தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

கேள்வி: தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

பதில்:
Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

தனியார்மய எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பது சிக்கலான ஒன்று என்றாலும் பெரும்பாலானவை ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, சந்தர்ப்பவாத எதிர்ப்பு, கண்மூடித்தனமான ஆதரிப்பு மற்றும் நட்டநடு சென்டர் நடுநிலைமை என நான்குவகையே.

தனியார்மய அதிருப்தியாளர்கள் சொல்லும் முக்கியமான காரணம் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்பதாகும். இங்குதான் பூனைக்குட்டி வெளியே வருகிறது. இன்றுவரை வேளாண்துறையில் முனைவர்களை, ஆராய்ச்சியாளர்களை, வல்லுனர்களை உருவாக்குவதாகச் சொல்லும் த.நா.வே. பல்கலையில் பட்டம் பெற்றவர்களே உதவிப்பேராசிரியர்களாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றச்செல்கின்றனர். தனியார் கல்லூரி முதல்வர்களும் நேரடியாக த.நா.வேளாண் பல்கலைக்கழகத்தால் நிரப்பப்பட்டு கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரம் கண்காணிக்கப்படுகிறது. கல்வி பயில வெறும் கட்டிடங்கள், ஆய்வகங்களைத் தாண்டி தகுதியான ஆசிரியர்களும், முதல்வரும் அறிவுஜீவிகள், மெத்தப்படித்த, நாலும் தெரிந்த நல்லவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் வேளாண் பல்கலையிலிருந்தே சென்றிருக்கும்போது கல்வியின் தரம் நீரத்துப்போகுமென்பது நகைமுரண். தேர்வுக்கு வினாத்தாள்களை வடிவமைப்பது, விடைத்தாள்களை மதிப்பிடுவது என ஒட்டுமொத்த குடுமியையும் அரசு வைத்திருக்கிறது. BSc agri மாணாக்கர்களுக்கு வகுப்பெடுக்க MSc agri பட்டத்துடன் NET தகுதி போதுமானது என்பது நடைமுறை. ஆனால் இன்றைய தேதியில் PhD பட்டமுடைய முனைவர்களே வகுப்பெடுக்கச் செல்கின்றனர்.
இப்படியிருக்கையில் கல்வியின் தரம் குறைகிறது என்றால் வகுப்பெடுக்கச்செல்பவர்களின் தராதரம் என்னவென்பது தீவிரமாக கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

தனியார்மயத்தால் பாலாறும் தேனாறும் ஒடுமா என்றால் நிச்சயமாக ஓடாது. ஆனால் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பை தடுப்பது என்பதே வன்முறை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மருத்துவர்களைக் காட்டிலும் குறைவாகவே வேளாண் பட்டதாரிகள் வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. எண்ணிக்கை அதிகமாக இல்லாத இன்றைய சூழலில் விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை கொண்டுசேர்க்க மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. நூறுபேர் வெளியில் வந்தால் பத்துப்பேராவது அதே துறையில் இருப்பார்கள், அதில் ஐந்து பேர் விற்பன்னர்களாக விரிவடைவார்கள் என்பது இயல்பு. அதற்கான வாய்ப்பையே உண்டாக்கவிடாமல் செய்வது முறையற்ற செயலாகும்.

கணிசமான எண்ணிக்கையிலான ஆட்கள் இருக்கும்போதுதான் தரமான ஒன்றை/ஒரு ஆலோசகரை நாடுவதற்கு விவசாயிகளுக்கு options இருக்கும். தமிழகத்தில் தினசரி மருத்துவ உதவிகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏதோவொரு காரணத்துக்காக வேளாண் நிபுணர்களின் ஆலோசனையை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படியிருக்கையில் ஆட்களை இல்லாத ஒரு செயற்கையான பற்றாக்குறையை வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

தற்சமயம் நிபுணத்துவம் என்பது மாட்டுச்சாணியின்மூலம் மட்டுமே மாற்றம் வரும் என்று நம்பும் இயற்கை விவசாய ஆரவலர்களிடமும், இரசாயனங்கள் மட்டுமே ஏற்றம் தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட நிபுணர்களிடமும், உயிரியல் முறையில் பயிர்மேளாண்மை சிறப்பாக செய்யலாம் என்றாலும் பணபலத்தால், ஆள் அம்புகளால் பயோ புராடக்ட்கள் என்ற பெயரில் போலிகளை விற்கும் ஆசாமிகளிடமும் சுருங்கி சின்னாபின்னமாகி நிற்கிறது. இந்த மூன்றையும் பேலன்ஸ் செய்து பயனாளிகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டிய வேளாண்துறையும் தேங்கிக்கிடக்கும் கோப்புகளிலில் ஆட்கள் பற்றாக்குறையால் முடங்கியிருக்கிறது.

ஆக, Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *