ஐரோப்பிய யூனியனில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை என்பது எல்லோருக்குமான மதிப்பீடா?

கேள்வி:
ஐரோப்பிய யூனியனில் உள்ள 19 நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவிக்க தடை செய்திருப்பதை அடிக்கடி ஆர்வலர்கள் மேற்கோள் காட்டி இந்தியாவிலும் தடை வேண்டும் என்கின்றனரே. அறிவியல்பூர்வமாக கூகிளில் தேடிக்கொள்ளலாம் என்பதால் அதன் அரசியல் பின்னணியில் கொஞ்சம் விளக்கமுடியுமா?

பதில்:
முதலில் அவை எந்தெந்த நாடுகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். Austria, Belgium, Britain, Bulgaria, Croatia, Cyprus, Denmark, France, Germany, Greece, Hungary, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Poland and Slovenia. இதில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் Tax Heaven என்று அழைக்கப்படும் வரியில்லா சொர்க்கங்கள். ஜேம்ஸ் பாண்டு தன்னுடைய high-profile எதிரிகளின் பணபரிவர்த்தனையை அறிய மேற்கண்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த நாடுகள் ஒவ்வொன்றின் பரப்பளவு சராசரியாக தமிழகத்தின் பாதிதான், மக்கள்தொகையும் மீறிப்போனால் சில கோடிகள். மீதமுள்ளவை உலகப்போர் காலத்திலிருந்தே வலுவான பொருளாதார கட்டமைப்பைக் கொண்டவை.

அந்த நாடுகளின் தேவைகள், மக்கள்தொகை, எதிர்காலம் குறித்த திட்டங்கள் அடிப்படையில் எடுக்கப்பாட்டிருக்கும் முடிவை இங்கே செயபடுத்த நினைப்பது முட்டாள்தனம். நமக்கெல்லாம் அடிப்படை வசதியான கக்கூஸ்கூட கிடையாது. மரத்தடியில் நின்றுதான் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். அந்த நாடுகளில் ஒரு சராசரி குடிமகனின் கேரேஜ் என்பது நம் ஊரில் நடுத்தர மக்களின் அபார்ட்மெண்ட்/வீட்டு அளவான 800 சதுர அடியைக் கொண்டது என்கிறார்கள். தொட்டதுக்கெல்லாம் மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுவது ஒருவித மனநோய்.

இங்கே பசியில் மக்கள் சாகும்போது அவர்களுக்கு உணவு கிடைத்தால் போதும் என்பதே நமது நோக்கமாக இருக்கும்போது, மரபணு மாற்றப்பட்ட உணவாக இருந்தால்தான் என்ன? பட்டினியால் சாவதைவிட பிழைத்திருப்பதே வரலாறில் சாட்சியாக நிற்கும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நடக்கும் செயல்பாடுகள் ஒருபுறம் நடக்கட்டும். இதன் பின்னணியில் நடப்பது என்னவென்று இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே தனி நாடு கோஷங்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் அதுபோன்ற தனி நாடு கோஷம் வலுத்து உணவுக்கு, நீருக்கு பஞ்சம் ஏற்ப்பட்டு, நம் இளைஞர்களிடம் ஆயுதங்கள் வழங்கப்படும்போது தமிழ்நாடும் – ஏன் இந்தியாவும் – சோமாலியா போன்ற உள்நாட்டு கலவரங்களை சந்திக்க நேரிடும். உண்மையில் நம் கண்முன்னே நடக்கும் சுரண்டல்களை மறைக்கவே மரபணு பயிர்களுக்கு தடை, தடுப்பூசிகள் கூடாது போன்ற கருத்தாக்கங்கள் விதைக்கப்படுகிறது. உதாரணமாக 2008-இல் இந்தியாவின் பஹாமாஸ் தீவுக்கான ஏற்றுமதி 22 லட்சம் டாலர். 2010-இல் 280 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. பின்னணியில் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்கள் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ததாக கணக்கு காட்டியிருந்தன. வெறும் 3.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட தீவில் அனைவரும் பெட்ரோலில் குளித்து, அதையே குடித்திருந்தாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு பெட்ரோல் வாங்கியிருக்க வேண்டியதில்லை (நன்றி: கருப்புப்பணம் நூல், ஆசிரியர் ரமணன், கிழக்கு பதிப்பகம் வெளியீடு).

தமிழக இளைஞர்களை திசைதிருப்பும் பொருட்டு பரப்பப்படும் மரபணு மாற்ற/இயற்கை விவசாய சித்தாந்தங்கள், தனி நாடு, ஆண்ட பரம்பரை பரப்புரைகளில் இருந்து விலகி அம்பானி, அடானி, டாடா, கோயங்கா போன்ற அசைக்கமுடியாத தொழில் சாம்ராஜ்யங்களை நிறுவி தமிழகத்தை வரியில்லா சொர்க்கமாக மாற்றிவிட்டு பின்னர் பொழுதுபோகட்டுமே என்று சித்தாந்தங்களை பரிசோதித்துப்பார்ப்பது அறிவான செயலாகும். தனிநாடு இல்லாமல் இந்திய யூனியனில் இருந்துகொண்டு Tax Heaven உண்டாக்க முடியாது என்பவர்கள் அமெரிக்காவின் Delaware மாகாணத்தில் இருக்கும் வடக்கு ஆரஞ்ச் தெருவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கொக்க கோலா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், கே.எப்.சி., கூகுள், உள்ளிட்ட 21700 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்க.