் கடுகு இரகத்தை தமிழ்நாடு முழுவதும் திரு. ம. செந்தமிழன் அவர்களின் சீடர்கள் விதைத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு டன் அளவிலான விதை பரப்பப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓர் உயிர்ச்சூழலில் இல்லாத ஒரு தாவரம் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கு பரந்த தகவமைப்புத்திறன் இருக்கும்பட்சத்தில் அங்குள்ள இயல்பான உள்ளூர் தாவரங்களைக் காட்டிலும் மிக வேகமாகப் பல்கிப் பெருகி ஆக்கிரமித்துக்கொள்ளும். அழகுச் செடியாக அறிமுகப்படுத்தப்பட்ட Lantana camara செடி இன்று காடுகளுக்குள்ளும் ஆக்கிரமித்திருக்கிறது (கமென்ட்டில் படம் இருக்கிறது). தெரியாமல் வந்திறங்கிய பார்த்தீனியம், விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது குறித்து பெரிய விளக்கம் தேவையில்லை.

மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து நாட்டுக் கடுகு இரகங்களை விதைப்பதாக இருந்தால் பஞ்சாப், இராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சென்று ஊர் ஊராக விதைத்திருக்க வேண்டும். தமிழகத்துக்கும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கும் சம்பந்தமே இல்லாதபோது அதை எதிர்ப்பதாகச் சொல்லி, புழக்கதில் இல்லாத, எந்த விதத்திலும் தேவையும் இல்லாத நாட்டுக் கடுகு இரகங்களை பரப்புவது என்பது தெரிந்தே ஒரு புதிய களைச்செடியை அறிமுகம் செய்யும் செயலாகும்.

ஒரு நாட்டுக்குள் நாசகார கிருமிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை அனுப்பி மக்களை நூதனமாகக் கொல்வது Bio terrorism எனப்படுகிறது. மக்களை நேரடியாகக் கொல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் உத்திகள் ஒருவகையான மறைமுக bio terrorism ஆகும். அதில் களைச்செடிகளைப் பரப்புதல், ஆபத்தான பாசி, பூஞ்சாணம், மீன் இரகங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

தற்சமயம் சந்தையில் இருக்கும் ஒரே systemic, non-selective, post emergent herbicide என்பது மான்சாண்டோவின் Roundup (கிளைஃபோசேட்) மட்டுமேயாகும். தமிழகத்தில் இன்று வலிந்து திணிக்கப்பட்டுவரும் நாட்டுக் கடுகுச்செடிகள் களையாக மாறி விவசாய நிலங்கள், ஏரிகள், கண்மாய்களை ஆக்கிரமிக்கும்போது ரவுண்டப் தெளிக்காமல் கட்டுப்படுத்தவே இயலாது எனும்போது களைக்கொல்லி வர்த்தகம் யாருக்காக நடக்கும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையிருக்காது. கடுகுச்செடியினை களையாகக் கருதி அதை அழிப்பதற்கு திட்டமிடுதல், செயல்படுத்துதல் என வேளாண்மைத்துறையினரின் நேரம் மட்டுமல்லாது அதை சீராய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை எவ்வளவு பேரின் நேரத்துக்கும், மக்களின் வரிப்பணத்துக்கும் வீண் விரயம் வர இருக்கிறது என்பதை சமூகப் பொறுப்புள்ளவர்கள் அறிவார்கள்.

கடுகு குறித்த உரையுடன் விதைச் சட்டம் குறித்தும் திரு. ம. செந்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றை பேஸ்புக்கில் கேட்க நேரிட்டது. அதன்படி விதைச் சட்டம் என்பது விவசாயிகளை நசுக்கும் ஒரு கொடுங்கோல் சட்டம் என்று பேசுகிறார். அதை 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்த வேண்டியிருந்தது. விவசாயிகள் ஒருவருக்கொருவர் இலவசமாக விதைகளைப் பரிமாறிக்கொள்ளலாம்; அதில் எந்த சட்டரீதியான தடையும் இல்லை. ஆனால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு விற்றால் விதைச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது, இது பெரிய மோசடி என்ற ரீதியில் பேசுகிறார். விவசாயம், வியாபாரம், நுகர்வோர் பாதுகாப்பு, உற்பத்தியாளர் பாதுகாப்பு, அரசாங்க கட்டுப்பாடுகள், வரி போன்ற எதுவுமே தெரியாத ஒருவரால்தான் அவ்வாறு பேச முடியும். தினந்தோறும் நாம் சந்திக்கும் நபர்களில் யாராவது இவ்வாறு பேசினால் மொக்கை ஆசாமி என்றோ, அறுவைக் கேசு என்றோ சொல்லி, பார்த்தாலே ஓட்டம்பிடிக்க ஆரம்பிப்போம்.

விதைகளை உற்பத்தி செய்தவர் விற்பனை செய்யும்போது வியாபாரி ஆகிவிடுகிறார். வியாபாரம் செய்யும்போது எடை, தரம், எண்ணிக்கை என பலதரப்பட்ட விசயங்கள் கணக்கில் வருவதோடு அரசாங்கத்துக்கு அதில் வரி வருவாயும் கணக்கில் வந்துவிடுகிறது. ஊருக்குள் விதை விற்பனை செய்பவர் பெரிய நாட்டாமையாக இருந்து வாங்கிபவர் சாதாரண ஆளாக இருந்து, விதையானது எடை குறைவாகவோ, முளைப்புத்திறன் குறைவாகவோ இருந்தால் வாங்குபவருக்கு பாதுகாப்பு சட்டம் இல்லாமல் போனால் எப்படி கிடைக்கும்? விற்பவர் சாதாரண நபராக வாங்குபவர் பெரும்புள்ளியாக இருந்து, அந்த நபர் பொய்யாக எடை குறைவாக இருக்கிறது, முளைக்கவில்லை என்று தகராறு செய்தால் விற்பவருக்கு சட்டம் இல்லாமல் போனால் எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? நாளையே திரு. செந்தமிழன் போன்ற செல்வாக்குமிக்க நபர்கள் விற்கும் விதை முளைக்கவில்லை அல்லது எடை குறைவு என்று யாராவது புகார் செய்தால் சட்டம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் வாடிக்கையாளருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? சட்டப்படி கணக்குவழக்கு இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு வரி வருவாய் எப்படி கிடைக்கும்?

தந்தை மகனுக்கோ, மகளுக்கோ அவரது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை எழுதி வைக்கும்போது கூட அரசுக்கு செலுத்தவேண்டிய குறைந்தபட்ச முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒரு விவசாயி (தன் மகனாக இருந்தாலும்) இன்னொரு விவசாயிக்கு நிலத்தை எழுதிவைக்க எதற்காக கட்டணம் செலுத்தவேண்டும் என்று நாம் கேட்பதில்லை. ஆனால் திரு. செந்தமிழன் அவர்கள் கேட்கக்கூடும். ஏனென்றால் சுற்றுச்சூழல் போராளிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள்; எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

ஆயிரம்தான் நாம் விமர்சனம் செய்தாலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை இந்தியாவிலேயே சிறப்பான ஒன்று. தமிழகத்தில் ஏன் வட இந்தியாவைப்போல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றால் அதில் பல ஆயிரக்கணக்கான வேளாண் அதிகாரிகளின் உழைப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய Compliance சுமை தமிழகத்தில்தான். ஒவ்வொரு நிகழ்வையும் நெருக்கமாக கவனிப்பதும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன், தொழில் முனைவோருடன் அரசு அதிகாரிகள் நல்லமுறையான தகவல் தொடர்புகளைப் பேணுவதிலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்னோடிகளாகவே திகழ்கின்றனர். மற்ற மாநிலங்களில் வேளாண்மைத்துறை, விவசாயப் பல்கலைக்ககழக அதிகாரிகளுடன் நெருங்கி பணிபுரிந்த பலருக்கும் இது தெரியும். பூச்சிக்கொல்லி, உரம், விதைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை தீவிரமாக மதித்து அமுல்படுத்தும் மாநிலங்களுள் தமிழகம் முதலிடத்தில்தான் இருக்கிறது.

சூழலியல் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் நாட்டு இரகம், வனம் வளர்ப்பு என்று கிளம்பிவரும் மறைமுக உயிரியல் தீவிரவாதம் நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கவல்லது.

மாதொருபாகன் சாகித்ய அகாடமி விருது சர்ச்சை – போலி சாதிப் பெருமை பேசும் அன்றாடங்காய்ச்சிகள்

மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான One Part Woman-க்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. பெண்களின் கண்ணியத்துக்கு களங்கம் வரும்படி நாவலில் சில பகுதிகள் உள்ளதாக நம்புகிறார்கள். இதில் 99.9% ஆட்கள் அந்த சர்ச்சைக்குரிய இரண்டு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு கூவுகிறார்கள். அப்படியெல்லாம் பார்த்தால் இராமாயணம், மகாபாரத்தைவிட பெண்களை இழிவாக பாவிக்கின்ற நூல்கள் இருக்கவே முடியாது.

திருச்செங்கோடு மலையடிவாரத்தில் ஒரு தெருவைத் திருவிழா நாளின்போது தேவடியாள் தெரு என்றே மக்கள் சொல்வதாகவும், அன்றைய தினம் அங்கு வரும் அனைவருமே தேவடியாள்தான் என்று மக்கள் எளிதாக எடுத்துக்கொள்வதாகவும் கதையின் போக்கில் வருவதுதான் பிரச்சினை. அதை செவிவழி வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் எழுதியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அதற்கு ஆதாரம் இல்லாதபோது அஃது ஒரு கற்பனைக் கதையாகிவிடுகிறது. கதை மாந்தர்களான காளியும் பொன்னாளும் கவுண்டர் என்பதற்கு பதிலாக வன்னியர் என்றோ, நாயக்கர் என்றோ இருந்திருந்தால் கேள்வியே வந்திருக்காது.

திருச்செங்கோட்டு மலைமீது ‘வறடிக் கல்’ இருப்பதையும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அதை சுற்றிவந்து வணங்கினால் குழந்தை உண்டாகும் என்பதும் ஒரு நம்பிக்கை என்பதைச் சுற்றிலும் கதை நகர்கிறது. திருச்செங்கோட்டுத் தேர்த் திருவிழா மட்டுமல்ல பல ஊர்களிலும் திருவிழாக்கள் என்பது வெறும் சாமி கும்பிடும் நிகழ்வன்று. வேளாண் குடிகளின் ஓய்வுக்காக, களிப்பிற்காக, வணிக வாய்ப்புகளுக்காக, திருமண ஏற்பாடுகள் செய்ய, கால்நடைகள், நிலங்கள் வாங்க விற்க என ஒரு பெரிய பண்பாட்டு அசைவாகவே இருந்திருக்கின்றன. சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, தேர்களின் மீது ஒருசாரார் உட்கார்ந்துகொள்ளவும் மற்றவர்கள் இழுக்கவுமான காலகட்டம்வரை திருவிழாக்கள் என்பது மக்களுக்கானதாக இருந்து, கடவுளுக்கானதாக மாறிவிட்டிருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்கள், crushகள், காதல்கள், காமங்கள் எல்லாம் part of the game. இதையெல்லாம் பார்த்தேயிறாதவர்கள் நிச்சயமாக ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. அப்படியெல்லாம் எங்க ஊர் திருவிழாவுல இல்ல தெரியுமா என்று சொல்வதாக இருந்தால் தயவுசெய்து என்னை அன்ஃபிரன்ட் செய்துவிடவும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களை விதைத்த குற்ற உணர்ச்சிக்கு நான் ஆளாக நேரிடும்.

