உர மானியம் தொடர்பான சர்ச்சைகள், சில நல்ல முன்னேற்றங்கள்

உர மானியமானது இவ்வளவு ஆண்டுகளாக இரயில்களில் ஏற்றியவுடனோ அல்லது மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிட்டங்கியை வந்தடைந்தவுடனோ தரப்படும் பில்களை வைத்து உரத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஜூன் மாதம் முதல் விவசாயிகளுக்கு உரம் வழங்கியதற்கான இரசீது ஆதார் எண்ணுடன் விவசாயினுடைய கைரேகையை வைத்து உறுதிப்படுத்திய பிறகே கம்பெனிகளுக்கு வழங்கப்படும். உர விற்பனையாளர்களுக்கு PoS கருவியை உரத் தயாரிப்பு கம்பெனிகளே வழங்குகிறது. அந்த கடைக்காரர்களுக்கான பயிற்சியை அரசு வேளாண்மைத்துறை வழங்குகிறது.

கேஸ் மானியம் மாதிரி பயனாளிகளுக்கு நேரடியாக வழங்காமல் பயனாளிகளை சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு கம்பெனிகளுக்கு வழங்குவது ஒரு நல்ல ஆரம்பம்; பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டுக்களை தடுக்கமுடியும் என்பதோடு உண்மையாகவே எத்தனைபேர் நேரடி விவசாயிகள், எத்தனைபேர் விவசாயி என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்ற மேப்பிங் செய்யவும் அரசுக்கு ஒரு வாய்ப்பு. கிடைக்கப்போகும் அந்த தரவுகளின் அடிப்படையில் 2019-வாக்கில் விவசாயிகளுக்கே நேரடி உர மானியம் வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மானியங்களை ஒழித்து விவசாயத்தை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட இஃது ஒரு ஆரம்பம் என்ற வழக்கமான பல்லவியை ஒருபக்கமாக வைத்துவிட்டு கடந்தகாலத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

உலகப்போர்களின்போது மிச்சமான வெடிமருந்துகளை விவசாயத்துக்கு திருப்பிவிட்டு பசுமைப்புரட்சி உண்டாக்கி விவசாயத்தைக் கெடுத்தார்கள் என்ற வசனம் ரொம்பவும் அறுவையாக இருக்கிறது. அதனால் அதுவும் இப்போது வேண்டாம்.

உர நிறுவனங்களுக்கு யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களில் 21 கிரேடுகள், ஆலைகளில் பலதரப்பட்ட எரிபொருட்கள் பயன்பாடு இருப்பதால் மானியமும் பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது. உதாரணமாக யூரியா தயாரிக்க 80% செலவு கேஸ் வாங்குவதற்கு மட்டுமே. அந்த கணக்குகளின் அடிப்படையிலேயே மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல பங்களாதேசத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்குகள் பிரசித்தி பெற்றவை. சிட்டகாங் துறைமுகத்தில் நின்ற ஒரு கப்பலிலிருந்து 13500 டன் யூரியாவைக் காணவில்லை என்ற வழக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்று. தமிழகத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்கு ஒன்றை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.

1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் மகன் பிரபாகர் ராவ் National Fertilizers Ltd நிறுவனத்தின் இரண்டு இலட்சம் டன் யூரியா இறக்குமதியில் ஊழலில் சிக்கி கைதானது ஒரு புகழ்பெற்ற வழக்கு. 2008-ஆம் ஆண்டு 3153 டன் பொட்டாஷ் சென்னை துறைமுகத்திலிருந்து ‘காணாமல் போன’ வழக்கை CB-CID விசாரித்தது மற்றொரு புகழ்பெற்ற வழக்கு. பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பொட்டாசியம் குளோரைடு மடைமாற்றம் செய்யப்படுவது சாதாரணமாக நடந்துவந்த ஒன்று. மானியவிலையில் ஒரு டன் பொட்டாஷ் 4500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கிடைத்தபோது அதன் இண்டஸ்ட்ரியல் கிரேடு விலை 30000 ரூபாய்.

தனிநபர்கள்தான் என்றில்லை. அரசு நிறுவனங்களும் இத்தகைய மானிய உரங்களை ஆட்டையைப்போடுவது புதிதல்ல. TANFED மூலம் விவசாயிகளுக்கு வழங்கவிருந்த DAP உரத்தை TNPL நிறுவனமானது Sludge treatment-க்காக வாங்கியதும் மற்றொரு அரசுத்துறை நிறுவனமான பால்மர் லாரீ (Balmer Lawrie) உரங்களை ஒரு இரசாயன இடுபொருளாக ஆலைகளில் பயன்படுத்தியதுமாக ஒரு வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்தது துறைசார் மக்களுக்கு நினைவிருக்கும்.

பல்லாயிரம் கோடிகள் புரளும் இந்திய உரச்சந்தை உலகளவில் பல கோடீசுவரர்களால் உற்றுநோக்கப்படும் ஒன்று. நார்வே நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற, மிகப்பெரிய உர நிறுவனமான யாரா (Yara) இந்தியாவில் அரசுத்துறை நிறுவனமான கிரிப்கோ (Krishak Bharathi Cooperative Ltd) உடன் ஒரு கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட ஒரு மில்லியன் டாலர் இலஞ்சம் கொடுத்து, பின்னர் அதை ஒப்புக்கொண்டு 48 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது வரலாறு.

உள்நாடு, வெளிநாடு என்றில்லை உள்ளூர் பிரமுகர்களும் உர மானியத்தை சாப்பிட ஊழலில் ஈடுபடுவது புதிதல்ல. கலப்பு உரம் தயாரிக்க மானியத்தில் வரும் நேரடி உரங்களை திருடும் பாணி அலாதியானது. பெரிய கிட்டங்கி உரிமம் வைத்திருக்கும் பலரும் கலப்பு உரத் தொழிற்சாலை வைத்திருப்பர். Use No Hooks என்று அத்தனை உரமூட்டைகளின் மீதும் எழுதியிருக்கும். ஆனால் லோடிங், அன்லோடிங் செய்யும்போது குத்தூசியைப் பயன்படுத்தி மூட்டைகளை கையாளுவதை ஊக்குவித்து கொஞ்சூண்டு உரம் சிந்திக்கொண்டே செல்லும்படி செய்யவேண்டியது; மூட்டைக்கு அரைகிலோவரை கொட்டிவிடும். அதைக் கூட்டி அள்ளி கலப்பு உரத்துடன் கலந்துவிட்டால் காசு!

வேப்பெண்ணெய் பூசப்பட்ட யூரியா வருவதற்குமுன் கோழித்தீவனம், டெக்ஸ்டைல், மீன்பண்ணை என பல இடங்களில் மானியவிலை யூரியா மடைமாற்றம் செய்யப்பட்டது வரலாறு.

விவசாயி என்ற போர்வையில் பல்லாயிரம்பேர் சுரண்டித்தின்று வயிறு வளர்க்கின்றனர். வெகுசிலர் அதன் உச்சகட்ட சுரண்டலின் அடையாளமாக திகழ்கின்றனர். ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டிய ஒரு புகழ்பெற்ற விவசாயி ஜெயலலிதா; வேட்புமனுவில்கூட தொழில் என்ற இடத்தில் விவசாயி என்று குறிப்பிட்டிருந்தார். சரத் பவார் மகள் கடலைமிட்டாய் புகழ் சுப்ரியா சூலே ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் மற்றொரு விவசாயி. வடக்கில் அமிதாப் பச்சன் என்ற இன்னொரு விவசாயிகூட இருக்கிறார்.

ஊழலை ஒழிப்பது, இயற்கை விவசாயம் செய்வது போன்ற வார்த்தைகள் பொத்தாம்பொதுவான ஒன்று. அதற்கு வழிமுறைகளோ, இலக்குகளோ கிடையாது. சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை பட்ஜெட் போடும்போதெல்லாம் ஒரு ரூபாயில் பத்துகாசு மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது என்று சொல்வது சம்பிரதாயமாகிவிட்டது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு வழங்கி, மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தி, பயனாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே உறவு இருக்கவேண்டும் ஏனையவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று மன்மோகன்சிங் என்ற ஒருவர் சொன்னபோது உலகவங்கியின் கைக்கூலி என்று வசைபாடப்பட்டார். இந்தியாவில் இதெல்லாம் வாய்ப்பேயில்லை என்று கெக்கலித்த அமாவாசைகள், நாகராஜசோழன்களாகி கடைசியில் அதே வழிமுறைகளை ஒரு சமஸ்கிருதப் பெயர்மட்டும் வைத்துவிட்டுப் பின்பற்றுவதையும் “வரலாறு என்னை மதிப்பிடட்டும்” என்று அவர் சொன்னதையும் நினைத்துப்பார்க்க வேண்டயிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்துக்கும் வரிவிதிக்கவேண்டும் என்று பிபேக் தேப்ராய் அண்மையில் சொன்னபோது அஃது அவருடைய சொந்தக்கருத்து என நிதி ஆயோக் கூட பின்வாங்கிக்கொண்டதும், அதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட கருத்தலைகளையும் கண்டோம். விவசாயம் என்ற புனித பசுவைத் தொட யாரும் விரும்புவதில்லை. நிலம் வைத்திருந்தாலே விவசாயி என்ற அடைப்பு கிடைத்துவிடுகிறது. குத்தகை வருமானத்துக்கு ஏன் வரிவிதிக்கக்கூடாது என்ற கேள்வியைக்கூட கேட்க பயப்படவேண்டிய சூழலே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி விமான நிலைய வாசலை மிதித்தவுடன் விவசாயி ஆகிவிடுகின்றனர்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலில் வரும் பவர் புரோக்கரான நாயகன் ஒருமுறை விருது ஒன்றை ‘வாங்கித்தர’ டெல்லி போனவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பார். அங்கிருக்கும் கொள்கைப்பிடிப்புமிக்க அதீத தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணாக்கர்களுடன் உரையாடும்போது பல கருத்துக்களை நடகமுறைக்கு ஒவ்வாதவொன்று மனதளவில் புறக்கணிப்பார். ஆனாலும் ஆரம்பகாலத்தில் அவருடைய அம்மா நூறுநாள் திட்டத்துக்கு வேலைக்கு போனபோது கமிசன் இல்லாமல் சம்பளம் கிடைக்காததையும் அதற்கு அத்தகைய மாணக்கர்களே போராடி கமிசன் இல்லாமல் கூலி கிடைத்ததையும், அவர்களே சமூகத்தின் அடித்தளத்தில் ஒருவகையான சமநிலையைக் கொண்டுவருவதையும் நாவலாசிரியர் சரவணன் சந்திரன் அழகாக விளக்கியிருப்பார். மன்மோகன்சிங், பிபேக் தேப்ராய் போன்றவர்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

உர விற்பனையை குறைந்தபட்ச தொழிற்கல்வியறிவு உடையவர்கள் மட்டுமே நடத்தவேண்டும் என்று மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை பின்வாசல் மூலமாக உடைத்துவிட்டிருக்கும் உள்ளூர் பிரமுகர்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. உபரிகளைச் சுரண்டித் தின்னத்தான் எவ்வளவு கூட்டம்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *