‘வானம் வசப்படும்’ நாவலை புதுச்சேரி குவர்னர் டுய்ப்லெக்ஸ் வசம் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரது நாட்குறிப்பின் அடியொட்டி பிரபஞ்சன் எழுதியிருப்பதைப் படிக்கப்படிக்க புதுச்சேரியின் வரலாறும், இந்தியா என்பது சாதிகளின் தொகுப்பு என்பதும் கிறித்தவமும், இசுலாமும் உள்ளே நுழைந்தபிறகு இந்து என்ற மதம் என்ற ஒன்று போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சிபொங்க வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும் எப்பேர்ப்பட்ட பொய் என்பதும் தானாகவே விளங்கிக்கொள்ளலாம்.
பிரான்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக வந்திருந்தாலும் இங்குள்ள மக்களை கிறித்துவத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் மீதான அதிகாரத்தைப் பெற்று பிரான்ஸ் அரசருக்கு சமர்ப்பிப்பதும் அடுத்தடுத்த கடமையாக பாவித்திருக்கின்றனர்.
ஊழல் என்பது பிரான்சு குவர்னரில் ஆரம்பித்து கடைநிலை சொல்தாது (சிப்பாய்) வரைக்கும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. இரண்டு கப்பல்களில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சரக்கு பிடித்து அனுப்பும் குவர்னர், ஒரு கப்பலில் தனக்காக வியாபாரமும் நடத்துகிறார்.
பிராமணர், முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர் சாதியினரே பிரான்சு, இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்தில் முதல்மட்ட பதவிகளை அனுபவித்திருக்கின்றனர். அவர்களது உறவினர்களுக்குப் பதவிகளை வாங்கித்தர கடும் முயற்சி எடுத்துக்கொள்வதோடு மேல்மட்டத்துக்கு அன்பளிப்பு என்றபெயரில் இலஞ்சம் கொடுத்து பதவிகளை வாங்கியே இரண்டு மூன்று தலைமுறைகள் வாழ்ந்திருக்கின்றனர். நில உரிமை, குத்தகை உரிமை, மண்டி, தரகு, வர்த்தகம் என அத்தனை தொழில்களுமே பிறப்பால் கிடைத்திருக்கின்றதே தவிர திறமை என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் எந்த இடமும் அந்தக்காலத்தில் இருந்திருக்கவில்லை.
குவர்னர் மாளிகையில் கிடைக்கும் பணிகளைப் பெற மேற்கண்ட சாதியினருக்குள் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக பலர் கிறித்துவத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பதவிகளுக்கு சர்ச் மூலம் சிபாரிசு பிடித்து வேலைக்குச் சேரலாம் என்பதால் சர்ச் என்பது கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்திருக்கிறது.
ஆதிஷேஷய்யர் தனது பூணூலை அறுத்துவிட்டு துய்ப்லெக்ஸ் துரையின் மனைவி மேடேம் ழான் அம்மையாரின் ஆசீர்வாத்தில் பாதிரியாரிடம் ஞானஸ்னானம் பெற்று ஜீவப்பிரகாசம் ஐயராக மாறுகிறார். பசு மாமிசம் தின்னும் பரங்கிப்பயல்களின் மதத்துக்கு மாறுவதா என்று அவரைப் புறக்கணிக்கும் குடும்பம் நாளடைவில் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வதும், மற்ற உறவுமுறைகளுக்கு பதவி வாங்கித்தரச்சொல்லி சிபாரிசு கேட்பதும் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அடித்தட்டு மக்களுக்கு இந்த ஆண்டைகளுக்கு உழைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை. சைக்கிள் கூட இல்லாத காலம் (1750-கள்). மாட்டுவண்டி, குதிரை, பல்லக்கு மட்டுமே போக்குவரத்து சாதனம் – மேல்சாதிகளுக்கு மட்டும். கீழ்சாதிகளுக்கு நடந்து செல்வது மட்டுமே ஒரே வழி. விவசாயம், நெசவு சார்ந்த தொழில்களைத் தவிர வேறெதுவும் கிடையாது, எங்கு சென்றாலும் சோறு கட்டிக்கொண்டு நடந்தே சென்று சத்திரங்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டும். வழியெங்கும் திருட்டு பயம். இப்படி ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களே இந்த நாவல்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கும்போது அங்கிருந்து புதர்கள், வயல்கள், சதுப்பு நிலங்களுக்குள் புகுந்து திருவல்லிக்கேணிவரை ஒரு பெண் மழைக்காலத்தில் மகளின் திருமண ஏற்பாட்டுக்கு சென்று வருவதையும், சண்டை உக்கிரமடைந்தவுடன் பல குடும்பங்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு செங்கழுநீர்ப்பட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதையெல்லாம் படிக்கும்போது அந்தக்காலத்தில் எங்கே பாலாறும் தேனாறும் ஓடியது என்று தெரியவில்லை.
சாணார், பறையர், பள்ளர் என கீழ்தட்டு மக்களாக விதிக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து ஓரளவு மீட்சியும், வயிற்றுப்பாட்டுக்கு ஆண்டைகளிடம் படும் பாட்டைக்காட்டிலும் கொஞ்சம் நியாயமான உழைப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளலாம் என்பதற்காக கிறித்தவத்துக்கு மாறியிருக்கின்றனர். ஆனால் முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர், பார்ப்பனர் என அனைவரும் கிறித்துவத்துக்குச் சென்று சர்ச்சுக்கு நடுவேயும் சாதி பிரிக்கச் சுவர் வைத்துவிட்டிருக்கின்றனர்.
சர்ச்சில் இருக்கும் தீண்டாமைச் சுவரை உடைத்து அனைவரையும் ஏசுவின் குழந்தைகளாகப் பாவிக்க நினைக்கும் பாதிரிகளும் இருந்திருக்கின்றனர். கும்பனி படைகளைப் பயன்படுத்தித் தமிழர் கோவில்களை இடித்துவிடத் துடித்த பாதிரிகளும் இருந்திருக்கின்றனர்.
1750-களில் கிறித்தவர், துலுக்கர், தமிழர் என்றே மக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்து என்ற மதமே இருந்திருக்கவில்லை என்பது ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு மூலம் தெரிகிறது.
மேடேம் ழான் அம்மையாரின் பலத்த ஆதரவுடன் டுய்ப்லெக்ஸ் துரை புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை வெள்ளைக்கார, காபிரிச் சிப்பாய்களை அனுப்பி உடைத்துப் போடுகிறார். அதைத் தடுக்க தமிழர்கள் பலர் (இந்துக்கள் அல்லர்) குவர்னருக்கு அடுத்தபடியாக இருக்கும் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளையிடம் முறையிட்டபோதும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் வைணவர் என்பதாலும் தமது பதவிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அடக்கி வாசிக்கிறார்.
தமிழர்களுக்கு சாதிதான் பிரதானம் என்று நாம் நினைக்கும்படி இருந்தாலும், சாதி அமைப்பில் உயர்மட்டத்தில் இருக்கும் பிராமணர்களின் முடிவுக்குக் கட்டுப்பட்டே வந்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பிராமணர்கள் சிறு ஓசை கூட எழுப்பாமல் இருப்பதைப் பார்க்கும்போது கப்பல்களில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டுக்காரனும் இங்கு கோட்டை கட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படுவதில்லை.
ஈசுவரன் கோவிலை இடித்த கையோடு மசூதி ஒன்றையும் இடிக்க குவர்னர் துய்ப்லெக்ஸ் உத்தாரம் (ஆணை) இடுகிறார். இரண்டு செங்கல் விழுந்தவுடன் துலுக்கர் படையின் தலைவன் அப்துல்ரகுமான் தான் குவர்னரைப் பார்த்துவிட்டு வரும்வரை ஒருவரும் மசூதியைத் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்று துய்ப்லெக்ஸ் துரையைப் பேட்டி கண்டு இடிப்பதற்கு காரணம் கேட்க அது குவர்னர் உத்தாரம் என்று சொல்கிறார். ‘கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும்வரை அந்த மசூதியை இடிக்க முடியாது, நாங்கள் உயிரை விட்டாவது போராடுவோம்’ என்று சொன்னதன் மன உறுதியைக் கண்டு குவர்னர் தனது உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.
ஐதராபாத் நிஜாம், ஆற்காட்டு நவாப் பதவிகளை யார் வைத்துக்கொள்வது என்று நடக்கும் சண்டைகள், உள்குத்துகள் காலங்காலமாக நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. மராத்தியர் ஒருபுறம், ஆலந்துக்காரர்கள் ஒருபுறம் என இந்தியா பிய்த்துத் துண்டாடப்பட்டிருக்கிறது.
பிராமணர்கள் ஆற்காட்டு நவாப், ஐதராபாத் நிஜாம், பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அத்துனை பேரிடமும் முதல்மட்ட ஊழியர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். பணிபுரியும் அரசாங்கத்துக்கே ரெண்டகம் விளைவிக்கும் விதமாக எதிரி அரசாங்கத்துக்கு உளவு சொல்பவர்களாகவும், ஆட்சியாளருக்குத் தக்கபடி நிறம் மாறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சுகபோகத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்களாகவே இருந்திருப்பது வானம் வசப்படும் மூலமாகவும் வெளிப்படுகிறது.
கிழக்கான் என்ற பள்ளர் சாதி நபர் அந்த ஊர் ஆண்டையிடம் பண்ணை வேலை செய்து வருகிறார். அப்போது ஊரில் மாட்டுத் தோலை உரித்து எடுத்துச்செல்லும் கும்பல் பண்ணையார் தொழுவத்தில் மாட்டை உரித்து தோலைத் திருடிச்சென்றுவிட்டது. பண்ணையார் கிழக்கானைக் கட்டிவைத்து சாட்டையால் அடித்து வாயில் சாணியைக் கரைத்து ஊற்றி, மூத்திரத்தையும் ஊற்றுவதைப் பார்த்த அவரது எட்டு வயது மகன் ஓடிச்சென்று அடிப்பவனைப் பிடிக்க, அவன் உதைத்துவிடுகிறான். அந்தக் குழந்தை ஒரு கல்லை எடுத்து எரிய அது அடிப்பவன் நெற்றியில் பட்டு காயமாக, அடுத்த சில நிமிடங்களில் கிழக்கானின் குழந்தை கொல்லப்படுகிறது.
கல்லை எடுத்து குழந்தை அடித்தது தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதிய பண்ணையார் கிழக்கானின் மனைவி மாரியாயியை உயிருடன் தீ வைத்து அனைவரின் முன்னிலையில் கொளுத்திவிடுகிறார். மகனையும், மனைவியையும் அடக்கம் செய்த கையோடு பிரெஞ்சுத் துரை ஒருவனிடம் தன்னைத்தானே அடிமையாக விற்றுக்கொண்டு கப்பலேறிவிடும் கிழக்கானின் கனமே 495 பக்க நாவலின் மொத்த கனமுமாகத் தோன்றுகிறது.
வங்கிகள், கடன் வசதி என எதுவுமே இல்லாததால் காசுகளை மண்ணில் புதைத்து வைப்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்த ஒரே சேமிப்புப் பழக்கமாக இருந்திருக்கிறது.
கோவில்கள்தோறும் தாசிகள் பரம்பரை பரம்பரையாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள பணக்காரர்கள் சதிர் ஆட்டத்தை வீடுகளிலேயே நடத்துவதுடன் தாசிகளுக்கு செலவிடுவதை ஒரு சமூக அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். ஒவ்வொரு முக்கிய அரசாங்க விழாககளின்போதும் தேவடியாள் ஆட்டம் என நடன நிகழ்ச்சிகள் தாசிகள் மூலமாகவே நடந்து வந்திருக்கிறதும் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இன்று நாம் மக்களாட்சி என்ற பெயரில் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம், ஆட்சியாளர்கள் அதிகாரம் எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டு மக்களுக்காகவே அவர்கள் என்ற அமைப்புமுறை இருக்கிறது, உழைப்புக்கான ஊதியம், ஓய்வு, மருத்துவ வசதிகள் என மக்கள் மனிதர்களாக மதிக்கப்படுகின்றனர் என்பதை அறிய வானம் வசப்படும் நாவலை அவசியம் வாசிக்கவேண்டும். இரயில் வந்தபிறகுதான் இராஜாவும், குடிமகனும் – முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பும் பொருளாதார இடைவெளி மட்டுமே – ஒரே வேகத்தில் பயணிக்க முடிந்தது.
அறிவியல் மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும். அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்து பழைய காலத்துக்கு வாழ்வியலுக்கு நம்மை அழைப்பவர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்களாக இருப்பதும், அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாமே கேள்விகளே இல்லாத பண்ணையார், கூலிக்காரன் என்ற அமைப்புக்கு மூளைச்சலவை செய்யும் பிரச்சாரமாகவும், உயர்வு என்பது பிறப்பால் வருவது என்ற கோட்பாட்டைத் திணிப்பதுமேயாகும்.
வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற நூல்களுள் ‘வானம் வசப்படும்’ மிகவும் முக்கியமானது.