எங்கள் கிராமத்தின் பரிணாம வளர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வாத்து-கா-கெபாப் உண்ட கையோடு ஒரு புள்ளிவிவரத்தை தயார்செய்து குறுக்கும்நெடுக்குமாக ஓட்டியதில் சில தகவல்களை குறிப்பிட்டாக வேண்டும் என்று தோன்றியது.

எங்கள் ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் சில வீடுகள் தோட்டங்களில் உள்ளன. அந்த காலத்தில் பிராமணர்களிடம் இருந்த நிலம் என்பதால் அரசாங்க ரெக்கார்டுகளில் இன்னமும் அக்ரஹார மணப்பள்ளி என்றுதான் இருக்கிறது. அதன்பின் யாரும் நிலங்களை விற்கவோ வாங்கவோ இல்லையென்றாலும் பாகப்பிரிவினை பத்திரங்களில் எல்லாம் கைநாட்டுகளை மட்டுமே பார்க்கமுடியும். முதன்முறையாகவும் கடைசியாகவும் கி.பி. 2001-இல் தார்சாலை போடப்பட்டது.

சராசரி நில உடைமை என்பது சுமார் ஐந்து ஏக்கர்கள், விவசாயம் மட்டுமே பிரதானத் தொழில், வங்கிகளில் கடன் வாங்கி வட்டி கட்டியே வாழ்க்கையை ஓட்டி வந்தனர். ஜெர்சி/சிந்து மாடுகள், எருமைகள், ஆடுகள் இல்லாத வீடு கிடையாது. அதிகபட்ச கல்வித்தகுதி SSLC பாஸ் அல்லது பெயில். பெரும்பாலான பெண்கள் ஐந்தாவது முதல் எட்டாவது வரை படித்தவர்கள், கணிசமான எண்ணிக்கையில் கைநாட்டும் இருக்கிறார்கள். அவர்களது வாரிசு தலைமுறையானது குடும்பக்கட்டுப்பாட்டு பிரச்சாரங்கள் வெற்றிகரமாக செயல்படும்போது ஏற்பட்ட Baby boom மூலமாக 80-களின் இறுதியில், 90-களில் பள்ளி செல்ல ஆரம்பித்தவர்கள். அவர்களது திருமண காரணங்களுக்காகவே பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் பல வீடுகள் விறகு அடுப்பிலிருந்து இலவச கேஸ் இணைப்புத் திட்டம் வாயிலாக LPG சிலிண்டருக்கு மாறியது.

ஊருக்குள் எங்கள் தலைமுறையின் தற்போதைய கல்வித்தகுதியையும் அதன் எண்ணிக்கையையும் கீழே பார்க்கலாம்.
Ph.D – 1
M.V.Sc – 1
M.Sc Agri – 1
M.E. – 1
M.Phil – 1
M.Sc – 7
B.E – 9
B.A – 4
B.Sc – 2
B.B.A – 1
Diploma – 2
+2 – 4
SSLC – 1

அரசாங்க உத்தியோகம், ஆன்சைட், கார்ப்பரேட் வேலை, சொந்தத்தொழில் என வாரிசுகள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் பழைய ஆட்களே விவசாயம் செய்துவருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கிறதாம்; அதனால் ஒவ்வொரு வீடாக ஏசி பொருத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று கோடைகளுக்குள் அனைத்து வீடுகளும் ஏசி வந்துவிடும்போல தெரிகிறது. ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், i20, xuv500, பென்ஸ் கார்கள் புழுதியைக் கிளப்பியவண்ணம் வந்து செல்கின்றன.

கூரை கூட இல்லாமல் பிள்ளையார் என நடப்பட்டிருந்த இரண்டு மூன்று கற்சிலைகளுக்கு நடுவில் அவ்வப்போது நாய்கள் படுத்துக் கிடக்கும். கடந்தவருடம் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டு ஶ்ரீ செல்வ விநாயகர் என பெயரிடப்பட்டதுடன் கர்ப்பகிரஹத்துக்குள் ஐயரைத் தவிர ஊர்க்காரர்கள் செல்வது தடை செய்யப்பட்டுவிட்டது. பண்டாரம் மணியடிப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பதால் எப்போதாவது ஒருமுறை வந்து சென்றவரும் நிறுத்தப்பட்டுவிட்டார். அமாவாஸ்யை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி என மாதத்தில் மூன்று நான்கு நாட்களுக்கு ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என ரேடியோசெட்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்குமளவுக்கு பாடுகிறது.

எல்லைக்கருப்பன் இப்போது ஶ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகி கோழி, கிடா வெட்டவேண்டாம் சரக்கரைப்பொங்கல் போதும் என்று சொல்லிவிட்டது. ஜெர்சி, எருமைப் பாலைவிட நாட்டுமாட்டுப்பால் உடலுக்கு நல்லது என்பதால் நாட்டுமாடுகள் வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சைக்கிள், TVS50-களைவிட ஆக்டிவா, ஸ்கூட்டிகளில் சென்றால் உடம்புவலி ஏற்படுவதில்லையாம். மோடி நிர்வாகம் செம்மையாக இருப்பதாகவும் தமிழகத்தில் பாஜக இல்லாமல் போனது பெரிய இழப்பு என விஷேசங்களின்போது வெற்றிலைபாக்கு குதப்பியவாறே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தவாறு அளவளாவுகின்றனர்.

இதையெல்லாம் பார்த்தபிறகு பாஜக ஆளும் மாநிலங்கள் போல தமிழகமும் ஆக வேண்டும் என்று எனக்கும் தோன்றுவது ஆச்சரியமில்லைதானே?