வடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்?

வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது. உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச்சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு நான்கு ரோடு சந்திப்பிலும் மலையாளிகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே பேக்கரி போட்டுவிட்டனர். தின்பண்டங்களில் இன்று சொந்த பிராண்டுகளில் வந்துவிட்டனர்.

தமிழகத்தில் எந்த கட்டிட உரிமையாளரும் சேட்டுபசங்களுக்குத்தான் கடை வாடகைக்குத் தருவேன் என்று சொல்வதில்லை. கம்பெனிகள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் ‘இந்திக்கார கடை ஓனர்களுக்கு மட்டும் சப்ளை செய்யப்படும்’ என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் இல்லை. ஆமை போன பாதையை வைத்து கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வாணிபம் செய்த்தாகச் சொல்லப்படும் இந்த தமிழ்குடிக்கு என்னதான் ஆயிற்று?

கணிசமாக படித்து வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்களது வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை. எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால் வியாபாரம் பண்ணித்தான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகவே ஆகிவிட்டது. ஓர் ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதில் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் காட்டும் ஆர்வத்தில் 10% கூட தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை. கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை பெற்றவர்களை, அதன்பின்னரும் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்றே பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணமாகும்வரை உயர்கல்வி கற்பது என பொழுதை ஓட்ட படிக்கப்போவது தமிழகத்தில் இப்போது ஃபேஷனாகி வருகிறது. இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதில்லை.

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கக்கூடாது, எனக்கு நான்தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமைல நான் இருக்ககூடாது என்றெல்லாம் சுயதொழில் செய்வது குறித்து இருக்கும் மாயை. இந்த நினைப்பில் தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகுசீக்கிரம் மண்ணைக் கவ்வுவதுடன் மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் கல்லுக்கட்டு சித்தர்களாகிவிடுகின்றனர். ஊரில் எவனாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் இத்தகைய நபர்களுடைய கதைகளைச் சொல்லி பலரும் பயமுறுத்துவது வழக்கம்.

வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு காசு போட்டு நாலு காசு சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்டசாதி பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும் வைத்துக்கொள்வதும் ஒரு காரணம்.

உள்ளூரில் உள்ள நபரால் தொடங்கி நடத்த முடியாத கடைகளை எப்படி சின்னச்சின்ன சேட்டு பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை விரிவாக அலசாமல் ‘அவனுங்கள்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர்’ என்று எளிதாக முடித்துக்கொள்கிறோம். எந்த தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று. Frugal management என்று எம்பிஏ-க்களில் படிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கடை திறக்கும் அவர்கள் ஒரு மணிநேரம் பின்னதாக சாத்துவதில் ஆரம்பித்து, மதிய உணவைக்கூட கல்லாவுக்கு கீழே அமர்ந்து பதினைந்து நிமிடத்தில் முடித்துக்வொள்வது முதல் குறைவான இலாபத்தில் நிறைய விற்கும் கலை வரை பலவற்றை அந்தந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களை, தேவைகளைப் பார்த்து கற்றுக்கொள்கின்றனர்.

நல்ல அனுபவமிக்க வியாபாரிகளுடன் பழகும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் தொழில் நுணுக்கங்கள், அணுகுமுறைகள் விலை மதிப்பற்றவை. கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போது வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் உட்காருங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்வீர்கள். அப்படி சொல்லி, சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டுச் சென்று வியாபாரத்தை முடிக்கும்போது அந்த வாடிக்கையாளரையும் கை கழுவுகிறீர்கள். சாப்பாட்டைப் பாதியில் மூடி வைத்துவிட்டு வாடிக்கையாளரைக் கவனிக்கையில் உளவியல் ரீதியாக மிகச்சிறந்த பிணைப்பையும், நம்பிக்கையையும் உண்டாக்க முடியும் எனபது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும். போட்டிக்கு ஆள் இல்லாதவரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார். நாலு காசு சம்பாதிக்கத்தானே கடை போட்டு/கம்பெனி ஆரம்பித்து உட்கார்ந்திருக்கிறோம் என்று எளிமையாக எடுத்துக்கொண்டு மார்வாடி, சேட்டு பையன்கள் நடத்தும் கடைகளைக் கவனமாகப் பார்த்தால் இவையெல்லாம் ஒவ்வொன்றாக பிடிபடும்.

ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடித்து நாலு காசு புரள ஆரம்பித்தவுடன் ஏலச்சீட்டு பிடிக்கிறேன், ரியல் எஸ்டேட், நாட்டுமாடு வளர்க்கிறேன் என்று லினன் சட்டை மடிப்பு கலையாமல் சப்ளையர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து ரொட்டேஷனில் விடுவது. வார இறுதியில் சீமைச் சாராயத்துடன் தோப்புகளில் கேளிக்கை, கோச்சைக் கறி விருந்து, மாதக்கடைசி பில்லிங் முடித்தவுடன் ‘ஹேப்பி எண்டிங்’ கொண்டாட்டம், சிறப்பு ஸ்கீம் விற்பனைகள் மூலம் வருடத்துக்கு இரண்டுமுறை வெளிநாட்டுப் பயணம் என திரிந்து 5-10 வருடங்களில் பெரும் நட்டத்தைச் சந்தித்து அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கு, இளைஞர்களுக்கு சொந்தத்தொழில் என்றாலே பெரும் பீதியை உண்டாக்கிவிடுவது. ஆனால் மார்வாடிகள் சிறப்பு ஸ்கீம்களில் விற்ற புள்ளிகளை கிரெடிட் நோட் போட்டு சரக்காக எடுத்து காசாக்குவார்களே தவிர தாய்லாந்து பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நம்மவர்கள் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை, சமூகத்தில் இயங்கும் விதம், பணத்தையும் நேரத்தையும் உறவுகளையும் கையாளும் விதம் என எதையுமே பார்க்காமல் அவர்களது கல்லாவில் காசு விழுவதை மட்டுமே பார்ப்பதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இந்தியாவில் தமிழகமும், குஜராத்தும்தான் பெண்களின் பெயரில் அதிக தொழில்முனைவோர்களைக் கொண்டவை. ஏகப்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்தவாறே மனைவி பெயரில் தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று. அவ்வாறு இல்லையே என்று தோன்றினால் நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

கார்ப்பரேட் எதிர்ப்பு என்றபெயரில் சில லெட்டர் பேடு டம்ளர் கட்சிகள் இளைஞர்களை படுமுட்டாளுக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன. உரிமையாளர் நிறுவனம், பங்காளி நிறுவனம், பிரைவேட் லிமிடெட் போன்றவை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர். கஷ்டப்பட்டு தொழில் நடத்தி வெற்றிகரமாக நடத்துகையில் சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாக தொழில் நொடித்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் பன்னாட்டு மாஃபியா, பனியா மாஃபியா, கார்ப்பரேட் மாஃபியா என கற்பனை பயங்களை மற்றவர்களுக்கும் பரப்புவது இவர்களது வேலை.

உதாரணமாக பிளாஸ்டிக் கவர் செய்யும் இயந்திரங்களை இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்தை வங்கியில் அடகு வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். Break even இன்னும் ஒரு வருடத்தில் வந்துவிடும் என்ற சூழலில் அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறது. பக்கத்து மாநிலத்துக்கு செல்வது அல்லது இங்கிருந்து விற்பது என எந்த முடிவு எடுத்தாலும் தொழிலை தொடர்வதற்கு மாதம் மூன்று நான்கு இலட்சம் ரூபாயை உள்ளே இறக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் தொழில் நடத்த முடியாது எனும்போது Proprietor எனப்படும் முதலாளியாக பதிவு செய்து தொழில் நடத்தியவர் படிப்படியாக வளர்ந்திருந்தாலும் சொத்து முழுவதும் வங்கிக் கடனுடன் இணைக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார். அதேநேரத்தில் படிப்படியாக வளர்ந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்து நடத்தியவரது வீடு வாசலாவது மிஞ்சும். இந்த மாதிரியான விரும்பத்தகாத சூழல்களில் சட்டப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் கார்ப்பரேட் எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு மத்தியில் சேட்டான்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வீரமிகு ஒறவுகள் விரைவில் அவர்களது கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் நாள் வரத்தான் போகிறது.

நமது இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினை சோம்பேறித்தனம். எதாச்சும் பண்ணனும் பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன? அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்திகொள்முதலுக்கு விலையே கிடையாது.

காமசூத்ரா படித்துக்கொண்டும் அதைப்பற்றி நாலு பேர் சொல்லும் கதைகளைப் கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன பயன் உண்டாகும்? அதே போல்தான் அளவுக்கதிகமான சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பதும், வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருப்பதும்.

பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை. If you don’t do it, you won’t learn it.

நம் ஊரில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் கண்ட வடக்கத்தியர்கள் இங்கே கடை விரிக்கும்போது நம்மைத் தடுப்பது எது?

விழித்துக்கொள் தமிழா!!

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *