அன்புள்ள பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு,
அடியேனின் அநேக நமஸ்காரங்கள். 10.7.2017 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் தங்களின் சாடல் கட்டுரையை கண்டேன். நம்மாழ்வார் ஐயாவை இணையத்தில் கேள்விகேட்டு கண்டபடி சிலர் விமர்சிப்பதாகவும் அதற்கு பதில் தரும்படியாக கட்டுரை வரைந்திருந்ததையும் மேலும் அந்த இதழில் வந்திருந்த பல கட்டுரைகளையும் வாசித்து இன்புற்றேன். நம்மாழ்வார் ஐயாவின் நாமம்தொட்டு இயற்கை விவசாயத்தையும், கார்ப்பரேட் சதிகளையும் தமிழக மக்களுக்கு புரியவைத்துவரும் பசுமை விகடனை நான் பெரும்பாலும் தொடுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த சுவாரசியமான சாடல் கட்டுரையை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டதால் வாங்கவேண்டியதாகிவிட்டது.
பசுமை விகடன் என்பது ஆனந்த விகடன் பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்கீழ் வெளியிடப்படும் இதழ்தானே? பசுமை விகடன் என்ற வார்த்தைக்கு நிச்சயம் சட்டபூர்வமான உரிமையை வாங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை வேறு யாராவது பயன்படுத்தினால் விட்டுவிடுவீர்களா என்ன? காப்பிரைட், பேடன்ட் எல்லாமே ஒரு நிறுவனத்தின் சொத்தல்லவா? ஆனால் விதை வியாபாரத்தில் சொந்த ஆராய்ச்சியாளர்களை வைத்து புதிய இரகங்களை உண்டாக்கி விற்பனை செய்கையில் ஒரு நிறுவனம் காப்புரிமை கோரினால் கார்ப்பரேட் சதி என்கிறோம். இயற்கை விவசாயிகள் என்று அறியப்படுபவர்கள்கூட தங்கள் நிலத்துக்கு பாகப்பிரிவினை/கிரயம் செய்தபிறகு பட்டா மாறுதல் செய்து, வரி கந்தாயம் எல்லாம் கட்டி அதை தங்களின் சொத்து என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம் என தத்துவம் பேசுவதில்லை. இவ்வாறாக விகடன் என்கிற கார்ப்பரேட் குழுமம் பல சிற்றிதழ்களை, கையெழுத்து பத்திரிகைகளை தங்களது பணபலத்தால், விரிவான மார்க்கெட்டிங் பலத்தால் முடக்கியது என்றால் சிரிக்கமாட்டார்களா? மோட்டார் விகடன், நாணயம் விகடன் என வாய்ப்புகள் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து இதழ்களை வெளியிட்டு காலத்துக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்கிற பத்திரிகை குழுமம் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்.
விதை பன்மயத் திருவிழா என்ற ஒரு நிகழ்வை நடத்திய ASHA (Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பை பதிவு செய்யாத போலி லெட்டர்பேட் அமைப்பு என்று நான் குறிப்பிட்டதற்கு பலர் அறச்சீற்றம் கொண்டு கடுமையாக விமர்சித்தனர். வேளாண்மையில் தொழில்முறையில் ஈடுபடும் மக்களுக்கு அதை இரண்டு பத்திகளில் விளக்கியிருக்க முடியும். ஆனாலும் அவ்வளவு பெரிய கட்டுரை எழுதியபின்னரும் பலர் புரியாதமாதிரி நடித்ததே நடந்தது. விதைகளின்/செடிகளின் திருட்டு என்பது விதை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமே செய்யும் என்ற தட்டையான புரிதலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
10.7.2017 இதழில் நக்ஸ் வாமிக்கா என்ற எட்டி மரம் குறித்த கட்டுரையில் இங்கிருந்து ஏற்றுமதியாகும் விதைகளில் மருந்துப்பொருட்கள் உருவாக்கப்பட்டு அவை நம்மிடமே அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுதியிருந்தது. ஆனால் விதைப் பன்மய திருவிழாக்களில் உண்மையான விதை சேகரிப்பாள விவசாயிகளின் விதைகளை போலி அமைப்புகள் எதற்காக பல அரிய இரகங்களைக் காட்சிப்படுத்த முயல்கின்றன என்பது மட்டும் பலருக்கு புரியவே புரியாது. அதே கட்டுரையில் இந்தியாவிலிருந்து பல இலட்சம் டன் எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கன்டெயினருக்கு பத்து டன் என்றாலும் ஒரு லட்சம் டன்னுக்கு பத்தாயிரம் கன்டெயினர் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கும். அப்படியென்றால் அரசாங்கம் சிறப்பு திட்டங்களை அறிவித்து என்னென்னவோ செய்திருக்க வேண்டுமே. பல்லாயிரம் ஏக்கர்களில் எட்டிமர சாகுபடி நடக்க வேண்டுமே. ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனது ஆசையைத் தூண்டிவிட வேண்டுமென்ற லாஜிக் இந்த கட்டுரையில் அருமையாக செட் ஆகிறது!
விதைத் திருவிழா குறித்த கட்டுரையில் சித்த மருத்துவர் சிவராமன் கிளைக்கோசைடு என்ற களைக்கொல்லி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று 2006-லேயே நம்மாழ்வார் எச்சரித்ததாகவும், ஆய்வரிக்கைகள் மூலம் இதை கண்டறிந்த ஐரோப்பிய நாடுகள் இதை தடை செய்துவிட்டதாகவும், இந்தியாவில் இன்னமும் உரக்கடைகளில் கிளைக்கோசைடு கிடைப்பதாகவும் மேடையில் பேசியதாக தெரிகிறது.
ஜெய்ப்பூர், இந்தூர், ரட்லாம், பரோடா, ஜுனாகத், இராஜ்கோட் என ஆரம்பித்து கோவில்பட்டி, இராஜபாளையம் வரைக்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஐம்பது அறுபது உரக்கடைக்காரர்களை நன்றாகத் தெரியும். கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது முன்னூறு உரக்கடைகளுக்கு மேல் சென்று உரையாடியிருக்கிறேன். சந்தையிலுள்ள பிரபல நிறுவனங்களின் பல்வேறு களைக்கொல்லிகளின் பிராண்டு பெயர், டெக்னிக்கல் பெயர், சிபாரிசு அளவு, சிபாரிசு செய்யப்படும் பயிர், விவசாயிகள் அதன்மீது செய்யும் பலாத்காரம் என பலதரப்பட்ட தகவல்களை விரிவாக அறிந்தவன் என்ற முறையில் கிளைக்கோசைடு என்ற களைக்கொல்லியே கிடையாது என நிச்சயமாக சொல்லமுடியும். ஒருவேளை Tebuconazole என்கிற மருந்தை மிகவும் டெக்னிகலாக ஹைட்ராக்சி டெபுகொனஸோல் கிளைக்கோசைடு என்று குறிப்பிட்டிருக்கலாமோ என்று யோசித்தாலும் டெபுகொனஸோல் என்பது ஒரு சாதாரண பூஞ்சாணக்கொல்லி. பேயர் நிறுவனம் Folicur என்றபெயரில் சந்தைப்படுத்துகிறது. இதைக் களைக்கொல்லி என்பது பாராசிட்டமால் கேன்சரை குணப்படுத்தும் என்பதற்கு ஒப்பானதாகும்.
இல்லாத ஒன்றை மேடையேறிச் சொல்லி மக்களுக்கு பீதியுண்டாக்கி மாற்று மருத்துவம் என மார்க்கெட்டிங் செய்யும் ஏமாற்றுப்பேர்வழி இந்த சித்த மருத்துவர் சிவராமன் என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதைச்சொல்லிய நம்மாழ்வார் ஒரு பிராடு பேர்வழி என்றும் சொல்லலாம். ஒருவேளை அவர் வேறு எதையாவது சொல்லியிருந்து பசுமை விகடனின் கட்டுரையாளர் கிளைக்கோசைடு என்று எழுதி வந்திருந்தால் அவரை முட்டாள் என்று சொல்வதா அல்லது அதை அப்படியே அச்சுக்கு அனுப்பி ஊரெல்லாம் ஒரு பிரபல சித்த மருத்துவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திய அதன் பொறுப்பாசிரியரை முட்டாள் என சொல்வதா என நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி. Glycoside is any molecule in which a sugar group is bonded through its anomeric carbon to another group via a glycosidic bond.
பசுமை விகடன் ஒரு முறையான அமைப்புக்குள் வரும் பத்திரிகை என்பதால் தவறு நடந்தால் திருத்திக் கொள்ளலாம், மறுப்போ மன்னிப்போ வெளியிடலாம்; Stakeholders கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தனிநபர்கள் இந்தமாதிரி பல பொய்த் தகவல்களை பேஸ்புக்கில் அறிவுஜீவி போர்வையில் இருந்து எழுதி வெளியிட்டு, சிக்கினாலும் ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல் அகங்காரத்துடன் வலம் வருவதைப் பார்க்கிறோம். ASHA போன்ற போலி லெட்டர்பேட் அமைப்புகளுக்கும் அது பொருந்தும்.
மரத்தடி மாநாடு என்ற தலைப்பில் ‘சுயரூபம் காட்டிய பி. டி. பருத்தி…சோகத்தில் விவசாயிகள்’ கட்டுரையில் வாத்தியார் என்பவர் மேட்டூர் அருகே கொளத்தூர் சுற்றுவட்டாரத்தில் RCH-659 என்ற பருத்தியை விதைத்ததாகவும், அதில் செம்பேன் தாக்குதல் ஏற்பட்டு சாறு உறிஞ்சப்பட்டதால் மகசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் பேசுகிறார். நாட்டுரக பருத்தி போட்டால் இந்த பிரச்சினை வராது என்று ஆலோசனையும் வழங்குகிறார். 2002-இல் வெளியிடப்பட்ட பி. டி. பருத்தி இரகங்கள் மூன்று நான்கு வகையான காய்ப்புழுக்களை மட்டுமே தடுக்கும், சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு இதில் சம்பந்தமே கிடையாது என்ற அடிப்படை விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். குறைந்தபட்சம் இந்த வாத்தியாராவது அப்டேட் ஆகிக்கொள்ள வேண்டாமா? RCH-659 இரகத்தை வெளியிடும் இராசி விதைகள் நிறுவனம் ஆத்தூரில்தானே இருக்கிறது; ஒருவாட்டி கேட்டிருக்கலாமே. ஏன் பல்வேறு பெயர்களில் பொய்களை பரப்பவேண்டும்.
சரோஜாதேவி, மருதம் போன்ற அந்தக்கால இரவு இலக்கிய பத்திரிகைகளில் வரும் கதைகளில் வாசகனை பரவசப்படுத்தும்படியாகவே வரிக்கு வரி கதையமைப்பு இருக்கும். பால்காரிக்கே பால் ஊற்றிய கதை என தலைப்பிலேயே தானியாகு பெயர் பீய்ச்சியடிக்கும். அணியிலக்கணம், உவமானம், உவமேயம், எதுகை, மோனை எல்லாம் கனகச்சிதமாக இருக்கும். வாசகனின் மனவோட்டம் அந்த புத்தகத்தை எடுத்தபிறகு மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டே கதைகளும் படங்களும் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு இது ஒரு உண்மைக்கதை என்றே முடிக்கப்பட்டிருக்கும். உள்ளாடையை உருவியதும் அரவம் உருவமெடுத்து ஆடியது என்பதற்கும் முப்பது சென்ட்டில் நான்கு மாதத்தில் மூன்று இலட்சம் வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் பண்ணையம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இரண்டின் நோக்கமும் படிக்கும் வாசகனின் மனக்கிளர்ச்சியை தூண்டிவிடுவது மட்டும்தான்.
இயற்கை விவசாயம் என்ற ஒன்றையே நம்மாழ்வார்தான் கண்டுபிடித்தார் எனுமளவுக்கு பூஜை, புனஸ்காரம் போடுவதெல்லாம் விவசாயத்தை பேஸ்புக்கில் செய்பவர்களுக்கு நம்பும்படியாக இருக்கலாம். பஞ்சகவ்மியத்தை குடிப்பது குறித்து மட்டும் விளக்கமாக எழுதி கட்டுரையை முடித்திருக்கிறீர்கள் ஜூனியர் கோவணாண்டி. நம்மாழ்வார், பசுவை வெட்டி திண்ணக்கூடாது, அது இறந்தவுடன் புதைத்துவிடவேண்டும் என்று சொன்னதையெல்லாம் விளக்கமாக பேசியிருக்கலாமே. தரையில் சம்மணமிட்டுதான் அமரவேண்டும், வெள்ளைக்காரன் நாற்காலி கண்டுபிடித்துக் கொண்டுவந்து நமக்கு கொடுத்து நோயை உண்டாக்கினான் என்றும் சொல்கிறார். கி. பி. 1835-இல் வெள்ளைக்காரன்தான் சூத்திரர்கள் நாற்காலியில் அமருவதற்கு இருந்த தடையை சட்டம் மூலமாக நீக்கினார்கள். ‘கண்ட நாயெல்லாம் இன்னிக்கு நம்ம முன்னாடி சேர் போட்டு உக்காருது’ என்ற ஆற்றாமையைத்தான் ஐயா தேன்தடவிய வார்த்தையாக வெளிப்படுத்தினார். காரில் போனாலும் சம்மணம் போட்டு உக்காந்துக்குங்க என்றும் சொல்கிறார். தினமும் குறைந்த்து நூற்றைம்பது கிலோமீட்டர் காரோட்டும் என்னைப்போன்றவர்கள் எப்படி சம்மணம்மிட்டு அமருவது என்று குழப்பமாக இருக்கிறது.
டாக்டருங்க காசுக்கு ஆசைப்பட்டு சிசேரியன் பண்ணிடறாங்க என்று நம்மாழ்வார் சொன்னதையும் நீங்கள் விளக்கியிருக்கலாம். குடும்பத்தில் ஒருவரின் அகால மரணம் அந்த குடும்பத்தை சிதைப்பதோடு, குழந்தைகளின் கனவுகளை நிற்கவைத்து கொல்லும். ஒரு கர்ப்பிணி பிரசவத்தின்போது இறந்தால் அவரது கணவர் படும் வேதனை, சகோதர சகோதரிகளுக்கு திருமணம், சொத்து தகராறு, மறுமணம் செய்வதிலுள்ள சமூக சிக்கல்கள், பாலியல் சார்ந்த தனிமையின் வேதனைகள் என சித்திரவதையை அனுபவிக்கவேண்டியிருக்கும். பொருளாதார ரீதியாக, மன ரீதியாக அந்த நபர் மீண்டுவருவது எவ்வளவு சிரமமானது என்பது தெரியாததா? சாவு எல்லாருக்கும் வரும்தான்; ஆனால் தெரிந்தே சாகவிடுவதுதான் மரபு, பாரம்பரியம் என்றால் அப்படி சொல்பவரை மனநோயாளி என்றல்லவா சொல்வோம். நேரடியாகவே கேட்கிறேன், நம்மாழ்வாரின் குடும்பத்தினர் யாருக்காவது பிரசவத்தின்போது பிரச்சினை என்றால் சிசேரியன் செய்வார்களா அல்லது மரபுதான் முக்கியம் என சித்தாந்தம் பேசுவார்களா? போராலும், மருத்துவத்தை தடை செய்வதாலும் குடும்பங்களை சிதைத்து மரணங்களை, ஊனங்களை சமூகத்தில் பரவலாக வைத்திருப்பதன் மூலம் மத, சாதி அடிப்படைவாதத்தை எளிதாக கட்டிக்காக்க முடியும். சிசேரியன் தடுப்பு, தடுப்பூசி எதிர்ப்பு வகையாறா எல்லாமே அதற்குத்தானே?
ஒருவேளை மான்சாண்டோ அல்லது அதன் துணை நிறுவனங்களிடம் நான் அன்பளிப்பு பெற்றிருப்பேனோ என்று சிலர் ஐயம்கொள்கிறார்கள். பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்ததால் இயற்கை விவசாயத்தை எதிர்ப்பதாக சிலர் கருதுகிறார்கள். சரவதேச தரத்திலான ஆர்கானிக் சான்றுபெற்ற பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலையை நடத்திவருவதோடு ஆர்கானிக் உணவுப்பொருட்களை ஏற்றுமதியும் செய்துவருகிறேன் என்றதும் இந்த சர்டிஃபைடு ஆர்கானிக் ஃபார்மிங் எல்லாம் பிராடு வேலை என்கிறார்கள். இதுதான் நமது பிரச்சினையே. அன்பே சிவம் மாதிரியான படங்களை பார்த்து ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கிக்கொள்கிறார்கள்.
கல்லூரியில் படிக்கையில் தீவிர பாடிபில்டிங் வேலைகளில் ஈடுபாடு கொண்டு ஒரு ஜிம்மிற்கு சென்றுவருவோம். உள்ளே சென்றதும் ஆஞ்சநேயர் நெஞ்சைப் பிளந்தவண்ணம் இருக்கும் ஒரு படத்தை வணங்கிவிட்டுத்தான் இரும்பைத் தொடவேண்டும். வீர ஆஞ்சநேயர் இருக்குமிடத்தில் ஷூ அணியக்கூடாது என்று அறிவுரை வேறு. அதன்பின்னர் நகரில் உண்டான ஜிம்களில் ஆஞ்சநேயர் இடத்தை அர்னால்டும், ரோனி கோல்மனும் பிடித்துக்கொண்டார்கள். ஆர்கானிக் ஃபார்மிங் என்றதும் நம்மாழ்வார் படத்தை வைத்து கும்பிட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்றதும் பலர் பதட்டமடைகின்றனர். ஆட்டத்தின் விதிமுறைகளை அறிந்து ஜெயிப்பதற்கு விளையாடவேண்டும்; ஏதாவது சித்தாந்தத்திற்காகவும், யாரையாவது திருப்திப்படுத்துவும் ஆடுபவர்களுக்கு நல்ல ஸ்பான்சர் இருக்கும்வரை கவலையில்லை.
நம்மாழ்வார் பக்தாக்கள் பலருக்கு நான் பென்ஸ் கார் வைத்திருப்பது வேதனையாக இருக்கிறது. பொதுவாகவே ஏழைகள், வயதானவர்கள், தாடி வைத்திருப்பவர்கள், தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள், கதர் ஜிப்பா அணிந்து ஜோல்னாபை வைத்திருப்பவர்கள், கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற பொதுப்புத்தி வந்துவிடுகிறது. அதன் நீட்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. விஞ்ஞானி, இயற்கை வேளாண் விஞ்ஞானி என பில்டப் கொடுத்தாலும் அடிப்படையில் அண்டர்கிராஜுவேட் ஆன அவர் சிலகாலம் மட்டுமே கோவில்பட்டி அரசு வேளாண் பண்ணையில் பண்ணை மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். பண்ணை மேலாளர் என்பது ஒரு கடைநிலை ஊழியர் பணிதான். அதையும் விட்டு விலகி கிட்டத்தட்ட ஒரு துறவிபோல் எளிமையின் சிகரமாக வாழ்ந்து வந்தவருக்கு கரூர் அருகே 55 ஏக்கர் பண்ணைநிலத்தை வாங்கி வானகம் என்ற இயற்கை விவசாய பண்ணையை உருவாக்க நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பதை யாராவது கேட்டுவிட முடியுமா? Because some animals are more equal than others.
காந்தி கதராலும், பசுக்களாலும், குலத்தொழிலாலும் இந்தியாவை முன்னெடுக்க விரும்பினார். தொழிற்சாலைகள், சாலைகள், ஆலைகள், அணைகள், அதிக உற்பத்தித்திறன் என்ற கோட்பாட்டில் நேரு இயங்கினார். இதில் யார் சரி, யார் தவறு என்று மதிப்பிட விரிவான தரவுகளும், ஆய்வுகளும் தேவையல்லவா? பத்தாண்டுகளுக்கும் மேலாக மாட்டுக்கறி உண்ணும் வெள்ளைக்காரனின் தலைமையில் கிடைத்த நிதி உதவியில் விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவர நம்மாழ்வார் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் நல்ல இடுபொருட்கள், சாலைகள், கிட்டங்கிகள், சந்தை வசதிகள் கொடுத்தால் விவசாயிகள் தானாகவே முன்னுக்கு வந்துவிடுவார்ரகள் என்ற நோக்கத்தில் செயல்படும் சர்வதேச நிறுவனங்களில் வெள்ளைக்காரர்களுடன் இணைந்து பணிபுரிபவர்களை வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு கூட்டி கொடுப்பவர்கள் என வசை பாடுகிறார்கள். இப்படி சொல்பவர்களில் பலர் ஆன்சைட்டில் வெளிநாட்டு வேலைக்கு சென்று அங்கிருக்கும் பூர்வகுடி ஒருவரின் வேலையைப் பிடுங்கி அவர்கள் சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டவர்கள்தான்!
எங்கிருந்தோ நிதி உதவி எனக்கு கிடைப்பதாக சிலர் எழுதுகிறார்கள். கடனாக, கட்டணமாக, விற்பனையாக, அல்லது தொழில் பங்குதாரராக இருக்கும்பட்சத்தில் மட்டுமே பணம் வாங்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இத்தனைக்கும், செயல்படாத கன்சல்டிங் சர்வீசஸ் கம்பெனி ஒன்றையும் வைத்திருக்கிறேன். பிரச்சாரம்தான் நோக்கம் என்றால் சொந்த ஐடியில் சூனியம் வைத்துக்கொள்ள நான் என்ன Coprophagy மனநிலையிலா இருக்கிறேன்? இந்திய விவசாயமும், கிராம அமைப்பும் ஜாதி அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாதது. இந்த அடிப்படைகூட தெரியாமல் campaign strategy வடிவமைப்பது நம்மாழ்வார் பக்தாக்களுக்கு வேண்டுமானால் பரவசத்தை உண்டாக்கக்கூடும். எங்கிருந்தாவது காசு வந்தவுடன் பிரச்சாரம் செய்வதும், பாங்காக் போவதும் அப்புறம் பஞ்சாயத்து கூட்டுவதும் தமிழ் ஜோசிய கும்பலுக்கு வேண்டுமானால் இயல்பான ஒன்றாக இருக்கலாம். உங்கள் பெயரில் நாட்டுமாடு வாங்கி நானே வளர்த்து நானே வைத்துக்கொள்கிறேன் என்பது மாதிரியான நவீன ஈமு கோழி வளர்ப்பு திட்டங்களையெல்லாம் பார்க்காமலா இருக்கிறோம். நன்கொடைகள் நம் காலைச் சுற்றிய பாம்பு. பாரம் குறைந்தால்தான் தூரம் வசமாகும் என்பதுதானே மரத்தான் ஓடுபவர்களின் பாலபாடம்.
பாரம்பரிய மலேரியா மருந்துக்கு புத்துருவாக்கம் கொடுத்ததற்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். அப்படி பஞ்சகவ்யத்துக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காமல் கொடுமுடி டாக்டரின் தோல்வியடைந்த ஆராய்ச்சியை சிலாகித்து, புனுகுப்பூனை கதைகளையெல்லாம் சொல்லி யாரை நாம் ஏமாற்றுகிறோம் மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி? ஜப்பானின் நம்பர் ஒன் டிராக்டர் நிறுவனம் குபோட்டா என முழுப்பக்க விளம்பரம் போட்டுவிட்டு நாட்டுமாடுகளின் மூலம் உழவு செய்வதின் முக்கியத்துவத்தை கட்டுரை வெளியிடுகிறோம். சர்வதேச தரத்துக்கு நம் இளைஞர்கள் செல்ல வேண்டும், பன்னாட்டு கம்பெனிகளை தமிழகத்து இளைஞர்கள் உருவாக்கி நடத்தவேண்டும் என்றல்லவா நாம் நம் இளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிமையில்லை. திறமான புலமையெனில் மேநாட்டார் அதை வணக்கஞ் செய்திடல் வேண்டும் என்றல்லவா நம் சமுதாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டத்தை சபையிலே நிறுத்தி கேள்வி கேட்பதை விடுத்து மூடி மறைப்பதால் பயனென்ன மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி.
பதினைந்து ரூபாய்க்கு பசுமை விகடன் வாங்கியதற்கு பதிலாக நாற்பது ரூபாய்க்கு மியா கலிஃபா-வின் பிலாட்டீஸ் பயற்சி வகுப்பு குறுவட்டை வாங்கிப் பார்த்திருந்தால் மனக்கிளர்ச்சியாவது மிஞ்சியிருக்குமே என்ற வேதனையில் விடைபெறுவது உங்கள் அன்பு பிரபு.