பால் வியாபாரம் – மேலும் சில

பால் கறப்பது, குறிப்பாக அடைமழை காலங்களில் மிகவும் சிரமமான வேலை. காலையிலும், மாலையிலும் வேறு எந்த வேலைக்கும் போகாமல் கருமமே கண்ணாக செய்யவேண்டிய ஒன்று. நசநசவென்ற சூழல், கொசுக்கடி, ஈக்களின் தொந்தரவு, சாணியும் மூத்திரமும் உலராமல் ஏற்படும் துர்நாற்றம் எல்லாவற்றையும் தாங்கித்தான் மாடு வளர்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் பால்காரராக இருப்பதற்கு மிகவும் வலுவான உடல்நிலையும், மனநிலையும் கட்டாயம்.

புதிதாக சந்தைக்கு வரும் பால் கறக்கும் இயந்திரங்களைப் பார்த்துப்பார்த்து ஏமாற்றமடைவது பால்காரர்களாகத்தான் இருக்கும். விலைகுறைந்த portable models இயங்குவது வேக்குவம் சக்‌ஷன் அடிப்படையில் என்பதால் தொடர்ந்து பாலைக் காம்பிலிருந்து உறிஞ்சும்; ஆங்காங்கே, பாலில் இரத்தம் கலந்து வருகிறது என்பது மாதிரியான விவசாயிகளின் புகார்கள் இந்த வகையிலான ஆரம்பகட்ட கருவிகளால்தான். சில மாடுகள் பாலை அடக்கி வைத்துக்கொண்டு போக்கு காட்டி, கன்றுக்குட்டிக்குத் தரும், சில காம்புகளில் இயல்பாகவே பால் இல்லாமல் இருக்கும்; அதற்காக அதிகநேரம் கருவியை இயக்குவது, அழுத்தத்தைக் கூட்டுவது என செய்யப்படும் உத்திகள் நீண்டகால அடிப்படையில் மாட்டின் பால் உற்பத்தியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

விட்டுவிட்டு உறிஞ்சி இயங்கக்கூடிய pulsing type கறவை இயந்திரங்கள் 25000 ரூபாயில் ஆரம்பிக்கிறது. இந்த காசுக்கு இன்னொரு மாடு வாங்கலாமே என்று நினைப்பது விவசாயிகளின் இயல்பு. இதிலும் காம்பில் மாட்டக்கூடிய கறப்பான், பாலின் தரத்தை உள்ளீடு செய்து கறத்தலை நிறுத்தும் சென்சார், மதர் போர்டு என சில sensitive components அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வருகிறது.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாட்டில் 99.9 % பால் கைகளாலேயே கறக்கப்படுகிறது எனும்போது பால் கெட்டுப்போவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. பாலுடன் என்னென்ன இரசாயனங்கள் கலக்கும் என்பதற்கு கறப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்துவிட்டு வந்தனர் என்பதை ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். உற்பத்தியாகுமிடத்தில் அத்தகைய சூழலை வைத்துக்கொண்டு, பால்வளத்துறை அமைச்சர் ஒருவர் பாலில் இரசாயனம் இருக்கிறது என்று பேட்டி கொடுப்பதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

கிராமம் கிராமமாக சிதறிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு கறப்பதற்கு கையடக்க கருவிகள் ஏதும் இல்லாமல், நோயுற்றால் உடனே வந்து பார்ப்பதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லாமல், கிடைக்கும் விலையும் போதுமான அளவில் இல்லையென்றாலும் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்க காரணம் மாடுகள் குறித்த விவசாயிகளின் புரிதல்தான். எப்போது என்ன செய்யவேண்டும் என்பதை உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுசெய்யும் அவர்களுக்கு தரப்படும் சட்ட ரீதியிலான அழுத்தம் முட்டாள்தனமான ஒன்று.

ஜல்லிக்கட்டு மூலமாக சிறந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கடும் வறட்சி காலங்களில் கிடாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதும் உண்மை. நான்கு கறவைகள் இருக்கும்போது கடும் வறட்சி வந்தால் அதில் உள்ள ஒரு நல்ல மாட்டை வைத்துக்கொண்டு மற்றவைகளை கறிக்கு அனுப்புவது இயல்பு. மரபியிலில் இதை Pureline Selection என்பார்கள். வறட்சி, பஞ்சம் மிகுந்த காலங்கள் கால்நடைகளின் இனத்தூய்மை, விருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன. எதற்கெடுத்தாலும் நதிகளை இணைக்கவேண்டும், பார்க்கும் இடங்களிலெல்லாம் தடுப்பணை அமைக்கவேண்டும், குஜராத் மாதிரி ஆகவேண்டும் என்று கருத்துரைப்பவர்கள் சுற்றுச்சூழல் குறித்த கல்வியறிவோ பட்டறிவோ துளியும் இல்லாத மூடர்கள்.

சினை ஊசிகளில் காளைகளே இல்லாமல் கிடாரிகள் மட்டுமே உருவாக்கக்கூடிய (XX குரோமோசோம்) Sex selective semen மேலைநாடுகளில் உண்டு. அதன்மூலம் காளைக்கன்று பிறந்து அதை ஒரு வருடம் கழித்து கறிக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லாமல் கிடைக்கும் அனைத்து கன்றுகளும் பெண் என்பதால் விரைவில் இனவிருத்திக்கு தயாராகி பண்ணையும், பால் உற்பத்தியும் பெருகும் என்பது அவர்களது நோக்கம்.

ஆண் கன்றுகளை உருவாக்கக்கூடிய Y குரோமோசோம்களை விந்தணுக்களுக்குள்ளேயே சென்று காயடிக்கும் chromosome washing செய்யும் Flow Cytometry போன்ற தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை இருப்பதால் உள்நாட்டு ஃபுளோ சைட்டோமெட்ரி தொழில்நுட்பத்தை உருவாக்க 2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் பெரும் நிதி ஒதுக்கியது; அநேகமாக அஃது இந்நேரம் வர்த்தகரீதியில் தயாராகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

உள்நாட்டு மாட்டு, தாவர இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் ஜெர்சி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸியன் இன மாடுகளிலும் காளைகளே இல்லாத ஒரு சூழல் ethically சரியா என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. சங்கப்பரிவாரங்கள், விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் இன்னபிற வானரப்படைகள் இதுகுறித்து வாயே திறக்கவில்லை என்பதை மிக அழுத்தமாக இரண்டுமுறை அடிக்கோடிட்டு காட்டவேண்டியிருக்கிறது.

(தோல் பதனிடும் தொழில்களில் நடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சுரண்டல்கள், கம்யுனிச எழுச்சியின் ஆரம்பகட்டங்களை புரிந்துகொள்ள திண்டுக்கல்லை மையமாக வைத்து எழுதப்பட்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவலை நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்.)

ஆய்வுக்கூடங்களோடு முடிந்துவிட்ட டெர்மினேட்டர் டெக்னாலஜி குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சவுண்டு விடும் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் காளைக்கன்றுகள் இல்லாத ஒரு சூழல் உண்டாக இருப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை. RCEP கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் மூலம் விவசாயிகள் விதைகளை வைத்திருக்கவே முடியாது என்ற ஒரே பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றனர். ஆறாயிரம் பேர் கலந்துகொள்ளும் அந்த convention, வட இந்தியாவில் நடத்த இடமே இல்லாமல் ஐதராபாத்தில் நடத்த இருக்கிறார்கள். அதில் விவாதிக்கப்பட இருக்கும் கூறுகள் பொதுமக்களுக்கு சொல்லப்படவே இல்லை எனும்போது இவர்கள் கம்பு சுற்றுவது எதற்காக என்றும் தெரியவில்லை.

அப்படியே ஏதாவது முடிவு எடுக்கப்பட்டாலும் அது பல்வேறுகட்ட ஒப்புதல்களை வாங்கி, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு வந்தால்தான் தெரியும். பொது இடங்களில் புகை பிடித்தால், எச்சில் துப்பினால் அபராதம் மாதிரியான சட்டம் போல அதுவும் ஒன்றாகிப் போகலாம். அண்மையில் பலர் ஒரே நேரத்தில் படையெடுத்ததால் இ-சேவை மையங்கள் முடங்கியதற்கு சொல்லப்பட்ட காரணம் ‘வருடத்தில் ஐந்து நாள்தான் இவ்வளவு டிராஃபிக் வரும், மீதி 360 நாட்கள் சும்மாதான் இருக்கும்; அதனால்தான் புதிய சர்வர்கள் நிறுவவில்லை’ என்று. இருபது முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் வெள்ளம் வருகிறது, அதற்காக பல ஆயிரம் டன் கான்கிரீட்டைக் கொட்டி மிகப்பெரிய வாய்க்கால்களை, மதகுகளைக் கட்டவேண்டிய அவசியம் இல்லை; தண்ணீர் வந்தால் அதாகவே போய்விடும் என்பது மாதிரியான தொலைநோக்குப் பார்வைதான் நமது சொத்து.

ஆட்டோமொபைல் துறைக்கான தொலைநோக்குப் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது. நான்கு மீட்டர் நீளத்துக்கு குறைவான கார்களுக்கு 12.5% எக்ஸைஸ் டியூட்டி, அதைவிட நீளமான கார்களுக்கு 1500 cc-க்குள் இருந்தால் 24% வரி, 1500 cc-க்கு அதிகமாக இருந்தால் 27% வரி. 2000 CC க்கு மேலே இருந்தால் டில்லி போன்ற நகரங்களில் அதற்கு ஒரு வரி. தாடியின் நீளத்தைப் பொறுத்து வரி விதித்த மன்னர்கள் குறித்த கதைகளெல்லாம் இந்த இடத்தில் நினைவுக்கு வரக்கூடும்.

ரேடியோ ஸ்பெக்ட்ரம் கட்டுப்பாடுகள் காரணமாக பல உயர்தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வரவே முடியாத நிலை இருக்கிறது. இங்கிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் முடியாத சூழ்நிலையே. 433 – 434 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்தான் சாவி தேவைப்படாத Keyless Entry சாத்தியமானது. ஆனால் இன்னமும் 434.79 MHz வரை உற்பத்தி, பயன்பாடு இரண்டுக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதால் radar based automatic breaking, lane direction control போன்ற தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர சாத்தியமில்லை. உதாரணமாக மெர்சிடஸ் S class கார்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும்போது இத்தகைய terrestrial transmission தொழில்நுட்பங்கள் தொடர்பான நுண்கருவிகள், ஒயரிங், மென்பொருள் என அனைத்தையும் கழட்டிப் போட்டுவிட்டுத்தான் இறக்குமதி செய்யமுடியும். அதனால் இங்கே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் உயர்தர சொகுசு கார்களுக்கு சாத்தியமே இல்லை.

ஒன்னேகால் கோடிக்கு S class கார் வாங்கும் கோடீசுவரர்களுக்குத்தானே அந்த தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு வசதிகள் என்ற அங்கலாய்க்கத் தேவையில்லை. ஒருகாலத்தில் ஏபிஎஸ், ஏர்பேக் என்பது சொகுசு கார்களில் மட்டுமே இருந்தது. வரும் அக்டோபர் முதல் அது எல்லா கார்களிலும் கட்டடாயமாகிறது. காலப்போக்கில் எல்லாமே எல்லாருக்கும் சாத்தியமே. போர்க்களத்தில் துப்பாக்கிகளின் கட்டைகள் அதிக சூடாவதால் சுடமுடியாமல் போவதை தவிர்க்கவே ஆரம்பத்தில் பேக்லைட் (Bakelite) கைப்பிடிகள் பயன்பட்டது; இன்று ஒவ்வொரு வீட்டின் பிரஷர் குக்கரிலும் அதுதான் இருக்கிறது.

Visionary என்ற வார்த்தையே பொருளற்ற ஒன்றாகிவிட்டது. அரசாங்கத்தின் லைசன்ஸ் முறைகளின் நீட்சி இன்னமும் இருப்பதோடு நிலையற்ற கொள்கை முடிவுகள் இந்தியாவை இன்னமும் banana republic தோற்றத்தில்தான் வைத்திருக்கிறது. இந்திய சூழலில் வியாபாரம் செய்ய முடியாது என்று 8000 கோடி நட்டத்துடன் செவர்லே பிராண்டை வைத்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. பல ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழக்கிறார்கள். இந்தியாவில் இனிமேல் ஒருபைசாகூட முதலீடு செய்யமுடியது என்று டொயோட்டா அறிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வசதிகள், சொகுசு தேவை என்பதை உற்பத்தி செய்யும் நிறுவனமும், வாடிக்கையாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்; ஆனால் இந்தியாவில் அரசாங்கம் முடிவு செய்கிறது என்பதால் இங்கு முதலீடு செய்வது தேவையில்லாத ஒன்று என்று ஹோண்டா அறிவித்திருக்கிறது.

பால்வளம், ஆட்டோமொபைல் மட்டுமல்லாது டெக்ஸ்டைல் துறைக்கும் இருண்டகாலம் ஆரம்பிக்கவிருக்கிறது. பி. டி. தொழில்நுட்பம் வந்தபிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பருத்தி வியாபாரத்துக்குள் புகுந்து தேன்கூட்டை கலைத்துவிட்டார்கள். மான்சான்டோ இந்தியாவுக்கான பருத்தி ஆராய்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தெரிகிறது. ஆங்காங்கே இந்த ஆண்டு பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆண்டு இது இன்னும் தீவிரமடையும். 2019-வாக்கில் புதிய தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத நிலையில் பருத்திக்கு பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டவேண்டிவரும். உலகின் தடை செய்யப்பட்ட அத்தனை வகையான பூச்சிக்கொல்லிகளும் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக மாறும். மான்சான்டோவை அடித்து விரட்டிவிட்டோம் பார்த்தாயா என்று நம்மாழ்வாரிய மூடர்கள் கொண்டாடக்கூடும். பேயர், மான்சான்டோவைக் கையகப்படுத்திவிட்டதால் இன்னும் சில மாதங்களில் மான்சான்டோ என்ற நிறுவனம் தானாகவே கரைந்துவிடும். பருத்தியில் பூச்சி எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாதபோது சந்தையில் பூச்சிக்கொல்லிகளின் ஜாம்பாவானான பேயர்-இன் வியாபாரம் எகிடுதகிடாக வளரும். அதனால் என்ன, சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டதாக நம்மாழ்வாரிய மூடர்கள் மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சியே நமக்கு நிறைவானதாக இருக்கும்!

அச்சே தின் ஒவ்வொரு துறையிலும் வந்துகொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆகும் எண்ணமிருந்தால் உடனடியாக மறுபரிசீலனை செய்யவும்.

உர மானியம் தொடர்பான சர்ச்சைகள், சில நல்ல முன்னேற்றங்கள்

உர மானியமானது இவ்வளவு ஆண்டுகளாக இரயில்களில் ஏற்றியவுடனோ அல்லது மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிட்டங்கியை வந்தடைந்தவுடனோ தரப்படும் பில்களை வைத்து உரத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஜூன் மாதம் முதல் விவசாயிகளுக்கு உரம் வழங்கியதற்கான இரசீது ஆதார் எண்ணுடன் விவசாயினுடைய கைரேகையை வைத்து உறுதிப்படுத்திய பிறகே கம்பெனிகளுக்கு வழங்கப்படும். உர விற்பனையாளர்களுக்கு PoS கருவியை உரத் தயாரிப்பு கம்பெனிகளே வழங்குகிறது. அந்த கடைக்காரர்களுக்கான பயிற்சியை அரசு வேளாண்மைத்துறை வழங்குகிறது.

கேஸ் மானியம் மாதிரி பயனாளிகளுக்கு நேரடியாக வழங்காமல் பயனாளிகளை சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு கம்பெனிகளுக்கு வழங்குவது ஒரு நல்ல ஆரம்பம்; பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டுக்களை தடுக்கமுடியும் என்பதோடு உண்மையாகவே எத்தனைபேர் நேரடி விவசாயிகள், எத்தனைபேர் விவசாயி என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்ற மேப்பிங் செய்யவும் அரசுக்கு ஒரு வாய்ப்பு. கிடைக்கப்போகும் அந்த தரவுகளின் அடிப்படையில் 2019-வாக்கில் விவசாயிகளுக்கே நேரடி உர மானியம் வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மானியங்களை ஒழித்து விவசாயத்தை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட இஃது ஒரு ஆரம்பம் என்ற வழக்கமான பல்லவியை ஒருபக்கமாக வைத்துவிட்டு கடந்தகாலத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

உலகப்போர்களின்போது மிச்சமான வெடிமருந்துகளை விவசாயத்துக்கு திருப்பிவிட்டு பசுமைப்புரட்சி உண்டாக்கி விவசாயத்தைக் கெடுத்தார்கள் என்ற வசனம் ரொம்பவும் அறுவையாக இருக்கிறது. அதனால் அதுவும் இப்போது வேண்டாம்.

உர நிறுவனங்களுக்கு யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களில் 21 கிரேடுகள், ஆலைகளில் பலதரப்பட்ட எரிபொருட்கள் பயன்பாடு இருப்பதால் மானியமும் பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது. உதாரணமாக யூரியா தயாரிக்க 80% செலவு கேஸ் வாங்குவதற்கு மட்டுமே. அந்த கணக்குகளின் அடிப்படையிலேயே மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல பங்களாதேசத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்குகள் பிரசித்தி பெற்றவை. சிட்டகாங் துறைமுகத்தில் நின்ற ஒரு கப்பலிலிருந்து 13500 டன் யூரியாவைக் காணவில்லை என்ற வழக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்று. தமிழகத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்கு ஒன்றை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.

1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் மகன் பிரபாகர் ராவ் National Fertilizers Ltd நிறுவனத்தின் இரண்டு இலட்சம் டன் யூரியா இறக்குமதியில் ஊழலில் சிக்கி கைதானது ஒரு புகழ்பெற்ற வழக்கு. 2008-ஆம் ஆண்டு 3153 டன் பொட்டாஷ் சென்னை துறைமுகத்திலிருந்து ‘காணாமல் போன’ வழக்கை CB-CID விசாரித்தது மற்றொரு புகழ்பெற்ற வழக்கு. பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பொட்டாசியம் குளோரைடு மடைமாற்றம் செய்யப்படுவது சாதாரணமாக நடந்துவந்த ஒன்று. மானியவிலையில் ஒரு டன் பொட்டாஷ் 4500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கிடைத்தபோது அதன் இண்டஸ்ட்ரியல் கிரேடு விலை 30000 ரூபாய்.

தனிநபர்கள்தான் என்றில்லை. அரசு நிறுவனங்களும் இத்தகைய மானிய உரங்களை ஆட்டையைப்போடுவது புதிதல்ல. TANFED மூலம் விவசாயிகளுக்கு வழங்கவிருந்த DAP உரத்தை TNPL நிறுவனமானது Sludge treatment-க்காக வாங்கியதும் மற்றொரு அரசுத்துறை நிறுவனமான பால்மர் லாரீ (Balmer Lawrie) உரங்களை ஒரு இரசாயன இடுபொருளாக ஆலைகளில் பயன்படுத்தியதுமாக ஒரு வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்தது துறைசார் மக்களுக்கு நினைவிருக்கும்.

பல்லாயிரம் கோடிகள் புரளும் இந்திய உரச்சந்தை உலகளவில் பல கோடீசுவரர்களால் உற்றுநோக்கப்படும் ஒன்று. நார்வே நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற, மிகப்பெரிய உர நிறுவனமான யாரா (Yara) இந்தியாவில் அரசுத்துறை நிறுவனமான கிரிப்கோ (Krishak Bharathi Cooperative Ltd) உடன் ஒரு கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட ஒரு மில்லியன் டாலர் இலஞ்சம் கொடுத்து, பின்னர் அதை ஒப்புக்கொண்டு 48 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது வரலாறு.

உள்நாடு, வெளிநாடு என்றில்லை உள்ளூர் பிரமுகர்களும் உர மானியத்தை சாப்பிட ஊழலில் ஈடுபடுவது புதிதல்ல. கலப்பு உரம் தயாரிக்க மானியத்தில் வரும் நேரடி உரங்களை திருடும் பாணி அலாதியானது. பெரிய கிட்டங்கி உரிமம் வைத்திருக்கும் பலரும் கலப்பு உரத் தொழிற்சாலை வைத்திருப்பர். Use No Hooks என்று அத்தனை உரமூட்டைகளின் மீதும் எழுதியிருக்கும். ஆனால் லோடிங், அன்லோடிங் செய்யும்போது குத்தூசியைப் பயன்படுத்தி மூட்டைகளை கையாளுவதை ஊக்குவித்து கொஞ்சூண்டு உரம் சிந்திக்கொண்டே செல்லும்படி செய்யவேண்டியது; மூட்டைக்கு அரைகிலோவரை கொட்டிவிடும். அதைக் கூட்டி அள்ளி கலப்பு உரத்துடன் கலந்துவிட்டால் காசு!

வேப்பெண்ணெய் பூசப்பட்ட யூரியா வருவதற்குமுன் கோழித்தீவனம், டெக்ஸ்டைல், மீன்பண்ணை என பல இடங்களில் மானியவிலை யூரியா மடைமாற்றம் செய்யப்பட்டது வரலாறு.

விவசாயி என்ற போர்வையில் பல்லாயிரம்பேர் சுரண்டித்தின்று வயிறு வளர்க்கின்றனர். வெகுசிலர் அதன் உச்சகட்ட சுரண்டலின் அடையாளமாக திகழ்கின்றனர். ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டிய ஒரு புகழ்பெற்ற விவசாயி ஜெயலலிதா; வேட்புமனுவில்கூட தொழில் என்ற இடத்தில் விவசாயி என்று குறிப்பிட்டிருந்தார். சரத் பவார் மகள் கடலைமிட்டாய் புகழ் சுப்ரியா சூலே ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் மற்றொரு விவசாயி. வடக்கில் அமிதாப் பச்சன் என்ற இன்னொரு விவசாயிகூட இருக்கிறார்.

ஊழலை ஒழிப்பது, இயற்கை விவசாயம் செய்வது போன்ற வார்த்தைகள் பொத்தாம்பொதுவான ஒன்று. அதற்கு வழிமுறைகளோ, இலக்குகளோ கிடையாது. சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை பட்ஜெட் போடும்போதெல்லாம் ஒரு ரூபாயில் பத்துகாசு மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது என்று சொல்வது சம்பிரதாயமாகிவிட்டது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு வழங்கி, மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தி, பயனாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே உறவு இருக்கவேண்டும் ஏனையவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று மன்மோகன்சிங் என்ற ஒருவர் சொன்னபோது உலகவங்கியின் கைக்கூலி என்று வசைபாடப்பட்டார். இந்தியாவில் இதெல்லாம் வாய்ப்பேயில்லை என்று கெக்கலித்த அமாவாசைகள், நாகராஜசோழன்களாகி கடைசியில் அதே வழிமுறைகளை ஒரு சமஸ்கிருதப் பெயர்மட்டும் வைத்துவிட்டுப் பின்பற்றுவதையும் “வரலாறு என்னை மதிப்பிடட்டும்” என்று அவர் சொன்னதையும் நினைத்துப்பார்க்க வேண்டயிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்துக்கும் வரிவிதிக்கவேண்டும் என்று பிபேக் தேப்ராய் அண்மையில் சொன்னபோது அஃது அவருடைய சொந்தக்கருத்து என நிதி ஆயோக் கூட பின்வாங்கிக்கொண்டதும், அதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட கருத்தலைகளையும் கண்டோம். விவசாயம் என்ற புனித பசுவைத் தொட யாரும் விரும்புவதில்லை. நிலம் வைத்திருந்தாலே விவசாயி என்ற அடைப்பு கிடைத்துவிடுகிறது. குத்தகை வருமானத்துக்கு ஏன் வரிவிதிக்கக்கூடாது என்ற கேள்வியைக்கூட கேட்க பயப்படவேண்டிய சூழலே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி விமான நிலைய வாசலை மிதித்தவுடன் விவசாயி ஆகிவிடுகின்றனர்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலில் வரும் பவர் புரோக்கரான நாயகன் ஒருமுறை விருது ஒன்றை ‘வாங்கித்தர’ டெல்லி போனவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பார். அங்கிருக்கும் கொள்கைப்பிடிப்புமிக்க அதீத தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணாக்கர்களுடன் உரையாடும்போது பல கருத்துக்களை நடகமுறைக்கு ஒவ்வாதவொன்று மனதளவில் புறக்கணிப்பார். ஆனாலும் ஆரம்பகாலத்தில் அவருடைய அம்மா நூறுநாள் திட்டத்துக்கு வேலைக்கு போனபோது கமிசன் இல்லாமல் சம்பளம் கிடைக்காததையும் அதற்கு அத்தகைய மாணக்கர்களே போராடி கமிசன் இல்லாமல் கூலி கிடைத்ததையும், அவர்களே சமூகத்தின் அடித்தளத்தில் ஒருவகையான சமநிலையைக் கொண்டுவருவதையும் நாவலாசிரியர் சரவணன் சந்திரன் அழகாக விளக்கியிருப்பார். மன்மோகன்சிங், பிபேக் தேப்ராய் போன்றவர்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

உர விற்பனையை குறைந்தபட்ச தொழிற்கல்வியறிவு உடையவர்கள் மட்டுமே நடத்தவேண்டும் என்று மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை பின்வாசல் மூலமாக உடைத்துவிட்டிருக்கும் உள்ளூர் பிரமுகர்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. உபரிகளைச் சுரண்டித் தின்னத்தான் எவ்வளவு கூட்டம்.