திருவோட்டுக்காய்

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பிச்சைப்பாத்திரம் ‘திருவோட்டுக்காய்’ எனப்படும் Beggar’s Bowl அல்லது Calabash tree மரத்தின் விதைதான். Crescentia cujete என்ற அறிவியல் பெயருடன் Bignoniacea குடும்பத்தை சேர்ந்தது. இதன் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு என்னவென்றால் Cauliflorus flowers – அதாவது வளரும் குருத்தில் பூ உண்டாகாமல் தண்டுப்பகுதியில் உண்டாகும். வௌவால் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று காய் உண்டாகிறது (பப்பாளி, பலா மரங்களும் தண்டுப்பகுதியில் காய் வைக்கக்கூடியவை என்றாலும் அதன் மகரந்தச்சேர்க்கைக்கு வௌவால்கள் தேவையில்லை).

நம்மூர் பருவநிலைக்கு சாதாரணமாக வளரக்கூடியது. அறிவியல் பெயருடன் இருக்கும் படம் பேராசிரியர் Balasubramani Venkatasamy அவர்களால் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்டது. ஏனைய படங்கள் கோயமுத்தூரில் எடுக்கப்பட்டவை. காய்களை கிட்டத்தட்ட ஒருமாதம் காயவைத்து, அறுத்து விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். முளைக்கவைத்து பின்னர் தனியாக படத்தை ஏற்றுகிறேன். ஏதாவது வித்தியாசமான மரங்களை வளர்க்க விரும்பினால் முயற்சித்து பாருங்கள். வீட்டில் திருவோட்டுக்காய் விதை/மரங்கள் இருக்ககூடாது என்ற மூட நம்பிக்கையை யாரேனும் சொல்லக்கூடும். அதில் உண்மை ஏதுமில்லை. முருங்கை, இலவம்பஞ்சு போன்றவை வீட்டுக்கருகில் இருக்கக்கூடாது என்பதற்கு காரணம் அதன் கிளைகள் சாதாரணமாக காற்றடித்தாலே முறிந்துவிழுந்து ஆபத்தை உண்டாக்கும் என்ற காரணம்தான்.

தினத்தந்தியில் வந்த தகவல்களில் பாதி தவறானது. வேண்டுமானால் இந்த லிங்கில் பார்க்கலாம். https://www.facebook.com/dailythanthinews/photos/a.770136709669611.1073741828.630553376961279/1031777490172197/?type=3&theater
அப்புறம் உலகத்திலேயே பெரிய விதை எது என்ற சிறுவர்மலரில் அடிக்கடி வரும் பொது அறிவு கேள்விக்கான விடையும் ஒரு படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ‘லொடைசியா மால்தீவிக்கா’ விதை கோவையில் காஸ் வன அருங்காட்சியகத்தில் (Gass Forest Museum) இருக்கிறது.

மாமனார் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கடியில் உட்கார்ந்து அந்த காய்களை சுரண்டிக்கொண்டிருந்தபோது அந்தப்பக்கமாக வந்தவர் “என்ன பண்றீங்க” என்றார். “திருவோடு ரெடி பண்ணிட்டுருக்கிரனுங்” என்றதும் அமைதியாக சென்றுவிட்டார். சிலவினாடிகள் கழித்துதான் இடம், பொருள் அறியாமல் பேசக்கூடாது என்று புரிந்தது!

Author: Prabu RS

Views expressed here are personal. With consent, anyone can use the articles anywhere. Reach me at PRABU48@GMAIL.COM