ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஐஏஎஸ் என்ற பதவியும் தேவையே இல்லாமல் சும்மா அலங்காரத்துக்குத் தொங்கிக் கொண்டிருப்பவையா?

ஆளுநர் என்ற ஒரு பதவி எதற்காக இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத மாதிரி சமகாலத்துக்குப் பொருந்தாத, தேவையே இல்லாத, outdated பதவிகளில் ஐஏஎஸ் என்ற பதவியும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாமல் அப்படியே இருப்பதால் இன்றைய காலகட்டத்திற்கு relevance இல்லாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

என்பதுகள் வரைக்கும் படித்த, பல்துறை ஞானம் நிறைந்த இளைஞர்கள் நிர்வாகத்திற்கு கிடைப்பது அரிதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழங்கள் பல வந்த பிறகு, இட ஒதுக்கீட்டு முறை புகுத்தப்பட்ட பிறகு சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலிருந்தும், வெவ்வேறு பின்புலங்களிலிருந்து இளைஞர்கள் நிர்வாகத்துக்கு வர ஆரம்பித்தனர்.

தொன்னூறுகளில் சந்தை திறந்துவிடப்பட்ட போதும், 2000-க்கு பிறகான ஐ.டி. புரட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று உட்கார்ந்திருக்கிறது இந்த நிர்வாக அமைப்பு முறை.

ஒரு தேர்வில் 80 மதிப்பெண் வாங்குபவருக்கும், 85 மதிப்பெண் வாங்குபவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடும் என்று நம்புகிறீர்கள்? ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு நபருடைய கடின உழைப்பு, நீதி, நேர்மை, திட்டமிடல், நேரந்தவறாமை லஜக், மொஜக், பஜக் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அவை 49%-உம், அதிர்ஷ்டம் என்பது 51%-உம் உண்டு. குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெறுவதிலும் 49% உழைப்பு, 51% அதிர்ஷ்டம் என்ற லாஜிக்-தான் வேலை செய்கிறது.

ஐந்து நேர்முகத்தேர்வுக்குச் சென்று தோற்றவர்களும் உண்டு. முதல் தேர்விலேயே வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆனவர்களும் உண்டு. ஒரே ஒரு கேள்வி சரியாக உட்கார்ந்த காரணத்தினால் ஒருவர் பத்து இருபது மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று ஐஏஎஸ் ஆகிறார் என்றால், காலத்திற்கும் அவர்தான் திறமையின் மறுவடிவம் என்று அத்தனை துறைகளுக்குமான முதன்மை அதிகாரியாகப் போடுவதுதான் நமது நிர்வாகத்திலுள்ள மிகப்பெரிய பலவீனம். (இந்த இடத்தில், அந்த ஒரு கேள்விக்கு சரியாக பதில் எழுத அவர் போட்ட உழைப்பு எவ்வளவு தெரியுமா என்று முட்டுக்கொடுப்பது, தான் எவ்வளவு பாசிடிவ் திங்கிங் உள்ள நபர் என்று காட்டிக்கொள்ளத்தானே அன்றி வேறில்லை).

மொத்தமுள்ள 24 பணிகளில் ஐஏஎஸ் தவிர மீதமுள்ள அனைத்தும் Speciality வகையைச் சேர்ந்தவை. காவல்துறை அதிகாரியாக, தபால்துறை அதிகாரியாக, etc என அதில் சேருபவர்கள் கடைசிவரைக்கும் அதிலேயே இருக்கின்றனர். அதனால் அந்தத் துறையின் ஆழமான ஞானத்துடன் விற்பன்னராகின்றனர்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி – படிப்பு/பயிற்சிக் காலம் முடிந்த பிறகு – வாரத்துக்கு ஒரு புதிய விஷயம்தான் கற்க முடியும். நான் தினசரி புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சும்மா கதைவிடுவது வேறு. பத்து வருடங்களில் விடுமுறை எல்லாம் போகப் பார்த்தால் (10×50=500) ஒரு நபர் 500 விஷயங்களைக் கற்றிருக்க முடியும். அவர்கள்தான் ஒரு துறையின் expert category. 15-20 வருடங்களில் அவர்கள் veteran வகையினர். சும்மா சீட்டைத் தேய்த்திருந்தாலும் கூட அந்தந்த்த் துறை சார்ந்த குறைந்தபட்ச ஞானம் வந்திருக்கும்.

ஐஏஎஸ்-ஐப் பொறுத்த வரையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு துறைகளுக்கு மாறிவிடுவதால் இந்தப் பிரிவினர் எதிலுமே எக்ஸ்பர்ட் ஆவதில்லை. Career beaureucrat என்று அழைக்கப்படும் குடிமைப் பணி அதிகாரிகளில் ஐஏஎஸ்-கள் Cocktail beaureucrat வகையினர். அதாவது எல்லாம் தெரியும் ஆனால் எதுவும் முழுமையாகவோ ஆழமாகவோ தெரியாது வகையறா.

தமிழில் இவர்களைப் புரோட்டோகால் புகுத்திகள் என்று அழைக்கலாம். புரோட்டோகால் என்பதைத் தாண்டி வேறு உலகமே கிடையாது. மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று பேட்டி கொடுத்தாலும் மக்களுக்கும் இவர்களுக்கும் சுமார் பத்து மட்டங்களில் இடைவெளி பராமரிக்கப்படும். Feedback mechanism என்பது குடிமைப்பணி அதிகாரிகளுக்குக் குறிப்பாக ஐஏஎஸ் ஆபிசர்களுக்குப் பிடிக்காத ஒன்று.

சக அதிகாரிகளின் friendly comment-ஐக்கூட offensive எடுத்துக்கொள்ளுமளவுக்கு ‘உங்கள மாதிரி திறமையான ஆபிசர் இன்னிக்கு வரைக்கும் இங்க வந்ததே இல்ல சார்’ என்று அலுவலக சிஸ்டம் அவர்களுக்கு வெற்று கெளரவத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக அகங்காரத்தையும் புகுத்தி விடுகிறது. அப்படி ஒரு சூழலில் இருந்து பழகியவர்களால் கீழே உள்ள அதிகாரிகளோ பொதுமக்களோ ஏதாவது சொல்லிவிட்டால் தாங்கமுடியாத ஈகோ பிரச்சினை ஆகிவிடுகிறது.

இதற்குக் காரணம் முசெளரி, டேராடூன், நாக்பூர், ஐதராபாத் என அந்தந்த சர்வீஸின் பயிற்சிக் காலத்தில் Officer Like Qualities (OLQ) என்று சொல்லித் தரப்படுபவைகளை 99% அதிகாரிகள் கேடருக்கு வந்தபிறகு மறுசீராய்வு செய்வதில்லை. அதை மனப்பூர்வமாக நம்பி தங்களை ஒரு புதிய species ஆக மனதுக்குள் கற்பிதம் செய்து அதிலேயே இருந்துவிடுகின்றனர். பல்வேறு வகையான சாதி, பொருளாதார, அரசியல் பின்புலங்கள் உள்ள, ஏகப்பட்ட யூனியன் இரவுடித்தனத்தைக் கொண்ட Subordinate ஊழியர்கள் பட்டாளத்தை நிர்வகிக்க கடுமையான தொணியும், சற்று அதிகாரத் தோரணையும் அகங்காரப் பார்வையும் தேவைதான்.

ஆனால் அதிகப்படியான OLQ சின்ட்ரோம் காரணமாக மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறோம் என்பதையும், சிறிய விசயங்களைக்கூட எவ்வளவு ஆணவத்துடனும், ஈகோவுடனும் அணுகுகின்றோம் என்பதையும் அறியாமலேயே இருந்துவிடுகின்றனர்.

பாடத்துக்குப் பத்து மதிப்பெண் அதிகமாக வாங்கிவிட்டதற்காக ஓய்வுபெறும் வரைக்கும் எல்லாத் துறைக்கும் உயரதிகாரியாக ஐஏஎஸ் ஆபிசர்தான் இருக்கவேண்டும் என்ற புரோட்டோகால் இன்றைய காலகட்டத்துக்கு outdated. மற்ற நாடுகளில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்தத் துறையின் எக்ஸ்பர்ட் நபர்களை அழைப்பார்கள். நம் ஊரில்தான் போர்வெல்லில் குழந்தை விழுந்துவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியை அழைக்கிறார்கள். அவர் வந்து கை காட்டும் திசையில்தான் அரசு இயந்திரம் பயணிக்கும். அதிகாரம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளை வெறும் ஏவல் ஆட்களாகவே வைத்திருப்பதன் சாபக்கேடு இது.

மாநில காவல்துறை தலைமை அதிகாரியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தால் கீழே இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான team morale இருக்கும்? ”இந்தாளுக்கு Policing பத்தி ஒரு எழவும் தெரியாது, பத்து பேர்கிட்ட தனித்தனியா ஓப்பீனியன் கேட்டுட்டு ஒரு முடிவு பண்ணிக்குவாப்ல, மீட்டிங்ல அதே கேள்விய கேப்பாரு. இவர் ஏற்கனவே முடிவு பண்ணுனத யாராவது சொன்னா அதை சூப்பர் ஐடியான்னு சொல்லி implement பண்ணச் சொல்லுவாரு. அதே ஆதிகாலத்து மேனேஜ்மெண்ட் உத்தி. இவரால எதுவும் முடிவு பண்ண முடியலன்னா கீழ இருக்கற விவரம் தெரிஞ்ச ஆபிசரக் கூப்பிட்டு ‘துரைசிங்கம் இந்த புராஜக்ட்ல உங்களுக்கு முழு சுதந்திரம் தர்றேன், சிறப்பா முடிச்சிட்டு வாங்க’னு சொல்லிடுவாப்ல. சும்மா தெண்டத்துக்கு சம்பளம் குடுத்து எங்கள மாதிரி அஞ்சாரு பேர அல்லைக்கை வேலைக்கு நிறுத்தியிருக்காங்க” என்று மகிழுந்து ஓட்டுநர் கூட சிரிப்பார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற species-இல் நிறைய sub species மற்றும் biotype-களும் உண்டு. அதில் நேர்மையான அதிகாரிகள் என்ற sub species வகையினர் மிகவும் notorious and naughty ஆவர். விளம்பர, புகழ் மோகிகள் என்பதெல்லாம் biotype மட்டுமே. நேர்மையாக இருக்க வேண்டும், ஏமாற்றக்கூடாது, பொய் பேசக்கூடாது, வார்த்தை தவறக்கூடாது என்பதெல்லாம் குழந்தையாக இருக்கும்போதிருந்தே நமக்கெல்லாம் கற்பிக்கப்படுபவைதான். இவர்தான் என் மனைவி என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக இவர்தான் என் பத்தினி மனைவி என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்? அவர் ரொம்ப நேர்மையான அதிகாரி என்றால் மற்ற அதிகாரியெல்லாம்??!!

இரண்டு ஆண்டுகள் மீன்வளத்துறை விற்பன்னர், மூன்று ஆண்டுகள் வேளாண்துறை விற்பன்னர், இரண்டு ஆண்டுகள் கதர் வாரிய விற்பன்னர், மூன்று ஆண்டுகள் கல்வியியல் துறைக்கு விற்பன்னர், மறுபடியும் இரண்டு ஆண்டுகள் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் என்று ஒரு நபர் எப்படி எல்லா துறைகளுக்கும் விற்பன்னராக இருக்க முடியும்?

ஒவ்வொரு துறையிலும் ஐஏஎஸ் ஆபிசர்கள் நிர்வாக நடைமுறைகளைக் கண்காணிக்கும் அதிகாரியாகத்தானே இருக்கிறார்கள், கீழே டெக்னிக்கல் ஆட்கள் இருக்கிறார்களே என்று தோன்றலாம். ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை நடத்துபவரையும், ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி நடத்துபவரையும் மேல்மட்டத்தில் மாற்றிப் போட்டால் நிர்வாகம் எப்படி நடக்கும்? Cross functional changes என்ற எம்பிஏ வார்த்தை ஜாலங்கள் எல்லாம் ஒரே நிறுவனத்துக்குள் பேச வேண்டியவை. நூறு கோடி வியாபாரம் பண்ணும் வங்கிக் கிளைக்கு மேலாளராக இருப்பதும், சீட்டுக் கம்பெனி நிர்வாகியாக இருப்பதும் ஒன்றல்ல. இரண்டுமே பண நிர்வாகம் சார்ந்ததுதானே என்று பொதுமைப்படுத்த முடியாது/கூடாது.

உலகச்சந்தை நம் படுக்கையறை வரைக்கும் வந்துவிட்ட காலத்தில் இன்னமும் மாறாத விக்டோரியா மகாராணி காலத்து நிர்வாக முறையில் ஐஏஎஸ் என்பதுதான் முதலில் அகற்றப்பட வேண்டியது. இன்றைய தேவை ஒவ்வொரு துறைக்கும் ஆழமான அகலமான ஞானமுடைய நபர்கள்தான். அவர்களுக்கு நிர்வாகம் தெரியாது ஐஏஎஸ் ஆபிசர்தான் வழிகாட்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் இல்லாமல் எப்படி நிர்வாகம் நடக்கும் என்று அபத்தமாக கேள்வி கேட்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் என்பவர் ஐஏஎஸ் அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. புதிய நிர்வாக முறையைத் தேடினால்தானே கிடைக்கும். அப்படி ஒன்று வருவதற்கு இந்த அதிகாரிகள் குழாம் எப்போதுமே ஒப்புக்கொள்ளாது என்பதுதானே உண்மை.

நாங்க எவ்வளவு உழைக்கிறோம் தெரியுமா, எவ்வளவு பிரஷர் இருக்கு தெரியுமா, எவ்வளவு வேலைப்பளு இருக்குது தெரியுமா என்பது ஒவ்வொரு அரசு ஊழியரும் சொல்வதுதான். வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே தனியார் நிறுவனங்களில் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியவோ புரியவோ போவதில்லை. மாதத்தில் 15 நாட்கள் இந்தியா முழுவதும் இரவு விமானப் பயணங்களிலும், டேக்சியிலும் தூங்கியவாறேதான் தனியார் நிறுவன நடுமட்ட, உயர் மட்ட அதிகாரிகள் கழிக்கின்றனர். ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம் என்றாலும் ஒருநாளும் நிம்மதியாகத் தூங்கிவிட முடியாத அழுத்தம் சந்தையில் புராடக்ட் விற்கும் ஒவ்வொரு நிறுவன ஊழியர்களுக்கும் உண்டு. இரண்டு வருடங்கள் இலாபம் காட்டவில்லையென்றால் வேலை போய்விடும் என்ற யதார்த்தமெல்லாம் மேல்மட்ட அரசு அதிகாரிகளுக்குப் புரியாது.

Peepli Live என்ற ஒரு படத்தில் ஓர் இளம் அதிகாரி ஒரு பிரச்சினையான சூழ்நிலையில் உடனடியாக முடிவெடுத்து எதையாவது செய்யத் துடிக்கையில் அவரது உயரதிகாரி எப்படி coach செய்கிறார் என்பதை அற்புதமாக அமைத்திருப்பார்கள். “இதெல்லாம் எதுக்கு நாம செஞ்சுகிட்டு, அந்த சான்மான்ட்டோ கம்பெனிக்காரன்கிட்ட குடுத்துடு, வா டீ சாப்பிடு” என்று சொல்லுவார். அதாவது எதற்குமே சுரணையில்லாத, மழுங்கிய உயிரினமாக காயடிப்பதுதான் அந்த coaching. பயிற்சி அதிகாரிகளுக்கு முசெளரி அகாடமியிலேயே இந்தப் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்களாம்!

Indian Forest Service என்று தனியாக ஒரு தேர்வில் உயிரியல் பின்புலமுடையவர்களை மூன்றாண்டுகள் பயிற்சி அளித்து வனத்துறை உயரதிகாரிகளாக இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர். கேடருக்குச் சென்ற அதிகாரிகள் எப்படியாவது காக்கா பிடித்து சொந்த மாநிலத்துக்கு வந்து பாஸ்போர்ட் அதிகாரி, கவர்னர் குதிரைக்கு முடிவெட்டிவிடும் இலாகா இயக்குநர் என்று உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்? பாஸ்போர்ட் ஆபிசர் வேலைக்கு IFS ஆபிசர் எதற்கு? அப்புறம் ஸ்பெஷாலிட்டி என்பது எங்கிருந்து வரும்? கடைசிவரைக்கும் யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க் ஓநாய் கதைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். குறைந்தபட்சம் இத்தகைய லோலாக்கு டோல் டப்பிமா போஸ்ட்டிங்குகளை அதிகாரிகளது பதவி உயர்வு சீனியாரிட்டியில் சேர்க்காமலாவது இருக்க வேண்டும். அப்படி நடக்க விட்டுவிடுவார்களா என்ன?

அரசு அதிகாரிகளாக வேலைக்குச் சேரும்போது எல்லோருமே மிகத் திறமையான நபர்கள்தான். நடுமட்டத்திலும், மேல்மட்டத்திலும் சேரும் அதிகாரிகளை வீணடித்து, மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தி, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே வைத்திருப்பது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்லைக்கை பட்டாளம். ஓட்டுநர், வீட்டு வேலைக்கு, அலுவலக வேலைக்கு என கிட்டத்தட்ட 10 பேர் சும்மாவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சூழலில் எப்பேர்ப்பட்ட நபரும் அந்த அதிகார போதையில் மயங்கி சோம்பேறியாகிவிடுவர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது என்பதே பேரவலம்.

அதனால்தான் பிளாட்பார கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு எளிமை குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டு ஆரம்பிக்கின்றனர். இது முற்றிய நிலையில் கவிதை எழுதி ஃபோலோயர்களை கும்மி எடுக்கின்றார்கள். சமத்துவம் மிகுந்த உரையாடல்கள் புழங்கும் சிவில் சமூகத்திலிருந்து ஆரம்பத்திலேயே இவர்கள் விலகி விடுவதால் “டேய் ங்கோத்தா, நீ ட்ரெயினிங்ல இருந்தது ரெண்டு வருசம், கேடருக்கு வந்து மூணு வருசம், அதுக்குள்ள என்ன மயிற கண்டுட்டன்னு மேனேஜ்மெண்ட் கிளாசெல்லாம் எடுக்கற?” என்பது போன்ற கமென்டுகளை யாரும் போடுவதில்லை. இவர்களும் அதை விரும்புவதில்லை. Excessive OLQ Syndrome-இன் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று.

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கார் டிரைவர் என்பதை முதலில் நிறுத்த வேண்டும். காவல்துறை, மருத்துவத்துறை, பேரிடர் மேலாண்மை போன்ற எமர்ஜென்சி தேவைகள் இருக்கும் துறைகள், மாற்றுத் திறனாளி அதிகாரிகள் தவிர மற்ற அனைவருக்கும் ஓட்டுநர் என்ற தனி ஊழியரை அகற்றுவதே அரசாங்க அதிகாரிகள் என்ற தனி வர்க்கத்தை ஜனநாயகப்படுத்துவதன் முதல் படி.

வீட்டிலிருந்து அழைத்துச் செல்வது முதல் இரவு கொண்டுவந்து இறக்கி விடப்படும்வரை அதிகாரி அப்படியே நாட்டைத் தூக்கி நிறுத்துவது குறித்துதான் யோசிக்கிறார் என்று முட்டு கொடுக்கக்கூடாது. இதே ஊரில் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் தினசரி 200 கிலோமீட்டருக்கு குறைவில்லாமல் self driving-இல்தான் செல்கிறார்கள்.

ஆண்டுக்கு 500 கோடிக்கு வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் சிஈஓ-க்கள் கூட தானேதான் கார் ஓட்டுகிறார்கள். இந்தக் குறைந்தபட்ச ஃபிட்னெஸ் கூட இல்லாத அதிகாரிகளுக்கு அலுவலகப்பணி போதுமே, களப்பணி எதற்கு? அவர்கள் சொந்த செலவில் ஓட்டுநர் வைத்துக்கொண்டால் 15000 சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் அரசாங்கம் 50000 கொடுக்க வேண்டும். அப்போதாவது தங்களையும் தொழிலாளி வர்க்கம் என்று நினைத்துக்கொண்டு வறட்டு தொழிற்சங்கவாதம் பேசாமல் இருப்பார்கள்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, சாலை வடிவமைப்பில் உள்ள பிரச்சினையில் ஆரம்பித்து கார் சர்வீஸ் சென்டர் அனுபவம், எங்காவது இடித்துவிட்டு மோட்டார் வாகன தீர்ப்பாயத்துக்குச் செல்லுதல், இத்தனைக்கும் இடையில் பணியாற்றி நாட்டை முன்னேற்றுதல் என்கிற first hand அனுபவம் அதிகாரிகளுக்கே தேவை. அப்போதாவது இந்த நாட்டில் பைக், காரில் சென்று வேலை செய்து மாத சம்பளம் வாங்குவது எவ்வளவு கேடுகெட்ட நரகமான வாழ்க்கையாக இருக்கிறது என்று புரியும்.

தினசரி கார் ஓட்டி அலுவலகம் செல்லும் ஒரு அதிகாரியாவது Fastag திட்டமிடல் குழுவில் இருந்திருந்தால் இத்தனை சொதப்பல்கள் நடக்குமா? எத்தனை இலட்சம் மக்களின் நேரத்தை வீணடித்து, பணத்தைக் காணாமல் போகச் செய்துவிட்டிருக்கிறார்கள்?

மேலைநாடுகளில் பொதுமக்கள் நடப்பதற்கு, சைக்கிள் ஓட்டுவதற்கு தனித்தனி நடைபாதைகள் இருப்பதைப் பார்த்துவிட்டு வந்து இங்கே ஸ்மார்ட் சிட்டி அமைத்து இருந்த பிளாட்பாரங்கள் மீதும் தார் ஊற்றுகிறார்கள். ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி முன்னர் நடைபாதை கிடையாது. வாகனங்களுக்குள் புகுந்து ஓடி, வருடம் ஒருவராவது ஊனமாகிறார்கள். இதுதான் நமது வருங்கால மனிதவள ஆற்றலுக்கு நாம் செய்யும் தொண்டு. சாலை வடிவமைப்பதை அந்தந்த துறை அதிகாரிகளிடமாவது விட வேண்டும். டிரைவர் இல்லாமல் peak hour-களில் அதிகாரிகளே கார் ஓட்டினால்தானே இதெல்லாம் தெரியும்.

அந்த காலத்திலே பல்லக்கில் அமர்ந்து, யானைமீது அமர்ந்து நகர்வலம் செல்வது மாதிரி டிரைவர் வைத்து சைரன் பொறுத்திய கார்களில் செல்பவர்களுக்கு சாலைகளில் பைக்கில் செல்பவனது கஷ்டத்தையும், நடந்து செல்பவனது வாழ்வா சாவா மரணப் போராட்டத்தைப் பற்றியும் எப்படி புரியும்?

உணவகங்களிலும், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் நடுவில் நிறுத்தி வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளின் கார் ஓட்டுநர்கள் செய்யும் இடையூறுகள் எத்தனை? அப்படி அவர்கள் செய்வதை சட்டையே செய்யாத அதிகாரிகளை என்னவென்று சொல்வது? நீதிபதிகளுக்கு டோல் கேட்டுகளில் தனி வழி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அதிகார மமதையில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

Secrecy broods corruption. நமது நிர்வாக சீர்திருத்தம் என்பது சிவில் சர்வீஸ் மற்றும் நீநிமன்ற மட்டங்களில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களது பணிகளில் வெளிப்படைத்தன்மையும், தேவையற்ற அடிமை முறையை ஊக்குவிக்கும் ஆங்கிலேயர் காலத்து அதிகார படிநிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழலில் ஐஏஎஸ் என்ற பதவியும், அரசாங்கத்தில் கார் ஓட்டுநர் என்ற பணியிடமும் நீக்கப்பட வேண்டியவை. அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்ற உணர்வு மக்களிடம் வர வேண்டுமானால் சீர்திருத்தம் என்பது அதிகாரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதை rubbish என்று ஒதுக்கித் தள்ளுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *