“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்”

“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்” என்று அடிக்கடி உங்களுக்கு தோன்றுகிறதா? அப்படியெனில் உங்களுக்காகத்தான் இந்த அப்டேட்.

காடை, கவுதாரி, கோழி, ஈமு கோழி, ஆடு என இறைச்சிக்காக வளர்க்கபடுபவைகளில் வெண்பன்றி வளர்ப்பு மிக லாபகரமானது. 150 – 200 பன்றிகளையுடைய பண்ணையை வைத்திருந்தால் நிகர லாபமாக தினசரி 5000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கறி பண்ணைவிலை ரூ 220. ஒரு பன்றியின் சராசரி எடை 400 கிலோ. இதில் தினசரி ஏற்ற இறக்கங்கள் கிடையாது. எல்லாமே ஸ்ரீ குமரன் தங்க மாளிகைபோல Fixed Rate. கடந்த ஐந்து ஆண்டுகளாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

வெண்பன்றியில் ‘சௌபாக்கியவதி’ (Yorkshire) என்று ஒரு ரகம் உண்டு, அது ஒருமுறை 8 – 12 குட்டிகள் ஈனும். உங்களிடம் 10 சௌபாக்கியவதிகள் இருந்தால் ஒரே ஆண்டில் பண்ணையின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதற்கான கொட்டகை, தண்ணீர் வசதி, 2 ஆட்கள் மற்றும் இதர இத்யாதிகள் இருந்தால் போதும். காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பும், அங்கிருந்து வந்தபின் தினமும் ஒரு மணிநேரம் செலவிட்டால்கூட போதுமானது (இடைப்பட்ட நேரங்களில் நீங்கள் உங்களை பெரிய அதிகாரிபோல் உணருகிறீர்களா இல்லையா என்பது உங்கள் பணிச்சூழலை பொருத்தது!).

‘நா யாரு, என்னோட பேக்ரவுண்ட், கவுரவம் என்ன, நான் போய் பன்னி வளத்தறதா’ என்று நீங்கள் எண்ணினால் கொஞ்சம் கஷ்டம். “இப்பமட்டும் என்ன வாழுதாக்கும், அதுக்கு அந்த பன்னிகளோடையே நாள்முழுக்க இருந்தர்லாம்” என்று உங்களுக்கு தோன்றினால் டபுள் அட்வான்டேஜ்!!

பண்ணை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள் என்பது உறுதி. ‘தம்பி பன்னிதான மேய்க்குது’ என்று சொன்னவர்களெல்லாம் ‘எனக்கு அப்பவே தெரியும், தம்பி பெரிய ஆளா வருவாப்லனு’ என்று உங்கள் பின்னால் வருவார்கள். நீங்களும் ஒருசில ஜென் கதைகளை சுட்டு, மசாலா போட்டு ‘ஒரு முனிவரும் அவரது சீடர்களும் ஆற்றை கடக்க முயன்றபோது ஓர் அழகான இளம்பெண் lift கேட்டாள். குரு அவளை தூக்க மறுத்தபோது ஒரு சீடன் அவளை தூக்கி, ஆற்றை கடந்து இறக்கிவிட்டான். etc., etc., பின்னர் அவன் குருவிடம் சொன்னான் ‘குருவே நீங்கள்தான் அவளை இன்னும் மனதில் வைத்திருக்கிறீர்கள், நான் எப்போதே அவளை நம் ஆசிரமத்தில் விட்டுவிட்டேன்’ என்று சொல்லி பெரிய ஞானியாக காட்டிக்கொள்ளலாம். தம்பிக்கு எலக்கிய அறிவும், ஒலக அனுபவமும் ஜாஸ்தி என்று அதற்கும் நாலுபேர் ஜால்ரா போடுவார்கள்.

ஒக்காந்து சீட்டை தேச்சிட்டு இருக்காம, ஒரே பாட்டுல பெரிய்ய ஆளா வரணும்னு நெனச்சிட்டே மோட்டுவளையை பார்த்து யோசித்து கொண்டிருக்கிறீர்களா? எப்படி ஆரம்பிக்கரதுன்னே தெரியலையா? சாரி ஜென்டில்மேன், வேறு குறுக்குவழி எதுவும் கிடையாது. நீங்கதான் இறங்கி செய்யணும். ஆல் தி பெஸ்ட்