பொன்னி – நாவல் – விமர்சனம்

பொன்னி நாவலைப் படித்துக்கொண்டு இந்தபோது உத்திரபிரதேசத்தில் தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்ட போலி செய்தி நாலாபுறமும் ஓடிக்கொண்டிருந்தது. வெட்டாட்டம் நாவலைவிட விறுவிறுவென்ற நடையில் பல்வேறு காலகட்டங்களை இணைத்து தங்கத்தின் அழுக்கான, குரூர பின்னணியை ஷான் கருப்புசாமி அற்புதமாக எழுதியிருக்கிறார்.

சோழர்கள் காலத்திலேயே தங்கம் கிடைக்கும் கோலார் பகுதியைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட இரணிய சேனை, அந்தத் தேரையர் இன மக்களின் வாழ்க்கைமுறை, ஆங்கிலேயர்கள் வருகை, சுரங்க அமைப்புகள், அதிலுள்ள ஆபத்துகள், தங்க வேட்டைக்காரர்கள், இங்கிருந்து அதிகாரப்பூர்வமாகவும் திருடியும் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கம் என பல காலகட்டங்களில் நாவல் செல்கிறது.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒரே நேரத்தில் கருவூலத்தில் இருந்த தங்கக் கட்டிகள் திருடப்பட்டது, அதைத் திருடியவர்களை சிஐஏ துரத்துவது, அதன் பின்னணியில் தேரையர் வம்சாவழியில் வந்த பலர் சமகாலத்தில் இருப்பது போன்ற பல தனித்தனி நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முடிச்சுப் போட்டு படிப்பவர்களால் ஊகிக்க முடியாத, ஊகிப்பதற்கு நேரமே தராத சுவாரசியத்தில் நாவல் நகர்கிறது.

தேரையர் வழியில் வந்த செல்லம்மா என்ற பெண் புதிய தங்க வயலை கண்டுபிடிக்க வந்த ஜேம்ஸ் மார்ட்டின் மீது ஒரு இனம் புரியாத காதலுடன் இருந்து ஒரு கட்டத்தில் அவருடைய இரண்டாவது மனைவியாகி இங்கிலாந்து சென்று விடுவது, அவரது பேத்தியாக வரும் பொன்னி சுரங்க நிறுவன அதிபராக கோலார் வருவது, அவர்களைச் சுற்றி விளையாடும் அரசியல் சதுரங்கம் என பல இருந்தாலும் செல்லம்மாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.

செல்லம்மாவுக்கு அப்படி ஒரு தர்க்க ரீதியான சிந்தனை வரவும், அச்சமில்லாத போக்குக்கும் அவள் சிறுவயதில் தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேய பெண்மணி ஒருவரிடம் கற்ற கல்வியும், அதைத் தொடர்ந்து அவளது வாசிப்பும் காரணமாக இருந்திருக்கிறது. வீரம், வாழ்வியல் முறை, சமூகக் கட்டுப்பாட்டு என்ற பெயரில் ஓர் இனம் காலங்காலமாக தங்களைத் தாங்களே அடிமையாக வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ளவே முடியவில்லை. அதில் பலர் படித்து சிவில் சர்வீஸ் வரைக்கும் போனாலும் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு இனக்குழுவின் கடமையைச் செய்வதைப் பெருமையாகக் கருதி பக்கவாட்டில் சிந்திக்கவே இல்லை என்பதையும் நாவல் பதிவு செய்கிறது.

செல்லம்மாவின் அழகையும், அவளது பேத்தி பொன்னியின் அழகையும் விவரிக்கையில் நாவலாசிரியர் ஷான் கருப்புசாமி வெறும் சைக்கிளை மட்டும் உருட்டிக்கொண்டே இருக்கும் ஆசாமி மட்டுமல்லர் என்பதும் தெளிவாகிறது!

The Last Ship என்று அமேசான் பிரைமில் ஒரு சீரியல் இருக்கிறது. மொத்தம் ஐந்து சீசன்கள். ஒரு வைரஸ் கிருமியின் ஆரம்ப மூலத்தைத் தேட அண்டார்டிகா செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு அந்தத் திட்டக் காலம் முழுவதும் ரேடியோ சைலன்ட் ஆக இருக்கும்படி உத்தரவு. ஆறு மாதம் கழித்து திரும்ப வரும்போது வைரஸ் தாக்குதலில் உலகத்தில் பாதி அழிந்திருக்கிறது. அந்த வாக்சின் வேண்டி இந்தக் கப்பலை பல நாட்டு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் துரத்த, அவர்களது நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளைத் தாண்டி தப்பித்து வாக்சின் தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பும்போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு நாடாக சண்டை போட்டுக்கொண்டே செல்கிறார்கள்.

போர்க் கப்பல் வாழ்க்கைமுறை, கடற்போர் உத்திகள், மின்னணு கருவிகள் துணையில்லாத பழங்கால கடற்சண்டைகள், நீர்மூழ்கி கப்பல்கள், ரேடார், சோனார், ரேடியோ தொடர்புகள், ஹாம் ரேடியோ, அரசியல் விளையாட்டுகள், அணியினர் பலரது எதிர்பாராத மரணங்கள், கன்னி வெடிகள், தாக்குதல் உத்திகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் பூச்சிகள், போதைப்பொருட்கள், கறுப்புச்சந்தை, நாடுபிடிக்கும் போராட்டங்கள், உள்நாட்டுப் போர்கள், கணிணி வைரஸ்கள், நீண்டகாலம் கடலில் போர்க்கப்பலில் பணிபுரிவதால் அவர்களது குடும்ப உறவில் ஏற்படும் பிரச்சினைகள் என இன்னும் ஏராளமான விசயங்களை அவ்வளவு விவரமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். (அதில் வரும் டெக்ஸ், டெய்லர் வுல்ஃப், அவரது காதலி அஸிமா கேன்டி பாத்திரங்களின் வெறித்தனமான இரசிகனாகியிருந்தேன்).

அத்தகைய நீண்ட சீரியல் எடுப்பதற்குத் தகுதியான நாவல் பொன்னி; அத்தனை தனித்தனி plot-கள் நாவலில் வருகிறது. வெட்டாட்டம் நாவலைப் படமாக எடுத்த மாதிரி இதை ஒரு இரண்டரை மணிநேர படமாக எடுத்தால் அதில் சுவாரசியமே இருக்காது; திரைப்படங்களில் குறிப்பாக சுரங்கம் சார்ந்த காட்சிகளில் கேஜிஎஃப், கேங்ஸ் ஆஃப் வஸிர்பூர் போன்ற படங்களில் காட்டிய அளவுக்கே கொண்டு வர முடியும் என்று தோன்றுகிறது.

கோலாரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுவரைக்கும் சுமார் நாற்பது ஐம்பது முறைக்கும் மேல் சுற்றியிருக்கிறேன். கேஜிஎஃப்-இல் ஏதாவது ஒரு சுரங்கத்துக்குள் கொஞ்சூண்டு எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. பலரிடம் கேட்டுப்பார்த்தும் இன்னும் நடக்கவில்லை. ஊட்டி கூடலூரில் இருக்கும் சில சுரங்கங்களில் ஏதாவது ஒன்றிலாவது இறங்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் இன்னும் நிறைவேறவில்லை.

ஏதாவது ஒரு கைவிடப்பட்ட சுரங்கத்தை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றி அரசாங்கமே மக்களுக்கு சுற்றிக்காட்டி நாம் பயன்படுத்தும் தங்கம், இரும்பு, ஈயம், தாமிரம் என ஒவ்வொரு உலோகமும் எப்படி நம்மை வந்தடைகிறது என்பதைப் புரிய வைக்கலாம்.

அற்புதமான நாவலாக இருந்தாலும் சில இடங்களில் வரும் வரிகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு வருபவர்கள், குறிப்பாக அதிலேயும் முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் அதிபயங்கரமான திறமைசாலிகள் என்று நாவலாசிரியர் இன்னும் நம்புகிறார். பள்ளி, கல்லூரிகளைப் போலவே போட்டித் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் மாணாக்கார்கள் வாழ்க்கை ஓட்டத்தில் அந்தந்த பதவிகளின் சராசரி குமாஸ்தாவாகி காணாமல் போய்விடுகின்றனர் என்பதை அவர் உணரவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஐஏஎஸ் என்ற ஒரே ஒரு தேவையில்லாத பதவிதான் இன்று இந்தியாவைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நிர்வாக ரீதியிலான தரித்திரம் என்று சொன்னால் உன்னால் ஐஏஎஸ் ஆக முடியாத கடுப்பில் பேசுகிறாய் என்று எளிதாக கடந்து போய்விடுவார்கள். அப்துல் கலாம் ஐயா ஒரு அணு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவது மாதிரி ஐஏஎஸ் என்றால் திறமை என்று நம்பிக்கொள்ள வேண்டியதுதான்!!

பொன்னி அமெரிக்க உளவுத்துறையிடம் சரண்டைந்து பெங்களூருவின் யெலஹங்கா விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க கடற்படையின் C 130 ஹெர்குலிஸ் விமானத்தில் நேவி சீல் வீரர்கள் பாதுகாப்புடன் நாடுகடத்தபபடுகிறாள். நடுவானத்தில் பொன்னி, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த விஷப் பாம்புகளை எடுத்து வீசுவது, அதற்கு பயந்த நேவி சீல் வீரர்கள் பாராசூட் ramp-ஐத் திறந்துவிட்டால் பாம்பு போய்விடும் என்று நம்பி திறக்க, அதில் பொன்னி குதித்துத் தப்பித்து விடுவது என்கிற கதையமைப்பை எல்லாம் பார்க்கும்போது, நாவலைப் படித்துப் பார்த்து புத்தகம் அச்சுக்குப் போவதற்கு முன்னால் விமர்சனம் கொடுத்த நாவலாசிரியரின் நண்பர்களை ‘ஏய்யா, நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?’ மண்டையிலேயே கொட்ட வேண்டும் போலிருக்கிறது.

தங்கம் என்கிற உலோகத்தால் மனிதனுக்கு எந்த பலனும் இல்லை. சக மனிதர்கள், சமூகம் மீது இருக்கும் அவநம்பிக்கையால் ஒவ்வொருவரும் தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொள்வது மட்டுமே அதன் பயன். மற்றபடி அதனால் பொருளாதார ரீதியாக இழப்பு மட்டுமே. தங்கம் மட்டுமல்ல, விலை உயர்ந்த பல தனிமங்களும் அதற்காக சேகரிக்கப்படுபவையே. நாகப்பாம்பு மாணிக்கக்கல்லை அமாவசை அன்று கக்கி, வழிபட்டுவிட்டு விழுங்கிவிடும் என்பதை நம்பி இன்னும் நாகமாணிக்கம் தேடி அலையும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி நல்ல நல்ல நாவல்களை இளைஞர்கள் எழுதும்போது “ஆமாமா, லைட்டா சுஜாதா பாணி, லைட்டா இராஜேஷ்குமார் பாணில 300 பக்கத்துக்கு எதையாச்சும் எழுதிடறதுதானே இன்னிக்கு ட்ரெண்டிங். ஆனா இதெல்லாம் இலக்கியத்துல வராது. இப்படித்தான் போஜ்பூரி லாங்வேஜ்ல கூட ஒரு நாவல் வந்துது, அதனோட தழுவல்தான் இது. இன்னும் அவருக்கு வாசிப்பானுபவம் பத்தல, அந்த மொழிநடை இருக்கு பாத்தீங்களா, அதுல தெரியுதே” என்று எதையாவது சொல்லி பொச்செரிச்சல் அடைபவர்களே தமிழ் எழுத்துலகில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

நாவலில் கடினமான தமிழ் வார்த்தைகளோ, முற்றுப்புள்ளியே இல்லாமல் அமைக்கப்பட்ட பத்திகளோ இல்லை. நல்ல எழுத்துநடையில் ஷான் விறுவிறுப்பைக் குறையவிடாமல் சென்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட நூறாண்டு காலம் நாவலில் பயணிக்கும் சிலப்பதிகாரம் புத்தகம் ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த மோர்ஸ் குறியீட்டால் புற ஊதாக் கதிர்களை வைத்துக் de-code புதிய தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். மோர்ஸ் குறியீட்டுக்கு அடிக்குறிப்பு எழுதிய நாவலாசிரியர், ஒவ்வொரு அத்தியாயத்திலும் கல்வெட்டு வரிகள் சிலவற்றைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கான விளக்கங்கள் எங்கேயும் தரப்படவில்லை என்பது மட்டுமே ஒரு வருத்தம்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *