மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள்

குஜராத்தின் இராஜ்கோட் நகரை மையமாக வைத்து ஜுனாகத், பாவ்நகர், ஜாம்நகர், சுரேந்திரநகர், அம்ரேலி எல்லாம் சேர்த்து செளராஷ்ட்ரா பிராந்தியம் எனப்படுகிறது. அப்பகுதி மக்களின் பண்புக்கூறுகளுள் ஒன்று நன்றாக எண்ணெய்/நெய் வடிய வடிய மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவார்கள். மதியம் 1 – 3 பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கும். போன் எடுக்க மாட்டார்கள்; சிலர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தூங்குவார்கள். வியாபார ரீதியாக வரும் வெளியூர்வாசிகள் அனுசரித்து போகவேண்டிய முக்கியமான நாகரிகம் இது.

அங்கிருந்த காலகட்டங்களில் மதிய உணவுக்குப் பிறகு எங்காவது மரத்தடி கடைகளில் உட்கார்ந்து மூலிகை பானம் பருகிக்கொண்டு ‘ஜீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்’ போன்ற கவித்துவமான பாடல்களைக் கேட்டவாறு அலைபேசி வழியாக காதலித்துக்கொண்டு நேரத்தைக் கொல்வது வாடிக்கையாக இருந்தது. 25 வயதுக்குள் கல்யாணமாகிவிடுவதை இயல்பாகக் கொண்டிருந்த சமூகத்தையும், கால்களில் காப்பு, வண்ணமயமான உடை, கைத்தடி, பெரிய மீசை, கடுக்கன் சகிதம் சுற்றிக்கொண்டிருக்கும் விவசாயிகளையும், பார்ப்பதற்கு எளிமையான வாழ்க்கை என்றாலும் ஷேர் ஆட்டோக்களில்கூட உயர்சாதி ஆட்களின் அருகில் உட்காராமல் தள்ளி உட்கார்ந்து செல்லும் மக்களைப் பார்த்து புரிந்துகொள்வதற்கு அந்த மதிய வேளைகள் உதவியது.

அப்போது, ஒரு வட இந்திய நிறுவனத்தின் பிரபலமான பருத்தி விதை இரகமாக “அக்கா” (Akka) இருந்தது. அந்த இரகத்துக்கு ஏகப்பட்ட கிராக்கி. MRP-க்கு மேல் கொடுத்து விவசாயிகள் வாங்கினார்கள். பல விவசாயிகள் தொலைதூரங்களில் இருந்து வந்து மார்க்கெட் முழுவதும் விசாரித்தும் விதை கிடைக்காமல் திரும்பிச் சென்றார்கள். விதைப்பெட்டிகளை ஏற்றிவரும் லாரி குஜராத் எல்லையைத் தொட்டுவிட்ட தகவல் வந்தாலே பரபரப்பு தொற்றிக்கொள்ளுமளவுக்கு இருந்தது.

பரிச்சயமான வியாபாரிகளின் கடைகளில் அமர்ந்திருக்கும்போது அங்கு வந்து விசாரிக்கும் விவசாயிகளைக் கூர்ந்து கவனித்து குஜராத்தியில் சில வார்த்தைகளைக் கற்க ஆரம்பித்திருந்தேன. “அக்கா பியாரன் ச்சே?” (அக்கா விதை இருக்கிறதா?) என்று கேட்டு பலர் தொலைதூர ஊர்ப்பெயர்களைச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளியில் பலர் வந்து சென்றார்கள். மதியம் ஒரு சாலையோரக் கடையில் மூலிகைப்பானம் அருந்திக்கொண்டிருந்தபோது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் தெரிந்த அந்த வண்ணமயமான உடையணிந்த விவசாயிகள் ஒரே வேனில் ஏறிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்தநாள் இதே ஆட்களை பக்கத்து ஊர் மார்க்கெட்டில் பார்க்கையில் அடையாளம் தெரிந்தது; அவர்கள் வந்திருந்த வேன் உட்பட. சிலமாதங்கள் கழித்து அந்த கம்பெனியில் வேலை செய்த ஒருவர் நண்பரானார். நேரடியாக அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாக டிமாண்டை கூட்டவும், கடைக்காரர்களிடம் இரகத்திற்கு டிமாண்ட் இருப்பதற்கான நம்பிக்கையை உண்டாக்கவும், மற்ற ஊர்களில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவும் கம்பெனி தரப்பில் ஒரு புதிய உபாயத்தைக் கையாண்டதாகவும் தெரிவித்தார்.

********************************************

திண்டுக்கல் அருகே ஒரு புதிய உணவகம் திறந்தார்கள். விசாலமான பார்க்கிங் வசதியுடன் பிரதான சாலையில் அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் ஒரு திறமையான இளைஞர். அருகிலிருந்த ஆட்டோ பைனான்ஸ் கம்பெனி அதிபரிடம் ஒரு டீல் பேசியிருக்கிறார். அதன்படி தவணை கட்டாததால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்களை பைனான்ஸ் கம்பெனியின் இடத்திலிருந்து எடுத்துவந்து உணவகத்தின் முன்புறம் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திக்கொள்வது. கார், பைக் என எதை ஜப்தி செய்து எடுத்துவந்தாலும் உணவகத்தின் முன் நிறுத்தச்செய்து, அவற்றைத் துடைத்து சுத்தபத்தமாக பார்த்துக்கொண்டார்.

பளிச்சென்ற கார், பைக்குகள் நிறைய நிற்பதால் நிச்சயமாக நல்ல உணவகமாக இருக்கும் என்று காரோட்டிகள் நிறுத்தி, குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் வோல்வோ பேருந்துகள்கூட நின்று செல்ல ஆரம்பித்தன. ஒரு செக்யூரிட்டி நிறுத்தி கார்களை ஒழுங்குபடுத்தி பார்க் செய்யுமளவுக்கு வியாபாரம் வளர்ந்துவிட்டது.

************************************

மேற்கண்ட இரண்டுமே விற்பனையை அதிகரிக்க செய்வதற்கான தந்திரோபாயங்கள். முன்னது ஒரு கார்ப்பரேட் கம்பெனியால் செய்யப்பட்டது. பின்னது ஒரு தனிநபரால் செய்யப்பட்டது. இரண்டிலுமே வாடிக்கையாளருக்கு பொருள் குறித்த தவறான தகவல்களைத் தந்தோ, தரக்குறைவான பொருளை விற்றோ ஏமாற்றவில்லை. இஃது ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் பொதுப்புத்தியில் தனிநபர் செய்தால் புத்திசாலித்தனம் என்றும், கம்பெனி செய்தால் ஏமாற்றுவேலை, சதி, தில்லுமுல்லு என்றும் சொல்லப்படுகிறது. தனிநபரின் face value-க்காக அனுசரித்துக்கொள்ளும் நாம், முகமில்லாத கம்பெனி என்பதால் முஷ்டியை மடக்குகிறோமா அல்லது different formats of business என்பது குறித்த புரிதல் இல்லையா? இது சரியா, தவறா, வேறு ஏதாவது வழிவகை உண்டா?

உங்களுக்கு தோன்றுவதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *