தமிழக விவசாயி என்கிற அரிய உயிரினம்

இந்தியாவிலேயே அபூர்வமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது தமிழக விவசாயிகள்தான். உயர் மின் அழுத்த கம்பிகள் வயல் மீது செல்வதால் விவசாயம் பாதிக்கிறது, கேஸ் குழாய்கள் செல்வதால் விவசாயம் பாதிக்கிறது என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

தமிழகத்தில் மின் கம்பிகளோ, கேஸ் குழாய்களோ முதன்முறையாக செல்லவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பல இடங்களில் எரிவாயு, பெட்ரோலியம் செல்லும் குழாய்களும், உயர் மின் அழுத்த கம்பிகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் எங்குமே மகசூல் குறைந்துவிட்டதாகப் புகார் இல்லை.

உயர் மின் அழுத்தக் கம்பிகளுக்கு அடியிலோ, கேஸ் குழாய் மீதோ தென்னை, பாக்கு போன்ற மர வகைப் பயிர்களை சாகுபடி செய்யக்கூடாது என்பது உண்மை. ஆனால் மற்ற எந்த பயிர்களும் சாகுபடி செய்ய முடியாது என்று எந்த தடையும் இல்லை. மின்சார வாரியமோ, கேஸ் நிறுவனங்களோ அப்படி அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

தென்னை, பாக்கு சாகுபடி செய்பவர்கள் விவசாயிகளா என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி. சும்மா கிடந்த தோட்டத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தென்னையை நட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, நகர்ப்புறத்தில் வேறு தொழில்களில் இருக்கும் பகுதிநேர விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டத்துக்கு பெரும் கேடு. அந்தந்த ஊரில் யாரிடமாவது குத்தகைக்கு விட்டால் கோடை காலங்களில் சில மாதங்கள் தோட்டம் சும்மா கிடக்கும். நிலத்தடி நீர்மட்டம் மீதான அழுத்தமும் குறையும்.

முன்பெல்லாம் தங்களால் சாகுபடி செய்ய முடியாவிட்டால் பங்காளிகளிடமோ, பிறத்தியாரிடமோ குத்தகைக்கு விட்டுச் செல்வார்கள். இன்று கம்பிவேலி அமைத்து தென்னை மரம் வைப்பது அல்லது சும்மா எறிந்துவிட்டுச் செல்வது என்பதே அதிகம் என்பதால் இரண்டுமே உள்ளூர் பொருளாதாரத்துக்குக் கேடாக இருக்கிறது.

மின்கம்பிகளின் கோபுரங்கள் அமையவுள்ள இடங்களுக்கு அரசாங்கம் ஓரளவுக்கு நியாயமான இழப்பீடு தருகிறது. நூறு மீட்டருக்கு ஒரு கோபுரம் அமைவதால் நடுவில் வெள்ளாமை வைக்க முடியாது என்று சொல்பவர்கள் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் வந்து பார்க்க வேண்டும். எத்தனை காற்றாலைகள், எத்தனை சிறிய பெரிய மின்கம்பிகள். தண்ணீர் இல்லாமல் சும்மா கிடக்குமே தவிர மின் கம்பி செல்வதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று ஒரு விவசாயிகூட சொன்னதில்லை.

கம்பி அறுந்து விழுந்தா, கேஸ் குழாய் வெடிச்சுதுன்னா என்ன பண்றது என்ற அபாயங்களைப் பேசி பயமுறுத்துவதும் நடக்கிறது. சாலை விபத்துகளைவிட பெரிய அபாயம் தினசரி நமக்கு என்ன இருக்கிறது? அதை எளிதாக எடுத்துக்கொண்டு உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து செத்துட்டா என்ன பண்றது கேட்பவர்கள் இதுவரை அப்படி எத்தனை பேர் இறந்தனர், அதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு சதவீதம் என்பதைப் பேசுவதில்லை. நிலையாமை குறித்து இரண்டு நாட்களுக்குப் பேசலாம். சோம்பேறிகளின் முதலீடு அது என்பதால் இங்கு தேவையில்லை.

கேஸ் குழாய்கள் செல்லும் வயல்களில் அதன் பாதுகாப்புக்கு அந்தந்த விவசாயிகளே பொறுப்பு என்ற ஷரத்து ஒன்றும் மிகவும் அச்சமூட்டும் ஒன்றாக முன்வைத்துப் பேசப்படுகிறது. நம் வீட்டு முன்னால் இருக்கும் சாலையின் பாதுகாப்புக்குக் கூட நாம்தான் பொறுப்பு. ஆம், விபத்தை உண்டாக்ககூடிய வகையில் பொருட்களை போட்டு வைப்பதோ, வாகனங்களை நிறுத்துவதோ சட்டப்படி தவறு. சாலையை சேதப்படுத்த முற்படுவதும், அதற்கு துணைபோவதும் தவறு. அதேதான் கேஸ் குழாய், உயர் மின் அழுத்த கம்பி என அனைத்துக்கும். நம் வயலில் இருக்கிறது என்பதற்காக அதன்மீது போர்வெல் லாரியை நிறுத்தி ஓட்டை போடுவது, குறைந்த மின் அழுத்த கம்பிகளில் கொக்கி போடுவது என்பதெல்லாம் சட்டப்படி தவறு. மற்றபடி அவற்றின் பராமரிப்பு செலவை விவசாயி கொடுக்கும்படி எந்த சட்டமும் கட்டாயப்படுத்தவில்லை.

அரசாங்க மதிப்புப்படி இழப்பீடு வழங்கினால், மார்க்கெட் ரேட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போதும் ஒலிக்கிறது. மார்க்கெட் ரேட் என்றால் என்ன? அஃது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? டீக்கடை பெஞ்சுகளிலும், சலூன் கடை நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சொல்வதுதான் மார்க்கெட் ரேட். இருப்பு-கேட்பு-வழங்கல் (Stock – demand – supply) என்ற கோட்பாடு ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் வாங்க வருபவர் எவ்வளவு தர முடியும் என்பதையும், விற்பவருக்கு எவ்வளவு அவசரம் என்பதையும் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது.

நம்ம ஏரியாவுல ஏக்கர் இருபத்தஞ்சு இலட்சத்துக்கு கீழ இல்லீங்க என்று எதை வைத்து சொல்கிறார்கள்? ஏக்கர் 25 இலட்சத்துக்கு வாங்கி அதில் என்ன பயிர் செய்து வட்டியுடன் அந்த முதலீட்டை ஈட்ட இயலும்? கம்பி, கேஸ் குழாய் செல்வதால் மார்க்கெட் மதிப்பு குறைந்துவிடும் என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மை எவ்வளவு விவசாயிகளிடம் இருக்கிறது? மார்க்கெட் மதிப்பு குறித்து பேச ஆரம்பித்துவிட்டாலே விவசாயம் செய்து வருமானம் ஈட்டுவது என்பது பேசத் தேவையில்லாத பொருளாகிவிடுகிறது.

கம்பிக்கு அடியிலோ, கேஸ் குழாய் மீதோ வீடு கட்ட முடியுமா என்ற கேள்வியும் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. விவசாய பூமியில் எதற்காக வீடு கட்ட வேண்டும்? எவனாவது அவனவன் நிலத்தை வீட்டுமனைக்கு விற்றால் தவறு. ஆனால் விவசாய நிலத்தில் நடுவில் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்வதில் தவறில்லை. என்ன சார் நியாயம் இது? அதாவது நிலம் வைத்திருப்பவன் என்ன செய்தாலும் நியாயம் என்று நேரடியாகச் சொல்லாமல் விவசாயம் என்ற போர்வைக்குள் எதற்காக ஒளிந்துகொள்ள வேண்டும்?

சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் எடுப்பு செய்யப்படும்போதும் ‘ஐயகோ, விவசாயி பாதிக்கப்படுகிறான்’ என்ற பிரச்சாரமே ஆரம்பிக்கப்படுகிறது. புதிதாக அமைக்கபடும் சாலைகள் என்பது வேறு. ஏற்கனவே இருக்கும் சாலைகளுக்கு நிலம் எடுத்தாலும் இதே பிரச்சினைதான்.

சாதி அமைப்பில் மேலிருந்து கீழே செல்லச்செல்ல, மேலே இருப்பவர்களுக்கு சாதி எப்படி மறைமுகமாக அனுகூலமாக இருக்கிறது என்பதையும், அதை எப்படி அவர்கள் காசாக்குகிறார்கள் என்பதையும் அறிவோம். அதே லாஜிக் இங்கும் உண்டு. மெயின் ரோட்டில் ஒரு ஏக்கர் வைத்திருப்பவர் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஐந்து ஏக்கர் வைத்திருப்பவரைவிட அதிக பலன்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அடைகிறார்.

அந்த நிலத்தைக் காட்டி கடன் வாங்கி ஒரு தொழில் ஆரம்பிப்பதோ, சொத்து மதிப்பாகக் காட்டி வாரிசுகளுக்கு வரன் தேடுவதோ, வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டு – விவசாயி என்ற வழக்கமான போர்வையில் – உபரி வருமானம் பார்ப்பது, பெட்ரோல் பங்க் அமைப்பது என எல்லாமே மெயின் ரோட்டில் உள்ள நிலக்கிழாருக்கு சாதகமாகவே இருக்கும்போது, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் – சாதி அமைப்பில் கீழே உள்ளவர்களைப் போலவே – தம்மைத் தடுப்பது எது என்று புரியாமல், கடுமையாக உழைத்தும் முன்னுக்கு வர ஏன் முடியவில்லை என்ற அயற்சியில்தான் வாழ்கிறார்.

அத்தகைய locational advantage உள்ள நிலக்கிழார்கள் அதற்கான risk-களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்? சாலை அகலப்படுத்த அரசாங்கம் நிலம் கேட்டால் இவ்வளவு நாளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அதன் பலனை அனுபவித்தோமே என்ற உணர்வே இல்லாமல் ‘ஐயகோ, ஏ பாசிச அரசாங்கமே’ என்று ஆரம்பிப்பதால்தான் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நிலக்கிழார்கள்கூட உதவிக்கு வராமல் ‘இவ்வளவு நாள் அனுபவிச்சப்ப நல்லா இருந்துச்சா?’ என்று கறுவுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தேவைக்கு அதிகமான விவசாயிகள் இருக்கிறார்கள். அதனால்தான் விவசாயத்தின் எந்த பிரச்சினைகளையும் அதன் பக்கத்தில்கூட செல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டிருக்கிறோம். எதற்கெடுத்தாலும் கார்ப்பரேட் கம்பெனி என்பது, மின்கம்பி அமைத்தால், கேஸ் குழாய் பதித்தால் விவசாயம் அழிந்துவிடும் என்று சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புவது போன்ற செயல்கள் எல்லாம் நம் நாட்டில் விவசாயி என்ற பெயரில் ஏகப்பட்ட பேர் சும்மாவே திரிகிறார்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *