சினிமா விமர்சனம் எனும் புள்ளப்பூச்சி டார்ச்சர்கள்

இதுக்கு பேர்தான் புள்ளப்பூச்சி. பேர்தான் புள்ளப்பூச்சி (mole cricket) என்றாலும் இதற்கு சுவாரசியமான பின்னனி இருக்கிறது. இது மண்ணுக்குள் பதுங்கியிருந்து இரவில் இரைதேடும் பழக்கமுடையது. மண்ணை தோண்டுவதற்கு ஏதுவாக இதன் முன்னங்கால்கள் மிக வலுவானவை மேலும் அதிவேகமாக தோண்டக்கூடியவை. இராணுவத்திலும், காவல்துறையிலும் அந்த காலத்தில் குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைப்பதற்காக செய்யப்படும் சித்ரவதைகளில் இந்த புள்ளப்பூச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது. இரண்டு மூன்று பூச்சிகளைப் பிடித்து குற்றவாளியின் தொப்புள்மீது விட்டு டம்ளர் அல்லது கொட்டாங்குச்சியை வைத்து மூடி பிடித்துக்கொள்வார்கள். இந்த பூச்சி குழிபறிக்க ஆரம்பித்தால் நேர்கோட்டில் வெறித்தனமான வேகத்தில் தோண்டி மண்ணை ஓரத்தில் வீசிக்கொண்டே உள்ளே நுழையும். அதே பாணியில் தொப்புளை மூன்று, நான்கு பூச்சிகள் இரத்தம் வரவர தோண்டினால் எந்த அசாதாரண மனிதனும் கதறிவிடுவான்.

இரவுநேரத்தில் கிரிக், கிரிக், கிரிக் என்ற ஓசையை எழுப்புவது இந்த பூச்சிதான். பழைய படங்களில் இரவில் வில்லன் வரும்போதும், சிலநேரங்களில் ரொமான்ஸ் பாட்டின்போதும் பின்னணி ஓசையாக இந்த சத்தத்தைக் கேட்டிருக்கக்கூடும். இந்த சத்தங்களின் ஆராய்ச்சியும் சுவாரசியமானது. http://www.brisbaneinsects.com/brisbane_crickets/MoleCricket.htm

இது மட்டுமல்லாது பல பூச்சிகளின் பங்கு Forensic entomology-யில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பிணத்தின் மீது இருக்கும் பூச்சிகள், அதன் வளர்ச்சி, பருவசூழ்நிலை எந்தெந்த வகையான பூச்சிகள் இருக்கின்றன என்பதை வைத்து இறந்து எத்தனை நாள் ஆகியிருக்கலாம் என்பதை spot postmortem செய்கையில் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ஒருவேளை பூச்சிகளே இல்லாமல் பிணம் அழுகியிருக்கிறது என்றால் விஷம் மூலமாக மரணம் நேர்ந்திருக்கிறது என்ற கோணத்தில் வழக்கு நகரும்.
https://en.m.wikipedia.org/wiki/Forensic_entomology
இராஜேஷ்குமார் நாவல்கள் படித்து வளர்ந்த சமூகம் இதை நன்றாக அறியும்.

ஓரிடத்தில் கழுகுகள், பறவைகள் வட்டமிடுவது, குறுக்கே பறக்கும் பூச்சிகளின் வகைகளை வைத்து தூரத்தில் பிணம் கிடக்கிறது என்பதை சொல்லிவிடலாம். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் அமெரிக்கா சென்று ஓரிடத்தில் இருக்கும் புழுக்களைப் பார்த்து அங்கே தோண்டச்சொல்லி பிணத்தை எடுப்பது forensic entomology-யில் தமிழ்ப்படங்களில் வந்த கிளாசிக். பல மெடிக்கோ, சைக்கோ, லீகல், என்டமாலஜிக்கல் குறியீடுகள் நிறைந்த அந்ந படத்தைப் பற்றி இதற்குமேலும் பேசினால் பலரும் இதெல்லாம் அந்தக்கால கருடபுராணத்திலேயே கிருமிபோஜனம், மிருகினஜம்போ என்றெல்லாம் இருக்கிறது, வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே forensic entomology பாரதத்தில் இருந்தது, ஓரிடத்திற்குள் நுழையும்போது அங்கிருக்கும் உயிரினங்களை scouting செய்து செத்த விலங்கு எவ்வளவு தூரத்தில் உள்ளது, செத்து எத்தனை நாளானது என்பதெல்லாம் கிராமப்புறத்தில் ஆடுமேய்த்த அனுபவமுள்ளவர்களுக்கே தெரியும், அதைத்தான் ‘ராகவன் இன்ஸ்ட்டிங்ட்’ என்று குறியீடு வழங்கினர். மேலும் திராவிட அரசுகள்தான் வேண்டுமென்றே நமது பாரம்பரியத்தை அழித்து ‘பேசிக் இன்ஸ்ட்டிங்ட்’ போன்ற படம் மூலம் எரோட்டிக் குறியீடுகளை நிறுவினர் என்று சொல்லக்கூடும்.

இத்தகைய காத்திரமான சமகால விமர்சனங்கள் நமது தொன்ம விகுதிகளைப் பகடி செய்வதால் சமகாலப் படிமங்களை காட்சிப்பொருளாக்காமால் விட்டு, முதிர்ச்சியடைந்த சமூக சிந்தனைக்களத்தை எதிர்பார்ப்பது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது என்பதோடு அது நானாகவே புள்ளப்பூச்சியை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டதாகிவிடும்.

அறுபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக காத்திரமான விமர்சனப்பார்வை என்றபெயரில் சகமனிதனை சாகடிக்கும் இந்த சமகாலக் கொடூரம் இந்த லிங்கில் பத்தாவதாக சேர்கிறது.
http://mentalfloss.com/article/23038/9-insane-torture-techniques

#இறைவி அலப்பறைகள்

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *