மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி – பசுமைப் பத்திரிகைகளின் எழுச்சி

கேள்வி: மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி என்ற ரீதியில் கட்டுரை வெளியிடும் பிரபல பசுமைப் பத்திரிகை, வேளாண்மைத்துறையில் உள்ள அதிகாரிகளில் பலர் பாரம்பரிய விவசாய முறைகளில் ஆர்வம் கொண்டு இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க அயராது உழைத்து வருவதாகவும் அதனால் தமிழகத்தில் பெரிய அலை அடிப்பதாகவும் கூறிவருகிறது. அவ்வாறு அலை ஏதாவது அடித்து கிளர்ச்சி ஏற்பட்டு, புரட்சி உண்டாகி, மலர்ச்சி வந்துகொண்டிருக்கிறதா?

பதில்: ‘இயற்கை விவசாய முறை’ என்று செயற்கையாக இன்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கருதுகோளை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்வதை வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்வது – ஒருசில திட்டங்கள் தவிர்த்து – அவர்களது அன்றாட கடமைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். அவ்வாறு சமூக ஊடகங்களில் செய்துவரும் சிலர் நேரத்தைக் கொல்வதற்காக வேண்டுமானால் செய்துவரலாம். ஏனெனில் ஆலோசனை கொடுப்பதோடு அவர்கள் நின்றுவிடுவதும், அதைப் பின்பற்றி செயல்படுத்துபவரின் நேரமும், பணமும் இவர்களது ரிஸ்க் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று.

அதேநேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி விற்பனை உரிமங்களை வழங்குவது, விற்பனையை ஒழுங்குபடுத்துவது, மாதிரிகள் எடுத்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் செய்வது , தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுப்பதெல்லாம் துறை அதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். இந்த அடிப்படை வேலைகளிலேயே சுணக்கம் இருக்கவே செய்கிறது.

வேளாண்துறையில் பணியாற்றும் நண்பர்கள் பலரும் அப்படியெல்லாம் இல்லை என்று இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். ஆனால் நடைமுறையில் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முனைவோர் இந்த உரிமங்களுக்காக குறைந்தது இரண்டு மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஓரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து முன்பணம் செலுத்தி, வாடகை மாதந்தோறும் கட்டி, உரிமங்கள் வரும்வரை காத்திருந்து (சராசரியாக மூன்று மாதம் ஆகும்) பின்னர்தான் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும்.

முறையாக விண்ணப்பித்து, அதிகாரி நேரில் வந்து பார்த்துவிட்டுச்சென்று, உரிமம் வழங்கிட இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிடும் என்றாலும் பின் தேதியிட்டே உரிமம் வழங்கப்படுவதால் எல்லாம் முறையாக நடப்பதாகவே தோன்றும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்த்தகர்கள் என்றாலே பதுக்கல்காரர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், கொள்ளை இலாபத்துக்கு விற்பவர்கள் என்ற பொதுப்புத்தி சமூகத்தில் பரவலாக உண்டு. நியாயமாக வணிகம் செய்யவேண்டும் என்ற நோக்கில் வர்த்தகர்கள் முன்வந்தாலும் Principal certificate-களை என்டார்ஸ் செய்ய, பழைய உரிமத்தைப் புதுப்பிக்க என எதற்குமே இத்தனைநாள் காலக்கெடு என்ற ஒன்று இல்லாததால் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மன உளைச்சல்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு சட்டம்தான் என்றாலும் விதைப் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதிக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே சரக்குகளை விற்பதை நிறுத்தி திருப்பியனுப்ப வேண்டும் என்பது, உர மூட்டைகளை பிரித்து விற்கக்கூடாது என்பது விதிமுறை என்றாலும் விவசாயிகளுக்கு சேவை செய்ய பிரித்து சில்லரையில் விற்கவேண்டும் என வலியுறுத்துவது என பல அதிகாரிகள் சட்டாம்பிள்ளையாகி விடுவதோடு, ‘இவரு உண்மையிலேயே அக்ரி படிச்சிருப்பாரா?’ என்ற நகைப்புக்கும் வழிகோலுகின்றனர்.

கள யதார்த்தம் இப்படியிருக்க, மரபுவழிக்கு திரும்புங்கள் என்று சட்டைபோடாமல் பேஸ்புக்கில் படம் போட்டு ‘அழைப்பு’ விடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியிருக்கிறது.

ஆகவே அலை அடிக்கிறது, எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரேனும் சொன்னால் தீர விசாரித்து பின்னர் முதலீடு செய்யவும். கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதித்த பணம், செலவிடும் நேரம் எல்லாம் போனால் வராது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *