சுளுந்தீ – நாவல் – விமர்சனம்

சுளுந்தீ – நாவல்
ஆசிரியர்: இரா. முத்துநாகு
ஆதி பதிப்பகம் வெளியீடு.
விலை ரூ 450, பக்கங்கள்: 472

நாவலாசிரியர் எழுதியிருக்கும் முன்னுரை ஒன்றே போதும். ஓர் அற்புதமான கட்டுரையை அதாவது வரலாற்றின் போக்கை எழுதி நம் முன்னால் வைத்துவிடுகிறார். 472 பக்கங்கள் எல்லாம் படிக்க முடியாது என்று கருதுபவர்கள் அவசியம் அந்த முன்னுரையையாவது படிக்க வேண்டும்.

தொ. பரமசிவன் நூல்கள், வேல இராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’, பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ யுவல் நோவா ஹராரியின் Sapiens, Homo Deus போன்ற நூல்களை வாசித்திருந்து சுளுந்தீ வாசித்தால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்வுக்கும், இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்குக் கிடைத்திருந்த வாழ்வுக்கும் உள்ள இடைவெளியை, உயிர் பாதுகாப்பை, சமத்துவத்தை மிகச் சிறப்பாக புரிந்து கொள்ளலாம்.

பண்டுவம் எனப்படும் வைத்திய முறைகள் நாவிதர்களிடமே அந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது; பண்டுவம் பார்க்கத் தெரிந்த ஆண் நாவிதன் – பண்டுவன் எனவும் பெண், மருத்துவச்சி எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு வைத்தியம் பார்த்து உயிர்காக்கத் தெரிந்தவர்களே பண்டிதன் என்பதாக இருந்து பிற்காலத்தில் மந்திரம் ஓதும் மந்திரவாதிகளைப் பண்டிதன் என்று அழைக்க நேரிட்டது இயல்பாக நடந்த நிகழ்வன்று.

சுளுந்தீ நாவலைப் பொறுத்தவரை கதை மாந்தர்களின் கலக சிந்தனைக்கான கருத்தாழம், படிமம், நுண்கரு, மையப் புள்ளி, விழுமியம், சமூகப் படிமங்களின் ஒத்திசைவு, அகவொளி தரிசன தற்சார்புக் கோட்பாடு, மைட்டோகாண்டிரியா, கோல்கி அப்பேரட்டஸ், ஹேபர்-பாஸ்ச் கோட்பாடு என்றெல்லாம் தேடக்கூடாது. அச்சுப்பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகள் பல உண்டு. இருப்பினும் வாசகத்தை அவை சிதைக்கவில்லை என்பதோடு பொருள்மயக்கம் தரவில்லை என்பதால் அப்படியே கடந்துவிடலாம். அவற்றை அடுத்த பதிப்பில் ஆசிரியர் திருத்தி விடக்கூடும்.

சுளுந்தீ, மக்களின் மரபான வைத்திய முறைகளில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலிலும் உள்ள survival skills எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது அதில் என்னென்ன மாற்றங்கள் புதிய குடியேற்றங்களாலும், அரசியல் காரணங்களும் ஏற்படுகின்றன என்பதைப் பதிவு செய்கிறது. இந்த Skills எல்லாமே பெரிய அளவில் பொருளீட்ட, அது சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரப் பயன்படவில்லை. காரணம், அவை சாதிக் கட்டமைப்புக்குள் இறுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. அதை இந்து ஞான மரபு என்று புனிதப்படுத்தாமல் பளிச்சென உடைத்துக் காட்டுவதே இந்நாவல்.

ஏகப்பட்ட பண்டுவ தகவல்களை நாவலாசிரியர் கதைமாந்தர்களை வைத்து சொல்லிக்கொண்டே வருகிறார். ஒன்று இரண்டு என்றால் குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். ஆனால் முப்பது நாற்பது வகையான தகவல்கள் என்பதால் அவற்றை திரும்பப் பதிவு செய்வது கடினமான ஒன்று. களப் பணியாளர்களிடம் எப்போதுமே ஒரு தெளிவான பார்வையும், இது இப்படி ஆரம்பித்தால் இப்படித்தான் வந்துசேரும் என்ற லாஜிக்கும் இருக்கும். அந்த அற்புதமான லாஜிக்கை ஓரிடத்தில் காட்டும் ஆசிரியர் இன்னோரிடத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்.

சித்த மருத்துவ முறையில் சாதாரண ஒன்றைக்கூட வேண்டுமென்றே வேறு பெயர்களில் சொல்லி அலைய விடுவதில் ஆரம்பித்து இரகசியம் என்ற பெயரில் அதை நாசம் செய்வதும் நமது மரபு. உதாரணமாக, அண்மையில் சிறியாநங்கைச் செடியை நிலவேம்பு என்று சொல்லி கல்லா கட்டியது!

நாவலாசிரியர் அறிவியல் ஆராய்ச்சியாளரோ தொழில் முறை தாவரவியலாளரோ அல்லர் என்பதால் அவரிடம் reference கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் சில தகவல்களை வெளிப்படையாக வைத்தால்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும், ஆராய்ச்சியாளர்கள் அதை மக்களுக்குப் பயன்படும்வண்ணம் விரைந்து தயாரிக்க இயலும். என்றைக்கு கார்ப்பரேட்டுகள் நமது பாரம்பரிய சொத்தைக் களவாண்டு விடுவார்கள் என்ற முட்டாள்தனம் ஒழிகிறதோ அன்றுதான் சர்வதேச அளவில் நாம் வேற லெவல் இடத்தைப் பெற முடியும்.

அந்த காலத்தில் வெள்ளாவி வைக்க துணி எடுத்துச் செல்கையில் ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒரு குறி இட்டு அடையாளம் போட்டுவிடுவர். துணி அழிந்தாலும் அந்த குறியீடு போகாது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே அது இரசாயன மை. அதற்கு முன்னர் சேந்தங்கொட்டையை வேக வைத்து எடுக்கும் சாயமே பயன்பட்டது. மிக ஆபத்தான சாயம், கையில் பட்டால் வெந்துவிடும் என்பதால் ஆய்வகங்களில் அமிலத்தைக் கையாள்வது போன்ற கவனம் தேவை. அதே நேரத்தில் பல மருந்துப்பொருட்களில் சேந்தங்கொட்டை சேர்க்கப்படுகிறது. Semecarpus anacardium என்று NCBI-இல் தேடினால் ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் கிடைக்கும். மருத்துவ ஆராய்ச்சிகளில் பல இருந்தாலும் அந்த சாயத்தை எப்படி ஆடைகளுக்கு வண்ணமேற்றும் இயற்கை சாயமாக மாற்றுவது என்ற ஆய்வு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய முதலீட்டிய காலகட்டத்தில் பொருட்களை உண்டாக்கும் நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சியும், பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சியும் முற்றிலும் வேறான பார்வை கொண்டவை. ஒரு சாதாரண தகவலைப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தைப்படுத்தும் பொருளாக மாற்றக்கூடிய திறன் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவராது. சேந்தங்கொட்டை குறித்த தகவல் இருக்கும் சுளுந்தீ பக்கத்தை வாட்சப் நிலைத்தகவலாக வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர் ஒருவர் அந்த சாயம் குறித்தான அத்தனை தகவல்களையும் அலசிவிட்டு ‘லாக் டவுன் முடிந்தவுடன் இரண்டு கிலோ வாங்கி அனுப்பி வை. அந்த சாயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வோம்’ என்று அனுப்பிய தகவல் ஆச்சரியம் அளிக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒன்றை அவர்கள் சந்தைப்படுத்தும்போது ‘ஐயகோ பார்த்தாயா, நமது பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிக்காரன் கொண்டுபோய்விட்டான். அன்னிக்கே ஐயா இதைத்தான் சொன்னாரு’ என்று ஒப்பாரி வைப்பார்கள். இன்டிகோ சாய வரலாறு தெரியுமா என்பார்கள்.

ஒரு கிடாரிக்குப் பிறக்கும் முதல் காளைக் கன்று ஒன்றை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதற்கு ஒரு கதையை நாவலாசிரியர் வைத்திருக்கிறார். மிகச் சிறப்பான விளக்கம். ஏதாவது ஒரு காரணத்தால் காளை இறந்துவிட்டால் இடையர்கள், குடியானவர்கள் இடையே ஏற்படும் தொழில் போட்டியின் காரணமாக பொலிச்சலுக்கு காளை இல்லாதபட்சத்தில் வரும் பிரச்சினையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒரு காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும் என்று அரண்மனை தீர்ப்பு சொல்லி ஆரம்பித்து வைத்த வழக்கம் அது.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் சொக்காயி என்ற பெயரில் இருக்கும் நாட்டார் தெய்வம் ஒன்றுக்கு எல்லா சாதியினரும் தங்களது எருமைக் கிடாக்கன்றை நேர்ந்துவிட்டு கட்டுத்தறியை விட்டு துரத்திவிடுவார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சுற்றுவட்டாரத்தில் திரியும் நூறு, இருநூறு எருமைக் கிடாக்களைப் பிடித்துவந்து நோம்பி போட்டு, வெட்டி ஒரு குழிக்குள் போட்டு மூடி விடுவார்கள். அந்த குழி அக்ரஹாரத்துக்கு வெகு அருகில் இருந்ததால் பலருக்கு அருள் வந்தும், சொக்காயி கனவில் வந்தும் ‘எனக்கு எருமை இரத்தக் கவுச்சி பிடிக்கலடா, நெய்வேத்தியம் மட்டும் பண்ணுங்கோ’ என்று சொல்லிவிட்டது.

அதனால் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அந்த பழக்கம் நிறுத்தப்பட்டது. அப்படியே யாராவது எருமைக் கிடாவை நேர்ந்துவிட்டாலும் அதை விற்று, பணத்தை அந்த உண்டியலில் போட்டுவிடுவது வழக்கமாக்கப்பட்டது. முதல் பலி கொடுப்பது அந்த ஊர் அருந்ததியரின் எருமைக் கிடா. அதுவும் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இப்போது சொக்காயி சாமியானது ஸ்ரீ சொக்கநாயகி அம்மன் ஆகிவிட்டது. படிப்படியாக பொலிச்சலுக்கு எருமைக் கிடா இல்லாமல் ஆனதால் இன்று திரவ நைட்ரஜன் கேன்களை பைக்குகளில் கட்டிக்கொண்டு சினை ஊசிகளுடன் இளைஞர்கள் போய் வருகின்றனர். இதன் நீட்சியை சமீபத்திய தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க அபிவிருத்தி சட்டம் வரைக்கும் பார்க்க வேண்டும். இந்த கிளைக் கதை எதற்காக என்றால் ஒரு பண்பாட்டு அசைவு என்பது எங்கு ஆரம்பித்து எது வரைக்கும் போகிறது என்பதற்காக.

கடும் பஞ்சத்தில் மக்கள் கோரைக்கிழங்கு, மூங்கில் அரிசி, கரையான் புற்றுக்குள் உள்ள அரிசி வரைக்கும் எடுத்து உண்டு உயிர் பிழைத்திருக்கையில் இடையர்களுக்கு தண்ணீர் இருக்கும் பகுதியை அரண்மனை ஒதுக்கித் தருவதின் பின்னணியில் அக்ரகாரத்துக்கும், புலவர்களுக்கும் பால், தயிர், வெண்ணைக்கு எந்த பஞ்சமும் கிடையாது என்பதையும் நாவல் காட்டுகிறது.

அதற்காக நஞ்சை நலங்களை உழுதவர்களை குலநீக்கம் என்ற பெயரில் ஊரைவிட்டு காட்டுக்குள் துரத்தியடிப்பது, மறுப்பவர்களைக் கொலை செய்து அரண்மனை தனக்கான இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகளைத் தருவித்து குடியேற்றம் செய்ய பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டு துரத்தப்பட்ட கதைகள் புத்தகத்தில் கடப்பதற்கு கனமானவை. அதன் நவீன வடிவமாக இன்றைய குடியுரிமைச் சட்ட திருத்தங்களைப் ஒப்பிடலாம்.

சாதாரண சமையல் உப்பு கூட வெடி மருந்துதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் கதையின் நாயகனான நாவிதன் இராமனிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பண்டுவர்களிடம் இருந்த மருந்துப்பொருட்களை குல நீக்கமானவர்கள் பெற்று வெடி செய்து அரண்மனைப் படையினரைக் கொன்றுவிட்டனர் என்பதற்காக பண்டுவம் பார்க்கும் நாவிதர்களைக் கொலை செய்து முச்சந்தியில் வீசி விடுகின்றனர். பழநி அடிவாரத்தில் இருந்த பண்டாரங்கள் சிலர் பண்டுவம் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களையும் கொன்று விடுகின்றனர். மீதமிருந்தவர்கள் பண்டுவ ஓலைச்சுவடிகளை அதிகாரத்தில இருந்த பிராமணர்களிடம் சரணடைந்து ஒப்படைத்துவிட்டு உயிர் பிழைத்துக் கொண்டனர். சிலர் சேது சீமை எல்லைக்கு ஓடி விட்டனர்.

பழநி கோவில் நிர்வாகம் பண்டாரங்களின் கையில் இருந்தது. அங்கு கொடுமுடி ஐயர் ஒருவரை பூசைக்கு வரவழைக்கப்பட்டதும், பின்னர் அவர்கள் எப்படி கோவிலைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. நவபாஷான மூலவர் சிலை சுரண்டி விற்கப்பட்டது எப்போது ஆரம்பித்தது என்கிற வரலாற்று ஆராய்ச்சி இந்த இடத்தில் தேவையற்றது.

மதுரை மன்னரிடம் அனுமதி பெற்று மதப் பிரச்சாரம் செய்ய வந்த ஏசு சபையினர் சமஸ்கிருதம் பயின்றுவிட்டு, இங்கு வந்து பார்த்தால் யாருமே சமஸ்கிருதம் பேசவில்லை என்பதால் பின்னர் தமிழ் கற்றுக்கொண்டதும் நாவலில் வருகிறது. அவர்கள் குலநீக்கம் செய்யப்பட்டவர்களிடம் மட்டும் மன்னருக்கு எதிராக கலகம் செய்யாதிருக்கும் வண்ணம் ஜெபக்கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றனர். குலநீக்கம் செய்யப்பட்டவர்களது வாழ்வு, வாழ்வியல் முறை எல்லாம் அரண்மனைத் தெருவில் திரியும் நாய்களைவிட பலமடங்கு கீழே இருந்திருக்கிறது.

அப்படி குலநீக்கம் செய்யப்பட்டவர்கள், போரில் தோல்வி ஏற்படும்போது சிக்கினால் கொன்றுவிடுவார்கள் அல்லது அடிமையாக்கி விடுவார்கள் என்ற நிலையில் காட்டுக்குள் ஓடி விடுவதும் பின்னர் அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்காக களவு செய்ய ஆரம்பித்தது, ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வந்த குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றவற்றை வேல இராம மூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலும், 1839-இல் Philip Meadows Taylor எழுதிய Confessions of a Thug-உம் நமக்கு அப்படியே வரலாற்றைக் காட்டிச் செல்கிறது.

மக்கள் பஞ்சத்தினால் அரண்மனைக்கு வரி கட்டி வாழ முடியாது என்று முடிவெடுத்து ஊரைக் காலி செய்து ஓட்டம் பிடிப்பது, அந்த பஞ்சத்தினால் கிணறு வெட்டி விவசாயம் செய்வதைக் கற்றுக்கொள்வதும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பித்தவர்கள் செஞ்சி சென்று சுல்தான் படையுடன் இணைந்து பண்டாரப் படை என்று அழைக்கப்படுவதும் அவர்கள் ஏன் ஒரு முஸ்லிம் மன்னனுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நியாயமும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பஞ்சத்தினால் ‘பலருக்கு மைனா குஞ்சு போல கடவா வெந்து, வாய் துர்நாற்றம் பொணமா வீசுது’ என்று நாவலில் சொல்லப்படுவது ஸ்கர்வி. 90-கள் வரைக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணக்கர் பலரை வாய் ஓரத்தில், ஈறுகளில் புண்ணுடன் காணலாம். இன்று அப்படிப்பட்ட ஸ்கர்வி அறிகுறியுடன் குழந்தைகளைத் தமிழகத்தில் காண்பது மிக அரிது. கேப்டன் ஜேம்ஸ் குக், வைட்டமின் சி குறித்த ஆய்வு அவரது ஆஸ்திரேலிய பயணத்தை எப்படி புரட்டிப் போட்டது என்பதையும், பின்னர் உலக நாடுகள் கண்டுபிடிப்பு+காலனி+கடல் வணிகத்தை அப்படியே புரட்டிப்போட்டு உலக வரைபடத்தை மாற்றிய நிகழ்வு அது. Sapiens நூலில் இது விரிவாகக் கூறப்பட்டிருக்கும்.

நாவிதன் இராமனின் மகன் மாடன் அரண்மனை நாவிதனாகாமல் குடியானவர்களுக்கு சவரம் செய்ய அனுப்பப்படுவது குறித்து அவனது தாய் வல்லத்தாரை புலம்புவது எல்லாம் அந்தக்காலத்தில் இருந்து அரசாங்க உத்தியோகம் என்பது ஏன் மக்களால் விரும்பப்படுகிறது என்பதற்கு நாவலின் பிற்பகுதியில் மாடனுக்கு நேரும் எல்லா சம்பவங்களுமே சாட்சி.

அந்தந்த சாதியினர் வேறு தொழிலுக்குப் போகவே முடியாத கட்டுப்பாடு, மீறினால் கடும் தண்டனை போன்றவையே அரண்மனைகளை சொகுசாக வைத்திருக்கின்றன.

பெற்றோர்களின் உழைப்பின் உபரியானது சொத்தாகவோ, சமூக அந்தஸ்தாகவோ, பதவியாகவோ வாரிசுகளுக்குக் கடத்தப்படும்போதுதான் சாதியும், குலத்தொழில் மீதான பெருமையும் பற்றும் அப்படியே அடுத்த சந்ததியினரிடம் இருக்கும். வெறும் கையும் காலுமாக குலத்தொழில் ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ‘எப்படியோ போய் பிழைத்துக்கொள்’ என்று ஒருவன் வீதியில் விடப்படும்போது குலத்தொழில், சாதி மீதான எந்தப் பற்றும் இருக்காது. ஊரெல்லாம் அலைந்தும், கெஞ்சியும் பார்த்துவிட்டு ‘இனிமேல் ஒருபயலுக்கும் நான் சிரைக்க மாட்டேன்’ என்று மாடன் தனது குலத்தொழிலைத் தூக்கி எறிந்துவிடுவதன் நியாயத்தை இவ்வாறாகப் புரிந்து கொள்ளலாம்.

ஈத்தரக் கழுதை, வெங்கம் பயல், வெங்கமேடு, குரளி வித்தை, பேய் பிடிப்பது, முனி பிடிப்பது என்பதற்கான விளக்கங்கள் ஆச்சரியமளிக்கின்றன. அந்தக் காலத்திலும் இப்போது போலவே பண்டுவர்களிடம் முலை பெருக்க, தண்டு நீள வைத்தியம் கேட்டிருக்கிறார்கள்!

சிறியாநங்கைச் சாறு, வீர, பூரச் செந்தூரம் இருந்தாலும் நாகப் பாம்பு கடிக்கு பண்டுவத்தில் மருந்தில்லை என்பதை நாவலாசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இதுபோன்ற இடைவெளிகளில் எல்லாம் ஏசு சபை மூலமாக வந்த ஆங்கில மருந்து மக்களைக் காப்பாற்றியதையும் உரையாடலின் போக்கில் தெரிவிக்கிறார்.

சித்து வேலை என்பது பெரும்பாலும் மக்கள் அறியாமையை வைத்து ஏமாற்றுவது, சில இடங்களில் சின்னச்சின்ன trick என்பதை ஒப்புக்கொள்ளும் ஆசிரியர் பூசணிக்காயை வைத்து திருடர்களை விரட்டும் வித்தையில் கொஞ்சம் ஏமாந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நாகப்பாம்பு வாயில் பூசணி விதையை வைத்துத் தைத்து தலைகீழாக இரண்டு நாட்கள் தொங்கவிட்டால் விஷம் அதில் இறங்கிவிடும். அதை நட்டுவைத்தால் வரும் பூசணிக்காயில் குறைந்த அளவு விஷம் இருக்கும், அதனால் அதைத் திருடிச்சென்று உண்பவர்களுக்கு குறைந்த அளவில் உடல் நலக்குறைவு ஏற்படும், அதனால் களவு போவது நின்றுவிடும் என்று இராமன் சொல்கிறார். உண்மையில் அப்படி எல்லாம் சாத்தியமே இல்லை.

மாடன் மல்யுத்தப் போட்டியில் இறந்துவிட, பிணத்தை எரிக்கையில் அங்கு கழுதைப்புலிகள் ஏதாவது இருந்தால் அவை சேற்றுத் தண்ணீரில் புரண்டுவிட்டு வந்து சிதையின்மீது கூட்டமாக குதித்து நெருப்பை அணைத்துவிட்டு பிணத்தை இழுத்துச் சென்று (கிரில் சிக்கன் போல நினைத்து) சாப்பிட்டுவிடும் என்று வருகிறது. நெஞ்சுக்கூட்டின் மீது பெரிய மரத்துண்டுகளை வைக்காவிட்டால் உடலிலுள்ள கொழுப்பு எரியும்போது நீர் வற்றி நரம்புகள் இழுக்க பிணம் சுருள ஆரம்பிக்கும். அப்படி நடந்தால் குச்சியால் அடித்து திரும்பவும் தள்ளி மரத்துண்டுகளை மேலே போடுவார்கள். அப்படியும் சில நேரங்களில் கையோ, காலோ எரியாமல் அப்படியே வெளியே விழுந்துவிடும்.

அதை நாயோ, கழுதைப்புலியோ இழுத்துச் சென்றுவிடும். அதை துரத்திச் சென்று மீட்டுவந்து எரிப்பார்கள் (நாமக்கல் மாவட்டத்தில் ஒருகாலத்தில் எய்ட்ஸ் மிக அதிகமாக இருந்தபோது யாராவது இறந்தால் பலர் தனக்கும் வந்துவிடுமோ என்று பிணம் எடுக்கையில் வர மாட்டார்கள். அப்போது சிலரது பிணங்களை கடைசி வரைக்கும் எரித்த அனுபவம் உண்டு). கழுதைப்புலி ஆரம்பத்திலேயே வந்துவிடும் என்பது கொம்பேறி மூக்கன் பாம்பு ஆள் செத்தபிறகு மரத்தில் ஏறி பார்த்து உறுதி செய்துகொண்டுதான் புறப்படும் என்பது மாதிரியாகத் தோன்றுகிறது.

நாவலில் வரும் பலவற்றுக்கு புழக்கத்தில் உள்ள பெயர்கள், தாவரங்களின் அறிவியற் பெயர்கள் போன்றவற்றை தனி இணைப்பாகவாவது கொடுத்திருக்கலாம். விகுளிச்சாறு, விகுளிச் செடி என்று வருகிறது. ஆனால் சரியான விகுளிச்செடி எது என்கிற தகவல் இணையத்தில் சுத்தமாக இல்லை.

பதார்த்த குண சிந்தாமணி வரைக்கும் OK. ஆரோக்ய நிகேதினி என்று ஆரம்பித்து சமஸ்கிருத வார்த்தைகள் வரும் நூல்களில் புகுந்தால் திரும்பி வர முடியாது. இங்குள்ள நூல்களை சமஸ்கிருத்ததில் எழுதி, அவற்றை எடுத்துக்கொண்டு ஆங்கிலேயர் வந்த புதிதில் கல்கத்தாவுக்கு ஓடி இதுதான் இந்தியா என்று அவர்களைப் பிராமணர்கள் நம்ப வைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வைத்தது வரலாறு. சமஸ்கிருதம் கலவாத தனித்த மொழிக்குடும்பம் தென்னிந்தியாவில் உண்டு என்று அதற்கு மிகப்பெரிய ground work செய்த எல்லிஸ் துரை அதை வெளியிடுவதற்கு முன்னரே விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதும் வரலாறு. ஆயுர்வேத நூல்களின் மூலம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிகளின் survival medicine ஞானம் மட்டுமே.

பிராமணீயம் என்பது சக மனிதர்களிக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலியத்துக்கும் கேடு என்பதை வரலாற்று நூல்கள், நாவல்கள் போன்றவற்றை சமூக நிகழ்வுகளோடு இணைத்துப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

வேடசந்தூரில் கிணறு வெட்டி உப்புத் தண்ணீர் வந்ததால் என்ன செய்வது என்று புரியாத நிலையில் சேது சீமையில் ஆங்கிலேய, டச்சுக்கார வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டு புகையிலை என்ற செடி பயிரிடுவதை அறிந்து ஆட்களை அனுப்பி பயிற்சி பெற்றுவரச் செய்து புகையிலையை அறிமுகம் செய்கின்ற தகவல், அரண்மனைகளில் மூக்குபொடி பயன்பாடு, சுருட்டு பிடித்தல் எல்லாம் முறையான கால இடைவெளியில் நாவலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மலைவாழ் பளியர் மக்கள், விவசாயம் செய்யும் குடியானவர்கள், இராவுத்தர்கள் என்கிற முஸ்லிம் படையினர், ஏசு சபை பாதிரிகள், இடையர்கள், விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்ட தெலுங்கு பேசும் குடிகள் என பலதரப்பட்ட மக்களும் நாவலில் வந்துபோனாலும் பஞ்ச காலத்திலும் கூட யாரும் மல்லாட்ட (நிலக்கடலை) சாப்பிட்டார்கள், தக்காளி உருளைக்கிழங்கு சாப்பிட்டார்கள் என்று வரலாற்றுக்கு முரண்பட்ட தகவல்கள் ஏதும் ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதைப் பார்க்கும்போது அவரது வரலாற்று ஞானத்தின் மீதான grip சிறப்பு.

விஷ்ணுபுரம் என்கிற பண்டைய வரலாற்று நாவலில் ஜெயமோகனார் கதைமாந்தர்கள் மிளகாய் பயன்படுத்தியதாக எழுதியதும் பின்னர் அதை அவரது சீடர்கள் மகாபாரத்ததில் வரும் காந்தாரி மிளகாய் என்று முட்டுக் கொடுத்ததும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெக்சிகோவில் தோன்றிய மிளகாய் உலகம் முழுக்க பரவிய வரலாறும், வடகிழக்கு மாநிலங்களில் வளரும் ‘பூத் ஜோலோக்கியா’ மிளகாய்க்கும் காந்தாரி மிளகாய் எனப்படும் சீனி மிளகாய்க்கும் விஷ்ணுபுரம் கதைக்கும் உள்ள தொடர்பை அவரது தற்கொலைப்படையினரால் மட்டுமே நம்ப முடியும்.

சுளுந்தீ விமர்சனம் என்ற பெயரில் தனியாக கிண்டிலில் ஒரு புத்தகமே வெளியிடலாம். அந்த அளவுக்கு எழுத வேண்டியது இருக்கிறது. பன்றிமலைச் சித்தர் குறித்தும் நிறைய சொல்ல வேண்டிவரும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *