முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்

புத்தக விமர்சனம் என்று எளிதாக ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு வரலாற்று ஆவணம் மாதிரியான நூலாக இருப்பதால் முகிலினி நாவலை வெறும் புத்தக விமர்சனமாக சொல்லி கடந்துபோக முடியாது. நாவலாசிரியர் முருகவேள் வழக்குரைஞர் என்பதால் எல்லா தரப்பு நியாயங்களையும் பதிவு செய்திருக்கிறார். மிகைப்படுத்தப்பட்ட பாத்திரம் என்று எதுவுமே இந்த நாவலில் கிடையாது.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் பவானிசாகர் அணை கட்டும் வேலை ஆரம்பித்த காலத்திலிருந்து புரூக்ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலில் காஃபி டே-வில் செல்ஃபி எடுப்பது, நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் செல்வது வரைக்குமான காலம் வரைக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜக்கி வாசுதேவன் வரலாறும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெயர்களை மாற்றி எழுதியிருப்பதால் முதலில் அதன் உண்மையான பின்னணியை தெரிந்துகொண்டு ஆரம்பித்தால் ஒவ்வொரு நிகழ்வுகளின் காரணமும், அழுத்தமும், அதன் நியாயமும் புரியும்.

விஸ்கோஸ் எனப்படும் ரேயான் தயாரிக்கும் ஆலை உருவாகி, வளர்ந்து வீழ்ந்த வரலாறுதான் கதைதான் இந்த முகிலினி நாவல்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பருத்தி விளையும் பெரும் பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட தென்னிந்திய ஆலைகளுக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் தேடிய திரு ஆர். வெங்கடசாமி நாயுடு ரேயான் அதற்கு ஒரு மாற்றாக அமையும் என்பதை உணர்ந்து அதற்கான ஆலை அமைக்கும் பணியில் இறங்குகிறார். இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா (SNiA Viscosa) உதவியுடன் ஆலை அமைக்கப்படுகிறது. சவுத் இண்டியா விஸ்கோஸ் கம்பெனியின் 24.5% பங்குகளை மிலன் நகரில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனி, மஸ்கட்டில் சப்பினா (Sapina) என்ற பெயரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தனது துணை நிறுவனம் மூலமாக கையில் வைத்திருந்தது. இந்தியா, பிரேசில், தென் அமெரிக்க நாடுகளில் ஸ்நியா கம்பெனியின் சொத்துகளை நிர்வாகம் செய்துவந்த இந்த சப்பினா லக்ஸம்பர்க்கில் (Luxumburg) பதிவு செய்யப்பட்ட கம்பெனி.

விஸ்கோஸ் கம்பெனிக்கு மரங்களை கூழாக்கி பெரிய ஏடுகளாக மாற்றி கச்சாப்பொருளாக ஸ்நியா இத்தாலியிலிருந்து ஏற்றுமதி செய்து வருமானம் பார்த்தது. சிறுமுகையில் பவானிசாகர் அணைக்கு மேலே 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் விஸ்கோஸ் ஆலை அணையலிருந்து தண்ணீரையும், பைக்காரா நீர்மின்நிலையத்திலிருந்து மின்சாரத்தையும் பெற்று நேரடியாக 10000 பேருக்கு வேலை கொடுத்து வந்தது. அப்போது தினசரி 60 டன் ரேயான் உற்பத்தி செய்து, கழிவுநீரை அணைக்குள்ளேயே நேரடியாக திறந்துவிட்டாலும் dilution ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் அணையின் மீன்களுக்கோ, விவசாயத்திற்கோ பெரிய பாதிப்பில்லாத அளவில் இருந்து வந்திருக்கிறது.

வட இந்தியாவில் ஆதித்யா பிர்லாவின் கிராசிம் நிறுவனம் மிகப்பெரிய ரேயான் உற்பத்தியாளர் என்பதால் விஸ்கோஸை வாங்கிவிட பல வழிகளில் நெருக்கடி கொடுத்து வந்தது. அந்த போட்டியை எளிதாக சமாளித்த வெங்கடசாமி நாயுடு குடும்பத்தினர் கோவையின் அடையாளமாக விளங்கும் பல நிறுவனங்களை தொடர்ந்து ஆரம்பித்து வளர்ந்து வந்தனர். லஷ்மி மில்ஸ், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ், டெக்ஸ்டூல், CIT கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை என்பதோடு உரம், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஆட்டோமொபைல் டூலர்ஷிப் என அவர்களது பெரிய குடும்பத்தினை நீக்கிவிட்டு பார்த்தால் கோயமுத்தூர் வெறும் விவசாய பூமியாகத்தான் இருந்திருக்கும்.

அந்த இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஃபேமிலியில் ஒருவர் மட்டும் (கரிவரதன் என்று நினைக்கிறேன்) கார் ரேஸ், விமானி என வேறு பாதையில் பயணித்தார். அவரிடம் தானமாக கொஞ்சம் நிலத்தைப் பெற்று ஆசிரமம் அமைத்தவர்தான் ஜாவா ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ். (ஆரம்ப காலத்தில் ஜாவா ஜெகதீஷ் காட்டூர், பாப்பநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு பொட்டலம் சப்ளை செய்து வந்தார் என்பது செவிவழிச் செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை). அவரை ஆஸ்மான் ஸ்வாமிகள் என்று ஏகத்துக்கும் காலாய்த்திருக்கிறார் நாவலாசிரியர்! ஆஸ்மான் ஸ்வாமிகளின் எழுச்சியை நக்கலாக பதிவு செய்திருக்கும் ஒரே நாவல் முகிலினி மட்டும்தான்.

அறுபதுகளில் மோசமாக இருந்த அந்நிய செலாவணி தட்டுபாடு காரணமாக அரசு இத்தாலியில் இருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறது. அதற்கு இணையாக ஊட்டி, கூடலூரில் மரம் வெட்டிக்கொள்ளவும், அரியலூர் சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்பு போன்றவற்றை மலிவு விலையில் அரசாங்கம் தந்தது.

அன்றைய லைசன்ஸ் ராஜ் காலத்தில் 10000 பேருக்கு வேலை தருவது சாதாரண விசயமல்ல. இன்று உலகமயமாக்கம் இல்லாமல் ஐ.டி. தொழில் வேலைகள், வெளிநாட்டு இயந்திரங்கள்+தொழில்நுட்பங்கள் இல்லாமல் வெறும் ஆலை சார்ந்த உற்பத்தித் தொழில்களும், விவசாயமும் மட்டும் இருந்தால் வேலைக்காக தெருத்தெருவாக அலைவதோடு, பெரும் உள்நாட்டுக் கலவரங்கள் பஞ்சம், பட்டினி சாவுகள் என்று ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இந்தியாவும் இருந்திருக்கும்.

விஸ்கோஸ் ஒரு ரூபாய் செலவு செய்து பத்து ரூபாய் இலாபம் பார்க்கும் நிறுவனமாகி வெற்றிகரமாக நடந்துவருகையில் இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனியில் நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

அண்மையில் டாடா நிறுவன சேர்மனாக இருந்து தூக்கியடிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் அப்பாவுக்கு விஸ்கோஸ் ஆலை மீது ஒரு கண். அவரது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் டாடா டிரஸ்ட்டில் 18% பங்கு வைத்திருக்கும் மிக மிகப்பெரிய கோடிசுவர கம்பெனி. சவுத் இந்தியா விஸ்கோசின் இலாபம் பிர்லா குழுமம், ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் என பல நிறுவனங்களில் கண்களை உறுத்தியது. விஸ்கோசின் வெற்றிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட உரத் தொழிற்சாலையும் அப்போதைய பெரிய ஆலைகளுள் ஒன்று. அதன் பின்னரே ஸ்பிக் வளர்ச்சி கண்டது.

நிதி நெருக்கடியில் சிக்கிய ஸ்நியா விஸ்கோசாவின் துணை நிறுவனமான சப்பினாவை பி. எஸ். மிஸ்த்ரியின் Look Health Properties Thirty Ltd என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் கையகப்படுத்தியதில் விஸ்கோசின் 24.5% பங்குகள் ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் வசம் சென்றது. வெளி மார்க்கெட்டில் இருக்கும் 49% பங்குகளில் கணிசமான அளவை வாங்க மிஸ்த்ரி முற்படுகிறார். வெங்கடசாமி நாயுடுவும் அதற்கு போட்டியில் இறங்குகிறார்.

அந்நேரத்தில் வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கம்பெனியை முறைகேடாக வாங்கி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக விஸ்கோஸ் சார்பில் வெங்கடசாமி நாயுடு வழக்கு தொடர்கிறார். நளினி சிதம்பரம் உட்பட பல பெரிய வழக்குரைஞர்கள் விஸ்கோசுக்காக வழக்காடினர். விஸ்கோஸ் கம்பெனி பங்குகள் எதையும் தாங்கள் வாங்கவில்லை எனவும் லக்ஸம்பர்க்கில் பதிவு செய்யப்பட்ட சப்பினா கம்பெனியை மட்டுமே வாங்கியதாகவும் அதனால் சப்பினா வசம் இருந்த விஸ்கோஸ் பங்குகளின்மீது எந்த வியாபாரமும் நடக்கவில்லை எனவே அந்நிய செலாவணி மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் தெரிவித்தது; வழக்கில் விஸ்கோஸ் தோற்றது.

இன்று வோடபோன் இதே மாடலில்தான் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றியது. இந்தியாவில் உள்ள பங்குகளை வாங்கவில்லை, மொரீஷியஸில் உள்ள கம்பெனியை மட்டுமே வாங்கினோம், அதனால் இந்தியாவில் உள்ள கம்பெனி பங்குகள் தானாக கிடைத்துவிட்டது என்றது. இந்த டகால்ட்டி வேலைக்கெல்லாம் அப்பன் என்பது போன்றது ஸ்நியா>சப்பினா>விஸ்கோஸ்>ஷப்பூர்ஜி பலோன்ஜி குழும வழக்கு.

பின்னர் வெங்கடசாமி நாயுடு இறந்துவிட அவரது இளையமகன் விஸ்கோஸ் சேர்மன் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என்று அடம்பிடித்து ஒரு கட்டத்தில் அவரது பங்குகளை மிஸ்த்ரி குழுமத்திடமே விற்றுவிட்டு வெளியேறினார். ஒரு கட்டத்தில் மிஸ்த்ரி நேராக கோவைக்கு வந்து மிகவும் மரியாதையாக அவர்களது வீட்டுக்கே சென்று மிகப்பெரிய தொகைக்கு கம்பெனியைக் கேட்க வெங்கடசாமி நாயுடுவின் குடும்பம் அதை விற்றுவிட்டு மொத்தமாக ரேயான் தொழிலிருந்து வெளியேறியது.

தொழிலை வெறும் முதலீடாக பார்ப்பவர்கள் போட்ட பணத்துக்கு ரிட்டர்ன் மட்டுமே பார்ப்பார்கள். அந்த இடத்தில்தான் முதலாளித்துவத்தின் கோர முகம் வெளிப்படுகிறது. தங்க முட்டையிடும் வாத்தைக் குச்சியை விட்டு குத்தும் வேலைகளைச் செய்து அதை கொல்வார்கள். சொத்தை வச்சு தின்னு பாக்க மாண்டாத திருவாத்தான் என்று கோவைப் பக்கம் சொல்வார்கள். கம்பெனி ஆரம்பித்து, கஷ்டப்பட்டு, அதனுடன் சேர்ந்து வளர்ந்த யாரும் தன் கண் முன் கம்பெனி அழிவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இடையில் வந்து சேர்ந்துகொண்டவர்களுக்கு அப்படி உணர்ச்சிப்பூர்வமான ௮ணுகுமுறைகள் இருப்பதில்லை; கிடைத்தவரைக்கும் இலாபம் என்று சுரண்டித் தின்பார்கள்.

கார்ப்பரேட் சதி, முதலாளித்துவ பம்மாத்து வேலைகள் என கற்பிக்க வேண்டியவற்றை விடுத்து தேவையில்லாதவற்றை இன்றைய இளைஞர்களுக்கு கற்பித்து வருகிறோம். அதனால்தான் ஆன்சைட்டில் சம்பாரிக்கும் வேலைகள் எப்படி இந்தியாவிக்குள் வந்தது என்ற தெளிவே இல்லாத ஒரு மொன்னை தலைமுறை உண்டாகியிருக்கிறது.

Yuval Noah Harari எழுதிய Money என்ற புத்தகம் joint stock company என்பது எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, அவற்றின் பின்னணி, கடந்து வந்த பாதை என பலவற்றையும் அற்புதமாக சொல்கிறது. Wall Street என்ற பெயற்காரணம் அதன் வரலாற்றைத் தெரிவிக்கிறது. தொழில் நடத்துவதற்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர Money-யை வாசிக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 60 டன் ரேயான் உற்பத்தி என்ற அளவில் வெங்கடசாமி நாயுடு விட்டுச்சென்ற கம்பெனியை 250 டன் அளவுக்கு உயர்த்தியது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம். நான்கடி விட்டமுள்ள குழாயில் கழிவுநீர் அப்படியே அணைக்குள் வெளியேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அதிகமாகி மக்கள் போராட்டத்தில் இறங்கி கடைசியில் ஆலை இழுத்து மூடப்பட்டது.

நாவலில் வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு பாத்திரங்களான ராஜு, ஆரான் இருவரும் கோயமுத்தூரின் வரலாற்றுக்கு சாட்சியாக நாவல் முழுவதும் வருகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து படையில் இத்தாலி நாட்டுக்குச் சென்று வந்ததில் சில இத்தாலிய மொழி வார்த்தைகள் தெரியும் என்ற அடிப்படையில் விஸ்கோசில் பேச்சிலராக வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறுகிறார் ராஜு. அவரது மகளுக்கு பவானிசாகர் அணையில் சூப்பிரண்டன்டாக வேலை செய்யும் இளைஞருடன் திருமணமாகிறது. ராஜுவின் பேரன் கெளதம் வழக்குரைஞராகி மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் திருடிய நண்பன் ஒருவன் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் வெற்றிபெறுவது சிறப்பான கதையமைப்பு.

வெள்ளலூரைச் சேர்ந்த ஆரான் தொழிறசங்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு, பிளேக் நோய் என பலவற்றையும் பார்த்து ஊரைவிட்டு வெளியேறாமல் அங்கேயே இருக்கிறார். வசந்தா மில் மூடப்பட்ட பின் வாழ்க்கையை ஓட்ட கஷ்டப்படும் ஆரானின் வழ்க்கையைப் போல பல ஆயிரம் கதைகள் கோவையில் உண்டு. சின்னியம்பாளையம் கொலை வழக்குகள், ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச் சூடு என சமீபத்திய பிரிக்கால் ஊழியர் கொலை வழக்கு வரை கோவைக்கு மிக நீண்ட தொழிற்சங்க வரலாறு இருக்கிறது.
ஊதிய உயர்வு கேட்டதற்காக ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் ஏழு பேர் புரூக்பாண்ட் டீ கம்பெனி சாலையில் சுடப்பட்டு இறந்தனர். Work from home போட்டுவிட்டு இன்று அந்த சாலையில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உட்கார்ந்து தொழிற்சங்கங்கள், திராவிட கட்சிகள் என்ன கிழித்தன என்று வாட்சப்பில் வரலாறு ஃபார்வர்டு செய்யும் இளைய சமுதாயத்திற்கு கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது என்பது காலக்கொடுமை.

வழக்குரைஞர் கெளதம் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு திருநாவுக்கரசு என்ற நண்பருடன் இணைந்து புளியம்பட்டி அருகே இயற்கை விவசாயம் செய்வதும், அவருக்கும் திருநாவுக்கரசுக்கும் நடக்கும் உரையாடல்கள் அருமையான எழுத்து. ஒருகட்டத்தில் காந்தியவதியாக மாறி சட்டை அணிவதைக் கூட துறக்கும் திருநாவுக்கரசு நுகர்வைக் குறைத்துக் கொள்வது பற்றியும், மனிதர்களின் மனப்பாங்கை உணர்ந்து அடையும் முதிர்ச்சியையும் நாவலில் தெளிவாக உணர முடிகிறது.

இயற்கை விவசாயம் செய்து கத்தரிக்காய் விளைவித்த கெளதம் ஆசையாக கேர்ள்ஃபிரண்டுக்கு போன்போட்டு ஆர்கானிக் கத்தரிக்காய் கொண்டுவரவ என கேட்ட, ‘நீ அதை காரமடை அண்ணாச்சி கடையில் போட்டுவிட்டு காசை எடுத்துக்கொண்டு புரூக்ஃபீல்ட்ஸ்ல இருக்கற CCD-க்கு வந்துரு’ என்று சொல்வது epic!

திருநாவுக்கரசு பாத்திரம் சட்டையணியா சாமியப்பன் என்பவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம்மாழ்வாருக்கு விகடன் மூலம் கிடைத்த விளம்பரம் சாமியப்பனுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விகடனின் வியாபார நோக்கம் தெளிவானது. அப்படி எல்லாம் எல்லை நம்மாழ்வரைக் குறை சொல்வதே உனக்கு வேலையாகப் போய்விட்டது என்பவர்கள் ஸ்டெர்லைட் பிரச்சினையை எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி தினமலர் எப்படி வெளியிட்டது என்பதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளலாம். விஸ்கோஸ் பிரச்சினைக்கு நம்மாழ்வார் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டதைச் சொல்லும் அத்தியாயங்கள் நல்லவேளையாக அவரை வராதுவந்த மாமணி என்றெல்லாம் சித்தரிக்கவில்லை.

தொண்டு நிறுவனம் மூலம் சொல்லித்தரப்படும் வாழ்வியல் விவசாய வியாபாரத்தின் பின்னணி, மாடித்தோட்டம், பிராண்டட் சங்கிலித்தொடர் ஆர்கானிக் கடைகள், மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரை நீங்கள் சாப்பிடும் எல்லாம் விஷம் என பயமுறுத்தும் கும்பல் என எதையுமே நாவலாசிரியர் விட்டுவைக்கவில்லை என்பது சிறப்பு. பத்து ரூபாய் நிலவேம்பு பொடியை 120 ரூபாய்க்கு விற்கும் ஆர்கானிக் கடைகள் மீதான திருநாவுக்கரசின் கோபம் நியாயமான ஒன்று. அண்மையில் டெங்கு வந்தபோது நிலவேம்பு விற்ற டுபாக்கூர் மருத்துவ கும்பல் நீலவேம்புக்கு ஆதரவாக போலி ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளிவந்தவற்றக ஆதாரமாகக் காட்டி காசு பார்த்தன. நம்மாழ்வார் அதன் பிரச்சாரக் என்பது முக்கியமான ஒன்று.

சிங்காநல்லூர் குளக்கரை, காரமடை செல்லும் வழியில் ஓரிடத்தில் என ஆறேழு இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவில் உண்டு. ஒரு காலத்தில் கோயமுத்தூர் பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு சபிக்கப்பட்ட நகரம் என்று அழைக்கப்பட்டது. குடும்பம் குடும்பமாக பிளேக் நோயால் இறந்தவர்கள் பலர். அத்தோடு நிலவிய கடும் உணவுப் பஞ்சம், அரிசித் தட்டுப்பாடு என பலவற்றையும் நாவல் பதிவு செய்திருக்கிறது. பயந்து பயந்து அரிசியைப் பையில் எடுத்தச்சென்ற காலங்கள், கோரைக் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்ட பசியை அறிந்தவர்கள் இன்று பசுமை விகடன், நம்மாழ்வார் போன்றவர்களின் முட்டாள்தனமான வெடிமருந்தை உரமாக்கிய கதைகளை, பசுமைப் புரட்சி குறித்த எதிர்மறையான கதைகளுக்கு விலைபோக மாட்டார்கள்.

விஸ்கோஸ், ஸ்டெர்லைட் என சுற்றுச்சூழல் பிரச்சினையால் மூடப்பட்ட ஆலைகள் அனைத்தும் தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான். Productivity என்ற பெயரில் குருட்டுத்தனமான வெறியில் இலாபம், இலாபம் என தம்மைச் சுற்றியுள்ள சூழலை, சமூகத்தை மதிக்காமல் இயங்க இந்தியா அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு அல்ல.

மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் இயந்திரங்களைத் திருடி கோடீசுவரனானவர் பலர். அதில் வரும் கோவிந்து என்று திருடன் கொலைவழக்கில் இருந்து வெளியே வந்தபின் குதிரைமீது அமர்ந்து கத்தியை உயர்த்தியபடி இருக்கும் தீரன் ஒருவரது படத்தை வைத்துக்கொண்டு சாதிச் சங்கம் ஆரம்பிப்பது குறித்த அத்தியாயத்தில் நாவலாசிரியர் முருகவேள் மிளிர்கிறார்!

திண்டுக்கல்லின் தோல் ஷாப்புகளின் தொழிலாளர் போராட்டங்களை டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவல் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவு செய்திருக்கும். சாகித்ய அகாடமி விருது பெற்ற அது NCBH வெளியீடு என்பதால் தொழிற்சங்கம் என்பது அப்பழுக்கற்ற பத்தரைமாற்றுத் தங்கம் என்ற தொணி இருக்கும். முகிலினியில் விஸ்கோஸ் போராட்டத்துக்காக களமிறங்கும் வக்கீல் பழனிசாமி அவரது அலுவலகத்தில் வழக்குரைஞர் பழனிசாமியாக எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பதிவு செய்திருப்பதெல்லாம் நாவலாசிரியர் முருகவேளின் நேர்மையான, தைரியமான எழுத்து நடைக்கு சாட்சி.

நாவலில் வரும் இளம் வழக்குரைஞர் கெளதம் என்ற இளைஞரது பாத்திரம் நீங்கள்தானே என்று அவரிடம் நேரில் சந்தித்தபோது கேட்காமல் விட்டுவிட்டேன்!

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *

One thought on “முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்”

Comments are closed.