கவுண்டர் சமூகம் என்பது ஒரு மிக உயர்வான கற்பு நெறிகளைக் கொண்டதாகவும் அதை நாவல்களில், கற்பனைக் கதைகளில்கூட சீண்டக்கூடாது என்பதும் கொங்கு கவுண்டர் சமுதாய அடிப்படைவாதிகளின் வாதம். கடுமையாக உழைத்து ஒரு குடும்பம் முன்னேறி கொஞ்சம் வசதி வாய்ப்போடு வாழப்பெற்றால் அக்குடும்பத்திலுள்ள பெண்களின் கற்பொழுக்கத்தை உறவினர்களே கேலி செய்து நகைப்பது கவுண்டர் சாதியினரின் ஒரு peculiar trait. ‘எல்லாம் காலைத் தூக்கி சம்பாரிச்சதுதான’ என்று ஒரு குடும்பத்தின் உழைப்பை, தன்னூக்கத்தைக் கேவலமாக பேசும் வழக்கம் வேறு எந்த சாதியினரிடத்தும் காண முடியாத ஒன்று. இதை நான் சந்தித்த கவுண்டர் சாதியினரில் யாருமே மறுத்ததில்லை.

நோ, நோ, எங்க சாதிசனத்துல அப்படியெல்லாம் கிடையாது என்று மறுப்பவர்கள் வீரமாத்திகளின் வரலாறு, அண்ணமார் கதை என எதுவுமே தெரியாமல் மீசைய முறுக்கு போன்ற பாட்டு கேட்டு வளர்ந்த சுள்ளான்களாக இருப்பார்கள்.

நம்மைச் சுற்றிலும் எல்லாமே பரந்து விரிந்து கிடக்கிறது. நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அப்படி எதுவுமில்லை என்று ஆகிவிடுவதில்லை. ‘மரப்பல்லி’ நாவலில் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு போகும் இரண்டு பெண்கள் லெஸ்பியன் உறவில் விழுவதையும், அதில் ஆதிக்கம் செலுத்தும் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதையும் வா. மு. கோமு இயல்பாக எழுதியிருப்பார். ஊத்துக்குளி பகுதியில் வரும் இந்த கதையில் பெண்ணியவாதிகளின் மனம் ஏற்றுக்கொள்ளவே முடியாத சில விசயங்கள் இயல்பாக வந்துபோகும். பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவை இல்லை என்றாகிவிடா. ஊத்துக்குளியின் பெயரில் லெஸ்பியன் கதையா என்று ஒரு கும்பல் கிளம்பி அவரிடம் சண்டைக்குப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வா. மு. கோமுவின் ‘சயனம்’ நாவலும் கவுண்டர் பந்தாவின் பலவற்றை இயல்பாக உடைத்துச்செல்லும். மற்றபடி அன்பும், பண்பும், ஈகையும், தர்மமுமாக வாழ்ந்து வருவது கவுண்டர் சாதி என்று பேஸ்புக்கில் மீம்ஸ் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.

மாதொருபாகன், குழந்தை இல்லாத தம்பதிகளை உறவினர்கள் அவமதிக்கும் பல நிகழ்வுகளை பதிவு செய்திருப்பதோடு, சொத்துப்பிரச்சினையின் பல பரிமாணங்களையும் பேசுகிறது. காளியின் சித்தப்பா பாத்திரம் பல ஜீரணிக்க முடியாத உண்மைகளை பேசுகிறது. அது மட்டுமல்லாது அர்த்தநாரி, ஆளவாயன் நாவல்களும் முக்கியமானவை.

வழக்கம்போல பல தேசபக்தர்கள் இதில் புகுந்து விளையாடியதால் ஹிந்து மதப் பிரச்சினை என்று சில பத்திரிகைகள் எழுதியது. ஆனால் திருச்செங்கொட்டை அடுத்த நாமக்கல், பரமத்தியிலெல்லாம் ‘இந்து மதப் பிரச்சினையா, அப்படின்னா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் எழுதி இரண்டு வருடமாகியும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென்று பெண்கள் மீது பாசம் பொங்கி வழிந்தது எப்படி? அரசியல் கேரியர் வளர்ச்சிக்காக ஈமு கோழித் திருடர் (ர் – ரெஸ்பெக்ட்) ஒருவரால் பிடுங்கப்பட்ட தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் வன்னியர்களுக்கும், கவுண்டர்களுக்கும் அடிதடியாகி நீதிமன்றம் வரை சென்றது தனியரசு முதன்முறை எம்எல்ஏ ஆன தேர்தல் முடிவுகளின்போதுதான். ஒவ்வொரு ஊராக தனியரசு படம் போட்ட போர்டு வைக்கும் முன்புவரை அங்கு கவுண்டர்களுக்கும், பட்டியலினத்தவருக்குமான மோதல் என்பது மிக அரிதான ஒன்று. தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையால் அந்த பகுதியில் சாதிய ரீதியிலான தேவையே இல்லாத உரசல்களைத் தாண்டி கவுண்டர் சாதிக்கான மூன்று நான்கு பலன்களை யாராவது பட்டியலிட்டால் இந்த பதிவை நீக்கிவிடவும் தயார்.

