வெல்ஸ்பன் – மூத்த ஊழியர்களின் தவறுகளைச் சுமக்கப்போகும் பச்சாக்கள்

தரக்கட்டுப்பாடு என்பது ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சந்தையில் உறுதிப்படுத்தக்கூடிய ஒன்று. அதில் ஓட்டைகள் ஏற்படுவது என்பது நிர்வாகத்தின் உயரதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பேயில்லை. குஜராத்தின் Welspun நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவின் Target Corp-க்கு அனுப்பிய 7,50,000 மெத்தை விரிப்புகள், தலையணை உறைகளை, உயர்தர எகிப்து பருத்தி என்று இந்திய பருத்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதை அனுப்பி ஏமாற்றி வந்திருக்கிறது. தணிக்கை மூலமாகவோ அல்லது யாரோ சிலர் போட்டுக்கொடுத்த வகையிலோ விஷயம் தெரிந்ததும் மொத்தமாக வணிக உறவைத் துண்டித்திருக்கிறது அமெரிக்க நிறுவனம். Target Corp-இடம் இருந்து துணி வாங்கிய வால்மார்ட் மற்றும் பல நிறுவனங்கள் டார்கெட்டை டார்கெட் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. பங்குசந்தையில் 42% மதிப்பை இழந்ததோடு முப்பது ஆண்டுகால மரியாதையையும் இழந்திருக்கிறது Welspun. நம்பிக்கை, நாணயம், தரம், என்பதெல்லாம் தனி நபர்கள் மட்டுமல்லாது பிராண்டை உண்டாக்கும் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதற்கு மேலாண்மை மாணவர்களுக்கு மறுபடியும் ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. யாரோ ஒரு டஜன் நபர்கள் செய்த தவறுக்காக சில ஆயிரம் பேர் வேலையிழக்க போகிறார்கள்.

தனியார் நிறுவங்களில் Performance என்பது நாம் என்னதான் முக்கி மூழ்கி முத்தெடுத்தாலும் ஒருசிலர் செய்யும் தவறால் பலரது மொத்த திறமையும், வாழ்வும் வீணடிக்கப்படுவதும், தொழிற்சங்கங்கள் மூலம் குறைந்தபட்ச பணிப்பாதுகாப்பும் இல்லாத மொன்னையான சூழலில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல் பணியிட பாதுகாப்பு குறித்த குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் இருப்பதும் நம் சாபக்கேடு. அண்மையில் Ola நிறுவனம், ஒருங்கிணைப்பு என்ற பெயரில் Taxi for Sure நிறுவனத்தை 1300 கோடிக்கு வாங்கி பின்னர் மூடியபோது 750 பேர் வேலையிழந்ததையும், SnapDeal நிறுவனம் Exclusively.in-ஐ மூடியபோது ஏற்பட்ட அதிர்வுகளையும் செய்தியாக மட்டுமே பார்க்கிறோம். சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை.

எகிப்திய பருத்தி என்பது Gossypium barbadense, எனப்படும் extra-long staple cotton என்ற நீண்ட இழை பருத்தியாகும். இந்திய பருத்தி என்பது Gossypium hirsutum எனப்படும் மத்திய தர அல்லது long-staple பருத்தி என்பதாகும். சுவின் போன்ற நீண்ட இழை பருத்தி ரகங்கள் தொடர்ந்து இந்திய பருத்தியுடன் இணைத்து கலப்பினங்களை உண்டாக்கி பஞ்சின் நீளம் கூட்டப்பட்டது. மான்சான்டோவின் பி.டி. தொழில்நுட்பம் காய்ப்புழு தாக்குதலைத் தடுத்ததால் பஞ்சு நாரின் நீளம் அடிபடாமல் கிடைத்ததோடு விதைகளையும், பஞ்சையும் பிரித்தேடுக்கும் ஜின்னிங்-இன் தரமும் உயர்ந்தது. எகிப்திய பருத்தி ரகங்களை அடிப்படையாக வைத்து உண்டாக்கப்பட்ட இந்திய பருத்தி ரகங்கள், மான்சான்டோவின் காய்ப்புழு தடுப்பு தொழில்நுட்பமும் இணைந்து டெக்ஸ்டைலில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது. அந்த தரத்தின் அடிப்படையில் கிடைத்த குருட்டு தைரியத்தில் இறங்கி Welspun நிறுவனம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. எந்த ஒரு ஜின்னிங், ஸ்பின்னிங் ஆலைக்குள்ளும் சென்று அறியாமல், காலங்காலமாக பருத்தி விவசாயம் செய்து வருபவர்களையும் கேட்டறியாமல் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று பல போலி ஆர்வலர்கள், நிபுணர்கள் கூறி வருகின்றனர். அனால் களநிலவரம் சரியாகத்தான் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் வணிகம் செய்வதில் அரசு ஒருபோதும் தலையிடாது, லைசென்ஸ் ராஜ் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்குவந்த மோடி அரசு பருத்தி விதை விலையை நிர்ணயம் செய்கிறேன் பேர்வழி என்று மான்சாண்டோவும், பல தனியார் நிறுவங்களும் செய்துகொண்ட ராயல்டி ஒப்பந்தத்தில் உள்ளேபுகுந்து கட்டைப்பஞ்சாயத்து செய்தது வேறு கதை.

மேலும் படிக்க:
https://www.wsj.com/articles/more-u-s-retailers-probe-indian-supplier-of-egyptian-cotton-1472070815
http://www.cicr.org.in/pdf/ELS/general1.pdf
http://farmhub.textileexchange.org/learning-zone/glossary/measurements

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *