போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது!

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்கள் மிக அற்பமானவை. எளிதாக மக்களாட்சியில் சாதித்துக்கொள்ள முடிந்தவை. கடையேழு வள்ளல்களில் போரில் மடிந்தவர்களின் வரலாறு, அதன் தோற்றுவாய் என்னவென்பதை கொஞ்சம் பார்ப்போம்.

கடையேழு வள்ளல்களில் கொல்லிமலையை மையமாக வைத்து ஆண்டுவந்த ஓரியின் வில்வித்தைத் திறனை வன்பரணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வேழம் வீழ்த்த விழுத்தடை பகழி
பேழிவா யுளுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலை புகர்க்கலை யூருட்டி யுரற்றளைக்
கேழற்பன்றி வீழ வயலது
ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ?
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ!”

– புறநானூறு 152

ஒரு யானை, ஒரு புலி, ஒரு புள்ளிமான், ஒரு காட்டுப்பன்றி ஆகியவற்றைத் துளைத்து வீழ்த்திவிட்ட நிலையில் ஒரு அம்பு புற்றுக்கு அருகிலிருந்த உடும்பின் உடலில் சொருகி இருந்ததைக் காண நேர்ந்த ஒரு பாணர் கூட்டம், இப்படி ஒரே அம்பால் ஐந்து உயிரினங்களையும் கொல்லும் ஆற்றல் படைத்தவன் வல்வில் ஓரியோ? யாரோ? என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

அற்புதமான இயற்கை வளங்கள் நிரம்பிய மலையை ஆண்டுவந்த, வில்வித்தையில் சிறந்த மாவீரன் ஓரியின் கொல்லிமலையைக் கைப்பற்ற சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஆசை வருகிறது. இன்று தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோவலூரை ஆண்டுவந்த காரி-மீது (மலையமான் திருமுடிக்காரி) படையெடுத்து வெல்கிறான். அப்போது பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அடைக்கலம் சென்ற காரி, ஒருகட்டத்தில் ஓரிமீது படையெடுத்துச்சென்று பெரும்போர் புரிகிறான். வில்வித்தையில் பெரும் சூரனான ஓரி, போரின்போது மார்பில் வில் துளைத்து உயிரை விடுகிறான். கொல்லிமலையைக் கைப்பற்ற உதவிய (கிட்டத்தட்ட கூலிப்படையாக சென்ற) மலையமான் திருமுடிக்காரிக்கு முள்ளூர் மலையை வழங்கிவிட்டு கொல்லிமலையை தன்வசம் வைத்துக்கொள்கிறான் பெருஞ்சேரல் இரும்பொறை.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் மணமுடித்து தரச்சொல்லிக் கேட்ட பாண்டிய மன்னருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் அந்த வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதனால் மூவேந்தர்களும் பாரியின் கோட்டையை முற்றுகையிட்டும் வெல்ல முடியாததால் பாணர்களைப்போல் வேடமிட்டு பாடல்களைப்பாடியும், இசை மீட்டியவாரும் கோட்டையினுள் சென்ற ஒற்றர்கள் கூர்வாளால் பாரி நெஞ்சில் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவரது மகள்களை அழைத்துசென்ற கபிலர், விச்சிக்கோன் என்னும் சிற்றரசனிடம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். மூவேந்தர்களைப் பகைத்துக்கொள்ள அஞ்சிய விச்சிக்கோன் மறுத்துவிடவே, அவர்களை ஒரு அந்தனரிடத்தில் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விடுகிறார் கபிலர். பாரி மகளிர் இருப்பதையறிந்த ஒளவையார், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று திருக்கோவலூரை ஆண்டுவந்த மலையமான் திருமுடிக்காரிக்கு மணமுடித்து வைக்கிறார்.

தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய தொண்டைமான் இளந்திரையன் போருக்கு ஆயத்தமாகிறான். போரால் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படும் என்றெண்ணிய அதியமான், ஒளவையாரை தூதனுப்புகிறார். இளந்திரையனைச் சந்தித்த ஒளவை அவனது படைக்கலக் கொட்டிலைப் பார்வையிட்டுவிட்டு அவை வரிசையாக அடுக்கிவைத்து அழகாக இருப்பதாகவும் அதேநேரத்தில் அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் கொல்லர் பட்டறையில் கிடப்பதாகவும் கூறி இளந்திரையனுக்கு போரில் ஈடுபட்டால் தோல்விதான் ஏற்படும் என இடித்துரைத்துப் போரை தடுத்துவிடுகிறார். ஆனாலும் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை தன்மீது போர் தொடுத்துவிடுவானோ என்று அஞ்சிய அதியமான், ஆயர் தலைவனான கழுவுள் என்பவனோடு இணைந்து இரும்பொறையின்மீது போர் தொடுக்கிறான்.

அரசன் உறங்கும் முரசுக்கட்டிலில் உறங்குவோருக்கு மரணதண்டனை உண்டென்றாலும் களைப்பினால் அதில் உறங்கிவிட்ட மோசிகீரனார் புலவர் என்பதால் அவரை எழுப்பாமல் கவரி வீசிய இரும்பொறைக்கு அதியமான் மீது சினமேற்பட்டு போருக்கு ஆயத்தமானான். இரும்பொறையின் அரசவையிலிருந்த புலவர் அரிசில்கிழார், அதியமானுக்கு நிச்சயமாக தோல்வி ஏற்படும் என்பதையறிந்து அவனைச் சந்தித்து போரை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கிறார். அதை புறந்தள்ளிய அதியமான் போரில் ஈடுபட்டு மடிகிறான்.

மயில் போர்த்திக்கொள்ளாது என்று தெரிந்தும் அதற்கு போர்வை தந்த பேகன் மனைவியை மதித்து வாழாததை கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் இடித்துரைத்தும் கேளாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து மடிகிறான்.

இதையெல்லாம் சமகால அரசியல் சூழலில் பொருத்திப்பார்த்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

நண்பர் ஜெயநாதன் எழுதியதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்

“படை பெருத்ததால் பார் சிறுத்ததோ
பார் சிறுத்ததால் படை பெருத்ததோ”

ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணியில் இதைச் சொன்னாலும் சொன்னார், மேடைக்கு மேடை, பார்த்தாயா தமிழனின் புஜபல பராக்ரமத்தை என்று கொக்கரிப்பு எங்கும்.
விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னன், குலோத்துங்கன். அவன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுவதில்லை. Iron Man, Hulk, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கற்பனை வீரசாகச படங்களை பார்த்து வளர்ந்த சமூகம் போரிற்கான விலையை யோசிப்பதில்லை. போர் என்பது ஏதோ, தொடையை தட்டி என் மச்சினிச்சிக்கு மஞ்சள் அரைத்தாயா, என்னை எதிர்க்க உங்களிடம் திராணி இருக்கிறதா போன்ற உப்பு பெறாத கேள்விகளை கேட்பது என்று எண்ணுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம் வளரும்பொழுது, நமக்கு கூறப்பட்ட கற்பிதங்கள் அப்படி. அது தான் அவர்களை நரம்பு புடைக்க பேசும் எவரையும் நம்ப வைக்கிறது, நயமாய் பொய் சொன்னாலும், உரக்கச் சொன்னால் அதற்காக உயிரை கொடுக்க வைக்கிறது.
ஆக, குலோத்துங்கன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான், யார் மீது போர் தொடுத்தான்?
அவன் போர் தொடுத்தது, ஆனந்தவர்மன் சோட கங்கன் மீது. இன்னும் தெளிவாய் கூறவேண்டுமானால், ஆனந்தவர்மன் சோட கங்கனின் தாய் வழி மாமன் முதலாம் குலோத்துங்கன். காரணம், வரி கட்டாதது.
ஆக, இரத்த சம்பந்தம் கொண்ட இரண்டு உறவினர்கள் அடித்துக்கொண்டு, பின்னர் படை பெருத்ததால் பார் சிறுத்ததோ, பார் சிறுத்ததால் படை பெருத்ததோ என்று உயர்வு நவிற்சி அணி சொட்ட சொட்ட நயமாய் மண்டப கவிஞரை கவி பாட வைத்திருக்கின்றனர் கலிங்கத்துப்பரணி என.
எனது கவலை, அந்த அத்துவான கலிங்க காட்டில் தங்கள் உயிர் நீத்த பெருத்த படை குறித்து, இந்த வரிகளை வீரத்தின் அடையாளமாய் நம்பிக்கொண்டிருக்கும் அண்ணனின் விழுதுகள் குறித்து.
இதை எழுதிய பின், வரும் பெருத்த பயம், கீழை கங்க நாட்டின் ஆனந்தவர்மன் சோட கங்கன் சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும், அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்று உண்மையினாலும்.
யாருக்கு தெரியும். நாளையே தம்பிகளின் தம்பிகள், நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் – கலிங்கம் ஆண்ட வீர பரம்பரை நம் சோழ பரம்பரை என்று WhatsApp இல் களமாடினாலும் ஆச்சரியம் இல்லை. அகண்ட பாரதம் போல் அகண்ட தமிழகத்தை வென்றெடுப்போம் என்று இவர்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.
அதுவும் சரி தான். மெய்நிகர் உலகில், இணையத்தில் போர் செய்ய, புரட்சியை வித்திட எதற்கு வீரமெல்லாம்.

#அட்டகத்தி #மாமன்மருமகன்சண்டை #கலிங்கத்துப்பரணி

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *