/மன்னர் காலத்திலே யானைகள் வரவில்லை, வெள்ளையர் காலத்திலே யானைகள் வரவில்லை, சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளாக யானைகள் வரவில்லை ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வருவது ஏன்?/ வனத்துறையின் தவறான வன மேலாண்மை முறைகளா அல்லது வனங்களை ஒட்டிய பகுதிகளில் காலங்காலமாக பயிரிட்டு வந்த பயிர்களை விடுத்து வாழை, தென்னை, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிட்ட விவசாயிகளின் தவறான முன்னெடுப்புகளா அல்லது இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஃபார்ம் ஹவுஸ், வில்லா, ரிசார்ட் கட்டி அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சும் விளக்குகளை அமைத்து வனங்களின் அடிவாரங்களை நாசம் செய்யும் நகரவாசிகளா அல்லது அதற்கு அனுமதி வழங்கிவரும் உள்ளூர் நிர்வாகமா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்று இதை வாசிப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
யானை வசிப்பதற்கு மிகப்பெரிய பரப்பளவுள்ள வனம் தேவை என்பது தெரிந்தும் கோவிலுக்கு யானைக்குட்டிகளை நன்கொடை வழங்கி அதைச் சித்ரவதை செய்து வந்ததே காலங்காலமாக நடந்தது. சமகாலத்தில் யானைக்கு புத்துணர்வு முகாம் என்ற பெயரில் காரமடை அருகே தேக்கம்பட்டியில் ஆற்றோரம் முகாம் அமைத்து பல அடுக்கு மின்வேலிகள், உயர் அழுத்த மின்விளக்குகள், துப்பாக்கி ஏந்திய வனப்பாதுகாவலர்கள், கும்கி யானைகள் என ஜோராக நடக்கும் அரசாங்கமே நடத்தும் வரம்புமீறல்களை இந்த விவசாயிகள், போராட்ட அழைப்பிதழில் குறிப்பிட “மறந்தது” ஒரு தன்னிச்சையாக நிகழ்வாகும் (இருப்பினும் தேக்கம்பட்டி 23 கிராம விவசாயிகள் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக் குழு கடந்த 3. 1. 2018 அன்று போராட்டம் நடத்தியது குறித்த படம் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது).
/மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு சென்றால் டீயும், பிஸ்கட்டும் தவறாமல் கிடைக்கும். ஆனால் வனவிலங்குகள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்/. இதற்கெல்லாம் சகாயம் அய்யா இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்று முந்தைய தலைமுறை எப்படி நம்புகிறதோ அதைப்போல சேலம் கலெக்டர் ரோகிணி மேடம் இருந்திருந்தால் யானைகளின் இருப்பிடத்திற்கே சென்று ‘இனிமே இங்கலாம் வரக்கூடாது, புரிஞ்சுதா?’ என்று சொல்லி வன விலங்குகளை துரத்தி அடித்திருப்பார்கள் என்று இன்றைய இளைஞர்கள் நம்புவதாக நாளேடுகள் மூலம் தெரிய வருகிறது.
நாராயணசாமி நாயுடு அய்யா என இன்று திடீரென பலரும் அவரது பெயரை எடுத்து உரையை ஆரம்பிப்பதைப் பார்க்கும்போது “ஒருமுறை நாராயணசாமி ஐயா அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது” என்று வாட்சப் கதைகளின் நாயகனாக்காமால் விடமாட்டார்களோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் பச்சைத்துண்டு அணிந்து போராட்டாத்துக்குப் புறப்படுவதை வெட்சிப்பூ தரித்து களம் இறங்குதலுக்கு ஒப்பாக நிறுவினாலும் ஆண்ட பரம்பரை நாங்கள் என்று தொக்கி நிற்கும் எச்சமே தவிர அஃது ஒருபோதும் சமகால பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. (வெட்சிப்பூ = இட்லிப் பூ).
நாட்டு மருந்தும், இயற்கை விவசாயமும் மனிதகுலத்தின் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்று எவ்வாறு நம்ப வைக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஒப்பானது அவினாசி-அத்திக்கடவுத் திட்டத்தை நிறைவேற்றினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் வேளாண்மைக்கான தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதுமாகும். மக்களின் வரிப்பணத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து, 1500 ஏக்கருக்கும் குறைவில்லாமல் நிலம் கையகப்படுத்தி வனங்களை நாசம் செய்து கால்வாய்கள், சுரங்கங்கள், பாலங்கள், மதகுகள் ஏற்படுத்தி பத்து பன்னிரெண்டு ஏரிகளுக்கு நீர்வரத்தை உண்டாக்கி அதன்மூலம் நிலத்தடி நீரை அதிகரித்து விவசாயத்தைச் செளிப்புறச் செய்வதென்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பதைப்போன்றதே. கோடிக்கணக்கான ரூபாய்க்கான கட்டுமானப்பணி அப்போதைக்கு இருக்கும் ஆளுங்கட்சியின் பினாமிகளுக்கு வழங்கப்படுவதைத் தாண்டி, சகட்டுமேனிக்கு சுற்றுச்சூழல் நாசம் செய்யப்படுவதைத் தாண்டி பெரிய பலன்கள் இராது என்பதை சமூக அக்கறையாளர்கள் பலரும் அறிவர்.
அத்திக்கடவு வாயிலாக தருவிக்கப்படும் தண்ணீர் மண்ணுக்கடியில் பதிக்கப்படும் இராட்சத குழாய்கள் மூலமாக காரமடைக்கு வடக்குப்புறமாக மேட்டுப்பாளையம் தாண்டி நேரடியாக அவினாசிக்கு அருகே கொண்டுசெல்ல திட்ட வரைவு வழங்கப்பட்டதையும், அதற்காக காரமடை சுற்றுவட்டார விவசாயிகள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டதையும் நாளேடுகளை வாசிக்கும் அனைவரும் அறிவர். இந்த செய்திகளையெல்லாம் இணைத்து திருப்பூர்வாழ் தொழிலதிபர்கள் தங்களது ஆலைகளை மேற்குநோக்கி விரிவுபடுத்திக்கொள்ள தண்ணீர் வழங்கும் மறைமுக திட்டம்தானே இது என்று கேட்பவர்களுக்கு தற்சமயம் யாரிடமும் நேரடியான பதிலில்லை.
கெளசிகா நதி என்று கோயமுத்தூரில் ஒரு ஆறு உண்டு. பெரியநாயக்கன்பாளையத்துக்கு மேற்கே குருடிமலையில் உற்பத்தியாகி கோவையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து, கோவில்பாளையம் அருகே சத்தியமங்கலம் சாலையைக் கடந்து தெக்கலூர் வழியாக பல ஊர்களைத் தொட்டு திருப்பூர் நகருக்குள் பல கிலோமீட்டர் பயணம் செய்து நொய்யலில் கலக்கிறது. பில்லூர் அணையிலிருந்து குழாய்கள் மூலம் எடுத்து வரப்படும் தண்ணீரை குருடிமலை அடிவாரத்தில் மிகச்சிறிய தேக்கம் மூலமாக கெளசிகா நதியில் இறக்கிவிட்டால் அஃது இயலபாகவே திருப்பூர், அவினாசியைத் தன் போக்கிலேயே சென்றடையும். ஆனால் ஒருகாலத்தில் நதி என்றழைக்கபட்டது இன்று ஓடையாகக்கூட இல்லை. அதன் கிளை வாய்க்கால்கள், பாசன கால்வய்கள், மதகுகள் என எல்லாமும் அரசாங்க மேப்புகளில் மட்டும் இருக்கிறது. இதுகுறித்து ஒக்கலிகர் மகாஜன சங்கம், கவுண்டர்கள் சங்கம், நாயுடுக்கள் சங்கம் என எந்த சாதிச் சங்கமும், விவசாயிகள் சங்கமும் பேசாது என்பது திண்ணம். பச்சைத்துண்டு ஆசாமிகள் பலரே கெளசிகா நதியைக் கூறு போட்டனர் என்பது ஒருவேளை அந்த காட்டு விலங்குகளுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ! அத்திக்கடவு திட்டம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கெளசிகா நதியைத் தண்ணீர் வந்தடைய வெறும் பத்து கிலோமீட்டர் போதுமானது என்பது பேசப்படவே இல்லை.
அவினாசி-அத்திக்கடவுத் திட்டத்தால் ஏற்படும் அத்தனை பலன்களும் கெளசிகா நதியில் தண்ணீர் வரத்து வந்தாலும் ஏற்படும். பல ஆயிரம் கோடி மக்களின் பணமும், பல வருட உழைப்பும் மிச்சமாகும். கோயமுத்தூரின் குடிநீர்த்தேவையை 2050-வரை கணக்கிட்டு ரூ 1018 கோடியில் பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் எடுத்துவர தற்சமயம் நடந்துவரும் பணிகளைப் பார்க்கும்போது அவினாசி அத்திக்கடவு திட்டம் என்பது மோடி கருப்புப்பணத்தை ஒழித்து ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் வழங்குவது மாதிரி உள்ளூர் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.
அவினாசி அத்திக்கடவு திட்ட ஆதரவாளர்கள் பவானி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை அவினாசி, திருப்பூருக்குத் திருப்பிவிடுங்கள் என்று சொல்லும்போது பவானி காவிரியில் கலக்கிறதா அல்லது நேரடியாக கடலுக்கே சென்றுவிடுகிறதா என்று ஐயமேற்படுகிறது. பவானி ஆற்று நீர் காவிரியில் கலந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது என்று சொன்னால் தஞ்சாவூர்க்காரர்கள் தற்கொலைப்படையை அனுப்பவும் வாய்ப்பிருக்கிறது. சென்னைக்கும், இராமநாரபுத்துக்கும் காவிரியிலிருந்து குடிநீர் செல்கிறது என்பதையும் சென்னையின் தண்ணீர் தேவை எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை எதிர்பார்த்திருக்கும் நிறுவனங்கள் தற்சமயம் கோவை நகரின் அவினாசி சாலையில் புதிதாக வரவிருக்கும் மேம்பாலம் அல்லது தொண்டாமுத்தூர்வரை (ஈஷா யோகா மையம் வரை மெட்ரோ வரும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்) வரவிருக்கும் மெட்ரோ இரயில் டெண்டர் நோக்கி திரும்பியிருப்பார்கள் என்பதை பச்சைத்துண்டு அணிந்தவர்களுக்கு யாராவது விளக்கினால் நல்லது.