கார்ப்பரேட் விவசாயம் என்பது நடைமுறையில் சாத்தியமா?

கேள்வி: கார்ப்பரேட் விவசாயம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே பலர் சொல் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போருக்கு ஆயத்தமாகும் சூழலில் கள நிலவரம் எப்படி இருக்கிறது? நடைமுறையில் பெருநிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுமா, விவசாயிகள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு ஒருகட்டத்தில் அப்புறப்படுத்தப்படுவார்களா, சிறு வியாபாரிகளுக்கு, நுகர்வோருக்கு ஏதாவது பலன் உண்டா? வருமான வரி தாக்கல் செய்யும்போதும், விண்டோஸ் மூலமும் விவசாயம் செய்பவர்கள் தாண்டி, உண்மையிலேயே உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதை வரவேற்கிறார்களா? சந்தையில் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்: பெருநிறுவனங்களால் இந்திய சூழலில் ஒருபோதும் இலாபகரமாக நேரடி விவசாயம் செய்ய முடியாது. விவசாயத்தை விவசாயிகள் மட்டுமே செய்யமுடியும். கூட்டுப்பண்ணையம், கார்ப்பரேட் பண்ணையம் போன்ற ஜிகினா வார்த்தைகள் கட்டுரைகள் எழுத மட்டுமே உதவும். ஒப்பந்த சாகுபடி என்பது வேறு எங்குமே ஓப்பன் மார்க்கெட் இல்லாத நிலையில் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே வாங்கக்கூடிய பயிர்களுக்கு சாத்தியமாகும். எ.கா. கொக்கோ, வனிலா, ஸ்டீவியா, செர்ரி தக்காளி வகைகள், கெர்கின், ஜுக்கினி, கோலியஸ்.

அரசாங்கம், அரசியலாளர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என யாரையுமே நம்பாமல் ஒருவகையான அச்சத்துடன் வாழ்வது இந்தியர்களின் முக்கிய பண்புக்கூறுகளுள் ஒன்று. தங்கத்தை மக்கள் தொடர்ந்து வாங்கி பத்திரப்படுத்துவது இதற்கு ஒரு நல்ல சான்றாகும். இந்த எளிமையான ஒன்றை புரிந்துகொள்ளாமல் மகிந்திரா, ரிலையன்ஸ், பெப்சி போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த சாகுபடி என்றபெயரில் கையை சுட்டுக்கொண்டதே நடந்தது.

ஒப்பந்த சாகுபடி என்றவுடன் ரேட் கான்ட்ராக்ட் செய்துகொண்டு விலை ஏறினாலும் இறங்கினாலும் ஒரே விலையில் அந்த நிறுவனத்துக்கே விவசாயிகள் விளைபொருளை விற்கவேண்டும், அவர்கள் கொடுக்கும் இடுபொருட்களையே பயன்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்துக்கு போவதாகச் சொல்லி குண்டர்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஒருகட்டத்தில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு நிலத்தையே விற்கச் சொல்வார்கள் என்பது மாதிரியான புரிதல் பல விண்டோஸ் விவசாய நிபுணர்களால் வெகு காலமாக பரப்பப்பட்டுவிட்டது (கடன் வாங்கினால் கட்டத்தான் வேண்டும். வட்டி கட்ட இயலவில்லை என்றால் ஒரு நியாயம் இருக்கிறது; அசலையும் தரமாட்டேன் என்று அடாவடி செய்யும் தடித்தனத்தை அறமாக காட்சிப்படுத்துகிறது தமிழ்ச்சமூகம்).

ஒரு விவசாயியை நம்பி அனைத்து இடுபொருட்களையும் கொடுத்து, விளையுமா விளையாதா என்றே தெரியாமல், மற்ற வியாபாரிகள் குறுக்குசந்தில் புகுந்து விளைந்ததை வாங்கிக்கொண்டு போவதைத் தடுக்க எந்த வழியும் இல்லாமல், விளைபொருட்களை வாங்கும்போது இடுபொருட்களுக்கான தொகையை வட்டியில்லாமல் கழித்துக்கொண்டு, விவசாயி உற்பத்தி செய்து வைத்திருக்கும் எல்லா கிரேடு காய்கறிகளை/தானியங்களை வாங்கிச்செல்ல, ஒன்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிமுட்டாளாக இருக்கவேண்டும் அல்லது கல்லூரி முடித்த பொடுசுகள் ஏதாவது பல்க்காக வென்ச்சர் கேபிடல் நிதி வாங்கி செலவு செய்ய வழி தெரியாமல் market disruption என்றபெயரில் காய்கறி, உணவுதானிய வியாபாரத்திற்கு வந்திருக்க வேண்டும். ஒரு நிறுவனம், 9-5 வேலைநேரம், ஆண்டுக்கு 12% ஊதிய உயர்வு, காப்பீடு, சேமநல நிதி என்ற விதிமுறைகளுடன், உற்பத்தி மீது எந்த உத்தரவாதமும் இல்லாத விவசாயத்தொழிலில் பெருந்தொகையை முதலீடு செய்கிறதென்றால் அதன் தலைமைக்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலில் perishable commodities என்ற வகையில் காய்கறிகளின் உற்பத்தியும், சந்தையும் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். கோயமுத்தூருக்கு அருகில் சுரைக்காய் உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி அறுவடை செய்து, கழுவி, தரம்பிரித்து, சாக்குப்பைகளில் கட்டி, டெம்போ வாடகை, லோடிங் கூலி, சந்தைக்குச் சென்றதும் அன்லோடிங் கூலி கொடுத்து, ஏலத்தில் கிடைத்த தொகைக்கு மண்டிக்காரருக்கு பத்து சதவீத கமிஷன் கொடுத்து மீதியானதை வைத்துக்கொள்கிறார். மண்டி உரிமையாளர் கிலோவுக்கு குறைந்தது ஒரு ரூபாய் இலாபமாவது வைத்து அருகிலுள்ள சிறு நகரங்களின் மொத்த வியாபாரிக்கு அனுப்புகிறார்; அவரது தலையில் லோடிங், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி இப்போது சுமத்தப்படுகிறது. அதையும் சேர்த்து கிலோவுக்கு ஒரு ரூபாயாவது இலாபம் வைத்து கடைகளுக்கு அந்த வியாபாரி அனுப்புகிறார். திரும்பவும் லோடிங், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி, சுங்கக்கட்டணங்கள் வகையறா அந்த கடைக்காரர்களின் தலையில் விடிகிறது. இறுதியாக வாடிக்கையாளர் எல்லாவற்றையும் சுமக்கிறார். கிட்டத்தட்ட GST மாதிரி சங்கிலியில் உள்ள அனைவரும் இன்புட் கிரெடிட் எடுத்துக்கொண்டாலும், விவசாயி மட்டும் இன்புட் எடுக்க முடியாது!

எந்த விவசாய விளைபொருளாக இருந்தாலும் நுகர்வோருக்கு விற்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில்தான் விவசாயிகளிடம் வாங்கப்படுகிறது என்பதே நடைமுறை. சந்தையைக் கட்டுப்படுத்துகிறார்கள், உணவுச் சங்கிலியைக் கட்டுப்படுத்துகிறார்கள் போன்ற வாதங்களை இலுமினாட்டி கோஷ்டிகளே வைத்துக்கொள்ளட்டும். மற்றவர்களைவிட நாம் எந்த இடத்தில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம், வாடிக்கையாளர்களுக்கு அதனால் கிடைக்கும் value என்ன என்ற கேள்விதான் ஒரு நிறுவனம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதை நிர்ணயிக்கிறது.

இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் ஒரே அணுகுமுறையைத்தான் கடைபிடிக்கின்றன. Speciality crops தவிர ஏனைய சாதாரண தானியங்கள், காய்கறி கொள்முதலுக்கு எழுதப்பட்ட ஒப்பந்தம் ஏதும் கிடையாது. கிலோ ஒரு ரூபாய்க்கு சந்தையில் போனாலும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் போன்ற ஏதாவது ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை சீசனுக்கு முன்னரே அறிவித்துவிடுகிறார்கள். அதிகபட்ச விலை அவ்வப்போது சந்தையில் என்ன இருக்கிறதோ அதே விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று கலந்துரையாடுவதோடு வாகனங்களில் நேரடியாக வந்து எடுத்துக்கொள்கிறார்கள். சாக்குப்பைகள், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி, மண்டி கமிஷன் 10%, சந்தையின் சுங்கம் போன்ற எதுவும் கிடையாது. மண்டியில் கிலோ 15 ரூபாய் என்றால் இவர்கள் 17 ரூபாய்க்கு எடுக்கிறார்கள். அவர்களது சில்லரை விற்பனை கடைகளை சென்றடைய கிலோவுக்கு மூன்று ரூபாய் செலவு என்றால் அடக்கவிலை 20 ரூபாய் ஆகிறது. ஐந்து ரூபாய் இலாபத்துடன் 25 ரூபாய்க்கு விற்கமுடியும். Traditional channel-இல் 35-45 ரூபாய் அளவில் மட்டுமே இது சாத்தியமாகும். இலாபம் இல்லாத ஒன்றில் விவசாயிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்; சித்தாந்தம் வேறு, தொழில் வேறு என்பது அவர்களுக்கு புரியாததல்ல.

கண்ணன் டிபார்ட்மென்டல், ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் மொத்த விற்பனைக் கடைகளாக, சிறு வியாபாரிகளை நோக்கி பயணப்படுவதற்கு இதுதான் காரணம். பெருநிறுவனங்களிடம் கிலோ 25 ரூபாய்க்கு வாங்கும் சிறு வியாபாரி 30 ரூபாய்க்கு விற்றாலே போதுமானது. Traditional channel-இல் 35-45 ரூபாய் அளவில் வாங்கும் நுகர்வோருக்கு இது இலாபகரமானது என்பதுடன் இங்கு அனைவருக்கும் accountability கட்டாயம் என்பதால் வரி ஏய்ப்பும் தடுக்கப்படுகிறது.

இதில் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் கேட்கும் கிரேடு அளவில் இல்லாத விளைபொருளை என்ன செய்வது என்ற ரிஸ்க் விவசாயிகளுக்கு உண்டு. அதை உள்ளூரில் கிடைத்த விலைக்கு தள்ளிவிட்டாக வேண்டும். அந்த கழிவு கிரேடு இல்லாத விளைபொருட்களை உற்பத்தி செய்ய உயர்தர சாகுபடி முறைகளை பின்பற்றியாக வேண்டும் (இந்த இடத்திலிருந்துதான் இப்போது விண்டோஸ் விவசாயிகள் கூவ ஆரம்பிப்பார்கள். பிராய்லர் கோழி போல உற்பத்தியாகும் காய்கறிகள், சுயசார்பு அறுப்பு, ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே…)

கூட்டுக்குடும்பங்களில் இருந்து தனிக்குடித்தன சமூகமாக மாறிவிட்டதால் உணவுப்பொருட்களின் நுகர்விலும் மாற்றம் ஏற்படுவது இயல்பானது. இரண்டு கதவு கொண்ட குளிர்பதன பெட்டிகளைவிட ஒரு கதவுடைய சிறிய குளிர்பதன பெட்டிகளின் விற்பனையே இதற்கு சாட்சி. தர்பூசணி சாதாரணமாக 8-10 கிலோ எடை கொண்டது. நான்குபேர் உள்ள குடும்பத்திற்கு 10 கிலோ எடையுள்ள தர்பூசணியை வண்டியில் கட்டிக்கொண்டு சென்றால் அந்த பழம் தலையிலேயே உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் Icebox, Personal size segment என்ற பெயர்களில் வந்ததுதான் கருப்புநிறத்தில், அதிக சுவையுடன் இன்று சந்தையில் நீள்வட்ட வடிவில் கிடைக்கும் தர்பூசணி பழங்கள்.

நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாங்கும் திறன், கலாச்சார ரீதியிலான உணவு சார்ந்த மாற்றங்கள், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவற்றை அனுசரித்துதான் சந்தை தன்னை தகவமைத்துக் கொள்கிறது. ஒரு சில நிறுவனங்கள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அழித்தொழிக்கும் என்பதெல்லாம் இந்தியர்களின் இயல்பான அவநம்பிக்கையினால் தோன்றும் மனப்பிராந்தியாகும். வாய்ப்பு இருந்தால் வியாபாரம் செய்ய தனிநபர்களோ, நிறுவனங்களோ தோன்றுவதும் காணாமல் போவதும் இயல்பான நிகழ்வுகள். அமேசான், பிளிப்கார்ட் வந்தபிறகு இந்தியாவின் வியாபாரமே மாறிவிட்டது என்று சொல்லமுடியாது அல்லவா?

கார்ப்பரேட் விவசாயத்திற்கு எதிர்ப்பு ஆனால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்ற பொதுக்கருத்து இடையில் இருக்கும் தரகர்களையே பாதுகாத்து வருகிறது. பலதரப்பட்ட புரோக்கர்களையும், ஒட்டிண்ணிகளையும் அரசாங்கத்தால் விரட்ட முடியவில்லை என்ற சூழலில், வாங்கி விற்கும் ஒரு சாதாரண சேல்ஸ் & மார்க்கெட்டிங் வேலையை செய்யவரும் நிறுவனங்களை நிலத்தை எழுதி வாங்க வந்த பன்னாட்டு பகாசுரன்கள் என்று பில்டப் கொடுப்பவர்கள் உண்மையில் புரோக்கர்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறார்கள். தலைவாசல், எடப்பாடி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், தென்காசி மார்க்கெட்டுகளில் புழங்கியவர்களுக்கு இது எளிதில் புரியும்.

கல்யாணத்திற்கு மளிகை, காய்கறி வாங்கி, கணக்குவழக்கு பார்த்த அனுபவமுடையவர்கள் மிக இதை உணர்ந்திருக்கலாம்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *