Zoom டிடர்ஜென்ட் பவுடர் – Purple Cow மார்க்கெட்டிங் – Zoom மீட்டிங்

Zoom டிடர்ஜென்ட் பவுடர்.

Purple Cow என்று ஒரு மார்க்கெட்டிங் தொடர்பான புத்தகத்தை Seth Godins எழுதியிருக்கிறார். மேற்குலகின் குறிப்பிடத்தக்க மார்க்கெட்டிங் ஜீனியஸ்களுள் ஒருவர்.

ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் பண்ணையில் ஒருமுறை சுற்றி வந்துவிட்டாலே அலுப்புத் தட்டிவிடும். மறுபடியும் வெவ்வேறு வகையான மாட்டினங்கள் இருக்கும் பண்ணையில் சுற்றினாலும் எல்லாமே மாடுதானே என்று ஒருவித சலிப்பு வந்துவிடும். ஆனால் ஊதா நிறத்தில் ஒரு மாட்டைப் பார்த்தால் அஃது என்ன புதிதாக இருக்கிறது என்று ஆர்வத்துடன் அதைப் பார்வையிடுவோம், பால் வாங்கக்கூட முயல்வோம் அல்லவா? அந்த மாதிரி, வாடிக்கையாளர்களுக்குப் புதிய ஒன்றை அலுப்பூட்டாதவண்ணம் தர வேண்டும் என்பதையும் அமெரிக்காவின் ஏகப்பட்ட ஊதா மாடு மார்க்கெட்டிங் உதாரணங்களையும், அதன் வெற்றி தோல்விகளை அலசுகிறார்.

நம்மூர் சந்தையிலும் பலதரப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். கும்பகோணம் டிகிரி பில்டர் காபி என்று சில வருடங்களுக்கு முன்னர் பிரபலமான காப்பிக்கடை இருந்தது. மேற்கு மாவட்டங்களில் பேக்கரி ஆரம்பிக்கவே 20 இலட்சம் முதலீடு செய்வார்கள். இவை எல்லாமே ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பது வழக்கம். கோவையில் பேக்கரி என்றும் திண்டுக்கல்லில் ரிலாக்ஸ் என்றும் சேலத்தில் காபி பார் என்றும் பெயரிட்டிருப்பார்கள். சுவையும் பெரும்பாலும் ஒரே மாதிரியே இருக்கும். தொழிலில் எவ்வித புதிய அணுகுமுறையும் இருக்காது.

அப்போது டிகிரி பில்டர் காபி என்ற பெயரில் செப்பு டம்ளரில் காபி போட்டுக்கொடுத்த கும்பகோணம் டிகிரி பில்டர் காபி கடைகள் பிரபலம் ஆனது. பலர் ஃபிரான்ச்சைசீ எடுத்தார்கள். (அந்தக் கடைகளின் ஊதா நிறத்துக்கும், Purple Cow புத்தகத்துக்கும் தொடர்பில்லை). ஒரே வருடத்தில் பல கடைகள் மூடப்பட்டன. காரணம், டிகிரி காபி என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். வாயில் வைக்க முடியாத மொக்கையான சுவை. ஆனால் பழைய டீகபடை மாடல் பேக்கரிகள் அப்படியேதான் இருக்கின்றன; புதிய பேக்கரிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

பெயரை மாற்றுவது, பெயிண்ட்டை மாற்றுவது, பெயர்ப் பலகையை மாற்றுவது போன்றவை ஒருபோதும் innovation என எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஒரு business layer-ஐ உண்டாக்க பல ஆண்டுகள் பிடிக்கும். அதில் ஆரம்பத்தில் இருந்து இருந்தவர்கள் தாக்குப்பிடிப்பதோடு அது என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்பதையும் அறிவார்கள். அதற்கு பல்கலைக்கழக படிப்பெல்லாம் தேவையில்லை. அதில் frugal management இருக்கும்வரை மட்டுமே இலாபகரமான தொழில். ஏகப்பட்ட அடுக்கு நிர்வாகம் உள்ளே நுழையும்போது அதன் திறன் குறைவதோடு organic growth என்பது அப்படியே நிற்க ஆரம்பிக்கும். அதை சரிகட்ட கிடைப்பதையெல்லாம் வாங்கிப்போடுவது, தள்ளுபடி விற்பனை என ‘எண் விளையாட்டுகள்’ ஆரம்பமாகும்.

கும்பகோணம், மாயவரம் ஊரகப் பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு கரூர், நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர கிராமங்களே சந்தை. உள்ளூர் உற்பத்தி போதாத காரணத்தால் அங்கிருந்து வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இரு மாவட்டங்களில் மட்டும் வாரத்துக்கு ஒரு இலட்சம் வாத்துகளுக்கு மேல் விற்பனையாகிறது. இதன் மதிப்பு தோராயமாக 2.5 கோடி. இதில் எந்த பிராண்டும் கிடையாது. எல்லாமே சாலையோர கறிக்கடைகள், வறுவல் உணவகங்கள் மூலமே விற்பனை. வாத்து முட்டை பற்றாக்குறை காரணமாக ஆந்திரா நெல்லூரில் இருந்து பேருந்துகளில் வருகிறது. நான்கு ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்கும் தொழில். இதிலும் பிராண்டு எதுவும் கிடையாது. தனிநபர்களின் வார்த்தைகள் வழியாகவே வியாபாரம்.

ஒருகாலத்தில் கவுச்சி அடிக்கிறது என்று நாமக்கல், கரூர் பகுதிகளில் வாத்துக்கறியை யாரும் சாப்பிட மாட்டார்கள். இன்று வாரம் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை என்கிற நிலை வர கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆட்டுக்கறி விலையேற்றமும் இதன் வளர்ச்சிக்கு ஒரு மறைமுக காரணம். ஒரு புதிய இறைச்சி சுவை வியாபாரம் அதாவது ஒரு business layer உருவாக தேவைப்பட்ட காலத்தை நாம் நவீன வியாபார பாடங்களில் அளப்பதே இல்லை.

ஓரளவுக்குப் பெரிய கறிக்கடைகளில் வாத்தின் இறக்கையில் உள்ள பெரிய இறகுகளைத் தனியாகப் பிடுங்கி சேகரித்து வைத்து கிலோ 2000 ரூபாய்க்கு சில முகவர்களிடம் விற்கிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அவையே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெள்ளைச் சாயமிடப்பட்ட இறகுப்பந்து பூவாக (shuttle cock) வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வளவு பேர் இறகுப்பந்தாட்ட மட்டையை முதுகில் மாட்டிக்கொண்டு காலையில் விளையாடப் போனார்கள், இன்று எவ்வளவு பேர் போகிறார்கள் என்பதை வைத்து அந்த சந்தையின் வளர்ச்சியையும் அளவிடலாம்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பல புதிய தக்காளி இரகங்களை ஒரு தோட்டத்தில் நடவு செய்துவிட்டு வாரம் ஒருநாள் அங்கு செல்வது, மதியம் சாப்பிட்டுவிட்டு அந்தப் பகுதியில் சுற்றுவதுமாக இருந்தோம். அந்த தோட்டத்திற்கு அடுத்து ஒரு அட்டை போடப்பட்ட கட்டிடம். உள்ளே என்ன தயாரிக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு லாரியில் வரும் திரவத்தை கேன்களில் பிடித்து வைத்து சோப் பவுடராக்கி பொட்டலம் போட்டு பெட்டியில் அடைத்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

புதுகோட்டை அருகே ஒருநாள் மக்காச்சோளம் விதைப்புக்குச் சென்றுவிட்டு பட்டுக்கோட்டை அருகே கீற்றுச் சாமியார் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லக்கூடிய சித்தர், அவரைப் பார்க்காமல் திரும்பக்கூடாது என்று ஒரு நண்பர் அழைத்துச் சென்றார். அந்த சித்தர் Zoom டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தியே ஆடைகளை வெளுக்கிறார் என்பதைப் பார்த்தபோது அந்த மார்க்கெட்டிங் சேனல் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிந்தது.

இன்று தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடக விளம்பரம் இல்லாமல் சோப்பு, வாசிங் பவுடர்களை விற்க எம்பிஏ படித்த மேனேஜர்களால் முடியாது. இன்று இருக்கும் பிரபல பிராண்டுகள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டுகளால் தூக்கி நிறுத்தப்பட்டவையே. ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லாமல் ஜூம் டிடர்ஜென்ட் பவுடர் போன்ற எண்ணற்ற பொருட்கள் நம்மிடையே கோடிகளில் விற்கின்றன.

இந்த விற்பனைச் சங்கிலியை அவ்வளவு எளிதாக Merger & Acquisition மூலமாகப் பெற்றுவிட முடியாது. Zoom பவுடர் போனால் யாராவது Doom டிடர்ஜென்ட் பவுடர் என்று கொண்டுவருவார்கள்.

மாதம் பத்து கோடிக்கு இரண்டு மாவட்டங்களில் வாத்துக்கறி விற்கிறது என்பதற்காக ஒரு பெரிய நிறுவனம் நுழைந்து சந்தையைக் கைப்பற்ற நினைக்கிறது என்றால் அதற்கு கீழே ஒரு business layer உண்டாகும். அதுவும் பெரும்பாலும் பார்வைக்கே தெரியாத ஒன்றாகவே இருக்கும். வெண்பன்றிக்கறி வியாபாரமும் அப்படித்தான். இதில் தனிநபர்களின் பெயர்களே பிராண்டு. எத்தனை கோடி வியாபாரம் என்பது அரசாங்கத்தின், வங்கிகளின் எந்த ஒரு measurable கணக்கிலும் கொண்டுவரவே முடியாது.

கடந்த இரண்டு வருடங்களில் முலாம்பழம் ஆண்டு முழுவதும் சாலையோரக் கடைகளில்கூடக் கிடைக்கிறது. கோடை காலத்திக்கான ஒரு பழம் எப்படி ஆண்டு முழுவதும் கிடைக்கிறது, யார் பயிரிட்டு விற்பனைக்கு அனுப்புகிறார்கள், விதை எங்கிருந்து வருகிறது என்று யோசித்திருக்கிறோமா?

கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றபோது பெரிய அதிர்வுகள் ஏதும் வரவில்லை. ஆனால் வால்மார்ட் இந்தியாவில் கடை போடுகிறது என்றதும் லபோதிபோவென குதித்தவர்கள் பலர் (ஆனால் அவர்கள் IKEA கடையை சிலாகித்தது வேறு கதை. அது வேற வாய், இது வேற வாய் மொமென்ட்). ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கண்ணன் டிபார்ட்மென்ட்டல் கடையைவிட வால்மார்ட்டில் பலன் அதிகம் என்பது தெரியாததல்ல.

நாளையே சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், டி-மார்ட் கடைகளை ரிலையன்சோ, வால்மார்ட்டோ வாங்கிவிட்டாலும் அவற்றின் வாடிக்கையாளர்களிடத்தில் பெரிய அதிர்வுகள் வராது. இணையதளங்களில் புழங்கும் 50+ வயது கட்டுரையாளர்களது உலகம் வேறு.

இரவில் ஒரு கம்பியில் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துவிட்டு அடியில் துணிகளைப் பரப்பி ஏலம் விட்டவர்களிடம் எடுத்துத்தான் நமது ‘ஆடையுடுத்தும் மகிழ்வான தருணங்கள்’ கிடைக்கப்பெற்றன. பகல் நேரங்களில் மிதிவண்டியில் கொண்டுவந்து துணி விற்றவர்களிடம் பாவாடை, இரவிக்கைத் துணி வாங்கிக் கட்டிய நம் முன்னோர்கள் இப்போது ஒரு ஜாக்கெட்பிட் எடுக்க டிரைவர் வைத்து இன்னோவா எடுத்துக்கொண்டு சேலத்திலிருந்து கோயமுத்தூருக்குப் போகிறார்கள். இடைப்பட்ட காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே.

இதில் எத்தனை மாறுதல்கள் வந்தாலும், business layers தோன்றி மறைந்தாலும் வாடிக்கையாளர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பொத்தாம்பொதுவான ஆலோசனை சொல்லப்பட்டாலும், நுகர்வோர் ஒன்றைக் கைவிட்டு விடுகிறார்கள் என்னும்போது அரசாங்கம் எப்படிக் காப்பாற்றும் என்பதற்கு பதிலில்லை.

Zoom மீட்டிங் என்று இப்போது எல்லா பக்கமும் நடக்கிறது. காணொளி மீட்டிங் செயலி என்பது இன்று எல்லா மென்பொருள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு default option-ஆகத் தருகிறது. நம்மூர் Zoho உட்பட கூகுள் வரைக்கும் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் செயலி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் Skype for Business என்பதை பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் மென்பொருள் பேக்கஜில் சேர்த்தே கொடுக்கிறது. இருப்பினும் பல நிறுவனங்கள் Zoom நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி மீட்டிங் நடத்த இடவசதி பெற்றிருக்கின்றன.

ஆர்குட் போய் பேஸ்புக் வந்தது. ஐயகோ ஆர்குட் போய்விட்டதே, அங்கிருந்து மென்பொருள் வேலை செய்யும் ஆட்கள் என்ன ஆவார்கள் என்று வாடிக்கையாளர்கள் கவலைப்படுவதில்லை. பிளாக்பெர்ரி போய் ஆப்பிள் வந்தபோதும் இதே கதைதான்.

அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்படுவது மிகவும் தட்டையான generic statement. தொழில்கள் அப்படியேதான் இருக்கும். அது செய்யப்படும் முறை, பாணி, உத்தி மட்டுமே மாறுபடும். அது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான skill set தேவை. மேலை நாட்டு வணிகப் பள்ளிகளில் சொல்லப்படும் consolidation of businesses என்பதை இங்கே பயமுறுத்தும் சொல்லாக மாற்றிவிட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், லைசன்ஸ், பெர்மிட் போன்றவற்றைத் தாண்டி தொழில்நுட்பம், business layer என்று வரும்போது தனிநபர்களின் திறமையே செல்லுபடியாகும்.

இன்றைய லாக்டவுன் காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை எதுவென்றால் Zoom டிடர்ஜென்ட் பவுடர் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை Zoom மீட்டிங் app மூலமாக செய்யச்சொல்லி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதுதான். நாம் என்ன மாதிரியான வியாபாரத்தில் எந்த மாதிரியான விற்பனை சங்கிலியில் இருக்கிறோம் என்பதையே புரிந்துகொள்ளாத பலர் மேலாளர்களாக இருக்கிறார்கள் என்பது பல நிறுவனங்களில் நடக்கும் Zoom meeting மூலமாகத் தெரிய வந்துள்ளது.

வேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா?

கேள்வி: வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை முடித்த பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Companies எனப்படும் விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயோகன்ட்ரோல், சொட்டுநீர்ப் பாசனம், டிராக்டர், பண்ணை இயந்திரக்கருவிகள் வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இஃது உண்மையா? கொஞ்சம் விளக்கமாக இதுகுறித்து எழுதவும்.

பதில்: ஆமாம், பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Input Companies பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன. இதற்குக் காரணம் 70% மாணவிகளும், 30% கம்பெனி நிர்வாகத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுமே காரணமாவர்.

கம்பெனிகள் இலாப நோக்கில் செயல்படுபவை. அதற்கான மனநிலை, செயல்திறன், தன்னூக்கம், அசாதாரண சூழ்நிலைகளைக் கையாளும் திறன் போன்றவை அவசியம். ‘எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டேன், மற்றபடி எது நடந்தாலும் நான் பொறுப்பாக முடியாது’ என்ற attitude தனியார் நிறுவன வேலைகளுக்கு மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இருக்கவே கூடாத ஒன்று. Ownership என்பது மிக முக்கியம்.

மாணவிகள் சந்தை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு வராததற்கான காரணத்தில் அவர்களது மனத்தடையே பெரும்பங்கு வகிக்கிறது. அத்தகைய மனத்தடையை உருவாக்குவதில் உதவிப் பேராசிரியர்களும், சீனியர் மாணவிகளும், ‘எக்ஸாம் பிரிப்பேர் பண்றேன்’ என்று வீட்டில் பணம் வாங்கி செலவு செய்துகொண்டு சும்மா சுற்றும் பட்டதாரி மக்களும் முக்கியமானவர்கள். மூத்த பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சித்திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை முழுவதும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளராக அடிமையாகவே வாழும் ஒரு கும்பலை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த முத்தரப்பு கும்பல், குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக input industry குறித்த பல மாயக் கதைகளைப் பரப்பிவிட்டவண்ணம் உள்ளனர்.

Open Market Jobs எனப்படும் சந்தை சார்ந்த வேலைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிய 80% தனிநபரின் குணாதிசியங்களே முக்கியமானது. Technical Knowledge 20% இருந்தாலும் போதுமானது. தெரியாதவற்றை யாரிடமாவது ஃபோன் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம், கூகுள் செய்திடலாம். ஆனால் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் நாம் செய்யப்போகும் வேலையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏர்கன்டிஷன்டு க்யூபிக்கிளில் உட்கார்ந்து For your information and necessary action என்று மின்னஞ்சலைத் தட்டிவிடும் வேலை மட்டுமே வேண்டும் என்று பல மாணவிகள் இருக்கின்றனர். இதற்கு அவர்களுடைய அப்பா ஏதாவது கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தால்தான் உண்டு.

இன்புட் இன்டஸ்ட்ரி வேலை என்றதும் விவசாயிகளின் தோட்டத்துக்குச் சென்று தங்கள் கம்பெனி மருந்து, விதைகளை சீட்டு எழுதித் தருவதுதான் என்று இண்டஸ்ட்ரி வேலைக்கே சென்று பார்த்திராத ஒரு கும்பல் எழுதி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நம்மாழ்வார் பக்தர்களாவர். கடைசி வரைக்கும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டே அரசாங்க வேலை கிடைக்கும்வரை கார்ப்பரேட் சதி, இலுமினாட்டி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பர். இவர்களிடம் எந்த வேலையையும் சொந்தமாகச் செய்யக்கூடிய தன்னூக்கமோ, உற்சாகமோ இருக்காது; நல்ல பொழுதையெல்லாம் வீணாகப் பேசிக் கழித்திடுவர்.

மார்க்கெட்டிங் வேலை, மார்க்கெட்டில் வேலை என்றதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி வரும். தமிழ்நாடு, கார்நாடகா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஓப்பீட்டளவில் பாதுகாப்பானவை. பெண்களைப் பணியிலமர்த்தும்போது ஓரளவுக்கு பாதுகாப்பான பகுதியில் மட்டுமே பணிபுரிய உயரதிகாரிகள் அனுப்புவார்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் ஒரு சாக்கு மட்டுமே. தினசரி பல புதிய மனிதர்களை, இடங்களைப் பார்க்கத் துணிந்த மாணவிகளுக்குப் பெற்றோரை சம்மதிக்க வைப்பது அவ்வளவு கடினமான காரியமன்று.

தனியார் நிறுவன சந்தை சார்ந்த வேலை என்றால் எக்கச்சக்கமாக வேலை வாங்குவார்கள் என்ற கருத்தாக்கம் உண்டு. அது பல்கலைக்கழகத்துக்குள் சும்மா இருந்து பழகியவர்களால் சொல்லப்படுவது. உங்களுக்குத் தெரிந்த இன்புட் இண்டஸ்ட்ரி ஆட்கள் எத்தனை பேர் அப்படி சொல்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும். இதே ஆட்கள் வெளிநாடு சென்றதும் எப்படி வேலை செய்கின்றனர் என்று பார்க்க வேண்டுமே.

சந்தையில் வேலை செய்யும்போது பெண் என்ற முறையில் சீண்டல்கள் வருமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வரும். வங்கி அதிகாரியாக, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணிபுரிவது என்பதில் பெண்களுக்கு அந்த பணியால் கிடைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பெண், வங்கி அதிகாரியாகக் ஒரு கிளையன்ட்டைப் பார்க்க செல்வதும், உரக்கம்பெனி அதிகாரியாக கிளையன்ட்டைப் பார்க்கச்செல்வதும் நிச்சயமாக ஒன்றல்ல.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். சிலர் வாட்சப்பில் குட்மார்னிங் அனுப்புவார்கள், இரவு சரக்கடித்துவிட்டு மிஸ்டுகால் கொடுப்பார்கள், தேவையில்லாமல் போன் போட்டு வழிவார்கள், செட்டாகுமா என்று நூல் விட்டுப் பார்ப்பார்கள். இதையெல்லாம் மிகச் சாதாரணமாக சிரித்துக்கொண்டே (மனதிற்குள் “போடா மயிறு, உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்” என்ற நினைப்புடன்) இடதுகையால் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லத் தெரிந்த மாணவிகளுக்கு Core sector company-களில் வானமே எல்லை.

அண்மையில் பிரபல பன்னாட்டு நிறுவன கருத்தரங்கில் பார்த்தபோது, கலந்துகொண்ட 170 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே அக்ரி படித்த பெண்கள்; அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். இன்று அத்தனை நிறுவனங்களிலும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பெண்கள் பணியில் உள்ளனர். Gender equality குறித்து அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மாணவிகள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

இன்புட் கம்பெனிகளில் எல்லா வேலைகளையும் நாமேதான் செய்யவேண்டும் என்றதுமே பல பெண் விண்ணப்பதாரர்கள் பயந்து விடுகின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை முறையே அதுதான் என்றாலும் நமக்கு இங்கு கீழே குற்றேவல் புரிய ஆட்கள் இல்லாவிட்டால் கை நடுங்குகிறது.

ஆமாம், நீங்களேதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அந்த வாரத்திற்கான பயணத் திட்டம், அன்றைக்கு எங்கெங்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறோம், அதன் நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட நபர்கள் நாம் செல்லும்போது இருப்பார்களா என எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமே கார் அல்லது பைக்கை தினசரி 100 – 200 கிமீ ஓட்ட வேண்டும், பஞ்சரானால் கூட நாமேதான் கழட்டி ஸ்டெப்னி மாட்ட வேண்டும். ஊர் ஊராகச் சென்று சாப்பிடுவது, தேநீர் பருகுவது, தபால் அனுப்புவது, மின்னஞ்சலுக்குப் பதில் சொல்வது, வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுவது, இடையில் ஆடியோ கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் என அனைத்தையும் on the move-இல் நீங்களேதான் செய்ய வேண்டும். கார் சேற்றில் சிக்கலாம், விபத்துக்குள்ளாகலாம், டிராபிக்கில் சிக்கி நமது மொத்தத் திட்டமும் பாழாகலாம் – எல்லாவற்றையும் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைநேரத்தில் 80% தனியாகவே வேலை செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Travelling எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கதை விடுவது வேறு. அழகாக வால்வோ பேருந்து, இரயில், விமான டிக்கெட் அல்லது டேக்சி எடுத்துக்கொண்டு சென்று நல்ல ரிசார்ட்டில் வெல்கம் டிரின்ங் குடித்துவிட்டு செல்பி எடுத்து ஹேஷ்டேக் போட்டு travelling is my hobby என்று சொல்வதும், தினசரி ஊர் ஊராகப் பணி நிமித்தமாக பயணிப்பதும் முற்றிலும் வேறு.

வரச்சொல்லிவிட்டு போன் எடுக்க மாட்டார்கள், நாமும் முகவரி, வழி, வண்டித்தடம் என எதையும் கேட்காமல் 150 கிலோமீட்டர் போன பிறகு கூப்பிட்டால் switched off என்று வரும். அவர்களது இடத்தைத் தேடுகையில் டீசல் நிரப்பாமல் நீண்டதூரம் போயிருப்போம, பங்க்கைக் கண்டுபிடித்து நுழைந்ததும் டீசல் தீர்ந்துவிட்டது என்ற அதிர்ச்சி கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்திருக்கும். ஏடிஎம்-இல் பணம் எடுக்க காலையில் கிளம்பும்போது மறந்திருப்பிருப்பீர்கள். உங்கள் கணவரோ, பாய்ஃபிரண்டோ அந்த நேரத்தில் கூப்பிட்டுக் கொஞ்சவோ அல்லது கத்தவோ செய்யலாம். இவை எல்லாவற்றையும் நீங்களே சமாளிக்க வேண்டும்.

இருக்கறது ஒரு வாழ்க்கை. அதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றலாம். உண்மையில் இது எதுவுமே கடினமானதல்ல. உள்ளே நுழைந்து பழகிவிட்டால் தினசரி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். வேலையில், வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்புத் தட்டாது. சும்மா போரடிக்கிறது என்ற எண்ணமே வராது. நேற்றுப் பார்த்த அதே அலுவலகம், அதே ஆட்கள், அதே வேலை என்ற சூழ்நிலை நீங்களே எதிர்பார்த்தாலும் வராது. ஐந்து, பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த சமுதாயம் குறித்த உங்களது புரிதல் முற்றிலும் மாறியிருக்கும்.

கல்யாணம், ஹனிமூன், குழந்தைகள், கணவன், மாமியார், அலுவலகப் பணிச்சுமை, பணச்சிக்கல்கள், உடல் உபாதைகள் என்பதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் கூட வந்துகொண்டேதான் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஒருவேளை அந்த வேலைக்குப் போயிருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாமோ என்பது மிகப்பெரிய மாயை. அடுத்தவர்களது கணவன் அழகாகத் தெரிவது போலத்தான் இதுவும்.

வங்கிப் பணிகள், அரசு வேளாண்மைத்துறை பணி, குரூப் 1, சிவில் சர்வீசஸ், உதவிப் பேராசிரியர் பணி என வழக்கமான வட்டத்தைத் தாண்டி வெளியேறி புதிய சூழலுக்குள் நுழைய வேண்டும், ஒப்பந்த ஆராய்ச்சியாளராகப் பல்கலைக்கழகத்துக்குள் இளமைக்காலத்தை வீணடிக்கக்கூடாது, விரைவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சீனியாரிட்டிக்காக நாட்களை ஓட்டக்கூடாது, எந்த சூழ்நிலை வந்தாலும ஒரு கை பார்க்கவேண்டும், I’m not someone என்ற மனநிலை கொண்ட மாணவிகளுக்கு Input industries எப்போதும் திறந்தே இருக்கிறது.

அரசாங்க வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் மட்டுமே அக்ரி இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்வதாக நீங்கள் நம்பினால் அஃது உங்களது அறியாமை மட்டுமே. ஆண்டுக்கு ஐம்பது இலட்சம், ஒரு கோடி சம்பளம் வாங்குபவர்கள் அங்கே ஏராளம். நாற்பது வயதில் ஆண்டுக்கு 75 இலட்சம் சம்பளம் வாங்கும் பல பெண்கள் அக்ரி இண்டஸ்ட்ரியில் இருக்கின்றனர். சொந்த தொழிலில் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வெளியேறியிருப்பார்கள். மார்க்கெட் அனுபவமே அவர்களது முதலீட்டுக்கான பாதுகாப்பு.

வெறும் Designation-இல் ஒன்றுமே இல்லை நிறைய சம்பாதிக்க வேண்டும், பல இடங்களை மக்களைப் பார்க்க வேண்டும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், 35 வயதிற்குள் பிஎம்டபிள்யூ வாங்கி பார்த்திடனும், ஓய்வுபெறும்போது நூறு சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை மகன்/மகளுக்கு விட்டுச்செல்வதை விட நூறு கோடி மதிப்புள்ள சொத்தையோ/கம்பெனியையோ விட்டுச்செல்ல வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவிகள் வேளாண் தொழில்துறையில் நுழைவது மிகவும் நல்லது. கேரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. த்ரில் இல்லாத ஒரு சோகையான, சோம்பேறி வாழ்க்கை வாழவா பிறந்திருக்கிறோம்?

அக்ரோ இண்டஸ்ட்ரி சார்ந்த வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்யும் மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்:

1) படிப்பு முடிந்தததும் முற்றிலுமாக கல்லூரி/பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அடிக்கடி அங்கு செல்வதை, விடுதி அறைகளில் தங்குவதை, குறிப்பாக பிஎச்டி படிக்கும் தோழிகளின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். கல்யாணம் ஆகும்வரை கற்போம், கல்யாணம் ஆனபிறகு கற்பிப்போம் என்ற கொள்கையுடைய தோழிகளுடன் கண்டிப்பாக சேரவே கூடாது.

2) பேராசிரியர்கள் பாடம் சொல்லித்தர மட்டுமே தகுதியானவர்கள். வாழ்க்கைப் பாடத்தை வெளியில்தான் கற்க முடியும். எனவே படிப்பு முடிந்தபிறகு – டெக்னிகல் விசயங்களைத் தவிர – அடிக்கடி பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும். (ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்று அக்ரி பிசினஸ் பேராசிரியரிடம் சென்று கேட்பதற்குப் பதிலாக சும்மாவே இருந்துவிடலாம். தெரிந்தால் அவர் பண்ணியிருக்க மாட்டாரா?)

3) ஓர் அலைபேசி எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஏழு நம்பர் வைத்திருந்தாலும் நீங்கள்தான் எடுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சரி.

4) தகுதியான நபர்களை – ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் – முடிந்தவரை நேரில் சென்று சந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் சொல்லும் சில தகவல்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கலாம். நமக்குத் தேவையானதை நாம்தானே தேட வேண்டும். வீட்டில் வந்து யார் சொல்லிவிட்டுப் போவார்கள்?

5) ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும். படிப்பு மட்டுமே அல்ல – புகைப்படக்கலை, போன்சாய், மலையேற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) வாசிப்பு மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் தவிர பொதுவான புத்தகங்களை மாதம் ஒன்றாவது படித்திட வேண்டும்.

7) பைக், கார் ஓட்டுவது இன்று அத்தியாவசியம். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

8) புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள், வெற்றிகரமாக நடத்துபவர்கள் மட்டுமல்லாது ஏதோ காரணத்தால் தொழிலை மூடியவர்களையும் தேடித்தேடி சந்தித்து உரையாட வேண்டும். அந்த உரையாடல்களால் கிடைக்கும் ஞானத்தை எந்த பவர்பாய்ன்ட்டாலும் உங்களுக்கு வழங்கிட முடியாது.

9) தேவையில்லாத வாட்சப் குழுக்கள்,கெட்-டுகெதர், மீட்-அப், ஹேங்ஓவர்-களில் இருந்து வெளியேறிட வேண்டும். சில வருடங்கள் ஏற்கனவே உங்களுடன் பழகிய நண்பர்களுடன் குறைவான தொடர்பில் இருப்பதில் தவறில்லை. அவர்களுடன் touch-இல் இல்லை என்பதால் நீங்கள் யாருடனும் பழகாமல் aloof ஆகச் சுற்றுகிறீர்கள் என்றாகிவிடாது.

10) தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அந்த லைனில் உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்று உடனே ஆரம்பித்திட வேண்டும். ஒருவேளை அது தோல்வியடைந்தாலும் கவலைப்படக்கூடாது. Project பெயில் ஆகிவிட்டது என்று தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டும். தேங்கக்கூடாது, We have to move on.

11) வேலை தேடுவதாக அல்லது மாறுவதாக இருந்தால் அந்தந்த துறைகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு அதற்கான முறையான வழிமுறைகளில் செய்ய வேண்டும். வாட்சப்பில் சி.வி. அனுப்புவது போன்றவற்றைத் தவிரக்க வேண்டும்.

12) இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலைக்கு எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று உங்கள் தோழிகளிடமும், சீனியர்களிடமும், உதவிப் பேராசிரியர்களிடமும் புலம்பும் நேரத்தில் நாலு கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அதில் இருப்பவர்களின் சிபாரிசைக் கோரலாம். உங்கள் ஹாஸ்டலுக்கு, கேன்டீனுக்கு வந்து உங்களைப் பெயர்சொல்லி அழைத்து யாராவது வேலை கொடுப்பார்களா?

13) மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உயர்ந்த பதவிக்கோ, மிகப்பெரிய கம்பெனிக்கோ போக முடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் தேவையே இல்லை. நாளை என்ன நமக்காக இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களைத் தீட்டி அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

14) Relationship இல்லாமல் யாரும் இல்லை. காதல் தோல்வி, கல்யாண ஏக்கம் போன்றவற்றை மாலை ஆறு மணிக்குப் பிறகு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக உருப்படும் வழியைப் பார்க்க வேண்டும்.

15) ஒவ்வொரு சூழ்நிலையையும் handle செய்ய அசாத்தியமான துணிச்சல் வேண்டும். “இந்த ஜாப் உனக்கு செட் ஆகாதும்மா” என்று சொல்லப்பட்டபோது “வேலை என்னன்னு மட்டும் சொல்லுங்க, என்னால செய்ய முடியலன்னா நானே போயிடறேன்” என்று கேட்டு, அதை சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்த பல பெண்கள் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக பணிபுரிகின்றனர். பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் சொல்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். துணிந்தவர்களுக்கு அதை செய்துகாட்ட வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே.

ஒரு வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள், கொஞ்சூண்டு சேமிப்பு, ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு என்று வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுவோமா? ரிட்டயர் ஆனபிறகு மெல்ல கதவைப் பிடித்து, தலையணையை சாய்த்து வைத்து உட்கார்ந்து, டிரைவரை ஓட்டச்சொல்லிவிட்டு பின்சீட்டில் சாமி பாட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பதற்கு பென்ஸ் இருந்தால் என்ன ஃபியட் பத்மினி இருந்தால் என்ன?

படித்து முடித்து இருபத்தைந்து வயதில் கேரியரை ஆரம்பித்து, நாற்பத்தைந்து வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று சும்மா காபி குடித்துவிட்டு திரும்பி வருமளவுக்குப் பொருளாதார சுதந்திரமும், அன்றாட வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்றிடுமளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டும். எதற்காகவும் தேங்கிடவே கூடாது. Now, get up and move. Keep going…

விவசாயப் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர்கள் ஏன் சொல்லிக்கொள்ளும்படியாக தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெறுவதில்லை?

விவசாயப் பல்கலையில் பல பட்டப்படிப்புகள் இருந்தாலும் புழங்குவதற்கு எளிதாக அக்ரி என்று மட்டும் இப்போதைக்கு அழைத்துக் கொள்வோம். அக்ரி ஒருவர் தொழில் முனைவோர் ஆவதற்கு சில காரணங்களே இருந்தாலும், ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

1) கல்லூரியில் சேரும்போதே அக்ரி படித்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம், பாங்கி அதிகாரி ஆகலாம், அக்ரி டிபார்ட்மெண்ட்டில் அதிகாரி ஆகலாம், குரூப் 1 போகலாம், பெரிய புள்ளி ஆகலாம், நல்ல முரட்டு இடத்தில் கல்யாணம் பண்ணலாம், அப்புறம் ஜாலியா இருக்கலாம் என்று பெற்றோர்களும், உற்றோர்களும் ஒரு மாணவனை மூளைச்சலவை செய்தே சேர்க்கின்றனர். நன்றாக சம்பாதிக்கத்தானே இதெல்லாம் என்று கடைசி வரைக்கும் பணத்தின் முக்கியத்துவத்தை யாரும் உடைத்துப் பேசுவதில்லை.

2) சிலபஸ் முழுவதும் பல்வேறு அரசாங்கத் துறைகளில் வேலை செய்ய பணியாளர்களை உருவாக்கும் வண்ணமே அமைந்துள்ளது. தொழில்முனைவோர் குறித்த தாள்களெல்லாம் ஒப்புக்குசப்பான் மாதிரியான ஜல்லியடிக்கும் சமாச்சாரம். மற்றபடி பல்கலைக்கழக உணவகம், நகலகம் என எங்கேயும் மாணவர் கிளப்கள் பகுதி நேரமாக எடுத்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை.

3) பேராசிரியர்களும், சீனியர்களும் ஒரு மாணவன் UG சேர்ந்ததும் எப்படி PG சேருவது, PhD சேருவது, எப்படி உதவித்தொகை பெறுவது, நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது குறித்து வண்டி வண்டியாக அறிவுரைகள் வழங்குகின்றனர். மேலும் எப்படி சொந்த சாதியில் ஃபிகர் தேற்றுவது, பிஎச்டி முடித்து அங்கேயே RA-வாகி இருவரும் அங்கேயே உதவிப் பேராசிரியராகி, ஒன்றாக ஆராய்ச்சி பண்டு வாங்கி செட்டில் ஆவது என்பதற்குக் கிடைக்கும் வாய்மொழி ஆலோசனைகளை பதிவு செய்தால் ஒவ்வொன்றும் நானூறு பக்கத்துக்கு குறையாமல் மூன்று தொகுதிகள் புத்தகம் வெளியிடலாம்.

4) உயர்கல்வி பயில்வேன், சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதுவேன், ARS, குரூப் 1, இதர பிற யூபிஎஸ்சி தேர்வுகளில் எதுவும் முடியாதபோது வங்கி அதிகாரி அல்லது அரசாங்க வேளாண்துறை அதிகாரி ஆவதற்கு முயற்சி செய்வேன், வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பேன்/அங்கேயே ஆராய்ச்சியாளராகத் தொடர்வேன், ஆனால் இங்கே உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தால் வந்துவிடுவேன். இஃது எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் தற்காலிக உதவியாளர் வேலைகள் ஏதாவது செய்வேன். இதில் எதுவுமே முடியாதபோது சொந்தமாகத் தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பேன் என்ற மனநிலையிலேயே 99% மாணாக்கர்கள் அக்ரி படிக்கின்றனர். அதாவது வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலை செய்வேன். கிடைக்காவிட்டால் வேலை தேடுவேன். சுய தொழில் பற்றிய எண்ணமே மனதில் எழாத அளவுக்கு பார்த்துக் கொள்வது மட்டுமே லட்சியம்.

5) வெளியில் சென்றால் வேலை எதுவும் கிடைக்காது என்று பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றே பார்க்காத ஒரு கூட்டம் மாணவர்களை உயர்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவது. UG முடித்து வெளியேறுபவர்கள் பாக்கியவான்கள். வாழ்க்கையில் நீண்ட அனுபவத்தையும், போதுமான காலத்தையும் கையில் வைத்துக்கொண்டு கரையேறுகிறார்கள். PG படித்துவிட்டு வெளியேறலாம் என்று நினைப்பவர்களைப் பயமுறுத்தி, ‘பிஎச்டி பண்ணலன்னா ஒரு வேலையும் கிடைக்காது, உருப்படாம போயிடுவ’ என்று பயமுறுத்த ஒரு பெரும் கூட்டம் உண்டு.

6) ஒரு ஜெராக்ஸ் கடை நடத்துவது எப்படி என்று கூட தெரியாத பேராசிரியர்கள் என்ட்ரபிரீனர்ஷிப், மார்க்கெட் இண்டெலிஜென்ஸ், டெக்னாலஜி இன்குபேட்டர், பிசினஸ் வென்ட்ச்சர்ஸ் என்று எல்லா இடத்திலும் உட்கார்ந்துகொண்டு தாலி அறுப்பது. இவர்களிடம் பயின்றுவிட்டு வரும் மாணாக்கர்கள் பாங்கி கரண்ட் அக்கவுன்ட், ஜிஎஸ்டி நம்பர், ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்பதெல்லாம் எதற்கு என்றுகூட தெரியாமல் வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும் என்று கேட்கிறார்கள்.

7) தனியார் இடுபொருள் நிறுவனங்களில் தயக்கமின்றி நுழையும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் முரட்டு சம்பளங்களை அடைந்துவிடுகிறார்கள். தங்களுடைய மனநிலையில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

8) காதல் – இஃது உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம். விவசாயக் கல்லூரிகளில் UG படிக்கும்போது பருவ தாகத்துக்குத் தீனி போட்டு தேக சாந்தி தேடிக்கொண்டவர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில்முனைவோர் ஆனதில்லை என்பது மரபு. காதல் மன்னன், காசனோவா ஆக இருந்து தொழிலதிபரான (ஆண்/பெண்) விதிவிலக்குகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.நமக்கு முன்னும் பின்னும் விவரம் தெரிந்த பல ஆண்டு அக்ரி மக்களையும், தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களிடமும் கிடைத்த நீண்ட உரையாடல்களில் இருந்து கணிக்கப்பட்டது. (உழவியல் துறையின் மரியாதைக்குரிய மூத்த பேராசிரியர் ஒருவர் எங்களுக்கு UG முதல்நாள், முதல் வகுப்பு எடுத்தபோது This is not a place to select your life partner என்று சொல்லி, வாழ்த்தி ஆரம்பித்தது இன்றும் நினைவில் இருக்கிறது).

படித்தவுடன் சிலர் பெற்றோர்களின் குடும்பத் தொழில்களைப் பார்க்க சென்றுவிடுகின்றனர். அவர்கள் அக்ரி படித்ததால் மட்டுமே தொழில் முனைவோர் ஆவதில்லை என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பலவிதமான தனியார் நிறுவனங்களில் – இடுபொருள் விற்பனை மட்டுமல்லாது – நுழைபவர்களே பெரும்பாலும் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற திசையில் நகர்கின்றனர். அவர்களது தைரியம், தன்னம்பிக்கை, சந்தையில் மக்களை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவம், பலரும் துணிச்சலாக இறங்கி இலாபமீட்டுவதைப் பார்ப்பதால் கிடைக்கும் உத்வேகம் தாண்டி, அவர்களிடம் இருக்கும் ஒருவிதமான வேலை பாதுகாப்பின்மையும் சுயதொழில் ஆரம்பிக்கக் காரணமாகிறது.

வேளாண் இடுபொருட்கள் விற்பனையில் இருக்கும் கணிசமான அக்ரி மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியில் வந்து தொழில் ஆரம்பித்தவர்களே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் மேல் மட்டத்தில் உள்ளவர்களோடு ஏற்படும் உரசல்களாலோ அல்லது கம்பெனியில் ஏற்படும் நிர்வாக மாறுதல்களின்போது தெருவில் விட்டுச் செல்லப்படும்போதோ கம்பெனிக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் உழைத்தது போதும் என்று ஒரு வைராக்கியத்தில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் பணத்தை இழப்பதில்லை; இவர்களிடம் வியாபாரம் செய்பவர்களும் பணத்தை இழப்பதில்லை. பணியிடங்களில் கையாடல் செய்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் தொழில் முனைவோர் ஆனதாகப் பெரிதாக ஏதும் காணோம்.

எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பதற்கு வயது ஒரு விசயமில்லை. ஆனால் வியாபாரம், பணம் குறித்த attitude மிகவும் முக்கியமானது. ரிஸ்க் எடுப்பதற்கான ஒரு நபரின் மொத்த தைரியமும், திட்டமிட்ட தெளிவும் home loan எடுக்கும்போது மொத்தமாக முடிவுக்கு வருகிறது. அடிநிலமும் இல்லாமல், கட்டடமும் இல்லாமல் நடு வானத்தில் நான்கு சுவர்களை சதுர அடி நாலாயிரம் ரூபாய் என தனது Form – 16-ஐ நம்பி வங்கியில் வட்டிக்கு வாங்கி அபார்ட்மென்ட் வாங்கும்போது ஒரு நபருடைய தொழில் முனைவோர் quotient முழுவதும் செத்து விடுகிறது. பின்னர் அவர்களாக உத்வேகம் பெற்று எந்தத் தொழில்களையும் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது அதீத காரணங்களால் வேலை பறிபோனால் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.

அரசாங்க முன்னெடுப்புகளில் நபார்டு வங்கியின் Agri clinics & Agri Business Cenrltres என்ற திட்டம் கணிசமான அக்ரி மக்களைத் தொழில் ஆரம்பிக்க உதவி வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஐந்து இலட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான கடனில் 35% பொதுப் பிரிவினருக்கும், 44% பெண்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் மானியம் உண்டு. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நல்லபடியாக நடத்தப்படும் தொழில்களுக்குத் தரப்படும் மானியம் ஓர் அருமையான ஊக்கத் திட்டம்.

மற்றபடி துணைவேந்தர், பதிவாளர், கமிசனர், செக்ரட்டரி, நபார்டு உயரதிகாரி போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தொழில் ஆரம்பித்து வியாபாரம் செய்தாலும் அவர்களைத் தொழில் முனைவோர்களாக யாரும் கருதுவதில்லை. அது வியாபாரமே கிடையாது. அவர்களது வாரிசுகள் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆரம்பித்து நடத்துவதும் ஒரு வகையான கொடுக்கல்வாங்கல் கணக்கின் அடிப்படையில்தான்.

அறுபது, எழுபதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கும் அக்ரி மக்கள் ஏழெட்டு வருடங்களில் ஒருவகையான மனச்சோம்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கு சிறு சிறு வேலைகள் கூட கீழ்நிலைப் பணியாளர்களால் செய்து தரப்பட்டு விடுவதால் எதையாவது தாமாக முன்வந்து செய்யும் ஆர்வத்தை இழந்து இளம் தொப்பையுடன் சோர்வாகி விடுகின்றனர். யாராவது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, கேள்விப்படும்போது ஒருவித சலிப்புடனேயே பேசுவதைக் காண முடிகிறது. வங்கியில் இருக்கும் அக்ரி மக்களுக்கும் இது பொருந்தும். அபூர்வமாக அரசாங்க வேளாண்மைத்துறையில் இருக்கும் சிலர் ஓய்வு நேரங்களில் வியாபாரம் செய்து பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று தொழிலதிபர் ஆனவர்கள் குறித்து எந்தவொரு தரவுகளும் எங்கேயும் இருப்பதாகக் காணோம். IIM-யில் பயின்று தொழிலதிபர் ஆனவர்களின் வெற்றிக்கதைகளை ராஷ்மி பன்சால் போன்றவர்கள் புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றனர். அந்த புத்தகமும் நல்ல வியாபாரம் ஆகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அக்ரி மக்களின் எண்ணிக்கை குறைவு, வேலைவாய்ப்பும் அதிகமாக இருந்தது. இன்று பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் வெளிவருவதால் கணிசமான மக்கள் தொழிலதிபர் ஆவார்கள் என்று நம்புவோம்.

அக்ரி படித்து ஏன் ஒரு பயலும் வியாபாரம் பண்ண வர மாட்டேங்கிறான் என்று என்னதான் நமக்கு நாமே கழுவி ஊற்றிக்கொண்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆறுதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம். எத்தனை வெட்னரி டாக்டருங்க சொந்தமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருய்யா என்று சொல்லி சமாதானம் செய்து கொள்வோமாக!