கொங்கு டா, கவண்டன் டா என்று சொல்லித் திரியும் சில பல சில்லறைப்பயல்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்து பல ஊர்களுக்குள் தேவையே இல்லாத பிரச்சினைகளை உண்டாக்குவதில் அமெரிக்காவாழ் கொங்கு கவுண்டர் சாதிச்சங்க கழிசடைகளில் சிலருக்கு முக்கிய பங்குண்டு.

மாதொருபாகன் ஒரு பிரச்சினையே இல்லை. அது பெண்களின் கற்புக்கு களங்கம் விளைவிக்கும்வண்ணம் உள்ளது என்று சொல்லும் நபர்களின் உண்மையான ஆதங்கமெல்லாம் பெண் என்றால் ‘ஏனுங் மாமா கூப்டீங்ளா, காப்பித்தண்ணி போட்டாரனுங்ளா?’ என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த கூட்டமாகத்தான் இருக்கும். மற்றபடி கற்புக்கு விளக்கு பிடிக்கும் டகால்ட்டி எல்லாம் சும்மா.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அந்தக் காலத்தில் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கோவில்களுக்கு இருந்தன. அவை எப்படி பிராமணர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தன, அவர்கள் எப்படி கவுண்டர், நாயக்கர் சமூகத்திற்கு விற்றார்கள் என்பதை பொதுவெளியில் பேசினால் வரலாற்று ஆதாரம் இருக்கிறதா என ஒரு கும்பல் கிளம்பி வருவார்கள். (பேக்கரி டீலிங் அக்ரிமென்ட்தானே என்பவர்கள் பிளாக் செய்யப்படுவார்கள்).

பின்குறிப்பு: பரமத்திவேலூர் எனது சொந்த ஊர் என்பதோடு மேற்கு மாவட்டங்களில் மிக விரிவாக பயணம் செய்து வருபவன் என்ற முறையில் இங்குள்ள சாதியக் கட்டமைப்பு எனக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி நான் எந்த சாதி என்ற ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

எங்கள் கிராமத்தின் பரிணாம வளர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வாத்து-கா-கெபாப் உண்ட கையோடு ஒரு புள்ளிவிவரத்தை தயார்செய்து குறுக்கும்நெடுக்குமாக ஓட்டியதில் சில தகவல்களை குறிப்பிட்டாக வேண்டும் என்று தோன்றியது.

எங்கள் ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் சில வீடுகள் தோட்டங்களில் உள்ளன. அந்த காலத்தில் பிராமணர்களிடம் இருந்த நிலம் என்பதால் அரசாங்க ரெக்கார்டுகளில் இன்னமும் அக்ரஹார மணப்பள்ளி என்றுதான் இருக்கிறது. அதன்பின் யாரும் நிலங்களை விற்கவோ வாங்கவோ இல்லையென்றாலும் பாகப்பிரிவினை பத்திரங்களில் எல்லாம் கைநாட்டுகளை மட்டுமே பார்க்கமுடியும். முதன்முறையாகவும் கடைசியாகவும் கி.பி. 2001-இல் தார்சாலை போடப்பட்டது.

சராசரி நில உடைமை என்பது சுமார் ஐந்து ஏக்கர்கள், விவசாயம் மட்டுமே பிரதானத் தொழில், வங்கிகளில் கடன் வாங்கி வட்டி கட்டியே வாழ்க்கையை ஓட்டி வந்தனர். ஜெர்சி/சிந்து மாடுகள், எருமைகள், ஆடுகள் இல்லாத வீடு கிடையாது. அதிகபட்ச கல்வித்தகுதி SSLC பாஸ் அல்லது பெயில். பெரும்பாலான பெண்கள் ஐந்தாவது முதல் எட்டாவது வரை படித்தவர்கள், கணிசமான எண்ணிக்கையில் கைநாட்டும் இருக்கிறார்கள். அவர்களது வாரிசு தலைமுறையானது குடும்பக்கட்டுப்பாட்டு பிரச்சாரங்கள் வெற்றிகரமாக செயல்படும்போது ஏற்பட்ட Baby boom மூலமாக 80-களின் இறுதியில், 90-களில் பள்ளி செல்ல ஆரம்பித்தவர்கள். அவர்களது திருமண காரணங்களுக்காகவே பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் பல வீடுகள் விறகு அடுப்பிலிருந்து இலவச கேஸ் இணைப்புத் திட்டம் வாயிலாக LPG சிலிண்டருக்கு மாறியது.

ஊருக்குள் எங்கள் தலைமுறையின் தற்போதைய கல்வித்தகுதியையும் அதன் எண்ணிக்கையையும் கீழே பார்க்கலாம்.
Ph.D – 1
M.V.Sc – 1
M.Sc Agri – 1
M.E. – 1
M.Phil – 1
M.Sc – 7
B.E – 9
B.A – 4
B.Sc – 2
B.B.A – 1
Diploma – 2
+2 – 4
SSLC – 1

அரசாங்க உத்தியோகம், ஆன்சைட், கார்ப்பரேட் வேலை, சொந்தத்தொழில் என வாரிசுகள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் பழைய ஆட்களே விவசாயம் செய்துவருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கிறதாம்; அதனால் ஒவ்வொரு வீடாக ஏசி பொருத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று கோடைகளுக்குள் அனைத்து வீடுகளும் ஏசி வந்துவிடும்போல தெரிகிறது. ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், i20, xuv500, பென்ஸ் கார்கள் புழுதியைக் கிளப்பியவண்ணம் வந்து செல்கின்றன.

கூரை கூட இல்லாமல் பிள்ளையார் என நடப்பட்டிருந்த இரண்டு மூன்று கற்சிலைகளுக்கு நடுவில் அவ்வப்போது நாய்கள் படுத்துக் கிடக்கும். கடந்தவருடம் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டு ஶ்ரீ செல்வ விநாயகர் என பெயரிடப்பட்டதுடன் கர்ப்பகிரஹத்துக்குள் ஐயரைத் தவிர ஊர்க்காரர்கள் செல்வது தடை செய்யப்பட்டுவிட்டது. பண்டாரம் மணியடிப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பதால் எப்போதாவது ஒருமுறை வந்து சென்றவரும் நிறுத்தப்பட்டுவிட்டார். அமாவாஸ்யை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி என மாதத்தில் மூன்று நான்கு நாட்களுக்கு ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என ரேடியோசெட்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்குமளவுக்கு பாடுகிறது.

எல்லைக்கருப்பன் இப்போது ஶ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகி கோழி, கிடா வெட்டவேண்டாம் சரக்கரைப்பொங்கல் போதும் என்று சொல்லிவிட்டது. ஜெர்சி, எருமைப் பாலைவிட நாட்டுமாட்டுப்பால் உடலுக்கு நல்லது என்பதால் நாட்டுமாடுகள் வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சைக்கிள், TVS50-களைவிட ஆக்டிவா, ஸ்கூட்டிகளில் சென்றால் உடம்புவலி ஏற்படுவதில்லையாம். மோடி நிர்வாகம் செம்மையாக இருப்பதாகவும் தமிழகத்தில் பாஜக இல்லாமல் போனது பெரிய இழப்பு என விஷேசங்களின்போது வெற்றிலைபாக்கு குதப்பியவாறே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தவாறு அளவளாவுகின்றனர்.

இதையெல்லாம் பார்த்தபிறகு பாஜக ஆளும் மாநிலங்கள் போல தமிழகமும் ஆக வேண்டும் என்று எனக்கும் தோன்றுவது ஆச்சரியமில்லைதானே?