விவசாயப் பல்கலைக்கழகம் உண்டாக்கும் Inbreeding Depression

எப்படியாச்சும் பி.எஸ்.சி அக்ரி முடிச்சிடனும். ஒரு டிபார்ட்மெண்ட்ல ஸ்பெசிலைஸ் பண்ணுவோமேன்னு எம்.எஸ்.சி சேரனும். அந்த ரெண்டு வருசத்துலயாவது எதாச்சும் படிச்சு பரீட்சை எழுதி பல்கலைகழத்தவிட்டு இடத்தை காலி பண்ணனும். இல்லன்னா சொந்தமா பிராக்டீஸ் (இதெல்லாம் டாக்டருங்க, வெட்னரி டாக்டருங்க பண்றதாச்சே!) பண்ணனும். குறைந்தபட்சம் ஒரு தனியார் நிறுவனத்துலயாவது வேலைக்கு போயிடனும்.

இன்னும் கொஞ்சம் நாள் எடுத்து யோசிப்போமேன்னு பி.எச்.டி சேரனும். அப்படியே அந்த NET எழுதி சர்டிபிகேட் வாங்கிடனும் (பத்து வருசமா ஒரே மேட்டர படிச்சு நெட்-கூட வாங்கலன்னா எப்படி?!). அங்கேயே காதலன்/காதலியை ரெடிபண்ணி முடிஞ்சவரைக்கும் சொந்த சாதிலயே பாத்து கல்யாணமும் பண்ணிக்கனும். அங்கேயே ஏதாச்சும் தற்காலிக ஆராய்ச்சி வேலைல சேர்ந்து அடுத்த உதவிப்பேராசிரியர் வேலைக்கு எப்ப எடுப்பாங்கன்னு வருசக்கணக்குல நாள் எண்ணிட்டு இருக்கனும்.

ரொம்ப வருசம் ஆகும்னு தெரிஞ்சா அப்டியே ஒரு போஸ்ட்-டாக் பண்ண எதோ ஒரு நாட்டுக்கு போகனும். சரி, அவ்ளோதூரம் போயிட்டோமே அங்கேயே இருந்து கொஞ்சம் முன்னுக்கு வருவோமேன்னு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. எப்படா AP கால்ஃபெர் வரும்னு பாத்துட்டே இருந்து ஓடியாந்தரனும்.

இங்கவந்து சேரை தேச்சுகிட்டு யுனிவர்சிட்டிக்குள்ளயே ஓட்டனும். வெளிய போனவனுங்க கொஞ்சம் உருப்பட்டுட்டதா தெரிஞ்சா ‘அவனெல்லாம் அந்த காலத்துல’ என்று பழம்பெருமை பேசனும். எதுக்கெடுத்தாலும் ‘நான் விஞ்ஞானி, சைன்டிஸ்ட்டு’னு பேசிப்பேசி சைன்டிஸ்ட்டு ஆகாதவன்லாம் அக்யூஸ்ட்னு நெனச்சிட்டு சுத்தறதா நெனப்புல திரியணும்.

இவனுங்க இப்படியே ஆயுசுக்கும் யுனிவர்சிட்டிய விட்டே வெளிய போகாம விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவரேன்னு மிக்சர் தின்னுட்டே சுத்தறானுங்களேன்னு தற்காலிக ஆராய்ச்சி வேலையெல்லாம் மூணு வருசத்துக்குமேல செய்யக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு அப்பவாச்சும் வெளில போவானுங்களேன்னு பாத்தா ரூல்ஸ் போட்ட அதிகாரி என்ன சாதி, அடுத்தவாட்டி இந்தாளு திரும்பவும் பதவிக்கு வருவாரா, ஒருவேலை தனியார் கல்லூரிங்ககிட்ட காசு வாங்கிட்டு இங்க இருக்கறவனயெல்லாம் அங்கபோயி வேலை செய்யட்டும்னு துரத்தி விடறாரான்னு யோசிச்சிட்டு இருக்கானுங்க.

நான் பி.எஸ்.சி முதலாமாண்டு படிக்கும்போது தமிழில் மேடையில் சிறப்பாக பேசக்கூடிய ஆராய்ச்சிமாணவர் ஒருவர் பல்கலைக்கழக விழா ஒன்றில் ஆங்கிலத்தில் சொன்னது:

Those who exit the university after BSc are the Real Products,

Those who exit the university after MSc are the Byproducts,

Those who complete PhD and seek employment in the same university the Waste products.

அவர் இப்போது பல்கலைகழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பத்து வருடங்கள் அங்கேயே படிச்சிட்டு, அங்கேயே வேலையும் வாங்கிட்டு மாசத்துக்கு ஒருவாட்டி ஏதாச்சும் ஒரு விவசாயி தோட்டத்துலபோயி இளநீர் குடித்துவிட்டு நான் சைன்டிஸ்ட்டு, விவசாயிகளைப்பத்தி, விவசாயத்தைப்பத்தி எனக்கு தெரியாததே இல்லன்னு சொன்னா அங்க ஸடூடன்டா இருக்கறவன் வேணும்னா கேட்டுக்கிட்டு ‘ஆமா சார், நீங்க பெரிய ஆளு’ என்று சொல்லலாம். தினமும் இருநூறு, முன்னூறு கிலோமீட்டர் போயி விவசாயிகள், விற்பனையாளர்கள், புரோக்கர்கள், கொள்முதல் ஆலை அதிபர்கள்னு பலதரப்பட்ட ஆட்களையும் சந்திச்சு win-win டீலிங் பண்றவன்கிட்டலாம் ‘நான் சைன்டிஸ்ட்டு’னு சொன்னா ‘போ தம்பி, போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு’னு சொல்லாம வேற என்ன சொல்லுவான்?

சுமார் 20 சதவீத ஆட்கள்தான் உண்மையான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி என்று கொண்டாட தகுதியானவர்கள். இன்றும் அதுபோன்ற பேராசிரியர்களிடமிருந்து ஒரு போன் வந்தால்கூட எழுந்து நின்று பேசக்கூடிய அளவில் உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை போன்றவர்களால்தான் ஏதோ கொஞ்சம் இருக்கிறது.

பேஸ்புக்ல தான் சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னா பதில் சொல்றதுக்குப்பதிலா டெலீட் பண்ணி, பிளாக் பண்ணிட்டு சொம்படிக்கிற கூட்டத்தை மட்டும் வெச்சுகிட்டா ஒரு பத்து வருசத்துல நாமளும் பெரிய சொம்பாத்தான் இருப்போம்.

இதையெல்லாம் படிச்சிட்டு ஒரு கணிசமான எண்ணிக்கைல பல்கலைக்கழக மக்கள் என்னை unfriend செய்யக்கூடும். போனா போகட்டும். சொம்புமேல கோபப்பட்டு குண்டி கழுவாம போன கதைதான்! (நண்பர் ஒருவர் அண்மையில் அறிமுகப்படுத்திய பழமொழி!).

முற்றும்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *