சிறு, குறு விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தப்படுவது ஏன்?

கார்ப்பரேட் கம்பெனிகள் நிலங்களை வாங்கி, விவசாயிகளை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்ற ஊகம் வெகு காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் அப்படி நடக்குமா நடக்காதா என்று சொல்வதற்கே இன்னும் இருபது ஆண்டுகளாவது ஆகும்.

சிறு விவசாயிகளுக்கு இன்று உருவாகி வரும் பெரிய அச்சுறுத்தல் என்பது நகரிலிருந்து வந்து நிலங்களை வாங்கும் புதுப் பணக்காரர்கள்தான். நிலம் வாங்கிய கையோடு கம்பி வேலி அமைத்து, புதிதாக அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைத்து/கிணறு வெட்டி ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்வது அல்லது தென்னை மரங்களை நடுவது என தீவிரம் காட்டும்போது முதலில் அடி வாங்குவது அங்குள்ள நிலத்தடி நீர்மட்டம்.

தண்ணீர் கீழே செல்லும் வேகத்துக்கு அந்தப் பகுதியில் இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்திவரும் விவசாயிகளால் தொடர்ந்து போர்வெல் போட/கிணறு வெட்ட முதலீடு செய்ய முடியாது.

மின்சார வாரியம் தட்கல் மின் இணைப்பு மூலம் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக இரண்டரை இலட்சம், இரண்டேமுக்கால் இலட்சம், மூன்று இலட்சம் கட்டினால் முறையே ஐந்து, ஏழரை, பத்து குதிரைத்திறனுள்ள மின் இணைப்பை ஒரு மாதத்தில் வழங்குகிறது. பணம் கட்டினால் உடனடியாக இலவச மின்சாரம். அஃதே இலவச இணைப்புக்கு பதினைந்து வருடங்களுக்கு மேலாக காத்திருப்பவர்கள் காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதில் மிக அதிகமாக நசுங்கி வேறு வழியே இல்லாமல் முதலில் வெளியேறுவது கூட்டுப் பண்ணைய விவசாயிகள். எழுபதுகளில் அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பங்காளி வகையறா என கூட்டாக நிலம் வாங்கி, கிணறு வெட்டி விவசாயம் செய்தவர்களின் வாரிசுகள், பேரப்பிள்ளைகள் தங்களது மூதாதையர்களைப் போல சகிப்புத்தன்மை இல்லாததாலும், கல்வியாலும், புதிய தொழில்களுக்குச் சென்றதாலும் கூட்டுக் கிணறுகளில் தங்களது முறைக்காகக் காத்திருக்கத் தயாரில்லை. இத்தகைய கிணறுகளை ஆழப்படுத்துவதோ, புதிய போர்வெல் போடுவதோ இன்று நடக்கக்கூடியதாகத் தெரியவில்லை.

கூட்டுப் பண்ணைகளின் அடுத்த பெரிய சிக்கல் வாகனங்கள் சென்றுவரத் தேவையான பெரிய பாதை (வண்டித் தடம்). அந்தக்காலத்தில் தலைச்சுமையாக எடுத்துச் சென்றதாலும், டிராக்டர்கள் இல்லாததாலும் யாரும் பெரிய பாதைகளைக் கண்டுகொள்ளவில்லை. பங்காளிகளுக்குப் பெரிய வில்லங்கத்தை விட்டுச் செல்வதற்காக வலியச்சென்று வெளியாட்களுக்கு விற்கும் கூட்டாளிகள் உண்டு. அதனால் மற்றவர்களும் தடப் பிரச்சினை காரணமாக வேறு வழியில்லாமல் விற்கின்றனர். இத்தகைய தோட்டங்கள் விரைவாக நகரிலிருந்து முதலீடு செய்பவர்களிடம் கைமாறிக் கொண்டிருக்கின்றன.

விவசாயம் அழிந்து வருகின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. பத்து குடும்பங்கள் செய்த விவசாயத்தை ஒரு குடும்பம் செய்ய ஆரம்பிக்கின்றது. சிறு குறு விவசாயிகள் கிடைக்கப்போகும் மிகச்சிறிய இலாபத்துக்காக தொடர்ந்து முதலீடு செய்வதைக் காட்டிலும் வேறு தொழில்களுக்குச் செல்வதே உகந்தது என்பதை உணரும்போது அவர்களாகவே வெளியேறி விடுகின்றனர். ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் உள்ளவர்களின் வாரிசுகள் இன்று நேரடியாக விவசாயத்தில் இல்லாததே இதற்கு சான்று. பெருமைக்கு எருமை மேய்க்கும் வறட்டுக்கிராக்கி ஆசாமிகளை இந்த இடத்தில் விவாதப் பொருளாக்க வேண்டாம்.

இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில் விவசாயம் என்பதால் அதில் இருக்கும் மக்களுக்கு வேறு நல்ல மாற்று வேலை கிடைக்கும்வரை அதில் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அரசாங்கம் மானியத்தை அள்ளி வீசி மிகப்பெரிய மக்கள்தொகையை under productive ஆக வைத்துக்கொண்டிருக்கிறது.

வாழ்வியல் முறை, வாழ்வாங்கு முறை, டிராக்டர் சாணி போடுமா என எகத்தாளம் பேசி, ஊரான் வீட்டுப் பண்ணைகளுக்கு அட்வைஸ் மட்டுமே வழங்கிவிட்டு, தான் ஒரு ஏக்கர் கூட பண்ணையம் பண்ணி பார்த்திராதவர் நம்மாழ்வார் ஐயா. அவரது வழியொற்றி வரும் பக்தாக்களுக்கு ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்துக்கு பைப்லைன் அமைக்க, ஒரு புதிய மின்கம்பம் போட ஒரு சிறு விவசாயிக்கு மற்ற சக சிறு விவசாயிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தோ, மற்ற பிரச்சினைகள் குறித்தோ எந்த புரிதலும் இருக்காது. இயற்கை விவசாயம் பண்ணுனா உலகத்துல இருக்கற எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும் என்பார்கள்.

நகரத்தில் பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டு சம்பாதிப்பவர்கள் கணிசமான பணத்தை கிராமப்புறங்களில் உள்ள நிலங்களில் முதலீடு செய்து அதன்மூலம் வருமானம் வராவிட்டாலும், வந்த மாதிரி கணக்கு காட்டி கணிசமான பணத்தை வெள்ளையாக்கவோ, வரி ஏய்க்கவோ பயன்படுத்துகின்றனர். அதாவது இலாபத்துடன் இலாபமாக சேரும் அந்த தொகையுடன் சிறு குறு விவசாயிகள் போட்டியிட்டு முதலீடு செய்ய முடியாது.

அதிகரித்துவரும் செலவினங்களுக்கு இணையாக முதலீடு செய்து குறைந்த இலாபத்தையோ, நட்டத்தையோ சந்திப்பதைக் காட்டிலும் வெளியேறுவது என்பது இயல்பாக நடக்கவே செய்யும். மற்ற தொழில்களுக்கும் அதுதானே. பெருமைக்காக எவ்வளவு காலம் பல குடும்பங்களை under productive ஆக வைத்திருப்பது? வாழ்வியல் முறை, தகிட ததமி தகிட என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்லும் வேலை. நாலு காசு சம்பாதிக்க துப்பில்லாத பயல் என்று ஒருநாள் சொந்தக் குடும்பமே தூற்றும் அல்லவா?