விதை வியாபாரத்தில் Co-marketing மற்றும் பெண்பாற் பெயர் அலப்பறைகள்

பருத்தி விதைகளில் ஒரு இரகத்தை ஒரு நிறுவனம் தயாரித்து பல நிறுவனங்களுக்கு வழங்கி Co-marketingகாக பல பெயர்களில் விற்பனை செய்துவந்த பாணியை மகாராட்டிர அரசு தடை செய்திருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 25+ நிறுவனங்களின் விற்பனை உரிமம் முடங்கும் சூழல் உண்டாகியிருப்பதால் விற்பனைச் சங்கிலியில் உள்ள பல நூறு பேர் வேலையிழப்பார்கள். இருப்பினும் ஒரே இரகத்துக்கு பல்வேறு பெயர்களையிட்டு விவசாயிகள் குழப்பப்படுவது தவிர்க்கப்படும். இதன்மூலம் புதிய இரகங்களைக் கண்டுபிடித்து, உற்பத்தி செய்யும் நிறுவனமே விற்பனை செய்யவேண்டும்; பிற நிறுவனங்களுக்கு விற்பனை உரிமம் அளிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு வீரிய இரகமானது ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் என்ற சூழ்நிலையில் எவ்வளவு விரைவாக உற்பத்தியைக்கூட்டி விற்பனையை அதிகரிக்க முடியுமோ அதைப் பொறுத்துதான் நிறுவனத்தின் வருவாய், எதிர்காலம் அடங்கியிருக்கிறது. எந்த ஒரு நிறுவனத்துக்கும் அவ்வளவு வலுவான, விரிவான மார்க்கெட்டிங் பலம் கிடையாது என்பதால்தான் Co-marketing செய்யப்படுகிறது.

Manufactured by ஒரு நிறுவனத்தாலும் Marketed by என்பது மற்றொரு நிறுவனத்தாலும் செய்யப்படுவது அத்தனை துறைகளிலும் உண்டு. விவசாயிகள் நலனுக்காக என்று சொல்லப்பட்டாலும் ஆராய்ச்சி & அபிவிருத்தி பணிகளில் முதலீடு செய்ய பணபலம் வாய்ந்த, அதற்கான திறன் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். புதிதாக வரவிருக்கும் ஒப்பந்த சாகுபடி சட்ட வரைவில் விவசாய விளைபொருட்கள் APMC Actலிருந்து விடுதலையளிப்பதை சட்ட வல்லுநர்கள் பேசி வருவதை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.

பருத்தி விதை விற்பனைக்காக மட்டும் மகாராட்டிரத்தில் திருத்தப்படும் இந்த சட்டம் பெறும் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் அத்தனை பயிர்களுக்கும் விரிவு செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் நாமகரண குழப்பங்கள் தவிர்க்கப்படுவதோடு தரமான இரகங்களை விவசாயிகள் குழப்பமில்லாமல் தேர்ந்தெடுக்கவும், அதிகாரிகளின் தணிக்கைகளும் எளிதாக வழிவகுக்கும்.

நல்ல திறன்வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை வைத்திருக்கும் நிறுவனம் ஒரு புதிய இரகத்தைக் கண்டறிந்த பின், போதுமான விற்பனைக் கட்டமைப்பு இல்லாத பட்சத்தில் இராயல்ட்டி வாங்கிக்கொண்டு parent lineகளை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிட மட்டுமே முடியும். (சொற்ப தொகையை இராயல்ட்டியாக வாங்குவதைவிட இரண்டு வட்டிக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மூடிகிட்டு இருக்கலாமே என்று தோன்றினால் பணத்தின் அருமையை உணர்ந்திருப்பதற்காக உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்). Plant Variety Protection and Farmers Right Act குறித்து எதுவுமே தெரியாத போலி இயற்கை விவசாய மூடர்கள் இராயல்ட்டி என்ற வார்த்தையைக் கேட்டதும் இலபோதிபோ என்று குதிப்பதைக் காணலாம். ஆனால் இன்றும் வீரிய இரகங்கள் விற்பனையாகும் பயிர்கள் தவிர்த்து வாழை, துவரை, தட்டப்பயிறு என பலவற்றிலும் நிறுவனங்களைக் காட்டிலும் விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் PVP actஇல் காப்பு கோருகிறார்கள் என்பதே யதார்த்தம். அப்படியே இராயல்ட்டி தருகிறேன் என்று வாங்கும் நிறுவனம், parent line கைக்கு வந்ததும் ஆயிரம் கிலோவுக்கு கணக்கு கொடுத்துவிட்டு ஐயாயிரம் கிலோவை சந்தையில் விற்கும் என்பதை இந்தியர்களுக்கே உரிய மனப்பாங்குடன் அணுக வேண்டியிருப்பதும் காலத்தின் கட்டாயம்.

சூது கவ்வும் படத்தில் ‘கிளி ஜோசியம் சொல்றவன், புரோட்டா மாஸ்டர் எல்லாம் ரியல் எஸ்டேட் பண்ணுனா இப்படித்தான்’ என்று ஒரு டயலாக் வரும். அந்த மாதிரியே இன்று எதற்கும் இலாயக்கில்லாதவர்கள், வேலை செய்ய கையாலாகாதவர்கள், கம்பெனிகளில் கைங்கரியத்தைக் காட்டியதால் துரத்தியடிக்கப்பட்டவர்கள் என பலரும் வந்து wholesale distribution செய்கிறேன் என்று திடீரென வந்து விசிட்டிங் கார்டை நீட்டுவதும், அதற்கு கண்ட குப்பைகளை ஏதாவது ஒரு பெயரில் சப்ளை செய்ய பெங்களூரு, ஐதராபாத்தில் லெட்டர்பேட் கம்பெனிகள் இருப்பதும், அந்த கருமத்தையெல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருப்பதும் காலக்கொடுமை.

விரல்விட்டு எண்ணக்கூடிய ஏழெட்டு நிறுவனங்களில் மட்டுமே வலுவான ஆராய்ச்சியாளர்களும்,அதற்கான பணபலமும் உண்டு. அவர்களது குழு கண்டறியும் நம்பர் ஒன் இரகத்தை அவர்களே வைத்துக்கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வரும் இரகங்களின் parental linesஐ ஏதாவது ஒரு நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்கி புதிய இரகம் என சந்தையில் வெளியிடுவது வழக்கம். அதில் பத்தில் ஏழு இரகங்களுக்கு பெண்களின் பெயரே சூட்டப்படும்; ஏன் அப்படி பெண்பாற் பெயர்கள் வைக்க வேண்டும் என்றால் யாருக்கும் தெரியாது. வண்டியில் எலுமிச்சம்பழம் கட்டினால் நன்றாக ஓடும் என்பது மாதிரி.

தொழில்முறை காய்கறி நாற்றாங்கால் உற்பத்தியாளர்கள், விதை விற்பனை செய்யும் டீலர்கள் என பலருடனும் அலைபேசியில் உரையாடும்போது நேரடியாக விசயத்துக்கு வந்துவிடுவது வழக்கம். எங்களுடைய வீட்டின் மதில் சுவரில் தொங்கிக்கொண்டு தொழில் சார்ந்த விவகாரங்களைப் பேசினால் பக்கத்து வீட்டினர் படாரென ஜன்னலை சாத்துவதும், ஆனால் தொடர்ந்து ஜன்னலுக்கு அருகிலேயே நின்று கேட்பதும், நான் வரும்போதும் போகும்போதும் என்னைப் பார்த்து கிசுகிசுப்பதும் பல மாதங்களாக புரிந்து கொள்ள முடியாமலேயே இருந்தது. என்னுடைய தொழில் சார்ந்த வழக்கமான உரையாடல் பெரும்பாலும் இவ்வாறாக அமைந்திருக்கும்.

கடைக்காரர்: “வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா?”

நான்: “வணக்கம்ணா, சூப்பரா இருக்கேன். எப்படி இருக்கீங்ணா, கடை எப்படி போகுது?”

க.கா: “பரவால்லீங்க. அப்படியே போகுது. அப்புறம், தக்காளில தீப்தினு ஒரு இரகம் வந்துருக்காமே, எப்படிங்க இருக்குது? எங்காச்சும் பாத்தீங்களா?”

நான்: “பாத்தேங்ணா. ஓரளவுக்கு பரவால்ல மாதிரி தெரியுது. ஆனா காயி சைஸ் பத்தாது. கலரும் கொஞ்சம் கம்மி. திண்டுக்கல் மார்க்கெட் ஆளுங்களுக்கு ஓக்கே. ஆனா இந்த உடுமலை ஆளுங்களுக்கு எவ்ளோ பெரிய சைஸ் இருந்தாலும் பத்தலன்னுதான் சொல்லுவாங்க. ரெண்டு சீசன் முடிஞ்சாத்தான் தெரியும்ங்ணா”.

க.கா: “ஐஸ்வர்யாவ பத்தி என்ன ஃபீட்பேக் வருதுங்க?”

நான்: ஐஸ்வர்யாவுல சொல்லிக்கற மாதிரி ஒன்னுமில்லீங்ணா. ஹைட்டு பத்தாது. காயி ஷேப்பு கசமுசன்னு இருக்குதுங்ணா. நாட்டு இரகம்னும் சொல்ல முடியாது, ஹைபிரிட்னும் சொல்ல முடியாது. ஐஸ்வர்யாவ நம்பி பணத்தை இறக்கிடாதீங்க”.

க.கா: “லஷ்மி இன்னமும் மர்க்கெட்ல இருக்குதுங்ளா?”

நான்: “லஷ்மிலாம் மார்க்கெட்டுக்கு வந்து பத்து வருசத்துக்கு மேல ஆச்சு. யாருக்கு தெரியாம இருக்குது. எங்க போனாலும் புதுசா எதுனா மார்க்கெட்டுக்கு வந்துருக்கான்னுதான் கேக்கறாங்க. அதெல்லாம் அல்மோஸ்ட் முடிஞ்சு போன ஐட்டம்ணா. ஆனா அவங்களாலயே லஷ்மிய ரிப்ளேஸ் பண்ற மாதிரி எதையுமே மார்க்கெட்ல இறக்க முடியல”.

க.கா: “அப்புறம் இந்த மதுமிதா எப்படி இருக்குதுங்க?”

நான்: “மதுமிதாவா? கோயமுத்தூரு, உடுமலை மார்க்கெட்ல எனக்கு தெரிஞ்சு எங்கயுமே காணோம். யாரு டீல் பண்றாங்க?”

க.கா: “அது தெரியலீங்க. மதுமிதா நல்லாருக்குன்னு நியூசு. அப்புறம், பவானிக்கான்னு ஒரு இரகம் வந்திருக்காமே?”.

நான்: “பவானிக்காவா? தெரியலீங்ணா, இப்பதான் கேள்விப்படறேன்”.

க.கா: ” ரைட்டுங்க. பாத்தீங்கன்னா தகவல் சொல்லுங்க”.

நான்: “ஓக்கேங்ணா. மதுமிதா, பவானிக்கா ரெண்டையும் எங்காச்சும் பாத்தேன்னா கண்டிப்பா சொல்றேங்ணா”.

இம்மாதிரியான தொழில்சார்ந்த உரையாடல்கள் வெகுநேரம் நடக்கும். அலைபேசியில் பேசுகையில் ஒன்சைடாக இதைக் கேட்பவரகள் நாங்கள் ஏதோ ஒரு ‘மாதிரியான’ தொழிலில் ஈடுபட்டிருப்பதாக கருதுவதில் வியப்பேதுமில்லை. பலருக்கும் பயணங்களின்போது போன் பேசுகையில் தர்மசங்கடங்கள் உண்டாகியிருக்கின்றன.

Co-marketing இன் சாதக பாதங்கள் ஒருபுறம் இருக்க, பெண்களின் பெயர்களை இரங்களுக்கு வைக்கும் மூட நம்பிக்கை ஒருபுறம் இருக்க, இந்தியாவின் தலைசிறந்த தமிழக அரசு வேளாண்மைத்துறையின் விதைச் சான்றளிப்புத்துறை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று செய்யும் அக்கப்போர் சந்தி சிரிக்கிறது. ஆன்லைன் மூலம் விதை இருப்பு நிலவரத்தை அதிகாரிகளுக்கு அனுப்பும்போது realtime நிலவரம் அவர்களது அலுவலத்திலேயே, ஏன் அலைபேசியிலேயே தெரிந்து விடுகிறது. இருப்பினும் வாரந்தோறும் அதை பிரின்ட் எடுத்து கையொப்பமிட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், மாதாந்திர அறிக்கையும் கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று கடைக்காரர்களை நிர்பந்திப்பதையும் பார்க்கும்போது பல ஓய்வுபெற்ற அதிகாரிகள் பணி நீட்டிப்பு வங்கிக்கொண்டு டிபார்ட்மென்ட்டை கரையான்போல் அடியில் இருந்து அரித்து அரித்து காப்பாற்றி வருகிறார்கள் என்று தெரிய வருகிறது.