ஹைபிரிட் தக்காளியும், மியூடன்ட் தக்காளியும் – சில முட்டாள் ஆர்வலர்களும்

தமிழகத்தில் ஹைபிரிட் தக்காளி விதைகள் ஆண்டுக்கு தோராயமாக ஐந்து டன் விற்கிறது. ஓர் ஏக்கர் நடவுசெய்ய 60 கிராம் மட்டுமே போதுமானது. ஏக்கருக்கு 20 டன் தக்காளிப்பழ மகசூல் கிடைக்கும். அப்படியேனில் ஓராண்டுக்கு எத்தனை ஏக்கர்களில் எத்தனை டன் தக்காளி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதில் கணிசமான அளவு கேரளாவுக்குச் செல்கிறது.

நாட்டுத் தக்காளி ஓர் ஏக்கர் நடவுசெய்ய 150 கிராம் விதை தேவைப்படும். ஓர் ஏக்கருக்கு தோராயமாக 10 டன் மகசூல் கிடைக்கும். இதன்படி எத்தனை டன் விதை ஆண்டுக்குத் தேவை, ஹைபிரிட் இரகங்களின் பாதி மகசூல் மட்டுமே ஏக்கருக்கு கிடைப்பதால் கூடுதலாக எத்தனை ஆயிரம் ஏக்கர் வேண்டும், அதற்கான தண்ணீர், இடுபொருட்கள், உடலுழைப்பு என ஆகும் கூடுதல் விரயம் எவ்வளவு என்ற கணக்கையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நாட்டுத்தக்காளி இரகங்களை மட்டுமே உண்ணவேண்டும், ஹைபி்ரிட் இரகங்களை புறக்கணிக்கவேண்டும் என்று அவ்வப்போது சில நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்கள் கருத்து வெளியிடுவார்கள். அத்தகைய மூடத்தனத்தின் ஏகபோக குத்தகையை வைத்திருந்த பசுமை விகடனை விஞ்சுமளவுக்கு குமுதத்தின் ‘மண்வாசனை’ இப்போது களம் இறங்கியிருக்கிறது.

விவசாய ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரே நாட்டுத்தக்காளி இரகம் பெரியகுளம் 1 எனப்படும் PKM 1. கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் இரகங்கள் அதிக வெயிலைத் தாங்கும் தன்மையற்றவை, செயற்கையாக விலையேற்றம் செய்ய விதைகளைப் பதுக்கிவிட்டார்கள், அரசு விதைப்பண்ணை அதிகாரிகளும் அதற்கு துணைபோகிறார்கள் என்று ஓர் ஆர்வலர் விகடனில் எழுதியதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அடிப்பொடிகள் ஆடியதைப் பார்த்து தொழில்முறையில் விதை விற்பனையில் ஈடுபட்டுள்ள பலரும் முகம் சுழித்தனர்.

விஷயத்துக்கு வருகிறேன். நாட்டு, சுதேசி ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இரகமான PKM1 என்பது அன்னஞ்சி என்ற உள்ளூர் இரகத்தின் mutant ஆகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி mutants உண்டாக்கப்படுகிறது. ஹைபிரிட் இரகங்களில் ஒரு செடியிலுள்ள மகரந்தத்தூள் மற்றொரு செடியின் சூல்முடி மீது தூவப்பட்டு விதை உண்டாக்கப்படுகிறது. Mutant இரகங்களில் விளையும் காய்கள் எவ்வளவு பாதுகாப்பனவையோ அதே அளவுக்கு ஹைபிரிட் இரகங்களில் விளையும் காய்களும் பாதுகாப்பானவை. மியூடன்ட்-களை ஏற்றுக்கொள்பவர்கள், ஹைபிரிட்-களை அறிவியலுக்கு புறம்பாணது இயற்கைக்கு மாறானது எனும்போது மூடர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

பள்ளி, கல்லூரிகள் ஒரேநேரத்தில் திறக்கப்படுவதோடு வைகாசி மாதம் பல முகூர்த்தங்கள் இருப்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருக்கும். அதையொட்டி அடுத்தமாதம் பல ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப்போவதைக் காண தயாராகுங்கள்!

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *